பாலஸ்தீன சினிமா: கடைசி எல்லைகளுக்கு அப்பால் நாங்கள் எங்கே செல்வோம்?

-அம்சவள்ளி

தான் பிறந்த நாட்டைவிட்டு வெளியேறி, நாடு நாடாகச் சுற்றிக்கொண்டிருக்கிற ஒரு இயக்குனர் எலையா சுலைமான் (Elia suleiman). மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடம், என்பது அம்மனிதர்களின் அடையாளமாகவும் இருக்கிறது. இன்றைய இஸ்ரேலின், நஸரத் எனும் பகுதியில் பிறந்த இவர், பாலஸ்தீனை, இஸ்ரேல் சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்ட பிறகு, இஸ்ரேல் – பாலஸ்தீன் இரு நாடுகளுக்கிடையேயான போர்களின் விளைவால், அங்கிருந்து வெளியேறியவர். க்ரோனிக்கல் ஆஃப் டிஸ்ஸப்பியரன்ஸ் (Chronicle of a Disappearance, 1996), டிவைன் இண்டர்வென்ஷன் (Divine Intervention, 2002), த டைம் தட் ரிமெய்ன்ஸ் (The Time That Remains, 2009), இட் மஸ்ட் பி எ ஹெவன் (It Must Be Heaven, 2019) என்ற இவரது நான்கு படங்களையும் எடுத்துக்கொண்டு, அதன் வாயிலாக, இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையேயான போர்ச்சூழலை விளக்குவது இவ்வுரையாடலின் நோக்கம். 

எப்போதுமே, கலை வெளிப்பாட்டிற்கு, அதன் உண்மைத்தன்மை மிக முக்கியம். எலையா சுலைமான், தன் ஒவ்வொரு திரைப்படத்தையும், தன் தாய் தந்தையரின் நாட்குறிப்புகளிலிருந்தும், தனது நாட்குறிப்புகளிலிருந்தும்தான் உருவாக்குகிறார். புலம்பெயர்தல், தான் பிறந்த இடத்தை நோக்கிய தேடல், நாடு விட்டு நாடு அலைதல், தான் வாழ்ந்த நிலம் பற்றிய மீள் நினைவாக்கல் என்பன, இவரது படங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிற கதைக்களன்களாக இருக்கின்றன. தான் இயக்குகிற படங்களில், கதை மாந்தராகவும் இவரே பங்கேற்கிறார். இவரது திரைப்படங்கள், உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தைப் பெறுவதற்கு, தனித்துவமான கதைசொல்லல், காட்சிமொழி பாணியை தேர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு கவிதைபோல, தான் சொல்லவேண்டிய கருத்தைக் குறிப்பால் உணர்த்துகிறார். உலக சினிமா அரங்கில், இவரது அரசியல் நிலைப்பாடும், திரைமொழியும் தனிக்கவனம் பெறுகின்றன.

அம்சவள்ளி: வழக்கம்போல, இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே நடக்கிற பிரச்சினைகள், அதன் வரலாறு பற்றிய சிறு அறிமுகத்தைத் தெரிந்துகொண்டபின், படம் சார்ந்த உரையாடலுக்குள் செல்வது பொருத்தமாக இருக்கும். உண்மையிலேயே, எலையா சுலைமானின் படங்களைப் புரிந்துகொள்வதற்கு, நாம் என்ன செய்யவேண்டுமென்றால், இந்த மேற்குக் கரை பிரதேசம் என்றால் என்ன? ரமலான் நகரம் என்றால் என்ன? இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிப்பட்ட பாலஸ்தீன பிரதேசமான நஸரத் என்றால் என்ன? இந்த விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலப்பரப்புகளுக்கிடையேதான், இப்படத்தினுடைய நான்கு கதைகளும் நடக்கிறது. இந்தக் கதைகள் எல்லாமே, துவங்குகிற இடம், நஸரத். அவரது இயக்கத்தில் வெளியான ஆரம்பகாலப் படங்களிலிருந்து, அவரது சமீபத்திய படம் வரையில், கதையானது நஸரத் நகரத்தில்தான் ஆரம்பிக்கிறது. தற்போது, எலையா சுலைமான், நியூயார்க் நகரத்தில் வசிக்கிறார். ஆனால், நியூயார்க்கிற்கு வருவதற்கு முன்பாக, பத்தாண்டுகள், ஐரோப்பிய நாடுகளில், இங்கிலாந்திலும், ஃப்ரான்சிலும் வாழ்ந்திருக்கிறார். அகதியாக அலைந்துகொண்டிருந்திருக்கிறார். இருப்பினும் அவர் தனது வீடென கருதுவது, நஸரத்தைத்தான்.

Figure 28 Elia suleiman

யமுனா ராஜேந்திரன்: இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிறகுதான், இஸ்ரேல் என்ற நாடு உருவாகியது. இப்போது, பாலஸ்தீனம் என்று சொல்லப்படுகிற நிலப்பரப்பை, வரலாற்று ரீதியில் பார்த்தோமானால், பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்கள், அதற்கடுத்து கிறித்தவர்கள், யூதர்கள் வாழக்கூடிய பகுதியாகத்தான், வரலாற்றில் இருந்திருக்கிறது. மதங்களுடைய தொன்மங்கள் சார்ந்து, பைபிள், இயேசு கிறிஸ்து, அல்லாஹ், மோசஸ் இவர்களைச் சார்ந்து, இந்த மதங்களுக்குள் ஓர்மையான விஷயம் இருக்கிறது. ஆப்ரஹாமிய மதங்கள் என்று இவற்றைச் சொல்கிறார்கள். இவர்களுடைய மதங்களின் தோற்றம், தீர்க்கத்தரிசனங்கள் போன்றவை, இந்த மூன்று மதங்களுக்கும் பொதுவானவை. நடைமுறையில் பார்த்தீர்களேயானால், முந்நூறு, நானூறு ஆண்டுகளாக, அந்நிலப்பரப்பில் பெரும்பான்மையாக மக்களாக இருக்கிறவர்கள், மெட்டீரியலாக இருக்கிறவர்கள், பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிறகு, குறிப்பாக பிரித்தானியாவினுடைய முன்னெடுப்பில், இஸ்ரேல் என்ற ஒரு நாடு, பாலஸ்தீனத்தினுடைய நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. பிறகு, பாலஸ்தீன மக்கள் வாழ்கிற நிலங்களை, ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து, இப்போது பாலஸ்தீனங்களினுடைய நிலங்களையும், அந்நாட்டையும் தங்களுடைய நாடு என்று இஸ்ரேலியர்கள் சொல்கிறார்கள். இதற்கு ஆதரவாக இருப்பவர்கள், பிரித்தானியா, அமெரிக்கா போன்றவற்றின் இராணுவங்கள். மேற்கத்திய நாடுகளுடன் கொண்டிருக்கிற அரசாங்க ரீதியிலான உறவுகளும்தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. 

இன்றைக்கு, மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக அரபு உலகத்தில் இருக்கிற நாடுகளில், அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்கிற நாடு, பெரிய ராணுவ வல்லமை கொண்ட நாடாக, இஸ்ரேலை அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கிறது. தனக்கான, ஒரு அடியாளாக, அரபுப் பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய நாடாக, இஸ்ரேலை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உருவாக்கி வைத்திருக்கின்றன. இப்போது, இஸ்ரேல் என்ற ஒரு நாடு, இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிற்பாடாக, அமெரிக்காவினாலும், பிரித்தானியாவினாலும் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. அந்நாடு, இப்போது பாலஸ்தீன மக்களின் பூர்வீகமான நிலங்களை முழுக்க ஆக்கிரமித்துக்கொள்வது மட்டுமல்ல, அம்மக்களை அங்கிருந்து துரத்துகிறது. இதனை, மஹ்மத் தர்வீஷின் வார்த்தைகளில் சொல்வதானால், “கடைசி வானத்தின் பின், நாங்கள் எங்கே செல்வோம்” என்பதோடு ஒப்பிடலாம், இருப்பதற்கான, ஒரு துண்டு நிலம் இல்லாமல், நாங்கள் எங்கே நிற்போம்! என்ற கேள்விதான் அது. அப்படித்தான், அம்மக்களை துரத்தித் துரத்தி இப்போது, மேற்குக் கரையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசம், காஸா என்றொரு சிறு பிரதேசம், இதில் அந்த பாலஸ்தீன மக்களை, குறிப்பிட்ட நில வரையறைக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கிருக்கிற நிலை.

இஸ்ரேல் என்பது வரலாற்று ரீதியில், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஸ்தூலமாக இருக்கவேயில்லை.

எண்பது ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்ட, ஒரு நாடு. இது ஒரு அம்சம். மற்றது, இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்படுவதற்கு முக்கியமான காரணம், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஹிட்லர், யூதர்களை இனப்படுகொலை செய்தார். அந்த இனப்படுகொலையில் ஏறக்குறைய அறுபது லட்சம் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். அவர்கள் மீதொரு பரிவுணர்வு உலகம் முழுக்க இருந்தது. அந்த பரிவுணர்வைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கு ஆதரவான, ஒரு அடியாளாகத்தான் இஸ்ரேலை, பாலஸ்தீனத்தில் உருவாக்கினார்கள். ஆனால், இன்றைக்கு, எந்த இனக்கொலைக்கு அந்த இஸ்ரேலியர்கள் உள்ளானார்களோ, அதேவிதமான இனக்கொலை நடவடிக்கையை பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்கள் திணிக்கிறார்கள். அண்மையில், இஸ்ரேலிய வலதுசாரிகள் மிகப்பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில், அவர்கள் போட்ட கோஷம், “இன்று நாங்கள் யூதர்கள் அல்ல, நாங்கள் நாஜிக்கள்”. அதாவது, ”கடந்த காலத்தில், இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் அல்ல நாங்கள், இன்றைக்கிருக்கிற நாங்கள், நாஜிக்களைப் போல, பாலஸ்தீன மக்களை, இனக்கொலைக்கு உள்ளாக்கக்கூடியவர்கள்” என்று ஹிட்லர் செய்ததை நியாயப்படுத்துவதுபோல, பேசினார்கள். இஸ்ரேல் என்ற நாடு, ஒரு காலத்தில், ஹிட்லர் தனக்கு எதைச் செய்தாரோ, இன்று அதை பாலஸ்தீன மக்களுக்குச் செய்துகொண்டிருக்கிறது. 

இதில் மூன்றாவது அம்சம், இருபத்தைந்து அடி, உயரத்திற்கு ஒரு மதிலை எழுப்பியிருக்கிறார்கள். பாலஸ்தீனம் இப்போது இரண்டு குழுக்களால் ஆளப்படுகிற நாடாக இருக்கிறது. ஒன்று, மேற்குக் கரையில் இருக்கிற அந்தப் பிரதேசத்தை, பாலஸ்தீனியன் அத்தாரிட்டி என்று சொல்லப்படுகிற, ஃபதா (fatah) இயக்கம், (யாசர் அராஃபத், உருவாக்கிய ஃபதா இயக்கம்). அந்த இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது இஸ்ரேலுடன் ஒரு நல்லிணக்கதை வைத்துக்கொண்டிருக்கிற, ஒரு ஆளுகைக்குரிய பிரதேசம். இன்னொரு பிரதேசமான காஸாவில் முழுக்க, அமாஸினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற மக்கள் வாழ்கிறார்கள். இப்போது, எந்தப் பிரதேசத்தில் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், மேற்குக் கரைக்கும், இஸ்ரேலுக்கும் நடுவில் இருக்கிற பிரதேசத்தில் இருபத்தைந்து அடி உயரத்திற்கு மேல், சுவர் கட்டியிருக்கிறார்கள். இதில், ‘நஸரத்’ என்ற நகரம், இஸ்ரேலுக்குள் இருக்கிற, பாலஸ்தீனத்தினுடைய பிரதேசம். அந்த நஸரத் நகருக்கும், ரமலான் நகருக்கும் இடையில், இருபத்தைந்து அடி உயரத்திற்கு அந்தச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. 

The Wall - Stop The Wall

எலையா சுலைமான், நஸரத் நகரத்தில் பிறந்தவர். அவர் தான் பிறந்த நஸரத் நகரத்திற்குச் செல்லவேண்டுமென்றாலே, அனுமதி பெற்றாக வேண்டும். பல்வேறு கெடுபிடிகளைக் கடந்து சென்றாக வேண்டும். நஸரத்திற்க்கும், ரமலாவிற்கும் இடையில் பெரிய காவல் கோபுரங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டிச் செல்வது என்பதே, பெரிய போராட்டம். 

அம்சவள்ளி: இவருடைய படங்கள், நஸரத், ரமலான், பாரீஸ் மற்றும் நியூயார்க் இந்த நான்கு, நகரங்களுக்கிடையே அலைந்துகொண்டிருப்பதாக இருக்கும். கிளாசிக்கலான விஷயம் என்னவென்றால், எந்த நஸரத்திலிருந்து உலக நாடுகளுக்கு பயணம் செய்தாரோ, மீண்டும் மீண்டும் நஸரத்திற்குத்தான் வந்து சேர்வார். அவர் நியூயார்க்கில் இருந்தாலும், நஸரத்தின் ஞாபகங்கள் அவரைத் தொடர்ந்துகொண்டேயிருக்கும். எனவே, அவர் படங்களில் மீண்டும் நஸரத்திற்கு வருவார்.

யமுனா ராஜேந்திரன்: ஆம். மகத்தான கலைஞர்களிடம் இருக்கிற பொதுவான ஒரு விஷயம், திரும்பத் திரும்ப ஒரே வாழ்க்கையினுடைய பல்வேறு பரிமாணங்களைத் திரைப்படங்களாகவும், படைப்புகளாகவும் தந்துகொண்டிருப்பார்கள். ஏனென்றால், உலகம் என்பது ஒன்று, உலகம் ஒரு வீடு, மனிதர்கள் நமக்கு உறவுகள் என்று நினைக்கிற எல்லோருமே, வாழ்க்கை ஒன்று, வாழ்க்கைக் கதையும் ஒன்று என்றுதான் நினைப்பார்கள். அதுபோலத்தான், இவருடைய படங்கள் என்பது, இவருடைய டயரிக் குறிப்புகள். இவருடைய தாத்தாவைப் பற்றின, அப்பாவைப் பற்றின, இவருடைய தாயைப் பற்றின, இவருடைய சகோதர சகோதரிகளைப் பற்றின, அண்டைவீட்டுக் காரர்களைப் பற்றிய படங்கள்தான் இவர் உருவாக்கியது. மேலும், இந்தப் படங்கள் எல்லாவற்றிலும் கதாநாயகனும் இவர்தான். 

அம்சவள்ளி: தன்னைப் பாதித்த, தான் அனுபவித்த கதைகளைப் படமாக்குகிறார். அவரே நடிக்கிறார்.

யமுனா ராஜேந்திரன்: இவரது திரைப்படங்களில் இருக்கிற தனித்துவங்களில் அதுவும் ஒன்று. இவர் ஒரு இயக்குனராகவும், படைப்பாளியாகவும், கதை சொல்லியாகவும், ஒரு நடிகராகவும் இருந்துகொண்டு, இவருடைய எல்லா படங்களிலும், இவர் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். இதுவொரு தனித்துவம். 

அம்சவள்ளி: பாலஸ்தீனத்தில் இருக்கிற, ஹமாஸ் மற்றும் ஃபதா, இவ்விரு இயக்கங்களின் போராட்ட வழிமுறைகள் என்னவாகயிருக்கின்றன? 

யமுனா ராஜேந்திரன்: பாலாஸ்தீனத்திலேயே இரண்டு பிரதேசங்கள், இரண்டு குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒன்று மேற்குக் கரை பிரதேசம், இன்னொன்று காஸா பிரதேசம். காஸா பிரதேசம், ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேற்குக் கரை பிரதேசம், பாலஸ்தீனத்தின் அத்தாரிட்டி என்று சொல்லப்படுகிற, யாசர் அராஃபத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த குழுவான, ஃபதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரமலான் என்ற நகரம், ஃபதாவின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இஸ்ரேலின் கீழ் இருக்கிற நஸரத் என்பதுதான் எலையா சுலைமான் பிறந்த நகரம். இவ்விரு நகரங்களுக்கு இடையே, மிக நீளமான, உயரமான சுவர் கட்டப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சில இடங்களில் மட்டும், இரு நகரத்திலிருப்பவர்களும் வந்து போவதற்கான காவற்கோபுரங்கள் விட்டு, சில இடைவெளிகள் விட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மற்றது, இந்த ஹமாஸுக்கும், ஃபதா என்ற இயக்கத்திற்கும் இருக்கிற அரசியல் ரீதியிலான வித்தியாசங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
 
”இஸ்ரேல் என்ற ஒரு நாடே இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடாது”, என்ற மாதிரியான, ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிற ஒரு இயக்கம், ஹமாஸ். இஸ்ரேல் எப்படியோ உருவாகிவிட்டது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்தினுடைய, பிரித்தானியாவினுடைய, அமெரிக்காவினுடைய ஏற்பாட்டில் உருவாக்கிவிட்டது. எழுபது, எழுபத்தைந்து ஆண்டுகள், அந்நிலப்பரப்பில் அந்த மக்கள், வாழ்ந்துவிட்டார்கள். ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை அவர்கள் வைத்துக்கொள்ளட்டும். அவர்கள் நாடு இருக்கட்டும். அதேபோல, எங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், எங்களுடைய நாடு, பாலஸ்தீனம் இருக்கட்டும். அதை உலகம் முழுக்க அங்கீகரிக்க வேண்டும். அதற்கான, அண்டை நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள், ராஜ்ஜிய உறவுகள் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஃபதா இயக்கம் முன்வைக்கிறது. அந்தளவிற்கு ஃபதாவிற்கும் இஸ்ரேலிற்கும் ஒரு பெரிய பேச்சுவார்த்தை, நடப்பது, மெளனமாக இருப்பது, காவல்துறை போன்ற சிறு விஷயங்களில் சிற்சில உடன்பாட்டை எட்டுவது, என்பதான நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால், ஹமாஸைப் பொறுத்தளவு, இஸ்ரேல் அந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடாது என்பதனால், ஆயுதப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கிற போர் என்று நாம் கேள்விப்படுகிற, பார்க்கிற எல்லாவித தாக்குதல் சம்பவங்களும் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கிற சண்டைகள்தான். காஸா பிரதேசத்தில்தான், விமானங்களில் சென்று குண்டு போடுவது, நகரங்களை அழிப்பது போன்று தொடர்ந்து இஸ்ரேல், அண்மைக்காலங்களில் செய்துகொண்டிருக்கிறது. ஆகவே, இந்த ஃபதா என்ற இயக்கம், ஹமாஸ் என்ற இயக்கத்திற்கும் இடையேயிருக்கிற வேறுபாடுகளை முதலில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து, நஸரத், என்ற நகரத்திற்கும், ரமலான் என்ற நகரத்திற்கும் இடையேயிருக்கிற வித்தியாசங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்தது, எலையா சுலைமானின் படங்கள் என்பது, திரும்பத் திரும்ப, நஸரத்தையும், ரமலாவையும் மையம்கொண்டுதான் உருவாகிறது. ஹமாஸ் ஆளுகைக்குக் கீழ் இருக்கிற காஸா பிரதேசத்தைப் பற்றி இவருடைய படங்கள் பேசுவதில்லை. காரணம் என்னவென்றால், எலையா சுலைமான் இயல்பில் பாலஸ்தீன கிறித்துவர். எட்வர்ட் சைத்தைப் போல, சுலைமான் கிறித்துவர். அதுவும், அந்த கிறித்துவ மரபிற்கும், இஸ்லாமிய மரபிற்கும் இடையிலான உறவு, இதுபோன்ற விஷயங்களைத்தான் படங்களில் பேசுகிறார். ஒன்றுபட்ட பாலஸ்தீனத்தை விரும்புகிறார். அடிப்படைவாதமல்லாத ஒரு பாலஸ்தீனம் என்பதுதான் அவருடைய கனவு. எட்வர்ட் சைத்தின் கனவும் அதுதான். 

நஸரத்தில் பிறந்த எலையா சுலைமான், ரமலாவிற்குச் சஞ்சரிக்கிறார். ரமலாவிலிருந்து பாரீஸுக்குச் செல்கிறார். பாரீஸிலிருந்து நியூயார்க்கிற்கு வருகிறார். உலகம் முழுக்க சஞ்சரித்தாலும் கூட, திரும்பத் திரும்ப தான் பிறந்த நஸரத்திற்கே வருகிறார். தன் தாயைத் தேடி, தன் தந்தையைத் தேடி, தன்னுடைய வேர்களைத் தேடி, நஸரத்திற்கே வருகிறார். இது, நான்கு படங்களிலும் இருக்கிற மிக முக்கியமான அம்சம்.

அம்சவள்ளி: மூன்று மதத்தினர் சேர்ந்து வசிக்கிற இடமாக அது இருக்கிறது. மதம் சார்ந்த போராட்டங்கள், நடக்கின்றன. பாலஸ்தீன – இஸ்ரேல் போரில் மதத்தின் பங்கு என்னவாகயிருக்கிறது?

யமுனா ராஜேந்திரன்: தேசிய இனப்பிரச்சினை என்று வருகிறபோது, இனங்கள் சார்ந்த தலைவர்கள் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்று பார்த்தீர்களேயானால், யார் பூர்வகுடிகள், யார் வந்தேறிகள் என்ற அரசியலைக் கையிலெடுப்பார்கள். அதற்கான, வரலாற்று ஆதாரங்களைத் தேடிச்செல்லும்போது, அவர்கள் சரணடைகிற இடம், அவரவர்களுடைய மதப் பனுவல்கள். மதப்பனுவல்களில் ஏதோவொரு இடத்தில், இம்மனிதர்கள்தான் இந்தப் பூமியில் முதன் முதலில் வந்து சேர்ந்தார்கள், இந்த நிலப்பரப்பிற்குள் முதன் முதல் வந்து சேர்ந்தார்கள், கடவுள் இந்தப் பூமியை அவர்களுக்குக் கொடுத்தது, அவர்களுக்குக் கையளிக்கப்பட்ட பூமி, என்பதுபோன்ற, இந்தத் தொன்மங்கள் அவரவர்களுடைய மதப்பனுவல்களில் நிச்சயமாக இருக்கும். ஆனால், இது எதுவுமே, வரலாற்று ரீதியிலான ஆதாரங்களைக் கொண்டதல்ல. மதப் பனுவல்களில் சொல்லப்பட்ட விஷயங்கள், நம்பிக்கைகள். உதாரணமாக, ராமர் பிறந்தார் என்பது தொன்மமேயொழிய வரலாறு கிடையாது. ராமர், லட்சுமணன் எல்லாம் காவியப் பாத்திரங்கள். காவியங்கள் மூலம், மக்களின் மனதில் பதிந்தவர்கள். அப்படி, இந்தத் தொன்மங்கள் வரலாறுகள் அல்ல. எழுதப்பட்ட வரலாறு என்பதில், நாம் ஒரு எண்பது ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டால், அந்த எழுதப்பட்ட வரலாற்றில், ஒரு காலத்தில், தொல்லியல் சான்றுகள் என்ன சொன்னது? மானுடவியல் சான்றுகள் என்ன சொல்கின்றன? என்று பார்க்கிறபோது, அந்தப் பிரதேசத்தில், எந்த மக்கள் அதிகமாக வாழ்ந்தார்கள், அவர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்ன? என்ற விஷயத்தை, கண்டுபிடித்து, அந்த மக்களைப் பற்றி நாம் சொல்லமுடியும். அப்படிப் பார்க்கிறபோது, ஒரு முந்நூறு நானூறு ஆண்டுகளாக, அந்தப் பிரதேசத்தில் அதிகம் வாழ்ந்த மக்களாக, பாலஸ்தீன மக்கள்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்துதான், கிறித்தவர்களும், இஸ்ரேலியர்களும் குடியேறியிருக்கிறார்கள். ஆகவே, அந்த நிலம் என்பது, பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிற நிலமாகத்தான் இருந்தது. இந்த இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிறகு, பிரித்தானியாவினுடைய, அமெரிக்காவினுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக, மத்திய கிழக்கு நாடுகளில், அரபு நாடுகளுக்கு இடையில், தங்களுக்கான ஒரு சேவகன் அல்லது அடியாள் வேண்டுமென்பதற்காக, அந்த இஸ்ரேலை, பாலஸ்தீனத்திற்குள் இராணுவத்தை வைத்து, இராணுவ அதிகாரத்தை வைத்து, அவர்கள் நிலைநாட்டுகிறார்கள். அதற்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவ சர்வாதிகாரமாக, அணு ஆயுதம் கொண்ட ஒரு அரசாக, அந்தப் பிரதேசங்களில் மிகப்பெரிய ராணுவ பலமிக்க அரசாக உருவாகிறது.

இஸ்ரேல் என்பது இப்போது முழுமையாக ராணுவமயப்படுத்தப்பட்ட ஒரு நாடு. ஒரு பள்ளி மாணவன் என்பவன் இஸ்ரேலில் ராணுவத்திற்கு கட்டாயமாகச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படியான, ஒரு ராணுவ அரசாகத்தான் இஸ்ரேலை, கட்டமைத்திருக்கிறார்கள். ஆகவே, நிலப்பிரதேசம் என்பது அதிகமான மக்கள் வாழ்ந்தவர்கள் என்றளவில், தொல்லியல் சான்றுகள், மானுடவியல் ஆய்வுகள், போன்றவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கிறபோது, கடந்து முந்நூறு ஆண்டுகால வரலாற்றை வைத்துப் பார்க்கிறபோது, பாலஸ்தீன மக்கள்தான், அங்கே வாழ்ந்திருக்கிறார்கள். இஸ்லாமிய மக்கள்தான் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து, கிறித்துவ மக்களும் யூத மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறாக இருக்கிறது.

அம்சவள்ளி: இஸ்ரேல் முழுமையாக இராணுவ அதிகாரத்தோடு இருக்கிறது. அமெரிக்கா – பிரித்தானிய அரசுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து, பாலஸ்தானத்தின் மீதான, இந்தப் போரை ஊக்குவிக்கிறது. இஸ்ரேலை சர்வாதிகாரமாகத் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் மிக முக்கியமான ஆதாயம்?
யமுனா ராஜேந்திரன்: இந்நாடுகள், ஈராக்கைக் கைப்பற்றியதற்கு, ஈரானில் தொடர்ந்து தலையிடுவதற்கு, சிரியாவில் தொடர்ந்து தலையிடுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ’எண்ணெய் வளங்கள்’. அதாவது, பெட்ரோலியத்தில், உலகத்திலேயே, மிக வளம்மிக்க நாடுகளாக இருப்பது அராபிய நாடுகள். இந்நாடுகளிலிருந்துதான் உலகத்தினுடைய பெட்ரோலிய தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றன. ஆகவே, பெட்ரோலிய கிணறுகளை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்பதற்கான, ஒரு அரசியல் உரையாடலாகத்தான் அவர்கள் இஸ்ரேலின் ஆதிக்கத்தை முன்வைக்கிறார்கள். 

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஈராக்கில் ’வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டிஸ்ரக்‌ஷன்’ இருக்கிறது என்று சொல்லித்தான், பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஈராக்குடன் சண்டைக்கு சென்றார்கள். ஆனால், வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டிஸ்ட்ரக்‌ஷன் இல்லை, நாங்கள் செய்தது தவறு, எங்கள் இண்டலிஜன்ஸ் ஃபெயிலியர் என்று இப்போது சொல்கிறார்கள். ஆனால், இந்த இண்டலிஜன்ஸ் ஃபெயிலியருக்கு ஈராக்கிய மக்கள் கொடுத்த விலை என்ன? ஐந்து லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். பத்து லட்சம் மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டதாக தரவு சொல்கிறது. ஆகவே, ஒரு இண்டலிஜன்ஸ் ஃபெயிலியருக்காக, அமெரிக்காவினுடைய, பிரித்தானியாவினுடைய தவறுக்காக பத்து லட்சம் ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு, ஈராக்கில் அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் படைகள் இருக்கிறது. இதற்குப் பிற்பாடு, அங்கேயிருக்கிற எண்ணெய் கிணறுகளினுடைய ஒப்பந்தத்தை, அமெரிக்காவும், ப்ரான்சும், பிரித்தானியாவும், இத்தோடும் ரஸ்யாவும் சரிசமமாக பகிர்ந்துகொண்டார்கள். எண்ணெய்க் கம்பெனிகளின் பெரும்பாலான உற்பத்திகளின் கட்டுப்பாடு என்பது, மேற்கத்திய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும்தான் இருக்கிறது. இதுதான் இஸ்ரேல் விஷயத்திலும் நடக்கிறது. இஸ்ரேல் அதற்கு உதவி செய்கிறது.
 
இப்போது, இஸ்ரேலுக்கு எதிராகவோ, அமெரிக்காவிற்கு எதிராகவோ, யாராவது பேசினால், இஸ்ரேல் ஏவுகனை விடுவார்கள். சிரியா, லெபனான், பாலஸ்தீனத்தின் மேல், வீசிக்கொண்டிருப்பார்கள். தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு அரசாக, ஒரு கையாளாக, ஒரு அடியாளாக இஸ்ரேலை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பாவிக்கின்றன.

Minority Report: Elia Suleiman

அம்சவள்ளி: பாலஸ்தீனத்தில், எலையா சுலைமான் போன்ற பிற திரைப்படக் கலைஞர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மிக முக்கியமாகக் கவனிக்கப்படக்கூடிய கலைஞர் என்ற இடத்தில் எலையா சுலைமானை வைத்துப் பாராட்டுவதற்கு என்ன காரணம்?

யமுனா ராஜேந்திரன்: பாலஸ்தீன திரைப்படக் கலைஞர்கள் பற்றி இரண்டு மூன்று புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது, ஏன் எலையா சுலைமான் கொண்டாடப்படுகிற திரைக்கலைஞராக இருக்கிறாரென்றால், எலையா சுலைமான் தனித்துவமிக்க ஃப்லிம்மேக்கிங் ஸ்டைலைக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு காரணம். அவர்தான், தொகையாக நான்கு படங்கள் எடுத்தவராகவும் இருக்கிறார். பாலஸ்தீனத்தில் இருக்கிற மற்ற இயக்குனர்கள், ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் எடுத்து, அதன்மூலம் முக்கியத்துவம் பெற்ற, இயக்குனர்களாகத்தான் இருக்கிறார்கள். அடுத்தது, பாலஸ்தீனத்திலிருந்து வருகிற பெரும்பாலான படங்கள், குறும்படங்களாகத்தான் இருக்கும். அல்லது, ஆவணப்படங்களாகத்தான் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம், ஃபண்டிங். இந்த ஃபண்டிங் சம்மந்தமான பிரச்சனை பற்றி, எலையா சுலைமான் தனது நான்காவது படத்தில் பேசுவார்.
 
தேசிய விடுதலைப் போராட்ட சமூகங்களில், சினிமா உருவாக்குவதற்கு, மிகப்பெரிய தடையாக இருக்கிற விஷயம், ஒன்று, அவர்களுக்கு முதலீட்டிற்கான பணம் கிடையாது. அவர்களுடைய நாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டிருக்கின்றன. நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எப்போதுமே பதற்றத்தில் வாழ்கிறார்கள். ஆயுத மோதல்களுக்கு இடையில் வாழ்கிறார்கள். இரண்டாவது காரணம், அவர்களுக்கு பொருளாதார வளம், மற்றும் திரைப்படக் கருவிகள் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் பிறகு, அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளைப் பற்றி, தெளிவாக, விரிவான படங்கள் எடுத்தார்களென்றால், சர்வதேச தணிக்கை விதிகளைத் தாண்டி, இன்று அந்தப் படங்கள், விநியோகம் செய்யப்பட முடியாது. இன்றைக்கும், குர்தீஸ் படங்கள், அல்லது பாலஸ்தீன படங்கள் என இரண்டுமே அதிகமான, நாடுகளை எட்டுவதற்குக் காரணம், குர்தீஸ் ஃப்லிம் பெடரேஷன். அந்த ஃபெடரேஷன், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இருக்கிறது. அதைப்போலவே, பாலஸ்தீனிய ஃப்லிம் பெஸ்டிவல் என்ற அமைப்பை, வைத்திருக்கிறார்கள். அந்த அமைப்பு, அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும், இங்கிலாந்திலும் இருக்கிறது. இவர்கள், இங்கேயிருக்கிற, கலை அமைப்புக்களோடு சேர்ந்து, வருடா வருடம் பாலஸ்தீன திரைப்பட விழாக்கள், குர்தீஸ் திரைப்பட விழாக்களை முன்வைக்கிறார்கள். திரைப்பட விழாக்களுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால், அவை தணிக்கைக் குழுவிற்குள் போகவேண்டிய அவசியமில்லை. 

The Time That Remains Picture 6

அதனால், அவர்களுடைய குறும்படங்கள், ஆவணப்படங்கள், முழுநீளப்படங்கள் என எல்லாவற்றையும் தொடர்ந்து திரையிடுகிறார்கள். அண்மையில் குர்தீஸ் திரைப்பட விழா ஒன்று முழுக்க இணையத்தில் நடந்தது. ஏறக்குறைய, நூற்றி இருபத்தைந்து படங்கள், பதினைந்து நாள் இலவசமாகத் திரையிட்டார்கள். எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அது அமைந்திருந்தது. திரைப்பட விழாக்களைத் தாண்டி, படம் மக்களை அதிகமாகச் சென்று சேர்வதில்லை. இந்தக் காரணங்களினால்தான், பாலஸ்தீனமோ, ஈழமோ, குர்தீஸ்தானோ ஒரு பெரிய சினிமா இண்டஸ்ட்ரியாக, பெரும்பாலுமானவர்கள் பார்க்கமுடியாதவொன்றாக இருக்கிறது. இதையும் தாண்டி, உருவாகவேண்டும் என்றால், தனித்துவமிக்க திரைப்படைப்பாளியாக அவர் இருக்க வேண்டும். உலகளாவிய திரைமொழியைக் கையாளத்தெரிந்தவராக, அவர் இருக்க வேண்டும். இந்த நாடுகளில், பிரச்சினைகள் இருக்கிறது. இந்த நாடுகளில் சிக்கல் இருக்கிறது. ஆனாலும், சினிமா வடிவம் என்பதை ஒரு கலையாக, நூற்றாண்டிற்கும் மேலாக இருக்கிறது. இதில், பற்பல சாதனைகள் நிகழ்ந்திருக்கிறது. ஆகவே இந்த வழியைக் கற்றுக்கொண்ட ஒருவர். அதேபோல, தன் நிலத்தின், துயரத்தின் மொழியையும் அறிந்த ஒருவர், அவர் இரண்டையும் இணைக்கிறபோதுதான், அவர் ஒரு தனித்துவமிக்க திரைப்படைப்பாளியாக வரமுடியும். அதுபோலத்தான், இவருடைய இன்ஸ்பிரேஷன் யாராக இருக்கிறார்களென்றால், தியோ ஆஞ்சலெபெலோஸ், பிலாசிபிக்கல் இன்ஸ்பிரேஷன் என்றால், ஃபெனானைப் பற்றிச் சொல்வார். ஜான் பெல்ஜரைப் பற்றிச் சொல்வார். இதுபோன்ற, ஃப்லிம்மேக்கிங், பிலாசிபிக்கல் ட்ரெடிஷனோடு வந்ததனாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கதையிருக்கிறது, டயரி என்ற வடிவம், நெருக்கமான வடிவம். சேகுவேராவின் பொலிவியன் டைரி. மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. நாட்குறிப்பு மிக அற்புதமானது. அந்த வடிவத்திற்குள் இவர் கதை சொல்கிறார். ஸ்லாப் ஸ்டிக் காமெடி என்று சொல்கிறோமல்லவா, பஸ்டர் கீட்டன், சார்லி சாப்ளின், அதேபோல, லேண்ட்ஸ்கேப் எல்லாம் பார்த்தீர்களேயானால், தியோ ஆஞ்சலோபெலோஸின் லேண்ட்ஸ்கேப் போலவே இருக்கும். இதெல்லாம் சேர்ந்து, ஒரு தனித்துவமிக்க இயக்குனராக, இவர் பரிணாமமடைந்திருப்பதனால்தான், பாலஸ்தீனியன், அதே நேரத்தில் சர்வதேச திரைப்பட இயக்குனர் என்ற அங்கீகாரத்தை எலையா சுலைமான் அடைந்திருக்கிறார்.

அம்சவள்ளி: எலையா சுலைமானின் கதை சொல்லல் திரைமொழி, மற்றும் ஒவ்வொரு ஷாட்டையும் கம்போஸ் செய்கிற விதமும் தனித்துவமானது. ஒரு கோரியோக்ராஃபி போல, கதாபாத்திரங்களை நடிக்க வைத்திருப்பார். மஹ்மத் தர்வீஷின் கவிதைபோல, அவரது படங்கள் இருக்கின்றன. சட்டகங்களுக்கு ஒரு பொருள் கிடையாது, ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் தகுந்தாற்போல, படத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும். கவிதைக்கும் ஒரு பொருள்தான் உண்டென சுருக்கிவிடமுடியாது. அது, எலையா சுலைமானின் படங்களுக்கும் பொருந்தும்.

யமுனா ராஜேந்திரன்: மஹ்மூத் தர்வீஷிக்கும், எலையா சுலைமானுக்கும் இடையேயான ஒப்புமையைச் சொல்லவேண்டுமென்றால், மஹ்மூத் தர்வீஷ், சொல்கிறார், ”பாலஸ்தீன விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன், பாலஸ்தீன விடுதலையை பற்றிக்கொண்டிருக்கிறேன், ஆனால், பாலஸ்தீனம் ஒரு காலத்தில் விடுதலையடைந்து, அந்தக் காலத்தில் இப்போது எப்படி பாலஸ்தீனம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறதோ, அதுபோல பாலஸ்தீனத்தில் குறைந்தபட்ச ஒடுக்குமுறையோடுகூட ஒரு அரசு உருவாகுமானால், அப்போது பாலஸ்தீனத்திலிருந்து நான் வெளியேறுவேன்” என்பார். அதேபோல, எலையா சுலைமான், நான் இப்போது பாலஸ்தீன கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறேன், ஆனால், இந்த பாலஸ்தீன கொடி, நிமிர்ந்து ஒரு தேசம் உருவாகி, அந்த தேசத்தில் வாழ்கிற பிற மக்களின் உரிமைகளில் அமைந்த அந்த அரசு தலையிடுமானால், பாலஸ்தீன சுதந்திரத்தை மறுதலித்துவிட்டு வெளியேறுவேன் என்று சொல்கிறார். ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு என்பது, நிலம், பிரதேசம் என்பதையெல்லாம் தாண்டின, அற்புதமான ஒரு மானுடத்தேடல், அந்த வகையில் இந்த இரண்டு பேரும், ஒரே பார்வையைக் கொண்டிருப்பவர்கள். 

இந்த ‘அலைதல்’, நாடற்ற அலைதல் என்ற விஷயம், திரும்பத் திரும்ப தங்களுடைய நிலத்திற்கே கொண்டு சேர்க்கும். மஹ்மூத் தர்வீஷ், ”என்னுடைய தேசத்தை, என்னுடைய மொழிகளில் நான் காவித்திரிகிறேன்” என்று சொல்கிறார். ”தன்னுடைய கவிதை மொழியில், தன்னுடைய கவிதைகளில், என்னுடைய வீட்டை நான் காவித்திரிகிறேன்” என்று சொல்வார். எலையா சுலைமான், எங்குதான் போனாலும், எங்கு சஞ்சரித்தாலும், எங்கு வாழ்ந்தாலும், திரும்பவும் தன் சொந்த நாட்டினுடைய எலுமிச்சை மரங்களுக்குப் போவார். திரும்பவும் தன் நாட்டினுடைய ஆலிவ் மரங்களின் நிழலைத் தேடிச் செல்வார். திரும்பவும் தன் நாட்டினுடைய இசை லயங்களை நாடிச் செல்வார். தன்னுடைய, தாய்க்கும், தந்தைக்கும், தனக்கும் இடையிலான, நினைவுப் பாலத்தை, அரபு-பாலஸ்தீன இசையை வைத்துத்தான் உருவாக்குகிறார். மீண்டும் மீண்டும் அங்குதான் செல்வார்.

இந்த, சஞ்சரித்தல் அல்லது இடமற்று இருத்தல், அகதியாக இருத்தல் என்பது, ஒரு வகையில் துயர். ஆனால், அதேநேரத்தில் அதுவொரு வரம் என்றும் சொல்வார். எப்படி சாத்தியம் என்று கேட்டால், ”இப்படி நீங்கள் அலைகிறதனால்தான், திரும்பத் திரும்ப உங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்று தோன்றுகிறது. தாயகம் என்றால் என்ன? என்பது பற்றிச் சிந்திக்கிறீர்கள்” என்பார். ஆனால், இப்படி அலைவதனால்தான், பிற மக்களோடு பழக முடிகிறது. அந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள், அந்த மக்களுடைய வாழ்வு எப்படியிருக்கிறது, எப்படி அவர்களோடு நம்மை இணைத்துக்கொள்கிறோம், புதிய புதிய விஷயங்களை எப்படி நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்ற விஷயங்களும் தெரிகின்றன. ஒரே சமயத்தில், இருந்தும் இல்லாமலும் இருப்பது. ஒரே நேரத்தில், உறவாடியும் விட்டுவிலகியும் இருப்பது. இது கலைஞனுக்கேயுரிய மனம்.

Palestinian filmmaker Elia Suleiman to stream all his films for free |  Esquire Middle East

இந்த சஞ்சாரம், பயணங்கள் அற்புதமான அனுபவங்களைத் தரும். பயணங்கள்தான் மனிதனை உருவாக்குகிறது. பயணங்கள்தான், நாகரிகத்தை உருவாக்குகிறது. அந்தளவில்தான், இதனை ஒரு வரம் என்று சொல்கிறார். இதெல்லாம், இவ்விருவருக்குமே பொதுவான விஷயங்கள். ”அம்மா கொடுக்கிற காஃபிக்காக, பாலஸ்தீன நிலத்திற்குச் செல்ல வேண்டும்” என்று சொல்வார் தர்வீஷ். எலையா சுலைமானும் அப்படித்தான். இவருடைய படங்களில் பார்த்தால், சிறுமைகளை தன்னுடைய நிலத்திலும் பார்ப்பார். அண்டை வீட்டுக்காரர் சண்டை போடுகிறார், ஏமாற்றுகிறார் என எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பார். ஆனால், அதேநேரத்தில், அதே ஏமாற்றுகிறவன், சிறுமையில் சிக்கியிருப்பவன், உன்னத மனிதர்களாகவும் வெளிப்படுகிற தருணங்களும் படத்தில் இருக்கும். அமெரிக்காவிலும் எதிர்கொள்கிற சூழ்நிலைதான் இது. பிரான்சிலும் இதை எதிர்கொள்கிறார்.

தர்வீஷ் இறுதியில், பாலஸ்தீனத்தில்தான் வாழ்கிறார். பெரும்பாலான காலம், பிரான்சில்தான் வாழ்ந்திருக்கிறார். சில காலங்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் மரணமடைகிறார். அதேபோல, எலையா சுலைமானும், பிரான்சில் பலகாலம் வாழ்ந்து, அதற்குப் பிறகு அமெரிக்கா சென்று அடைக்கலமாகிறார். இந்த இருவருக்குமே இதுபோல பல ஒப்புமைகள் உண்டு.

அம்சவள்ளி: நான்கு படங்களையுமே எடுத்துக்கொண்டாலும், குறிப்பிட்ட சில இடங்களாக, நஸ்ரத், ரமலா இருக்கிறது. நஸ்ரத்தில் அந்த வீடு, பின்பு அவர்கள் அமர்ந்து பேசுகிற கடை போன்ற இடம், சுற்றுலாப் பயணிகள் இருக்கிற வளைவு. ஒரு மது விடுதி, வீடு, இந்த இடங்களில்தான், அவரது நான்கு படங்களும் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைவான லொகேஷன்களைத்தான் பயன்படுத்துகிறார். முழுக்க முழுக்க அப்பாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கதையாக இருப்பதால், அந்த இடமே போதுமானது என்றும் கருதியிருக்கலாம். காட்சியில் நிறைய மெளனம் இருக்கிறது. ஒரு காட்சியில், அவரது அம்மா, மரணப் படுக்கையில் இருக்கும்போது, பால்கனியில் அமர்ந்து, பரந்த நிலப்பரப்பைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். அப்பா, அம்மா மற்றும் அவரது வாழ்க்கை என்னவாகயிருக்கிறது என்பதைத்தான் தன் கதைகளில் சொல்கிறார். பக்கத்துவீட்டுக்காரர், ‘தீக்குளிக்கப்போகிறேன்” என்று சொல்லுவார். திரும்பவும் வந்து, ***** பின்னர், மீன்பிடிக்கச் செல்லும்போது, இராணுவத்தினர் வந்து, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இங்குவந்துதான் மீன்பிடிக்க வேண்டுமா? உங்களிடம் அடையாள அட்டை இருக்கிறதா?” என்று தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு கதையை நகர்த்துகிறார். 

யமுனா ராஜேந்திரன்: அதுதான் அவரது திரைப்படங்களின் அழகியல். கதாபாத்திரங்களின் உடல்மொழியிலேயே நிறைய நகைச்சுவைத் தருணங்களை வெளிப்படுத்துகிறார். ஒரு பேருந்து நிலையத்தில் அவர் நின்றுகொண்டிருப்பார். பக்கத்தில் ஒரு வீடு இருக்கும். அங்கிருக்கும் நபர், இவரைப் பார்த்து, “இங்கு பேருந்து வராது” என்று சொல்வார். இது மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப நடக்கும். அடுத்த முறை, அவர் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது “இங்கு பேருந்து நிற்காது என்று எனக்கும் தெரியும்” என்பார். பிறகு, அவர் ஏன் இங்கு நிற்கிறார்? எதிர்த்த வீட்டின் பால்கனியில் ஒரு பெண் துணிகளைக் காயப்போட்டுக்கொண்டிருப்பார். அதற்காக அவர் அங்கு நிற்கிறார். இதுபோன்று, அவரது படங்களில் நிறைய நகைச்சுவைத் தருணங்கள் இருக்கின்றன.
 
Light Comes Through a Hole in the World: Palestinian film director Elia  Suleiman's The Time That Remains – Offscreen

மேலும், அவரது படங்களில் உரையாடல்கள் மிகக்குறைவாகவே இடம்பெறும். இரண்டு மணி நேரப் படங்களில், ஒட்டுமொத்தமாக ஐந்து அல்லது பத்து நிமிட நேரம்தான் உரையாடல்களுக்கான இடமாகயிருக்கும். இன்னும் குறிப்பாக, டிவைன் இண்டர்வென்ஷன் படத்தில் காதலர்கள் இருவரும், ரமலானிற்கும் நஸரத்திற்குமிடையே செல்கிற காட்சிகளில், உரையாடல்களே இருக்காது. உரையாடல்கள் இருக்கிற ஒரே பகுதி, இஸ்ரேல் காவலர்கள், அவர்களை விசாரிக்கிற இடம்தான். அதாவது, ஒடுக்குமுறைகளை வெளிக்கொணர்வதற்காக, உரையாடல்களைப் பயன்படுத்துகிறாரேயொழிய, மற்றபடி, பிரதானமாக நில அமைப்பைக் கதாபாத்திரமாகப் பயன்படுத்துகிறார். உதாரணமாக, எந்த நில அமைப்பிற்கும், நீள அகலங்கள், முப்பரிமாணம் சார்ந்து அழகுவுணர்வு இருக்கும். இந்த அழகை, அகிரா குரசோவாவின் படங்களிலும் பார்க்க முடியும். அதேபோல, செர்ஜியோ லியோனின் ’கெள பாய்’ படங்களிலும் பார்க்கலாம். குட் பேட் அக்லி படத்தில், இருவர் எதிரெதிரே துப்பாக்கியை வைத்துக்கொண்டு இருபது அடி தூரத்தில் நிற்பார்கள். பரந்த நிலப்பரப்பும் அதில் இருக்கும். எனவே, இந்த நிலப்பரப்பு சார்ந்த உணர்வுகள் படத்தில் இருந்தால்தான், ஒருவித ரிதமிக்கான உணர்வை பார்வையாளர்களிடமும் உருவாக்க முடியும். 

பாரீஸில் அவர் நடந்துவந்துகொண்டிருக்கும்போது, ஜப்பானிய தம்பதிகள் இருப்பார்கள். வணக்கமெல்லாம் சொல்வார்கள். இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள மொழி ஒரு தடையாகயிருக்கும். ஒருவர் கேட்பது மற்றவர்க்குப் புரியாது. எனவே, அவர் அங்கிருந்து ஓடிவிடுவார். அதேபோல, மற்றொரு சமயம், அவர் காஃபி கடைக்கு முன்னால் அமர்ந்திருப்பார். பிரெஞ்சு போலீசார் அங்கு வருவார்கள். அங்கிருக்கிற இடத்தை அளவெடுப்பார்கள். கடையிலிருந்து எவ்வளவு தூரத்தில் மேசைகளை வைக்க வேண்டும். எங்கு அமரவேண்டும், என்பதையெல்லாம் குறித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், காவல்துறையினர் எவ்வளவு துல்லியமாகயிருக்கின்றனர் என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கிறார். அதேபோல, கடைசி படத்தில் அமெரிக்க வீதிகளைக் காண்பிப்பார். அங்கு குழந்தைகள், காய்கறி வாங்குபவர்கள், பெண்கள் எல்லோருமே துப்பாக்கியுடன் இருப்பார்கள். அந்த மார்கெட்டில் இருப்பவர்கள் எல்லோருமே துப்பாக்கியோடு வலம்வருவார்கள். இது அமெரிக்கச் சமூகத்தை வேடிக்கையாகச் சித்தரிக்கிற காட்சி. அமெரிக்கச் சமூகம், அமெரிக்க மக்களின் உணர்வு போன்றவை எவ்வளவு இராணுவ மயமாக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயத்தை, ஒரே காட்சியில், எந்தவொரு வசனத்தையும் பயன்படுத்தாமல் மிக நுட்பமாகக் கொண்டுவந்திருப்பார். அவருடைய எல்லா படங்களிலும் நீங்கள் இந்தத் தன்மையைக் காணலாம். தன்னையும் சுய பகடி செய்துகொள்வது, தன் மக்களையும் சுய பகடி செய்துகொள்வது, அல்லது தனது முழு தேசத்தையும் சுய பகடி செய்துகொள்வது, அதேபோல மற்ற பகுதி மக்களையும் மறைமுகமாக சுயபகடி செய்வது. இந்தத் தன்மை அவரது படங்களில் நிறைந்திருக்கிறது. 

Film-maker Elia Suleiman on 'the Palestinianisation of the globe' |  Financial Times

பஸ்டர் கீட்டனின் காமெடி போன்றதுதான் இது. பஸ்டர் கீட்டனைப் பார்க்கிற நமக்குத்தான் அக்காட்சி நகைச்சுவையாக இருக்குமேயொழிய, அதில் நடிக்கிறவர்கள் மிகவும் தீவிரமாக நடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் எந்தவித சிரிப்பும் இருக்காது. பஸ்டர் கீட்டன் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பார்த்து, அவரது உடல்மொழியைப் பார்த்து அது நமக்கு நகைச்சுவையாக இருக்கிறது. இந்த அம்சம், எலையா சுலைமானின் சகல படங்களிலும் இருக்கிறது. அவரது படங்கள் உலகளாவிய தன்மையுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மற்றொரு காரணம், அந்தச் சமூகத்தில் சாதாரண மனிதர்களுக்கிடையிலான உறவில், எவ்வளவு எதிர்மறை உணர்வு கொண்டதாக, எதிர்ப்பு கொண்டதாக, அசூயை உணர்கொண்டதாக இருக்கிறதென்பதையும் காண்பிக்கிறது.
 
உதாரணமாக, இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர் தனது குப்பைகளை, பாலஸ்தீன வீட்டிற்குள் போட்டுவிடுவார். ஆக்கிரமிப்பையும், மீறலையும் புரிந்தவர்கள் இஸ்ரேல்காரர்கள்தான். சாதாரண குடிமகன். அந்தக் குப்பைகளைத் திருப்பிப் போடும்போது, அவரைப் பார்த்து, ’நீ நாகரீகமற்ற முறையில் பேசுகிறாய்’ என்று பழிபோடுவார். இஸ்ரேல் ஒரு மொழியை இப்படித்தான் கட்டமைக்கிறது. கனன் அஸ்ராவி என்ற கோட்பாட்டாளர், பாலஸ்தீன விளையாட்டு வீரர், “இஸ்ரேல், மொழியில்தான் முதன்முதலாக அதிகாரத்தைக் கட்டமைக்கிறது.” என்கிறார். இவர்கள் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார்கள். வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுகிறார்கள். இஸ்ரேல், விமானத்தில் சென்று குண்டு வீசுகிறது. நாற்பது, ஐம்பது குழந்தைகள் ஒரேயிடத்தில் செத்து வீழ்கின்றன. பதிலுக்கு இஸ்ரேல் ஏவுகனைகளைப் பிரயோகிக்கிறது. முதலில் இஸ்ரேலியர்கள், விமானத்திலிருந்து குண்டு வீசி, கொத்துக்கொத்தாக மக்களையும், குழந்தைகளையும் அழிப்பது வன்முறையல்ல. ஆனால், அதற்கான எதிர்வினையாக பாலஸ்தீனியர்கள் ஏவுகனைகளை பிரயோகிப்பதை வன்முறை என்று சொல்கிறது இஸ்ரேல். ஆக, இப்படித்தான் இஸ்ரேல் மொழியில் வன்முறையைக் கட்டமைக்கிறது. ”எங்களுடைய நிலம் உங்களுடையது என்று சொல்கிறாய். பாலஸ்தீனர்களாகிய எங்கள் நிலத்தை, நீ ஆக்கிரமித்துக்கொண்டு, அதை நாங்கள் கேட்கப்போனால், நீ அவதூறாகப் பேசுகிறாய், வன்முறையாகப் பேசுகிறாய், நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறாய் என்று குற்றம் சுமத்துகிறாய். ஆனால், ஆதியில் நிலத்தை, இந்தப் பிரதேசத்திற்குள் புகுந்து அபகரித்தவன் நீ தான்”. இதில் வருகிற ஒரு விஷயம் என்னவென்றால், குப்பையை முதலில் போடுவது இஸ்ரேலியர்கள்தான். ஆனால், பலிபோடுவது பாலஸ்தீனியர்கள்மீது. இதுபோன்ற நிறைய முரண்பாடுகளை அந்தப் படம் முழுவதும் காண்பித்திருப்பார். பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே எவ்வளவு வெறுப்பும் கசப்புணர்வும் ஊடுருவியிருக்கிறது என்பதை எலையா சுலைமான் மீண்டும் மீண்டும் காட்சிகளாக்குகிறார்.

அம்சவள்ளி: எலையா சுலைமானின் இந்த நான்கு படங்களிலுமே, வானவேடிக்கைக் காட்சிகள் அவ்வப்போது தென்படுகின்றன. எதைக் குறிப்பதற்காக இந்தக் குறியீட்டுப் படிமம் இடம்பெறுகிறது.

Israel Gaza War: Fears of 'full-scale war' amid deadly Israel-Palestinian  clashes - The Economic Times

யமுனா ராஜேந்திரன்: ஈராக் மீது அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. அந்த போர் சம்பந்தமான காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறபோது, வான வேடிக்கைகள் போலத்தான் காண்பித்தார்கள். முற்றிலும் இருள் சூழ்ந்த பிரதேசம் ஏவுகனைகளும், வெடிகுண்டுகளும் வானவேடிக்கைகள் போல நிலங்களின் மீது விழும். நாம் தொலைக்காட்சிகளில் வான வேடிக்கைகள் போன்று பார்க்கிற இந்தக் காட்சிகள், உண்மையில் அந்த நிலத்தில் பல்வேரு உயிர்களைக் கொன்றதற்கான சாட்சியங்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் செத்தொழிவதைத்தான், இரவில் வானவேடிக்கைகள் போல, தொலைக்காட்சிகள் படமெடுத்துக் காண்பிக்கிறார்கள். 

விமானங்கள் கூட, அங்கு வாழ்கிற குழந்தைகளுக்கு வேறுவிதமான மனநிலையை உருவாக்கும். போர் விமானங்களுக்கு அஞ்சி பதுங்குக் குழிகளுக்குள் ஒளிந்துகொள்கிற குழந்தைகளுக்கு, சாதாரண பயணிகள் விமானம் கூட, பயமுறுத்தும். அதுபோன்றதுதான், இந்த வானவேடிக்கை தொடர்பான காட்சிகளும். நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கிற வானவேடிக்கைக் கொண்டாட்டங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரளிக்கின்றன. 

அம்சவள்ளி: இஸ்ரேலியர்களின் அடக்குமுறைகளை எதிர்கொள்கிற பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்புணர்வு என்னவாகயிருக்கிறது?

யமுனா ராஜேந்திரன்: ஒரு காட்சியில், பையன் வீட்டைவிட்டு, அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டே, குப்பையைப் போடுவதற்காக வெளியேவருவான். பெரிய பீரங்கி துப்பாக்கி முனை, அவன் முகத்தைக் குறிபார்ப்பதுபோலவே இருக்கும். அந்தப் பையன் அதைக் கண்டுகொள்ளவே மாட்டான். அவன் அலைபேசியில் பேசிக்கொண்டே அங்குமிங்கும் அநிச்சையாக நடக்கிறான். அவன் செல்கிற திசையெல்லாம், பீரங்கியின் துப்பாக்கி முனையும் அவனைப் பின்தொடர்கிறது. திரும்புகிறது. ஒரு கட்டிடத்தையே தகர்க்கக்கூடிய, ஒரு தெருவையே நிர்மூலமாக்கக்கூடிய, நூற்றுக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் கொல்லக்கூடிய பீரங்கியின் முனை, அந்தப் பையனை அச்சுறுத்த நினைக்கிறது. ஆனால், அந்தப் பையன் அதையொரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தன் வேலையைக் கவனிக்கிறான். இது, அந்த மக்களின் மிகப்பெரும் ஆன்மபலத்தை எடுத்துக்காட்டுகிற காட்சி.

இன்னொரு காட்சியில், ஒரு பெண், குழந்தையுடன் வருவாள். இஸ்ரேலைச் சார்ந்தவர்கள், “இங்கிருந்து சீக்கிரம் போய்விடு, இங்கு இருப்பது பாதுகாப்பில்லை, சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடு” என்று சொல்வார்கள். பதிலுக்கு அந்தப் பெண், “என்னை நீ போகச் சொல்கிறாயா? முதலில் நீ இங்கிருந்து போ” என்று சொல்வார். ஆக, பாலஸ்தீனிய மக்களின் அன்றாட வாழ்வே, எதிர்ப்புணர்விற்கு மத்தியில் நிகழ்கிறது. சிறுசிறு குழந்தைகள் முதல் தாய், தந்தையர் வரை அந்த எதிர்ப்புணர்வு இருக்கிறது.
 
Divine Intervention' one of the best Arabic-language films ever made | Arab  News

பாலஸ்தீனத்திலிருக்கிற சின்னஞ்சிறுவர்கள்கூட, கல்லெடுத்து எரிகிற, கலக உணர்வு, அங்கு போராட்ட வடிவமாகவே (indifada ) உருவெடுத்தது. ராணுவத்தைக் கண்டு அவர்கள் அச்சப்படவே மாட்டார்கள். எதிரே துப்பாக்கியுடன் நிற்பர்களை, கற்களால் எதிர்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அந்த ஆன்மபலமும், கூட்டுணர்வும், எதிர்ப்புணர்வும்தான் மிக முக்கியம். 

எட்வர்ட் சைத், அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்கிற புகழ்வாய்ந்த பேராசிரியர். ஓரியண்டலிசம் கோட்பாடுகள் சார்ந்து புத்தகங்கள் எழுதியவர். அவர் பாலஸ்தீனத்திற்குச் சென்றவுடன், ஒரு கல்லை எடுத்து, இஸ்ரேலைப் பார்த்து எறிகிறார். ஸ்டோன் த்ரோயிங் புரொபஸர் என்று சொன்னார்கள். ஆனால், எட்வர்ட் சைத் இதுகுறித்து எதையும் கண்டுகொள்ளவில்லை. அதாவது, ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலத்தில், எதிர்ப்புணர்வு சின்னஞ்சிறு ஜீவராசிகள் முதல் வயதானவர்கள் வரை இருக்குமென்கிற விஷயத்தைத்தான் இந்தக் காட்சிகள் சொல்லிச்செல்கின்றன. இத்தனைக்கும் இடையில் அந்தக் காதல், மனித உணர்வு எப்படியிருக்கும் என்பதையும் அவரது படம் சொல்லிக்கொண்டுபோகிறது.

எலையா சுலைமானின் படங்கள் உலகளாவியத் தன்மை கொண்டன. ஒடுக்குமுறைக்கு உள்ளான தேச மக்களின் உளப்பண்புகள் எவ்வாறானதாகயிருக்கும்? பல அடக்குமுறைகளையும் தாண்டி, அவர்களுக்கிடையிலான, நேசம், பாசம் என்பது எவ்வாறாகயிருக்கும்? அண்டைவீட்டுக்காரர்களுடனான உறவு எவ்வாறானதாகயிருக்கும்? தன் சொந்த நிலத்திலிருந்து இடம்பெயர்ந்த உணர்வு தங்களுக்கிடையில் எவ்வாறான உணர்வைக் கொடுக்கும்? என்பதையெல்லாம், எலையா சுலைமானின் படங்களில் காணமுடியும்.
 
இன்றைக்கு, இடப்பெயர்வு என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாவது என்பதும், குறிப்பாக அகதிகளாக இருக்கிறவர்கள், இந்த நாடுகளில் எதிர்கொள்கிற விஷயங்கள் என்பதெல்லாம் ஒருவித சர்வதேசிய உணர்வு. அதனால்தான், இந்தப் படங்கள் உலகத்திலிருக்கிற சகல மக்களுக்கும் நெருக்கமானதாக இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை, ஏதோவொரு தருணத்தில், உலகத்திலிருக்கிற எல்லா மக்களும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த நூற்றாண்டை விடவும், அதிகமாக, உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்த ஆண்டுகளாக, இந்தக் குறிப்பிட்ட ஆண்டுகள்தான் இருக்கின்றன. அதேபோல, புலம்பெயர்தல். தன்னுடைய படிப்பு சார்ந்து, தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று, பல்வேறு நாடுகளை நோக்கி இடம்பெயர்கிறவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது. இனவாதம், நிறவாதம், போன்ற தடைகள் இருக்கின்றன. இதெல்லாம்தான் இவரது படங்களில் வேறுவேறு விதமாக எதிரொலிக்கின்றன. 

அம்சவள்ளி: கார்ஸியா பெர்னல், எலையா சுலைமானுக்கு உதவி செய்யக்கூடிய நபராக வருகிறார். காமெடி தீமில் படமெடுக்கிறோம் என்கிறபோது, தயாரிப்பாளர் “இதைக் கேட்கவே காமெடியாக இருக்கிறதே!” என்பார். இறுதியில் அந்தப் படம் எடுப்பதற்கு, தயாரிப்பாளர் உதவுவதுமில்லை. இதையே ஒரு நகைச்சுவைக் காட்சியாக படத்தில் வைத்திருப்பார். முன்பு சொன்னதுபோல, காட்சிகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டு நடக்கிற கோரியோகிராஃபி போல படம்பிடிக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, மருத்துவமனையில் குறிப்பிட்ட இடைவேளையில் அனைவரும் சென்று சிகரெட் பிடிக்கும் காட்சி. பூங்காவில் நடக்கிற காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். 

யமுனா ராஜேந்திரன்: எலையா சுலைமானின் கடைசி படத்தில் (It Must Be Heaven), படமெடுப்பதற்கான நிதி திரட்டுவதற்காக கஷ்டப்படுகிற விஷயம் காண்பிக்கப்படுகிறது. கார்ஸியா பெர்னல் அதற்கு உதவி செய்வார். லத்தீன் அமெரிக்கன் புதிய அலை திரைப்படங்கள், ஒரேயொருவரை மையமாக வைத்து வெளியாகியிருக்கின்றன என்று ஆய்வு செய்து பார்த்தோமானால், அது கார்ஸியா பெர்னல்தான். இன்றைக்கு ஹாலிவுட்டில் இருக்கிற லத்தீன் அமெரிக்கன் இயக்குனர்களும் சரி, லத்தீன் அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கிற இடதுசாரி சிந்தனை கொண்ட லத்தீன் அமெரிக்க இயக்குனர்களும் சரி, இவரை வைத்து படங்கள் எடுத்திருக்கின்றனர். அத்தகைய கார்ஸியா பெர்னல், பாலஸ்தீனிய பிரச்சினையைப் பற்றி படமெடுக்கிற ஒருவருக்கு உதவி செய்பவராக வருகிறார். இந்த உண்மை, படத்திற்குள் வருகிறது.


It Must Be Heaven (2019)

ஆனால், எலையா சுலைமானின் படங்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி சேனல்கள், அமெரிக்காவின் ***, லண்டனின் சேனல் 4 போன்றவை நிதி கொடுத்துதான் இவருடைய படங்கள் உருவாகியிருக்கின்றன. இவருடைய முதல் இரு படங்களைப் பார்த்தவர்கள் கூட, தொடர்ந்து இவரைப் பின்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களைப் பார்க்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

அடுத்து, கோரியோகிராஃபி சார்ந்து பார்ப்போம். நேரம் என்று எடுத்துக்கொண்டால், ஒரு தருணத்திற்கும் இன்னொரு தருணத்திற்கும் இடையிலான இடைவெளி. அதேபோல, ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையிலான தூர இடைவெளி. இதில், மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளை, இந்தக் காலமும் வெளியும், ரிதமிக்காகச் செய்கிற விஷயங்கள் பல இருக்கும். சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் படத்தில், சாப்ளின் தொழிற்சாலையில் வேலை செய்கிற காட்சியைப் பாருங்கள். சீரான இடைவெளியில், நட்டுகள் ஒவ்வொன்றாக வருகின்றன. ஸ்பேனரால் சாப்ளின் அதைத் திருகுகிறார். பின்பு, அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது. இந்த ரிதம் ரசிக்கும்படியாக அமைக்கப்பெற்றிருக்கிறது. இதேபோன்ற மனக்கிளர்ச்சியை எலையா சுலைமானின் காட்சிகளிலும் பார்க்கமுடியும்.


Anxieties of 'Modern Times' still with us - CNN.com 

உதாரணத்திற்கு ஒரு காட்சி. எலையா சுலைமான் பாரீஸில், கஃபேயில் அமர்ந்திருக்கிறார். அங்கு நான்கு போலீஸ்காரர்கள் வருவார்கள். நான்கு பேரும், நான்கு திசையிலிருந்து வருவார்கள். நான்குபேரும் ஒரே சமயத்தில், அளவெடுப்பார்கள். இதுபோன்ற கோரியோகிராஃபி பாணியிலான காட்சிகள், திரும்பத் திரும்ப நிகழ்கிற விஷயங்கள், கால அளவிலும், இட அளவிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அதேபோல, கைவிடப்பட்ட இடத்தில் காதலர்கள் திரும்பத் திரும்ப சந்திக்கிற காட்சி. காலம் மற்றும் இடம் (Time & Space ) தொடர்பான ரிதம், காட்சிகளில் தொடர்ந்து இடம்பெறும். 

அம்சவள்ளி: சாப்ளின், பஸ்டர் கீட்டன், அதேபோல ழாக் தாதி, இதற்கடுத்து, தியோ ஆஞ்சலோபெலோஸின் தாக்கத்தையும், இவரது படங்களில் பார்க்கமுடிகிறது.

யமுனா ராஜேந்திரன்: தியோ ஆஞ்சலோபெலோஸ் உருவாக்குகிற காட்சிகளில், அந்த நிலப்பரப்பு பிரதானமான இடம்பெற்றிருக்கும். எலையா சுலைமானின் படங்களிலும் நிலப்பரப்பு பிரதான இடம்பிடிக்கிறது. அதேபோல, நான்கைந்து நிமிடங்களுக்கு ஒரு காட்சியை, எவ்வித கட்களும் இல்லாமல், நகர்த்துவதும் இருக்கிறது. பாலஸ்தீனிய நிலப்பரப்பு மிக அழகானது. பாலஸ்தீனியத்தின், கைவிடப்பட்ட, சிதிலமடைந்த நகரங்கள் தொடர்பான புகைப்படங்களைப் பாருங்கள். நிலப்பரப்பு அத்தனை வசீகரமானதாக இருந்திருக்கும். நிலப்பரப்பைப் படம்பிடிப்பது என்றளவில், லாங் ஷாட்களில் காட்சிகளை எடுப்பது என்றளவில், அவரது பாதிப்பு தியோ ஆஞ்சலோபெலோஸ். உடல்மொழி சார்ந்த நகைச்சுவையில், சாப்ளின் மற்றும் கீட்டனின் பாதிப்புகளைப் பார்க்கமுடிகிறது. 

ஜான் பெர்ஜரும், எலையா சுலைமான் மீது தாக்கம் செலுத்தியிருக்கிறார். ஜான் பெர்ஜர், ’வேய்ஸ் ஆஃப் சீயிங் (Ways of seeing)’ என்ற விஷயத்தைச் சொல்கிறார். ஒரு விஷயத்தை எப்படிப் பார்ப்பது? மேம்போக்காக அல்லாமல், எப்படி ஒரு விஷயத்தை உள்ளார்ந்து பார்ப்பது. அதனுடைய முரண்படுகளோடு எப்படிப் பார்ப்பது? அதனுடைய சித்தாந்தப் புரிதலோடு, கருத்தியல் நிலைப்பாட்டோடு, ஒரு காட்சியை எவ்வாறு காண்பது? என்பது பற்றியெல்லாம் ஜான் பெர்ஜர் நிறைய எழுதியிருக்கிறார்.

அதேபோல, எலையா சுலைமான் மீது தாக்கம் செலுத்திய மற்றொரு நபர் ஃபெனான். ஒரு வன்முறை உளவியல் என்பது எவ்வாறாக உருவாகிறது? ஒடுக்கப்பட்டவனுடைய வன்முறை என்பது, எவ்வாறாக அவனை விடுவிப்பதோடு, யார் அவன்மீது ஒடுக்குமுறை செலுத்துகிறார்களோ, அவனையும் விடுவிக்கிறது என்ற விஷயத்தைப் பேசுகிறார். ஒடுக்குகிறவனின் வன்முறை, அவனுக்கு மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும், இன்னொருவனைக் கேவலப்படுத்தும். அவனை அப்படியே கேவலமாகவே வைத்திருக்கும். ஆனால், ஒடுக்கப்பட்டவனின் வன்முறையானது, அந்த வன்முறையைச் செலுத்துவதனால், அவனுக்கு மிகப்பெரும் ஆசுவாசத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். இந்த ஒடுக்குமுறையாளனின் வன்முறைக்கு முடிவுகட்டும். வன்முறையைச் செலுத்துகிறவன் ஒடுக்குகிறவன், அதற்கு முடிவுகட்டும். இது எலையா சுலைமான் மீது எங்கு தாக்கம் செலுத்துகிறதென்றால், அவர்கள் இருவருக்கிடையேயான வன்மம் எப்படி உருவாகியிருக்கிறது, என்று காண்பிக்கிறார் பார்த்தீர்களா? அந்த உளவியல் வன்மம். மிக மிகச் சாதாரண விஷயங்களிலிருந்துகூட, இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான வன்மம் எவ்வாறாக தீவிரமடைகிறது என்ற விஷயத்தைப் படத்தில் காண்பித்திருக்கிறார். அதுதான். 

It Must Be Heaven' Review: Elia Suleiman's Palestinian Satire | IndieWire

எல்லாவற்றிற்கும் மேலாக, எலையா சுலைமானுக்கு சினிமா மொழி தெரிந்திருக்கிறது. சினிமாவின் அழகியல் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அவர் தனித்துவமான திரைப்படைப்பாளியாகவும் அடையாளம் காணப்படுகிறார். 

அம்சவள்ளி: எலையா சுலைமான் உரையாடல்களை மிகக்குறைவாகவே பயன்படுத்துகிறார். நான்கு படங்களிலுமே துயரம் ஒரு பகுதியாக இருக்கிறது. இருப்பினும், அவற்றை நகைச்சுவை மற்றும் பகடியின் மூலம் கடத்துகிறார். அமைதி, அவரது படத்திலிருக்கிற பிரதான அம்சம். அவர், ஏற்கனவே நாம் கேட்டறிந்த இசையைப் படத்தில் பயன்படுத்துகிறார். இட் மஸ்ட் பி எ ஹெவன் படத்தில் எலையா சுலைமான் கஃபேயில் அமர்ந்திருப்பார். பெண்கள் நவநாகரீகமாக நடந்துவந்து கொண்டிருப்பார்கள். லியானார்ட் கொஹேன் பாடல்களோடு அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எலையா சுலைமான், சுதந்திரத்தோடு அப்பெண்கள் நடந்து வருவதை, அப்படியே பிரம்மித்து பார்த்துக்கொண்டிருப்பார். அதேபோல, டிவைன் இண்டர்வென்ஷன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாம்பே தீமைப் பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் உணர்வோடு பொருந்துகிற இசையை, வேறொரு இடத்திலிருந்து எடுத்து தனது படத்தில் பயன்படுத்துகிறார். அதுகுறித்து.

யமுனா ராஜேந்திரன்: மனிதர்களைக் கவனிப்பது அவரது படங்களில் இருக்கும். பல்வேறுபட்ட மனிதர்களின் கலாச்சாரம், நடைமுறைகள், பழக்கவழக்கங்களையெல்லாம், அவர்களை வேடிக்கை பார்ப்பதன்மூலம் அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஃப்ரான்ஸ், அமெரிக்கா தொடர்பாக அவர் எடுத்த காட்சிகளைப் பாருங்கள். ஃப்ரான்சில் அவர்கள் மிகவும் மென்மையான இதயம் கொண்டவர்களாக, பரிவுணர்வு கொண்டவர்களாக, அல்லது விடுதலையுணர்வு கொண்டவர்களாக, மனிதர்களை மென்மையாக அணுகக்கூடியவர்களாக, எதையும் அழகியலோடு செய்யக்கூடியவர்களாக, பரிணமிக்கிற காட்சிகளை, ஃப்ரான்ஸ் தொடர்பாக படத்தில் வருகிற காட்சிகளில் பார்க்கலாம். ஃப்ரான்ஸைப் பற்றிய அவரது பார்வை, பெரும்பாலும் நேர்மறையானதாகத்தான் இருக்கிறது. ஏனெனில், அவருக்கு தனிப்பட்ட முறையில் ஃப்ரான்ஸ் தொடர்பான அனுபவம் அவ்வாறானதாக இருக்கிறது. அதுவும் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது, ஃப்ரான்ஸ் மிகச்சிறந்த பிரதேசம்.

காரணம், அமெரிக்கா முழுக்க, இராணுவமயமான சிந்தனையமைப்பைக் கொண்ட, ஆயுதத்தின்மூலமே அனைத்தையும் தீர்க்கமுடியும் என்று நினைக்கிற நாடு. அவர்கள் தங்களை, அண்டை வீட்டாரிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவே, துப்பாக்கி வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த சித்திரத்தைத்தான், எலையா சுலைமான் அமெரிக்கா தொடர்பான காட்சிகளில் உருவகப்படுத்துகிறார். ஜான் பெர்ஜரின் ’ஒரு காட்சியை பல்வேறு கண்ணோட்டத்தில் அணுகும் முறைகளை’ இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்பாக, எப்படி சித்தாந்தரீதியிலான, அரசியல் ரீதியிலான, கலாச்சார ரீதியீலான, மிகவும் ஆழ்ந்த ஒரு அறிவை நீங்கள் பெறமுடியும், அந்தக் காட்சியமைப்பின் மூலம், இதை எப்படி பார்வையாளனுக்குக் கடத்தமுடியும், என்ற விஷயத்தின் அடிப்படையில் காட்சிகளை உருவாக்குகிறார்.
 
அதேபோல இசையை அவர் இருவிதமாகப் பாவிக்கிறார். இசையின் மூலம், குறிப்பிட்ட வாழ்க்கையின் ஞாபகங்களை, நினைவூட்ட முடியும். இசை என்பது ஒரு மனிதருக்கு, சகலவிதமான இன்னல்களுக்குமான போக்கிடமாக, வடிகாலாக இருக்கிறது. இசையை, ஒரு மனிதனின் எழுச்சிக்கும் பயன்படுத்தலாம். துயரத்திற்கும் பயன்படுத்தலாம். பீட்டில்ஸ் 60,70களில் பல இசை ஆல்பங்களைக் கொடுத்திருக்கின்றனர். பாப் டைலன் பல பாடல்கள் பாடியிருக்கிறார். இன்றைக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை, முஹ்மத் தொடர்பான படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். சீன மொழிப் படங்களிலும் பயன்படுத்துகின்றனர். தீபா மேத்தா கூட, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை, பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேசிய இசையைக் கொடுக்கக்கூடிய ஒருவர். அதேநேரத்தில், பாரம்பரிய இஸ்லாமிக் இசையையும் கொடுக்கவல்லவர். அந்த வகையில்தான், எலையா சுலைமானும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைப் பயன்படுத்துகிறார். மேற்கத்திய இசையிலும், மேற்கத்திய மனிதர்களின் இன்ப துன்பங்களையும், கிளர்ச்சிகளையும் இசை வெளிப்படுத்துகிறது. அந்த நிலப்பரப்பிற்கு ஏற்றாற்போன்ற இசையையே எலையா சுலைமான் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறார்.

7 Times AR Rahman's Music Inspired International Composers & Made Its Way  Into Hollywood Films

எங்கு மனித உணர்வுகளின் நாடகீயத்தருணங்கள் இருக்கின்றனவோ, எங்கு உரையாடல்கள் இருக்கின்றனவோ, எங்கு மனிதர்களுக்கிடையிலான ஊடாட்டம் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் இசையைப் பாவிப்பதற்கான இடமே கிடையாது. இசையானது, காட்சியில் தொய்வு ஏற்படுகிற இடங்களில், நிலப்பரப்புகளைக் காண்பிக்கும்போது பயன்படுத்துவார்கள். சத்யஜித் ரே மற்றும் தியோ ஏஞ்சலோபெலோஸிடம் இந்தப் பண்பைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, புல்லாங்குழல் இசை, இந்த இடைவெளியை நிரப்புவதற்கும், காட்சி தொய்வுகளை சரிசெய்வதற்கும் அற்புதமான கருவியாகயிருக்கும். 

எலையா சுலைமானுக்கு காட்சி மொழி தொடர்பான, அனுபவம் இருக்கிறது. மனிதர்களுக்கிடையிலான உரையாடல், சித்தாந்தரீதியில், அரசியல் ரீதியில், எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. அதேபோல, நிலப்பரப்போடும், மனித உணர்வுகளோடும், ஞாபகங்களோடும் இசையைத் தொடர்புபடுத்தி,  எப்படி காட்சியமைப்பது என்பதையும் தெரிந்துவைத்திருக்கிறார். சினிமாவின் காட்சி மொழியைத் தெரிந்துவைத்திருப்பதுதான், எலையா சுலைமானின் பலம். 

Divine Intervention (2002) | MUBI

அம்சவள்ளி: முஹ்மத் தர்வீஷின் கவிதையோடு இந்த உரையாடலை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

யமுனா ராஜேந்திரன்: ’நான் மடிந்துபோவதைக் காணவே அவர்கள் விரும்புவர்’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு கவிதை. கருப்பு பதிப்பகம் வெளியிட்டிருக்கிற இப்புத்தகத்தில், முஹ்மத் தர்வீஷின் 118 கவிதைகளை ஆர்.பாலகிருஷ்ணனோடு சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறேன். 

பூமி எங்களுக்குக் கதவை மூடி வருகிறது.
பூமி எங்களுக்குக் கதவை மூடி வருகிறது.
கடைசி வாசலில் எம்மை உள்ளே நெட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
எமது தோள்களை உதிர்த்துவிட்டு நாம் நுழைய முயல்கிறோம்.
பூமி எங்களை இறுக்கிப் பிழிகிறது.
அதனது கோதுமையாக இருக்க,
அதனால் மரணமுற, அதனால் வாழவென நாம் விரும்புகிறோம்.
அதனால் பூமி எமது அன்னையாக இருக்க நாம் விரும்புகிறோம்.
அதனாலாவது அவள் எம்மீது கருணையுடன் இருப்பாள்.

எமது கனவுகள் கண்ணாடியென ஏந்திச் செல்லப்பட
பாறைகளின் மீது சித்திரங்களாக இருக்க யாம் விரும்புகிறோம்.
எமது ஆன்மாவின் இறுதிப் போராட்டத்தின்
இறுதியில் கொல்லப்பட்டவர்களின் முகங்களை நாம் பார்க்கிறோம்.
அவர்களது குழந்தைகளின் கூட்டுவிருந்தின் போது நாம் கதறியழுகிறோம்.
கடைசி வெளியின் ஜன்னல்களின் வழியே
எமது குழந்தைகளை வீசியவர்களின் முகங்களை நாங்கள் பார்க்கிறோம்.
எமது நட்சத்திரங்கள் கண்ணாடிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

கடைசி எல்லைகளுக்கு அப்பால் நாங்கள் எங்கே செல்வோம்?
கடைசி வானத்திற்கு அப்பால் பறவைகள் எங்கே செல்லும்?
கடைசிக் காற்றை சுவாசித்தபிறகு தாவரங்கள் எங்கே உறங்கும்?

எமது பெயர்களை யாம் எமது செந்நிற ஆவியில் எழுதுவோம்.
எமது தசை இறுதிப்படுத்த பாடல்களின் தலையை யாம் கொய்வோம்.
நாம் இங்கு மரணமுறுவோம்
எமது இறுதிப் பயணத்தில் 
இங்கே, இங்கே,
எமது குருதி தனது ஒலிவ மரத்தை நட்டுவைக்கும் இங்கு.