விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 5

சென்ற இதழின் தொடர்ச்சியாக:

எந்தன் அடைமொழிக்கான அடையாளத்தை உருவாக்கித் தந்தவர் நண்பர் சி.பி.தேவராஜ். இவரது நிர்வாகத்தின் கீழ், இயங்கிய சஞ்சிகையே பிலிம்நியூஸ். எனது புகைப்படத் தொகுப்புக்களையெல்லாம் கோர்வையாகப் பிடித்துக்கொண்டு, ஸ்டுடியோ வாசலில் நிற்கின்ற சமயத்தில்தான் சி.பி.தேவராஜன் என்னை அடையாளங் கண்டுகொண்டு என் நலனை விசாரித்தார். ஏதோ ஓர் யோசனையின் பிடியிலிருந்து விடுபட மனமில்லாத எனக்கு, என் நலனை விசாரிக்கின்ற அன்பர் யாரென்று உடனே அனுமானிக்க இயலவில்லை. ஆனால், சி.பி.தேவராஜன் என் பால்யகாலத் தோழன். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரே கல்லூரியில்தான் இருவரும் படித்திருக்கின்றோம். சில வருடங்கள் கழித்துப் பார்ப்பதனால்தான் இச்சிறு தடுமாற்றம்.

இருவருமே நெடுங்காலங் கடந்து சந்திப்பதனால், எங்கள் பேச்சுக்கள் பல நிகழ்ச்சிகளை உரசி நகர்ந்து சென்றது. பேசிக்கொண்டிருக்கும்பொழுதே தேவராஜன் என் கையில் வைத்திருந்த போட்டோக்களை வாங்கிப்பார்த்தான்.

ரப்பர் புன்னகையுடன் புகைப்படங்களில் நிற்காமல், நடிக நடிகையர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் இயல்பாக படப்பிடிப்பில் கலந்திருப்பதுபோல் காணப்படுகின்ற இந்த புகைப்படங்கள் தேவராஜனிடத்தில் மெல்லிய புன்னகையை வரவழைத்தது. இந்தப் புகைப்படங்களையெல்லாம் என் பத்திரிக்கையில் பயன்படுத்திக்கொள்ளட்டுமா? என்று கேட்டார். அப்பொழுதுதான் அவர் ‘பிலிம்நியூஸ்’ இதழின் உரிமையாளர் என்பது எனக்குத் தெரியும். என் அனுமதியின் பேரில் புகைப்படங்களை ”பிலிம்நியூஸ்”, இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.

இதுநாள் வரையிலும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரமாக வேண்டுமானால், அந்தப் புகைப்படத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தே பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கடிதத்தில் அப்புகைப்படம் பற்றிய விபரங்கள்., எந்தப் படம் இன்ன சில விவரங்களையும் அதில் இணைத்திருந்தால்தான் புகைப்படம் அச்சுப்பிரதிகளில் வெளியாகும். பின்னரே பத்திரிக்கைகளின் வாயிலாக நம் பார்வைக்கு வரும்.

ஆனால், இதுமாதிரியான எவ்வித தேவைகளுமின்றியே ”பிலிம்நியூஸ்”, இதழில் என் கைவசமிருந்த புகைப்படங்கள் தொடர்ந்து பிரசுரமாகிவந்தன. தயாரிப்பாளர்கள் தருகின்ற புகைப்படங்களை பெரும்பாலும் தவிர்த்து, என் படங்களே மிகுதியான அளவில் அச்சுப்பிரதிக்கு பிலிம்நியூஸில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், என் புகைப்படங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட வாசகம் தான் அத்தியாவசியமாக இங்கு குறிப்பிட வேண்டியது.

அதாவது, “ போட்டோகிராஃபர்: பிலிம்நியூஸ் ஆனந்தன்” என்று நான் எடுத்த புகைப்படங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது. இதன்பின்பே ஆனந்தகிருஷ்ணன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக பலராலும் அறியப்படுகின்றேன். என் அப்பா ஏ.ஜி.கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான கோப்புகளைச் சரிபார்த்து கையெழுத்திட வேண்டியிருக்கும். அப்பாவின் பெயர் பி.கே.ஞானசாகரம், இதை ஒவ்வொரு முறையும் கையெழுத்திடும்பொழுதும் அப்பா சொல்வார், ”ஞானசேகரம்’னு இவ்ளோ பெரிய பேர் இருக்கிறதால, பக்கம் பக்கமாக இந்தப் பேரை எழுதறுக்கு பதிலா, என்னைப் பெத்தவர்கள் சின்னதாப் பார்த்து ஏதாவது பேர் வச்சிருக்கலாம்” என்று அங்கலாய்ப்பார். என் நாமம், ’ஆனந்தகிருஷ்ணன்’, என்பது அப்பாவின் பெயரைவிடப் பெரியது, எனக்கு பெயர் வைக்கின்றபொழுது இதை அப்பா சிந்திக்கவில்லை போலும். பிலிம்நியூஸ் ஆனந்தன் என்று அழைக்கையில் முன்பை விட பெரிய பெயர் ஆகிவிட்டது.

பிலிம்நியூஸ் பத்திரிக்கை சினிமாப் பிரபலங்கள் பலராலும் படிக்கப்படுவதால், தங்கள் புகைப்படங்கள் இதழில் வந்திருப்பதைக் குறித்து பலரும் நான் சந்திக்கின்ற பொழுது பாராட்டியிருக்கின்றனர். இவற்றில், முதல் பக்கமாக ’சந்ரலேகா எம்.கே.ராதா’வினை நான் எடுத்த படம் ஒரு சமயம் வந்திருந்தது. எம்.கே.ராதாவே (எம்.ஆர்.ராதா அல்ல) என்னை வீட்டிற்கு அழைத்துப் பாராட்டியிருக்கின்றார். இதெல்லாம் ஆனந்தகிருஷ்ணனுக்கு கிடைக்கவில்லை, பிலிம்நியூஸ் ஆனந்தனுக்குத்தான் கிடைத்தது.

”பிலிமோகிராஃபி” என்று சொல்வதானால், ஒரு படத்தை எடுத்துக்கொண்டு அப்படம் என்று வெளியானது?, அதன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? நடிக நடிகையர் எவர்? என அனைத்து விபரங்களையும் குறிப்பெடுக்கும் முறையே இது. இவ்வழக்கம் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொருபடத்திற்கும் அதன் தரவுகளுக்காக குறைந்தது ஆறுபோட்டோக்களாவது எடுத்துவைத்துக்கொண்டு அதன்விபரங்களை குறித்துவைப்பேன். இது எனக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தினால், 1931லிருந்து வெளியான படங்களின் தொகுப்புகளையும் அலைச்சல்களினூடே சேர்க்க ஆரம்பித்தேன்.
1931ல்தான் தமிழின் முதல் பேசும்படம் ’காளிதாஸ்’ வெளியானது. இதில் வேடிக்கை என்னவென்றால் 1931ல் தான் காளிதாஸ் வெளியானது என்று தெரிந்துவைத்திருக்கின்ற பலருக்கும், அப்படம் எந்த தேதியில் வெளியானது என்பது தெரியாது. எனக்கும் முதலில் தெரியாது, என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பின்பு ஒருநாள் வேறு ஓர் படத்தினது தகவல்களுக்காக பழைய இதழ்களை ”சித்ராலயா”, அலுவலகத்தில் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் கண்களில் 1930ஆம் ஆண்டினது ’சுதேசமித்திரன்’, இதழ் பார்வையில் தெரிந்தது. ஆனால் அப்போதைய நாளில் எனக்கான நேரமின்மை காரணமாக, அடுத்த நாளிலும் அந்த அலுவலகத்திற்குச் சென்றேன். நான் அடிக்கடி அங்கு வந்துபோகின்ற நபராதலால் என் தேடலுக்கு குறுக்கே யாரும் நிற்கவில்லை. பின்னர் 1931 ஜனவரி மாத, சுதேசமித்திரன் கிடைத்தது. இதில் ”காளிதாஸ்” வெளியீடு சம்பந்தமான செய்திகள் ஏதும் வரவில்லை, பின்பு இப்படியே பிப்ரவரி, மார்ச் என்று வரிசையாக வந்ததில் அக்டோபர் மாத ”சுதேசமித்திரன்”, இதழ் வரைவந்துவிட்டேன். காளிதாஸ் பற்றிய சிறு துணுக்கும் இல்லை. இனிமேல் கிடைக்காதோ என்று முடிவிற்கும் வந்தவனாக நான் இருக்கையில், கொஞ்சம் தானே மீதமிருக்கின்றது, தேடிப்பார்ப்போம் என்று தொடர்ந்து தேடியதில் 31ம்தேதி அக்டோபர் மாத செய்தித்தாளில் 5 செ.மீட்டர் கட்டத்தில் காளிதாஸ் வெளியானதற்கான செய்திகள் என் பார்வைக்கு கிடைத்தன. அதில் ”கினிமா ஸெண்டரில் தமிழ், தெலுங்கு, பாஷையில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள்” என்று அச்சிடப்பட்டிருந்தது. “கினிமா ஸெண்டர்”, அப்போது ப்ராட்வேயில் இருந்ததாக ஞாபகம். இந்தப் படத்தில் இடம்பெறக்கூடிய சிலகாட்சிகள் குறித்தும், பேசும் படத்திற்கான அனுபவங்கள் சில பற்றியும் அக்டோபர் 30ம் தேதி இதழில் சில குறிப்புகள் பத்திரிக்கையாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நான் ஒன்று அறிந்துகொண்டேன்., அப்பொழுதே பத்திரிக்கையாளர்களுக்கு முன்காட்சி (Preview) காட்டப்படும் வழக்கம் இருந்திருக்கின்றது. அர்தேஸிர் இரானி தயாரித்து, ஹெச்.எம்.ரெட்டி என்பவரை இயக்குனராகக் கொண்டு வெளிவந்த படமே ‘காளிதாஸ்’.
இதில் நாயகனாக நடித்தவன் தெலுங்கு பேசத்தெரிந்தவன், அதனால் அவர் தெலுங்கு பேசுவார், தமிழின் முதல் படமான நடராஜ முதலியாரின் கீசகவதம் படத்தில் நடித்த டி.பி.ராஜலக்ஷ்மிதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. இது அவரது சிறப்பு, முதல் பேசும் படகதாநாயகியும் அவர்தான், தமிழின் முதல் படகதாநாயகியும் அவர்தான். இவரோ தமிழ். இந்தப் படத்தில் நடித்த எல்.வி.பிரசாத்திற்கு ஹிந்தி தான் நன்றாக பேசவரும் என்பதால் அவர் ஹிந்தியில் பேசினார். இத்தோடு ராஜலக்‌ஷ்மி இயக்குனர் எச்.எம்.ரெட்டியிடம் “சார் நான் தெலுகுல தியாகராஜ கீர்த்தனை எல்லாம் நல்லாப்பாடுவேன் “ என்றிருக்கின்றார். ராஜலக்‌ஷ்மியின் வற்புறுத்துதலின்பேரில் அந்தப்படத்தில் தெலுகு தியாகராஜகீர்த்தனையும் இடம் பெறுகின்றது. இதோடு மட்டுமின்றி புராணப்படம் என்பதை மறந்து குறத்திப்பாடலும் இதில் வருகின்றது. இத்தனையும் சேர்த்துப்பார்த்தாலும் இந்தப்படம் ஒருமணி நேரம் பதினைந்து நிமிடங்கள் கால அளவுடன் வெளிவந்த படமாக இருந்திருக்கின்றது. எனினும் எந்தப் பத்திரிக்கையிலிருந்தும் ”காளிதாஸ்”க்கு காட்டமான விமர்சனம் எழுதப்படவில்லை. தமிழின் முதல் பேசும் படம் என்பதால் அதனை வரவேற்போம் என்று விமர்சனம் எழுதாமல் தவிர்த்திருக்கின்றனர் பத்திரிக்கையாளர்கள். இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து நான் மேற்கொண்டு வருவதனால் எனக்கு ”பிலிம் ஹிஸ்டாரியன்”, என்ற பெயர் கிடைத்தது.


1980க்கு முன்பு வரை மெட்ராஸில் மட்டுமே ஸ்டுடியோக்கள் இருந்தன. எனவே பிற மாநிலத்தவரும் மெட்ராஸை நம்பியே இருந்தனர். ஆனால் எண்பதுக்கு பிற்பாடு ஆந்திராவின் ஹைதராபாத்திலும் ஒரு ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. பின்பு ஆந்திர அரசாங்கமே தமிழ்நாட்டில் நடித்துக்கொண்டிருந்த அம்மாநில நடிகர்களை ஆந்திராவிற்கே வரும்படி அழைப்பு விடுத்தது. அரசின் ஆணைக்கு மறுப்பேதுமின்றி அவர்களும் இசைந்தனர். இதனால் ’நாகேஸ்வர்ராவ்’ , ’அஞ்சலிதேவி’ ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டுமொழியிலும் ஒரே நேரத்தில் தயாரான “எங்கள் செல்வி”, என்ற திரைப்படத்தின் கடைசிநாளின் பொழுது, நாகேஸ்வர்ராவ் திரையுலகினருக்கு தன் சார்பில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அச்சமயத்தில் ’கல்கி’ இதழில் நாகேஸ்வர்ராவ் குறித்தான விமர்சனம் வெளியாகியிருந்தது. ”படம் நன்றாகயிருக்கின்றது, நடிப்பும் நன்றாகயிருக்கின்றது, ஆனால் அவர் உச்சரிக்கின்ற தமிழ்தான் சரியில்லை,” என்று இதழில் குறிக்கப்பட்டிருப்பதை மேடையிலேயே சுட்டிக்காட்டி பேசிய நாகேஸ்வரராவ், ”நல்ல படத்துல நான் நடிக்கிறேன், ஆனால், இங்கு இருக்கிற தமிழர்களுக்கு அதுபிடிக்கல. பத்திரிக்கையிலேயே எழுதி திட்டறாங்க, தமிழுக்கு நன்றிசொல்லி விட்டு எங்கள் ஊருக்குப்போகிறேன்”, என்று பொருள்படும்படியாக பேசியுள்ளார். நாகேஸ்வரராவும், சிவாஜியும் ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்வது வரையிலான நெருக்கம். அந்த மேடையிலேயே சிவாஜிகணேசனும் இருக்கின்ற காரணத்தினால் நாகேஸ்வரராவின் பேச்சின் பொருளில் அவருக்கும் கோபம். எனினும் தன் முறை வரும்வரை அமைதியோடு காத்திருந்தார்.
தொடரும்...