சிக்கல் சீராளன் சீமான் சமூகத்திற்கு...

மத்தவங்களுக்கு எப்படியோ...ஆனா உங்களுக்குக் கடுதாசி எழுதறத நெனச்சத்தான் கொஞ்சம் ஒதறலா இருக்குது. எக்குத்தப்பா எழுதி...அப்பறம் அது வேற உங்க காதுக்கும் வந்து தொலைச்சா என் கதி அதோ அதோகதி தான். அப்பறம் என் சைக்கிள்ல என்னையே ஓட்டவெச்சிக் கடத்தீட்டுப் போயி ஒடுக்கெடுத்து அனுப்புவீங்க. எதுக்கு வம்பு?

அப்பறம் எப்படிப் போகுது பொழப்பு...?

உங்களுக்கென்ன ஜெகஜோதியாப் போகும்...

பொழப்புன்னா சாதாரணப் பொழப்பா...அதுவும் அடுத்தவன் பொழப்புல மண்ணள்ளிப் போன்ற பொழப்பாச்சே...

நீங்க மட்டுமில்ல உங்க ஆளுங்களும் படு டேஞ்சரான பார்ட்டிகதான்னு என்ன மாதிரி பட்டவனுகளுக்குத்தான் தெரியும். அதுலயும் உங்க கூட்டாளி இந்தக் கலாரசனையத்த கபோதி கந்தசாமி இருக்கானே ... அவன் ஒருத்தன் போதும்... இந்த ஊர ஒப்பேத்தறதுக்கு. மூணு மாசம் முன்னால இந்த பார்த்த கர்மம் ... படிச்ச கர்மம்... எல்லாம் மறந்து போகுதேன்னு சொல்லி... கால் நெகத்துலயும், கை நெகத்துலயும் நம்ம சொந்த சமாச்சாரங்கள எழுதி வெச்சுக்கிட்டிருந்த நேரமாப் பாத்து வந்து சேர்ந்தான் அந்த கலாரசனையத்த கந்தன்.

வந்ததும் வராததுமா...”என்ன ஷார்ட் டேர்ம் மெமரி லாசா...?” ன்னான்.

எனக்கு இந்தக் கருமமும் கெடையாது...மறக்காம இருக்கறதுக்காக இப்படி எழுதி வெச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்லிக்கிட்டே கால் கட்டை வெரல் நெகத்துல என் கொளுந்தியாளோட அட்ரசப் பச்ச குத்திகிட்டு இருந்தேன்...

“கிச்சம் பொச்சும் மட்டும்தான் பாக்கி போலிருக்கு...?” ன்னு மெதுவா மொனகிக்கிட்டே...

“என்ன தியேட்டருக்குப் போலாமா..?” ன்னான் க.க.கந்தசாமி.

என்ன படத்துக்கு?ன்னேன்.

“எல்லாம் ஒனக்குப் பொருத்தமான படம்தான் வா” ன்னு சொன்னானேன்னு நம்பிப் போனது தான் நான் வாழ்க்கைல பண்ணுன ஒரே தப்பு. கடைசீலதான் தெரிஞ்சுது அந்தக் கபோதி தியேட்டருக்குக் கூட்டீட்டுப் போறேன்னு சொல்லீட்டு ஆபரேசன் தியேட்டருக்குக் கூட்டீட்டுப் போயிருக்கான்னு...அதுவும் பைத்தியக்கார ஆஸ்பத்திரி தியேட்டருக்கு. எப்படியோ...டாக்குட்டரு...நர்சுன்னு பல ஜென்மங்கக்கிட்ட இருந்து தப்பிச்சு செவுரெட்டிக் குதிச்சு தப்பிச்சு ஊடு வந்து சேரும்போது காத்தால மணி மூணு. அது இருந்து கந்தனக் கண்டாலே கடுப்பாயிடும். சைக்கிள் கடை... சரக்குக் கடை...ன்னு எங்க கலாரானையத்தவன் கண்ணுல பட்டாலும் அம்பேலாயிடுவேன் நானு. நாலாங்கிளாஸ் பெயிளுனாலும் நம்முளுக்குத் தாயுமொழி ...தகப்பன் மொழி எல்லாமே இங்கிலீசுதான். ஆனா கந்தசாமி மட்டும் தமிழ வளர்க்கோணும்... தண்ணி பாய்ச்சோனும்ன்னு எதயாவது செஞ்சுகிட்டு சுத்துவான் ஊருக்குள்ள. அதுனால எகத்தாளமாச் சிரிச்சாலும் மனசுக்குள்ள மட்டும் ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும் அவன் மேல. தெக்கையும் வடக்கையும் மொறச்சிக்கிட்டு சுத்துன ரெண்டு போரையும் எடைல வந்து ஏலேக்ஷன்தான் இணைச்சு வச்சுச்சு.


குவாட்டரக் கையுல வச்சிக்கிட்டு வாட்டர் இல்லாமத் தவிச்ச வேளைல, ஹாரி பாட்டர் மாதிரி வந்து சேர்ந்தான் அந்த அநாதரட்சகன்.
ஆனாலும் வீம்புக்கு வேற பக்கம் திரும்பிக்க...

“என்ன அரை வேக்காடு இன்னும் கோபம் கொறையலியா...?”ன்னான் க.க.கந்தசாமி.

இனி வாழ்க்கைல உன் சகவாசமே வேண்டாம்... ஆள உடு கந்தா...ன்னேன்.

“அட அரை லூசு...

மிசாவுல உள்ள போனதுக; மிசாவக் கொண்டுவந்ததுக கூடவே கூட்டு வெச்சுகிச்சு...

பொடாவுல உள்ள போனதுக; பொடாவுல உள்ள அனுபுனதுக கூடவே கை கோத்தாச்சு...

நம்ம ஒறவு அப்படியா...? குவாட்டர டம்ளர்ல கவுத்து மாப்ளே...”ன்னேன்.

பேச்சு அப்படியே கோடம்பாக்கக் குலதெய்வங்க பக்கம் திரும்புச்சு.

“அது சரி ஆம்பள ஷகிலா படம் ஏதாவது பாத்தியா...?” ன்னான் திடுதிப்புன்னு.

அது யாரு ஆம்பள ஷகிலா?ன்னேன்.

“அதான் எஸ்.ஜே.சூரியா...” ன்னான் கலாரசனையத்த கந்தன்.

அட அந்த எழவெடுத்த ஆளோட நியூ பாத்தே பாதி காலியாயிட்டேன்.அடுத்ததையும் பாத்தா அப்பறம் அடக்கம் பண்ண வேண்டீதுதான்...ன்னேன்.

“சரி அப்பா ‘தம்பி’ படம் போலாமா...”ன்னேன்.

யாருது...ன்னேன்.

அப்பத்தான் உங்களோட படம்ங்கிற மேட்டரையே சொன்னான் கபோதி கந்தன்.

அய்யோ...மறுபடியும் தியேட்டருக்கா...?ன்னேன்.

“இல்ல திரையரங்குக்கு ...” ன்னான் உங்கள மாதிரியே.

குத்துப்பாட்டு இருக்கா...?ன்னேன்.

“குத்தும் இருக்கு...பாட்டும் இருக்கு...” ன்னான்.

டிக்கெட்ட வாங்கீட்டு உள்ள நோழயவும் படம் போடவும் செரியா இருந்துச்சு. படத்தோட மொதல் காட்சியப் பார்த்ததுமே பகீர்ன்னு ஆயிருச்சு.

இங்க அவனவன் கோபுரத்தையும் ...கோயிலயும் ... குத்துவெளக்கையும்... குருக்களையும் காமிச்சா...நீங்க என்னடான்னா எடுத்ததும் குப்பை மேட்டைக் காட்டுறீங்க.

இதென்னடாது காசுமீருக்குப் போனாலும் கரும்ம தொலையாதுன்னு நெனச்சிக்கிட்டே பாக்க ஆரம்பிச்சேன். குப்பைல கெடக்குற கதாநாயகன் எந்திரிச்சு எதிரிக கதைய முடிப்பான்னு பார்த்தா..

“உயிர் வலி எல்லாத்துக்கும் ஒண்ணுதான்...அத நீ உணரனும்...”ன்னு வசனம் பேசுறான்.

நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து கஜினி காலம் வரைக்கும் வில்லன்கள கூண்டோட “கைலாசத்துக்கு” அனுப்புறதுதான் பார்முலா... ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கேன்னு யோசிச்சபடியே கலாரசனையத்த கந்தனப் பர்ர்த்தேன். அவன் வாயப் பொளந்தபடி படம் பார்த்துட்டு இருந்தான்.

எப்படா கதாநாயகியக் காட்டுவாங்கன்னு காத்துகிட்டு இருந்தா ஒரு வழியா காட்டுறாங்க. அங்கயும் நம்மாள் போயி பொது விஷயத்துக்காக ஒருத்தனப் பொறட்டி எடுக்குறான். கலாட்டவுல கந்தலாகிப்போகுது கதாநாயகி கச்சேரி. கடுப்பான கதாநாயகி நீ நாண்டுக்கிட்டுத்தான் சாவே... நட்டு வாக்கிளி கடிச்சு சாவே... என சகட்டுமேனிக்கு வாழ்த்த.... மோதலோ மோதல்...

எதிரிக கொன்ன ஆளோட வீட்டுக்கே போய் கொன்னவனப் பின்னிப் பெடலெடுத்து கொண்டாந்து உட்டு... “நல்லாப் பாரு...நீ கொன்ன உசுரு திரும்பி வருமா ?” ங்கிறான் கதாநாயகன். நம்முளுக்குக் கடுப்பாயிடுச்சு.

என்ன கந்தா... இப்படிக் கொண்டாந்து உட்டுடியே நம்மள...?ன்னேன்.

“ஏன் என்ன சிக்கல்...?” ன்னான் கலாரசனை யத்த கந்தசாமி.

அட என்னப்பா இந்தக் கதாநாயகன் மல்டிபிள் பர்சனாலிட்டி டிசார்டர்...

ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி டிசார்டர்....

கேன்சர்.....

காக்கா வலிப்பு....

வயுத்துப்போக்கு.....

இப்படி ஒரு நோய்நொடிகூட இல்லாம குத்துக் கல்லாட்டம் இருக்கான்...ச்சே இவனெல்லாம் ஒரு கதாநாயகனா...ன்னேன்.

“அவங்களையெல்லாம் பாக்கணும்ன்னா நீ ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்....இப்ப நீ படத்தப் பாரு..”ங்கிறேன் க.க.க.

அப்பறம் அதே நாயகி நாலஞ்சு ரௌடிகளின் சிக்கிச் சீரழியறப்ப....”மத்த சனங்க மாதிரி வேடிக்கை பாக்கிறதா...? இல்ல தட்டிக் கேக்கறதா...? இப்ப நான் என்ன செய்ய...?”ன்னு கதாநயகன் கர்ஜனை பண்ணும்போது தியேட்டரே நிமித்து உக்காந்துடுச்சு. அப்பறமென்ன மோதல்ல தொடங்குனது லேட் பிக்கப் படம் மாதிரி காதல்ல தொடருது. அட இப்பவாது டூயட் போட்டா பரவால்லையே நெனைக்க நெனைக்க டூயட்.


அட ஜென்மங்ககளா...

ஏன் கந்தா வேற நல்ல பாட்டே கெடைக் கலியா...

“அய்யங்கார் ஊட்டு அழகே ...

அய்யர் ஆத்து அதிசயமே..”ன்னு ஒண்ணப் போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ....?”அத உட்டுட்டு “சுடும் நிலவு – சுடாத சூரியன்”ன்னு நல்லாவா இருக்கு..? கொரங்கு தான் கெட்டதும் இல்லாம வனத்தையும் சேர்த்து அழிச்சு கதையா இல்ல இருக்கு...ன்னேன்.

“ஏன் அய்யங்கார் ஊட்டுதையும் ... அய்யங்கார் ஊட்டுதையும் தவிர மத்த ஊட்டுதெல்லாம் அனகொண்டா மாதிரியா இருக்கு...? உனக்கு ஷ்ஷ்ஷ்ங்கர் கண் வியாதி வந்திருக்கு.... மூடிட்டுப் படத்த பாரு....”ங்கிறான் கந்தன்.

சரி நமக்கு வேற வழி...? காசுக் குடுத்து கருமத்த வெலைக்கு வாங்குன கதையா இருக்கே நம்ம கதைன்னு நெனச்சுக்கிட்டே நானும் படத்தப் பாக்க ஆரம்பிச்சிட்டேன்.
இதுக்கும் முன்னாடி இன்னொரு கண்றாவிப் பாட்டு....

சாமிக்குப் படைக்கிற மனுசனக் கும்பிட்டோம்

சாக்கடை அள்ளற கைகள விட்டுட்டோம்

பசுகூட ஆத்தாள அம்மான்னு சொல்லுது

பச்சைத் தமிழனோ மம்மின்னு சொல்லுறா..ன்னு முத்துகுமாரோட பாட்டு வர்றப்போ கந்தனும் கூட சேர்ந்துக்கிட்டு விசிலடிக்கிறான்.

ச்சே என்ன படமோ..என்ன கன்றாவியோ....ஒன்னும் புரியல.

இந்த சமூக சேவை... சமூக உப்புமா இதையெல்லாம் கடாசீட்டுப் போறது...பிரதமரக் காப்பாத்தறது..,காஷ்மீர் பார்டருக்கே போயி தீவிரவாதிகள துவம்சம் பண்ணுறது...பண்ணுன கையோட..
சின்ன வீடா வரட்டுமா...பெரிய வீடா வரட்டுமா ..

மேஸ்திரிக்கு புடிக்கும...

கொத்தனாருக்குக் கசக்குமா...

சித்தாளுக்கு சிலிர்க்குமா...ன்னு

ஒரு தேகபக்திப் பாட்ட எடுத்து உட்டுருந்தீங்கன்னா... உங்களுக்கு பரமபத சக்கரமோ....பரம்வீர சக்கரமோ குடுத்திருக்கலாம்.

ஆனாலும் சிக்கலே...

உங்களுக்கு சினிமாவுல இருந்துகிட்டே சினிமா மேல அப்படியென்ன கோபமோ தெரியல ...

“முடியாதுன்னு நெனச்சா தலைல இருக்குற முடிகூட பாரமாத் தெரியும்.”

“சோம்பேறிக்கு சுவாசிக்கிறது கூட ஒரு வேலையாத் தெரியும்”ன்னு சேம் சைடே கோல் போடறீங்களே...அது நியாயமா?

நீங்க படத்துல காட்டுற காரல் மார்க்ஸ்...சேகுவேரா...பெரியார்...இவுங்க எல்லாம் யாருன்னாவது கோடம்பாக்கக் குல தெய்வங்களுக்கு தெரியுமா?

தப்பித்தவறி கேட்டுறாதிங்க... தந்தை பெரியாரக் கூட யாருன்னு தெரியாத தற்குறிக கூட தலைமைப் பீடத்துல இருக்குதுக...தப்பித்தவறி கேட்டா...”இதுங்க எல்லாம் திருட்டு வி.சி.டி. எடுக்குற ஆட்கள்தானே...”ன்னு கேட்டாலும் கேட்டுரு வாங்க உங்க ஆளுக.

படம் முடிஞ்சு வெளீல வர்றப்ப படு உற்சாகமா வந்தான் கந்தன்.

“என்ன ஒரு தேநீர் சாப்பிடலாமா...” ன்னான்.

எல்லாம் உங்க படத்துல பல பாத்திரங்க “அன்பளிப்பு ...இரவு.. நிலவு... விமானம்” ன்னு நல்ல தமிழ் பெசுனதன் விளைவு.

பொதுவா பல படங்களப் போட்டு கிழிகிழின்னு கிழிக்கிற கந்தன் இப்படி வாய மூடிட்டு வர்றானேன்னு...

என்ன கந்தா படத்துல சிக்கல் ஒண்ணுமே இல்லியா...?ன்னேன்.

“ஒண்ணு இருக்கு...”ன்னான்.

என்னது....?ன்னேன்.

“வாழ்நாள் முழுக்க சாதி ஒழிப்புக்காகவும்...சமூக நீதிக்காகவும் போராடி வாழ்ந்த பெரியாரையும் காமிச்சிட்டு அவரு இறந்தப்ப தன் கட்சிக் கொடியக் கூட அரைக் கம்பத்துல பறக்க விடாத முத்துறாமலிங்கத்தையும் காட்டீருக்கிறதுதான் உருத்துது..”ங்கிறான் கலாரசனையத்தவன். அவன் சொல்றதும் நியாயம்தான்னு படுது டைரடக்கரே

“யோவ் ஞானசூனியம்... குடும்பத்தக் கொன்னவன் குடும்பத்தையே பழிவாங்கறதுதான் வழக்கமான பாத. ஆனா அதை விட்டுட்டு வன்முறையோட உளவியலச் சொல்றது தமிழ் சினிமாவுக்குப் புதுசு.

வேண்டாம்...

முடியாது....

ஆமாம்...இப்பவே...ன்னு மணிரத்னம் பாணில சுருக் கெழுத்து வசனம் பேசாம நேத்தியடியா வசனம் எழுதீருக்கிறதும்....வெற்றியோ தோல்வியோ நாம நெனச்சத சொல்லியே தீரனும்கிற வெறில கொட்டித் தீத்திருக்கிற இயக்குனரோட அடிப்படை நேர்மைதான் படத்துக்கு உயிர்நாடி.

இந்தப் படத்த சமூக சூழல்னால ரௌடியாகிப் போன ஒருத்தன் தன் துணையோடயோ... இல்ல நண்பர்களோடயோ போய்ப் பார்த்தாக்கூட அந்த மனுசனுக்குள்ளயும் என்ன தாக்கத்த இது குடுக்கும்கிறதுதான் முக்கியம். அதப் பாரு மொதல்ல...”ங்கிறான் கந்தசாமி.

எனக்கென்னவோ ஒன்னும் வெளங்கல. அந்தக் கருத்தச் சொல்றேன்; இந்தக் கருத்தச் சொல்றேன்...ன்னு , எறங்குற வேலையெல்லாம் உட்டுட்டு, பத்மா முழுக்க பலான மேட்டரப் போட்டு எடுத்துடப் பாருங்க...

காட்டறதெல்லாம் காட்டீட்டுகடேசி பத்து செகண்டு மட்டும் அறிவுரைய அவுத்து உட்டா போதும்...படம் இன்னும் பிச்சிகிட்டு ஓடும்.

அதுல பயிற்சி பத்துலேன்னா...அந்தக் காலத்து பாலச்சந்தரோட மன்மதலீலைல இருந்து... இந்தக் காலத்து கேரளாவின் கலாச்சார காவல் தெய்வம் ஷகிலா படம் வரைக்கும் பல தடவ போட்டுப் பாருங்க....பல சமாச்சாரங்க பளிச்சுன்னு புரியும் உங்களுக்கு.

அத உட்டுட்டு.....

“ஆயுதம் வாங்குற காசுக்கு அரிசி வாங்கு...”

“தேகத்துல ஓடற ரத்தம் ஏன் தெருவுல ஓடணும்....”

அப்படி... இப்படின்னு தேசதுரோக வசனமெல்லாம் தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தா நடக்குறதே வேற....

அப்பறம் உங்களையே நாங்க கடத்தீட்டுப் போயி....கையக் காலக் கட்டிப் போட்டுட்டு....விடிய விடிய தூங்க விடாம....

அந்நியன்

ஆதி...

பரமசிவன்...

மாதிரி படங்களப் பல தடவ பாக்க வெச்சுருவோம்...

ஜாக்கிரதை.


நன்றி: திரை மாத இதழ் ஏப்ரல் 2006 - சிக்கல் சீராளன் சீமான் சமூகத்திற்கு...

(இக்கட்டுரை ஆவணப்படுத்தும் நோக்குடன் பதிவிடப்படுகிறதே அன்றி வேறு எந்த வியாபார நோக்கமும் அல்ல)