உதிரிப்பூக்கள் – அம்ஷன் குமார்

புதுமைப்பித்தன் என்றால் அது எம். ஜி .ஆர் . நடித்த படத்தின் பெயர் என்ற மட்டில் தகவல் அறிவு கொண்டிருந்த தமிழ் கூறும் பரந்த நல்லுலகிற்கு மகேந்திரனின் உதிரி பூக்கள் (1979) வாயிலாக அவர் சிற்றன்னை என்கிற கதையை எழுதிய எழுத்தாளர் என்பது இரண்டாவது முறையாகத் தெரிய வந்தது. அதற்கு முன்னர் மாதம் ஒரு நாவல் என்கிற திட்டத்தின் கீழ் ராணி முத்து வெளியீடாக புதுமைப்பித்தனின் சிற்றன்னை புத்தகமாக வெளிவந்து எல்லா கடைகளிலும் தொங்கியது. ஒரு சில நாட்களிலேயே பல ஆயிரம் பிரதிகள் விற்ற புதுமைப்பித்தனின் கதை அதுதான் என்பதால் அதற்கு களன் அமைத்த ராணி முத்துவிற்கு தமிழ் வாசகர்கள் நிறைய கடமைப்பட்டவர்கள்
மகேந்திரன் ஏன் சிற்றன்னை கதையை உதிரி பூக்கள் படத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்கிற கேள்விக்கு சுலபமாக பதில் கூறிவிடமுடியாது. அவர் எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து எடுப்பதில் ஆர்வமுள்ளவர். முள்ளும் மலரும்--உமாசந்திரன், நண்டு--சிவசங்கரி, பூட்டாத பூட்டுகள்--பொன்னீலன் , சாசனம்—கந்தர்வன் என்று படக்கதைகளின் எழுத்தாளர்களுக்கு ஒரு பட்டியல் போடலாம். சிற்றன்னையில் தென்படும் ஒரு மெல்லிய இழையை மட்டும் உதிரி பூக்களில் காணமுடிகிறது. இரண்டிலும் சுந்தரவடிவேலு மையக் கதாபாத்திரம். கல்வித் தொழிலுடன் சம்பந்தப்பட்டவன். அவனுக்கு இரண்டாம் தாரம் உண்டு. இரண்டாம் தாரத்தின் கொடுமை இரண்டிலும் கிடையாது. `‘நீ நல்லதுன்னு நினைச்சு எதையாவது செய்வே. அது தகராறில் கொண்டு வந்துவிடும். ஜாக்கிரதை.`’என்கிற சிற்றன்னை வசனம் படத்திலும் கணவன் இரண்டாம் தாரத்திடம் முதல் தாரத்து குழந்தைகள் வளர்ப்பு பற்றிய உபதேசமாக வருகிறது.அதற்கு மேல் இரண்டிற்கும் எந்த உறவுமில்லை. . சிற்றன்னை கதை நகரத்தில் நடக்கிறது. உதிரி பூக்கள் கதை கிராமத்தில் நடக்கிறது. சிற்றன்னை புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்றுமல்ல. அவரது பேனா கிடாசிய கதைகளில் அதுவும் ஒன்று. ஆனால் ஏதோ ஒரு பொறி சிற்றன்னையிலிருந்து அவருக்கு கிடைத்து அதைக்கொண்டு முற்றாக வேறு ஒரு திரைக்கதை அமைத்து ரசவாதம் செய்கிறார் மகேந்திரன்.
மகேந்திரன் பெருவழக்குப்படங்களை எடுப்பவர். ஆனால் அவற்றைப் பற்றி அவருக்கு எப்போதும் நிறைய விமர்சனங்கள் உண்டு.ஆச்சர்யகரமாக அவர் ஆதர்சமாகக் குறிப்பிடுகிற இயக்குநர் சத்யஜித் ராய். ஆனால் மாற்றுப்படங்களை நோக்கி செல்லாதவர். வெகுஜனத்திற்கான பட சட்டகத்தினுள் மாற்றாக எந்தெந்த விஷயங்களை எல்லாம் கொண்டு வரலாம் என்று அவதானித்து செயல்பட்டிருப்பது அவரது படங்களிலிருந்து தெரிகிறது. உதிரி பூக்கள் படத்தைப் பொறுத்தவரை பெருவழக்குப் படத்தின் சட்டகத்தினுள் அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ஆன்டி ஹீரோ என்கிற கதாநாயக வில்லன் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. சிவாஜி கணேசன், எம்.ஆர். ராதா ஆகியோர் அந்த கதாபாத்திரத்தை தங்கள் பாணியில் அட்டகாசமாக செய்திருக்கிறார்கள். ஆனால் சுந்தரவடிவேலு கள்ளப் புன்னகை பூக்கிற கதாநாயக வில்லன். ஜிப்பா, வேஷ்டி ,மேல் துண்டு,கறுப்புக்குடை, நிதானமான நடை இவைதான் அவனது புருஷ லட்சணம். பெரும்பாலும் சாதுவாக பேசவும் நடந்து கொள்ளவும் செய்கிறான். ஆனாலும் அவனைப் பார்த்தால் அந்த கிராமமே நடுங்குகிறது. ஒரே முறைதான் மனைவி லட்சுமியை கன்னத்தில் அறைகிறான். மேலும் இரண்டு முறைகள் அவன் வன்முறையில் ஈடுபடுவது காட்டப்படுகிறது. மச்சினியுடன் க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் நடந்து கொள்வது அவன் அதுவரை செய்திராத ஒன்று. வன்முறை நிகழ்வுகள் எதுவும் விவரித்துக்காட்டப்படவில்லை. இருந்தாலும் வெறுக்கத்தக்கவனான சுந்தரவடிவேலுவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் விரும்பத்தக்க வகையில் செய்துள்ளார் நடிகர் விஜயன்.

பள்ளிக்கூடத்தின் மானேஜர் என்பதால் அந்த கிராமத்தின் பெரும் வி ஐ .பி யாக அவன் விளங்குகிறான். கல்வியறிவற்றவர்களிடமும் ஏழைகளிடமும் பள்ளி ஆசிரியர்களான சம்பள வேலைக்காரர்களிடமும் அதிகாரம் செலுத்துபவனாக உள்ளான்.சகல மனிதர்களையும் தனக்கு கீழானவர்களாக எண்ணுகிறான் . பெரும் பணக்காரனாக இல்லாவிடினும் பணத்தட்டுப்பாடு இல்லாதவன் . தன் மாமனாருக்கு அவரால் திருப்பித்தர இயலாத அளவிற்கு கடன் கொடுத்திருப்பவன். அவரை மிரட்டுவதற்கு அதையே ஆயுதமாகப் பயன்படுத்துபவன் . இவ்வாறெல்லாம் அவன் நிலப் பிரபுத்துவத்தின் அதிகார எச்சமாயும் பிரதிநிதித்துவப்பட்டுள்ளான்.கதாநாயக வில்லன் கொடுமைகள் புரிய வேண்டும் என்பது விதி. சுந்தரவடிவேலுவின் கொடுமைகள் வித்தியாசமானவை. அவனை கண்டிப்புக்காரனாகவும் கொடுமைக்காரனாகவும் ஒரே சமயத்தில் காட்டுகிறார் மகேந்திரன். நோயாளியாக இருந்த மனைவியுடன் பலகாலம் வாழ்க்கை நடத்தி யிருக்கிறான். ஆனால் மனைவியின் தங்கை செண்பகத்தின் மீது காமுற்றவுடன் தன் மனைவியை நிரந்தர நோயாளியாக ஜோடித்து இரண்டாவது மணம் செய்வதற்காக சாகசம் புரிகிறான். தனது மகனும் மகளும் சாப்பிடவில்லை என்பதையறிந்தவுடன் இரண்டாம் தாரத்தை கடிந்து கொள்ள ஆரம்பிக்கிற நல்ல தகப்பனான அவன் அதை மறுக்கிற மாதிரி உடனேயே அவள் உடல் மீது காமுறுகிறவனாக மாறிவிடுகிறான். எல்லோருக்கும் தீயவற்றை புரிகிறவனாக இருந்தும் கடைசிக்காட்சியில் தமிழ்ப்பட வில்லன்களைப் போல் ஒரேயடியாக திருந்தி விடுகிறான். `‘நீங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.ஆனா இன்னிக்கி உங்க எல்லோரையும் என்னைப் போல மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகளிலேயே பெரிய தவறு அதுதான்.’` என்று எவரும் எதிர்பார்த்திராத வகையில் முத்தான வசனம் பேசுகிறான்.
விஜயனின் அற்புதமான நடிப்பை தூக்கி நிறுத்துவது போன்ற காட்சியமைப்புகள் படத்தின் பலம். நோயிலிருந்து மீண்ட பெண்ணின் உடல் வாகினைப் பெற்றுள்ள அஸ்வினி யதார்த்தமான நடிப்பினைக் காட்டுகிறார்.சுகாதார அதிகாரியாக வரும் சரத்பாபுவும் யதார்த்தமான பாத்திரம். வேறுசில நடிகர்களும் யதார்த்தமாக உள்ளனர். ஆனால் படம் ரொம்பவும் யாதார்த்தமாகப் போய்விடக்கூடாது என்கிற உறுதியில் நகைச்சுவை பாத்திரங்கள் படத்தில் நிறைய உலவுகின்றனர். யதார்த்தமான வசனங்களுக்கிடையே மெலோடிராமா வசனங்களும் புகுந்து விடுகின்றன. சரத்பாபுவை ஆற்று மணலில் விஜயன் புரட்டி எடுப்பதாக ஒரு காட்சி வருகிறது. சிராய்ப்பு காயங்களுடன் எழுந்திருக்கும் சரத்பாபு ``என்னால உன்னைத் திருப்பி அடிக்கமுடியாதுன்னு நினைச்சுடாதே. உன் மனைவி லட்சுமி என்னாலே விதவையாக வேண்டாம்னு பார்க்கிறேன்.’` என்று பஞ்ச் வசனம் பேசுகிறார். தற்காப்பிற்காக திருப்பி அடித்தாலேயே லட்சுமி விதவையாகி விடுவாளா என்ன? அசோக்குமாரின் ஒளிப்பதிவு ஒரு பெருவழக்குப்படத்தை கலைப்பட அளவிற்கு உயர்த்திவிடுகிறது. விஜயனும் அஸ்வினியும் இரவில் படுக்கையறையில் பேசுகிற காட்சி. விஜயன் இரண்டாம்தார மணம் பற்றி பேசுவதைக் கேட்டு குமைந்த நிலையில் அஸ்வினி. அங்கு நிறுவப்பட்டுள்ள ஒளி அசாத்தியமானதாக உள்ளது. இன்றும் கூட பல படங்களில் படுக்கையறை காட்சிகளில் இத்தகைய அந்தரங்கமான உணர்வைத் தூண்டுகிற ஒளியைப் பார்க்க முடிவதில்லை.

நல்லவர்கள். அவர்களுக்கெதிரான வில்லன். அவனுக்கு தரப்படும் தண்டனை ஆகியவற்றை வழக்கமான பாணியில் இல்லாது படம் பிடித்துள்ளார் மகேந்திரன். கதை சொல்லல் புதிதாக இருந்தால் மட்டும் போதுமா? மதிப்பீடுகள் பழையனவாக இருக்கும் பட்சத்தில் புதுமையின் ஆற்றலை படக்காட்சிகள் இழந்து விடுகின்றன என்பதற்கு உதிரி பூக்கள் உதாரணம்.

சுந்தரவடிவேலுவிற்கு மரணதண்டனை தரப்படுகிறது.அவன் செய்த குற்றம் என்ன? கிராமத்தினர் அவன் செய்த குற்றங்களுக்கான ஒட்டு மொத்த தண்டனையாக அதைத் தருகின்றனர். அப்படியானால் அந்த குற்றங்கள் என்ன? மன உளைச்சலினால் அவன் மனைவி இறந்து போகிறாள். அதற்கு அவன் முற்றான காரணமல்ல. சுகாதார அதிகாரி ஊரை விட்டே போய் விடுகிறார் ஆசிரியரும் வேலையை ராஜிநாமா செயகிறார்.இதற்கான பழியையும் அவன் மீது சுமத்த முடியாது. முதல் மனைவி இறந்த பின் இரண்டாம் தாரத்தை ஏற்கிறான் அதுவும் குற்றமல்ல. அவளுடைய கல்யாணத்திற்கு முந்தினநாள் மச்சினி செண்பகத்தை நிர்வாணமாக்கிப் பார்க்கிறான். அதுதான் உண்மையிலேயே பெரிய குற்றம். ஆனால் அதற்கு மரணதண்டனை அநியாயமானது.இந்தியாவில் வன்புணர்ச்சியாளனுக்கு தரப்படும் அதிகபட்ச தண்டனை எழாண்டு சிறை வாசம். திரைப்படங்களில் பெரும்பாலும் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவன் அந்த இடத்திலேயே கொலை செய்யப்படுவான்.அதைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை மரண தண்டனைதான் என்று இன்று கோரிக்கை வைப்பவர்கள் நிறையபேர் உள்ளனர் . ஆனால் சுந்தரவடிவேலு செண்பகத்தை ‘கெடுக்கவில்லை’. எனவே திரைப்பட தர்மத்தின்படியும் அவனைக் கொல்ல முடியாது. மகேந்திரன் இங்கு மிகவும் வித்தியாசமாக யோசித்து செயல்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். செண்பகத்தை பலாத்காரம் செய்கிற மாதிரி காட்டி அவனைக் கொன்றிருக்கலாம்.ஆனால் பல படங்களை அது நினைவுறுத்தும். எனவே அவளை மானபங்கப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டுவிடுகிறார் அதற்கு பஞ்சாயத்து மரணதண்டனை தர முடியாது என்பதால் இதையும் சேர்த்து அவன் செய்த பல குற்றங்களுக்காக அவனுக்கு தண்டனை தரப்படுகிறது. அதையும் புதுமையாக சொல்ல விரும்புகிறார் மகேந்திரன்.
நீச்சலடிக்கத்தெரியாத சுந்தரவடிவேலு தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்வதாக ஆற்றுக்குள் முழ்கி இறக்கவேண்டும்.அவனும் மறுபேச்சின்றி அந்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அப்பொழுது அவனைப் பார்க்க அவனது குழந்தைகள் -–மகன்,மகள் ஆகியோர்-- வருகின்றனர். அவர்கள் நன்றாகப் படித்து நல்லவர்களாக வளர வேண்டும் என்று கூறுகிறான் அது மிகவும் நெகிழ்ச்சியான காட்சி. பின்னர் ஆற்றில் இறங்குகிறான் இப்படி ஒரு அபத்தமான,கொடூரமான தண்டனை நிறைவேற்றலுக்கு பிறகு கவித்துவமும் தத்துவார்த்தமுமான ஒரு தருணத்தைத் தருகிறார் மகேந்திரன்.

ஆற்றில் வெள்ளம் பாய்ந்து செல்வதை கேமரா காட்டுகிறது.சுந்தரவடிவேலு சுழலில் சிக்கித் திணறுவதையோ அவன் வேஷ்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதையோ நாம் பார்ப்பதில்லை. பொதுவாக படங்களில் அதுதான் நிகழும். ஆனால் இது மகேந்திரனின் படம். ஆற்றில் நீர் சென்று கொண்டே இருக்கிறது.அதைத்தவிர அங்கு வேறு எதுவும் தென்படவில்லை. இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் உலகில் நடக்கின்றன.அவற்றை யெல்லாம் தன்போக்கில் ஈர்த்துக் கொண்டு உலகம் சுழன்று கொண்டே இருப்பதை ஆற்றின் இடையறாத போக்கின் மூலம் உருவகப்படுத்துகிறார் இயக்குநர். அடுத்தாற்போல் மனித வாழ்வு மீண்டும் தொடங்கி விடுகிறது. குழந்தைகள் ஆற்றுப்படுகையில் உதிரிப் பூக்களாக தென்படுகிறார்கள். சுபம், வணக்கம்,பின்னணியில் ஒலிக்கும் நீதி போதனை அசரீரிக்குரல் என்பதையெல்லாம் தாண்டி இப்படியெல்லாம் ஒரு தமிழ் படம் முடிவுறுகிறது என்பதை காலத்திற்கும் வியந்து கொண்டே இருக்கலாம்.

Enemies of Promise என்று ஒரு புத்தகம்.சிரில் கனாலி எழுதியது. பல எழுத்தாளர்கள் தங்களிடம் பொதிந்துள்ள சக்தியை எதிர்பார்த்தபடி வெளிப்படுத்தாமல் வீண் அடித்துவிட்டனர் என்பது புத்தகத்தின் சாரம். மகேந்திரன் தான் கொண்டுள்ள திறமை அனைத்தையும் வெளிப்படுத்தமுடியாமல் போய் விட்டதாக தோன்றுகிறது. தானே வகுத்துக்கொண்டுள்ள எல்லையைத் தாண்டி ஒரு முறையேனும் மாற்று சினிமாவை நோக்கியோ இப்போதைய விடவும் மேலும் புரட்சிகரமாக பெருவழக்குப் படத்தின் வரையறையை மீறியோ அவர் சென்றிருக்கக் கூடாதா என்கிற ஆதங்கம் எழுகிறது.