கறுப்பின மக்களின் மீட்பர்களா வெள்ளையினத்தவர்? - மிஸ்ஸிஸிப்பி பர்னிங் : யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளி உரையாடல்

-அம்சவள்ளி
 
ஆலன் பார்க்கர் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ்ஸிஸிப்பி பர்னிங். 1964ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடியொற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சிவில் ரைட்ஸ் மூவ்மெண்ட், என்.ஏ.சி.சி.பி இயக்கம், இருந்த காலத்தில், கறுப்பின மக்கள்மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் சார்ந்தும், அதை விசாரிக்க வருகிற மூன்று செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதிலிருந்து படம் துவங்குகிறது. ஏன் அவர்கள் மூவரும் காணாமலாக்கப்பட்டனர். அவர்களைக் கொலைசெய்தவர்கள் யார்? அவர்களது அந்தக் கொலைவெறிக்கு என்ன காரணம்? போன்றவை, காவல்துறை அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இனவெறியும், நிறவெறியும் எந்தளவிற்கு அரசு அமைப்பிலும், அதிகாரிகள் மத்தியிலும் ஊறிப்போயிருக்கின்றன என்பதை இப்படம் உணர்த்துகிறது.

அம்சவள்ளி: கறுப்பின மக்களின் வாக்குரிமைக்காக வேலை செய்கிற மூன்று செயற்பாட்டாளர்கள், அதில் ஒருவர் கறுப்பினத்தவர், மற்ற இருவர் வெள்ளையினத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதனையறிந்து, இரண்டு எஃப்.பி.ஐ அதிகாரிகள் அங்கு விசாரணை செய்ய வருகின்றனர். விசாரணைக்கு பல தளங்களிலிருந்தும் தடைகள் வருகின்றன. அதனைச் சமாளிக்கமுடியாமல், உதவிசெய்வதற்காக ஒரு குழுவையே அங்கு வரவழைக்கின்றனர். மூவரின் பிணத்தையும் கண்டுபிடிக்கின்றனர். அதற்குப் பிறகு, கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் ஒன்றாக, வழிபாடு நடத்துவதோடு படம் முடிகிறது. இதில் உண்மையான வரலாறு என்பது என்னவென்றால், அதில் இரண்டு கறுப்பினத்தவர், ஒரு வெள்ளையினத்தவர் என்பது சரியான விஷயம். ஆனால், படத்தில் காண்பிக்கப்படுகிற சம்பவம் என்னவென்றால், அவர்கள் மக்களிடம் வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு, ஒரு காரில் திரும்பி வரும்போது, ஒரு குழு அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. அந்தக் குழுவில் போலீசாரும் இருக்கின்றனர். கு க்ளக்ஸ் க்ளான்(Ku Klux Klan) அமைப்பைச் சார்ந்தவர்களும் இருக்கின்றனர். கு க்ளக்ஸ் க்ளான் என்பது, கறுப்பின மக்களைக் கொலை செய்கிற, வெள்ளையின மேலாதிக்கம் பேசுகிற ஒரு இயக்கம். 

இவர்கள்தான், கறுப்பின மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வந்த, மூன்று செயற்பாட்டாளர்களையும், ஒவ்வொருவராகத் துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்கின்றனர். பின்னர், அரசாங்கத்தின் சார்பில் வருகிற எஃப்.பி.ஐ அதிகாரிகள், கிட்டத்தட்ட கதாநாயகர்கள் போல வந்து, கறுப்பினத்தவர்களின் பிரச்சினைகளுக்காக, காணாமலாக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகின்றனர். ஆனால், உண்மையில் வரலாற்றில் என்ன நடந்தது? இதுகுறித்து, இந்தப் படத்தை விமர்சகர்கள் என்னவாக அணுகுகிறார்கள் என்பதைப் பார்த்துவிடுவோம். முக்கியமாக கறுப்பின மக்கள் தரப்பிலிருந்து வந்த விமர்சனங்கள் என்னவாகயிருந்தன?

யமுனா ராஜேந்திரன்: உண்மை வரலாற்றில், இந்த மூன்று நபர்களையும் காவல்துறை கைது செய்கிறது. காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்கிறது. பின்னர், காவல்துறை எல்லையிருக்குமல்லா, அந்த எல்லையிலிருந்து அவர்களை வெளியில் கொண்டுசெல்வது வரைக்கும், காவலர்கள் உடனிருக்கின்றனர். பின்னர், அவர்கள் மூவரையும் தனியே விட்டுவிடுகின்றனர். காவல்துறை எல்லைக்குள் ஏதேனும் தவறுகள் நடந்தால்தான், அந்தப் பகுதியில் இருக்கிற காவல்துறை பொறுப்பேற்கும். எனவேதான், அவர்களை, அந்தக் காவல் எல்லையிலிருந்து தாண்டி வெளியே அனுப்புகிறார்கள். அதற்குப் பிறகு, ku klux klan ஆட்கள் வந்து, இம்மூவரையும் கடத்திச்சென்று, பண்ணையில் அடைத்துவைத்து, கடுமையான சித்திரவதைகள் செய்கின்றனர். அதில், முதல் கறுப்பினத்தவரின் நெஞ்சின் மேல் மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். அதற்குப் பிறகு, மற்ற இருவரையும் கொல்கின்றனர். இது வரலாற்றில் உண்மையாக நடந்தது என்றளவில் இது ஒரு விஷயம்.


மற்றது இந்தக் கதையில் பார்த்தீர்களேயானால், எஃப்.பி.ஐ அதிகாரிகளின் சாகசத்தினாலும், அதேபோல எஃப்.பி.ஐ ஒரு குழுவைக் கொண்டுவந்து, அவர்கள் மிகப்பெரிய தேடுதல் வேட்டையை நடத்தி, வெள்ளையின மேலாதிக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு, பிணங்களைக் கண்டுபிடிப்பதை, கறுப்பின மக்களின் மீட்பர்களாக, அந்த எஃப்.பி.ஐ அதிகாரிகளைக் காண்பிக்கிறது. ஆனால், உண்மையிலேயே பார்த்தீர்களேயானால், கறுப்பின மக்கள் அங்கு மிகப்பெரிய போராட்டங்களை, அங்கு முன்னெடுத்து நடத்தியிருக்கிறார்கள். சிவில் ரைட்ஸ் மூவ்மெண்ட் என்பது, சப்மிஸிவாக போகவில்லை. அவர்கள் தாங்களாகவே மக்களைத் திரட்டி, இதற்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், படம் கறுப்பினத்தவர்களை அப்படிக் காட்சிப்படுத்தவில்லை. மாறாக, கறுப்பினத்தவர்கள் எதிர்ப்புணர்வைக் காட்டாமல், அடிபணிந்து போகிறார்கள். படத்தில், கடைசியில் ஒரேயொரு இடத்தில் மட்டும், கறுப்பினத்தவர்கள் ஊர்வலங்கள் நடத்துவதைக் காண்பிக்கிறார்களேயொழிய, அதற்குமுன்பு, தனித்தனி மனிதர்களாக, அவர்கள் எந்தவிதமான, எதிர்ப்பும் காட்டாமல், அடிபணிந்து நடப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளும், ஒவ்வொரு முறையும் கறுப்பின மக்களைச் சந்தித்து, விசாரணைக்கு உதவிசெய்யும்படிக் கேட்கையில், “தங்களது உயிருக்கு ஆபத்து. உண்மையைச் சொன்னால் நாங்கள் கொல்லப்படுவோம். ஆகவே, விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம்” என்ற ரீதியில், அந்த மனிதர்கள், தங்கள் இனத்திற்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் தாங்கிக்கொண்டு, அடிபணிந்து செல்கின்றனர். படத்தில் காண்பித்திருக்கிற இவை, உண்மையல்ல. இதற்கடுத்து இன்னொரு விஷயம், எஃப்.பி.ஐ, இந்த சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டிலும் சரி, அதற்குப் பிறகான, ப்ளாக் பாந்தர் மூவ்மெண்டிலும் சரி, சமீபமாகயிருக்கிற ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் மூவ்மெண்ட் வரையும் பார்த்தீர்களென்றால், இனவெறியோடுதான், இந்த இயக்கங்களின்மீது நடந்துகொண்டிருந்திருக்கிறது. கறுப்பின செயற்பாட்டாளர்களுடைய பேச்சுக்களை டப்பிங் செய்து, தவறான கருத்துக்களை அவர் பேசியதுபோல மாற்றி, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்க முயன்றிருக்கின்றனர். அதேபோல, கறுப்பினத் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை, தங்களது எஃப்.பி.ஐ எனும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டியிருக்கின்றனர். திட்டமிட்டு கறுப்பின செயற்பாட்டாளர்களையும், தலைவர்களையும் கொலைசெய்திருக்கின்றனர். இதுதான் வரலாற்றில் நடந்த உண்மைகள். ஆகவே, மிஸ்ஸிஸிப்பி பர்னிங் படத்தில் காண்பித்ததுபோல, நிறவெறி தொடர்பான பிரச்சினைகளில், எஃப்.பி.ஐ அதிகாரிகள் தலையிட்டு, அந்தக் கறுப்பின மக்களுக்காகப் போராடி, மிகப்பெரிய சாகசத்திற்கு மத்தியில் காணாமல்போனவர்களை மீட்டார்கள், இவர்கள் கறுப்பின மக்களின் மீட்பர்கள் என்று காண்பிப்பது, தவறான விஷயம். இதுதான், இந்தப் படம்மீது வைக்கிற அவர்களுடைய விமர்சனமாகவும் இருக்கிறது.


அம்சவள்ளி: படத்தின் இயக்குனர் இந்த விமர்சனம் குறித்து என்ன சொல்கிறார்?

யமுனா ராஜேந்திரன்: ”திரைப்படம் என்பது, ஒரு சம்பவத்தின் மையம் என்ன என்பதை, வெளிக்காட்ட வேண்டும். படம் சொல்கிற நீதி என்ன? என்பதையும் சொல்ல வேண்டும். இந்தப் படம், நிகழ்வு நடந்துமுடிந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் எடுக்கப்படுகிறது. இந்தப் படம் சம்பந்தமான நிகழ்வுகள், வரலாற்று உண்மைகள், கறுப்பின மக்களுக்கோ, கறுப்பின இளைஞர்களுக்கோ கூட தெரியாது. அந்தச் சமயத்தில், இப்படி இந்த விஷயங்கள் நடந்திருக்கிறது, கறுப்பின மக்கள் இவ்வாறாக ஒடுக்கப்பட்டார்கள், கறுப்பின மக்களின் வாழ்வுரிமை தடுக்கப்பட்டது, வாக்குரிமை மறுக்கப்பட்டது, அதற்காகப் போராடிய, செயற்பாட்டாளர்கள் கூட, வெள்ளையின மேலாதிக்கம் கொண்டவர்களால் கொல்லப்பட்டார்கள் என்ற வரலாற்றை இது முன்வைக்கிறது. இதற்கடுத்து, இந்தக் கொடுமைகளைச் செய்த அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? ஆம், தண்டிக்கப்பட்டார்கள் என்ற விஷயத்தை, இந்தப் படம் தெளிவாக முன்வைக்கிறது. அந்தவகையில் இந்தப் படம் மிகமுக்கியமான படமாகவே கருதுகிறேன்” என்பது இயக்குனரின் வாதம். ஆனால், கறுப்பின மக்கள் சார்பில் எழுப்புகிற கேள்விகள், அதாவது, “எஃப்.பி.ஐ அதிகாரிகளைக் கறுப்பினத்தவர்களின் மீட்பர்களாகக் காண்பிக்கிறீர்களே!” என்ற கேள்விக்கு, இயக்குனர் பதில் சொல்வதில்லை.

அதேபோல, கறுப்பின மக்கள் அடிபணிந்து போகவில்லை, தங்கள்மீது திணிக்கப்படுகிற வன்முறைக்கு எதிராக, அவர்கள் போராடினார்கள். குறிப்பாக, அந்த மூன்று செயற்பாட்டாளர்களில் ஒருவர், அந்தப் பகுதியிலேயே இருந்து, வெகுநாட்களாக, கறுப்பின மக்கள் நலனுக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒருவர். ஆனால், அந்தப் பின்னணி பற்றிய எந்தவொரு குறிப்பும் படத்தில் இடம்பெறவில்லை. அதாவது, கறுப்பின மக்களை அடிபணிந்துபோகிறவர்களாகக் காண்பிக்கிறார்களேயொழிய, கறுப்பின மக்களிலிருந்தே எத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன, கறுப்பின மக்கள் எழுப்பிய இயக்கங்களின் செயல்பாடுகள், அதில் அந்த மக்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள், அவர்களிடம் எதிர்ப்புணர்வு எப்படி வந்தது, எவ்விதத்திலெல்லாம் எதிர்ப்புணர்வைக் காண்பித்தார்கள் போன்ற விஷயங்கள் படத்தில் இல்லை. வெள்ளையர்களின் போக்கிரித்தனங்களை வெளிக்கொணர்வதிலும் சரி, வெள்ளையர்களைச் சமாளிப்பதிலும் சரி, வெள்ளையர்களைத் தண்டிப்பதிலும் சரி, இதில் வலிமையானதாகச் செயல்படுவது எஃப்.பி.ஐ என்று படத்தில், பிழையாகக் காண்பித்திருப்பது தொடர்பாக, இயக்குனர் பதிலளிப்பதில்லை. இதுதான் இப்படம் தொடர்பான முக்கியமான விமர்சனமும் கூட.


அம்சவள்ளி: வைட் ஷாட்டிலிருந்து படம் துவங்குகிறது. கறுப்பினத்தவர் தண்ணீர் குடிப்பதற்கென்று ஒரு குழாயும், வெள்ளையினத்தவர் தண்ணீர் குடிப்பதற்கென்று இன்னொரு குழாயும் என இரு குழாய்கள், தனித்தனியே வைக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டிடம் கொளுந்துவிட்டு எரிவது. அடுத்து, முழுக்க இருளில், பரந்த நிலப்பரப்பில், ஒரு காரைத் துரத்திக்கொண்டு, மற்ற கார்கள் வருகிற காட்சி. ஒருவழியாக காரைத் தடுத்துநிறுத்தி, கறுப்பினத்தவரைத் துப்பாக்கியால் சுடும்போதுகூட, “இவன்மேல் ஒரு தோட்டாவையாவது இறக்கமுடிகிறதே, அதுபோதும்” என்று, அவர்கள் மேல், கடும் வெறுப்புணர்வில் மேற்கொள்கிற கொலைகள். ஒரு பெண், இந்த வெறுப்பு குறித்துச் சொல்லும்போது, “வெறுப்பு தானாக, இயற்கையாக வருவதில்லை, அது விதைக்கப்படுகிறது, பைபிளிலிருந்து இது வருகிறது” என்பார். அந்த வெறுப்புணர்வின் மொத்த உருவமாக க்ளோ க்ளூஸ் க்ளான் அமைப்பு செயல்படுகிறது. வெள்ளையின மேலாதிக்க நிறவெறியால், கறுப்பினத்தவர்களைக் கொல்கின்றனர். அதேபோல, ஆங்க்லோ செக்ஸன் கம்யூனிட்டியும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இந்த இரு குழுக்களின் செயல்பாடுகள் குறித்து.

யமுனா ராஜேந்திரன்: கதாபாத்திரங்கள் பேசிக்கொள்கிற உரையாடல்களில் சில குறிப்புகள் வருகின்றன. அதாவது ஒன்று, க்ளூ க்ளோஸ் க்ளான் தொடர்பான குறிப்பு. அடுத்து, பைபிளிலேயே இந்த இனவெறி சம்பந்தமான விஷயங்கள் வருகின்றனஎ என்ற குறிப்பு. க்ளூ க்ளோஸ் க்ளான் தலைவர், ஒரு கூட்டம் நடத்துவார். அதில் அவர் பேசும்போது, ”நாங்கள் ஆங்க்லோ செக்ஸன் கலாச்சாரத்தை நிலைநாட்டுவதற்காகவும், க்றிஸ்டியானிட்டியைக் காப்பாற்றுவதற்காகவும், இந்த அனார்கிஸ்டுகளிடமிருந்தும், கம்யூனிஸ்டுகளிடமிருந்தும், யூதர்களிடமிருந்தும், எங்கள் இனத்தைக் காப்பாற்றுவதற்காகவும்தான் நாங்கள் இருக்கிறோம். மற்ற இனங்களுக்கு இங்கே இடமில்லை. வெள்ளையர்கள் அல்லாத பழுப்பு, கறுப்பு நிறத்தைச் சார்ந்தவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று சொல்கிறார். இந்த க்ளூ க்ளாஸ் இயக்கம் பார்த்தீர்களேயானால், வெள்ளையின ஆங்கில வழிவந்தவர்கள், அதாவது ஐரோப்பிய இன வழி வந்தவர்கள், இவர்களல்லாத யாருக்கும் அமெரிக்காவில் இடமில்லை. எனவே மற்ற இனங்களை நாங்கள் ஒழித்துக்கட்டுவோம். நாங்கள் இருக்கும்வரை, எங்கள் பிரதேசத்தில் மற்றவர்கள் குடியேறமுடியாது. இவர்களுக்கு வேறெந்த உரிமைகளும் தரமுடியாது. ஆகவே, இவர்களை சித்திரவதை செய்யலாம், கொலை செய்யலாம், அழித்தொழிக்கலாம் என்பதுதான் அந்த இயக்கத்தின் சித்தாந்தம். அதற்கு உறுதுணையாக, க்றிஸ்டியானிட்டி, ஆங்க்லோ செக்ஸன் போன்ற விஷயங்களை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.


கு க்ளக்ஸ் க்ளான் இயக்கத்தைச் சார்ந்தவர்கள், சாக்கு போன்ற துணியால் தலையை மறைத்துக்கொண்டு, கறுப்பின மக்கள், ஆசிய மக்கள் இருக்கிற இடங்களில் சித்திரவதைகளை மேற்கொள்வார்கள். தீ வைப்பார்கள், மனிதர்களின் கை கால்களை உடைப்பார்கள், அவர்களின் உடைமைகளைச் சேதப்படுத்துவார்கள், கொலையும் செய்வார்கள். இதுதான் அவர்களுடைய வேலை. இது அமெரிக்கா முழுவதுமே பெரிய இயக்கமாகச் செயல்பட்டுவந்தது. இன்றைக்கு, அந்தளவிற்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும்கூட, அந்த நிறவெறி சித்தாந்தம், இனவாதம், நிறவாதம் இன்றைக்கு வரைக்கும் அமெரிக்காவில் இருக்கிறது. டொனால்ட் ட்ரம்பின் அரசியல்கூட, இதன் ஒரு அம்சம்தான். ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸில் செயல்பட்டதும் அந்த மனோபாவம்தான்.

இந்தப் பிரச்சினைகளைக் கம்யூனிஸ்டுகள்தான் தூண்டிவிடுகிறார்கள். இதல் ஈடுபடுபவர்கள் யூதர்கள், அனார்கிஸ்டுகள், ஆகவே இவர்களுக்கெதிராகச் செயல்படுவோம் என்று க்ளூ க்ளாஸ் க்ளோன் இயக்கத்தினர் சொல்வார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், 1960களின் (கோல்ட்வார்) காலகட்டத்தில் கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்பு அமெரிக்காவில் கடுமையாகயிருந்தது. மெக்கார்தி அமைச்சகம் இதை முன்னெடுத்தது. கம்யூனிசம் ஒரு சாத்தான். ஆகவே, இந்தக் கம்யூனிசம் என்ற சாத்தானைச் சார்ந்தவர்கள் கறுப்பினத்தவர்களை ஆதரிக்கிறார்கள். எனவேதான், இவர்களை ஒழிக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை க்ளூ க்ளோஸ் க்ளான் இயக்கத்தினர் கொண்டிருந்தனர்.
இந்த அடிப்படையை வைத்துத்தான், இந்த இயக்கங்கள் உருவாகின்றன. பள்ளிப்பருவக் காலத்திலேயே, இவர்களுக்கு நிறவாதம் தொடர்பான விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. க்றிஸ்டியன் பைபிளில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில், இந்துத்துவா என்பது எழுத்திலேயே அப்படி உள்ளது. பிராமணர்கள் உயர்வானவர்களென்றும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழானவர்கள் என்பது எழுத்திலேயே உள்ளது. பிராமணர்கள் உயர்வானவர்கள் போன்ற சித்திரத்தை அந்த எழுத்து அளிக்கிறது. அதேபோலத்தான் பைபிளில் வெள்ளையின மேலாதிக்க உணர்வு வருவதுபோன்ற எழுத்துகள் உள்ளன. இது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படுகிறது.

சித்தாந்தரீதியிலான ஒரு இயக்கம், அது வாழ்முறையாக இருக்கிறது, அது அரசியலாக இருக்கிறது, அது அவர்களுக்கு ஒருவித பெருமித உணர்வைத் தருகிறது. தாங்கள் மேலானவர்கள் என்ற பிரமையைத் தருகிறது. அந்த உணர்வினடிப்படையில், வெள்ளையின மக்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். சிறு குழந்தைகள் கூட, அவர்கள் நடத்துகிற ஊர்வலங்களில் கலந்துகொள்கின்றன. சாதாரண குடிமக்கள்கூட அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், காவல்துறையினர் அந்த இயக்கத்தில் இருக்கின்றனர். ஆகவே, இந்த நிறவாத, இனவாத வெறுப்பு என்பது நாடு தழுவிய பிரச்சனையாக இருக்கிறது என்பதுதான், மிஸ்ஸிஸிப்பி பர்னிங் கதாபாத்திரம் சொல்லவருகிற விஷயம்.அம்சவள்ளி: எஃப்.பி.ஐ ஏஜெண்ட்களாக ரூபெர்ட் ஆண்டர்சன் கதாபாத்திரத்தில் ஜென்னி ஹாக்மன்னும், ஆலன் வார்ட் கதாபாத்திரத்தில் வில்லியம் டோஃபேவும் வருகிறார்கள். அவர்களுக்கான அறிமுகம் நிகழ்கிறபோது, ஆண்டர்ஸன், ஆலன் வார்ட் எங்கிருந்து வந்திருக்கிறார் போன்ற விஷயங்களைக் கேட்டு அறிந்துகொள்கிறார். “நீ இங்கு வந்து என்ன செய்யப்போகிறாய்?” என்பதுபோலவும் ஆண்டர்ஸன் கேட்கிறார்.

யமுனா ராஜேந்திரன்: ஆண்டர்ஸன், மிஸ்ஸிஸிப்பி காவல்துறையில் ஒருகாலத்தில் ஷெரீஃபாக இருந்தவர். எனவே, மிஸ்ஸிஸிப்பியின் நிலப்பரப்பு, மக்கள், அங்கு நிலவுகிற அரசியல் பற்றி முன்பே தெரியும். ”இங்கு நிலைமை இப்படித்தான் இருக்கிறது. நீ இங்கு வந்து என்ன செய்யப்போகிறாய். அதற்கான சூழல் இருக்கிறதா?” என்ற உணர்வில்தான், ஆரம்பத்தில் ஆண்டர்ஸன் இருப்பார். ஆலன் வார்டிற்கு இருக்கிற பொறுப்புணர்வு, ஆண்டர்ஸனுக்கு இருக்காது.

மூன்று செயற்பாட்டாளர்கள் காரில் வரும்போது படத்தில், வெள்ளையினத்தவர் காரை ஓட்டிக்கொண்டு வருவதுபோலக் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உண்மையில், வரலாற்றில், கறுப்பினத்தவர்தான் காரை ஓட்டியிருக்கிறார். அப்படி, கறுப்பினத்தவர் காரை ஓட்டிக்கொண்டுவர முக்கியமான காரணம் என்னவென்றால், மிஸ்ஸிஸிப்பி பற்றிய அறிதலும், பாதை எங்கு செல்கிறது என்ற தெளிவும், அவருக்குத்தான் இருக்கும். அப்படித்தான் ஆண்டர்ஸன், மிஸ்ஸிஸிப்பியை ஏற்கனவே அறிந்தவர் என்ற முறையில் ஆலன் வார்டிடம் விசாரிக்கிறார். மேலும், ஆண்டர்ஸன் வயதில் மூத்தவரானாலும், அவரைவிட வயதில் சிறியவரான ஆலன் வார்டுதான், அவருக்கு உயரதிகாரி. ஆண்டர்ஸன் ஷெரீஃபாக இருந்து, பதவி உயர்வுபெற்று, எஃப்.பி.ஐக்கு வந்திருக்கிறார். ஆனால், ஆலன் வார்ட் நேரடியாக இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். அப்படித்தான் அவர்களின் அறிமுகங்கள் நிகழ்கின்றன.அம்சவள்ளி: மூன்று நபர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அதில் ஒருவர் கறுப்பினத்தைச் சார்ந்தவர் என்று சொல்லும்போது, உள்ளேயிருந்த ஷெரீஃப் என்ன சொல்வாரென்றால்,”மார்டின் லூதர் கிங் உசுப்பிவிட்டதால் இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். இதெல்லாம் பொய்” என்பதுபோலச் சொல்வார். இது அவருக்குள்ளிருக்கும் நிறவெறியைக் காட்டுகிறது. பின்பு, கடைசிக் காட்சியில், கறுப்பினத்தவரையும் கண்டுபிடித்து, அவரது பிணத்தைத் தேவாலயத்தில் வைத்துவிட்டு, பாதிரியார், “இவரைப் பெற்ற அம்மாவிற்காக நாம் வருத்தப்பட வேண்டும். உடன் இறந்த இரு வெள்ளையினத்தவர்களுக்காகவும் நாம் வருத்தப்பட வேண்டும்” என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அவர்களைப் புதைக்கிற இடம் மட்டும் வேறுவேறாக உள்ளது. மூன்று பேரும் ஒன்றாக, ஒரே நேரத்தில் இறந்தாலும், கறுப்பினத்தவர் ஒருபுறமும், வெள்ளையினத்தவர் இன்னொருபகுதியிலும் புதைக்கப்படுகின்றனர். இதனை எப்படி எடுத்துக்கொள்வது?

யமுனா ராஜேந்திரன்: இதுதான் எஸ்டாபிளிஸ்மெண்ட் மற்றும் இன்ஸ்டிட்யூஷனல். அவர்கள் தனித்தனியே புதைக்கப்பட்ட காட்சியை, படத்தின் ஆரம்பக் காட்சியோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் தண்ணீர் குடிக்க, தனித்தனி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாகுபாடு என்பது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதிலிருக்கிற முக்கியமான விஷயம். இந்தப் பாகுபாடுதான், புதைகுழி வரைக்கும் நீள்கிறது. இந்த மூன்றுபேரும் ஒரே காரணத்திற்காகத்தான் உழைத்தார்கள்.
கறுப்பின மக்களுக்கான வாக்குரிமை வேண்டும், அது சம்பந்தமான விழிப்புணர்வு அம்மக்களிடையே உருவாக வேண்டும், அந்தப் பணிகளுக்காகத்தான் அவர்கள் அங்கு சென்றார்கள். ஒரே நோக்கத்திற்காகச் சென்றவர்கள், கொல்லப்பட்டபிறகு, அவர்களை ஒரே பகுதியில் புதைக்காமல், பாகுபாடு காட்டி, வேறு வேறு பகுதிகளில் புதைக்கிறார்கள் என்றால், இன்னும் அந்த அமைப்பு எப்படிக் கெட்டித்தட்டிப் போயிருக்கிறது, அல்லது வெள்ளையின நண்பரின் தாய் தகப்பனின் உறவினர்களின் மனநிலை என்னவாகயிருக்கிறது, இன்னும் அவர்கள் நிறவெறி மனநிலையிலிருந்து மீளவில்லை, இதுபோன்ற விஷயங்களை நினைவூட்டுவதற்காகத்தான் அந்தக் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில், கறுப்பினத்தவர்கள், தங்களுடைய நலனுக்காகத்தான் அவர்கள் வந்தார்கள், தங்களுடைய நலனுக்காகத்தான் பாடுபட்டார்கள், அதற்காக மரணமுமடைந்திருக்கிறார்கள், எங்களுடைய தாய்மார்கள் கவலைப்படுவதுபோலவே, அவர்களுடைய தாய்மார்களும் கவலைப்படுவார்கள். ஆகவே, அவர்களும் நம்மைச் சார்ந்தவர்கள், எல்லோரும் மனிதர்கள், நம்மவர்கள் என்ற உணர்வு கறுப்பினத்தவர்களுக்கு இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு, அந்த ’நம்மவர்கள்’ என்ற உணர்வு, இந்தத் துன்பத்திலும்கூட அவர்களுக்கு எழவில்லை. இதுதான் நிறவெறியின் கொடுமை என்பதையே அந்த இறுதிக்காட்சி உணர்த்துகிறது.
அம்சவள்ளி: கறுப்பின மக்களின் எதிர்ப்புணர்வை ஆலன் பார்க்கர் காட்சிப்படுத்தாதற்கான காரணமாக நீங்கள் நினைப்பது?

யமுனா ராஜேந்திரன்: ஆலன் பார்க்கர் ஆக்‌ஷன் படங்கள் எடுக்கக் கூடியவர். ஜனரஞ்சகமான படங்களும் எடுத்திருக்கிறார். அவருக்கு, இந்தப் பிரச்சினைகளைச் சொல்வதை விடவும், இந்தப் பிரச்சினையை முன்வைத்து ஒரு சாகசப் படம் எடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாகயிருக்கிறது. அதேபோல, வெள்ளையினத்தவரை மீட்பராக முன்வைத்து எடுப்பது ஒருவகை ஜானர்.

கறுப்பின மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். அவர்களை முன்னிலைப்படுத்தி நடக்கிற போராட்டங்கள் வெற்றிபெறுவதில்லை. மாறாக, லிபரல்களாக இருக்கிற, கறுப்பின மக்களை ஆதரிக்கிற வெள்ளையின மக்கள் சேர்ந்து போராடுகிறபோதுதான் அந்தப் போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன என்ற நிலைப்பாடும் உள்ளது. மற்றொரு காரணம், பார்வையாளர்கள். இந்தப் படத்திற்கான பார்வையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருக்கிற ஹாலிவுட் படங்களைப் பார்க்கிற பார்வையாளர்கள். மற்றது, ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிற பார்வையாளர்கள். இவர்களுக்கு வெள்ளையர்களின் பார்வையிலிருந்து கதையைப் பின்தொடர்வதுதான் மிக இயல்பான விஷயம். அவர்களை மீட்பர்களாக முன்வைப்பதை, விரும்புவார்கள்.

அதேபோல, காவல்துறையில் இருப்பவர்கள், எஃப்.பி.ஐ ஏஜெண்டுகளைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதும் அவர்கள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பதும் உலகம் முழுதும் ரசிக்கப்படுகிற ஒரு திரைப்பட வகைமை. உதாரணத்திற்கு, தமிழில் மணிரத்னத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் பல்வேறு தரப்பட்ட கதைகளை திரைப்படமாக்கியிருக்கிறார். ஆனால், அவர் சாகச நாயகனாக, வீரர்களாக யாரைச் சித்தரிக்கிறார் என்று பாருங்கள், ராணுவத்தில் இருப்பவரை, காவல்துறையில் இருப்பவரை, அத்தகைய கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கிறார். ஆனால், அதற்கு மாறாக, வெகுசன போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிப் போராடுகிறவர்கள், சாகசநாயகனாக அவரது படங்களில் இருக்கமாட்டார்கள்.


ஆகவே, அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவர்களை, சாகசவாதிகளாகச் சித்தரிப்பதென்பது ஒரு ஜானர். அந்த ஜானரை எடுத்துக்கொண்டுதான், ஆலன் பார்க்கர், சாகசவாதிகளாக எஃப்.பி.ஐயைச் சேர்ந்தவர்களை மையக்கதாபாத்திரமாக்குகிறார். கறுப்பர்கள் அவர்களுக்குரிய பிரச்சினையில் சாகசம் செய்யவில்லை என்பதெல்லாம் பொய். முதலில் சாகசம் என்பதைப் புரிந்துகொள்வோம். நீங்கள் ஆயுதமேந்தி, பத்துபேரை சுட்டு வீழ்த்துவது சாகசம் இல்லை. காந்தியின் நடவடிக்கையை என்ன சொல்வீர்கள்? காந்தியின் நடவடிக்கை சாகசம்தான். அஹிம்சையிலும் ஒரு சாகசம் இருக்கிறது. அஹிம்சையிலும் எதிர்ப்புணர்வு இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் எதிர்ப்புணர்வு என்பதே இல்லை. இந்தப் படத்திலிருக்கிற மிக முக்கியமான பிரச்சினை, கறுப்பர்கள் தங்கள் துன்பங்களைக் குறித்து கேள்விகேட்காமல், விவாதிக்காமல், ஒதுங்கிப்போவதைப்போலக் காண்பித்திருக்கிறார்கள். உண்மையில் எதிர்ப்புணர்வு என்பதுதான் சாகசம்.

ஆலன் பார்க்கருக்கு, காவல்துறையின் சாகசம் தொடர்பாக ஒரு படம் செய்யவேண்டியிருக்கிறது. ஆதலால்தான், படத்தின் ஆரம்பத்திலேயே, கறுப்பின செயற்பாட்டாளருக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் படத்தில் இல்லை. அதேபோல, கறுப்பின மக்களின் எதிர்ப்புணர்விற்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவமும் இல்லை. ஆனால், அதேநேரத்தில் அமெரிக்கா முழுவதுமே சிவில் ரைட்ஸ் மூவ்மெண்ட் இருந்தது. ரோஸா பார்க்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தங்கள் இனத்தின்மீது நிகழ்த்தப்படுகிற அநீதிகளை எதிர்க்கிறார். அவர் வன்முறையில் ஈடுபடுவதில்லை மாறாக எதிர்ப்புணர்வைப் பதிவுசெய்கிறார். மார்டின் லூதர் கிங் எதிர்ப்புணர்வைக் காட்டுகிறார். ப்ளாக் பாந்தர்ஸ் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். ஆகவே, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவது, போராட்ட உணர்வைக் காண்பிப்பது என்பது, சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டிலும், ப்ளாக் பாந்தர்ஸ் முவ்மெண்டிலும், ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் மூவ்மெண்டிலும் இருந்ததை நாம் பார்க்கமுடிகிறது. அதை, இந்தப் படத்தில் தவறவிட்டிருக்கின்றனர்.

அம்சவள்ளி: ஆலன் வார்டாக நடித்த வில்லியம் டோஃபே, ஆண்டர்ஸனாக நடித்த, ஜென்னெ ஹாக்மன்னின் நடிப்பு குறித்துயமுனா ராஜேந்திரன்: உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் வில்லியம் டோஃபே. திரையில் அவரது நடிப்பு அவ்வளவு மிரட்சியாகயிருக்கும். லார்ஸ் வான் ட்ரையரின் ஆண்ட்டி க்றைஸ்ட் மாஸ்டர் பீஸ். பல்வேறு ஐரோப்பிய இயக்குனர்கள் வில்லியம் டோஃபேவைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர் கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிவிடுவார். அவரது நடிப்பு, ஒரு தியானநிலை நடிப்புபோல எனக்குப்பட்டது.

அதேபோலத்தான் ஜென்னெ ஹாக்மன். இந்தப் படத்தை அவ்வளவு ரசித்துப் பார்க்கமுடிந்ததற்குக் காரணம், இதில் நடித்த நடிகர்கள். திரைப்படம் என்ற அனுபவத்தைத் தருவதற்கு அந்த காஸ்டிங் தேர்வே மிக முக்கியக் காரணமாகயிருக்கிறது.