இயக்குனர் மகேந்திரனுடன் ஒரு நேர்காணல்.

மகேந்திரன் – வசனங்களிலும் நாடகங்களிலும் சினிமா சிக்கிக்கொண்டிருந்த காலத்தில், தனது காட்சி மொழியால் சிறிதளவேனும் அதற்கு ஆசுவாசமளித்த இயக்குனர். சினிமா என்பது ஒரு காட்சி மொழி என்பதை இன்றைய சினிமாவிலும் தேட வேண்டிய சூழலில், அந்த காலகட்டத்தில் சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர். அப்போது சத்தமாக பேசிய படங்கள் எல்லாம் இப்போது மௌனமாகி விட, அப்போது மௌனத்தால் பேசிய மகேந்திரனின் படங்கள் இப்போதும் சத்தமாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றன. முள்ளும் மலரும் படத்திற்கு பின்னால், மகேந்திரன் எடுத்த ‘உதிரிப்பூக்கள்’ அவரது சிறந்த படைப்பாகும். காட்சி மொழியிலும், இயக்கத்திலும், மென் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் மகேந்திரனின் ஆளுமை உச்சத்தில் இருந்த படம் உதிரிப்பூக்கள். பேசாமொழியாக பேசிய படங்களை அளித்த இயக்குனர் மகேந்திரனுடன் பேசாமொழிக்காக பேசிய போது…

சிற்றன்னை கதையை படமாக்க முடிவு செய்ததன் காரணம் என்ன?

எனக்கு அந்த கதையின் மீது விருப்பமும் ஈடுபாடும் இருந்தது. அதனால் அதை படமாக்கினேன். ஈடுபாடு இருந்தால்தானே ஒரு படைப்பை உருவாக்க முடியும். பள்ளிக்காலத்தில் படித்த கதை அது. அதைப் பற்றி சினிமாவும் நானும் என்ற புத்தகத்தில் மிகத்தெளிவாக எழுதியிருக்கிறேன்.

நீங்கள் படமெடுத்த காலகட்டம், தமிழ் சினிமாவில் மசாலா படங்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம். அந்த காலகட்டத்தில் இலக்கியத்தில் இருந்து சினிமாக்கள் எடுக்க முடிவு செய்ததன் காரணம்?

எனக்கு விருப்பம் இருந்தது. அதனால் எடுத்தேன். மற்றவர்களோடு போட்டி போடுவது, அதில் ஜெயிப்பது போன்றவற்றில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. சினிமாக்கள் மாறுபட்டு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். சிறுவயதில் இருந்து மசாலா சினிமாக்கள் பார்த்து பார்த்து சலித்துப் போயிருந்தேன். அது முறையான சினிமாக்களாக எனக்கு தோணவில்லை. எனவே, என் விருப்பப்படி படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவுதான்.

இலக்கியத்தை சினிமாவாக மாற்றும்போது, என்னென்ன சாதகங்கள், என்னென்ன பாதகங்கள் இருக்கிறது ?

இரண்டுமே இருக்கின்றது. முதலில் முழுமையான ஈடுபாடு வேண்டும். பிறகு கடுமையாக உழைக்க வேண்டும். மற்றபடி சாதக பாதகங்கள் பற்றி ஏன் பேச வேண்டும். எனக்கு சர்க்கரை பிடிக்கிறது என்றால், இன்னொருவருக்கு பிடிக்காது. எல்லாவற்றில் இரண்டு பக்கங்கள் இருக்கிறதல்லவா?

சிறுவயதில் ஒரு ரசிகனாக நீங்கள் பார்த்த சினிமாவிற்கும், பிற்காலங்களில் ஒரு படைப்பாளியாக நீங்கள் பார்த்த சினிமாவிற்கும் என்ன வித்தியாசங்களை உணர்ந்தீர்கள்?

பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அப்படியேதான் இருக்கின்றது. நான் எப்போதும் சினிமாவை பற்றி, ஒரு பார்வையாளனாகத்தான் பேசுவேனே தவிர ஒரு இயக்குனராக பேச மாட்டேன். பார்வையாளனாக இருக்கும் வரைதான் நான் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருக்க முடியும். விமர்சனப் பார்வையில் நான் என்னையும் மற்ற விஷயங்களையும் பார்த்துக் கொள்வேன். ஆனால், எப்போதும் நான் பார்வையாளனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். அப்போதுதான் இந்திய சினிமாக்களில் இருக்கும் டூயட், மசாலாக்களை பார்த்து கோபம் வரும். ஒரு முழுமையான மாற்றம் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இன்றும் உண்டு. அவ்வப்போது மராத்திய, மலையாள, ஒரிய சினிமாக்களில் அற்புதமான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவை நம் பார்வைக்கு வருவதில்லை. அதற்கான முயற்சிகளை யாரும் இங்கே எடுப்பதும் கிடையாது.
தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் கதையளவில், திரைப்படம் எனும் படைப்பாக மற்ற மாநிலத்தில் வரும் திரைப்படங்கள் அளவிற்கு தமிழ் சினிமாவில் படங்கள் வருவதில்லையே. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
எல்லாருமே தான் காரணம். எல்லாருமே தான். விற்கும் பொருள் தவறான பொருளாக இருக்கும் பட்சத்தில், விற்பவரை குறை சொல்வதா, வாங்குபவரை குறை சொல்வதா? நல்ல படங்களை நான் தேடிச்சென்று பார்க்கிறேன். தவறான படங்களை நான் புறக்கணிக்கிறேன். ஆனால் டைம் பாஸ் என்ற பெயரில் மோசமான படங்களை பார்க்கும் பொறுப்பில்லாத பழக்கம் நம்மிடையே இருக்கிறது. தவறான படங்களுக்காக நம் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய வேண்டாம் என்று நினைத்தால் எவ்வளவோ படங்களை புறந்தள்ளலாம் இல்லையா? முதலில் நாம் நேரத்தை பெரிதாக மதிப்பது கிடையாது. பொழுதுபோக்குவது மட்டுமே நேரத்தை செலவிடும் வழி என்ற எண்ணம் இருக்கின்றது. ஆனால் நல்ல படங்கள் வந்தால் அதை ஆதரிக்கும் மனநிலையும் நம்மிடையே இருக்கிறது.

திரைக்கதை முழுமையடைந்தபின் கதாப்பாத்திரத் தேர்வை எப்படி மேற்கொள்வீர்கள் ?

புதுமுகங்களோ, மற்ற நடிகர்களோ, கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேடுவது ஒரு பெரிய பணி. அதற்காக தனியாக, பெரிதாக மெனக்கிட வேண்டும். மெனக்கிடலும் தேடலும் இல்லாமல் எதுவுமே சாத்தியம் இல்லை.

உதிரிப்பூக்கள் படத்தை பொறுத்தவரையில், எழுதும்போதே, இந்த கதாப்பாத்திரத்திற்கு இந்த நடிகர் சரியாக இருப்பார் என்று எங்காவது நினைத்துக்கொண்டு எழுதினீர்களா?

அஸ்வினி போன்ற தோற்றம் உள்ள ஒரு பெண் வேண்டும் என்று நான் மிகவும் குறியாக இருந்தேன். முள்ளும் மலரும் படத்திற்காக கர்நாடக எல்லைகளில் நான் நிறைய ஊர்களில் தங்கியபோது அஸ்வினி போன்ற முகச்சாயலை உடைய பெண்கள் நிறைய பேரை பார்த்தேன். ஒருவேளை அஸ்வினி எனக்கு கிடைக்கவில்லை என்றால் நான் உதிரிப்பூக்களை எடுத்திருக்கவே மாட்டேன்.

ஒரு படத்திற்கு கதாப்பாதிரத் தேர்வு என்பது அந்தளவிற்கு முக்கியம் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக அந்தளவிற்கு முக்கியம். உதிரிப்பூக்கள் படத்திற்கு பிறகு, என்னை விட அஸ்வினி கதாப்பாத்திரமும் அஸ்வினியும் தான் அதிகம் பேசப்பட்டனர். முக்கியமாக இளையராஜாவின் பின்னணி இசை. அதே போன்று எனக்கு கிடைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அத்தனை பேரின் உழைப்பும் சேர்ந்ததுதான் உதிரிப்பூக்கள். என் ஒருவனின் படைப்பு மட்டும் அல்ல அது.

விஜயன் கதாப்பாத்திரம் மிகச்சிக்கலான ஒரு பாத்திரம். அந்த பாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்தது எப்படி?

அது ஒரு நம்பிக்கைதான். அவரது தோற்றத்தை பார்த்தும், அவரிடம் நமக்கு தேவையான நடிப்பை வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து எடுத்த முடிவு அது. அதற்குமுன் நான் விஜயனின் படங்களை பார்த்ததே கிடையாது. ஒருமுறைதான் நேரில் பார்த்தேன். பார்த்தவுடன் இவரை வைத்து இந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

விஜயன் கதாப்பாத்திரம் தான் படத்தின் மையக்கதாப்பாத்திரம். ஆனால் முழுக்க முழுக்க நெகடிவ் ஷேட் உடைய ஒரு பாத்திரம். அந்த காலகட்டத்தில் மைய கதாபாத்திரத்தையே கிட்டத்தட்ட ஒரு வில்லன் பாத்திரமாக படைத்த அனுபவத்தை பற்றி...

நான் ஒரு படத்தை எடுக்கும்போது, இந்த விஷயம் வித்தியாசமாக இருக்க வேண்டும், இந்த விஷயம் புதுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து எடுத்தது கிடையாது. இப்போது அந்த கதாப்பாத்திரம் வித்தியாசமாக இருந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதைப் பற்றிய ஆராய்ச்சி எல்லாம் நடக்கிறது. ஆனால் நான் எடுக்கும்போது எந்தவிதமான கண்ணோட்டத்தோடும் எடுக்கவில்லை. இந்த படம் இப்படியெடுத்தால் ஓடுமா, ஜெயிக்குமா ஜெயிக்காதா என்ற எந்தவிதமான பயமும் என்னிடம் கிடையாது. நான் விரும்பிய, எடுக்க நினைத்த திரைப்படத்தை எடுத்தேன். அவ்வளவுதான்.

ஒரு படத்தில் வணிக வெற்றி ஒரு இயக்குனராக உங்களை பாதிக்காதா?

பாதித்ததே கிடையாது. அதை நான் மனதில் எடுத்துக்கொண்டதே கிடையாது. அதை மனதில் ஏற்றுக்கொண்டால், வணிகத்திற்கு தேவையான பாடல், நடனம் போன்றவற்றை நான் என் படத்தில் புகுத்த வேண்டியிருக்கும். அப்போது நான் விரும்பிய படத்தை என்னால் எடுக்க முடியாது இல்லையா? எனக்கும் சில நிர்பந்தங்கள் இருந்தன, பாடல்களை பொறுத்தவரையில். ஆனால் அந்த பாடல்களை நான் முடிந்தவரை கதையை எலிவேட் செய்யும் பாடல்களாக அமைத்துக்கொண்டேன்.

சினிமாவை ஒரு காட்சி மொழியாக பதிவு செய்த இயக்குனர்களில் முதன்மையானவர் நீங்கள். ஆனால் இப்போது, ட்ரெண்ட் என்ற பெயரில், வேகவேகமாக கட் செய்வது, அங்கங்கே நகைச்சுவை வசனங்களை தூவுவது போன்றவற்றை செய்து, அந்த படங்கள் வெற்றி பெறவும் செய்கின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒவ்வொருவரும் அவர்களின் இஷ்டத்திற்கு எடுக்கிறார்கள். அவர்களை இப்படி எடுக்கக்கூடாது என்று நாம் சொல்லக்கூடாது. அந்த படங்களை பார்க்காமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நான் எல்லா படங்களையும் பார்ப்பேன். இப்போதுள்ள சினிமா எப்படி சென்றுகொண்டிருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? அதனால் விருப்பு வெறுப்பு இல்லாமல் படங்களை பார்ப்பேன். ஆனால் சினிமாவைப் பற்றிய ஒரு நல்ல சிந்தனை, தெளிவு, பூரணம் இங்கு இல்லையே, நாம் இன்னும் வளரவில்லையே என்ற வருத்தம் நிச்சயம் எழும்.

உதிரிப்பூக்கள் படத்தில் குறியீடுகளாக சில விஷயங்கள் எனக்கு பட்டது. ஆரம்ப காட்சியில் ஒருவர் பீடி பிடித்துக்கொண்டிருப்பதை கட் செய்தால் ஒரு ரயில் புகைவிட்டு செல்வது, சரத்பாபு குழந்தை இல்லை என்று பேசிக்கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு குழந்தை படம் இருப்பது, நாயகி தன் நிலையை நினைத்து வருந்தி பாடும்போது இலையில்லா மரங்கள் சூழ்ந்திருப்பது என்று. இதுபோன்ற விஷயங்கள் படத்தில் தன்மையை எந்தளவிற்கு வலுப்படுத்தியது என்று நினைக்கிறீர்கள்?

எதையும் தீர்மானித்து நான் ஸ்பாட்டிற்கு போவதில்லை. போனவுடன் கண்ணில் படுபவற்றை காட்சிகளுக்கு பயன்படுத்துவேன். அப்படி செய்வதுதானே தவிர எதையுமே முன்கூட்டியே திட்டமிட்டு நான் செய்தது கிடையாது. அங்கு கிடைக்கும் விஷயங்களை படத்திற்கு சாதகமாக்கிக் கொள்வேன். அவ்வளவுதான். அதற்கென தனியாக மெனக்கிடுவதில்லை. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் சொல்வார்கள். அது எனக்கே தெரியாது. அந்த மூடிற்கு அந்த விஷயங்கள் நன்றாக இருக்கும் என்று தோணும். செய்வேன். மற்றபடி அது ஒன்றும் புத்திசாலித்தனம் எல்லாம் இல்லை.

பொதுவாக ஏதேனும் ஒன்று விநோதமாக இருந்தால், நடந்தால், ‘இன்னைக்கு மழை வரும்’ என்று நையாண்டியாக சொல்வார்கள். ஆனால் அதையே கூட காட்சி ரீதியாக காண்பித்திருக்கிறீர்கள். இதுபோன்ற விஷயங்கள் குறித்து...

இது ஒரு முக்கியமான விஷயம். விமர்சகர்கள் கூட விஜயன் சினிமாவுக்கு போகலாம் என்று சொன்னவுடன் அஸ்வினி மழை வரும் என்று வானத்தை பார்ப்பது நுணுக்கமான காட்சி மொழி என்றெல்லாம் மெச்சுவார்கள். எனக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் அந்த படத்தில் அஸ்வினி ஏற்ற லட்சுமி என்ற கதாப்பாத்திரம் எதையும் மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தும் குணமுடையவள் கிடையாது. அவள் பரிதாபத்திற்குரிய ஒரு பெண். துடிப்பான, எதையும் வெளிப்படையாய், சமமாக பேசும் பெண் என்றால் ஒரு எள்ளலாக அப்படி வானத்தை பார்த்திருப்பாள். ஆனால் லட்சுமி அப்படிபட்டவளில்லை. அந்த பார்வையிலேயே கூட அது தெரியும். நீங்களும் நானும் வெளியே நிற்கும்போது யதார்த்தமாக வானத்தை பார்ப்போம் இல்லையா, அது போன்றவொரு பார்வைதான் அது. அஸ்வினியிடம் எக்சிட் ஆகும்போது மேலே வானத்தை பார்த்தபடி இருங்கள் என்று சொன்னேன். அதே போல் அந்த நேரத்தில் மேகமூட்டமாக இருந்தது. ஒளிப்பதிவாளரிடம் சொல்லி அதையும் எடுத்துக்கொண்டேன். எடிட்டிங்கில் இரண்டையும் சேர்த்தேன். அவ்வளவுதான். மற்றபடி எந்த காரணமும் இல்லை. முடிவெட்டுபவர்கள்தான், ‘இன்னிக்கு மழை வரும் பாரு’ என்று எள்ளலாக பேசிக்கொண்டு போவார்கள். ஆனால் நிறைய பேர் லட்சுமியின் பார்வையை அந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு எழுதியிருந்தார்கள். அது தவறான பார்வை. அவர்கள் லட்சுமி கதாப்பாத்திரத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

காட்சி மொழியாகிய சினிமாவில், வசனங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

அதற்கென தனியாக இலக்கணமெல்லாம் இல்லை. இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில், இந்த கேள்விக்கு இவ்வளவு சிறிய பதில் என்று திட்டமிட்டு பேசமுடியாதில்லையா. அது என்னையறிமால் தானே வருகிறது. அதேபோல்தான் வசனமும் இயல்பாக அமைய வேண்டும். மற்ற இயக்குனர்களுக்கு நான் வசனம் எழுதித் தந்தபோது, அவர்கள் கேட்பவற்றை நான் எழுதித்தர வேண்டும். எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் கூட. ஆனால் நானே இயக்குனராய் இருக்கும்போது அந்த கட்டுப்பாடு ஏதும் இல்லையே. இவ்வளவுதான் பேச வேண்டும் என்று எதுவும் கிடையாது. நம்ம லைஃப்ல எல்லாருடனும் பேசிக்கொண்டேவா இருப்போம். சில பேரிடம் நிறைய பேசுவோம். சிலரிடம் சத்தமாக, சிலரிடம் மெதுவாக பேசுவோம். சிலரிடம் பேசவே மாட்டோம். அது திரைக்கதையோடு சேர்ந்து இயற்கையாக அமைய வேண்டும். காட்சி ஊடகம் என்று பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பேச வேண்டியவற்றை நிச்சயம் பேசலாம்.
திரைக்கதையோடு சேர்ந்தது வசனம் என்று சொன்னீர்கள். ஆனால் திரைப்படங்களுக்கு திரைக்கதை ஒருவரும் வசனம் ஒருவரும் எழுதும் வழக்கமும் இருக்கிறதே…அதை எப்படி பார்க்கிறீர்கள்?
முதலில் வசனத்திற்கு இங்கே அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களா என்ன? அந்தளவிற்கு கதை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒரு பேட்டியில் யாரோ சொன்னதாக படித்தேன். ‘இப்போதெல்லாம் படங்களில் அம்மா கதாப்பாத்திரத்திற்கு அந்தளவிற்கு ஸ்கோப் இல்லை’ என்று ஒருவர் சொல்கிறார். அதற்கு மற்றொருவர், ‘ரியல் லைஃப்லயே அம்மா கேரக்டருக்கு ஸ்கோப் இல்லையே சார்’ என்கிறார். கன்டென்ட் தான் மிக முக்கியம். அதன் மேல் ஒரு திரைக்கதை அமைக்கப்படும்போது வசனம் இயல்பாக வரும். வாழ்க்கைமுறையை அனுசரித்துதான் ஒருவனுடைய கற்பனைகள் வருகின்றன, வரும். ஒவ்வொருவரை பொறுத்தும் அது மாறிக்கொண்டே இருக்கும்.

மற்ற இயக்குனர்களுக்கும் நீங்கள் கதை வசனம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் படங்களுக்கும் எழுதியிருக்கிறீர்கள். எதில் நீங்கள் அதிக வசதியாக உணர்ந்தீர்கள்?

என் படங்களுக்கு எழுதும்போதுதான். அதில் கஷ்டமே இல்லை. மற்றவர்களுக்கு எழுதுவது சிரமம். அவர்களை திருப்திப்படுத்த வேண்டுமில்லையா? என் படங்களுக்கு அந்த சிரமம் இல்லையே.

திரைக்கதை வசனம் பல படங்களுக்கு எழுதிவிட்டு, முதல்முறை இயக்குனராக ஆனபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கலைத்துறையில் உள்ள அனைவரும் இத்தொழிலை விரும்பி ஆசைப்பட்டு, அதற்காக உழைத்து இத்துறைக்குள் வந்தவர்கள். அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டது இத்துறை. நான் விரும்பாமல் ஏற்றுக்கொண்டதுதான் சினிமாத்துறை. மற்றவர்களுக்கு சினிமா காதல் கல்யாணம். எனக்கு இது கட்டாயக் கல்யாணம். வேறு வழியில்லாமல் இதை ஏற்கக்கூடிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. பிறகு ஒரு படத்தை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன். அந்த படம்தான் முள்ளும் மலரும். நான் விரும்பி இயக்குனராக நினைத்தது கிடையாது. அந்த படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கே வராததினால் அந்த படத்தை என் இஷ்டத்திற்கு எடுக்க முடிந்தது. அவர் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளர். பல படங்களுக்கு நான் நன்றாக கதை வசனம் எழுதியிருக்கிறேன் என்ற நம்பிக்கையில் அவர் ஸ்பாட்டிற்கே வராமல் இருந்தார். அதேபோல் அடுத்தடுத்து எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்களுக்கும் என்னை சுதந்திரமாக வேலை செய்ய விட்டனர்.

சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே எனக்கு தமிழ் சினிமாவின் மேல் சில குறைபாடுகள் இருந்தன. சில நல்ல ஹாலிவுட் படங்களை பார்த்தபின்தான் சினிமாவின் உண்மையான வடிவம் எனக்கு புலப்பட்டது. ஆனால் தமிழ் சினிமா இதற்கு நேரெதிராக பாடல், சண்டை, வசனங்கள், உடல்மொழி என எல்லாவற்றிலும் ஒரு மேடை நாடகம் மாதிரியேதான் இருந்தது. இப்பக்கூட ரிஃபைன்ட் ஃபார்ம் ஆஃப் ட்ராமாவ தான் நாம சினிமாவ எடுத்துட்டு இருக்கோம். பாத்துட்டு இருக்கோம். நவீனமயமாக்கப்பட்ட நாடகம்தான் நம் சினிமா. ஆனால் அதற்காக யாரையும் நான் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொருவர் பார்வையிலும் சினிமா வேறு மாதிரிதான் இருக்கும். மற்றவர்களை குறை சொல்வதில் எனக்கு விருப்பமும் இல்லை. பொதுவாக தமிழ் சினிமாவின் தன்மையாக எனக்கு பட்டவை இவை. தமிழ் சினிமா என்று கூட இல்லை, இவை இந்திய சினிமாவிற்கே பொருந்தும். தமிழ் சினிமாவில் மிக அற்புதமான, கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அந்த காலத்தில் இருந்து இப்போது வரை இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். நாம் ஒன்றும் இல்லாதவர்கள் கிடையாது,. எல்லாம் இருக்கிறது. ஆனாலும் தமிழ் சினிமா இப்படியேதான் இருக்கிறது என்பதுதான் எனது வருத்தமே. எல்லா மொழிகளிலேயுமே அப்படியான கலைஞர்கள் இருக்கிறார்கள். 1955 லேயே சத்யஜித் ரே பதேர் பாஞ்சாலி எடுத்தார் இல்லையா. இப்போது 2013 ல் உள்ள இந்திய சினிமாவில் எங்காவது சத்யஜித் ரே உருவாக்கிய சினிமாவின் சாயல் இருக்கிறதா?

சினிமா நீங்கள் விரும்பாமல் கட்டாயத்தினால் ஏற்றுக்கொண்டது என்று சொன்னீர்கள். விரும்பி ஏற்றுக்கொண்டவர்களே கூட மசாலா படங்கள் தரும் நிலையில், நீங்கள் சமரசம் இல்லாத நல்ல சினிமா கொடுக்க வேண்டும் என்று நினைத்ததன் காரணம் என்ன?

எனக்கு மசாலா படங்கள் பிடிக்கவில்லை. இது எனக்கு பிடித்தது. அது எனக்கு தெரியாது. இது எனக்கு தெரிந்தது. அது எனக்கு முடியாது. இது எனக்கு முடிந்தது. அது எனக்கு கடினம். இது எனக்கு சுலபம். இப்படித்தான் நான் பார்க்கிறேன். அந்த மாதிரி என்னை ஒரு படமெடுக்க சொன்னால் நான் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். எனக்கு அது தெரியாது. வராது.

ஒரு படத்தின் திரைக்கதை எங்கே முழுமையடைகிறது? நீங்கள் எழுதி முடிக்கும்போதா, அல்லது படத்தொகுப்பு முடிந்து முழுதாக படம் தயாராகும்போதா?

திரைக்கதைக்கு என்று ஒரு இலக்கணம் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு இயக்குனருக்குமான தனித்த அடையாளம் அது. பாஸ்வேர்டு போன்றது. இன்னொருவர் அதை பின்பற்ற முடியாது. ஒவ்வொருவர் எழுதும் விதமே, கதையை அணுகும் விதமே வெவ்வேறு விதமாக இருக்கும். நவீன சினிமாவில் இயக்குனர்கள் நிலைத்து நிற்கக் காரணமே, அந்த வேறுபட்ட திரைக்கதை உத்திதான். கன்டென்டை வெளிப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொருவரும் வேறுபட்டு நிற்கிறார்கள். நான் காட்சி எழுதும் முறைகளை சொன்னால் மற்றவர்களுக்கு தவறான பாடமாகிப் போய்விடும். நான் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு விஷயமாக சேர்த்துக்கொண்டே போகும் இயக்குனர். கதையில் சாராம்சம் என்னிடம் இருக்கும். அவ்வளவுதான். ஒவ்வொரு கட்டத்திலும் திரைக்கதை முழுமையடைந்துகொண்டேதான் போகும். ஸ்கிரிப்ட், படத்தொகுப்பு, இதைத்தாண்டி, பேட்ச் வொர்க். அதுவும் மிக முக்கியம். எல்லாவற்றையும் எடிட் செய்து பார்க்கும்போது, சில ஷாட்கள் கட்டாயம் தேவை என்று புரியும். அப்போதுகூட திரைக்கதை முழுமையடையும்.
உதிரிப்பூக்களின் டைட்டில் பாடல் தவிர்த்து எல்லா பாடல்களும் பெண்கள் பாடுவதாகவே இருக்கும். அதுவும் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

இல்லை. எதுவுமே நான் திட்டமிட்டு செய்தது கிடையாது. நீங்கள் சொல்லும்போதுதான் எனக்கே இவ்விஷயம் தெரிகின்றது. நான் பாட்டே வேண்டாம் என்று நினைப்பவன். அந்த பாட்டு ஆண் பாடலாம் பெண் பாடலாம் என்றெல்லாம் நான் ஏன் முடிவெடுக்கப் போகிறேன். டைட்டில் சாங் ராஜா தான பாடுறார்.

தமிழ் சினிமாவில் பாடல்கள் தவிர்க்க முடியாத அங்கமாக வந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்று பாடல்களை புகுத்துவது படங்களின் யதார்த்தத் தன்மையை பாதிக்காதா?

இந்திய சினிமாவிலேயே அப்படித்தான். ஏன் தமிழ் சினிமாவை மட்டும் குறிப்பிட வேண்டும். ஓனான் அடிப்பதுபோல் தமிழ் சினிமாவையே ஏன் தொடர்ந்து அடிக்க வேண்டும்?

அடுத்தது, யதார்த்தமாக படம் எடுத்தால் அதற்கு பாடல்கள் தேவையே இல்லை. இருக்கவே கூடாது. வணிக ரீதியாக எடுத்தாலுமே கூட பாடல்கள் தேவையில்லை. தனியாக ஆல்பம் வேண்டுமானால் போட்டுக் கொள்ளாம். இந்திய சினிமாவில் மட்டும்தான் நாம் பாடிக்கொண்டிருக்கிறோம். வேறு எங்கும் இல்லை. ஒரு பாடகனை பற்றிய படம், இசையை குறித்த படம் என்றால் அப்போது வைத்துக்கொள்ளலாம். அப்படி வகைப்படுத்தலாம். மற்றபடி அதில்லாமல் எடுக்கையில், ஒரு டூயட் பாடுறேன், டான்ஸ் ஆடகிறேன் என்பதை இந்திய சினிமாவில் மாற்றிக்கொள்ளவே முடியவில்லை. இதுபற்றி நான் பேசி எதுவும் மாறப்போவது கிடையாது. நான் என் படங்களில் பாடல்கள் இருக்கக் கூடாது என்றுதான் விரும்பினேன்.

இந்திய சினிமாவில் இடைவேளை என்ற ஒன்று இருக்கிறது. ஒரு படைப்பாளியாக இடைவேளை என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இப்பதான் படங்களில் நிறைய இடைவேளை இருக்கிறதே. ஒவ்வொரு பாடலுமே ஒரு இடைவேளைதானே. நீங்கள் எழுந்திருக்கலாம். வெளியே போகலாம். சுற்றலாம். மறுபடியும் வரலாம். அதனால் அத்தனை இடைவேளையுடன் தான் நீங்கள் படம் பார்க்கிறீர்கள். ஒரு இடைவேளை இல்லையே, இந்திய சினிமாவில்.

உங்கள் படங்களில் ஒளிப்பதிவாளருக்கு எந்தளவிற்கு ஸ்பேஸ் கொடுப்பீர்கள்? ஒரு இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்குமான உறவுமுறை எப்படியிருக்க வேண்டும்?

இருவருமே ஒரே அலைவரிசையில், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, இந்த ஸ்கிரிப்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இதை இருவருமே உட்கார்ந்து பேசி முடிவு செய்துவிட்டால் மிக நன்று. அப்போதுதான் அலைவரிசை ஒரே மாதிரி இருக்கும். ஒரு கணவன் மனைவி போல், ஒருவருக்கு என்ன வேண்டும் என்பதை மற்றவர் உணர்ந்து, அழகாக அந்த உறவு இருக்கவேண்டும். புரிதல் மிக முக்கியம். இவர்களுக்குள் மட்டுமல்ல. படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு படத்தில் ஈடுபாடு இருக்க வேண்டும். நான் என் படங்களில் வேலை செய்யும் அனைவரும் அத்தனை ஈடுபாடு இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். அத்தனை பேரும் அவ்வளவு அழகாக வேலை செய்வார்கள். அனைவருக்கும் இடையே ஈடுபாடும் புரிதலும் இருக்க வேண்டும். படம் ஜெயிக்கிறதோ இல்லையோ, அப்போதுதான் முழு திருப்தியோடு உங்கள் படத்தை எடுக்க முடியும். இந்த புரிதலும் உறவுமுறையும் என் சக கலைஞர்களுடன் எனக்கு நேர்மாறாக இருந்தபோது, நானே சில மோசமான படங்களை தந்திருக்கிறேன். அதையும் நான் சொல்லாமல் இருக்க முடியாது.

இசை என்று வருகையில், இசையை போன்றே மௌனம் ஒரு படத்திற்கு மிக அவசியம். ஒரு படத்தில் எந்த இடத்தில் இசை வரவேண்டும், எந்த இடத்தில் மௌனம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முடிவு செய்வது இசையமைப்பாளரா இல்லை இயக்குனரா?

இளையராஜாவை பொறுத்தவரை, அவரே அத்தகைய தனித்தன்மை உடையவர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. முதல் படத்தில் இசை இளையராஜா. நான் அவருக்கு எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. காட்சிகளை அந்தளவிற்கு முழுமையாக உள்வாங்கியிருப்பார். வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் எந்தளவிற்கு எலிவேட் செய்ய முடியும், அந்த அளவிற்கு செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. என்னை பொறுத்தவரை, இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா. அதில் நான் தலையிட வேண்டிய அவசியமே இல்லை.

திரைக்கதை முழுமையடைந்து படப்பிடிப்பும் முடிந்து, ஒரு படம் எடிட்டரின் டேபிளுக்கு போகும்போது, அவரது பார்வையில் அந்த திரைக்கதை வேறு ஒரு வடிவம் பெறுமா? அது திருப்தியாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?

வேறு வடிவத்திற்கு போக வாய்ப்பே இல்லை. எடுத்ததை வைத்துதானே எடிட் செய்யப் போகிறோம். அதில் ஏதாவது பிரச்சினை வந்தால் பேசித் தீர்த்துக் கொள்வோம். அவ்வளவுதான். உதிரிப்பூக்களில் கூட விஜயன் அந்த பெண்ணை கொடுமைபடுத்துவான் இல்லையா. இதுதான் என் ஆசிர்வாதம் என்று. அதை நேரடியாக காட்டாமல் வேறுவிதமாக காட்டியிருப்பேன். அந்த காட்சி முதலில் மிகவும் சிறியதாக இருந்தது. எடிட் செய்து பார்த்தபோது அந்த இம்பாக்ட் முதலில் வரவில்லை. கொஞ்சம் நீளமாக இருந்தால்தான் அந்த காட்சிக்கு ஒரு இம்பாக்ட் வரும். அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. வரப்பில் அந்த வாத்தியாரை உட்காரவைத்துவிட்டு வந்திருந்தேன். சும்மா உட்கார்வதற்கு பதில் ஒவ்வொரு இலையாக பிய்த்துப் போட்டபடி இருங்கள் என்று சொல்லியிருந்தேன். அதை எடுத்து இணைத்துப் போட்டு, ஒவ்வொரு துணியாக உருவும்போது, ஒவ்வொரு இலையாக பிய்த்துப் போடுவதுபோல் காட்டியிருந்தோம். இதை நிறைய பேர் சிம்பாலிக் ஷாட் என்று சொன்னார்கள். எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று சிம்பாலிக் ஷாட். நேரடியாக சொல்லாமல், சிம்பாலிக்காக காட்டிதான் ஒன்றை சொல்லவேண்டும் என்றால், அது சினிமா கிடையாது. நான் வேதனைப்படுகிறேன் என்றால், அதை என் எக்ஸ்பிரஷன்ஸ் வழியாக காட்ட வேண்டுமே தவிர, பக்கத்தில் ஒரு நெருப்பு எரிவது போல் காட்டினால் எப்படி? இந்த காட்சியில் எடிட்டர் லெனினிடம் நான் அந்த இரண்டையும் இன்டர்கட் செய்து பார்க்கலாமே என்று சொன்னேன். அப்படி செய்தால் இந்த காட்சி சஸ்டெய்ன் ஆகும். நினைத்த விளைவு கிடைக்கும் என்று நினைத்தேன். அப்படி செய்தபோது விஜயன் வரும் காட்சி கொஞ்சம் நீளமானது. அந்த இம்பாக்ட் கிடைத்தது. அதுதான் நடந்ததே தவிர, இன்று வரை எல்லாரும், ‘சே, என்ன ஒரு சிம்பாலிக் ஷாட். ஒவ்வொரு துணியாக கழட்டும்போது ஒவ்வொரு இலையாக பிடுங்கப்படுகிறதே’ என்று சொல்கிறார்கள். இதுபோன்று நான் ஒன்று நினைத்து, அது மொத்தமாக வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்ட அனுபவங்கள் உண்டு.

வசனத்தை மையமாக வைத்த படங்கள் பெருமளவில் வந்துகொண்டிருந்த வேளையில், இதுபோன்ற மென் உணர்வுகளை பேசும் படங்கள் எந்தளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெற்றது? வணிக ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் ?

நீங்களே இன்று வரை அந்த படத்தை பற்றி கேட்கிறீர்கள் என்றால், அதுவே அந்த படத்தின் இம்பாக்ட் தானே. வரவேற்புதானே. அதிலும் இப்போதுதான் எல்லாரும் புதிதாய் ஞாபகம் வந்ததுபோல் பேச ஆரம்பிக்கிறார்கள். அந்த படங்கள் அப்போதே நன்றாகவே ஓடின. அந்த படங்களில் நான் எந்த மசாலாவும் சேர்க்கவில்லை. அது அவசியமும் இல்லை. சுவாரசியமாக இருந்தால், நாம் எந்த படத்தையும் பார்ப்போம். எந்த மொழிப்படமாக இருந்தாலும் கூட. வேறு மொழிப்படங்களை நாம் மொழி தெரிந்தா பார்க்கிறோம். சுவாரசியமாக இருக்க வேண்டும். சுவாரசியம் என்றால் உங்கள் மனத்தை அப்படம் அதை நோக்கி இழுக்க வேண்டும். அதைத்தான் நான் சுவாரசியம் என்று சொல்கிறேன். காமெடியையோ, டான்சையோ, பாட்டையோ நான் சுவாரசியம் என்று சொல்லவில்லை. எது உங்கள் மனத்தை இழுக்கிறதோ அதை சொல்கிறேன். அதெல்லாம் நல்ல படங்கள்தானே.

நாயக வழிபாடு, நாயகர்களின் ஓப்பனிங் சாங், க்ளைமேக்ஸ் பைட் என்று முழுக்க முழுக்க நாயக பிம்பம் மேலோங்கி இருந்த நேரத்தில், எந்தவித நாயகக் கூறுகளும் இல்லாமல் யதார்த்தமான படமெடுக்க, தயாரிப்பாளர்கள் பக்கமிருந்து எந்தளவிற்கு உங்களுக்கு ஆதரவு இருந்தது?

ஆதரவு என்று நான் சொல்லமாட்டேன். முதல் பட தயாரிப்பாளர், அந்த படத்தை நான் இயக்கித் தர வேண்டும் என்று நிறைய கட்டாயப்படுத்தினார். நான் நல்ல டயலாக் ரைட்டர், அதுவும் இது அண்ணன் தங்கை கதை, நான் நன்றாக செய்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் அவர் என்னை சுதந்திரமாக வேலை பார்க்க வைத்தார். சின்ன சின்ன தடைகள் வந்தது. ரஜினியை அந்த பாத்திரத்தில் போட வேண்டாம் என்று சொன்னார். நான் எதிர்த்து நின்றேன். ரஜினி வேண்டாமென்றால் எனக்கு இந்த படமே வேண்டாம் என்றேன். பிறகு அவர் ஒத்துக்கொண்டார். இதுபோன்ற சின்ன சின்ன தடைகளை தாண்டி, படப்பிடிப்புக்கு சென்றவுடன், அவர் அங்கே வரவேயில்லை. என் மீதிருந்த நம்பிக்கையால் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் கூட வரவில்லை. ஒரு வகையில் நான் அவரை ஏமாற்றிவிட்டேன் என்று கூட சொல்லலாம். ஒருவேளை அங்கு வந்து, ரஜினிக்கு கை போன காட்சியில், அவரும் தங்கையும் பேசாமலேயே நின்றிருக்கும் காட்சியை நான் எடுப்பதை பார்த்திருந்தால் சத்தம் போட்டிருப்பார். ‘என்னப்பா எவ்வளவோ பேசலாம் இல்லையா’ என்றிருந்திருப்பார்.

கடைசி வரைக்கும் என் மீதிருந்த நம்பிக்கையில் அந்த படத்தை அவர் பார்க்கவே இல்லை. ஆனால் டபுள் பாசிடிவ் பார்த்தவுடன் மனிதர் பொங்கி எழுந்துவிட்டார். அப்போதுதான் அப்படத்தை முழுதாக பார்த்தார். அப்போது கூட எனக்கு அவர் மீது வருத்தம் இல்லை. ரீரிக்கார்டிங் இல்லாமல் பார்த்தார். அதையெல்லாம் செய்துவிட்டு பார்த்தால், அவருக்கு படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பிறகு வெளியானபின் அந்த படம் நல்ல வெற்றி பெற்றது. அந்த காலத்தில் வெற்றிபெற்ற கதாசிரியர்கள் எல்லாம் வெற்றிபெற்ற இயக்குனர்களாக வந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் தங்கப்பதக்கம் போன்ற படங்களில் பணியாற்றி நான் வெற்றிகரமான கதாசிரியனாக இருந்த கட்டத்தில் என்னை வற்புறுத்தி இப்படத்தை இயக்க வைத்து, முழு நம்பிக்கையோடு என் படப்பிடிப்புக்கே வராமல் இருந்தார். அந்த வகையில் நான் தப்பித்தேன்.
இரண்டாவது படம், உதிரிப்பூக்களை பொறுத்தவரையில், முள்ளும் மலரும் வெற்றிக்கு பிறகு இன்டஸ்ட்ரியில் உள்ள அத்தனை தயாரிப்பாளர்களும் தங்களுக்கு படம் பண்ணித் தர என்னிடம் கேட்டபடி இருந்தனர். யாருக்கும் படம் பண்ணித் தர நான் விரும்பவில்லை. இங்கே நான் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணமோ, நிறைய சம்பாதிக்க வேண்டும், பேர், புகழ், பணம் நிறைய வேண்டும் என்ற எண்ணமோ எனக்கு துளி கூட இல்லை. முள்ளும் மலரும் எடுத்தேன். வெற்றி பெற்றது. அவ்வளவுதான். மற்றபடி, உதிரிப்பூக்கள் கதை நான் பள்ளி நாட்களில் படித்தது. படமெடுக்கிறேனோ இல்லையோ, எனக்குள் ஒரு திரைக்கதை ஓடியபடியே இருக்கும். பாலகிருஷ்ணன் என்ற தயாரிப்பாளர், ஒருகாலத்தில் படமெடுத்து அடுத்து படமெடுக்க முடியாமல் கஷ்டத்தில் இருந்தார். அவரை காளி என்ற படத்திற்கு கதை வசனம் எழுதியபோது எனக்கு பழக்கம். அப்போது சின்னப்பதேவர் இறந்துவிட்டார். அவர் கதைவிவாத குழுவில் நான் இருந்திருக்கிறேன். எங்கள் மீது மிகவும் உயிராக இருந்தவர் சின்னப்ப தேவர். அவர் கோயம்புத்தூரில் இறந்துவிட்டார். அவரைப் போய் பார்க்கவேண்டும் என்று நான் மிகவும் தீர்க்கமாக இருந்தேன். எனக்கு கார் கொடுத்து உதவ யாரும் உதவிக்கு வரவில்லை. அப்போது பாலகிருஷ்ணன் பழைய அம்பாசிடர் கார் வைத்திருந்தார். அவருக்கு போன் பண்ணி, ‘உங்களால் வர முடியுமா சார், பெட்ரோல் லாம் நான் போட்டுக்கறேன். எனக்கு கோயம்புத்தூர் போய் தேவரை அடக்கம் செய்யும் வரை இருக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவர் உடனே கார் எடுத்துட்டு வந்தார். அது ஒரு ஓட்டை கார். அதனால் ஒரு மெக்கானிக்கையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, கோவை சென்று, அடக்கம் முடியும் வரை ஒரு மகன் ஸ்தானத்தில் எல்லாவற்றையும் செய்து, பூரண திருப்தியோடு சென்னை வந்தேன்.
சென்னைக்கு வந்த மறுநாள், அதுவரையில் கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்துகொண்டிருந்த உதிரிப்பூக்களின் முழு ஸ்கிரிப்ட்டையும் முடித்துவிட்டு, அஸ்வினியை லட்சுமி பாத்திரத்திற்கு மனதில் வைத்துக்கொண்டு, காலை பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று, அவரை எழுப்பி, ‘நீங்க இந்த படத்தை பண்ண முடியுமா’ என்று கேட்டேன். அவருக்கு ஆச்சரியம். வீட்டு வாசலில் அத்தனை தயாரிப்பாளர்கள் காத்திருக்கும்போது நம்மை தேடி வந்திருக்கிறாரே என்று. அவர் இப்போது இல்லை. நான் கடைசி வரைக்கும் அவரிடம் சொல்லவில்லை. அவர் தேவர் முகத்தை கடைசியில் நான் பார்க்க உதவினார் இல்லையா, அதனால் அந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அவரிடம் தந்தேன். ‘முழு லாபத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு சம்பளம் மட்டும் கொடுங்கள்’ என்று சொன்னேன். அந்த படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்றன. அவரும் நன்றான பிசினஸ் செய்துவிட்டார். அவரும் படத்தில் எங்கும் தலையிடவில்லை. இதுபோன்ற நிலையில் தலையிட மாட்டார் இல்லையா? தலையிடவேண்டிய சூழலும் இல்லை.

இவர்கள் எல்லாரும் சினிமா பற்றி, இப்போதுள்ள தொழில், ட்ரெண்ட் பற்றியோ யோசிக்கக் கூடியவர்களாக இருந்திருந்தால், என்னை போட்டு படுத்தி எடுத்து, என்ன செய்கிறேன், எப்படி செய்கிறேன் என்று தொல்லை கொடுத்திருப்பார்கள். ஆனால் நல்லவேளையாக எனக்கு அப்படி யாரும் எந்த நிர்பந்தமும் தரவில்லை. இதே படத்தை ஒரு பெரிய ஸ்டூடியோவிற்கு செய்திருந்தால் அவர்கள் நிறைய மாற்றம் சொல்லியிருப்பார்கள். பாடல் வையுங்கள் அது இது என்று. இப்போது, உதிரிப்பூக்கள் போன்ற கதையையே முதலில் அவர்கள் ஒப்புக்கொண்டு பிறகு மாற்ற சொல்வார்கள். இதற்கெல்லாம் பயந்துகொண்டுதான், அப்போது அவர்களை எதிர்த்து என்னால் பேச முடியும் என்றாலும், எதற்கு வம்பு என்று அவர்களிடம் நான் போகவில்லை. அவர்கள் ஏற்கனவே நிறைய படம் செய்தவர்கள். அவர்களுக்கு படம் பண்ணாமல், புதிதாக செய்பவர்களுக்கு செய்வோமே, அவர்கள் பெரிய தயாரிப்பாளர்களாய் வரட்டுமே என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

முள்ளும் மலரும் படம் இன்றுவரை ரஜினி என்ற நடிகனுக்கான ஒரு அடையாளமாய் இருக்கின்றது. அதன் பிறகு அவரது பாதை மாறிவிட்டது. ரசிகர்களுக்கு கூட அதுபோன்ற ரஜினியை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த படத்தின் இயக்குனராய் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

அவருக்கும் இந்த ஏக்கம் உண்டு. என் பார்வையில் மிகச்சிறந்த அற்புதமான நடிகர் ரஜினி சார். ஒரு கதாப்பாத்திரத்தை கொடுத்தால் அதை ஆழமாக உள்வாங்கி, அதை மிக இயல்பாக செய்ய சத்தியமாக அவரைத் தவிர யாராலும் முடியாது. என்ன செய்வது? ஒரு கட்டத்தில் மக்கள் அவரை ஆக்சன் ஹீரோவாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். புலி வாலை பிடித்தது போல, அதை விடவும் முடியாது. பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாரும் அதை விரும்புகிறார்கள் எனும்போது அவருக்கும் வேறு வழியில்லை. அது மற்றவர்களுக்கு சந்தோஷத்தை தரலாமே தவிர, அவருக்கு மனதில் ஒரு குறை இருந்துகிட்டேதான் இருக்கும். அதற்கென அவர் பின்னால் நடித்த படங்கள் தப்பு என்றெல்லாம் நாம் பேசக்கூடாது. உலகம் பூரா இதுபோன்ற நிலைமை இருக்கிறது. அர்னால்ட் இப்படித்தான் நடிக்க வேண்டும், மெல் கிப்சன் இதைத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வட்டத்திற்குள் மக்கள் வந்துவிட்டார்கள் இல்லையா. அதுபோல் இவருக்கும் அதுபோன்ற ஒரு நிலைமை வந்துவிட்டது. அவர்களுக்காவது அதிலிருந்து வெளியேற வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இவருக்கு இதிலிருந்து எஸ்கேப் ஆக வாய்ப்புகள் இல்லை. நம் பிசினஸ் வட்டமே மிகச்சிறியது தானே. ஹாலிவுட் படங்கள் போன்று உலக மார்க்கெட் நமக்குக் கிடையாது. இந்த சின்ன வட்டத்திற்குள் எல்லாருக்கும் பிடித்த கதைகளில் நடிக்கும் கட்டாயத்திற்கு அவர் ஆளாகிறார், தவிர்க்க முடியாமல்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் இரண்டுமே பெண்களை அடிப்படையாக கொண்ட படங்கள். பெண்கள் மற்ற படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட வேளையில் இதுபோன்ற பெண் மையக் கதாப்பாத்திரங்கள், திட்டமிட்டு தீட்டப்பட்டவையா?

தாய்மையை, பெண்மையை தெய்வமாக கொண்டாடும் நாடு இது. காதலி, மனைவி, தாய், அக்கா, தங்கச்சி என்று பெண்கள் இல்லையென்றால் உலகமே இல்லையே. ஆணிவேரையே கேள்வி கேட்கிறீர்களே. பெண்கள்தான் உலகின் முதல் படைப்பாளிகள். அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியாதே. அவர்களை தவிர்த்து படமெடுத்தால் என்னை விட முட்டாள் யாருமே இருக்க முடியாது.

தொடர்ந்து தமிழ் சினிமாவை பார்த்துக்கொண்டு வருவதாக சொன்னீர்கள். இப்போதுள்ள தமிழ் சினிமா எந்தளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது?

ஹாஹா…எவ்வளவோ விஷயங்களை மனதிற்குள் வைத்துக்கொள்வதுதான் நல்லது என்று நினைக்கிறேன். அதை வெளியே பேசுவதிலும் எனக்கு விருப்பம் கிடையாது, அபிப்ராயம் சொல்வதற்கும் எனக்கு அருகதை கிடையாது. நான் எதையாவது கேட்டால், ஆமாம் நாங்க இப்படித்தான் எடுப்போம், நீ இப்ப என்ன படம் எடுத்துருக்க என்று யாராவது கேட்பார்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது இல்லையா? என் கருத்துக்களையெல்லாம் நான் அடுத்து எடுக்கப்போகும் படங்களில் மூலமாகத்தான் நான் வெளிப்படுத்த முடியும். பாடல்கள் இல்லாத படமெடுக்க எனக்கு ஆசை இருக்கிறது. ‘அந்த நாள்’ எடுத்தவர்கள்தானே நாம். ஆக அப்படித்தான் நான் என் பதிலை தரமுடியுமே தவிர, மற்றவர்கள் குறை கூறி பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

நீங்கள் படத்தின் டைட்டில் கார்டிலேயே மூலக்கதை என்று சிற்றன்னை யை குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது மொத்த படத்தையுமே கூட அப்பட்டமாக காப்பி அடித்து அதன் மூலம் குறித்து ஒருவார்த்தை கூட பேசாத நிலைமை இருக்கிறேதே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?

உங்கள் கேள்வியிலேயே இதற்கான பதிலும் இருக்கின்றதே.

இப்போது, ஒரு படத்தை எவ்வளவு தரமாக எடுப்பதை விட, எவ்வளவுக்கு எவ்வளவு அதை விளம்பரப்படுத்துகிறோமோ அதுதான் முக்கியம் என்ற நிலை வந்துவிட்டது. இது, அதிக விளம்பரம் செய்ய முடியாமல், ஆனால் தரமான படமெடுக்க நினைப்பவர்களுக்கு உகந்ததா?

காலம் தான் பதில் சொல்லவேண்டும். உடனே பதில் சொல்ல முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் மாற்றங்கள் உடனடியாக நடந்திடாது இல்லையா. லாபம் வேண்டுமானால் விளம்பரம் செய்துதானே ஆகவேண்டும். விளம்பரம் எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் தேவையாகி விட்டது. விளம்பரம் இல்லையேல் எதுவுமில்லை என்ற நிலை வந்துவிட்டது. இதுகுறித்து முடிவு செய்ய வேண்டிய முடிவு மக்கள் கையில் இருக்கிறது. படத்தோட தரம், கன்டென்ட், அப்ரோச் இதுதான் ஒரு படத்தின் உண்மையான பப்ளிசிட்டியாக இருக்குமே தவிர, வழக்கமான படத்தை எடுத்துவிட்டு வழக்கத்திற்கு அதிகமாக விளம்பரம் செய்தால் ஒன்றுமே நடக்காது. வாய் வழியாக பரவும் வொர்ட் ஆஃப் மௌத் இருக்கின்றது அல்லவா, அதுதான் பெஸ்ட் பப்ளிசிட்டி.

சமீப காலமாக குறும்படங்கள் மீது ஒரு கவனம் கிடைத்துவருகிறது. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அவர்களை ஊக்கப்படுத்தலாமே. அவர்களும் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டு சினிமாத்துறைக்கு வருகின்றனர். அவர்களின் அடுத்தடுத்த முயற்சிகள் எப்படி போகிறது என்று பார்ப்போம். முதல் முயற்சிகளில் அவர்கள் புதுமுகங்களை போட்டு எடுக்கிறார்கள். அந்த தைரியம், வீரியம், புரட்சி அடுத்தடுத்த படங்களில் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அதன் பிறகுதான் அதுகுறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும்.

உலகம் முழுக்க குறும்படங்கள் என்பதே தனியான ஒரு கலைத்துறையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே சமீப காலமாக, திரைத்துறைக்கு போவதற்கான ஒரு நுழைவுச்சீட்டாக மட்டுமே குறும்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுகுறித்து…

குறும்படங்கள் மூலம் அவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளலாம். அது மூலம் அவர்களுக்கு திரை வாய்ப்பும் கிடைக்கலாம். ஆனால் அதே வீரியத்துடன் அவர்கள் சினிமாவில் இயங்குகிறார்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும். சிலர் தானே குறும்படங்கள் மூலம் சினிமாவிற்கு வருகிறார்கள். சினிமாவில் இருக்கும் அனுபவஸ்தர்கள் செய்ய முடியாத சில விஷயங்களைக் கூட புதிதாக வருபவர்கள் தைரியமாக செய்கிறார்கள். அடுத்தடுத்த படங்களில் அவர்கள் கமர்ஷியல் நடிகர்கள் பக்கம் செல்கிறார்கள் என்றால் அவர்கள் பாதை மாறுகிறார்கள் என்று அர்த்தம். இந்திய சினிமாவில்தானே ஹீரோ ஹீரோயின் என்று கதையை கட்டமைக்கிறோம். இந்த ஃபார்முலாவை விட்டு அவர்கள் வெளியே வருவது மகிழ்ச்சி. இது தொடர்ந்தால் இன்னும் மகிழ்ச்சி. மாறும். மெல்ல மெல்ல நான் எதிர்பார்க்கும் மாற்றங்களை அவர்களால் கொண்டுவர முடியும்.
புதிது புதிதாக திறமையான இளைஞர்கள் சினிமாவிற்குள் வருகிறார்கள். சாதிக்கிறார்கள். ஒரு நாயகனுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வரைமுறைகள் மாறி வருகிறது என்று நினைக்கிறீர்களா?

ஹீரோ என்ற பதத்தையே எடுத்துவிட்டு பேசலாம். ஒரு படத்திற்கு ஹீரோ என்று ஒன்று இருக்கவே கூடாது. கதைதானே ஹீரோ. பாத்திரங்களின் முக்கியத்துவம்தான் மாறும். ஹீரோ ஓரியன்டட், ஹீரோயின் ஓரியன்டட் என்று படங்கள் இருக்கிறதா என்ன? சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் கதைகளில் அப்படி இருக்கலாம். அதனால் அந்த ஹீரோ ஹீரோயின் என்ற பதத்தையே நீக்கிவிட்டு படம் பண்ண பாருங்கள். வீட்டில் ஹீரோ என்றால் அப்பாவை சொல்வீர்களா, ஹீரோயின் என்றால் அம்மாவா? எல்லாவற்றிற்கும் ஒரு ரோல் இருக்கிறது இல்லையா? குடும்ப உறவுகளை பார்த்தாலே உங்களுக்கு இது தெரிந்து போகும். எல்லாருமே ஹீரோதான் எல்லாருமே ஹீரோயின்தான். பொறுப்புகள் மாறும் அவ்வளவுதான். சினிமாவையே பாருங்கள். டைரக்டர் இருக்கிறார், டைரக்டர் ஆஃப் போட்டோகிராபி, ஆர்ட் டைரக்டர் என்று எத்தனை பேர் இருக்கிறார்கள் பாருங்கள். எனவே ஹீரோ என்ற பதமே இங்கே தவறாக பயன்படுத்தப் படுகின்றது. அந்த ஹீரோ ஒரு வயதான கிழவியாகவோ, ஒரு உடைந்து போன கண்ணாடியாகவோ, ஒரு சிறுவனாகவோ கூட இருக்கலாம். பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் சைக்கிள்தானே ஹீரோ. பதேர் பாஞ்சாலியில் யார் ஹீரோ? எனவே அந்த ஹீரோ, யார் ஹீரோ என்ற விஷயத்திற்குள்ளேயே போகாதீர்கள். அப்படி சென்றால் உங்களால் ஒரு நல்ல படத்தை எடுக்கவே முடியாது.

மாற்று சினிமா என்ற பதம் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. மாற்று சினிமா என்றால் என்ன? சினிமா எதிலிருந்து மாறவேண்டும்?

பார்வையாளனுக்கு தமிழ் சினிமா மேல் கோபங்களோ, குறைபாடுகளோ, திருப்தியின்மையோ இருந்து, அந்த பார்வையாளன் படைப்பாளியாக வரும்போது அந்த கோபத்தை அவன் தீர்த்துக்கொள்கிற சினிமா தான் மாற்று சினிமாவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அது மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒவ்வொரு நாட்டிலும் மாற்று சினிமா உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கு இல்லையா? அவன் சினிமாவின் மீது அவனுக்கு என்ன குறைகள் இருக்கின்றது என்று பார்க்க வேண்டும். அதை நீக்கி விட்டு அவன் ஒரு படம் எடுத்தால் அதுதான் மாற்று சினிமா. மாற்று சினிமா இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. என் அறிவிற்கு எட்டியவரை இல்லை. எனவே எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் வாங்கலாம் என்று நினைக்காதீர்கள். நானே பலரிடம் பல விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவரைதான் என்னால் சொல்ல முடியும். அதில் சில தவறாகக் கூட இருக்கலாம்.

நல்ல சினிமாக்கள் வளரனும் என்று நாம் பேசும்போது, நல்ல சினிமா பற்றிய புரிதலும், அறிவும் பார்க்கும் பார்வையாளனுக்கு இருக்க வேண்டும் இல்லையா?

நல்ல சினிமாவை புரிந்துவிட்டால் நம் சினிமாவை பார்த்து அவனுக்கு கோபம் வரும். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னால் உங்களுக்கு கோபம் வரும் இல்லையா? சொன்னதையே ஏன் திரும்ப திரும்ப சொல்ற என்று கேட்பீர்கள் அல்லவா? அந்த கோபம்தான் வரும். இந்தியாவிலேயே உருவாகக்கூடிய நல்ல சினிமாக்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு இங்குள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதே போல் எலைட் சொசைட்டிக்கு எட்டிய உலக சினிமாக்கள் எல்லாருக்கும் போய் சேர வேண்டும். ஒரு காலகட்டத்தில் உலக சினிமாக்களை பார்க்க எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. இப்போது எல்லா நாட்டு படங்களையும் பார்க்கும் வாய்ப்பும் இருக்கின்றது. ஆனால் இப்போதும் வாய்ப்பில்லாதவர்களுக்கு அந்த படங்கள் போய் சேர வேண்டும். கிராமப்புறங்களுக்கும் அந்த வாய்ப்பு போய் சேரவேண்டும். அடுத்து முக்கியமான விஷயம், மக்கள் மக்கள் என்று நாம் பிரிக்கக் கூடாது. அதில்தான் நாமும் ஒருவர். இன்று படம் பார்க்கும் பார்வையாளர்களிடம் இருந்துதான் நாளைய நாயகர்களும், கலைஞர்களும் வரப்போகிறார்கள். மக்களுக்கு இது பிடிக்கிறது மக்களுக்கு இது பிடிக்கவில்லை என்று சினிமாக்காரர்கள் பேசும்போது எனக்கு சிரிப்பாக இருக்கும். நாமும் மக்களில் ஒருவர்தானே.

கேயாஸ் தியரி என்று சொல்வார்கள். மேலைநாடுகளில் இன்றும் நாடகக் கலை முதலிடத்தில் வைத்து போற்றப்படுகின்றது. தியேட்டர் என்னும் கல்ச்சருக்கு மகத்தான இடம் கொடுத்திருக்கிறார்கள். சினிமா எல்லாம் அடுத்தடுத்த இடங்களில் தான் இருக்கிறது. இந்தியாவிலும் நாடகக்கலை இருக்கிறது. அழியவில்லை. தமிழகத்திலும் இருந்தது. அங்கிருந்துதான் பெரும் கலைஞர்கள் எல்லாம் வந்தார்கள். அதே போல் உலகம் முழுவதும் இலக்கியத்திற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வேறெங்கும் உதாரணம் தேட வேண்டாம். கேரளாவிலேயே இலக்கியம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இலக்கியவாதிகளுக்கு பெரும் மதிப்பு அளிக்கப்படுகிறது. மக்களும் அரசாங்கமும் அவர்களை அவ்வளவு மதிக்கிறார்கள். இன்று நம் தமிழகத்தில் நாடகக்கலையும் இலக்கியமும் எந்த இடத்தில் உள்ளது என்று யோசித்து பாருங்கள். தமிழ் சினிமாவிற்கு உதவக் கூடிய, வழிநடத்தக்கூடிய இரண்டு கலைகள் இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று யோசித்து பாருங்கள். முந்திய காலத்தில் இருந்தவாறு இப்போதும் இருக்கிறதா, இல்லை அழிந்துவிட்டதா என்று யோசித்து பாருங்கள். இதையெல்லாம் தாண்டி ஒருவன் சினிமாவிற்கு வந்து நல்ல படம் எடுக்க வேண்டுமென்றால் அவன் நல்ல இலக்கியம் படித்திருக்க வேண்டும். நல்ல படங்களை பார்த்திருக்க வேண்டும். இது எதுவுமே இல்லையென்றாலும் கூட, அவனுக்கு நம் சினிமாவின் மேல் ஒரு கோபம் இருக்க வேண்டும். ‘என்னடா இன்னும் டூயட் பாடுகிறார்கள், எப்போது நிறுத்துவார்கள்’ என்ற கோபம் இருக்க வேண்டும். பாடல்கள் நமது வாழ்க்கைக்கு தேவைதான். நான் இசைக்கு எதிராக பேசுவதாக தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பெரும் இசை மேதைகள் நம்மிடையே இருக்கிறார்கள். அந்த இசையெல்லாம் தனி ஆல்பமாக வரலாம். அவை நமக்குத் தேவை. ஆனால் அவற்றை படங்களில் தவிர்க்கலாம்.

இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நான் நன்றாக எடுக்கப்பட்ட சண்டைப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். சினிமாவில் நிறைய வகைகள் இருக்கின்றது. அதற்கு ஒரு அடிப்படை இலக்கணம் இருக்கிறது. அதன்படி எடுத்தாலோ, அதை மீறியும் நேர்த்தியாக எடுத்தாலோ நிச்சயம் பார்த்து ரசிக்கலாம். வரும் தலைமுறை இப்போது எடுக்கப்பட்ட படங்களை பார்த்து, ‘அய்யோ என்னடா இவ்வளவு மோசமான படங்களை இவர்கள் எடுத்திருக்கிறார்களே’ என்று நம்மை நினைத்துவிடக்கூடாது. அதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது சிறு வயதிலேயே உலகம் தெரிந்த தலைமுறை வளர்கிறது. அவர்கள் சிறுவயதிலேயே உலக சினிமாக்கள் பார்க்கிறார்கள், உலக சினிமா பற்றிய புரிதல் இருக்கிறது. அவர்கள் நம் படங்களை பார்த்து, இவ்வளவு மட்டமான படங்களையா தமிழில் எடுத்திருக்கிறார்கள், அதையுமா ரசித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிடக்கூடாது. பழைய படங்களை பார்க்கும்போது நமக்கு சிலநேரங்களில் அப்படி தோன்றுகிறது அல்லவா, பாடல்களை பார்த்து, வசனங்களை பார்த்து, துருத்திக்கொண்டிருக்கும் பிராமணிய சொல்லாடலை பார்த்து இப்போது நாம் கேள்வி கேட்டு சிரிக்கிறோம் இல்லையா, அது நம் தலைமுறைக்கு வந்துவிடக்கூடாது.

நீங்கள் உங்கள் வீடுகளில் உங்கள் தங்கையை தங்கச்சி என்றா கூப்பிடுகிறீர்கள். பேர் சொல்லித்தானே அழைப்பீர்கள். ஆனால் இப்போதும் ஹீரோ தன் தங்கச்சியை தங்கச்சி என்று அழைக்கிறான். அவ்வளவு முட்டாளா படம் பார்ப்பவர்கள்? இந்த மாற்றங்களை கூட நாம் இன்னும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த நிலையில் பெரிய பெரிய மாற்றங்களை நாம் நம் சினிமாக்களில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

பல முக்கியமான படங்களில் பிரிண்ட்கள் கூட இப்போது நம்மிடம் இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு ஆர்கைவ்வின் முக்கியத்துவம் என்ன?

நிச்சயம் ஒரு ஆவணக்காப்பகம் நமக்குத் தேவை. நல்லதோ கெட்டதோ எல்லா படங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறதே. வீட்டில் கூட வயதானவர்களை ஹோமிற்கு அனுப்பி விடுகிறீர்கள். அப்படி நினைத்தாவது பழைய படங்களை ஒரு ஹோமிற்கு அனுப்புவது போல் ஒரு ஆவணக்காப்பகம் உருவாக்கி அங்கு அனுப்பலாமே.

உதிரிப்பூக்கள் படத்தில் இறுதிக்காட்சியில் விஜயன் பாத்திரம் மனம் திருந்திய நிலைக்கு வந்துவிடுகிறான். அந்த நிலையில் அந்த பாத்திரத்திற்கு அந்த முடிவு தேவைதானா?
இறுதிக்காட்சியில் மட்டும் பார்க்காதீர்கள். அவனை இன்னும் நன்றாக ஸ்டடி செய்து பார்த்தால் அவனை கெட்டவன் என்று கூட சொல்லமுடியாது. எமோஷனலாக சில தவறுகள் செய்தானே தவிர அவன் கெட்டவன் கிடையாது. முறைப்படி மாமனாரிடம் பெண் கேட்டான். வாத்தியார்களிடம் ஸ்ட்ரிக்டாகத்தான் இருந்தான். மண்டபத்தில் அவன் இரு குழந்தைகளும் கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கு முந்தைய காட்சியில்தான் இரு குழந்தைகளும் தன் வீட்டிற்கு வந்து பசிக்குது என்று சொன்னதாக அவன் மனைவியின் தங்கை சொல்லியிருப்பாள். அந்த எண்ணத்திலேயே வந்தவன், ஏதோ ஒரு மண்டபத்தில் தன் குழந்தைகள் கடலை சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்தவுடன், மனம் தாங்காது அவர்களை தூக்கிக் கொள்வான். அவனிடம் மனிதாபிமானமும் இருக்கிறது. எல்லா மனிதர்களிடமும் இந்த கலவை இருக்கிறது. முழுக்க நல்லவனும் இல்லை. முழுக்க கெட்டவனும் இல்லை. இல்லையா? அதற்காக க்ளைமேக்சில் நாலு அடி வாங்கி நான் திருந்திட்டேன் என்றும் சொல்ல முடியாது. எல்லாரிடம் இரண்டு குணங்களும் இருக்கின்றது. அந்தந்த நிலையில் எது தூக்கலாக இருக்கின்றதோ அதைச் சொல்லி அவர்களை வகைப்படுத்தி விடுகிறோம்.
ஊர் மக்கள் கையில்தான் மாற்றம் கொண்டு வரும் முடிவு இருக்கிறது. சினிமா மாற்றமோ, அரசியல் மாற்றமோ, சுய மனிதனின் மாற்றமோ எல்லாம் மக்களின் கையில்தான் இருக்கின்றது. மக்களின் பலநாள் கோபம் அந்த கதாப்பாத்திரத்தின் மேல் அவ்வாறு வெளிப்பட்டது.

சமீபத்தில் இரான் இயக்குனர் மக்சன் மக்மல்பல்ஃப் சென்னை வந்திருந்தபோது, ஈரானில் 15 லட்சத்தில் படங்கள் பண்ணுவதாக சொல்லியிருந்தார். அதுபோல் படம் பண்ணுவது தமிழ் சினிமாவில் சாத்தியமா?

நிச்சயம் பண்ண முடியும். அதைத்தாண்டி அவர் ஒரு சிறுவனை பற்றி எழுதியிருந்தார் நினைவிருக்கிறதா? பிச்சை எடுத்த காசில், ஜுஸ் வாங்கி, கால் மேல் கால் போட்டு, சுற்றியுள்ளவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக அந்த சிறுவனை பற்றி எழுதியிருந்தாரே, அதைப் பற்றியே இங்கே ஒரு கதை பண்ணியிருக்கலாமே. யாராவது செய்தார்களா என்ன? அதே சாலிகிராமத்தில் நடந்த சம்பவம்தானே. அவனைச்சுற்றியே ஒரு கதை இருக்கும், அவனை பின்தொடர்ந்து போய் பாருங்கள் என்று சொல்லியிருந்தாரே, யாராவது போய் பார்த்தார்களா? இதை வைத்து குமுதம் பொங்கல் மலரில் வாசனை என்று ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுவனை பின்பற்றி கதை பண்ணவே யாரும் முயலவில்லை. பின் நம் சினிமா ஈரான் சினிமா போல் மாற வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள். பின் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஒருவனுக்கு வந்தாலே, எந்த துறையாக இருந்தாலும், எல்லாவற்றையும் தூக்கிப் போட தயாராகி விடுவார்கள். அதனால் குறைந்த சம்பளத்தில் லட்சியத்தோடு இங்கே வாழ வேண்டுமானால், கக்கன் காமராசர் மாதிரி வாழ்ந்து சாக வேண்டும், நாம் சமூக சேவை செய்ய வரவில்லை என்று எல்லாரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் அது. ஒரு சிறிய அமைப்பாவது தொடர்ந்து சிறிய அளவில் அவர் சொன்னது போல் செய்ய முயல வேண்டும். பணமும் முக்கியம்தான். தமிழ் ஸ்டூடியோவிற்கு கூட நீங்கள் பேஸ்புக்கில் பணம் திரட்டுகிறீர்கள்தானே. எனவே பணமும் முக்கியம்தான். ஆனால் பணத்தை வைத்து எதையும் எடை போட ஆரம்பித்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே ஒரு சிறிய அமைப்பு இதுபோல் சிறிய படங்கள் தர முயற்சிக்கலாம். வாழ்வாதாரத்திற்கான பணம் திரும்ப வந்தால் போதும் என்ற தைரியத்தோடு இருந்தால் இதுபோன்ற படங்களை எடுக்கலாம். அப்போதுதான் ஒரு அமைப்பு உருவாகும். இதற்காக வேறு எதையும் தியாகம் செய்ய வேண்டாம். குடும்பத்திற்கு செய்ய வேண்டியவற்றை நீங்கள் செய்ய வேண்டும். அதற்கு பணம் தேவை. பணத்தின் தேவையை நீங்கள் உணர வேண்டும். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் உங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டால், உங்கள் குடும்பத்திற்கு உண்மையாக இருக்க முடியும். ஏற்றுக்கொண்ட தொழிலுக்கும் உண்மையாக இருக்க முடியும்.

சில படங்கள், குறிப்பிட்ட சமூகத்தை சாடுவது போல், புண்படுத்துவதைப் போல் வருகின்றது. ஒரு படைப்பாளி, ஒரு படைப்பை படைக்கும்போது, என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்?

பிரம்மாண்டம் என்பது பட்ஜெட்டில் கிடையாது. மனித உணர்வுகளில் இருக்கிறது. அதுதான் மிகப்பெரிய பிரம்மாண்டம். எத்தனை கோடிகளில் படமெடுத்தாலும் கூட, மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று உலகத்தில் கிடையாது. அந்த நல்ல உணர்வுகளுக்கு தீனி போடுகிற படங்கள், அதை வளர்க்கும் படங்கள், நல்ல படங்கள். மற்றபடி நான் சாதி, மதம் என்று பேச விரும்பவில்லை. மனிதர்களை மனிதர்களாக பாருங்கள். எந்த மொழி பேசுனா என்ன, எந்த நாட்டுல இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன, மனுசன மனுசனா பாருங்க. அதைத்தான் என்னால் சொல்ல முடியும்.

மற்ற நாடுகளைப் போல், நம் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினைகள், சினிமாவாக மாறுவதில்லையே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

முதலில் இங்கிருக்கும் சினிமா, சினிமாவாக மாறட்டும். அதன் பிறகு மற்ற பிரச்சினைகளை சொல்லட்டும். பிரச்சினைகளை சொல்ல படமெடுக்க இது டாக்குமெண்டரியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை. ஆனால் ஒன்று. இந்த விஷயத்திற்காக படமெடுத்தேன் என்று யாரும் சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது. உப்பு உணவிற்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்குத் தெரியும். அது குறைவாக இருந்தாலும் சாப்பிட முடியாது, அதிகமாக இருந்தாலும் சாப்பிட முடியாது, இல்லாமல் இருந்தாலும் சாப்பிட முடியாது. எந்த அற்புதமான உணர்வுகளும், மெசேஜ்களும் உப்பு போல இருக்க வேண்டும். உப்புதான் கண்ணுக்கு தெரியாது. ஆனால் தேவையான ஒன்று. அது தெரியக்கூடாது. உணரப்படவேண்டும் பார்வையாளனால்.

உங்களைப் பொறுத்தவரையில் நல்ல சினிமா என்றால் அதை எப்படி வரையறுப்பீர்கள்?

எனக்கு பிடித்த சினிமா நல்ல சினிமா. இப்படித்தான் எனக்குத் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சினிமா என்ற அதிஅற்புதமான ஊடகம் அதன் முழு வீரியத்திற்கு பயன்படுத்தப் பட்டிருக்கின்றதா?

ரேயை தவிர்த்து சிலர் முயன்றிருக்கிறார்கள். இது மக்களுக்கான சினிமா என்பதை மறந்துவிடக் கூடாது. நமக்காகத்தான் சினிமா. நெல், அரிசி போன்றது இது. எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். பல நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பின்தொடரப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு முழுமையான மாற்றம் என்பது இன்னும் வரவேயில்லை.

அடுத்து நீங்கள் படம் செய்யும் முயற்சியில் இருக்கிறீர்களா? எந்த மாதிரியான படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நான் முயற்சி செய்வதே கிடையாது. எப்போதும் செய்ததும் கிடையாது. எண்ணம் இருக்கும். திட்டம் இருக்கும். யாராவது செய்துதரச்சொல்லி வந்தால் செய்து தருவேன். அவ்வளவுதான். யாரையும் நான் தேடிப்போனது கிடையாது. எனது இயல்பு அப்படி. அப்படி எனக்கு அமைந்துவிட்டது. சினிமாவும் என்னை தேடி வந்ததுதான். கதாசிரியர் வேலையும் தேடி வந்ததுதான். இயக்குனர் இடமும் தேடி வந்ததுதான். எதையும் நான் தேடிப்போனதில்லை.