தணிக்கை வாரியத்தின் செயல்பாடு

நமது தணிக்கை வாரியங்கள் காலனி ஆட்சியால் நமக்கு விட்டு செல்லப்பட்ட பாரம்பரியம். அதன் இயல்பு இன்னும் மாறவேயில்லை. 1920முதல் சினிமா தணிக்கை வாரியம், போலீஸ் கமிஷனரின் தலைமையில் பெரு நகரங்களில் செயல்பட ஆரம்பித்த போது அதன் முக்கிய குறிக்கோள் திரை மூலம் தேசியக் கருத்துக்களை பரப்புவதை தடுப்பதுதான். இன்று வரை சினிமாவின் அழகியல் பற்றிய பரிச்சயம் இல்லாமலேதான் இந்த வாரியம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

தணிக்கையாளர்களுக்கு சினிமாவின் இயல்புகளில் பரிச்சயம் இல்லாததால், கதையின் கருவைப் பார்க்காமல், தனித்தனி காட்சிப்படிமங்களை பாலியல் ஒழுக்க ரீதியில் கண்காணித்து மையக்கருத்தை கோட்டை விட்டுவிடுகிறார்கள். படத்தின், தாக்கம் பற்றிய சுரணையேயில்லை. ரத்தக்கண்ணீரில் (1954) பாலியல் தொழிலாளியுடன் உறவு கொண்ட கதாநாயகனுக்கு தொழுநோய் வருகின்றது. தொழுநோய் பாலியல் நோயல்ல. கணிகையரையும் தொழுநோயாளிகளையும் இப்படம் இழிவு படுத்துகின்றது. இந்திய தொழுநோய் சங்கத்தின் எதிர்ப்பு தணிக்கை வாரியத்தால் உதாசீனப்படுத்தப்பட்டது. இன்றும் இப்படம் சிரமமின்றி ஒவ்வொரு பத்தாண்டும் சான்றிதழ் பெறுகின்றது.
சினிமாவின் தரத்தை உயர்த்துவதும் திரைப்பட தணிக்கையின் ஒரு குறிக்கோளாக பின்னர் சேர்க்கப்பட்ட்து. ஆனால் வாரியத்தின் அணுகுமுறை இன்றும் ஒரு எதிர்மறை அணுகுமுறையாகத்தான் இருக்கின்றது. ஒழுக்கரீதி எனும் ஒற்றைக்கண் பார்வையில், வன்முறையும், ரத்தகளரிக் காட்சிகளும் அவைகளின் பாதிப்புகளும் கண்ணில் படாமல் போய்விடுகின்றன.`செக்ஸ், வன்முறை ஆகியவற்றில் மட்டும் தான் தணிக்கை வாரியம் தலையிட வேண்டுமென்றில்லை. காதல் காட்சிகளை பார்க்கிற குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் குழந்தைகளுக்கு அந்த உணர்வு தீவிரமாக கிடையாது. ஆனால் வன்முறையும் அதன் வலியும் அவர்களுக்கு தெரியும். தலையை துண்டிப்பது போலவும் குடலை உருவுவது போலவும் காட்சிகள் வருகின்றன. பாலியல் காட்சிகள் கூடாது என்பதில் நாம் காட்டுகிற அக்கறையை வன்முறை கூடாது என்பதிலும் காட்டவேண்டும். பாலியல் உணர்வு இயற்கையான ஒன்று. வன்முறை அவ்வாறல்ல. வன்முறையற்ற வாழ்க்கை வளமானதாகத்தான் இருக்கும். இன்று சண்டைக்காட்சிகள் (choreographed violance) குழுநடன காட்சிகள் போல் ஒரு கேளிக்கை அம்சமாக (entertainment component) உருவாகி விட்டன.

பெண்களை –மனைவியை, காதலியை-அடிப்பது தமிழ்ப்படங்களில், அதிலும் 70, 80 களில், சாதாரணமாக வருவது. அதை நாம் கவனிப்பது கூட இல்லை. கல்யாணப்பரிசு, (1959) சம்சாரம் ஒரு மின்சாரம் (1980) இரு படங்களிலும் கணவன் மனைவியை அறைவான். இதில் அவலம் என்னவென்றால் அடிப்பதை நியாயப்படித்தியே இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மனைவி இப்படி அடிவாங்குவது முறையானது தான் என்று கதை போகின்றது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்று வன்முறை நியாயப்படுத்தப்படுகின்றது. பல படங்கள் பெண்ணடிமைத்தனத்தை நியாப்படுத்துவதாக மட்டுமல்லாமல் அதைப் போற்றுவதாக அமைகின்றன. இணங்காத இளம் மனைவியிடம் பலாத்காரமாக கணவன் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் என் ராசாவின் மனசிலே (1992) படம் போல. சூசகமாக ஒரு படத்தில் உறுதிப்படுத்தப்படும் கருத்துக்கள் என்ன போன்ற கேள்விகளை எழுப்பக் கூட சினிமாவில் இயல்பு பற்றிய அறிவு தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்கு தேவையாகின்றது. சாதிப்பற்றை உயர்த்திப்பிடிக்கும் படங்கள் பல வருவதைப் பாருங்கள்.
தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்டும் ஆராக்ஷன் போன்ற படங்கள் இடஒதுக்கீட்டை விமர்சிக்கின்றது என்ற காரணம் காட்டி மாநில அரசுகளால் தடை செய்யப்படுகின்றன. இது போல முன்னர் ஒரே ஒரு கிராமத்திலே (1989) படத்திற்கு இடைக் காலத்தடை விதிக்கப்பட்ட்து .

பராசக்தி வந்த போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முதலமைச்சாராக இருந்த ராஜாஜியிடம் முறையிட்டு எழுதி தடை செய்ய வேண்டினர். அவர் இசையவில்லை. படம் வெளிவந்து வரலாற்றில் இடம் பெற்றது. அக்ரகாரத்தில் கழுதை, தொலைக்காட்சியில் காட்டப்படும் என்று மூன்று முறை அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. சமூக, அரசியல் பிரச்னைகளைத் தொடும் படங்களுக்கு தொல்லை கொடுத்தால், சர்சைக்குள்ளாவதை தவிர்த்து, வெறும் நேரம்கொல்லிப் படங்களே உருவாக்கப்படும். இதுதான் சினிமா என்ற நிலை வந்து விடும். இன்று தமிழ்சினிமாவில் ஏறக்குறை இந்த நிலைதான்.