தீபா மேத்தாவின் ’வாட்டர்’

ஜனரஞ்சகத் திரைப்படங்களை முக்கியப்படுத்தி வரும் இந்திய சினிமா உலகில் பிறந்த இயக்குநர் தீபா மேத்தா சர்ச்சைகளைக் கிளப்பும் வகையில் இந்திய சமுதாயத்தின் கலாச்சார சீரழிவுகளைப் பிரதிபலிக்கும் முகமாகப் பல திரைப்படங்கள் எடுத்து வருகின்றார். அண்மையில் வெளிவந்த ‘வாட்டர்’ (Water) எனும் தீபா மேத்தாவின் திரைப்படத்திற்கு ஒரு வரலாறே இருக்கிறது. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் வாரணாசி எனும் இடத்தில் ‘வாட்டர்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றன.


30களில் கணவனை இழந்து விதவை என்று அழைக்கப்பட்ட பெண்கள், நிர்பந்தத்தின் பெயரால் விதவைகள் ஆசிரமங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அது இன்றும் தொடர்கின்றது என்றும் வட இந்தியாவில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது பார்த்த ஒருவிதவைப் பெண்ணின் அவலம் தமது மனதைப் பாதித்ததாகவும் அதுவே’ வாட்டர்’ திரைப்படம் உருவாவதற்கு உந்துகோலாக அமைந்திருப்பதாகவும் தீபா மேத்தா தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார். வாரணாசியில் இன்றும் விதவைகள் ஆசிரமங்கள் இயங்கி வருவதால் அங்கேயே ‘வாட்டர்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பை ஒழுங்கு செய்து அங்கு சென்று ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படப்பிடிப்புக் குழுவை எதிர்த்து பல கண்டன ஊர்வலங்களும், மிரட்டல்களும் மதவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் நிகழ்த்தப்பட்டு ‘வாட்டர்’ படப்பிடிப்பு தொடங்காமலே நிறுத்தப்பட்டது.

தீபா மேத்தா மிரட்டல்களுக்குள்ளாவது இது முதல் தடவையல்ல. அவரின் திரைப்படமான ‘ஃபயர்’ 1996இல் வெளியானபோது மிகப்பெரிய அளவில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டு திரைப்பட முதல் காட்சியின்போது திரையரங்கில் தீ மூட்டி திரைப்படச் சுருள்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து 1998இல் ‘எர்த்’ திரைப்படம் முஸ்லீம், இந்துக்களுக்கான பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் பல ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றதாக கண்டனங்கள் வைக்கப்பட்டன. பல மிரட்டல்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகினாலும் தீபா மேத்தா தனது முயற்சியில் தளராது கலாச்சாரம் என்ற போர்வைக்குள் எப்படி இந்திய மக்கள், முக்கியமாகப் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாகத் தனது திரைப்படங்கள் மூலம் காட்டி வருவது பாரட்டப்படக்கூடிய ஒன்று.


தீபா மேத்தாவின் தந்தை ஒரு திரைப்பட வினியோகிஸ்தரும் திரையரங்கு உரிமையாளரும் ஆவார். இதனால் தீபா மேத்தா சிறுவயதிலிருந்தே பல திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர். இருப்பினும் அவருக்குத் திரைப்படங்களில் அதிகம் ஈடுபாடு இருக்கவில்லை. படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தவர் ஒரு விவரணப்படத்தில் தற்செயலாக வேலை செய்யும் சந்தர்ப்பம் வாய்த்தபோது தனக்குள் இருக்கும் திரைப்பட ஆர்வத்தைப் புரிந்துகொண்டதாக கூறுகின்றார். 1973ஆம் ஆண்டு கனேடியத் திரைப்பட இயக்குநரான ’போல் சாட்ஸ்மனை’, இந்தியாவில் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டு கனடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

திரைப்படத்துறை பற்றிய நேரடி அறிவு இல்லாதிருந்தபோதும், தீபா மேத்தா ஆரம்ப காலங்களில் பல விவரணப்படங்களை தயாரித்திருக்கின்றார். தொடர்ந்து குழந்தைகளுக்கான திரைப்படப் பிரதியை எழுதத் தொடங்கியவர், 1991இல் தனது முதல் முழுநீளத் திரைப்படம் ‘சாம் அண்ட் மீ’ யைத் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்று தீபா மேத்தாவிற்கு முதல் விருதையும் (ஹானறபிள் மென்சன்) பெற்றுத் தந்திருக்கிறது.

2000 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட ‘வாட்டர்’ திரைப்படம் நான்கு வருடங்களுக்குப் பின்னர், நடிகர்கள் மாற்றங்களோடு இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்டு முழுமை அடைந்திருக்கிறது.


’வாட்டர்’ திரைப்படத்தைப் பார்த்தவர்கள் தீபா மேத்தாவின் மிகச் சிறந்த திரைப்படமாக ‘வாட்டரை’க் குறிப்பிட்டாலும் தனது மூன்று முழுநீளத் திரைப்படங்களையும் தான் சமனாக நேசிப்பதாகக் கூறுகின்றார் தீபா மேத்தா. இருந்தும் ‘வாட்டர்’ தந்த அளவிற்கு பிரச்சினைகளையும் மற்றைய எனது திரைப்படங்கள் தராததால் இத்திரைப்படம் எனது அபிமானத் திரைப்படமாவதில் வியப்பில்லை என்றும் கூறுகின்றார்.

’வாட்டர்’ திரைப்படம் கனடாவில் இடம்பெறும் ரொறோண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக க்காலா திரையரங்கில் , திரையரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் இந்தியாவில் திரையிடப்படுமா? என்று நிரூபர்கள் தீபா மேத்தாவைக் கேட்டபோது, திரையிடப்பட வேண்டும் என்பது என் விருப்பம். இது விநியோகிஸ்தர்களையும் திரையரங்கு உரிமையாளர்களையும் பொறுத்திருக்கிறது என்று பதில் கூறினார்.


’ஃபயர்’ திரைப்படத்தில் கணவனால் பாதிக்கப்பட்ட இருபெண்களுக்குள்ளான உறவையும், அந்த உறவை இந்தியச் சமுதாயம் எப்படி நோக்குகின்றது என்பதையும் காட்டியிருந்தார் இயக்குநர் தீபா மேத்தா. இந்தியச் சமுதாயம் என்பது மிகவும் கீழ்நோக்குப் பார்வையில் இயங்கிக் கொண்டு அவற்றை வெளியே கூறத் தயங்கி வெறும் போர்வைக்குள் வாழ்ந்து வருகின்றது. நிஜங்களைத் தமது படைப்புகளில் வெளிக்கொணரத் தயங்குகின்றார்கள் கலைஞர்கள். முக்கியமாக சினிமாத் துறை வெறும் ஜனரஞ்சக நிகழ்வுகளை முதன்மைப்படுத்தி சினிமா என்பதை வெறும் பணம் பண்ணும் ஒரு ஊடகமாக ஆக்கிவிட்ட நிலையில் சமூகங்களுக்குள் இருக்கும் பல நிகழ்வுகளை எடுத்துக் காட்டத் தயங்குகின்றது இந்த ஊடகம்.

தீபா மேத்தா இந்தியக் கலாச்சாரத்தைக் கூறுபோட்டு மேற்கத்தியர்களுக்கு விற்கின்றார் என்று ஒரு குற்றச்சாட்டும் அவர் மேல் பரவலாக இருக்கின்றது. ‘இந்தியச் சமுதாயத்தில் பல சீர்கேடுகள் இருக்கும் பட்சத்தில் அவை வெளியே கொண்டுவரப்படல் வேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் ஒரு புரட்சி கிளம்பி சீர்திருத்தங்கள் ஏற்படும்’ என்று தீபா மேத்தா குறிப்பிடுகின்றார்.

’ஃபயர்’ திரைப்படத்தில் பல அழகியல் காட்சிகளையும், தேவையற்ற பாலியல் காட்சிகளையும் புகுத்தி ஜனரஞ்சக ரசிகர்களைத் திருப்திப் படுத்துவதோடு இந்தியப் பார்வையாளர்களுக்கு ஒரு வகை அதிரடி உணர்வைக் கொடுத்திருக்கின்றார் இயக்குநர். அதே வேளை மிகக் கவனமாகத் தனது ‘வாட்டர்’ திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.

பால்ய விவாகம் செய்த சிறுமி ஒருத்தியின் கணவன் இறக்க அவள் விதவையாக அறிவிக்கப்பட்டு உருவமாற்றம் செய்யப்பட்டு விதவை ஆசிரமத்திற்கு தந்தையால் கொண்டுசென்று விடப்படுவதோடு திரைப்படம் ஆரம்பமாகின்றது.

தந்தை மகளைப் பார்த்து ‘உனக்குத் திருமணம் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா?’ என்று கேட்கிறார். நித்திரையில் இருந்து எழுந்த சிறுமி ‘இல்லை’ என்கிறது. ‘உனது கணவன் இறந்து விட்டான். இனி நீ விதவை’ என்கிறார் தந்தை. எவ்வளவு காலத்துக்கு?’ என்கிறது குழந்தை.

மேற்சட்டையின்றி வெள்ளைச் சேலை, மழித்த தலை, இறுகிய முகம், என்று பல வயதுகளில் கணவனை இழந்த பெண்கள் பாசி படிந்த அந்த ஆசிரமத்திற்குள் பல ஆண்டுகளாக வெளி வெளிச்சம் காணாது வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கையில் இச்சிறுமியின் வரவால் மாற்றங்கள் ஏற்படுகின்றது.

கணவனை இழந்தால் கேள்வி களற்று இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து வந்தவர்கள் மத்தியில் முகமறியா வயதில் தனது கணவனை இழந்து ஆசிரமத்தில் வாழ்ந்துவரும் இளம் பெண் ஆசிரமத்தின் தலைவியால் பணத்திற்காக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றாள்.

சாஸ்திரத்தில் எழுதி வைக்கப்பட்ட்தைக் கேள்வி கேட்டல் தகாது என்ற தயக்கத்தில் ஜடமாக வாழ்ந்துவரும் பெண் சகுந்தலா, ஏழு வயதில் நடைபெற்ற தனது திருமணத்தின்போது சுவைத்த லட்டின் நினைவை மட்டும் கொண்டு வாழும் மூத்த விதவை என்று பல வடிவங்களில் மழித்த தலையும், வெள்ளைச் சீலையுமாக ஆசிரமம் நிறைந்திருக்கிறது.

தனது திரைப்படங்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்தோ, அல்லது விரும்பியோ கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளை இணைக்கும் தீபா மேத்தா எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி பாசி படர்ந்த கட்டிடமும் , தலை மழித்த வெள்ளைச் சேலைப் பெண்களும் என்று ‘வாட்டரை’ ஓட விட்டிருக்கின்றார்.

38களில் கணவனை இழந்த பெண்கள் மிகக் குரூரமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்ல நினைத்த இயக்குநர் அதைத் திறம்படச் செய்தாரா என்பது சந்தேகமே. அயர்லாந்து திரைப்படமான ‘மக்டலீனா சிஸ்ரேஸ்’ திரைப்படம் அளவிற்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நுணுக்கமாக வாட்டரில் அலசப்படவில்லை.

இருந்தும் கணவனை இழந்த பெண்களின் உயர்ந்த பட்ச அவலநிலையை தீபா மேத்தா படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. ஊர்ப்பெரியவரின் மகனான காந்தீயவாதியாக வரும் நாயகன் ஜோன் ஆப்ரகாம் கணவனை இழந்த ஒரு அழகிய இளம்பெண்ணை மணக்க முன்வருகிறார். ஆனால் அவள் இறந்தபோது பெரியாதாக அலட்டிக்கொள்ளவில்லை. தந்தை மேலிருந்த நம்பிக்கை, மதிப்பு அழிகின்றது. ஊரை விட்டுப் போகிறார். தீவிர மதிப்பு அழிகின்றது. ஊரை விட்டுப் போகிறார். தீவிர சிந்தனைக் கொண்ட இளைஞன் ஒருவனை வெறும் சுயநலவாதியாகச் சித்தரிப்பதோடு நிறுத்திக்கொண்டுவிட்டார் இயக்குநர்.

சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டிருந்த நாயகி சகுந்தலா, ஒருவனைக் காதலிக்கின்றாள், திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டாள் என்றபோது திடுக்கிடுவதும், அவளை ஆசிரமத் தலைவி பூட்டி வைத்தபோது மெளனமாக இருப்பதும், பின்னர் தான் தொண்டு செய்யும் சமயத் தலைவரின் மூலம் விதவைகள் மறுமணம் பற்றிய காந்தியின் உரையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கதவைத் திறந்து நாயகியை வெளியே அனுப்பி வைப்பதும், சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் எப்படி எல்லாம் பெண்களைச் சிந்திக்க விடாமல் பண்ணிவிடுகின்றன என்பதைக் காட்டுகிறது.

பெண் விடுதலைக்கும், சாதீய ஒழிப்பிற்கும் பெரியார், க.அயோத்திதாசர், அம்பேத்கர் போன்றோர் குரல் கொடுத்த அளவிற்கு காந்தியின் குரல் ஓங்கி ஒலித்தது என்பதில் கேள்வியாயிருப்பினும் திரைப்படம் என்று வந்துவிட்டால் இந்திய மக்களின் விடுதலைக்கும் பெண்கள், தலித்துகளின் விடுதலைக்கும் போரடியவர் என்று காந்தியைத்தவிர வேறு எவரும் காட்டப்படுவதில்லை.


திரைப்படத்தின் உச்சகட்டமாக சிறுமியை ஊர்ப்பெரியவரிடம் மூதாட்டி அனுப்பிவிட்டாள் என்று தெரிய வந்தபோது சகுந்தலா வெகுண்டு எழுவதும், துவண்டு போய்த் திரும்பிய சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஆசிரமத்தை விட்டு ஓடுவதும், ஊர் ரெயில் நிலையத்தில் உரை நிகழ்த்திவிட்டுத் திரும்பும் காந்தியிடம் இந்தச் சிறுமியையும் அழைத்துக்கொண்டு போங்கள் என்று கதறி அவளை ரெயிலில் ஏற்ற முயன்று தோற்று இறுதியில் காந்தியுடன் ஊர் திரும்பிய நாயகன் சிறுமியை இழுத்து ரயிலில் ஏற்றித் தன்னோடு அழைத்துச் செல்வதும் பார்வையாளர்களின் மனதில் நோவை உண்டாக்கிய காட்சிகள்.

விதவைகள் ஆசிரமத்தில் வயதான மூதாட்டிகளின் உருட்டல், அதட்டலைத் தவிர பெரிதாகக் கட்டுப்பாடுகள் இருப்பதாகக் கட்டப்படவில்லை. ஒரு பெண் விரும்பினால் வெளியே போக முடியும். மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று மிகவும் இலகுவாகக் காட்டப்படுகிறது. 38களில் மிகக் குறைவான கட்டுப்பாடுகள் கணவனை இழந்த பெண்களுக்கு இருந்திருக்கிறது என்பதை அந்தக் காலப்பகுதிகள் காட்டுகின்றன. இத்திரைப்படத்தை இயக்குவதற்காக 2000ஆம் ஆண்டு வாரணாசி சென்ற இயக்குநர் படப்பிடிப்புக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கண்டன ஊர்வலங்கள், அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகளுக்குப் பயந்து படப்பிடிப்பை நிறுத்தியது இன்றும் இந்த அவலநிலை பெண்களுக்கு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இது ‘வாட்டர்’ மூலம் இன்னும் ஆழமாகப் பெண்களின் பாதிப்புகளைக் காட்டியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

திரை – டிசம்பர் 2005