வீடும் விடுதலையும்: பாலு மகேந்திராவின் திரைப்படைப்பின் அர்த்த தளங்கள்

தமிழில் திரைப்படம் பற்றி விமர்சனம் செய்வதென்றால் முதலில் “திரைப்படம் என்பது காட்சி அடிப்படையிலான கலை” (visual art) என்று சொல்லவேண்டும். காட்சி மொழி (visual language) என்று சொல்லத் தெரிந்திருந்தால் இன்னமும் விசேஷம். இதையே கிளிப்பிள்ளை போல பல பத்தாண்டுகளாக சொல்லும் திரைப்பட அறிஞர்கள் ஒரு புறம் இருக்க, புதிதாக உருவாகும் விமர்சனப் புலிகளும் இந்த மந்திரத்தையே உச்சாடனமாகக் கொண்டு களம் இறங்குகிறார்கள். இதன் அடிப்படை பிரச்சினை என்னவென்பதை விளக்கினாலும் புரிந்துகொள்ளப்படுவது அபூர்வம் என்று படுகிறது. இருந்தாலும் மீண்டும் ஒரு முயற்சி. திரைப்படம் என்பது பிம்பங்களை வைத்து கதை சொல்லும் கலை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்கு ஒலி வடிவமாக வளம் சேர்க்கும் மிகப்பெரிய ஆற்றல் இருப்பது மிகவும் முக்கியம். வசனமோ, இசையோ, பாடலோ பிம்பங்களை தீர்மானம் செய்வதில் எந்த தவறுமில்லை. வெறும் காட்சி மூலமாக எதையாவது உணர்த்திவிடுவதில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும். துவக்கப்பள்ளி வகுப்புகளில் குழந்தைகளுக்கு “படம் பார்த்து கதை சொல்” என்று ஒரு பயிற்சி வைத்திருப்பார்கள். இந்த காட்சி மொழி பித்தர்கள் சினிமாவை அது போன்ற ஒரு சிறுபிள்ளை பாடமாக புரிந்து வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அதாவது வெறும் காட்சியில் காண்பிக்கப்படுவதை வைத்தே இவர்கள் கதையை புரிந்துகொள்வதில் மிகப்பெறும் புத்திசாலித்தனம் இருப்பதாக நினைக்கிறார்கள். எப்படி வசனமே இல்லாமல் ஒரு விஷயத்தை உணர்த்திவிட்டது இந்த காட்சி என்று சிலாகிக்க முடிவதே சிறந்த படம் என்பது இவர்கள் கருத்து. இது மிகவும் கொச்சையான புரிதல் என்பதே என் எண்ணம்.
தமிழ் சினிமா விமர்சனத்தின் அடுத்த பிரச்சினை யதார்த்தம். பொதுவாக இது எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்றால் வழக்கமாக வெகுஜன/வணிக படங்களில் உள்ள சண்டை, காமெடி, பாடல், மிகை உணர்ச்சிக்காட்சிகள் இல்லாமலிருப்பது என்றுதான். அதாவது “மசாலா” எனப்படும் கதையாடல் சூத்திரங்களுக்கு கட்டுப்படாமல் இருப்பது யதார்த்தம் என்று சுட்டப்படும் வாய்ப்பு அதிகம். சுருக்கமாக வெகுஜன ரசனை என்பதாக வணிக சினிமாவின் வெற்றி தோல்விகள் சுட்டிக்காட்டும் ஒன்றினை அனுசரிக்காத படங்கள் திரைப்படக் கலையின் சாத்தியங்களை அதிகம் பயன்படுத்துவதாகவும், அப்படங்களை நோக்கிய ரசனை மேம்பாடு சமூக அறிவின் முதிர்ச்சியை குறிப்பதாகவும் நம்பப் படுகிறது. நூறு சதவீத கல்வி அறிவு கொண்ட, பெரும்பான்மையோர் உயர்கல்வி பெற்ற அமெரிக்க சமூகத்தில் ஏன் ஸ்பைடர் மேன், ஜேம்ஸ் பாண்ட் போன்ற சாகசப் படங்கள் மிகப்பெரிய வசூலை சாதிக்கின்றன, ஏன் “நவீன நாகரீகத்தின் தொட்டிலான” ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்த ஹாலிவுட் சாகச படங்களுக்கு அடிமையாக இருக்கின்றன என்பது போன்ற கேள்விகளை தமிழர்கள் கேட்பதில்லை என்பதால் அவர்கள் திரைப்பட விமர்சனம் மிக மேலோட்டமான ரசனை மேம்பாடு குறித்த கற்பிதங்களால் உருவான இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலுமகேந்திராவின் வீடு போன்ற ஒரு திரைப்படம் தவறான காரணங்களுக்காக பாராட்டப்படுவதே சகஜம் என்று அஞ்சுகிறேன். என்னிடம் இந்த படம் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு எதுவும் கைவசம் இல்லை. படித்த விமர்சனங்களின் நினைவும் இன்று மங்கலாகத்தான் இருக்கிறது. ஒரு ஊகமாகத்தான் இதை இன்று கூறுகிறேன்.

என்னுடைய பார்வையில் “வீடு” படத்தின் சிறப்பம்சமே வசனம் மற்றும் இசையின் பயன்பாடுதான். படம் நடைமுறை வாழ்க்கை சூழலை உருவகமாக காட்டும் அளவு யதார்த்தமாக காட்டவில்லை என்றும் நான் நினைக்கிறேன். அந்த விதத்தில் இது பொதுவான தமிழ் சினிமாவின் எல்லைக்குள்தான் இயங்குகிறது. எனவே காட்சியில் கதை சொல்லல், யதார்த்தவாதம் என்ற பிழையான விமர்சனக் கோட்பாடுகளால் இந்தப் படத்தின் சிறப்பம்சங்களை உணர முடியாது என்று கருதுகிறேன்.

வசனத்தின் சிறப்பு

வீடு படத்தின் சிறப்பம்சங்களில் வசனம் பிரதானமானது. கதாபாத்திரங்களின் உளவியல் அழுத்தங்களை வசனம் மிக அழகாக பல இடங்களில் வெளிக்கொண்டு வருகிறது, அதைத்தவிரவும் சமூகத்தின் பொது மனநிலை சார்ந்த பல நுட்பமான வெளிப்பாடுகளும் இடம்பெறுகின்றன. முதல் உதாரணம் ஓய்வு பெற்ற பாட்டு வாத்தியார் முருகேசுவும் (சொக்கலிங்க பாகவதர்), அவருடைய பேத்திகளும் வீடு பார்க்க செல்லும் இடம். வீட்டின் வாசலில் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்கிறாரகள். வீட்டுக்காரர் வருகிறார். யார், என்ன என்று கேட்கிறார். காலி வீட்டின் சாவியை எடுத்துவர உள்ளே செல்கிறார்.
சொக்கலிங்க பாகவதர் பேத்திகளை திரும்பிப் பார்த்து தாழ்ந்த குரலில் “பிராமின்ஸ்” என்று சொல்கிறார். அந்த ஒற்றை வார்த்தை ஓராயிரம் அர்த்த தளங்களை உடையது என்று சொன்னால் மிகையில்லை. இந்த படத்தை வசனம் ஆங்கில வரிகளாக சப்-டைட்டில்களுடன் இருக்கும்படி வெளி நாட்டில் திரையிட்டால் படத்தை கூர்ந்து பார்ப்பவர்கள், இந்த ஒற்றை வார்த்தையின் பொருள் என்ன என்று நிச்சயம் கேட்பார்கள். அதை விளக்குபவர் எத்தனை சாத்தியங்களை விவரிக்க வேண்டியிருக்கும் என்பது சுவாரசியமானது. தமிழ் சமூக வரலாற்றின் உள்ளடுக்கள் அனைத்தையும் தொட்டுச்செல்லும் வார்த்தையல்லவா அது. படத்தில் இடம் பெறும் பிராமணர்களின் குணசித்திரமும் ஆராயத்தகுந்தது என்பதில் ஐயமில்லை. வீடு கட்டுவதற்கான ஆலோசனைகளை தருவது ஒரு ஐயங்கார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. உள்ளடக்கமாக பல விமர்சனங்கள் அதில் பொதிந்துள்ளன என்று யாரும் ஊகிக்கலாம்.

படத்தில் வசனம் மிகவும் சிறப்பாக பயன்படும் இன்னொரு இடம், பஞ்சாயத்து அலுவலுக எழுத்தர் பேசுவது. விலைவாசி ஏறுவது, சம்பள பற்றாக்குறை ஆகியவற்றை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி, இலஞ்சம் கேட்பதை நியாயப்படுத்தும் அவரது குரல் மறக்க முடியாதது. “வீட்டில உட்கார்ந்துகொண்டு கொண்டா, கொண்டான்னா எங்கே சார் போறது” என்று மனைவியின் மேல் பழியைப் போடும் அவர் சமர்த்து மீண்டும் பல்வேறு சமூகவியல் பிரச்சினைகளை சுட்டுகிறது. குறிப்பாக பொருட்களின் விலைவாசியை பட்டியல் போடும்போது அவர் ஒவ்வொரு உதாரணமாக கூறிக்கொண்டே வந்து “மிளகா?” என்று அழுத்ததுடன் கேட்பார். படம் முடிந்த பின்னும் அந்த மிளகா என்ற ஒற்றை வார்த்தை நம்முள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
யதார்த்தம், நடைமுறை தர்க்கம், மிகை

யதார்த்தம் என்பது கலைகளின் இலட்சியம் கிடையாது. உண்மையில் கலை என்பது யதார்த்தத்தை சிறப்பாக உருவகம் செய்வதுதானே தவிர அப்படியே பிரதிபலிப்பதோ, பிரிதிநிதித்துவம் செய்வதோ அல்ல என்பதே பல்வேறு விமர்சனக் கோட்பாடுகளின் நிலைபாடு. அதனால் வீடு படத்தின் சிறப்பம்சம் அதன் யதார்த்தவாதம் அல்ல என்று சொல்லும்போது அந்த படத்தை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. யதார்த்தம் என்பதை நாம் இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று காட்சிப்படும் சூழலின் யதார்த்தம். இரண்டாவது நிகழ்வுகளின் யதார்த்தம் அல்லது நடைமுறை தர்க்கம்.

வீடு படத்தின் காட்சிகளில் வாழும் சூழல் நம்பகத்தன்மையுடன் இருக்கிறதே தவிர யதார்த்தமாக இல்லை. அலுவலகம், பேருந்து பயணம், சொக்கலிங்க பாகவதர் வீடு எல்லாமே ஒரு நம்பகமான ஏற்பாடாகத்தான் இருக்கிறதே தவிர அன்றாட வாழ்வை ஊடுறுவும் தன்மை கொண்டதாக இல்லை. ஆனால் இந்தக் காட்சியமைப்புகளில் ஒருவித நளினம் இருக்கிறது. பேருந்தில் பலமுறை அர்ச்சனா, பானுசந்தர் இருவரும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பயணிப்பது அழகியல் ரீதியாக படத்திற்கு வலு சேர்க்கிறது. அதே போல அலுவலகத்தில் அர்ச்சனாவிற்கு தொலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் காட்சியமைப்பு அப்படியே மறுநிகழ்வு போல இருப்பது அலுவலக வாழ்க்கையின் அலுப்பூட்டும் தினப்படித்தன்மையை வலியுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அலுவலகமும், பேருந்தும் இப்படி இருக்குமா என்பது கேள்விக்குரியது. அதிலும் பஞ்சாயத்து அலுவலகம் முற்றிலும் யதார்த்தத்திற்கு புறம்பானது என்று சொல்லலாம். அது ஒரு உருவகம் மட்டுமே.

காட்சிப்படுத்துதல் இப்படியிருக்க, நிகழ்வுகளின் தர்க்கமும் யதார்த்தம் சார்ந்ததாக சொல்லமுடியாது. மெட்ரோ வாட்டர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்தால் நிலத்தின் சொந்தக்காரருக்கு அதை தெரிவிக்க மாட்டார்களா என்ன? இருபத்தைந்து ஆண்டுகளாக நிலம் சொக்கலிங்க பாகவதர் பேரில்தானே இருக்கிறது? அவரும் ஒரே வீட்டில்தானே குடியிருக்கிறார்? அவருக்கு கடிதம் போடமாட்டார்களா? ஓய்வூதியம் பெறும் ஒரு கிழவர் நண்பருக்காக அவர் அறியாமல் தரக்கூடிய மிகக் குறைந்த அளவிலான கையூட்டுப் பணத்திற்காக ஃபோர்ஜரி வரை சென்று சிக்கலான அனுமதி வழங்க ஒரு எழுத்தர் துணிவாரா? இப்படி பல கேள்விகளை எழுப்ப முடியும். படம் முழுவதில் நிகழ்வுத் தர்க்கத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் வரிசையாக எழுதினால், தமிழ் சினிமாவின் திரைக்கதை பலவீனங்களை வீடு திரைப்படமும் பகிர்ந்து கொள்வதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

படத்தின் நம்பிக்கை ஊற்றாக, இலட்சிய பிம்பமாக விளங்கும் மங்கா கதாபாத்திரம் மிகையானது என்பது வெளிப்படை. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஓடியதற்குக் காரணம் அந்த மிகைதான் என்று சொல்லலாம். இலட்சியத்தை உருவகப்படுத்தினால் மிகையாகத்தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் வீடு படத்தின் சிறப்பம்சம் யதார்த்தவாதம் இல்லை.

மூதாதையரின் சொத்துக்களை இழக்கும் சமூகம்

என்னுடைய பார்வையில் வீடு என்பது ஒரு உருவகம் என்றுதான் நினைக்கிறேன். படம் சொக்கலிங்க பாகவதரின் தேவாரப் பாடல் கறுப்புத் திரையில் பங்கேற்பாளர்கள் பெயர்கள் போடும்போது ஒலிப்பதிலிருந்து தொடங்குகிறது. கிழவர் தான் வாங்கி வைத்துள்ள நிலத்தை வீடு கட்ட கொடுப்பதுடன், சிக்கலான சமயத்தில் தன் கையிருப்பான சேமிப்பையும் கொடுக்கிறார். வீட்டிற்கு தளம் போட்டுவிட்டார்கள் என்று தெரிந்ததும் வெயிலில் தள்ளாமையுடன் தனியாக அந்த வீட்டிற்குச் சென்று பார்க்கிறார். பார்த்துவிட்டு வெளியேறியதும் மாரடைப்பில் இறந்து விடுகிறார். அவரது இறுதிச்சடங்கு சில நொடிகளில் உணர்த்தப்பட்ட பிறகு, படத்தின் இறுதிக்காட்சி நிகழ்கிறது. வீட்டு மனைக்கு வரும் அர்ச்சனாவும், பானுசந்தரும் தாத்தாவின் மரணம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மெட்ரோ வாட்டர் அலுவலர்கள் வந்து அந்த இடத்தில் வீடு கட்டியது தவறு என்று கூறுகிறார்கள். இருவரும் அடுத்த காட்சியில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்க, அதிகாரி ஃபோர்ஜரி செய்த எழுத்தரை கடிந்து கொள்ள, வீட்டை குறித்த வழக்கு கோர்ட்டில் இருப்பதாக பிண்ணனி குரல் கூறும்போது அர்ச்சனா, பானுசந்தரின் உறைந்த சட்டகத்துடன் படம் முடிகிறது. சுருக்கமாக சொன்னால் தாத்தாவின் சொத்து பேத்திக்கு வந்து சேரவில்லை என்று சொல்லலாம்.

திரைப்படம் நகர்மயமான நவீன மத்தியதர வாழ்க்கையின் மீதான ஒரு விமர்சனமாகத்தான் வீர்யம் பெறுகிறது. யார் யாரோ செய்யும் முடிவுகளின்படிதான் கதாபாத்திரங்களால் வாழ முடிகிறது. ஒரு சாதாரண மனிதரால் புரிந்துகொள்ள முடியாத விதிமுறைகள், கபடங்கள், எந்த வழியிலேனும் பணம் சம்பாதிக்க வேண்டிய அழுத்தம், எளிமையாக வாழ்பவர்கள் முட்டாள்கள், பணம் குவிப்பவர்கள் புத்திசாலிகள் என்ற விவரம் எல்லாமே சோகை பிடித்துப்போன வாழ்வின் பரிமாணங்களாக படத்தில் விரிகிறது. இவற்றிற்கெல்லாம் தொடர்பில்லாமல் வாழ்ந்துவிட்ட ஆசுவாசமே பாட்டுவாத்தியார் சொக்கலிங்க பாகவதரின் தேவாரத்தில் ஒலிக்கிறது. அவருடைய காலம் கடந்த காலம் அல்ல. வாரிசுகள் இழந்துவிட்ட காலம் என்று சொல்லலாம். அந்த இழப்பின் குறியீடாகவே முக்கால்வாசி கட்டி முடித்து கைக்கு வராத வீட்டை நாம் புரிந்துகொள்ள முடியும்.

நம் மூதாதையரிடமிருந்து நம் கைக்கு வராத சொத்து நிலம் நீச்சு போன்ற சொத்துக்களல்ல. நமக்கு அந்நியமாகிப்போய்விட்ட அவர்களது பண்பாட்டு வளம். வாழ்வதற்காக சம்பாதிப்பது போய், சம்பாதிப்பதற்காகவே வாழ வேண்டியதாகிவிட்ட நகர்புற மத்தியதர வாழ்க்கையின் சோகம்தான் வீடு. அந்த கலாசார வறுமையை நேர்த்தியாகவும், இளையாராஜாவின் மனதைத்தொடும் இசையால் நிர்ணயமான பிம்பங்கள் மூலமாகவும் நம்மை உணரச்செய்ததுதான் வீடு திரைப்படத்தின் வெற்றி.