ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 2

’புதிய ஜெர்மன் சினிமா’ (New German Cinema) உருவான நேரத்தில் நீங்கள் இயக்கிய ‘Signs of Life’(1968) வெளிவந்தது. ஃபாஸ்பைன்டர் இயக்கத்தில் ’Love is Colder than Death’ போன்ற அவரது முதல் கட்டத் திரைப்படங்கள் அந்நேரம் வெளிவந்திருந்தன. ஸ்க்லாண்ட்ராப்பின் ‘Young Torless’, விம் வென்டர்ஸின் குறும்படங்கள் வெளிவந்திருந்தன. உங்களை ஒரு புதிய இயக்கத்தின் அங்கமாக அந்நேரம் உணர்ந்தீர்களா?
’புதிய ஜெர்மன் சினிமா’ என்பது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது அல்ல. அதற்கு முந்தைய ’ஓபர்ஹாஸென் அறிக்கை’ (Oberhausen Manifesto) காலத்திற்கு முன்பே திரைப்படங்களை இயக்கி அளிக்கத் தொடங்கியிருந்தேன். அந்த அறிக்கை உருவானது கூட எனக்குத் தெரியாது. நான் முதலிலிருந்தே ஜெர்மனிக்கு வெளியே அதிகக் காலம் கழித்தவன். புதிய ஜெர்மன் சினிமாவின் முக்கிய காலமாகக் கருதப்படும் 1970களில் உலகின் பல பாகங்களில் படப்பிடிப்புகளில் ஈடுபட்டிருந்தேன். புதிய அலையின் முதல் கட்டத்தைச் சேர்ந்தவர்களாக ’ஓபர்ஹாஸென் அறிக்கை’ குழுவைச் சொல்லலாம். அவர்களில் பலர் விரைவில் காணாமற் போய்விட்டனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட இருபத்து ஆறு இளம் இயக்குநர்களில் முக்கியமான இருவர் க்ளூஜ்(Alexander Kluge) , ரெய்ட்ஸ்(Edgar Reitz) . நான் இரண்டாவது அலையைச் சேர்ந்தவன் ஃபாஸ்பைன்டரும் விம் வென்டர்ஸும் பிறகு வந்த மூன்றாவது அலையைச் சேர்ந்தவர்கள். எங்களுக்குப் பின் சிறந்த திரைப்படங்களுடன் வந்த இயக்குநர்கள் திரைப்படத்துறையில் தொடரவில்லை; அதிகப் பணம் கிடைக்கும் தொலைக்காட்சிப் படைப்புகளை இயக்கச் சென்றுவிட்டனர்.

ஜெர்மனியின் திரையுலகில் நிகழ்ந்துகொண்டிருந்த மாற்றங்கள் வெளி உலகுக்கு எப்போது தெரிய வந்தன?

ஜெர்மனிய இயகுநர்களின் திரைப்படங்கள் சர்வதேச அளவில் திரையிடப்பட ‘புதிய ஜெர்மன் சினிமா’ காரணமாயிற்று. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை வெளியுலகு அறியவந்த நேரம் இந்த இயக்கம் நீர்த்துப்போன நிலையை அடைந்திருந்தது. போருக்குப் பின் ஜெமனியின் மீது உலகம் முழுவதும் நிலவிய வெறுப்பால் ஜெர்மனியத் திரைப்படங்களை பிற நாடுகளில் திரையிடுவது சிரமமானதாக ஆகிவிட்டிருந்தது. இரு முக்கிய பணிகள் இருந்தன. ஒன்று போரில் அழிந்த நகரங்களை மீண்டும் உருவாக்குவது. இரண்டாவது, ஜெர்மனியின் மீதான மதிப்பை உலக மக்களிடம் மீட்டுப் பெறுவது. இரண்டும் இன்றுவரை போராட்டமாகவே இருந்துவருகிறது. போர் முடிந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆகிவிட்ட போதிலும் இன்னும் இந்த நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது.

இன்று ஜெர்மனி அதன் சினிமாவுக்காக அறியப்படும் நாடு அல்ல எனபதை என்னல் சொல்ல முடியும். சினிமாவின் வளர்ச்சிக்கான தூரப் பார்வையோ, ஆர்வமோ சற்றும் இல்லாத ஒரு நிலை இன்று நிலவுகிறது. திரைப்படப் பள்ளிகளிலிருந்து வெளிவரும் அநேக படைப்பாளிகள் ஒரு சில திரைப்படங்களுக்குப் பின் காணாமற் போய்விடுகின்றனர். படமெடுப்பவர்களும் ஹாலிவுட் பாணியில் படமெடுக்கவே முயலுகின்றனர்.

புதிய அலையின் உச்சகட்டமான 1970களில் கூட ஜெர்மனியப் படைப்பாளிகள் தங்கள் திரைப்படங்களை சர்வதேச அளவில் வெளியுலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் எனது படைப்புகளை எல்லைக்கு வெளியே கொண்டு சென்றேன். Aguirre: The Wrath of God (1972), The Enigma of Kaspar Hauser (1974) போன்ற திரைப்படங்கள் லண்டன் பார்வையாளர்களாலும், பெருவின்(Peru) இந்தியப் பழங்குடிப் பார்வையாளர்களாலும் ரசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது மிகுந்த மனநிறைவைத் தந்தது.

1970களில் வெளிநாடுகளில் படமெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் பிற ஜெர்மனிய இயக்குநர்களுடன் உங்களுக்குத் தொடர்பு இருந்ததா?

அந்நேரத்தில் பிற ஜெர்மனிய இயக்குநர்களுடன் ஒப்பிடும்போது ஒரு அந்நியனாகவே என்னை உணர நேர்ந்தது. ஃபாஸ்பைன்டரைச் சந்திப்பது உண்டு. அன்பான மனிதர்; நல்ல நண்பர். ஃபாஸ்பைன்டர் வருடத்திற்கு இரண்டு, மூன்று என மிக விரைவாகப் படைப்புகளை அளித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களில் ஐந்து! இந்த அளவு அவசரம் தேவையில்லை என்பது எனது கருத்து. அவர் படைப்புத் திறன் மீதான நம்பிக்கை குறையும் நேரம் திடீரென ஒரு அற்புதமான படைப்பைக் கொடுத்துவிடுவார். விம் வென்டர்ஸ் என்னைப்பற்றி அக்கறை கொண்ட நெருங்கிய நண்பர். இவரும் என்னைப் போலத் திரைப்படக் கலையை தனக்கான வழியில் எடுத்துச் சென்றுகொண்டிருப்பவர்.
1970இல் ஜெர்மனியத் திரைப்படத்துறையை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்ததில் தொலைக்காட்சித் துறை பெரும் பங்கு வகித்துள்ளதல்லவா?

திரைப்பட, தொலைக்காட்சி ஒப்பந்தம் (Film/Television Agreement) இணைத் தயாரிப்புகளுக்கு வழிவகுத்தது. இதனால் அரங்கங்களில் திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் மட்டுமே திரைப்படங்கள் தொலைக்காட்சி நிலையங்களால் ஒளிபரப்பப்பட்டன. நான் Aguirre: The Wrath of God திரைப்படத்தை எடுத்து முடித்தபோது கையில் பணம் இல்லாத நிலையில் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமையை விற்கவேண்டியதாயிற்று. அதனால் Aguirre இன் முதல் காட்சி திரையரங்கங்களில் திரையிடப்பட்ட அதே நேரத்தில் தொலைக்காட்சியிலும் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் வெளிவந்த என் படைப்புகளின் ஒளிபரப்புக்கு இரண்டு வருடங்கள் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

உங்கள் திரைப்படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒளிபரப்பிற்காக ஒரு திரைப்படத்தை ஐம்பத்து ஒன்பது நிமிடம் முப்பது நொடிகளுக்கு குறைப்பது போதுமானதல்ல என நான் கருதியிருப்பேன் ஆனால் திரைப்படத்தை தொலைக்காட்சிக்காக மாற்றி அமைப்பதைத் தவிர்த்திருந்திருப்பேன். எண்பது நிமிடங்கள் ஓடும் Little Dieter Needs to Fly (1998) ஆவணப் படத்தைத் தொலைக்காட்சிக்காகச் சரியாக நாற்பத்து நான்கு நிமிடங்கள் முப்பது நொடிகளாக சுருக்கி அளிக்கவேண்டியதிருந்தது. அதன் பெயரையும் Escape from Laos என மாற்றிவிட்டேன். ஒரு மணி நேரம் ஓடும் The Great Ecstasy of Woodcarver Steiner (1974) படத்தை ஜெர்மனியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவேண்டுமென விரும்பினேன். அதை அறிமுகம் செய்ய ஐம்பது நொடிகள் தேவைப்பட்டதால் நாற்பத்து நான்கு நிமிடம் பத்து நொடிகளுக்குச் சுருக்கி அளிக்கவேண்டியதிருந்தது. இதனால் திரைப்படக் கலை மீதான எனது மதிப்பை எவ்வித்திலும் சமரசப்படுத்திகொண்டதாக நான் கருதவில்லை. திரைப்படத்தை உருவாக்குவது செயல் நுட்பத்தைச் சார்ந்தது எனக் கருதுபவனாததால் எனது படைப்புகள் பார்வையாளரை எவ்வாறு சென்றடையவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாகச் சமீபகலமாக நிலை மாறிவிட்டிருக்கிறது. தர மதிப்பீட்டு எண்கள்(rating figures) தொலைக்கட்சி நிறுவனங்களின் கடவுள்களாகிவிட்டன. உலகம் முழுவதும் ஊடகங்கள் இந்த எண்களைக் கொண்டே மதிப்பிடப்டபடுகின்றன.
உங்களுக்கும் ஜெர்மனிய விமரிசகர்களுக்குமிடையே எப்போதும் கருத்து வேற்றுமை நிலவுகிறதே. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் வெற்றி பெறும் உங்கள் படைப்புகள் ஜெர்மனியில் ஏன் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை?

இங்கிலாந்து, பிரான்ஸோடு அல்ஜீரியா, ரஷ்யா, அர்ஜென்ட்டீனா ஆகிய நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம் ஜெர்மனியில் திரைப்படத்தை விட தொலைக்காட்சியை அதிக மக்கள் பார்க்கின்றனர். ஜெர்மனியர்கள் என்றுமே தங்கள் கவிகளை மதித்ததில்லை. இது பல நூற்ண்டுகளாகத் தொடர்ந்து வரும் வழக்கம். இறந்து பல ஆண்டுகள் கழிந்தபின் ஏற்றுக்கொள்ளுவார்கள். எனது படைப்புகளுக்கும் இந்த நிலைதான் எனக் கருதுகிறேன். அயர்லாந்தில் ஒரு தங்கும் விடுதியில் என் தொழில் பற்றிக் கேட்டபோது இயக்குநர் என்று சொல்லாமல் கவிஞன் என்று சொன்னேன். அன்பாக வரவேற்று, பாதி வாடகைக்கு தங்குமிடம் தந்தார்கள். ஜெர்மனியில் இவ்வாறு சொல்லியிருந்தால் கதவை இழுத்து முகத்தில் மூடியிருப்பார்கள்.

Aguirre: The Wrath of God படத்திற்கான செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது ஜெர்மனியர் பக்கமிருந்து தொடர்ந்து சிரிப்பொலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஜெர்மனியப் பார்வையாளர்களின் இந்தத் தன்னம்பிக்கையற்ற நிலைக்கு அடிப்படையாகக் கடந்த நூறு வருடங்களில் பேரழிவுகளையும், பெரும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய இரு உலகப் போர்களுக்கு ஜெர்மனிதான் காரணம் என்ற குற்ற உணர்வைச் சொல்ல்லாம். போருக்கு பின் ஜெர்மனியர்களை இந்த உணர்வு எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கச் செய்துவருகிறது. யாராவது தமது கலைப்படைப்பை ஜெர்மனியை விட்டு வெளியுலகுக்கு எடுத்துச் செல்ல முயலும் போது அனைவரும் அதை சந்தேகக் கண்களுடன் காண்பது வழக்கமாகிவிட்டது.

உங்களின் முதல் திரைப்படம் Signs of Life, எழுத்தாளர் அச்சிம் வான் ஆர்னிமுடைய சிறுகதை ஒன்றை அடிப்படையகக் கொண்டது. இவருடைய எழுத்துக்கள் உங்களை எந்த விதத்தில் பாதித்திருந்தன?

ஆர்னிமின் அந்தக் கதையில் வயதான, ஊனமுற்ற ஒரு கர்னல், மரத்திலான தனது செயற்கைக் கால் குளிருக்காக மூட்டப்பட்ட தீயில் எரிந்து கொண்டிருப்பதுகூட தெரியாமல் தன்னை மறந்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். கதையின் இப்பகுதி என்னை திரைக்கதை எழுதத் தூண்டியது எனலாம். மற்றபடி பதினைந்தாவது வயதில் நான் மேற்கொண்ட கிரீஸ் பயணம் இக்கதைக்கு வலுவான அடிபடையாக அமைந்தது. பல வருடங்களுக்கு முன் கிரீஸில் எனது பாட்டனார் சென்றிருந்த பாதையில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். இளம் வயதிலேயே பல்கலைக் கழக செவ்வியல் துறைக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருந்த அவர் அதைத் துறந்துவிட்டுக் கிரீட் தீவில் முக்கியமான அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

கிரீட் தீவின் மலைகளில் அலைந்துகொண்டிருந்த போது ஒரு பள்ளத்தாக்கில் மனதைக் கிறுகிறுக்க வைக்கும் காட்சி ஒன்றைக் கண்டேன். பத்தாயிரம் காற்றாடி ஆலைகள் மலர்களுக்கு மதம் பிடித்துக்கொண்டது போல் சுற்றிக்கொண்டிருந்தன. என்னைக் கிள்ளிப் பர்த்துக்கொண்டேன். நிஜம் தான். பரவசமளிக்கும் விசித்திரமான அந்தக் காட்சியை என்றாவது ஒரு நாள் எனது திரைப்படத்தில் கொண்டுவரவேண்டும் என நினைத்துக் கொண்டேன். Signs of Life திரைப்படத்தின் மையப் பகுதியாக இந்தக் காட்சி அமைந்தது. இந்தக் காற்றாலைகளை அன்று காணாதிருந்தால் பரவசமளிக்கும் இந்த நிலப்பரப்பை வான் அமிம் கதையுடன் இணைத்திருந்திருக்க முடியாது.
Signs of Life இல் கிரீட் தீவின் அற்புதமான நிலப்பரப்புகளைக் காணலாம். எழுத்துக்கள் காண்பிக்கப்ப்டும் முதல் காட்சியில் வழக்கத்திற்கு மாறாக மலைப் பள்ளத்தாக்கு அதிகநேரம் ஒரே காட்சியாக காண்பிக்கப்படுகிறது; அந்த மலையின் நிலப்பரப்புகளுக்குள் பள்ளத்தாக்கின் வழியே நீங்கள் ஏறிச்செல்வதற்கும், அந்த மலையின் அற்புதப் பரப்புகள் உங்களுள் வந்து சேருவதற்கும் தேவையான நேரம் கொடுக்கப்படுகிறது. நாம் கண்டுகொண்டிருப்பது வெறும் மலைப்பரப்புகளாக மட்டுமல்லாது, நம்முள்ளிருக்கும் மனப்பரப்புகளாகவும் ஆகின்றன.

இந்தத் திரைப்படத்தை இரண்டாவது உலகப் போர் நேரத்தில் நிகழ்வதாக ஏன் கட்டியிருக்கிறீர்கள் ?
கிரீஸை நாஜிகள் ஆக்கிரமித்திருந்தது அடிப்படையான ஒரு விஷயம் மட்டுமே. சரித்திரக் கதையாக சிலர் இதை எடுத்துக்கொள்ளலாம். சரித்திரத்தை சொல்ல நான் முடிவு செய்திருந்தால் கையில் ஒரு மைக்குடன் ஒலிபெருக்கி வழியாக இதைப்பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றியிருக்க முடியும். இப்படத்தைப் பொறுத்தவரையில் சரித்திர உண்மைகள் என்னை ஈர்க்கவில்லை. கதையில் இரண்டாம் உலகப்போர் பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.

இக்கதையை பண்டிதத்தனமாக சரித்திர உண்மைகளைக் கொண்டு அணுகும்போது உண்மைக்குப் புறம்பானவற்றைக் காணவேண்டி வரும். இப்படத்தில் காண்பிக்கப்படுவது காப்டனுக்கு சல்யூட் செய்யாமல் சட்டை அணியாமல் வெறுங்கால்களுடன் நடமாடும் படைவீரர்கள். இவர்களுக்கும் ஹிட்லரின் ரணுவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 1950ஆவது வருட வாகனம் ஒன்று படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ குறிப்பிட்ட போரையோ பற்றியதல்ல. இரண்டம் உலகப்போரின் வன்முறைகளையும். அபத்தங்களையும் இதுவரை அளிக்கப்படாத மற்றொரு கோணத்தில் இக்கதை சொல்கிறது. அழிவுக்கான ஆயுதங்கள் மனிதரின் கையில் கிடைக்கும் போது என்ன நேருகிறது என்பதை சொல்கிறது. போரின் அபத்த நிலை, ஆக்கிரமிக்கும் ரணுவத்திற்கும் அங்கு வாழ்பவர்களுக்கும் இடையே உருவாகும் இருத்தலியல் பிரச்சினைகளைக் கொண்டு வெளிப்படுத்தப்படுகிறது.

படப்பிடிப்பு எளிதாக நடந்து முடிந்ததா?

நான் எப்போதும் சிக்கலான பிரச்சினைகளை ஈர்ப்பவன் என்பது இந்த படத்திலிருந்து தொடர்ந்த எனது படைப்புகள் அனைத்திலும் நிரூபணமானது. Signs of Life படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று அனைத்தும் தயாரக இருந்த நிலையில் படப்பிடிப்புக்கு மூன்று வரங்களுக்கு முன் கிரீஸ் நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. ரயில்கள் எல்லைகளோடு நிறுத்தப்பட்டன. காரில் வழியில் எங்கும் நிறுத்தாமல் ஏதென்ஸ் வந்து சேர்ந்தேன். படப்பிடிப்புக்கான லைசன்ஸ் ரத்துசெய்யப்பட்டிருந்தது. எப்படியோ சமாளித்து துவங்கிய படப்பிடிப்பில் கதாநாயக நடிகருக்கு குதிகாலில் அடிபட்டு ஆறு மாதங்கள் நடிக்க முயாமற் போயிற்று. அதற்குப் பிறகு இடுப்பிற்கு மேல் மட்டுமே அவரைக் காமெராவில் காட்ட முடிந்தது. வாணவேடிக்கைக் காட்சி எடுப்பதற்கு கைது செய்யும் அளவுக்கு தடை இருந்தது. எந்தப் படப்பிடிப்பிலும் ஒரு இயக்குநர் தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பல பிரச்சினைகளைக் கட்டாயம் சந்திக்கவேண்டி வரும். திரைப்படமெடுப்பதில் பிரச்சினைகள் என்பவை இயற்கையாகவே இணைந்திருப்பவை என்பதை உணர்ந்தேன். இந்த்த் திரைப்படம் எனக்கு நல்ல பாடமாக அமைந்த்து.

Last Words குறும்படம் எவ்வாறு உருவானது ?

Signs of Life எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் உருவான குறும்படம் Last Words. இரண்டு நாட்களில் எடுத்து ஒரே நாளில் எடிட் செய்து முடிதேன். திரைப்பட உருவாக்கத்தில் புதிய முறைகளைப் பரிசோதித்துப்பார்க்கும் முயற்சியில் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பியதன் விளைவு இந்தக் குறும்படம். முழுக்க அறிமுகமற்ற புதிய எல்லைகளுக்குள் துணிவுடன் செல்லும் வாய்ப்பை உருவாக்கிய படம்.

தொழு நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு தீவிலிருக்கின்றனர். அவர்களைக் காவலர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது மனநிலை பிழன்ற ஒருவர் அங்கிருந்து வெளியேற மறுக்கிறார். காவல்துறை வலுக்கட்டாயமக அவரை வெளியே கொண்டுவருகிறது. அவர் பேசுவதில்லை. இரவுகளில் தனது இசைக்கருவியை மீட்டிக்கொண்டிருக்கிறார். வழக்கமான முறையில் இந்தக் கதை சொல்லப்படுவதில்லை. இன்றும் புதிய முறைகளில் கதையை எடுத்துச்செல்வதற்கும், கதை சொல்லும் விதிகளை மீறுவதற்கும் தேவையான மன உறுதியையும், துணிச்சலையும் ஊக்கத்தையும் இந்தக் குறும்படம் எனக்கு அளித்து வருகிறது.

உங்களின் முதல் வண்ணப்படம் Precaution Against Fanatics விசித்திரமான சிரிப்புப் படம். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.

கதை சொல்வதில் Last Words போன்று இது ஒரு துணிவான முயற்சி. விசித்திரமான சிரிப்புப் படம், ஆனல் ஜெர்மன் மொழி தெரியாதவர்களால் இத்தன்மையை உடனே உணர முடியாது. என்னை சிரிப்பில்லாத முகத்தைக் கொண்டவன் என ஒரு பத்திரிகை விவரித்தது. என் திரைப்படங்களில் சிரிப்பை ஓரளவு எதிர்பார்க்கலாம். ம்யூனிக்கில் குதிரைப்பந்தயம் நடக்குமிடத்திற்குச் சென்றபோது அதைப்பற்றி திரைப்படம் எடுக்க முடிவு செய்தேன். கொடாக் பிலிம் நிறுவனத்திடம் அவர்களால் கழித்துவைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற வண்ண பிலிம் சுருள்களை எனக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். இவை உபயோகிக்க முடியாத பிலிம் சுருள்கள் எனத் தெரிந்து நான் பெற்றுக்கொள்வதாகவும் பின்விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பில்லை எனவும் எழுதிக்கொடுத்தபின் இந்தப் பிலிம் சுருள்கள் எனக்குக் கிடைத்தன. துணிந்து இச்சுருள்களைப் பயன்படுத்திப் படமெடுத்தேன். எந்தப் பிரச்சினையும் எழவில்லை.

இந்த நேரம் ஆப்பிரிக்கா சென்று, Fata Morgana, Even Dwarfs Started Small, Flying Doctors of East Africa ஆகிய மூன்று வித்தியாசமான திரைப்டங்களை உருவாக்கியுள்ளீர்கள்.

Flying Doctors of East Africa ஆப்பிரிக்காவில் தான்சனீயாவிலும் கென்யாவிலும் படமாக்கப்பட்டது. அந்த மருத்துவர்களுடன் பணிபுரிந்தவர்கள் கேட்டுக்கொண்டதால் படமாக்கினேன். இது ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பது போன்ற முறையில் உருவான படம். கண்நோய் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் குருடர்களாக ஆகிக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர்கள் அதற்கான மருந்துகளை மக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர். எனக்குப் பிடித்த முறையில் உருவாக்கியிருந்தபோதும் என் முக்கிய படைப்புகளில் ஒன்றாக இதைக் கருதுவதில்லை.
Even Dwarfs Started Smallக்கு முன்பே எடுக்கப்ட்ட Fata Morgana சில வருடங்கள் கழித்து வெளியிடப்பட்டது ஏன்?

முப்பது வருடங்கள் கழிந்தபின் Fata Morgana இன்றைய தேதியிலும் அதே உயிர்த்துடிப்புடன் பார்வையாளரைப் பாதிக்கும் படைப்பு. எடுத்து முடிதபின் பர்வையாளர்களுக்குக் காட்டுவதை தள்ளிப்போடலாம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. உடனே வெளியிடவில்லை இரண்டுவருடங்கள் கடந்தபின் இப்படப் பிரதியை என்னிடமிருந்து இரவல் வாங்கிய நண்பர்கள் இருவர் கான் திரைப்பட விழாக்குழுவிடம் அதை அளித்துவிட்டனர். வெளியிடப்பட்டவுடன் அப்போதைய இளம் தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாகியது. முதல் சைக்கிடெலிக் அநுபவக் கலைப் படமாக – அவ்வாறான படைப்பாக இல்லவிடினும் – எடுத்துக்கொள்ளப்பட்டது.

Fata Morgana படத்திற்கான திரைக்கதையுடன் ஆப்பிரிக்கா சென்றிருந்தீர்களா அல்லது அங்கு காண்பவற்றை ஆவணமாகப் பதிவுசெய்ய நினைத்திருந்தீர்களா?

Fata Morgana அதிக சிரமங்களுடன் உருவாக்கப்பட்ட படம். ஆப்பிரிக்காவில் மிக எச்சரிக்கையுடன் படமெடுக்க முயன்றபோதும் பல சிக்கல்களும் பிரச்சினைகளும் உருவாகின. எனது ஆப்பிரிக்க அனுபவங்களை நினைத்துப் பார்க்கும்போது எப்போதுமே அடிவயற்றில் பயத்தைக் கிளறுபவையாகவே இருக்கின்றன. யானை சுடும் துப்பாக்கியோடு ஆப்பிரிக்கப் பணியாட்கள் சாமரம் வீச மிருகங்களை வேட்டையாடச் சென்ற எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிளிமஞ்சாரோ அனுபவங்களைப் பெறும் ஆசையோடு நான் ஆப்பிரிக்கா செல்லவில்லை. தெற்கு சஹாரா பாலைவனத்தில் ஒரு அறிவுப்புனைவு திரைப்படத்தை உருவாக்குவது எனது திட்டம். ஆனால் முதல் நாள் படப்பிடிப்பின் போதே அத்திட்டத்தைக் கைவிட்டேன். நான் கண்ட பாலைவன நிலப்பகுதிக் காட்சிகள் என் மனதை மாற்றிவிட்டன. கதையை புறந்தள்ளிவிட்டு அப்பகுதியில் காணக்கிடைத்தை அற்புதமான கானல் காட்சிகளை (Mirages) படமெடுக்கத் தொடங்கினேன். பதினெட்டு மாதக் குழந்தை உலகை முதல் முதலாக அறியத் தொடங்குவது போன்ற அனுபவம்.

Fata Morgana என்பதற்கு கானல் என்று அர்த்தம். முதல் பகுதியில் எட்டு வெவ்வேறு காட்சிகளில் எட்டு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன. நேரம் ஆக ஆக நாளின் வெப்பம் கூட, இறங்கும் விமானங்களின் பிம்பங்கள் அதிர்வாக, தெளிவில்லாது தெரியத் தொடங்குகின்றன. உடலில் காய்ச்சல் அதிகரிக்கும் போது பாதிக்கப்படும் பார்வை கொண்டு காண்பதைப்போன்ற ஒரு நிலை. பாலைவனத்தில் கானலை அழகாகப் படம்பிடிக்கலாம். கானல் நிஜப் பொருளின் பிரதிபலிப்பு: கண்களால் காணலாம் ஆனால் தொட முடியாது, நிஜத்தில் அது அங்கிருக்காது.

தொலைவில் அடிவானத்தில் பஸ் நீரில் மிதந்து செல்வது போலவும், மக்கள் தரைக்கு மேல் வழுக்கிச் சென்று கொண்டிருப்பது போலவும் கண்களுக்குத் தெரியும். பஸ்ஸைப் படமெடுத்தபின் அதைப் பார்ப்பதற்கு அருகில் சென்றால் அங்கு ஒன்றுமில்லை- தரையில் அதன் சக்கரத் தடங்கள் இல்லை! பல நூறு மைல்களுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கும் ஒரு பஸ் அதீத வெப்பத்தின் காரணத்தால் நம் கன்களுக்கு அவ்வாறு கானலாகத் தோன்றியிருக்கிறது. தாங்க முடியத அளவு வெப்பம். எப்போதும் தாகமுடன் இருந்தோம்.

ஒரு சின்னக் குழுவுடன் கையில் பணமும் அதிகம் இல்லாமல் சஹாரா பாலைவனத்தின் நடுப்பகுதியில் எப்படிப் படமெடுக்க முடிந்தது?

ஆப்பிரிக்காவிற்கு வரும் வழியில் இரவில் எங்கள் இரண்டு கார்களிலேயே படுத்துறங்கினோம். ஹோட்டலில் தங்கவில்லை. பாலைவனத்தில் படச்சுருள் எமல்ஷன் (Emulsion) வெப்பத்தில் இளகிவிடும். அடிக்கடி அடிக்கும் மணற் காற்றில் காமெராக்களுள் மணல் புகுந்துவிடும். நகரும் காட்சிகளுக்கு(tracking shots) காமெராவை நாங்கள் பயணம் செய்த வோல்க்ஸ்வாகென் வான் மீது வைத்து, நான் மெதுவாக ஓட்ட, ஓளிப்பதிவாளர் மேலிருந்து படமெடுப்பார். படத்தில் காணப்படும் இயந்திரப் பகுதிகள் அப்பகுதியிலிருந்த பாழடைந்த அல்ஜீரிய ராணுவ டெப்போ ஒன்றிலிருந்தவை.
தான்சனீயாவிலும் கென்யாவிலும் இப்படத்தின் பகுதிகளை எனது ஒளிப்பதிவாளர் தாமஸ் மாக் (Thomas Mauch) கொண்டு படமாக்கினேன். தொடர்ந்து உகாண்டாவில் படப்பிடிப்பு. நாங்கள் படமெடுத்த பகுதியை காவல்துறையினர் பார்க்க முயன்றபோது வரப்போகும் ஆபத்தை உணர்ந்து அங்கிருந்து அவசரமாக ஜெர்மனிக்குத் திரும்பினோம். மீண்டும் இரு வாகனங்களில் சஹாரவை பலமுறை கடந்திருந்த நண்பர், மற்றொரு நண்பர் ஆக இருவருடன் நானும், ஒளிப்பதிவாளருமாக நால்வர் படமெடுக்க சஹாரா பாலைவனத்திற்கு பயணத்தைத் தொடங்கினோம். துவக்கத்திலேயே ஒளிப்பதிவாளர் கை அடிபட்டு விரல் பதிமூன்று இடங்களில் நொறுங்கிவிட்டது,
பரந்த உப்புப் பரப்பில்(salt flats) முதலிலும், தொடர்ந்து அல்ஜீரிய பாலைவனப் பகுதியின் நடுவிலிருக்கும் ஹாகர் மலைப்பகுதியிலும் படமெடுத்துவிட்டு நைஜர் குடியரசின் மேற்குப் பகுதிக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். தெற்கு சஹாராவை அடைந்த போது மழைக்காலம் ஆரம்பித்தது. எங்கும் சேறும் சகதியும் மணலுமாக அபாயகரமன சூழ்நிலை. ஆனால் வெப்பம் அதிகரிக்கும் இந்த நேரங்களில் கானல் படிமங்களைப்(mirages) படமெடுப்பது எளிது. தொடர்ந்து ஐவரி கோஸ்ட்டில் படமெடுத்துவிட்டு உகாண்டா செல்லத் திட்டம். அங்கு உள்நாட்டுப்போர் நிகழ்ந்து கொண்டிருந்ததால் காங்கோ செல்லத் திட்டமிட்டுக் காமெரூன் வரை படகில் சென்றோம்.

காமெரூனில் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. நால்வரும் கைது செய்யப்பட்டோம். எங்கள் ஒளிப்பதிவாளரின் பெயர் அவர்கள் தேடிக்கொண்டிருந்த ஜெர்மன் போராளியின் பெயரை ஒத்திருந்தது இதற்குக் காரணம். அறுபது கைதிகள் இருந்த சிறிய அறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தபோது ஒளிப்பதிவாளரையும் என்னையும் மலேரியா நோய் தாக்கியது.ஒருவழியாக விடுதலையாகி வெளியே வந்து பயணத்தைத் துவங்கியபின்னும், அந்த நாடு முழுவதும் விநியோகப்பட்டிருந்த கைது வாரண்ட் ரத்துசெய்யபடாமல் இருக்க, மீண்டும் மீண்டும் கைதாகிக்கொண்டிருந்தோம். இந்த நேரமெல்லாம் படப்பிடிப்பும் தொடர்ந்தது. இறுதியில் விமானம் மூலம் ஜெர்மனிக்குத் திரும்பினோம். இரண்டு மதங்கள் கழித்து Even Dwarfs Started Small படப்பிடிப்புக்காகக் கானரி ஐலண்ட்ஸ் சென்றபோது இப்படத்தின் இறுதிக்காட்சிகளை எடுத்து முடித்தோம்.

பாலைவனம் அதற்கான ஜீவனையும், மாயங்களையும், அபத்தங்களையும் கொண்டிருந்தது. எங்கும் அளவுக்கு அதிகமான அமைதி; தனிமையை ஆழமாக உணரச்செய்யும் அமைதி. காரில் பயனம் செய்தபோதிலும் அப்பரந்த மணற்பரப்பில் கால்களால் நடந்து செல்வது போன்ற உணர்வே மேலோங்கியிருந்தது. பாலைவனத்தில் கழித்த நாட்களின் பாதிப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. Fata Morgana திரைப்படத்தை உருவாக்கிய அனுபவம், மிக மோசமன சூழ்நிலையின் நடுவிலிருக்கும் போதும் அச்சூழ்நிலையைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் கலையைக் கற்றுத்தந்தது.
Fata Morgana என் மனதில் எப்போதும் இருக்கும் படைப்பு. இப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பேச்சுக்கு(voice over) இருவர் உதவினர். ஜெர்மன் மொழியில் பேசுவது லோட்டெ ஏயிஸ்னர். ஆங்கிலப் பேச்சை நான் பேசுவதற்கு அழகாக அமைத்துக் கொடுத்தவர் அமோஸ் வோகெல் (Amos Vogel) நான் அதிகம் மதிக்கும் அற்புதமான மனிதர். திரைப்பட அறிஞர். நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி வியென்னாவிலிருந்து புலம் பெயர்ந்து நியூ யார்க்கில் குடியேறிவர். என மகனுக்கு அவர் பெயரைச் சூட்டியிருக்கிறேன்.

Even Dwarfs Started Small படத்திற்கு நடிகர்கள் எப்படிக் கிடைத்தார்கள்? வழியில் சந்தித்தீர்களா?
ஜெர்மன் கலாச்சாரத்தில் குள்ளர்களுக்கும், சிறிய உருவம் கொண்டவர்களுக்கும் முக்கிய இடம் உண்டு. தேவதைக்கதைகள், பாரம்பரியக் கதைகள் பலவற்றில் முக்கிய பாத்திரங்களாக இவர்களைக் காணலாம். இவர்களின் பார்வையில் கதை சொல்லப்டுகிறது. தற்போதைய அசுரத்தனமன சந்தைக் கலாச்சாரத்தின் முன் நாமும் இவர்களைப் போன்றவர்களாகத் தான் இருக்கிறோம்.

நடிப்பதற்கு ஆள் கிடைக்க ஒரு வருடம் ஆனது. குள்ளர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டால் போதும். தொடர்ந்து அவர் நண்பர்களை எளிதாக சேர்த்துக்கொள்ள முடிந்தது. அவர்களைக் கலந்து ஆலோசித்தே ஒவ்வொரு கட்டமாகப் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் மனித உணர்வு அவர்கள் மேல் மதிப்பு கலந்த மரியாதையை உருவாக்குகிறது. படப்பிடிப்புக் குழுவினருடன் அனைவரும் நெருக்கமாக இருந்தனர். ஐந்து வாரங்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒலியையும் அப்போதே பதிவு செய்தோம்

இப்படம் ஜெர்மனியில் தணிக்கைக்கு உள்ளானது என அறிகிறோம்.

ஜெர்மனிய அரசியல் நிர்ணய சட்டம் எவ்வகையான தணிக்கையையும் அனுமதிப்பதில்லை. திரைப்படத் துறையினர் அவர்களாகவே ஏற்படுத்தியிருந்த விதி முறைகளைக்கொண்ட சுயதணிக்கை முறை அமலிலிருந்தது. விதிகள் மீறப்பட்டால் தண்டனை கிடையாது ஆனால் திரையரங்குகள் அப்படங்களைத் திரையிடுவதில்லை. நான் தணிக்கைக்கு அளித்தபோது தடை செய்யப்பட்டது. பல காட்சிகள் பிரச்சினைக்குரியவைகளாகக் கருதப்பட்டன. திரையரங்கங்களை நானே ஏற்பாடுசெய்து சில ஊர்களில் திரையிட்டபோது எதிர்ப்புகளும் உயிருக்கு மிரட்டல்களும் எழுந்தன. வலதுசாரி பாசிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டேன். மேல் முறையீடுகள் பல செய்தபின் வெட்டுகள் ஏதுமின்றி படம் திரையிடப்பட்டது. படத்தைப்பற்றி ஏராளமான வதந்திகள் உலவத்தொடங்கின. அவற்றை அடக்குவதற்குப் பதிலுக்கு வேறு வதந்திகளை நான் பரப்பவேண்டியதாயிற்று.

உங்களுக்கு எப்போதவது ’போர்’ அடித்திருக்கிறதா?

இல்லை. ஒருபோதும் இல்லை. ஜன்னல் வழியாக பல நாட்கள் வெறுமே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு மனைவி பயந்திருக்கிறாள். நான் இரவில் கனவு காண்பதில்லை. இரவில் கனவில் காணமுடியாதவற்றை திரையில் காட்டுவதற்காக பிம்பங்களை உருவாக்குகிறேன். நான் தொடர்ந்து பகல் கனவு கண்டுகொண்டிருப்பவன். திரையில் நான் காண்பிக்கும் பிம்பங்கள் என்னுடையவை மட்டுமல்ல; அவை உங்களுடையவையும் ஆகும்.

- தொடரும் -

பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.