ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 4

நீங்கள் இயக்கி சர்வதேச அளவில் அறியப்பட்ட முதல் திரைப்படம் Aguirre the Wrath of God. ஜெர்மன் சினிமாவில் எழுபதுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும் படைப்பு. இப்படத்தைப்பற்றி வெளியுலகுக்குத் தெரிய சற்று காலம் ஆனது அல்லவா?

Aguirre the Wrath of God சர்வதேச அளவில் வெற்றிப்படம் என்றபோதிலும் முதலில் சில இடங்களில் மட்டும் வெளியிடப்பட்டது. அதன் தயாரிப்புக்குப் பகுதி நிதி அளித்திருந்த ஜெர்மன் தொலைக்காட்சி நிறுவனம் படம் வெளியான அன்றே ஜெர்மனி முழுக்க அதைத் தொலைக்காட்சியில் காட்டுவதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. படம் எடுக்கத் தொடங்கியபோதே அதன் களக்கதை (Script) படமாக்கச் சிரமமானது, படம் விலைபோகாது என்று பலர் சொன்னார்கள். முதலில் எடுத்திருந்த படங்கள் மூலம் கிடைத்திருந்த சொற்பப் பணத்தைக் கொண்டு தயாரிப்புச் செலவைச் சமாளித்தேன். படத்தை விற்பதற்கு அதிகச் சிரமப்பட்டோம். ஒரு பிரெஞ்சு விநியோக நிறுவனம் துணிந்து வாங்கித் திரையிட்டது. இரண்டரை வருட காலம் பாரிஸ் திரையரங்கு ஒன்றில் வெற்றிகரமாக ஓடியபின்புதான் வெளியுலகின் கவனம் இப்படத்தின் மீது திரும்பியது. Aguire கலைப்படம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படியான ஒரு திரைப்படம்.

புதிய இடங்களை வெற்றிகொள்ளத் துடிக்கும் துணிச்சலான, அதிகம் அறியப்படாத பதினாறாம் நூற்றாண்டு ஸ்பானியர் ஒருவரைப் பற்றித் திரைப்படம் எடுக்கவேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றில் அக்குயரைப்(Aguire) பற்றி முதலில் படித்தேன். எல்டொராடோவைத்(Eldorado) தேடி அமேசான் ஆற்றில் தன்னுடன் பயணம் செய்த ஸ்பானியப் படையைக் கைப்படுத்தி, மன்னரின் அதிகாரத்தை நிராகரித்து, ‘கடவுளின் சாபம்’ எனத் தன்னை அழைத்துக்கொண்டவன். அவனைப் பற்றிக் கற்பனையாக ஏராளம் எழுதப்பட்டிருந்ததே தவிர தரவுகளில் பதியப்பட்ட சரியான தகவல்களாகக் கிடைத்தவை மிகவும் குறைவு. அக்குயர் ஸ்பானிய மன்னருக்கு வசைகளுடன் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு கிடைத்தது. எந்த அளவு மனநிலை குலைந்தவனாக அவன் இருந்தான் எனபதை அக்கடிதம். வெளிப்படுத்தியது. அக்குயர் பற்றிய எனது உணர்வுகளை வார்த்தைகளில் சரியாகச் சொல்வது கடினம். எந்த ஒரு பாத்திரத்தையும் அவ்வாறு அலசி ஆராய்ந்து அர்த்தப்படுத்துவது எனது வழக்கமல்ல. ஸ்பானிய அரசரின் அதிகாரத்தை நிராகரிக்கத் துணிந்தவர்களில் முதலில் வருபவன் என்பதால் அக்குயர் கதை மீது எனக்கு அதிக ஆர்வமிருந்தது. அதே நேரம் அவன் ’கடவுளின் சாபம்’ எனத் தன்னைச் சொல்லிகொண்டு அரசியல் அதிகாரம் மட்டுமின்றி இயற்கையையும் எதிர்த்துச் செல்லும் அளவு மனநிலை பிழன்றவன்.

படத்தின் கதாபாத்திரங்களை எப்போதும் ஒருவகையான அச்சம் சூழ்ந்திருக்கிறது. அவர்கள் படிப்படியாக அழிவினுள் ஆழ்ந்துபோவதைக் காண்கிறோம். இந்தவகையில் காலம் இப்படத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வார்த்தைகளில் அறுதியிட்டுச் சொல்லமுடியாதவகையில் காலத்தின் தொடர்ச்சி இக்கதையின் அடிப்படையாகிறது. படத்தைக் காணும்போது மட்டுமே இதை உணரமுடியும். கதையோட்டம் காலத்தின் லயத்தைக் கொண்டிருந்ததால் காட்சிகளை காலவரிசைக்கிரமத்தில் (Chronologically) படமாக்க முடிவுசெய்தேன். கதாபாத்திரங்கள் பல கற்பனையாக உருவாக்கப்பட்டவை. களக்கதை முழுவதும் கற்பனையே. பாதிரியின் நாட்குறிப்புப் புத்தகமும் அதில் எழுதியிருப்பவையாக எனது குரலில் படத்தின் பின்னணியில் (voice over) சொல்லப்படுபவையும் இட்டுக்கட்டப்பட்டவையே.

பொன் விளையும் பூமியான எல்டொராடோ தென்னமெரிக்க இந்தியர்களின் கற்பனையில் உருவாகியது என்பது படம் துவங்குவதற்கு முன்பே நமக்குத் தெரியும். இல்லாத ஏல்டொராடோவைத் தேடி, தென்னமெரிக்க நாடுகளை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய அரசின் படையினர் மேற்கொள்ளும் அமேசான் பயணம் முதலிலிருந்தே அழிவை எதிர்நோக்கிச் செல்லுகிறது. ஆயிரம் பேருக்கும் அதிகமான படையினருடன் துவங்கும் பயணம் இறுதியில் ஒரு சிலரைக் கொண்ட குழுவின் பரிதாபத்துக்குரிய பயணமாக ஆகிவிடுகிறது. தொடர்ந்து மறைந்திருக்கும் ஆபத்துகள் நிறைந்த அப்பயணம் படிப்படியாக அனவரையும் நிலை குழம்பிய, ஒருவித மனமயக்க நிலைக்கு உள்ளானவர்களாக ஆக்கிவிடுகிறது. இறுதி நிலைக்குச் செல்லச் செல்ல பறவைகளின் ஒலி, பரந்த அமேசான் ஆறு எனக் கேட்பதும், பார்ப்பதும் அச்சமூட்டும் வகையில் விசித்திரமானவைகளாக மாறத் தொடங்குகின்றன.

பறவைகளின் ஒலிகளைப் பல மாதங்கள் எட்டு ட்ராக்குகளில் பதிவு செய்தோம். பின்னணி இசை சோகத்துடன், கனவுநிலையப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இறுதியில் ஒவ்வொருவரராக இறப்பதுகூட ஒருவகையான ஆப்பெரா(Opera) நாடக பாணியில் காட்டப்படுகிறது. படம் முழுக்க நீலவண்ண உடையில் தோன்றும் தலைவன் உர்ய்ஸுவின் மனைவி இறுதியில் தனியாகக் காட்டினுள் நடந்து சென்று மறையும் காட்சியில் அழகான தங்கவண்ண உடை அணித்திருப்பாள். இதைப் போல அக்குயரும் உடனிருக்கும் படைவீரரும் ஆற்றின் கரையில் மரத்தின் மீது ஒரு படகு இருப்பதைக் காண்பார்கள். தர்க்கரீதியான காரணங்களை மீறும் இம்மாதிரியான வேறு சில காட்சிகளையும் படத்தில் காணலாம். சர்ரியல்வகையிலான இக்காட்சிகள் மனப்பிறழ்வில் அக்குயரும் படை வீரரும் காணும் கட்சிகள்.

படமெடுப்பதற்கான இடங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?

அதற்கு முன் பெருவிற்குச் (Peru) சென்றிராத எனக்கு, அங்கு போய்ச் சேர்ந்தவுடன் கண்ட இடங்கள் அனைத்தும் ஏற்கெனவே கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த இடங்களை ஒத்திருந்தது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. நதியின் இருபுறமும் உள்ள வனப்பகுதி ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படுவதுபோல அழகாக இல்லாத நம்பமுடியாத விசித்திரமான பரப்பாக அமைகிறது. அது வெறும் நிலப்பரப்பு அல்ல; கனவுகள், ஆழ் மன உணர்வுகள், கொடுங்கனவுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் மனப்பரப்பு. எனக்கு நடிகர்களையும் மிருகங்களையும் போல நிலப்பரப்புகளையும் இயக்க விருப்பமுண்டு. கேட்பதற்கு இது வேடிக்கையாக இருக்கலம்; என்னைப்பொறுத்தவரை இது உண்மை. காட்சிப்படுத்துதல், ஒலி போன்றவை கொண்டு நான் காண்பிக்கும் நிலப்பரப்புக்கு ஒரு பாத்திரத்திற்குரிய தனமையை உருவாக்கிவிடுவேன். இவ்வகையில் அமெரிக்க இயக்குநர் ஜாண் போர்டை (John Ford) எனக்குப் பிடிக்கும். அவர் தனது படங்களில் அதிகமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் மானுமெண்ட் பள்ளத்தாக்கை (Monument Valley) வெறும் காட்சிப்பின்னணியான நிலப்பரப்பாக அன்றி, பாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பரப்பாக பார்வயாளர் உணரும் வண்னம் காட்சிப்படுத்தியுள்ளார்.
நிலப்பரப்பு கதையின் நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறிவிடும் தன்மை கொண்டதாக அமைந்திருப்பதை எனது படங்களில் உணரமுடியும். நோஸ்பெரட்டு (Nosferatu) திரைப்படத்தில் இரு புறமும் மரங்களும் ஏரிகளும் கொண்ட பாதை வழியே ஜோனத்தான் கோச்சு வண்டியில் விஸ்மார் நகருக்குத் திரும்புவதைக் காண்பிக்கும் நீண்ட காட்சியில் (long shot), அந்த நிலப்பரப்பு அழகையும் அமைதியையும் மட்டுமன்றி ஒருவித விசித்திர உணர்வையும் வெளிப்படுத்துகிறது. அது போல Signs of Life படத்தில் காற்றாடி ஆலைகள் (windmills) காட்டப்படும் காட்சியில், ஒலி முக்கிய பங்கு வகிப்பதைச் சொல்லலாம். அதற்காக இசை நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளரின் கரவொலிகளைப் பதிவு செய்து, அதை எலெக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு மரங்கள் காற்றில் ஒன்றுக்கொன்று மோதும்போது கேட்பது போன்ற ஒலியாக மாற்றினோம். அத்துடன், தந்திக் கம்பங்களில் காதை வைத்தால் ஒருவிதமான ஓலி கேட்கும் அல்லவா, அதையும் பதிவு செய்து கலந்தோம். இந்த இசையுடன் பார்க்கப்படும் காற்றாடிகள் சுழலும் நிலப்பகுதி பார்வையாளருக்கு ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.

நிலப்பரப்புகள் பற்றி உங்களின் புரிதலுக்கும், உங்கள் திரைப்படங்கள் ஜெர்மனிக்கு வெளியே படமாக்கப்பட்டிருப்பதற்கும் தொடர்பு உண்டா?

தாய்நாட்டைவிட்டு வெகு தூரங்களில் எனது திரைப்படங்களை ஏன் படமாக்குகிறேன் என்பதற்கான காரனத்தை என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. எந்த ஒரு நிலப்பரப்பிலும் நான் காண முயல்வது அது மனிதருக்கானதா, மனிதரின் மீது பரிவுள்ள பகுதியா என்பதே. இங்மர் பெர்க்மனின் பல திரைப்படங்கள் எனக்கு பிடிக்காதவை;. இருந்தும் அவர் திரைப்படங்களின் துவக்க முகமே ஒரு நிலப்பரப்பாக இருப்பதை இங்கு சொல்லவேண்டும். நிலப்பரப்புகளைக் கற்பனையாக ஸ்கிரிப்ட்டில் முதலில் எழுதிவிடுகிறேன். நிலப்பரப்பு எனது திரைப்படங்களின் ஆன்மாவாக அமைந்துவிடுவதும் பல சமயங்களில் பாத்திரமாக ஆகிவிடுவதும் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.. படத்தின் கதை என்பது அதற்கு அடுத்ததாகத்தான் தொடர்ந்து வருகிறது. அமேசான் ஆற்றின் பல பகுதிகள் அபாயகரமானவை. வேகமான நீரோட்டமுடன் அபாயமில்லாதிருந்த பகுதிகளை மட்டுமே படப்பிடிப்புக்காகத் தேர்ந்தெடுத்தேன்.

மிகக் குறைந்த அளவு பணம் செலவு செய்யமுடிந்த நிலையில், மிகச் சிறிய படமெடுக்கும் குழுவைக் கொண்டு படம் எடுத்ததைப் பற்றி…

நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்திருந்த பழங்குடிகளுடன், அருகிலிருந்த மலைகளிலிருந்து வந்தவர்களும் சேர்ந்து 450 பேர்கள் தங்குவதற்கான ஒரு முகாமை உருவாக்கினோம். அந்த இடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அவர்களை அருகிலிருந்த கிராமத்தில் தங்கச் செய்தோம். படப்பிடிப்புக்காக 1600 கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்த அடுத்த இடத்திற்கு அவர்களை அழைத்துச்செல்வதற்கு மட்டும் ஒரு வாரம் தேவைப்பட்டது. அத்துடன் சேர்த்து ஆறு வாரங்கள் படப்பிடிப்பு நடந்தது. ’ரியோ நாநேயை’ பகுதியின் கரைகளின் எல்லாப் பகுதிகளும் வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கிவிட்டிருந்தபடியால். நாங்கள் ஆற்றின் மீது கட்டுமரங்களிலேயே தங்கிக்கொண்டோம். இரவுகளில் கட்டுமரங்களை மேலிருக்கும் மரங்களின் கிளைகளில் கட்டிவிடுவோம்.

மொத்தச் செலவுக்கு ஒதுக்கப்பட்டது 3,70,000 டாலர்கள். அதில் மூன்றில் ஒருபகுதியை கதாநாயக நடிகர் க்ளாஸ் கின்ஸ்கியின்(Klaus Kinski) ஊதியமாக அளிக்க வேண்டியதிருந்தது. மீதிப் பணத்திற்குள் மொத்தப் படபிடிப்பையும் சமாளிக்க வேண்டியதிருந்ததால், படப்பிடிப்பிற்காகப் பத்துபேர்கள் கொண்ட சிறிய குழுவை மட்டுமே பயன்படுத்தினேன். ஸ்டுடியோவில் படமாக்கியிருந்தால் மொத்தத் தொகையும் மூன்று நாட்களில் முடிந்துபோயிருக்கும். ஸ்டுடியோவில் இம்மாதிரியான காட்டை உருவாக்குவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சில நேரங்களில் என்னுடிய கைக்கடிகாரத்தையோ, காலணிகளையோ விற்றுக் காலை உணவை சமாளித்திருக்கிறேன். இன்னும் சொல்லுவதானால் இந்த திரைப்படம் ஒரு வெறுங்கால் (barefoot) படைப்பு – வறுமையின் குழந்தை.

வெள்ளத்தில் கட்டுமரங்களில் கடக்கும் காட்சிகள் பற்றி ..

அந்தக் காட்சிகள் இரண்டு நிமிடங்களுக்குள் படமாக்கப்பட்டவை. படத்தைப் பார்ப்பவர்களுக்கு அதிலிருக்கும் அபாயத்தை உணர முடியும். ஒளிப்பதிவாளர் தாமஸ் மாச்சையும் என்னையும் தவிர இந்தியர்கள் உட்பட அனைவரும் கட்டுமரங்களுடன் கயிறுகள் கொண்டு இணைக்கப்பட்டிருந்தனர். படமெடுக்கும் குழுவினர், நடிகர்கள் அனைவரின் பதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அனைத்தும் மிக்க கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன. ஆற்றின் வேகம் மிக அதிகமாக இருந்தது. கட்டுமரம் ஆற்றின் சுழலில் சிக்கிச் சுழலும் காட்சிக்குப் பிறகு கரையில் இறங்கிய நடிகர்கள் அனைவருமே வாந்தி எடுத்துவிட்டனர். அந்த அளவு கட்டுமரத்தில் சுழற்றப்பட்டிருந்திருக்கின்றனர். நடித்தவர் அனைவரும் மிகுந்த மனத் திருப்தியுடனும் ஆசையுடனும் படப்பிடிப்புகளில் பங்கு பெற்றனர்.
குரங்குகள் அதிகமாகத் தோன்றும் இறுதிக் காட்சிகள் பற்றி …

அந்தக் குரங்குகளை எங்களுக்கு விற்றிருந்தவர்கள் எஙகளுக்குத் தெரியாமல் அவற்றை ஒரு அமெரிக்கருக்கு மீண்டும் விற்றுவிட்டனர். படமெடுக்கும் நேரத்தில் குரங்குகள் விமானத்தில் ஏற்றப்பட்டு அமெரிக்கா கொண்டுசெல்லப்படத் தயாராக இருந்தன. நேரில் சென்று விலங்கு சோதனையாளர் என்று பொய் சொல்லிப் பெரும்பாடுபட்டுக் குரங்குகளை மீட்டு வந்து காட்சிகளைப் படமாக்கினோம். படப்படிப்பின்போது அதிர்ச்சியடந்த குரங்குகள் என் உடல் முழுக்கக் கடித்துவிட்டன. நான் ஒலிப்பதிவு உபகரணத்துடன் இருந்ததால் வலித்தபோதும் சப்தம் எதுவும் எழுப்பாமல் மௌனமாக அவற்றின் கடிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

காடுகள் உஙகளை அதிகம் ஈர்ப்பது ஏன்?

பவேரியனாகப் பிறந்த எனக்கு வனங்களின் வளமை மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு. வனங்கள் எப்போதும் ஒருவித உயிர்த்துடிப்பான யதார்த்த நிலையை வெளிப்படுத்துபவை; ஆபத்தானவை அல்ல. சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் வனங்களை ஆபத்து மிக்க இடங்கள் எனப் பிரகடனப்படுத்தி வருகின்றன. அவ்வகையான ஆபத்துகள் இருப்பதாக நான் அறித்ததில்லை. விலங்குகள் கண்ணுக்குத் தெரியாது. உங்களைக் கண்ட மாத்திரத்தில் பாம்புகள் விலகி ஓடிவிடும். பிரானா மீன்கள் கூட நீங்கல் முட்டாள்த்தனமாக எதுவும் செய்யாத வரை உங்களைக் கடிபதில்லை. தேங்கியிருக்கும் நீரில் குளித்தால் ஒழிய இந்த மீன்களால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் இல்லை.

இந்தப்படத்தில் நடித்திருக்கும் இந்தியர்களை எங்கிருந்து தேடிக் கண்டுடித்தீர்கள் ?

இந்தியர்கள் படம் எடுத்த இடத்தைச் சுற்றியிருந்த மலைப்பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். ஒரு கிராமத்திற்குச் சென்று எடுக்கப்போகும் படத்தைப் பற்றி விளக்கமாக சொன்னோம். ஏறக்குறைய அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் நடிக்க வந்தனர். கடின உழைப்பாளிகள். மிகக் கடினமான வேலைகளை முழு மனதுடன் செய்துமுடித்தனர். அவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாகவே ஊதியமும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் அவர்கள் இனத்தின் சரித்திரத்தையும், ஸ்பானியரின் ஆக்கிரமிப்பையும் அறிந்திருந்தனர். பெருவின் அரசியல்நிலை பற்றிச் சரியான கணிப்பை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படத்தை அவர்களில் ஒருவரான ஹம்ப்ரசித்தோவுக்கு அர்பணித்திருக்கிறேன்.

முதன் முதலாக உங்கள் இயக்கத்தில் கின்ஸ்கி நடித்திருக்கிறார். இப்படக்கதை அவருக்காக எழுதப்பட்டதா ?

Aguirre the Wrath of God திரைக்கதையை மூன்று நாட்களில் எழுதி முடித்தேன். யார் எந்தப் பாத்திரத்தில் நடிப்பது என்றெல்லாம் நினைக்காது, நிறுத்தாது ஒரே மூச்சில் எழுதி முடித்த கதை. முடித்தபின் தான் கின்ஸ்கி பற்றி நினைத்தேன். ஸ்கிரிப்ட் பிரதி ஒன்றை அவருக்கு உடனே அனுப்பினேன். இரண்டு நாட்கள் கழித்து விடியற்காலை மூன்று மணிக்குத் தொலைபேசியில் அழைத்து ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துவிட்டதாகவும் அக்குயர் பத்திரத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் கின்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டு நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்பிற்கு அரை டன் எடையுள்ள ஆல்ப்பைன் மலையில் உபயோகப்படுத்துவதற்கான கூடாரங்கள், உடைகள், பிற சாதனங்களுடன் வந்து இறங்கினார். அன்று இரவு பெய்த பேய் மழையில் அவர் கொண்டுவந்திருந்த கூடாரம் ஏகமாக ஒழுகிவிட்டது. தொப்பலாக நனைந்துபோன கின்ஸ்கிக்குக் கோபம் தலைக்குமேல் போய்விட்டது. தென்னை ஓலையில் வேய்ந்த கூரையுடன் இருப்பிடம் ஒன்றை அவருக்காக உருவாக்கினோம். அதுவும் பிடிக்கவில்லை. மச்சு பிச்சுவிலிருந்த ஒரே ஒரு ஓட்டலில் போய்த் தங்கிக்கொண்டார். ஆற்றுத்தண்ணீரை அனைவரும் குடித்துக்கொண்டிருந்த போது அவருக்காக சுத்திகரிக்கப்பட்ட மினரல் நீர் புட்டிகளில் கொண்டுவரப்பட்டது. விவாதங்களும் சண்டைகளுமில்லாது எதையும் அவரை ஏற்றுகொள்ளச் செய்ய முடியவில்லை. ஒரு முறை அளவுக்கு மீறிக் கோபமடைந்த கின்ஸ்கி உடனே ஊருக்குக் கிளம்பிச் செல்லப்போவதாகக் கூறிப் பெட்டியை அடுக்கத் தொடங்கினார். அந்தப் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அமைதியாகச் சொல்லிப்பார்த்தேன். கேட்பதாக இல்லை. என்னுடைய துப்பாக்கியை எடுத்தேன். நடிப்பதை நிறுத்திவிட்டுச் செல்வதாக இருந்தால் அந்த ஆற்றின் முதல் வளைவைத் தாண்டிச் செல்வதற்குள் துப்பாக்கியிலிருந்த எட்டு ரவைகள் அவர் தலையினுள் பதிந்திருக்கும்; ஒன்பதாவது என் உயிரை மாய்த்திருக்கும் என்றேன். படத்தை முடிப்பதற்காக எந்த அளவுக்கும் சென்றுவிடுபவன் நான் என்பதை உணர்ந்த கின்ஸ்கி அதற்குப் பிறகு ஒழுங்காகவும் அமைதியாகவும் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.
இருந்தாலும் அக்குயர் பாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான நடிகர் கின்ஸ்கி மட்டுமே என்பதை ஏற்றுகொள்வீர்கள் அல்லவா?

ஆம். அவர் அற்புதமான நடிகர். அக்குயர் பாத்திரம் மனதளவில் சிதைந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருப்பது. அச்சிதைவுகளை உடலளவில் காண்பிப்பது அவசியம் என நினைத்திருந்தேன். அக்குயரின் நடை, அசைவுகள் அனைத்திலும் இக்குறைபாடுகள் பிரதிபலிப்பதைப் படத்தில் காணலாம். கின்ஸ்கி இதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிரார். படத்தில் ஒரு சிலந்தியைப்போல, நண்டைப் போல நடந்து வருவார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடன் பணிபுரிவது என்பது கொடுங்கனவை அனுபவிப்பது போன்றது. படத்திற்காக இத்தகைய சிரமங்களை அனுபவிப்பது பற்றி நான் கவலைப்பட்டதேயில்லை.

பிர்மிப்பூட்டக்கூடிய வகையில் அமைந்துள்ள முதற் காட்சி ஸ்கிரிப்ட்டில் முதலிலேயே எழுதப்பட்டிருந்ததா அல்லது அந்த நேரத்தில் நீங்களாக முடிவு செய்து எடுத்ததா?
வேறு விதமாகப் படமாக்க நினைத்திருந்த காட்சி அது. மச்சு பிச்சுவுக்கு அருகில் அந்த முதல் காட்சியைப் படமாக்கினோம். ஒருபுறம் 600 மீடர்கள் ஆழமான மலைச் சரிவுப் பகுதியைக் கொண்டிருந்த அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்த இடம். மலைச் சரிவில் ஏற்கெனவே இன்கா காலத்தில் மலைப்பாறைகளில் வெட்டப்பட்டிருந்த படிகள் வழியாக நூறுக்கனக்கான நடிகர்கள் இறங்கிவருவதைப் படமாக்கினோம். காலை இரண்டு மணிக்கெல்லாம் நடிகர்களை குதிரைகள், பீரங்கிகளுடன் அந்த இடத்திற்கு அனுப்பிவிட்டோம். நான் போய்ச் சேரும்போது கனத்த மழை பெய்துகொண்டிருந்தது. அனைவரையும் ஒழுங்குபடுத்துவதற்கு அந்த செங்குத்தான மலைப் படிகளில் குறைந்தது மூன்று முறைகளாவது ஏறி இறங்கியிருப்பேன். ஒரு முறைதான் அந்தக் காட்சியைப் படமாக்கினோம். வரிசையாக இறங்கிவரும் படை வீரர்களின் ஒருபக்கம் மலையும் மறுபக்கம் பனிமூட்டமுமாக மறக்கமுடியாத காட்சியாக அமைந்தது.

அந்த வீரர்களில் ஒரு புள்ளியாகத் தானும் தோன்றுவது கின்ஸ்கிக்கு பிடிக்கவில்லை. தான் படைவீரர்களைக் கட்டளைகளிட்டு நடத்திச் செல்வதை அருகாமைக் காட்சியாகப் படமாக்க விரும்பினார். அவர் இன்னும் அந்த படையின் தலைவராகவில்லை என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டியதிருந்தது. மனித முகங்களைக் காட்டி அந்தக் காட்சியை ஹாலிவுட் பாணி அழகியல் படைப்பாக ஆக்கிவிட எனக்கு ஒப்புதல் இல்லை. அந்த மலைப்பரப்பின் அற்புதத் தோற்றம் பிற நிகழ்வுகளோடு இணைந்ததாக வெளிப்படுவதே எனக்குத் தேவையாயிருந்தது.

இப்படம் நாஸிசத்தின் ஒருவகையான உருவகம், அக்குயர் பாத்திரம் ஹிட்லரை அடிப்படையாகக் கொண்டது என விமரிசகர்கள் சொல்லியிருப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அல்லது சிலர் சொலவது போல இது ஜெர்மனியக் கற்பனாவாதத்தின் கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட படைப்பா?

ஜெர்மனியின் குறிப்பிட்ட காலகட்டத்தின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பதால் ஜெர்மனியின் பெரும்பாலான எழுத்தாளர்களும் கலைஞர்களும் படைப்பாளிகளும் தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஜெர்மன் படைப்பாளிகளை எதிர்நோக்கும் தவறான அர்த்தப்படுத்துதல் இது. ஹிட்லர் ஜெர்மன் மக்களுக்கு விட்டுச் சென்ற பெயர் எங்களை அதிநுண்ணுர்வு கொண்டவர்களாக ஆக்கிவிட்டது. நானும் இதைப் பற்றி மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பவன்தான். இருந்தும் அக்குயர் பாத்திரத்தை ஹிட்லரின் உருவகமாக உருவாக்க நான் முனையவில்லை.

வழக்கமான உங்கள் படப்பிடிப்பு முறைகளிலிருந்து நீங்கள் காடுகளில் படமெடுக்கும் முறை வேறுபடுகிறதா? உங்களுடன் பல படங்களில் பணியாற்றிவரும் ஒளிப்பதிவாளர் தாமச் மாச்(Thomas Mauch) பற்றி..

Aguire படப்பிடிப்பில் கையில் எடுத்துப் படமாக்கும் (handheld) காமெராவை அதிகமாகப் பயன்படுத்த முடிவு செய்தேன். அதனால் இப்படத்தில் கமெராவுக்கும் நடிகர்களுக்கும் இடையே ஒருவிதமான நேரடித் தொடர்பை பார்வையாளராகிய நீங்கள் உணரமுடியும். படப்பிடிப்பபைப் பொறுத்தவரை தாமஸ் மாச்சும் நானும் ஏறக்குறைய இரட்டையர்கள் போல ஒரே வித உணர்வுகளால் உந்தப்படுபவர்கள். எனக்கு எந்த வகையான காட்சிகள், கோணங்கள் வேண்டும் என்பதை நான் சொல்லாமலே அவரால் உணர்ந்து செயல்பட முடியும். அதனால் Aguireக்குப் பிறகு பல ஆண்டுகளாக படப்பிடிப்புகளில் எனக்குத் தேவையான காட்சிப்படுத்துதல் பற்றி அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. Aguireஇன் இறுதிக்காட்சியைப் படமாக்கும்போது அக்குயர் நின்றுகொண்டிருக்கும் தெப்பத்தைச் சுற்றி விசைப்படகில் அறுபது கிலோமீட்டர் வேகத்தில் நிறுத்தாது தொடர்ந்து சென்றுகொண்டிருக்க வேண்டியதிருந்தது. படகை நான் ஓட்ட தாமஸ் மாச் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். ஓட்டப்படும் வேகத்தில் நீரிலிருந்து எழும் வலிமையான அலை வளையங்களூடே படகைச் செலுத்திக்கொண்டிருந்தேன். அந்த வலுவான அலை வளையங்களின் சக்தியை உடல் முழுவதுமாக உணர்ந்துகொண்டிருந்தேன். Fata Morgana படப்பிடிப்பின் போது பாலைவனத்தில் வோல்க்ஸ்வாகன் வானை ஓட்டிக்கொண்டிருந்தபோதும் இயற்கையின் வலிமையை இவ்வாறு உணர நேர்ந்தது. படமெடுப்பது என்பது உடலுடன் நேரடித் தொடர்புள்ளது என்று நான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பது இதைத்தான். அமேசான் ஆற்றின் சக்திமிக்க நீர்ப்பகுதிகளின் வேகமான பாய்ச்சலுக்கும் எனக்கும் தொடர்புள்ள ஒருவித உணர்வு என்னுள் உருவாகியிருந்தது. அக்குயர் இயற்கையை மறுத்து அதன் மாபெரும் சக்திக்கு எதிராகச் செயல்படத் துணிவதே இந்தப் படத்திற்கான மையக் கருவாக அமைகிறது. இதுவே இந்தப்படம் முழுமையாக உருவாவதற்கான அடிப்படையாக அமைந்தது.

எங்களிடம் உயர்தரமான படப்பிடிப்பு சாதனங்கள் எதுவும் கிடையாது. Aguire வெகு சாதாரணமான முறைகளில் எடுத்து முடிக்கப்பட்ட படம். இந்தனை நாட்கள் இப்படம் நிலைத்து நிற்கக் காரணம் அதன் உருவாக்கத்திலிருக்கும் எளிமைதான். முழுப்படத்தையும் எங்களிடமிருந்த ஒரு காமராவைக்கொண்டே எடுத்து முடித்தோம். அந்தக் காமெரா நான் ம்யூனிக் திரைப்படப் பள்ளியிலிருந்து திருடியது. படமெடுக்க ஒரு தடவை காமெராவைக் கடனாகக் கேட்டபோது மறுத்துவிட்டார்கள் . பல காமெராக்களை அலமாரியில் வரிசையாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒன்றைக்கூட படம் எடுக்க விரும்பும் இளம் படைப்பாளிகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள். நான் தனியாக இருந்த நேரத்தில் தற்செயலாக அந்த அலமாரி பூட்டப்டாமல் இருந்ததைக் கவனித்தேன். அங்கிருந்து ஒரு காமராவை எடுத்து வந்துவிட்டேன். எளிமையான 35 எம் எம் காமெரா. பல படங்களில் அதைப் பயன்படுத்தியிருக்கிறேன். இன்றுவரை அதைத் திருட்டாக நினைத்ததே இல்லை. படமெடுப்பதற்குக் காமெரா தேவைப்பட்ட எனக்கு அதை எடுத்துக்கொள்வதற்கான உரிமை உண்டு. காற்றில்லாத அறையில் நீங்கள் அடைக்கப்பட்டிருக்கும் நேரம் சுவாசிப்பத்ற்கு காற்று தேவை என்றால் உளியையும் சுத்தியையும் கொண்டு அந்த அறையின் சுவர்களை உடைப்பதற்கு உங்களுக்கு அனைத்து அதிகாரமும் உண்டு.

பனிச்சறுக்கு விளையாட்டு உங்களை மிகவும் கவர்ந்திருப்பதற்குக் காரணம் என்ன? The Great Ecstasy of Woodcarver Steiner (1974) படத்திற்கான கரு எதிலிருந்து உருவானது?

எனது ஆவணப்படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் கிடையாது. என்னைப் பொறுத்தவரை அவை அனைத்துமே திரைப்படங்கள்தான். The Great Ecstasy of Woodcarver Steiner என்னுடைய முக்கியமான படங்களில் ஒன்று. நான் வளர்ந்ததே பனிச்சறுக்கு விளையாட்டுடன்தான். பயங்கரமான விபத்து ஒன்றை இந்த விளையாட்டில் என் நண்பனொருவன் சந்திக்கும் வரை பனிச்சறுக்கு விளையாட்டுவீரனாக வேண்டும் என்பது மட்டுமே என் கனவாக இருந்தது. ஸ்விஸ் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் வால்டர் ஸ்டெய்னர் இந்த விளையாட்டில் பறவையைப் போலப் பறப்பவர். ஒரு காலத்தில் நான் என்னவெல்லாம் கற்பனை செய்திருந்தேனோ அவற்றையெல்லாம் நனவில் நிகழ்த்திக்கொண்டிருப்பவர். புவியீர்ப்பு சக்தியை மீறும் வலிமை கொண்டவர். என்னைப் பொறுத்தவரை இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த மனிதருள் ஒருவர். இவர் மரச் சிற்பங்கள் வடிப்பதிலும் வல்லுநர். ஸ்விஸ் மலைகளில் வெட்டப்பட்ட மரங்களின் மீதமிருக்கும் அடிப்பகுதிகளில் மனித முகங்களைச் சிற்பங்களாக வடித்துவிடுவார். அந்தக் குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் பயணம் செய்த வெகுசிலர் மட்டுமே அவற்றைப் பார்த்திருக்கின்றனர். உலகப் பனிச்சறுக்குப் போட்டிகளில் இரண்டு முறைகள் முதல் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியவர். தனிமையை விரும்புவராக இருந்த போதிலும் சந்தித்த முதல் கணத்திலிருந்தே என்னிடம் நெருக்கமாக ஆகிவிட்டார்..
முதலில் காமெரா முன் எதையும் சரியாக வெளிப்படுத்தமுடியாது சிரமப்பட்டார். ஒருமுறை நாங்கள் அனைவரும் அவரைத் தோளில் தூக்கிக்கொண்டு தெருக்களில் ஒடினோம். எதற்காக என்று அவர் கேட்டபோது பனிச்சறுக்கு விளையாட்டில் சிறந்தவர் அவரைப்போல் உலகில் வேறு யாரும் இல்லை என்பதனால்தான் என்று பதிலளித்தேன். அந்த நேரம் அவர் உடலின் கனத்தை நான் உணர்ந்தேன். சுமந்து ஓடிய சக மனிதர்களான எங்களின் உடல்களை அவருடைய உடல் தொட்டு அறிந்த அந்தக்கணத்தின் தொடர்பு அவரை மாற்றிவிட்டது. எப்படியென்று தெரியாது, ஆனால் அப்போதிலிருந்து காமெரா முன் இயல்பாக இயங்குவதற்கு அவருக்கு எந்தத் தடையும் எழவில்லை, பனியில் சறுக்கிப் பாய்ந்து செல்லும் நிலையில் பறந்து காமெராவைக் கடந்து செல்பவர்களின் வாய்கள் திறந்திருக்க முகங்களில் அற்புதமாக உணர்ச்சிகள் கொப்பளித்து வெளிப்படுவதைக் காணலாம். பலரால் வாயைத் திறவாது சறுக்கிப் பறந்து தாண்டிச்செல்ல முடியாது. அப்படிப் பறக்கும் நிலை அந்தக்கனத்தில் பரவச உணர்வை அளிக்கும் அனுபவமாக ஆகிவிடுகிறது. பனிச்சறுக்கு என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக அனுபவம். சாவைப்பற்றிய பயத்தை வெல்லும் அனுபவம். அதிவேகமாகச் சறுக்கிவந்து தாண்டிப் பறக்கும் ஒருவரை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அளவற்ற ஆழத்தினுள் பறந்து இறங்குவதைப் போன்ற ஒரு அனுபவம் அது. இந்த விளையட்டில் ஈடுபடுபவர்களில் உடற்பலம் மிக்கவர்களைக் காண்பது அரிது. இவர்களில் பலர் வெளிறிய முகத்துடன் நிலையற்ற பார்வை கொண்ட இளைஞர்கள். இயற்கையின் விதிகளை எதிர்த்துப் பறக்கும் பரவச அனுபவத்தைப்பற்றிக் கனவு கண்டுகொன்டிருப்பவர்கள். இந்த வகையில் ஸ்டெய்னரை புவியீர்ப்பு சகதியை மீறி ஒரு கப்பலை மலையைக் கடக்கச் செய்த ஃபிட்ஸ்ஜெரால்டோ (Fitzcarraldo) வுடன் ஒப்பிடலாம்.

ஐந்து ஒளிப்பதிவாளர்களைப் பயன்படுத்தினோம். நொடிக்கு நானூறிலிருந்து ஐநூறு ஃப்ரேம்கள் வரை மிகக்குறைவான வேகத்தில் (Slow Motion) படமெடுக்கும் சக்தி கொண்ட காமெராக்களைக் கொண்டு படமாக்கினோம். பனிச்சறுக்கு வீரர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் காமெராக்களை இயக்குவது சவாலாக இருந்தது.

அக்குயர் படத்தில் குரங்குகள் வருகின்றன. அது போல உங்கள் படங்களில் மிருகங்களைப் பயன்படுத்தியிருப்பது பற்றி..

இதற்குச் சரியான பதில் என்னிடம் இல்லை. என்னுடைய படங்கள் அனைத்திலும் மிருகங்கள் பங்குபெற்றுள்ளன என்று சொல்லலாம். பறவைகளும் உண்டு. Stroszekஇல் நடனமாடும் கோழியைப் பயன்படுத்தியிருபேன். அந்த காட்சியை உற்று நோக்கினால் தீயணைப்பு லாரி பொம்மை ஒன்றின் மீது ஒரு எலி எம்பிக் குதித்துக்கொண்டிருப்பதைம், வாத்து டிரம்ஸ் வாசிப்பதையும் காணலாம். ஒளிப்பதிவாளர் தாமஸ் மாச் முதற்கொண்டு பலருக்கு அக்காட்சியை நான் படமாக்குவது பிடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அது முக்கியமான காட்சி. அதைப்பற்றி அவர்களுக்கு விவரித்துச் சொல்லவேண்டியதிருந்தது.

- தொடரும் -

பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.