பேசும்படம் - படைப்பவனின் நேர்மை...

ஜீலை 4ஆம் தேதி, நேர்ந்த நிகழ்வினை தொலைக்காட்சிகளையும், செய்தித்தாள்களையும் தவறாமல் தொடர்ந்து படிப்பவர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத சம்பவம் யாதெனில் உயர் சாதி பெண்ணை காதலித்த ஒரு தாழ்ந்த சாதி இளைஞனின் பிணம் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் கிடக்கின்றது. அது கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைகள் ஒருபுறம், இந்த பிரிவிற்க்கு காரணம் பிரபல கட்சிதான் என்ற வாதம் மறுபுறம் இத்தகைய துர்சம்பவங்களால் ஒரு வாரத்திற்கு, ஊடகங்களின் பிழைப்பிற்கு பஞ்சமில்லை. அதிலும், இளவரசனின் சடலத்தை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து, தன் மேதமையை நிரூபித்ததோடு, அதன் சாரத்தை நம் வீட்டின் வரவேற்பறைக்கே கொண்டுவந்து விட்டனர். அதனையும் நம் குழந்தைகளுக்குச் சோறூட்டியபடியே கண்டு அங்கலாய்த்துவிட்டோம். இளவரசனின் மரணம் யாருக்கு லாபமோ, நட்டமோ தெரியாது, ஆனால், அவரை வைத்து ஊடகங்கள் தன் நிலையை பறைசாற்றிக்கொண்டன.
இதேபோல்தான் இயக்குனர், நடிகர் மணிவண்ணனைப்பற்றி, இயக்குனர் பாரதிராஜா கோபத்தில் ஏதோ கூறியதையும் பிரபல பத்திரிக்கையானது வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், தன் தொய்வுநிலையை சரிகட்டவும், வருமானத்தை உயர்த்தவும் இருவருக்குமிடையேயான கருத்துவேறுபாடுகளின் மூலம் மூண்ட கனலில் சுகமாக குளிர்காய்ந்துகொண்டது.
மக்களின் பிரச்சனைகளே தீர்க்கப்படாமல் எண்ணிக்கையற்று கொட்டிக்கிடக்கின்றன, அதை இவ்வாறு ஊடகங்கள் பிரத்யேகமாக வெளியிட்டு எவரும் பார்த்ததில்லை.

ஆனால், ஏதோவொரு மூலையில் நடக்கின்ற செய்திகளை, அலுப்பையும் பொருட்படுத்தாமல், தொடர்பயணத்தின் மூலம் அதனைப்பற்றிய நிகழ்வுகளை நமக்குத் தருவதும் இதே ஊடகத்துறைதான். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமல்ல. இத்தகைய சக்தி வாய்ந்த ஊடகத்துறை ஏன், இவ்வளவு மட்டமான செயல்களின் மூலமாக பணம் பார்க்க எண்ண வேண்டும். இளவரசன் இறந்து கிடக்கின்றாரெனில் அவர் இறந்ததற்கான உட்கூறுகளை ஆராயாமல், அவரின் இறப்பை மட்டுமே மையப்படுத்தி, நம் அனுதாபத்தை சம்பாதிப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறதென்றால், அது உண்மையான காரணத்தை கலங்கலாக மாற்றிவிடும். இத்தகைய காரணங்களால் செய்திகளின் உண்மைத்தன்மையானது பரிசோதிக்கப்பட வேண்டியதாகயுள்ளது. அதுவும் ஒவ்வொரு பத்திரிக்கைகளிலும் ஒவ்வொரு மாதிரியான செய்திகள் இடம்பெறுகின்றன, ஒரு சம்பவத்தையே பலமாதிரியாக பல கோணங்களில் அணுகி நிச்சயமாக இதுதான் நடந்தது என்பது மாதிரியான பதிவுகளை இடுகின்றனர். இதில் எதனை நம்புவது?, எதனை தவிர்ப்பது?
ஆனால், இக்கட்டுரை இளவரசன், திவ்யா காதல் பிரிவு பற்றியோ, மணிவண்ணனின் மரணத்தைப்பற்றியதோ அல்ல.

ஆவணப்பட இயக்குனரும், மாற்று ஊடகம் மற்றும் தீவிர சினிமா குறித்து தொடர்ந்து எழுதிவரும் ஒளிப்பதிவாளர் செழியனின் வார்ப்பான ”பேசும் படம்”, என்னும் புத்தகம் பற்றியது. இப்புத்தகம் காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் தன் பார்வையிலான சினிமா, ஊடகம், திரைப்படச் சூழல் ஆகியவற்றை சரடாகக்கொண்டு கட்டுரைகளை கோர்த்திருக்கின்றார். இக்கட்டுரைத்தொகுப்புகளில் ஒன்றில்தான், நாம் மேற்கண்ட விஷயங்களுடன் ஒத்துப்போகின்ற வகையிலான, செய்திகளை “பிணங்களின் ஊடகம்”, எனும் தலைப்பின் கீழ், ஊடகங்களில் கேட்பாரற்று நிகழும் கேலிக்கூத்துகளை தன் கசையடி எழுத்தின் மூலமாக நிறுவியிருக்கின்றார்.

உதாரணமாக, நுகர்வோரான நம்மிடத்தில், சக ஊடகங்களுடன் போட்டியிட்டு, எதனையும் முதன் முதலாக தரத்துடிக்கும் செய்தி வணிகத்தின் சூழ்நிலையினைப் பற்றி குறிப்பிடுகையில், நம்பகத்தன்மையின் அடிப்படையில் உண்மைக்கு பல கோணங்கள் இருப்பினும், எது பார்வையாளனுக்கு விறுவிறுப்பு கூட்டுமோ அதனைத்தேர்ந்தெடுத்து ஒளிபரப்புகின்றனர். இந்நிலைக்கு எதையும் நம் மூளைக்குள் அனுமதிக்கும் நாமும் ஒரு காரணம் என்கிறார்.

செய்திகள் வணிகமயமாக்கப்பட்டுவிட்டன என்பதற்கு தகுந்த சாட்சியமாக எந்த தொலைக்காட்சியிலும் செய்தி ஒளிபரப்பும்முன் ஒலிபரப்பப் படுகின்ற இசையினை உதாரணமாக கூறுகின்றார். இந்த இசையானது நம்மை அவர்கள் சொல்லபோகின்ற செய்திகளின் பதைபதைப்பிற்கு முன்னோடியாக நம் மனதை தயார்படுத்துகின்றது. இதன்மூலமாக நம்மை தொடர்ந்து பிரம்மையான சூழலில் நிறுத்திவைக்கின்ற காரணத்தினால் சாதாரணமான செய்திகள் கூட நம் மனதினுள் அதன் உண்மைத்தன்மையை விலக்கி போலியான மிகைப்படுத்துதலுடன் அமர்ந்துகொள்கின்றது.

இச்சூழலில் தொடர்ந்து நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பவர்களாகயிருந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு விபத்துகளையோ, நான்கு பிணங்களையோ பார்க்க நேரிடும். தினமும் நம்வீட்டினுள் பிணங்களைப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இதனை காட்சிப்படுத்துதலிலும் ஒரு நேர்த்தியில்லையென்றெல்லாம் தன் ஆதங்கத்தை செழியன் பதிவு செய்தாலும், வெறுமனே மன உந்துதலின் காரணமாக எழுந்த விரக்தி வார்த்தைகளாக மாறிவிடாமல், தக்க சான்றுகளுடனும், ஊடகத்துறையில் நிகழ்கின்ற அவலங்களைக் குறிப்பிடுகின்றார்.

முக்கியமாக மரணங்களைக் காட்சிப்படுத்துதல் பற்றி செழியன் குறிப்பிடுகையில் கும்பகோணம் தீவிபத்தையும், ஆழிப்பேரலை விபத்தையும் ஒப்பிட்டுத் தொடர்கிறார். இறந்தவர்களைக் காட்சிப்படுத்த இவர்களுக்கு எவ்விதமான உரிமை தரப்பட்டிருக்கின்றது. நிர்வாண நிலையில் உயிரோடு இருக்கின்ற ஒருவரை அவர் சம்மதமில்லாமல் புகைப்படம் எடுக்க நம்மிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா?. ஆனால், அவரே இறந்து கிடைக்கையில் கோரமாகத் திறந்த வாயையும், அலங்கோலமாக கிடக்கின்ற உடல்களையும், எரிந்தும் எரியாமலும் மிச்சமிருக்கின்ற உறுப்புகளையும் படம்பிடித்து அதனை வியாபாரம் ஆக்கிக்கொள்கின்றோம். ஒரு விபத்தை பிணங்களின் மூலம் காட்சிப்படுத்துதலைத் தாண்டி அதில் சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன. நேரடியான ஒரு சம்பவத்தை பிணங்களுடன் காட்சிப்படுத்தும்பொழுது, இவற்றிலிருந்து ஒதுங்கி நிற்கும் பழக்கத்தையும், ஆழ்மனத்தின் வெறுப்பையுமே சம்பாதிக்கின்றது. இவை நடந்த பிரச்சனைகளின் சாரத்தை உண்மையாக நம்மை உணரவிடாமல் செய்துவிடுகின்றது. இறந்தவரின் தனிமையுள் ஒளிப்பதிவாளன் தன் சகல கருவிகளையும் தூக்கிக்கொண்டு ராஜமரியாதையுடன் பிரவேசிக்கின்றான். இதனை நாமும் வீட்டில் சேரில் கால் ஆட்டியபடியே பார்த்துக்கொண்டிருந்தேமேயானால் நம் மூளையும் பிணங்களை கொட்டிவைக்கும் சுடுகாடாகத்தான் மாறிப்போகும்.

நல்லதுதான், எந்த ஒரு இடத்திலும் நடக்கின்ற விஷயங்களை நாமும் தெரிந்துகொள்ளும் வண்ணம் நவீன கருவிகள் வந்துவிட்டன. அதற்காக இவ்வாறு தட்டுகெட்ட வியாபாரத்தை அனுமதிப்பது முறையாகாது.

போபால் விஷவாயு சம்பவத்தோடு இக்காலகட்டத்தில் நடக்கின்ற விஷயங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். எது புகைப்பட தர்மம்? என்பது தெரியும். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, (உயிரிழந்த) போபால் விஷ வாயு பற்றி ரகுராய் புகைப்படம் எடுத்தபோது , சம்பவத்தின் வீரியத்தைக் காட்ட கொட்டிக்கிடக்கின்ற பிணங்களை காட்சிப்படுத்தவில்லையென்பது அவர் எடுத்த புகைப்படங்களைப்பார்த்தவர்களுக்கு இந்நேரம் புத்தியில் எட்டியிருக்கும்.

அதேபோல்தான் வியட்நாம் போரையே நிறுத்திய புகைப்படத்தையும் எவராலும் எளிதில் மறந்துவிட முடியாது.

புகைப்படக்கலையின் மேன்மையை விளக்க செழியன் குறிப்பிட்டுள்ள மற்றொரு சம்பவத்தைக் காணலாம். பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்த்தியே பிரஸ்ஸான் ஸ்ரீஹரிகோட்டாவின் ராக்கெட் ஏவுதளத்தை பார்வையிட இந்தியா வந்திருக்கின்றார். தன் விருப்பப்படியே புகைப்படம் எடுத்தபின்பு சில நாட்கள் கழித்து அதனை உலக மக்களின் பார்வைக்கு வெளியிட்டார்.

நம்மில் பலரும் இதேபோன்றதொரு பணிக்குச்சென்றிருந்தோமேயானால், ராக்கெட்டிலிருந்து செந்நிறப்பிழம்புகள் வெளிப்பட அவைகள் வான்நோக்கி பறக்கின்ற காட்சிகளையோ, அல்லது பிரம்மாண்டமான ஏதோவொன்றையோத்தான் படம்பிடித்திருப்போம். ஆனால், ஹென்றி அவ்வாறு செய்யவில்லை. ஏவுதளத்தின் பணியாளர் ஒருவர் தன் சைக்கிளின் பின்கேரியரில், ராக்கெட் ஏவுவதற்குத் தேவைப்படும் முக்கியமான பாகத்தை எடுத்துச்செல்வதையே நிழற்படமாக எடுத்திருந்தார்.
இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியை சகல பரிணாமங்களுடன் உயர்த்திக்காட்ட இதனை விட சிறந்த புகைப்படமாக வேறெதனைச் சொல்லலாம்?. இது மொழியும் அர்த்தங்களை நினைக்கையில் பரவசமே மேலிடுகின்றது.
ஆகையால், நாமும் நம்போக்கை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து ஒரேபாதையில் செல்வோமேயானால் படைப்பு ரீதியான மலட்டுத்தன்மைதான் மிஞ்சுமென்பதே ஜீரணிக்க முடியாத உண்மை. அத்தோடு நில்லாமல் செழியன் மக்களைப்பார்த்தும் சில கேள்விகளை எழுப்புகின்றார். ”ஆயிரம் வார்த்தைகளைவிடவும் வலிமையான காட்சி மொழியைக் கொச்சையாகப் பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்கின்றோம்?”. என்பதே அது.

இப்படி ஊடகத்தில் நிகழ்ந்து வரக்கூடிய சிறுமைகளை நுண்மையாகவே அணுகித்தந்திருக்கின்றார் செழியன். இதனையே மற்றவர் சொல்வதைக்காட்டிலும் ஒரு புகைப்படக்காரராக செழியன் முன்வைக்கின்ற கருத்துக்கள் மிகப்பொருத்தமாகவேயுள்ளது. ஒளிப்பதிவின் பலமும், தொழில்நேர்த்தியும் நன்கு அறிந்திருக்க கூடிய ஒருவரால்தான், தான் விரும்பிய தொழில் இப்படி பாதை மாறி போவதை வெறுமனே பார்த்துக்கொண்டிராமல், அவ்வழியை எதிர்த்து, தன் கருத்துக்களை பதிவுசெய்ய முடியும். இத்தகைய ஒளிப்பதிவின் லாவகத்தை செழியன் கற்றுக்கொண்டது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம்தான்.

அப்படியாக பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளனாகயிருந்த தருணங்களின் அழகியலையும் தன் எழுத்தின் துணையுடன் உயிர்கொடுக்க செழியன் தவறவில்லை.

அன்பிற்குரிய ஆசிரியரிடம் உதவியாளனாக சேர்ந்தவுடன் கிடைத்த நெடும்பயணத்தின் பயனாய் நர்மதையாற்றங்கரையில் ஒளிப்பதிவுசெய்யப்பட்ட “அலைபாயுதே”, படத்தின் பாடலான, “ஸ்நேகிதனே”, பாடலின் காட்சியமைப்புகளை, அதே லயத்துடன் விவரிக்கின்றார்.

”மகேஸ்வர் கற்கோட்டையில் பாடல் ஒளிப்பதிவு நிகழ்த்த, நர்மதையின் எதிர்கரை வரை ஒளியைப்பாய்ச்சும் 50 விளக்குகள், 40 அடி, 20 அடி ராட்சத கிரேன்கள், மெல்லிய பாடல் ஒலி, நர்மதையாற்றின் சப்தம், ஊருக்கே வெளிச்சம் தருகின்ற இரண்டு பெரிய ஜெனரேட்டர்கள், நடனமாடும் அழகிய பதுமைகள்”, என்ற வர்ணனைகளின் மூலமாக நம்மையும் அவ்விடத்திற்கே இழுத்துச்செல்கின்றார், புதுமாணவனாக செழியன் அடைந்த பிரம்மிப்பினை, நம்மாலும் ஒருதுளி சுவைக்கமுடியும்.

பாடல் அதன் அசையழுத்தத்திற்கேற்ப படமாக்கப்பட்டு வருகின்றது. கேமராவில் மேகம் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வதுதான் தற்போது செழியனின் வேலை. “நேற்று முன் இரவில்...” என்னும் வரிகளில் நாயகன், நடனக்காரர்களுடன் படியில் இறங்கிவருவதாக காட்சி. எந்தக்காட்சியையும் தட்டையாகவோ, நேரடியாகவோ பதிவு செய்ய விரும்பாத பி.சி.ஸ்ரீராம், மண்டபத்தின் வெளிப்படையான ஒளியில் தன் கருவிகளை தயார்படுத்திக்கொண்டிருப்பதும், மறுபுறம் பாடலுக்கான ஒத்திகைகள் நடைபெறுகின்றன.

ஒருவழியாக பரிசோதனையெல்லாம் முடிந்து “நேற்று முன் இரவில்...” பாடல் மென்மையாக ஒலிக்க கேமரா ட்ராலியில் இருந்து மெதுவாக காட்சிப்படுத்தியபடியே முன்னகர்கின்றது. வானத்தை தன் குளிர்கண்ணாடி வழியே பரிசோதித்துக்கொண்டிருக்கின்ற நம் செழியனுக்கு திடீர் அதிர்ச்சி, காரணம் மேகங்கள் கூட்டமாக சூரியனை நோக்கி வருகின்றன. எப்படியும் அவை சூரியனை மறைத்து ஒளியினை தன்கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துவிடுமென்பது செழியனுக்கு புரிந்துவிட்டது, ஆனால் இதனை பி.சி.ஸ்ரீராமிடம் தெரிவிக்கவும் பயம், காரணம் மிக நீண்ட ஒத்திகைக்கு பின்னால் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தன் சிறிய தவறுதலால் காட்சியமைப்பு தடைபட்டுவிடக்கூடாதே! என்று அமைதியாகிவிடுகின்றார். பின்பு காட்சியானது படமாக்கி முடிந்தபின்பு ஒளிப்பதிவாளரை நோக்கி செழியன் உட்பட உதவியாளர்கள் ஐந்து பேரும் பதற்றத்துடன் ஓடிவருகின்றனர்.

ஆனால், அனைத்தையும் தெரிந்துகொண்ட பி.சி.ஸ்ரீராம் நிதானமாக, “ காட்சியின் இடையில் மேகம் மூடியது எனக்கும் தெரியும், இப்பாடலின் முடிவில் “கர்வம் அழிந்ததடி”, என்று ஒலிக்கின்றது. மேகத்தின் நிழல் காட்சியை மறைப்பதும், கர்வம் அழிந்ததடி என்ற வார்த்தையிலிருந்த அர்த்தமும் ஒன்றிணையவே அமைதியாகயிருந்தேன்”, என்றாராம். பின்பு இதே காட்சியை வேறொரு கோணத்தில் படம்பிடிக்க மீண்டும் அங்கு மேகமானது சூரியனை மறைக்கும் காலத்திற்காக உதவியாளர்களும், படப்பிடிப்புக்குழுவினரும் நீண்ட நேரம் காத்திருந்தார்களாம்.

அதேபோல காட்சிப்படுத்தலின் அழகியலுக்காக, முடியாதென்று தெரிந்தும், கல்மண்டபங்களின் பாறைகளை நர்மதையாற்றின் நீர்க்கொண்டு நனைத்துக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராது மழைவந்து பாறைகளை மேம்போக்காக நனைத்துவிட்டு படப்பிடிப்பிற்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் விலகிச்சென்றது, கேமிரா வடிகட்டிகளுடனான கார் பயணம், அங்கு வாழ்கின்ற மக்களின் சுவாரஷ்யமான வாழ்க்கைமுறையென செழியன் விளக்குகின்ற தொனியைப் படித்து முடித்துவுடன் நாமும் அப்பாடலை (ஸ்நேகிதனே) மீண்டும் ஒருமுறை தேடிப்பிடித்து பார்க்கும் ஆர்வம் மேலிடுகின்றது.

”ஸ்நேகிதனே...”, பாடலை நான்கு நாட்களாக காட்சிப்படுத்திய விதமும், அதே படத்தில் இடம்பெறக்கூடிய “யாரோ, யாரோடி..”, பாடலை காலை பதினொரு மணிக்குத்துவங்கி, மாலை ஐந்து மணிக்குள் முடித்துவிட்டதனையும் , இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இடையே நிலவுகின்ற புரிந்துணர்விற்கும் கட்டுரையில் தவறாமல் இடம்கொடுக்கின்றார் செழியன்.
செழியன் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பது அனைவரும் அறிந்தவொன்றே, அதற்கான சாட்சியங்கள் இப்புத்தகத்தில் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அதேவேளையில் இசையைப் பற்றிய தனது புரிந்துணர்வினையும், இசை எவ்வாறு சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றது? என்பதனையும் இளையராஜா அங்கீகரிப்பதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட கலைஞன் என்னும் தலைப்பின்கீழ் படிக்கக் கொடுக்கின்றார்.
’ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக்கொள்வது தான் அவனது படைப்பிற்கு நாம் தருகிற கொலைத்தண்டனை’- என்று ழான் பால் சார்த்தரின் கூற்றை முதன்மையாக வைத்தே, கட்டுரையை தொடங்குகின்றார்.

”எட்டாவது ஸ்வரம்”, என்றும் , ”இசைஞானி”, என்றும் பலவிதமான பட்டங்களைக் கண்டுபிடித்துக் கெளரவிக்கிற நாம், அவரது இசைகுறித்த விமர்சன நூல்கள் வந்திருக்கின்றனவா? உணர்வுகளை ஸ்வரங்களாக துல்லிய மொழியாக்கம் செய்கிற அவரது புலைமை குறித்த நேர்மையான ஆய்வு இதுவரையிலும் முறைப்படி செய்யப்பட்டிருக்கின்றதா? இல்லை என்று கூச்சத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவாக நம்மிடையே திரைப்படம் சார்ந்த பாடல்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் பாடல்களைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.

நாம் பாடல்களை பார்க்கும்பொழுது, திரையில் நடிக நடிகையரின் ஆட்டமும், கண்கவர் காட்சிகளும் தெரிகின்றன. சில சமயம் இதே பாடல்களை வேறெங்காவது வெளியில் கேட்கும் பொழுது கூட அந்நடிகர்களின் காட்சி நம் நினைவில் வந்துபோகின்றது.

இங்குதான் உண்மையான இசைக்கலைஞனுக்கு துரோகம் விளைவதாக செழியன் கூறுகின்றார். அதாவது இளையராஜா போன்ற தேர்ந்த இசைப்படைப்பாளி தன் ஆழ்ந்த புலைமை கொண்டு ஒரு ஸ்வரக் கோர்வையை எழுதி, அதனை அந்த இசைக்கருவியில் வாசித்தால் உயிர்ப்பெறும் இசைக்கு, நாயகியானவள் தன் பின்புறத்தை ஆட்டுகிறாள். இது எவ்வளவு அபத்தமானது.

அந்த இசையினை உள்வாங்கி அதன் தீவிரத்தன்மையை திரையில் காட்டுவதில்லை. மாறாக மலிவான நோக்கத்திற்காக நடிகையின் அடிவயிற்று தசையை அசைப்பதற்காகவும், செயற்கை முடிதரித்த நாயகனின் பொருந்தாத அங்க அசைவிற்காகவுமே தயாரிக்கப்படுகின்ற சரக்காக இருக்கின்றது என்பதனையும் குறிப்பிட்டு இளையராஜாவின் இசையில் வந்த நிழல்கள் படத்தின் ‘பூங்கதவே’, ராஜபார்வை படத்தில் இடம்பெறுகின்ற வயலின் இசை, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, “என்னுள்ளே எங்கோ...”, ”16 வயதினிலே”, போன்ற பாடல்களை தேர்ந்தெடுத்து அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற இசைக்கோர்வை, நயம் குறித்தும் தனக்கு தெரிந்த வரையில் நன்கு ஆராய்ந்து எளியவருக்கும் புரியும்படியாக பதிவுசெய்கின்றார்.

கூறியது கூறல் முறையில் இடம்பிடித்த “பூவே..., செம்பூவே...”, பாடல், இசையின் ஏற்பாடுகளில் கேள்வி- பதில் முறையிலான பாணி அதாவது, குரலுக்கும் குரலுக்கும், இசைக்கருவிக்கும் இசைக்கருவிக்கும், அல்லது இசைக்கருவிக்கும் குரலுக்கும், இவ்வாறான மாறுபட்ட ஸ்வர ஸ்தானங்களை கையாளக்கூடிய இசைத்தொகுப்பான ப்ரியா படப்பாடல், “அக்கரைசீமை...” என்னும் படலை பின்தொடரும் வயலின் இசை , ”சுந்தரி கண்ணால் ஒரு சேதி...”, என்னும் ”தளபதி”, படப்பாடலின் குரலோடு இசையும், குழலிசை என்பவனவற்றை உதாரணமாக்குகிறார்.

கண்ணதாசன் தனது கடைசிக் காலங்களில் “திரைப்படங்களுக்கு பாடல் எழுதியது, குறித்து வருந்துகின்றேன் , எனது புலமையைத் தீவிர இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்”, என்றாராம், இந்தக்கூற்று இளையராஜாவிற்கும் சாலப்பொருந்தும். அதாவது, திரைப்படம் என்கிற வலிமையான ஊடகத்தினுள் இருப்பதால் அதிக அளவு புகழப்பட்டுவரும் அதே சமயம், இசை அறிஞர்களாலும், இசை விமர்சகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட கலைஞராகவும் இருக்கின்றார் இசைஞானி.

ஒரு புகைப்படக்கலைஞராக, தன் தொழில் சார்ந்த துறை மட்டுமல்லாமல், இன்னபிற சகதுறைகளிலும் இவர் கவனம் செலுத்தி வந்திருப்பது இவர் இசையை விமர்சிப்பதிலிருந்தே புலனாகின்றது. மேலும், செழியன் இத்தோடு நில்லாமல் தமிழ்சினிமாவின் திரைக்கதை பற்றியும் முதல் கட்டுரையிலேயே தன் கருத்துக்களை பதிவுசெய்கின்றார். செழியனின் முனைப்பு எல்லாமே யதார்த்த சினிமா சார்ந்ததேயென்றாலும், இவர் வணிக சினிமாவிற்கான வெற்றியின் இலக்கணங்களையும் சூட்சமமாக பிரித்துத்தந்திருக்கின்றார்.

வணிக சினிமாவில் பாடல்கள் தவிர்க்கமுடியாமல் இடம்பெறுவதற்காக இவர் சுட்டிக்காட்டும் காரணம், பாடல்களின் ரிதமானது கதையின் வேகத்தை முன்னெடுத்துச்செல்லப் பயன்படுகிறது. அதேபோலவே பாடல்களுக்கு இணையான சுவாரஸ்யம் தரக்கூடிய இன்னொரு வஸ்து நகைச்சுவைதான். இவையிரண்டும் தேர்ந்த திறத்துடன் வெளிப்பட்டு, கதை கொஞ்சம் சுமாராகயிருந்தாலே படம் ஓடிவட சாத்தியம் அதிகம். இதுதான் தற்போது நடந்துவருகின்ற நிதர்சன உண்மை.

வணிகப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகனின் நண்பர்களாகவே நகைச்சுவை நடிகர்கள் இடம்பெறுகின்றனர். இதன்தொடர்ச்சியாக வணிக சினிமாவின் வெற்றிக்கான சூத்திரங்களாக இவர் முன்னெடுக்கும் சில கருத்துக்களின்படி:

• சொல்லவேண்டிய கதையோட்டத்தோடு, (main track), இணைந்து வரும் மற்றொரு கிளைக்கதை (sub track) ex: முதல்மரியாதை

• இதை தவிர்ப்பவர்கள் கதாநாயகன், அல்லது கதாநாயகியை இரண்டாக படைக்கின்றார்கள்.
• திருப்பங்கள் நிறைந்த நினைவுமீள்தல் (flashback)

கிளைக்கதையை நாடாதவர்கள், நினைவு மீள்தல் முறயிலேயே மற்றொரு கதையினை தருகின்றார்கள்.
இயக்குனர் சங்கரின் படங்கள் பெரும்பாலும் வணிக வெற்றியடைய இத்தகைய நுணுக்கங்களே காரணம் என செழியன் சுட்டுகிறார். உதாரணமாக, இந்தியன், ஜெண்டில்மேன், எந்திரன், ஜீன்ஸ் இன்னும் சில.

இத்தகைய உத்திகளைச்சொன்னாலும், யதார்த்த சினிமாவும், 90 சதவீத ஆங்கிலப்படங்களும் தான்சொல்கின்ற கதையைத் தவிர வேறொரு கிளைக்கதையை நாடுவதில்லை என்பதிலும் உறுதியாகயிருக்கின்றார் செழியன். ஏன்? தேவையில்லாத ஒரு காட்சியைக் கூட காலத்தால் அழியாத படங்கள் இடையே சொருகுவதில்லை. அவைகள்தான் பின்நாளில் உலக சினிமாக்களாகின்றன. மேலும் இவருடைய ”திரைக்கதையும் குணச்சித்திரமும்”, என்ற கட்டுரையில் திரையில் பார்க்கக்கூடிய மனிதனுக்குண்டான குணநலன்கள் தெளிவாக பிரதிபலிக்க வேண்டுமென்கின்றார். சிட்பீல்டின்(syd field) கூற்றுப்படி திரைக்கதை எழுதத் துவங்கும் முன் அதில் இடம்பெறக்கூடிய கதாபாத்திரங்களின் குணநலன்களை வரையறுத்து குறைந்தது இரு பக்கத்திற்காவது எழுத வேண்டும். இதனையடுத்து எழும் திரைக்கதையானதுதான் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை நினைவுகூர்கின்றார்.

இப்படியான திரைக்கதையில்தான் பாடல்கள் இடைச்செறுகலாகின்றன. அதிலும் வணிக சினிமாவில் இடம்பெறக்கூடிய பாடல்கள் அபத்தமானவை என்பதோடு மிகவும் ஆபத்தானவை. பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளை இவைகள் மிக எளிதில் ஆட்கொண்டுவிடுகின்றன. குழந்தைகளுக்கான ஆரோக்கியமான பொழுதுபோக்குமிடங்களும், விளையாட்டுத்திடல்களும், அவர்களுக்கான பிரத்யேக தமிழ் படங்களும் மிக குறைவாகயிருப்பதும், ஒருவித காரணங்களாக இயைந்துக்கொள்கின்றன.

மேலும் இத்தகைய பாடல்களே பள்ளிகளின் ஆண்டுவிழாக்களிலும், இன்னபிற நிகழ்ச்சிகளிலும் சிறார்கள் நடனமாட தேர்ந்தெடுப்பதால், முழுப்பாடல்களையும் மனப்பாடம் செய்துவிடுகின்றனர். இதற்கு அவசியமில்லாமலேயே முழுப்பாடல்களையும் மனனம் செய்துவிடுகின்ற குழந்தைகளும் இருக்கின்றனர்.

அதிலும் அப்பாடலின் வரிகளான முன்னழகு, பின்னழகு, மார்புக்கு மத்தியில், செக்ஸ் மலை போன்ற கொச்சைகளை அவற்றின் அர்த்தம் தெரியாமலேயே கற்றுக்கொண்டு விடுகின்றனர். இது காலத்தின் அவலநிலையென்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்படியாக குழந்தைகளின் கனவுக்கோட்டைக்குள் புகுந்துவிட்ட வணிக சினிமா நாயகர்களின் அந்திமக்காலம் வந்துவிட்டதாகவும் மற்றொரு கட்டுரையில் செழியன் குறிப்பிடுகின்றார்.
ஒருபடம் வெற்றியடைய செழியன் முன்வைக்கின்ற விஷயங்களென நட்சத்திர மதிப்பு, விளம்பரங்கள், உடன் வெளியாகும் படங்களைக் கூறுகின்றார்.

இதில் நட்சத்திர மதிப்பு மட்டுமே ஒருவித மாயை., இதன் மதிப்பு வெறும் பத்து அல்லது இருபது சதவீதமேயிருக்கின்றன. தனது அன்றாட குடிநீர், மின்சாரப் பிரச்சனையில் சிக்கித்தவிக்கின்ற சாமானியனை திரையரங்கிற்கு அழைத்துவருகின்ற கூலியாட்கள்தான் விளம்பரங்கள். ஆனால் இத்தகைய விளம்பரங்களும் மிகையாக சித்தரிக்கப்படுவதால், அந்த மிகையுணர்வு திரைப்படத்தில் இல்லாமல் போனால்தான் படம் தோல்வியடைகின்றது.

ஒருவேளை நட்சத்திர மதிப்பு உண்மையாகயிருந்தால் நீங்கள் புகழக்கூடிய அந்நடிகர் நடித்த எல்லா படங்களுமே வெற்றியடைந்திருக்க வேண்டும், இரண்டாவதாக மற்ற எந்த பிரபலங்களையும் அவரது படத்தில் பயன்படுத்தக்கூடாது.

ஒரு படத்தின் வெற்றியானது கதை சார்ந்தது மட்டுமே நடிகரை சார்ந்ததல்ல. நடிகனானவன் மக்களை திரையரங்கிற்கு இழுத்துவரக்கூடிய கவர்ச்சியாகமட்டுமேயிருக்கின்றான். அதுவும் படம் வெளியான இரண்டு நாட்கள் மட்டுமே. அடுத்த வெள்ளிக்கிழமை இன்னொரு படம் வெளியாகுமானால் ரசிகர்கள் அதனை நாடி சென்றுவிடுவார்கள். நவீனயுகத்தில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு படங்களாவது திரையிடப்படுகின்றது.

தற்போது நிகழ்ந்துவரக்கூடிய தொழில்நுட்பத்தில் எவரும் நான்கு நண்பர்களுடன் இணைந்து எளிதாக குறும்படம் எடுத்துவிட இயலும். ஆனால் இதிலும் வணிகப்படங்களுக்கான சரக்குகளே இடம்பெறுவதை மட்டும் செழியன் எதிர்க்கின்றார்.

நல்ல சினிமாவிற்கான இலக்கணங்களையும், திரைக்கதை சுழிப்புகளையும் பற்றி குறிப்பிட்ட செழியன், மேலும் சில படங்களைப்பற்றியும் விமர்சனத்திற்குள்ளாக்குகின்றார். அதுவும் ”காதல்”, திரைப்படம் பற்றியதான விமர்சனத்தில், ஐஸ்வர்யாவின் பைக்கை முருகன் சரிசெய்யும் பொழுது, முருகனின் டிபன் பாக்ஸ், ஐஸ்வர்யாவின் ஸ்கேலை நோக்கி நகரும், இதன் மூலம் இருவரது உள்ளமும் நெருங்குகின்றது, என்பதனை இயக்குனர் குறிப்பால் உணர்த்தும் விதங்களை அழகாக எடுத்துரைக்கின்றார், எனினும்., இப்புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் ”பிதாமகன்”, படத்திற்கான விமர்சனத்தைத் தவிர, மற்ற விமர்சனங்களான ’காதல்’, ’சொர்க்கத்தின் குழந்தைகள்’(children of heaven), ’கன்னத்தில் முத்தமிட்டாள்’, போன்ற படங்களை விமர்சனம் என்கின்ற பெயரில் முழுக்கதையையுமே எழுதிவைத்திருக்கின்றார், இதில் படத்தை பற்றிய விமர்சனமானது கட்டுரையின் இறுதியில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. இது வரவேற்கும் விதமாக அமையவில்லை, படத்தின் கதையை ஆறு, ஏழு பக்கத்திற்கு எழுதிவைத்துவிட்டு, அதனைப்பற்றிய கருத்துக்களை இடைச்செருகலாக ஆங்காங்கே தந்ததோடு, முடிக்கும்தருவாயில் ஒரு பஞ்ச் என்பதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.

ஏற்கனவே செழியன் ”உலக சினிமா”, என்ற பெயரில் எழுதிய மூன்று பாகங்களுமே, படத்தின் முழுக்கதையை மட்டுமே விவரிப்பதாகயிருக்கும், இங்கும் அதனையே செய்துள்ளார்.

மேலும் முதல் கட்டுரையில் மக்களின் ரசனை பற்றி குறிப்பிடுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வியாபாரத்திற்கு வருகின்ற, சோப், சாக்லெட், ஷேம்பு முதலான நுகர்பொருட்கள் அதிகம் வாங்கப்படாமல் போகும்போது அவர்கள் மக்களின் சுவையுணர்வை, ரசனையை குறை சொல்வதில்லை, மாறாக அதனை வேறுவடிவத்தில் தருகின்றனர். ஆனால் சினிமாவில் மட்டுமே மக்களின் ரசனையுணர்வை குற்றம் சுமத்துகின்றனர்.” என்கின்றார். இதுபோன்ற கூற்றுக்கள் மனதில் ஏற்றிக்கொள்ள உறுத்துகின்றது.

இவரது கூற்றுப்படி, மக்களை குறைசொல்வது தவறுதான். ஆனால், தொடர்ந்து மக்களுக்கு பிடிக்கிறதே என்று அவர்களுக்குப் பிடித்தவற்றையே கொடுத்துப்பழக்கியதன் விளைவுதான், இன்று வணிகசினிமா என்ற பெயரில் மிகப்பெரும் பூதமாக வளர்ந்திருக்கின்றது.

ஆனால் நாம் மக்களின் ரசனையைக் குறைசொல்வதைக்காட்டிலும் அவர்களின் ரசனையை மேம்படுத்த நல்ல முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

செழியன் தன் எழுத்து நடையின் மூலமாக இப்புத்தகத்தை எங்குமே தொய்வடையவிடுவதில்லை, ஏற்கனவே மத்திய அரசின் “junior fellowship”, ”கதா விருது”, முதலியவற்றை தன் எழுத்துக்காக வாங்கியவர் என்பதால்தான் அசாத்தியமான எழுத்துக்கோர்வை வாய்க்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் தன் எண்ணவோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தவைகளை பிடித்து எழுத்தின் துணைகொண்டு புத்தகத்தினுள் அடைத்திருக்கின்றார்.

இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் “கணையாழி, தீராநதி, காலச்சுவடு, உயிர்மை”, என்ற பிரபல சிற்றிதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் இடம்பிடித்தவைகள். இந்தக்கட்டுரைகளின் மொத்த தொகுப்பையே “பேசும்படம்”, என்ற தலைப்பில் “காலச்சுவடு”, பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது.

’சத்யஜித்ரே’, தனது முதல்படமான ”பதேர் பாஞ்சாலி”,யை படமாக்க மேற்கொண்ட முயற்சிகள், அனுபவங்கள், தடைகள் என்னென்ன என்பதையெல்லாம், அழகாகவே விவரிக்கின்றார். இவர் அணுகி கதைசொல்லும் ஒவ்வொரு படங்களைப்பற்றியும் படிக்கும் சமயத்தில் நாம் ஏற்கனவே படங்களை பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிடுகின்றார்.

ஒரு துறையை சார்ந்துமட்டுமல்லாமல், பலதுறைகளையும் ஒரு புத்தகத்துள்ளே அடக்கியுள்ள பேசும்படம், நிச்சயம் மற்றொரு கோணத்தில் சினிமாவின் மாயைகளை புரிந்துகொண்டு அணுக உதவும்.