இலங்கையின் கொலைக்களம் ஆவணப்பட சாட்சியம்- மௌனமாக்கப்பட்ட குரல்கள்

தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகத்தில் இருந்து வெளியாகவிருக்கும் யமுனா ராஜேந்திரனின் நூலில் இருந்து ஒரு கட்டுரை.

இலங்கையிலிருந்து வெளியேறி மேற்கில் வாழும் ஊடகவியலாளரான சுனந்த தேசப்பிரிய எழுதிய இங்கையில் ஊடக சுதந்திரத்தின் நிலைபற்றி தனது பிரகீத்திற்காக எழுப்பப்படும் சந்தியாவின் குரல் (எழுநா பதிப்பகம் : 2012) நூலில் மகிந்த ராஜபக்சே இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின் கொல்லப்பட்ட, காணாமல் போக்கப்பட்ட, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ், சிங்கள ஊடகவயிலாளர்கள் தொடர்பான பட்டியல்களைத் தனித்தனியே பதிவு செய்திருக்கிறார்.

சுனந்த சொல்கிறார் : ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை விளங்குகிறது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் பலாத்காரமாக மூடவைக்கப்பட்டுள்ளன. தீ வைக்கப்பட்டுள்ளன. தேசத்திற்கு எதிரானவை என அடையாளமிடப்பட்டுள்ளன.

18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐயாத்துரை நடேசன், பலனதராஜா ஐயர், கே. எஸ். ராஜா, மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட் டி சொய்சா, தேவிஸ் குருகே, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜா, நடராஜா அற்புதராஜா, ஐ. சண்முகலிங்கம், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சந்திரபோஸ் சுதாகரன், சம்பத் லக்மால் சில்வா, லசந்த விக்ரமசிங்க, செல்வராஜா ரஜீவர்மன் போன்றவர்கள் இவர்கள்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். இத்தாக்குதல்களின் எழுச்சி காரணமாக 11 சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். 7 பேர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். 2006 இன் முற்பகுதியிலிருந்து இதுவரை 30 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் இக்பால் அத்தாஸ், மட்டக்களப்பு சுதந்திர ஊடக வியலாளர் புத்தசீலன் பிரதீபன், தினமினவின் உதவி ஆசிரியர் சனத் பாலசூரிய, சுனந்த தேசப்பிரிய, ராவய பத்திரிகையின் திலக் கோதாகொட, பெயர் குறிப்பிடப்படாத நெத் எவ்.எம். வானொலியின் ஊடகவியலாளர், பொட்டம் லைன் மற்றும் ஏஷியன் ட்ரிபியூன் ஆகியவற்றின் ஊடகவியலாளர் ருவன் வீரகோன், சியத்த பத்திரிகையின் பிரசன்ன பொன்சேக்கா, ரிவிர பத்திரிகையின் திஸ்ஸ ரவீந்திர, லக்பிம பத்திரிகையின் மிஹிரி பொன்சேக்கா, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அமல் சமந்த, உதயன் பத்திரிகையின் ஆசிரியர் சபை, லங்கா கார்டியன் இணையத்தளத்தின் வீமன், மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.சரவணமுத்து, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் போத்தல ஜயந்த லக்பிம ஆங்கில பத்திரிகையின் சமன் சமரக்கொடி, சண்டேலீடர் பத்திரிகையின் பெட்ரிக்கா ஜயன்ஸ், முன்சா முஸ்டாக், சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் துருத்து சந்திரசேகர ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

2006 இலிருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மீதான இம்சைகள் அதிகரிக்கவாரம்பித்தன. படுகொலைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தணிக்கை என்பன அமுலாக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு உலகில் அபாயம் நிறைந்த பிரதேசங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் ஆனது. ஆகக் குறைந்தது 3 ஊடகவியலாளர்கள், உட்பட 11 ஊடகப் பணியாளர்கள் 2006 இன் மே மாதத்திலிருந்து அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஊடகவியலாளர் உட்பட 3 ஊடகப்பணியாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடப்பட்டுத் தப்பிய ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவுகள் என ஐம்பது பேர் வரையிலான தமிழ், சிங்கள ஊடகவிலாளர்கள் தற்போது மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள். இவ்வாறு ஜெர்மனியில், வாழும் பாசனா அபேவர்த்தனா, நோர்வேயில் வாழும் லோகீசன், நியூயார்க்கில் வாழும் சோனாலி சமரசிங்க என மூன்று ஊடகவியலாளர்கள் பற்றிய ஆவணப்படம் பீட்டி ஆர்ன்ஸ்டட் இயக்கிய மௌனமாக்கப்பட்ட குரல்கள் (Silenced Voices : 2012). நோர்வே நாட்டு ஆவணப்பட இயக்குனரான பீட்டி ஆர்ன்ஸ்டட் ஏற்கனவே எனது மகள், பயங்கரவாதி எனும் பெயரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிப்பெண்கள் குறித்த ஆவணப்படமொன்றை இயக்கியவர்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்ட சன்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்ரமசிங்கவின் துணைவியார் சோனாலி விக்ரமசிங்க அவரது கணவரின் மரணத்தின் பின் இலங்கையை விட்டு வெளியேறி நியூயார்க்கில் அரசியல் அடைக்கலம் பெறுகிறார். இலங்கா இன்டிபென்டன்ட எனும் செய்தி இணையதளத்தை அவர் அங்கிருந்து ஆரம்பிக்கிறார். அதே ஆண்டில் இலங்கையிலிருந்து வெளியேறும் பாசனா அபேவர்த்தனா தனது துணைவியாருடன் ஜெர்மனியில் அடைக்கலம் கோருகிறார். அதே ஆண்டு மே 18 முள்ளிவாய்க்கால் பேரழிவின் தடயங்களைக் காட்சிப்படுத்திய தமிழ் பத்திரிக்கையாளர் லோகீசன் சிங்கள ராணுவ வேட்டைக்குத் தப்பி தனது கணனி, ஒளிப்பதிவுக் கருவி போன்றவற்றைக் கடற்கரை மணலில் புதைத்துவிட்டு தலைமறைவாக தமிழகம் வந்துசேர்கிறார்.

தமிழகம் வந்து சேர்ந்த லோகீசனை பீட்டி ஆர்ன்ஸ்டட் சந்தித்து, ஜெர்மனியில் வாழும் பாசனா அபேவர்த்தனாவின் உதவியுடன் நோர்வேயில் அவருக்கு அரசியல் அடைக்கலம் பெற்றுத்தர லோகீசன் நோர்வே வந்து சேர்கிறார். நியூயார்க்கில் வாழும் சோனலி சமரசிங்கே தனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டியும் ஐக்கிய நாடுகள் சபையின் கதவையும், நியூயார்க் இலங்கை அரசுத் தூதரகத்தின் கதவையும் தட்டிக் கொண்டிருக்கிறார். இவ்வாறான மூன்று ஊடகவியலாளர்களின் பயணம் போல அமைந்திருக்கும் ஆவணப்படம் மௌனமாக்கப்பட்ட குரல்கள்.

2011 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்குப் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் பீட்டி ஆர்ன்ஸ்டட் அங்கு ஏழு முகாம்களில் அடைக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்ட மக்களைப் பற்றி தனது வழிகாட்டி சொல்லத் தெரிந்து கொள்கிறார். மிஞ்சியிருக்கும் ஒரே முகாமைப் பார்வையிட முடியாது ராணுவத்தினர் சுற்றி வளைத்திருக்கிறார்கள். குண்டுவீச்சில் காயம்பட்டு கால் கூ+ம்பிப் போன சிறுவன், கால்கள் ஊனமாகிப் போன பெண்கள் என ஒரு சிலரை மட்டுமே அவரால் பார்க்க முடிகிறது. யுத்தம் நடந்து முடிந்த வடக்கில் 3 இலட்சம் ராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதையும் அப்பிரதேச மக்கள் யாருடனும் ஊடகவியலாளர் எவரும் பேசமுடியாத நிலைமையையும் அவர் கண்ணுறுகிறார்.

பீட்டி ஆர்ன்ஸ்டட் இலங்கையின் வடக்கிலிருந்து ஜெர்மனிக்கு வருகிறார். பாசனா அபேவர்த்தனாவும் அவரது தமிழ் பெண்மணியான துணைவியாரும் அங்கு அரசியல் அடைக்கலம் கோரியிருக்கிறார்கள். ஜேடிஎஸ் என அழைக்கப்பெறும் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் எனும் அமைப்பின் தோற்றுனர் பாசனா அபேவர்த்தனா. சேனல் நான்கின் இலங்கையின் கொலைக்களங்கள்; குறித்த மூன்று ஆவணப்படங்களுக்கான ஒளிப்பட ஆதாரங்களை அவரும் அவரது நண்பர்களுமே திரட்டித்தருகிறார்கள். குறிப்பாக இலங்கை இராணுவத்தினரால் நிர்வாணப்படுத்தப்பட்டுக் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லபட்படும் ஒளிப்படங்களை இந்த இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பே சேனல் நான்கு தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தது. பாசனா அபேவர்த்தனா இரண்டு காரியங்கள் செய்கிறார். போர்க்குற்ற ஆதாரங்களை இலங்கையிள்ள தனது தொடர்புகளின் வழி அவர் திரட்டினார். மரண அச்சுறுத்தலுக்கு ஆளான தமிழ், சிங்கள ஊடககவியலாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி மேற்குநாடுகளில் அரசியல் அடைக்காலம் பெறுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

ஜெர்மனியில் அரசியல் அடைக்கலம் பெற்றாலும் தங்குவதற்கு நிரந்தரமான ஒரு இருப்பிடம் இல்லாத சூழ்நிலையில் பாசனா தம்பதிகளை பீட்டி சந்திக்கிறார். ஜெர்மன் பேனா அமைப்பினருடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த பாசனா தம்பதியினர் பகலில் பூங்காக்களிலும் இரவில் ஒரு மனித உரிமை அமைப்பின் அலுவலகத்திலும் தமது வாழ்வைக் கழித்தபடி இருக்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் தமிழ் ஊடகவியலாளர் லோகீசன் இலங்கை ராணுவத்திறகுத் தப்பி தமிழகத்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது மின்னஞ்சலில் இருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைத் திரட்டுவதற்கெனவும், அவரது மேற்குலகப் பயணத்திற்கான ஏற்பாட்டுக்கெனவும் பீட்டி தமிழகம் வருகிறார். பீட்டி இந்திய உளவுத்துறையால் தொடரப்படும் நிலையில், லோகீசனிடம் இருந்து பெற்ற ஆதாரங்களை அழித்துவிட்டு அவரை நோர்வே போகுமாறு பணிக்கிறார் பாசனா.

18 மாதங்களின் பின், பல்வேறு முயற்சிகளின் பின், லோகீசன் நோர்வே வந்து சேர்கிறார். நோர்வே பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி நாட்கள் குறித்தும், பயங்கரவாதம் மற்றும் இனக்கொலை குறித்தும் உரையாற்றுவதற்காக பாசனாவும் நோர்வே வந்து சேர்கிறார். பீட்டி, லோகீசன், பாசனா மூவரும் சந்திக்கின்றனர். லோகீசன் தனது ஆதாரங்களைத் திரையிடுகிறார். இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு தாயின் உடலின் முன்பு அமர்ந்து ஒரு சின்னஞ்சிறுவனும், அவனது தமக்கையும் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். 'நாங்கள் அனாதையாக ஆகிப் போனோமே' என அச்சிறுமி அழத்துவங்குகிறாள். லோகீசன் விம்மத்துவங்க, பாசனா கண்களைத் துடைத்துக் கொள்கிறார். பீட்டி மெதுவாக லோகீசனின் தோளை ஆதரத்துடன் தொடுகிறார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வந்திருக்கறார். அவரது உரையைச் செவிமடுக்க பத்திரிக்கையாளரான சோனாலி சமரசிங்கே செல்கிறார். அவரது கணவரை மிரட்டியவர் மகிந்த ராஜபக்சே. அவரது கநைக்குக் கரணமானவர் என நம்பப்படுபவர் ராஜபக்சே. சோனாலி பார்வையாளர் காலரியில் அமர்ந்து கண்ணாடியினூடே மகிந்த தனது சகாக்களுடன் ஏதோ பேசிச் சிரிப்பதை வெறுப்புடன் பார்க்கிறார். மகிந்த உரையாற்றுகிறார். @நாடு பயங்கரவாத்தைத் தோற்கடித்து சமாதான பூமியாக இருக்கிறது@ என்கிறார் மகிந்த ராஜாக்சே. பத்திரிக்கையாளர் எனும் அளவில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குக் காரணமான 58 ஆவது படைக்குழுவின் தளபதியான சவேந்திர சில்வாவைச் சந்தித்து ஒரு நேர்முகம் எடுக்க முயற்சி செய்கிறார் சோனாலி சமரசிங்கே.

நியூயார்க் இலங்கை ஸ்தானிகரலாயத்திறகு தொலைபேசி செய்கிறார் சோனாலி. சவேந்திரா சில்வா சந்திக்க ஒப்புகிறார். அடுத்த நாள் ஸ்தானிகராலயம் வரச் சொல்கிறார். அடுத்த நாள் சோனாலியின் தொலைபேசிக்கு அவர் பதில் சொல்வதில்லை. ஸ்தானிகராலயம் செல்கிறார் சேனாலி. சவேந்திர சில்வா அங்கு இருப்பதில்லை. சவேந்திரா சில்வா சோனாலியைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார் என்கிற புரிதலுன் அங்கிருந்து வெளியேறுகிறார் சோனாலி. நியூயார்க் குடியிருப்பொன்றில் தனிமையில் வாழும் சோனாலி அந்நகரத்தின் தெருவிலுன்ள சிமென்ட் பெஞ்ச் ஒன்றில் தனித்து அமர்ந்திருக்கிற பிம்பம் நமக்குள் நிறைகிறது. அவரது கணவர் கொல்லப்படும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவரைச் சோனாலி கணவராகக் கரம்பிடித்தார் என்பதும் அப்போது நமக்கு ஞாபகம் வருகிறது.

இலங்கை, தமிழகம், ஜெர்மனி, நோர்வே, நியூயார்க் எனப் பயணம் செய்திருக்கும் இந்த ஆவணப்படம் உலகெங்கிலும் பரந்து வாழ்ந்துகொண்டிருக்கும், இலங்கை அரசு மற்றும் ராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் தாய்நாடு கடந்த ஆற்றாமையையும், நிரந்தரமற்று அலைவுற்றுக் கொண்டிருக்கும் தமது இருத்தலின் துயரையும் காத்திரமாக ஆவணப்படுத்தியிருக்கிறது.

ஆவணப்படத்தில் மேற்கத்தியப் பத்திரிக்கையாளர் ஒருவர் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவிடம் ஒரு கேள்வி கேட்கிறார். ‘போர்க்காலத்தின் இடையில் விமர்சனம் செய்கிற பத்திரிக்கையாளர்களை தேசத்துரோகிகள் என்றா சொல்கிறீர்கள்?' கோதாபாயாவின் பதில் தெளிவாக வருகிறது : 'ஆம்’. இதுதான் இன்றைய இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் ஊடக சுதந்திரத்தின் நிலை. உயிரையும் பணயமாக வைத்து இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் உலகின் மனசாட்சின் முன்பு வைத்திருக்கும் இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களின் தீரத்திற்கு நாம் தலை வணங்குவோம். இதுவே பீட்டி ஆர்ன்ஸ்டட்டின் மௌனமாக்கப்பட்ட குரல்கள் ஆவணப்படம் நமக்குச் சொல்லும் செய்தி. சத்தியத்தின் குரல் மௌனமாக்கப்பட முடியாதது.