தணிக்கை-அதிகாரம்-சுதந்திரம்

'சினிமா பாரடைசோ' படத்தில் ஒரு காட்சி வரும். திரைப்படத்தைத் தணிக்கை செய்வதற்காக உள்ளுர் பாதிரியார் வந்து அமர்ந்திருப்பார். ஆண்- பெண் முகங்கள் முத்தத்திற்காக நெருங்கும்போது அங்கே வெட்ட வேண்டும்-தணிக்கை செய்ய வேண்டும் என்பதைக் குறிக்க முகத்தை அறுவருப்பாக வைத்துக்கொண்டு பாதிரியார் கை உயர்த்தி விசிறி விசிறி மணியடிப்பார். ஸ்கீரினிங் ரூமில் சுற்றிக் கொண்டிருக்கும் பிலிம்ரோலில் அந்த இடத்தில் அடையாளத்திற்கு பேப்பர்துண்டு சொருகப்படும். இத்தாலியில் திரைப்படத் தணிக்கையை கத்தோலிக்க தேவாலயம் கையில் வைத்திருந்தது என்பதற்கு இது ஒரு திரைச்சான்று.
ஈரானில் எழுபதுகளில் அயதுல்லா கொமேனியின் தலைமையில் ஷா மன்னருக்கு எதிராகப் ஈரானியப் புரட்சி வெற்றிபெற்றவுடன் கலாச்சாரக் காவல்துறையின் மேற்பார்வையில் புனிதநூல் குரானது அடிப்படையில் திரைப்படத் தணிக்கைவிதிகள் கொண்டுவரப்பட்டன. ஷாவினது காலத்தில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் அழிக்கப்பட்டன. வீட்டில் இருக்கும் பெண் பிம்பம் மற்றும் அவர்களது கைகளின் அருகாமைக் காட்சி போன்றன திரைப்படங்களில் தடை செய்யப்பட்டன.

இந்தியாவிலும்-தமிழகத்திலும் இந்துத்துவ மற்றும் சாதியக் கலாச்சாரக் காவலர்கள் திரைப்படம்-இலக்கியம் இரண்டின் மீதும் நேரடியானதும் நேரடியல்லாததும் தணிக்கையைச் சுமத்தி வருகிறார்கள். சாதிய வன்முறை பற்றிய 'பன்டிட்குயின்' திரைப்படம், மதச்சார்பற்ற ஓவிய மரபாளர் எம்.எப்.குசைனது ஓவியங்கள், தமிழகத்தில் ஆதிக்க சாதிகளால் பெருமாள் முருகன் முதல் புலியூர் முருகேசன் வரையிலானவர்களின் நாவல்கள் இந்துத்துவ-சாதியவாதிகளால் தணிக்கைக்கு உள்ளாகி வருகின்றன.

இந்தியத் தணிக்கையின் வரலாற்றில் பாலுறவு, மதம், சாதி, நக்சலிச அரசியல் போன்றனதான் தணிக்கைக்குரிய பிரச்சினைகளாக இருந்து வந்திருக்கின்றன. ஓழுக்கத்தின் பெயரிலும் அறத்தின் பெயரிலும் சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் பெயரிலும் மதநிறுவனங்களும் சாதி அமைப்புகளும் அதனைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் தணிக்கை நெறிகளை உருவாக்குகின்றன.

அரசியல்-வன்முறை-பாலுறவு போன்றவற்றின் அடிப்படையில்தான் திரைப்படத் தணிக்கை விதிகள் வரலாறு முழுக்கவும் உருவாகிவந்திருக்கின்றன. மதநிறுவனங்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட நவீனத்துவ மேற்கத்திய தாராளவாத அரசுகள் பாலுறவுச் சித்தரிப்பு என்பதில் தளர்த்துதலைச் செய்தாலும் வன்முறை மற்றும் அரசியல் என்பன சார்ந்து தமது உள்நாட்டு வெளிநாடடுக் கொள்கைகளின் அடிப்படையில் தணிக்கை முறைகளை இன்று வரையிலும் இறுக்கமாகவே வைத்திருக்கின்றன.

தமது நம்பிக்கைகளுக்கு உகந்தவாறு விஞ்ஞானிகளும் தத்துவாதிகளும் கலைஞர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் தமது படைப்புக்களை உருவாக்க வேண்டும் எனவும் இந்த அமைப்புக்கள் கோருகின்றன. மாறிவரும் சமூகநிலைமைகளுக்கும் அறிவுத் தேடலுக்கும் ஒப்பவும் குறிப்பிட்ட தனித்தனி துறைசார் வளர்ச்சியின் தனித்துவமான தர்க்கங்களுக்கு ஒப்பவும் இதில் மாற்றமும் படைப்புச் சுதந்திரமும் வேண்டுமெனக் கலைஞர்களும் கோட்பாட்டாளர்களும் போராடுகிறார்கள்.

ஐரோப்பியத் திரைப்பட வரலாற்றை எடுத்துக் கொண்டால் நூற்றாண்டை அது கடந்து விட்டது. இந்திய சினிமா நூற்றாண்டு முடிந்து தமிழ் சினிமா தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பியத் தணிக்கை மரபில் மிகமுக்கியமான காலகட்டமாக இருந்தது ரஸ்யப் புரட்சியும் பாசிசத்திற்கு எதிரான அரசியல் காலகட்டமும் எனச் சொல்லலாம். பிரிட்டன் உள்பட அக்டோபர் புரட்சி அரசியல் காரணங்களுக்காக ஐஸன்ஸ்டீனின் 'பேட்டல்ஷிப் போதம்கின்' படம் தடைசெய்யப்பட்டது. பாசிசக் கருத்தியலை முன்வைத்த காரணத்திற்காக லெனீ ரிப்சந்தாலின் 'ட்ரம்ப் ஆப் தி வில் (triump of the will)' தடை செய்யப்பட்டது.

ஜப்பானிய இயக்குனரான நகிசா ஒஸிமாவின் 'அய்னோ கோரா', பசோலினியின் 'ஸலோ', பெர்ட்டுலூசியின் 'த லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' போன்ற படங்கள் அதனது பாலுறவுச் சித்தரிப்புக்காக அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடைக்கும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கும் இட்டுச் சென்றது.
இந்த வாதப் பிரதிவாதங்கள் உச்சத்தை அடைந்ததும் அரசுகள் தமது நிலைபாடுகளில் மாற்றம் கொணர்ந்ததும் உலகின் புதிய காட்சி ஊடகப் பரவலால் நேர்ந்தது.
சினிமாக் கொட்டைகளில் மட்டுமல்ல தொலைக்காட்சிகளிலும் வீடியோ நாடாக்களாகவும் திரைப்படங்கள் வீடுகளுக்குள் மக்கள் வாழும் தனித்த அறைகளுக்குள் நுழைந்தன. தாம் விரும்புகிற எப்படத்தையும் எவரும் பார்க்கும் தேர்வை இது திறந்துவிட்டது. திரைப்படம் இதன்வழி புதிய சந்தையையும் பொருளாதாரப் பரவலையும் திறந்துவிட்டது. இது திரைப்படம் எனும் தனித்ததொரு துறைசார்ந்த வளர்ச்சியின் மூலமாக உருவானது.
இதற்கு மேற்கத்திய-அமெரிக்க தாராளவாத முதலாளித்துவ சமூகங்கள் எதிர்விணை செய்தே ஆகவேண்டியிருந்தது.
நோர்வே, ஜெர்மன், ரஸ்யா-சீனா-கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள், அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் தவிர பிரித்தானியா-பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலுமான மேற்கத்திய நாடுகள் தமது தணிக்கை முறையில் மாற்றம் கொண்டுவந்தன. ஐன்ஸ்டீனின் படமும் லெனி ரீப்சிந்தால் படமும் தடை செய்யப்பட்ட பாலுறவுப் படங்களும் இந்நாடுகளின் திரைப்படக் கல்லூரிகளில் திரைநுட்பமும் வரலாறும் கற்பிக்கும் பாடங்களாக ஆகின.

ரஸ்யா, சீனா, அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா அதனோடு ஜெர்மன் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இந்தப் புதிய யதார்த்தத்துக்கு முகம் கொடுக்கவில்லை.

இந்நிலைமையில் நேர்ந்த டிவிடி, இணையம் போன்றவற்றின் தோற்றமும் நிகழ்முறைப் பாலுறவும் வன்முறையும் லைவ் ஷோவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகத்துவங்கியதும், ஹார்ட்கோர் போர்னோகிராபி/Hardcore Pornography போன்றவற்றை மிகச் சாதாரணமாக உலகெங்கிலும் பார்க்க முடியும் எனும் நிலைமை உருவானபிறகும், அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்புக்கு இணையான இலாபம் தருவதாக போர்ன் இன்டஸ்ட்ரி உருவான பிறகும், உலகவாயமாக்கலையும் இலாபத்தையும் மட்டுமே அடிப்படையாக கொண்டியங்கும் அமெரிக்க மேற்கத்திய சமூகங்கள் தமது ஒழுக்கம்-அறம் என்பவற்றை இலாபம் என்பதை முன்னிறுத்தி மறுபரிசீலனை செய்யத் துவங்கின.
அறம்-ஒழுக்கம், அது சார்ந்த நம்பிக்கைகள் எனும் அடிப்படைகளுக்கு மாற்றாக துறைசார் வளர்ச்சி (professenalism replaces morality and ethics as the cencorship basis), குறிப்பாகத் திரைத்துறைசார் வளர்ச்சிக்கு ஒப்ப, காட்சி ஊடக வளர்ச்சிக்கு ஒப்ப, புதிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலான திரைப்படத் தணிக்கை முறைகளை இப்போது உலகெங்கிலும் அரசுகள் கைக்கொள்ளத் துவங்கின.
அரசியல்-வன்முறை-பாலுறவு சார்ந்த விஷயங்களை, அதனைக் குடிமக்கள் புரிந்து கொள்ளும் வயதும், அந்த வயது தரும் முதிர்ச்சியும் மனநிலையும் சார்ந்து, எவரெவர் எப்போது எதனை எங்கு பார்க்கலாம் எனத் திரைப்படங்களை வயதின் அடிப்படை கொண்டு தரப்படுத்தவும், வகைப்படுத்தவும் (rating and classification) செய்தார்கள்.
மத அடிப்படைவாதம் கோலோச்சுகிற ஈரான் உள்பட்ட இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ அடிப்படைவாதம் மேலோங்கியிருக்கும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், பாசிச வன்முறையிலிருந்து இன்னும் விடுபடாத நினைவுகளைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், எதேச்சாதிகார அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ரஸ்யா, வடகொரியா, சீனா, இலங்கை போன்ற நாடுகள் இன்னும் இத்தகைய தாராளவாத ஜனநாயகத் தணிக்கை முறைக்கு வந்து சேரவில்லை.
முதலாளித்துவ வளர்ச்சியும் தாராளவாத அரசியலும் அறிமுகமாகாத கீழைத்தேய நாடுகளில் உலகவயமாதலின் பரவலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையில் தணிக்கைமுறை தொடர்பான ஒரு குழப்பமான மனநிலை நிலவுகிறது.
காலனியாதிக்கத்தினால் பாதிப்புற்ற சமவேளையில் நிலப்பிரபுத்துவ மத அறவியல்-ஒழுக்கம் போன்றவற்றிலிருந்து இன்னும் மீளாத, அரசை மதம்சார் நம்பிக்கைகளிலிருந்து விலத்தி நிற்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமைகளால் இவர்கள் குழப்பத்திற்கு ஆட்படுகிறார்கள்.
மதநல்லிணக்கம், சாதிய நல்லிணக்கம், இன நல்லிணக்கம், பெண் புனிதம் போன்றவற்றை முன்வைத்து தணிக்கை கொண்டிருக்கும் இந்திய- தமிழக அரசியல் அமைப்பு மதம்-இனம்-சாதி-பெண் எனும் எல்லா அடிப்படைகளிலும் மேட்டிமைச் சமூகத்தவர்களால் நிர்வகிக்கப்படுகிற, விளிம்புநிலை மக்களை ஒடுக்குகிற அமைப்பாகத்தான் இருக்கிறது. தமிழகத் திரைப்படத் தணிக்கை அமைப்பும் இந்த இயந்திரத்தின் ஒரு திருகாணிதான்.
40,000 வெகுமக்களைக் கொல்கிற வன்முறை அமைப்பையும், தொகையாகப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குகிற அமைப்பையும் கொண்டிருக்கிற இலங்கையும், பழங்குடிமக்களை ஆயிரமாயிரமாகக் கொன்றொழிக்கிற, தலித் மக்களைத் துப்பாக்கி முனையில் கொன்றொழிக்கிற, வல்லுறவை வாழ்முறையாக ஆக்கிவைத்திருக்கிற அமைப்பைக் கொண்டிருக்கிற இந்தியாவும், வன்முறையற்ற-பாலுறவுப் பிரச்சினைகள் தவிர்ந்த திரைப்படங்கள் வேண்டும் எனக் கோருவதிலுள்ள அபத்தத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தனது கண்களுக்குள் முன்னால் பாசிசம், நிறவாதம், இனவாதம், சாதியம், பெண்வெறுப்பு என்பதன் பெயரால் படுகொலைகளும் வார்த்தைகளில் சொல்ல முடியாத வன்முறைகளும் பாலியல் வல்லுறவுகளும் நடந்து வருவதைக் காணும் ஒரு கலைஞனிடம் தான் எந்த ஒடுக்கப்பட்ட மனிதரின் பால் நிற்கிறானோ அவர்களுக்குப் பரிந்து பேசும் கலைஞனிடம் வன்முறையையும் பாலுறவையும் சித்திரிக்காதே என்று சொல்வது என்ன நியாயம்? அதுவும் வன்முறையைச் செலுத்துகிறவன் ஒடுக்குமுறையாளனாகவும் வன்முறைக்கு உள்ளாகிறவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்களாகவும் இருக்கும்போது அவனிடம் அதனைக் கோருவது என்ன நியாயம்?
பாதிக்கப்பட்ட மனிதரின்பால் நின்று இந்தப் போராட்டத்தை திரை வரலாறு முழுதும் நடத்திய கலைஞர்கள் எண்ணிலடங்காதவர்கள். புனுவல், ஆந்த்ரே வாட்ஜா முதல், கென்லோச், வின்டர்பாட்டம், லார்ஸ் வான் ட்ரையர் ஈராக ஆனந்த பட்வர்த்தன் வரை உலகெங்கிலும் இந்தக் கலைஞர்கள் பரந்திருக்கிறார்கள்.

வன்முறையும்-பாலுறவும் சார்ந்த திரைச் சித்தரிப்புகள் தொடர்பாக நாம் சில புரிதல்களுக்கு வந்து சேர வேண்டும். நுகர்வு வகையிலான பாலுறவை முன்வைக்கும் ஹார்ட்கோர் போர்னோகிராபியை எதிர்க்காத அமெரிக்க-மேற்கத்திய சமூகங்கள், ஈராக்கிலும் ஆப்கானிலும் வன்முறை வெறியாட்டமாடிய அந்தச் சமூகங்கள், இந்த இடங்களில் இவர்கள் புரிந்த வன்முறைகள், பாலுறவு வல்லுறவுகள் தொடர்பாக தணிக்கையை இறுக்குகின்றனர். இதற்கு எதிராகவும் கலைஞர்கள் போராடி வருகிறார்கள். இவர்கள் அதில் வெற்றிபெற்றும் வருகிறார்கள்.
இந்தக் கலைஞர்களின் இடையறாத போராட்டங்களே மேற்கத்திய அரசுகளின் தணிக்கை முறைகளில் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
90 ஆண்டுகளாக நோர்வே தணிக்கை முறை தடைசெய்து வைத்திருந்த 200 இற்கும் மேற்பட்ட படங்கள் 2003 ஆம் ஆண்டு, அவர்களது தணிக்கை முறையில் கொணர்ந்த மாற்றத்தினையடுத்து, தடைநீக்கம் செய்யப்பட்டன. அப்படித் தடை நீக்கம் செய்யப்பட்ட படங்களில் ஒன்று பெண்ணின் அதீதப் பாலுறவு வேட்கையைச் சித்தரித்த நகிஸா ஒஸிமாவின் அய்னோ கோரா திரைப்படம்.
இவ்வாறு நேர்ந்த மாற்றங்களின் அடிப்படையில்தான், அனைவரும் பார்க்கத் தக்க படங்கள், பெற்றோர் துணையுடன் பார்க்கத் தக்க படங்கள், வயது வந்தோர் பார்க்கத் தக்க படங்கள், இதுவன்றி குறிப்பிடத்தக்க இடங்களில் மட்டுமே பார்க்கத் தக்க படங்கள் எனத் திரைப்படங்களை உலக அரசுகள் வகைப்படுத்துகின்றன.
இதில் நாட்டுக்கு நாடு சிறிய-பெரிய வித்தியாசங்கள் உண்டு. அமெரிக்காவில் வயது வந்தோர் என்பவர் 17 வயதுக்கு மேற்பட்டோர். பிரித்தானியாவில் அது 18 வயதாக இருக்கிறது. இந்நாடுகளில் போர்னோகிராபிப் படங்களைப் பார்க்கவும் விற்கவும் தனித்த கடைகளும் திரைப்படக் கொட்டகைகளும் இருக்கின்றன. இந்தத் தரப்படுத்தலையும் வகைப்படுத்தலையும் ஒட்டிய திரைப்படப் பார்வையாளர் கலாச்சாரம் அமெரிக்க-மேற்கத்திய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
ரஸ்யா தனது எதேச்சாதிகார மற்றும் இரும்புத் திரை அரசியலில் இருந்து இன்னும் மீளவில்லை என்றாலும், தற்போது அவர்களும் தரப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். பாசிச வன்முறை எனும் மானுட விரோத வன்முறையின் நினைவுச்சுமைகளில் இருந்து, யூத இனக்கொலை நினைவுகளில் இருந்து இன்னும் ஜெர்மானியர் மீளவில்லை. இந்த மனநிலை இன்னும் அவர்களது தணிக்கை விதிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
என்றாலும் அறுபதுகளின் அரசியல் வன்முறை, கட்டுதளையற்ற சுதந்திரப் பாலுறவு போன்றவற்றைச் சித்திரித்த 'பாதார் மெயின்காப் காம்ப்ளக்ஸ்' போன்ற படங்களோடு, இட்லரது வாழ்வைச் சித்திரித்த 'டவுன்பால்' போன்ற படங்களும் ஜெர்மனியில் இருந்து இப்போது வரவே செய்கின்றன.

துரதிருஷ்டவசமாக திரைப்படத் தணிக்கை முறையில் நேர்ந்த இந்த மாற்றமும், திரைப்படப் பார்வையாளர் கலாச்சாரமும் இந்தியாவில்-தமிழகத்தில்-இலங்கையில் இல்லை. இந்தியா-இலங்கை போன்ற நாடுகளின் தணிக்கை முறை இன்னும் காலனியர்களால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளையே கொண்டு இயங்குகிறது. இந்த முறை மத-சாதிய-இன-பெண்வெறுப்பு மேலான்மை கொண்டவர்களுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கிறது.

பார்வையாளர் கலாச்சாரம் என எடுத்துக் கொண்டால் நமது திரைப்படக் கலாச்சாரம் என்பது, திரைப்படங்கள் அனைத்தும் முழுக்குடும்பத்துடன் மகிழ்ச்சியாக் கண்டுகளிப்பதற்கானதாக, தாத்தா-பாட்டி முதல் பேரன்-பேத்தி வரை ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கத்தக்கதாக இருக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம். இந்தக் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும். அப்போது தணிக்கை விதிகள் பற்றிய நமது பார்வைகளும் மாற்றம் பெறும்.

பாலுறுவு மற்றும் வன்முறை தொடர்பாகவும் நுகர்வுப் பண்புகொண்ட வன்முறை-பாலுறுவுக்கும், விடுதலைப் பண்பும் கலைமாண்பும் சமூகச் செய்தியும் கொண்ட பாலுறவு மற்றும் வன்முறைச் சித்தரிப்புக்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களை எம்மால் இனம் காணமுடியும்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் நம் நினைவுக்கெட்டிய ஆண்டுகளில் தணிக்கைத்துறையில் பிரச்சினைக்கு உள்ளான படங்கள் எந்தப் பிரச்சினைகள் சார்ந்தன? பாப்ரி மஜீத் இடிப்புக்குக் கொஞ்சம் முன்னும் பின்னுமான ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்கள் அதனது இந்துத்துவப் பாசிசம் குறித்த சித்தரிப்புக்காக தணிக்கைக் குழுவில் பிரச்சினைகளைச் சந்தித்தன. 'பன்டிட் குயின்' திரைப்படம் அதனது சாதி எதிர்ப்புக்காகவும் மேல்சாதியினரின் பாலியல் வன்முறை சித்தரிப்பிற்காகவும் தணிக்கைக்குழுவினால் சிக்கலுக்கு உள்ளாகியது. நேபாள மாவோயிஸ்ட்டுகள் பற்றிய ஸ்னோ பிளேம்ஸ்/Snow Flames அல்லது பனி ஜூவாலைகள் அதனது மாவோயிச அரசியலுக்காகத் தடைசெய்யப்பட்டது.

இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சையினால் தமிழ்ப்படமான 'ஒரே ஒரு கிராமத்திலே' மற்றும் இந்திப்படமான 'ஆராக்ஷன்' போன்றன தணிக்கைக் குழு பிரச்சினைகளுக்கு உள்ளாகின. இலங்கையில் இந்தியப் படையினர் தலையீட்டையடுத்து அங்கு நிகழத்தப்பட்ட பாலியல் வல்லுறவைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான தமிழ்ப்படமான 'குற்றப்பத்திரிக்கை' தடைசெய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவை முன்வைத்து தமிழக அரசியல் கட்சிகளையும் இந்திய அரசையும் கடுமையாக விமர்சித்த 'செங்கடல்' படத்திற்குத் பிராந்திய தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.
இந்து மதம், மேல்சாதியம், இட ஒதுக்கீடு, இலங்கையில் இந்திய நிலைபாடு போன்றவற்றில் அதிகாரம் கொண்டிருப்பவருக்குச் சார்பாகவே இந்திய-தமிழகத் தணிக்கை அமைப்புகள் செயல்பட்டன. அரசு நிலைபாட்டை முன்வைக்கும் அத்தகைய படங்கள் எந்த வெட்டுக்களும் இல்லாமல் வெளியாகின. சமகாலத்தில் விளிம்பு நிலையில் உள்ள சாதிகள், சிறுபான்மையினர், இடதுசாரிகள், ஈழத்தமிழர் தொடர்பான விகாரமான சித்தரிப்புகள் தொடர்ந்து திரைப்படங்களில் இடம்பெற்று வந்தன. தணிக்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவை வெளியாகின

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், ஓர நிலைச் சமூக மக்கள், தமிழ் தேசியர், திருநங்கைகள் போன்றோர் தணிக்கைத் துறையின் அதிகாரச் சார்புநிலைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துவங்கினார்கள். 'டேம் 999', 'மெட்ராஸ் கபே', 'விஸ்வரூபம்' போன்ற படங்கள் தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் இவ்வாறுதான் வெடித்தன. இதுவன்றி திராவிட இயக்க அரசியல் குறித்த இருவர் படம் ஏற்படுத்திய சர்ச்சையும் தமிழக அளவில் திமுக அரசும் தணிக்கை அமைப்பும் குறித்த முக்கியமான பிரச்சினையாக எழுந்தது.

தமிழகத்தில் தணிக்கை தொடர்பாக வேறு வேறு மையங்கள் உருவாகி இருப்பது இன்று சமூக யதார்த்தமாக இருக்கிறது. இந்திய அரசினால் வழிநடத்தப்படும் அதிகாரபூர்வ தணிக்கை அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து அன்றைய நாளில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் மத்திய-மாநிலக் கட்சிகளின் பார்வை வரம்புக்குள்தான் செயல்படுகிறது. இதற்கென்றான சுயாதீனத்தன்மை என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது. மதம், சாதி,இனம்,வர்க்கம்,பாலினம் எனும் எல்லா அடிப்படைகளிலும் இதனது வலையறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள். இவர்களது பார்வைகளே தணிக்கை விதிகளில் ஆதிக்கம் செய்கிறது.

இதற்கு எதிராகவே ஒடுக்கப்படும் சாதிகள், சிறுபான்மை மதங்கள், ஓரநிலைச் சமூகத்தினர், ஒடுக்கப்படும் இனத்தினர் தமது எதிர்ப்பை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய ஆரப்பாட்டங்கள் ஒரு வகையிலான முறைசாரா தணிக்கையாகவும் திரைப்படங்களின் மீது தாக்கம் செலுத்துகின்றன. இத்தகைய எதிர்ப்புக்கள் நடைமுறையில் அரசினால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட படங்கள் கூட திரையிட முடியாத நிலைமையைத் தோற்றுவிக்கிறது. 'மெட்ராஸ் கபே', 'இனம்', 'விஸ்வரூபம்' போன்றவை இந்நிலைமையைச் சந்தித்தன.
மாநில அரசு இங்கு இன்னொரு தணிக்கை அமைப்பாகச் செயல்படும் நடைமுறையைக் 'கத்தி', 'டேம் 999', 'விஸ்வரூபம்' போன்ற பிரசசினைகளில் காணக்கூடியதாக இருந்தது. ஆக, தமிழகத்தல் யதார்த்தத்தில் இன்று அதிகாரபூர்வத் தணிக்கை, அதிகாரபூர்வமற்ற தணிக்கை என மூன்றுவிதமான தணிக்கைகள் நிலவுகின்றன. இது இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் உரிய ஒரு பிரத்யேகமான தணிக்கை நிலைமை எனலாம். இந்திய சமூகம் அடிப்படையான சமூக நீதியைப் பொறுத்து எத்துனை அசமத்துவமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்நிலை ஒரு சான்று.
தகவல் தொழில்நுட்பப் பரவலாக்கம் வீடியோ தொழில்நுட்பம் வீடுகளில் நுழைந்த தொழில்துறை வளர்ச்சி போன்றன உலகெங்கிலும் தணிக்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்களை ஒட்டி இந்திய-தமிழக தணிக்கை முறையில் மட்டுமல்ல, தணிக்கைக்குழுவில் இடம்பெறும் சமூக சக்திகளின் பிரதிநித்துவத்தைக் கூட மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.
திரைப்படங்களை பார்வையாளர் வயது எனும் அடிப்படையில் தரப்படுத்தலும் வகைப்படுத்தலும் என்பது தணிக்கை முறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வாக இருக்க முடியும். அதிகாரமற்ற சாதி, மத. இன, வர்க்க, பாலினப் பிரதிநிதித்துவம் என்பதனை தணிக்கைக்குழுவினுள் உள்வாங்குவதன் வழி தணிக்கைக்குழுவை ஜனநாயகப்படுத்த முடியும். இரண்டையும் எய்தும் வரையிலும் இந்திய தமிழக தணிக்கைக் குழுவுக்கு எதிரான போராட்டங்களும் சவால்களும் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர்கள் மேற்கொண்டுவரும் ரிவைசிங் கமிட்டியை நோக்கிய போராட்டத்தை விடவும் பரந்து விரிந்தது இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்த வெகுமக்கள் நடத்திவரும் இந்தப் போராட்டம்..