நூல் விமர்சனம் - முரண்படும் படிமங்கள்:

அட்டன்பரோ தன் காந்தியைத் துவக்கியது போல், பாண்டியனும் தன் புத்தகத்தை அதன் ‘நாயகனின்’ இறுதி ஊர்வலத்தோடு துவக்குகிறார்.

அதேபோல இந்த விமரிசனமும் புத்தகத்தின் கடைசி அட்டையிலிருந்து தொடங்குவதே சரி என்று தோன்றுகிறது. பின்னட்டைக் குறிப்பு பாண்டியன் தனிநபர் ஆளுகைக்குட்பட்ட நிலையில் பணிந்துவாழ் மக்களின் சமூக மனநிலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சியாகத்தான் இந்தப் புத்தகத்தைக் குறிக்கிறது. எம்.ஜி.யாரின் மகத்தான கவர்ச்சி என்கிற ஒரு உதாரணத்தின் மூலம் இந்த ஆய்வு நிகழ்வதாகச் சொல்கிறது. பாண்டியனின் வார்த்தைகளிலேயே “எம்.ஜி.ஆரின் இந்தக் கதை.... (கிராம்ஸி குறிப்பிடும் சாதாரண உணர்வின் களத்தில் கொள்கை என்கிற ) போராட்டக் களனில் எப்படி ஆதிக்க கொள்கைகள் வெற்றி பெற்று பணிந்து வாழ்சமூகத்திடையே அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தைத் தோற்றுவிக்கிறது என்பதைச் சொல்கிறது.”.
புத்தகத்தை ஊன்றிப் படித்தால், புத்தகம் அப்படி எதையும் முழுமையாகச் செய்யாததாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.கவை ஏமாளிகளும் சார்ந்திருப்போரைத் தவிர மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை கொண்டவர்களும் பெரும் எண்ணிக்கையில் இருப்பதைப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் பாண்டியனே குறிக்கிறார். பணிந்துவாழ்மக்கள் சமுதாயத்திலும் இத்தகையவர் இருப்பது மறுக்கமுடியாது. அதே போல் எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் ஆளுகைக்குட்பட்ட நிலையிலும் இந்த எண்ணிக்கை அதிக மாறுபாடின்றித் தொடர்ந்ததும் உண்மை. உண்மையிலேயே, தனிநபர் ஆளுகைக்குட்பட்ட நிலையில் பணிந்துவாழ், மக்களின் சமூக மனநிலையை ஆராய்வதுதான் புத்தகத்தின் நோக்கு என்றால் இந்த எம்.ஜி.ஆரைச் சாராத மக்களைப் பற்றியும் புத்தகம் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், புத்தகம் அதைச் செய்யவில்லை. அதிகபட்சமாய் புத்தகம் செய்திருப்பதெல்லாம், பணிந்துவாழ் மக்கள் சமுதாயத்தின் ஒருபகுதியினர் மனோநிலையில், கிராம்ஸி குறிப்பிடும் போராட்டக் களத்தில் நைச்சியமாய் ஆதிக்கக் கொள்கைகள் நிலையுறுத்தப் படுவதை அலசியிருப்பதுதான். அதே சமுதாயத்தின் மற்ற பகுதியினர் மனோநிலையில் உள்ள போராட்டக் களத்தைப் புத்தகம் மொத்தமாய் மறந்துவிட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் கதை மூலம் இந்த அலசல் செய்யப்பட்டிருப்பதாய் பாண்டியன் கோருகிறார். இதிலும் புத்தகம் என்னவோ இடைவேளையிலிருந்து படம் பார்த்த உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.

எம்.ஜி.ஆரின் படிமம் (image) ஒரே இரவில் உருவாக்கப்படவில்லை. அந்தக் கட்டுமானப் பணி ஆண்டாண்டுகளாய் நிகழ்ந்திருக்கின்றது. இந்தக் கால கட்டத்தைப் பற்றிய ஆய்வுதான் உண்மையில் முக்கியமானது.

நாயகர்கள், குறிப்பாகத் திரைப்பட நாயகர்கள், காப்பியடிக்கப்படுவதுதான் பொதுவாக நிகழ்வது. எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் தமிழ்நாட்டிலும், எப்போதுமே உலகமெங்குமே இதுதான் நடப்பு. பாகவதர் கிராப்பில் தொடங்கி இதற்கு உதாரணங்கள் ஏராளம். ஆனால், எம்.ஜி.ஆர் காப்பி அடிக்கப்படவில்லை.; தெய்வமாக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் படிமம் வளர்ந்து வந்த கால கட்டத்தில். பணிந்து வாழ் மக்கள் மத்தியில் ஆங்காங்கே, தான்தோன்றித் தனமாய் குட்டி எம்.ஜி.ஆர் நகல்கள் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் தோன்றவில்லை. படிம அளவிலே கூட, நம்மாள் ஒருவனான இவனால் இதெல்லாம் செய்ய முடிந்தால், நம்மாலும் ஏன் செய்ய முடியாது என்ற எண்ணப்பாடு மக்களிடையே தோன்றியிருக்க வேண்டும். அது தோன்றாததற்குப் பாண்டியன் அடோர்னோவைச் சார்ந்து காரணம் கூறுகிறார். “பாஸிஸப் பிரச்சாரம் ஹிட்லரை சர்வாதிகாரம் படைத்தவனாய்க் காட்டும், அதே சமயம் சாதாரண மக்களில் ஒருவனாக; உலகார்ந்த, உயிரார்ந்த செல்வங்களால் கறைபடாதவனாகவும் காட்டியது. இதனால் பொதுமக்கள் தம் வாழ்வின் இல்லாமைகளுக்கு ஒரு இட்டு நிரப்பலாக அந்த ‘மனிதசிரோமணி’யின் படிமத்தில் சேராத தம் (பணிந்து வாழ்தல் போன்ற) உள்ளக் கூறுகளுடன் ஒன்றியே இருக்கிறார்கள். ஹிட்லர் பற்றிய தனிமனிதனை முன்வைக்கும் பிரச்சாரம் ஹிட்லர் செல்வாக்குப் பெற்றதன் பின்தான் நடந்தது. ஏற்கனவே செல்வாக்குப் பெற்றுவிட்ட ஒரு நாயகன்தான் அடோர்னோ கூறும் மேற்படிப் படிமத்தைப் பேண முடியும். ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை மெதுமெதுவே அவரது செல்வாக்குக் கட்டமைக்கப்பட்ட காலத்தினூடே கூட, மக்களில் ஒருவனாக அதே சமயம் மக்களால் நகலாக்கப்பட முடியாதவனாக ஒரு படிமம் உருவாக்கப்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது என்ற ஆய்வுக்கு அடோர்னோ மட்டும் பதிலாக முடியாது. அதற்கு மேலும் உளவியல் சமூகவியல் தர்க்கங்கள் வேண்டும். பாண்டியன் புத்தகத்தில் இந்தத் தர்க்கங்கள் இல்லை.

குறைந்த பட்சம் திரையுலகத்தை எம். ஜி.ஆர் எப்படி ஆளுகைக்குட்படுத்தினார் என்பதாவது சொல்லப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர் நட்சத்திர அந்தஸ்து பெற்ற காலத்திற்கு பிற்பட்ட நிலையைப் பற்றித்தான் குறிப்புகள் உள்ளன. புத்தகத்தில் இதுபற்றிக் கிடைக்கும் மிக முந்திய குறிப்பு ‘நாடோடி மன்னன்’ நூறாவது நாள் விழா பற்றித்தான். நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரின் 41வது படம். திரையுலகில் அவர் நுழைந்து இருபதாண்டுகட்குப் பின் வந்த படம். இந்தக் குறிப்புமே கூட எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை கட்டுமானம் பற்றி வருகிறதே தவிர, எம்.ஜி.ஆரின் திரையுலகம் என்ற நோக்கில் வரவில்லை.

”எம்.ஜி.ஆரின் படங்கள் அறைகூவிய புரட்சி அன்றைய சமுதாய அமைப்பை வழிமொழியவே செய்தது. இதனால் அன்றைய திரையுலகிற்கு அவரை வைத்துப் படமெடுப்பதில் ஆட்சேபமிருக்கவில்லை.” என்பதுபோல் ஒரு குறிப்பும் இருக்கிறது. அன்றையத் திரையுலகம் சமுதாயக் கண்ணோட்டம் கொண்டிருந்தது என்றால் இந்தக் குறிப்பு சரியானதே. ஆனால் நம் திரையுலகம் என்றைக்குச் சமுதாயக் கண்ணோட்டம் கொண்டிருந்தது.? வியாபார நோக்குத் திரையுலகம் தன்னை விழுங்கப் புறப்பட்ட ஒருவனை எப்படி வளரவிட்டது. ? எம்.ஜி.ஆர் திமுகவைப் பொறுத்தவரை மட்டுமல்ல, திரையுலகைப் பொறுத்தவரையும் ஒரு ப்ராக்ன்ஸ்டைன் தானே?

நாயகனைச் சார்ந்த திரையுலகம் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே பிறந்துவிட்டதா? என்பதில் கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் திரையுலகம் நாயகனால் கையகப்படுத்தப்படும் நிலை முதன்முறையாக (இன்றுவரை கடைசியாகவும்) எம்.ஜி.ஆருடன் தோன்றியது. என்பது மறக்கமுடியாதது. புத்தகத்தின் அடிப்படையாகவும், தலைப்பாகவும் கூட இருக்கும் படிமம் பற்றி ‘நான் ஏன் பிறந்தேன்? இலிருந்து எம்.ஜி.ஆர் கூறுவதையே பாண்டியன் எழுதுகிறார். அதில் கூட எம்.ஜி.ஆர் நாகிரெட்டியையும் எஸ்.எஸ்.வாசனையும்தான் குறிக்கிறார். வாசனின்(ஜெமினி) ஒரே ஒரு படம் ‘அன்பே வா’ இவை தவிர அன்றையத் திரையுலகப் பெருமுதலாளிகள் எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுக்காதது ஏன்? மீதி 131 படங்களும் சிறு அல்லது மத்தியப் பட முதலாளிகளாலேயே எடுக்கப்பட்டிருக்கிறதே ஏன்? ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் திராவிடர் கழகப் பிரச்சாரப் படங்களுக்கு எதிராக பக்திப் படங்கள் எடுத்து வந்த விஜயலஷ்மி பிக்சர்ஸீம் ஏ. பி.நாகராஜனுமே பின்னால் ‘நவரத்தினம்’ எடுக்க எது காரணம்?

சினிமாவிற்கு அப்பாற்பட்ட ஒரு தளத்திலிருந்து இப்புத்தகம் எழுதப்பட்டிருப்பது உண்மைதான், என்றாலும் எம்.ஜி.ஆரை , எம்.ஜி.ஆராக்கியது சினிமாதான் எனும்போது மேற்கூரிய கேள்விகளைச் சார்ந்த ஆய்வு இல்லாதது புத்தகத்தின் பெரும்குறைதான். இத்தகைய ஆய்வு, முதற் குறிப்பிட்ட உளவியல் சமூகவியல் தர்க்கங்களுக்கு நுழைவாயிலாய் இருந்திருக்கும்.

இந்நாணயத்தின் மறுபக்கமாக தன் வளர்ச்சிக்கு ஏணியாக இருந்த மறுபக்கமாக தன் வளர்ச்சியாளர் எம்.ஜி.ஆர்., தன் தனிநபர் ஆளுகை நிலைக்க வேண்டும் என்பதற்காக எப்படி வளரவிடாது சிதைத்தார் என்ற ஆய்வும் புத்தகத்தில் இல்லை. குறிப்பிட்ட சில படங்கள் மீதான தணிக்கைப்பற்றி மட்டுமே புத்தகம் சொல்கிறது.

புத்தகத்தில் கிராம்ஸி கையாளப்பட்டிருக்கும் விதத்திலும் இப்படி ஒரு நிலை தெரிகிறது. கிராம்ஸி குறிப்பிடுகிறார். ‘சாதாரண உணர்வின் களத்தில் கொள்கை என்பது ஒரு போரட்டக் களமாகிறது’ என்று இந்தக்களத்தில் ஆதிக்கக் கொள்கைகள் வென்று நிலைபெறுவது எப்படி என்பதை எம்.ஜி.ஆர் கதை சொல்கிறது என்கிறார் பாண்டியன். உண்மையில் எம்.ஜி.ஆர் படிமம் இந்த உண்மையான போராட்டக்களத்தின் பக்கத்தில் கூடப் போகவில்லை. இந்தக்களத்தை மூழ்கடிக்கும்படியாகப் பணிந்துவாழ் மக்கள் மனநிலையில் ஒரு தொடர்ந்த அட்டைக்கத்திப் போராட்டக் களத்தை வெகுதீவிரமாக நிறுவிட்டதுதான் எம்.ஜி.ஆர் செய்தது. ‘நான் உங்களில் ஒருவன்; உங்களுக்கெதிரான இந்தச் சமூக அமைப்பைச் சாடுபவன். ஆனால் இந்த விஷயத்தில் நான் இல்லாமல், என் தலைமை இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற கையாலாகாத்தனத்திற்குப் பணிந்து வாழ் மக்கள் மனநிலையைச் செலுத்தியதுதான் எம்.ஜி.ஆர் செய்தது. (எம்.ஜி.ஆர் ஒன்று, மற்றெல்லோரும் பூஜ்யம்.

நினைவிருக்கிறதல்லவா?) கிராம்ஸியின் உண்மையான போராட்டக்களத்தில் பாண்டியன் கூறுவதுபோல் நியாயத் தீர்ப்பு வழங்கும் உரிமை, கல்வி மீதான உரிமை, பெண்கள் மீதான உரிமை இவற்றைப் பணிந்துவாழ்மக்களின் ‘பிரதிநிதி’ கையகப்படுத்துவதான உணர்வு அம்மக்களுக்குத் தோன்றுவது உண்மை; ஆனால் அந்த உணர்வு தோன்றுவது இந்த அட்டைக்கத்திப் போராட்டக்களத்தில்தான். உண்மையான போராட்டக்களத்தில் இது நிகழாததால்தான் உண்மையிலேயே இவ்வுரிமைகளில் எதையும் கையகப் படுத்தும் லேசான முனைப்புக் கூட அம்மக்களிடம் எழுவதில்லை. பெண்கள் விஷயத்தில் இது இன்னும் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. எம்.ஜி.ஆர் படிமம் பெண்களுக்கு நியதிகளை மீறுவதற்கான சுதந்திரத்தை வழங்கியதெல்லாம் இந்த அட்டைக்கத்தி போராட்டக் களத்தில்தான். திரைப்படம் என்ற சாதனமே அட்டைக்கத்தி விவகாரம்தான் என்பதால் நிகழ்வதல்ல இது. அதன் செல்லுலாய்டுத் தனத்தை மீறி, ஏன் அதைப் பயன்படுத்தியே கூட, திரைப்படம் உண்மையான போராட்டக் களத்தில் மக்களின் சாதாரண உணர்வைத் தொட்டுத் தூண்டியிருக்கும் உதாரணங்கள் ஏராளம். திராவிடர் கழகப் பிரச்சாரப் படங்கள் (இவற்றில் ஆரம்பகால எம்.ஜி.ஆர். படங்களும் அடங்கும்) ஒரளவு உண்மையான போராட்டக் களத்தைத் தொட்டவை நாளடைவில் எம்.ஜி.ஆர் இந்த உண்மைக் களத்தையும் தன் அட்டைக்கத்திக் களத்தால் மழுங்கடித்துவிட்டதால் தான் பாண்டியனே குறிப்பிடுவதுபோல் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டபோது வெளிப்பட்ட ஆவேசமான வாழ்ப்பாட்டு மறுமலர்ச்சி உருவானதும், அவர் மறைவுக்குப் பின் எம்.ஜி.ஆருக்கே கோவில்கள் கட்டப்படுவதும்.

ஹிட்லர் பற்றிய பாசிசப் பிரச்சாரமும் எம்.ஜி.ஆர் படிமமும் முரண்படுவது முக்கியமாக இங்கேதான் , மக்களுக்கெதிரானதாயிருந்தாலும், பாசிசமும் ஒரு கொள்கை உண்மையான போராட்டக் களத்தில் நிகழ்வது. அவன் சர்வாதிகாரிதான். ஆனால் ஹிட்லர் எம்.ஜி.ஆர் போல் ஒரு தனிமனித சாம்ராஜ்யமில்லை. பாசிசம் அதைச் சார்ந்தும் எதிர்த்தும் எண்ணப்பாடுகளை, தலைவர்களை உருவாக்கியது. எதிர்த்தெழுந்த எண்ணப்பாடுகளையும், தலைவர்களையும் அடக்குமுறை நசுக்கியது. அண்னாயிஸத்தைப் பற்றி இப்படி எதைச் சொல்ல முடியும்?

எம்.ஜி.ஆர் படிமம் உண்மையான போராட்டக் களத்தில் தாக்கம் கொள்வதாகப் புத்தகம் விரிந்துவிடுவதால் கடைசியில் ஒரு முனைந்து திணிக்கப்பட்ட நம்பிக்கையை, எதிர்பார்ப்பைக் கொண்ட முடிவைக் காட்டும் நிர்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் பாண்டியன். புத்தகத்தின் இறுதி அத்தியாயம் புத்தகத்தோடு சிறிதும் ஒட்டாமல் முரண்பட்டுச் செயற்கையாய்த் தோன்றுகிற நிலைமை இதனால் விளைகிறது.

நம்பிக்கை வலிந்து திணிக்கப்பட வேண்டிய நிலைமை தமிழ்நாட்டில் இல்லை, பணிந்து வாழ் மக்களிலும் கணிசமான ஒரு தொகையினர் எம்.ஜி.ஆரின் தீவிரமான தாக்கத்திற்குப் பின்னும் இந்த அட்டைக்கத்திப் போரட்டக் களத்தில் மாட்டிக் கொள்ளாததே நம்பிக்கை ஊட்டுகிற விஷயம். எம்.ஜி.ஆரைச் சார்ந்து நிற்கின்றவர்களைக் கூட உண்மையான போராட்டக் களத்திற்கு மீண்டும் கொண்டுவருகிற வேலைதான் செய்யப்பட வேண்டியது.

ஆக, புத்தகம், பணிந்துவாழ்மக்களின் சமூக மனநிலையையும் முழுதாய்ச் சொல்லவில்லை; எம்.ஜி.ஆர் கதையையும் இடைவேளைக்குப் பிறகிருந்தே சொல்லுகிறது. சமூக ஆராய்ச்சி என்ற போர்வையை உதறிவிட்டு, எம்.ஜி.ஆரைத் துகிலுரிப்பதை முழுமையாகச் செய்திருந்தால் அது சமூக ஆராய்ச்சியாய் முடிந்திருக்கும். பிரச்சினையே இதுதான். எம்.ஜி.ஆர் போன்ற அமைப்புகள் நிகழ்வாகும்போது சமூகப் பிரக்ஞையுள்ள அறிவாளிகள் மனதில் தோன்றும் நெருடல் – அத்தகைய நிகழ்வுகளை வெறும் தற்குறித்தனமான நிகழ்வுகள் என்று ஒதுக்கவும் முடியாமல், முழுமையான ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் அளவிற்கு தீவிரமானவை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், நெருடல். இந்த நெருடலே எம்.ஜி.ஆர்கள் வளரும்போது வெறுமே பார்த்துக்கொண்டு நிற்கும் நிலைக்கு இவர்களைத் தள்ளுகிறது.

எம்.ஜி.ஆர்கள் உருவாகும்போது, அதைப் பற்றிய முன்கூட்டி எச்சரிக்கும் அமைப்பு (Early warning System) இல்லாத சமூகங்களில் எம்.ஜி.ஆர்கள் உருவாவது இயல்புதான்.

எம்.ஜி.ஆர் ஆட்சி, அவரை ஆட்சி பீடமேற்றிய ஏழைகளைச் சுரண்டியது என்பதற்கான புள்ளிவிவரங்களும் ஆரம்பத்திலேயே தரப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சி பற்றி மட்டும் தரப்பட்டிருக்கின்றன. அதற்கு முன்னிருந்த நிலை சொல்லப்படவில்லை.

வேலையின்மை பற்றிய ஒரு குறிப்பைத்தவிர வேறெங்கும் சமகாலத்தில் இந்தியாவின் பிற்பகுதிகளில் இருந்த நிலையும் சொல்லப்படவில்லை. ஆக, எம்.ஜி.ஆர் ஆட்சி என்பது தனித்துச் சொல்லப்பட்டதே தவிர ஒப்புநோக்கிக் கூறப்படவில்லை.

திரைப்படப் பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆரின் படிமம் திணிக்கப்படுவதைக்கூறும் போது., ஒலி திரையில் காண்பவரோடு உள்மனத்தால் பொருத்திப் பார்க்கப்படும் என்ற எல்லிஸின் கூற்றைப் பாண்டியன் முன்மொழிகிறார். எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு இது பொருந்துமா என்பது சந்தேகமே. படம் வெளிவருவதற்கு மிக முன்பே பாடல்கள் வெளிவந்துவிடும் விஷயம் தமிழ்த் திரை உலகில் வெகுநாட்களாகவே உள்ளது. கண்முன்னால் திரையில் எம்.ஜி.ஆரைப் பார்க்காமலேயே அவரது பாடல்களை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரோடு இணைத்துப் பார்ப்பதுவே நிகழ்கிறது. அதேபோல் கொட்டகையில் சினிமா பார்ப்பதே பணிந்துவாழ் மக்கள் தம் எதிர்ப்பைக் காட்டும் ஒரு உத்தி என்ற பாண்டியனின் வாதமும் சர்ச்சைக்குரியதே. தொலைக்காட்சி மிக வீரியத்துடன் மக்கள் மீது தாக்கம் கொண்டுவிட்ட இந்நாட்களில் மத்திய உயர்மத்திய ‘மேட்டுக்குடி’ மக்கள் வீடுகளில் சரிசமமாகப் பணிந்துவாழ்மக்கள் தொலைக்காட்சி நோக்குவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் கொட்டகைகள் பெருகிய பின்னும் ஊரகப் பகுதிகளில் மேல்தட்டு மக்களுக்கும் கீழ் தட்டு மக்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு நடத்தப்படும் அரங்க நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்த வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. வீடியோ, பெருகிய பின்னும் நகர்ப்புறங்களில் கூட மத்திய , உயர்மத்திய மக்கள் தொடர்ந்து கொட்டகைகளுக்குச் செல்வதும் நிகழ்கிறது.

புத்தகம் முழுவதுமே பாண்டியனின் எழுத்து ஒரே சீராய் இருப்பது பாராட்டுக்குரியது. ஆரம்ப அத்தியாயங்கள் படிப்பவர் மனதில் கேள்விகளை எழுப்பி, பின்வரும் அத்தியாயங்கள் அவற்றிற்கு விடையளித்து அதே சமயம் புதிய கேள்விகளை எழுப்பி என அந்தப் பாணி, புத்தகத்திற்கு நீரோட்டம் போன்ற ஒருபோக்கைக் கொடுக்கிறது. எழுகிற கேள்விகள் பலவற்றுக்கும் புத்தகத்தில் பதில்கள் கிடைப்பது பாண்டியனின் பரந்த ஆராய்ச்சியைக் காட்டுகிறது. அண்ணாதுரையின் சிலைகள் பலவும் அவர் படிப்பதுபோல் அமைந்தது. கொடியில் கறுப்பும் சிவப்பும் நிறங்களாய் கொண்டது. சகட்டுமேனி கெளரவ டாக்டர் பட்டங்கள், போன்று நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் விஷயங்களுக்கெல்லாம் சமூகமனநிலை மீது தாக்கம் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் என்ற அவர் புத்தகத்தின் வெவ்வேறு இடங்களில் அனுமானிப்பதைக் குறிப்பாகக் கூறலாம். இருந்தும் எழுகின்ற எல்லாக் கேள்விகளுக்குமே புத்தகத்தில் பதில் இருக்கிறதா?

சலனம் ஜீன் – ஜீலை 1992

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி. தொடர்புடையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், கட்டுரை நீக்கப்படும்.