ஸ்தானிஸ்லாவ்ஸ்கி மெத்தாட் ஆக்டிங் மற்றும் பயிற்சிகள்

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பு சார்ந்த பயிற்சிகளும் நுட்பங்களும் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அனைத்து நடிப்பு முறைகளுக்கும் ஊக்கமளித்திருக்கிறது. ஆயினும், நடிப்பைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்கும், அதை மென்மேலும் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்குமே கூட, ஸ்தானிஸ்லாவ்ஸ்கி சொல்கிற கோட்பாடுகளையும், நுட்பங்களையும் புரிந்துகொள்வதைக் கடினமாக உணர்கிறார்கள். ’ஸ்தானிஸ்லாவ்ஸ்கி அமைப்பின் (சிஸ்டம்)” அடிப்படைகளை விரைவாகப் பார்க்க, ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பு சார்ந்த நான்கு கொள்கைகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதை எளிதாக அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு எளிய நடிப்புப் பயிற்சியாலும் இது விளக்கப்பட்டிருக்கிறது.

Figure மார்லன் பிராண்டோ

1.) மேடையில் உண்மையான உணர்ச்சிகளைப் பெற, உங்கள் கற்பனையைப் பயன்படுத்துதல்.

நாடகத்தின் சூழ்நிலைகளை நம்ப வேண்டும். ஒரு கதாபாத்திரம், அதற்குரிய சூழ்நிலை என்பது ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும். முதலில், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிற நடிகர், அந்தக் கதாபாத்திரத்தையும், அதற்குண்டான சூழலையும் உண்மையாக நம்ப வேண்டும். காட்சியை நம்பாமல், அதனோடு ஒட்டாமல் மேம்போக்காக நடித்தால், அது நம் முகத்தில் பிரதிபலிக்கும். ”நாடகத்தின் (காட்சியின்) சூழ்நிலைகளை நம்புதல்”இந்த மந்திரத்தைப் பயன்படுத்துமாறு, ஸ்தானிஸ்லாவ்ஸ்கி தனது மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

காட்சியின் சூழ்நிலைகளை விவரிக்கவும், அதனைத் தனக்குள் உள்வாங்கிக்கொள்ளவும், ஒரு நடிகர் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க, தங்கள் கற்பனைத்திறனைப்
பயன்படுத்த வேண்டும்.

• காட்சியில் நடக்கிற சம்பவம், உண்மையிலேயே என் வாழ்க்கையில், எனக்கு நடந்தால் என்ன செய்வது?
கதாபாத்திரமாகவும் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

• நான் எங்கிருந்து வருகிறேன்?

• எனக்கு என்ன வேண்டும்?

• நான் எங்கே போகிறேன்?

• நான் அங்கு சென்றதும் என்ன செய்வேன்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரு கதாபாத்திரத்தின் நிலையிலிருந்து நீங்கள் பதிலளிக்கிறபொழுது, உங்களால் கதாபாத்திரம் சார்ந்த புரிதலை அடைய முடியும். அந்தக் கதாபாத்திரமாக நீங்கள் மாறுவதற்கு, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் கற்பனையை வளர்த்துக்கொள்ள, நீங்கள் எங்கும் செய்யக்கூடிய ஒரு எளிய பயிற்சி என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களை வெறுமனே கவனிக்கத் துவங்குங்கள். உதாரணத்திற்கு; சுரங்கப்பாதை அல்லது காபி ஷாப்பில் பார்க்கிற மனிதர்களின் பாவனைகள், தோற்றம், நடவடிக்கை என அனைத்தையும் கவனிக்க வேண்டும். பின்னர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு நபருக்கும் ஒரு சுயசரிதைக் குறிப்புகளை உருவாக்க, உங்கள் அவதானிப்புகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் கற்பனைத் திறனால் அதைப் பூர்த்திசெய்யுங்கள். இந்தப் பயிற்சியின் அடுத்த கட்டமாக, நீங்கள் ஏற்று நடிக்கிற கதாபாத்திரத்திற்கும் ஒரு சுயசரிதைக் குறிப்புகளைத் தயார்செய்ய வேண்டும்.

2. செயல் vs உணர்ச்சி

கதாபாத்திரம் ஒரு செயலைச் செய்கிறது, அடுத்து அந்தச் செயலைச் செய்கிற கதாபாத்திரத்திற்கென ஒரு உணர்ச்சி நிலை இருக்கிறது. இதில் எதை நடிகர் பின்பற்ற வேண்டும்? என்று கேள்விகள் எழலாம். அடுத்து, இதில் எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறபொழுது, ஒரு யதார்த்தமான, உண்மைநிலையுள்ள கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டுவரமுடியும்? போன்ற சந்தேகங்கள் எழுவதும் இயல்பே. அதற்கான பதிலை ஸ்தானிஸ்லாவ்ஸ்கி பகிர்ந்துகொள்கிறார்.

அதாவது, ஸ்தானிஸ்லாவ்ஸ்கி தனது மாணவர்களை உணர்ச்சிகளைக் காட்டிலும், செயல்களில் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் நடிகருக்கு ஒரு குறிக்கோள் உள்ளது (அவர் என்ன சாதிக்க விரும்புகிறார் என்பதற்கான குறிக்கோள்) மற்றும் தொடர்ச்சியான தடைகளையும் அவர் எதிர்கொள்கிறார். தனது இலக்கை அடைய, நடிகர் ஒரு காட்சியை எடுத்துக்கொண்டு, அவற்றை சிறு Beat-களாக உடைக்கிறார், இதில் ஒவ்வொரு பீட்டும், செயலில் வினைச்சொல்லாக இருப்பதால், அதாவது ஒரு செயலின் வாயிலாக, கதாபாத்திரம் தனது குறிக்கோளை அடைய முயற்சிக்கிறது.

காட்சிகளில் ஆக்‌ஷன்களாக இருக்கக்கூடிய, செயல் வினைச்சொற்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே: உதவி செய்ய, துன்புறுத்த, புகழ்வதற்கு, இழிவுபடுத்த, விட்டுச்செல்ல, சமாதானப்படுத்த.

இதிலெல்லாம் ஒரு உணர்வு கிடைக்கிறது, ஆனால், அதில் அந்தச் செயலே முதன்மையாக, பிரதான இடத்தில் இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் என்னவிதமான செயல்களைச் செய்யும் என்பதைக் கண்டுகொண்டால், அதிலிருக்கிற உணர்வு தானாகவே பிடிபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகின்றன. எனவே, நமக்குத் தேவையானது, ஒரு கதாபாத்திரம், தனது குறிக்கோளை நிறைவேற்ற என்னவிதமான செயல்களையெல்லாம் முதலில் செய்யும், என்பதைக் கணிப்பதுதான்.

கதாபாத்திரத்தின் செயல்களைப் பட்டியலிட ஒரு எளிய பயிற்சி முறை என்னவென்றால், ஒரு துண்டுக்காகிதத்தை எடுத்துக்கொண்டு, இந்தப் பட்டியலைத் தொடரவும். நீங்கள் நினைக்கும் அளவிற்கு, ஒரு கதாபாத்திரத்தின் செயலில் உள்ள வினைச்சொற்களைச் சேகரிக்கவும்.


3. தளர்வு (ஓய்வு) மற்றும் ஒருமுகப்படுத்தல்

நம் உடலை எப்படி தளர்வு நிலையில் வைத்துக்கொள்வது? என்பதற்கான பயிற்சிகள் உள்ளன. அதேபோல, ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பு முறைகளைக் கற்றுக்கொள்ளும் நடிகர்கள், தங்கள் தசைகளைத் தளர்த்தக் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு கதாபாத்திரம் ஒரு செயலைச் செய்கிறது, அந்தச் செயலைச் செய்வதற்கு என்னென்ன தசைகளெல்லாம் ஈடுபட வேண்டுமோ, அது மட்டுமே பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அப்போதுதான் மிகைப்படுத்தப்படாத அல்லது யதார்த்தமான நடிப்பு அனுபவங்கள் கிடைக்கின்றன. எனவே, நடிகருக்கு சில வரையறைகள் உள்ளன. மேடையில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்குத் தேவையான தசைகளை விட, கூடுதல் தசைகளைப் பயன்படுத்தக்கூடாது என்பதே குறிக்கோள். அவை செறிவிலும் (ஒருமுகப்படுத்துதலிலும்) செயல்படுகின்றன, இதனால் அவர்கள் பொதுவில் இருந்தாலும், தனிமை நிலையை அடைய முடியும், தன் செயலில் எந்தவொரு குழப்பமும் இருக்காது மற்றும் மேடையில் நிகழ்த்தும்போது பதட்டமாக உணரமாட்டார்கள்.

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் இந்த நடிப்பு நுட்பத்தில், தளர்வு மற்றும் ஒருமுகப்படுத்துதல் ஆகியவை ஒன்றுக்கொன்று கைகோர்க்கின்றன. பயிற்சியைத் துவங்குவதற்கு, ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் ஒரு எளிய ஒருமுகப்படுத்துதல் பயிற்சி…..

கண்களை மூடுங்கள். உங்களைச் சுற்றி, பலவிதமான இயக்கங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒருவித ஒலியை உருவாக்குகின்றன. கண்களை மூடியவுடன் மற்ற உணர்வுகள், புலன்கள் முக்கியமாகக் காது கூர்மையடைகிறது. எனவே உங்களைச் சுற்றி, நீங்கள் கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் கவனம் செலுத்துங்கள். அதிக சத்தமாகக் கேட்கும் ஒலியிலிருந்து ஆரம்பித்து, மிகச் சன்னமாக, மிகக்குறைவான டெசிபல் கொண்ட ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முயற்சியுங்கள். எந்தவொரு ஒலியையும் தவற விடவேண்டாம். பொறுமையாக ஒவ்வொரு ஒலியையும் கேட்க முயற்சியுங்கள். தூரத்தில் ஒரு கதவு சாத்தப்படுவது, வெளியே உள்ள மரங்களில் இலைகளின் சலசலப்பு, ஏர் கண்டிஷனிலிருந்து வருகிற ’ஹம்’ போன்ற ஒலி, என அனைத்தையும் கவனத்தில் கொண்டுவர வேண்டும்.

உங்கள் மனதில் இருக்கிற அனைத்தையும் தவிர்த்துவிட்டு, ஒலிகளில் மட்டுமே கவனம் செலுத்த முயற்சியுங்கள். இந்தப் பயிற்சியின் அடுத்தகட்டம், உங்கள் கண்களைத் திறந்து, அதே அளவிலான கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாகும்.

4. புலன்களை/ உணர்வுகளைப் பயன்படுத்துதல்

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் மாணவர்கள், மேடையில் கதாபாத்திரத்திற்கான யதார்த்த உணர்வை உருவாக்க, தங்கள் புலன்களை(உணர்வுகளை)ப் பயன்படுத்தி, பயிற்சி பெறுகின்றனர். உதாரணமாக, அவர்களின் கதாபாத்திரம், வெளியில் பனிப்பொழிவு பெய்துகொண்டிருக்கும்பொழுது, வீட்டிற்குள் நடந்துவருவதுபோல ஒரு காட்சி என்றால், அவர்கள் வெளியே பனியில் இருப்பது எப்படி என்பதை நினைவில் கொள்வதற்கான பயிற்சிகளில் அவர்கள் இறங்கக்கூடும். பனியின் தன்மை, அதன் தாங்கமுடியாத குளிர் எப்படியிருக்கும்? என்பதை அவர்கள் முதலில் அந்தக் கதாபாத்திரத்தின் நிலையிலிருந்து உணர்வார்கள். இதனால் அவர்கள் (கதாபாத்திரங்கள்) எங்கிருந்து வந்தார்கள்? என்பதைப் பற்றி அவர்களால் நன்கு உணரமுடிகிறது. ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்னால், அந்த உணர்வினை நீங்கள் பெற்றுவிட்டால், எளிதாக உங்களால் அந்தக் கதாபாத்திரத்தின் நிலையிலிருந்து அந்தக் காட்சியில் நடிக்கமுடிகிறது.

நீங்கள், இவ்வகையான பயிற்சியை எப்படி அணுகவேண்டும் என்பதற்கான விரைவான எடுத்துக்காட்டுகள் இங்கே….
கண்களை மூடிக்கொண்டு, நீங்களே வெளியில் பனியில் இருப்பதாகக் கற்பனை செய்துபாருங்கள். அடுத்து, பின்வரும் ஐந்து கேள்விகளின் பகுதிகளை, உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கான பதிலை உணருங்கள்:

⦁ நீ என்ன பார்க்கிறாய்? பனி அசலானதாக இருக்கிறதா? சேறாக? பனி வெயிலில் பிரகாசிக்கிறதா? அதுவொரு இருண்ட மேகமூட்டமான நாளாக இருக்கிறதா?

⦁ நீங்கள் எதை நுகர்ந்தீர்கள்? உங்கள் நாசிக்குள் நுழைகிறபொழுதும், அடுத்து அது உங்கள் நுரையீரலுக்குள்ளு செல்கிறபொழுது, காற்று எவ்வளவு குளுமையாக உள்ளது?


⦁ நீங்கள் எதைக் கேட்டீர்கள்? இது வழக்கத்தை விட அமைதியாக இருக்கிறதா?

⦁ நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் முகத்தில் பனி படுகிறபொழுது எப்படி உணர்கிறீர்கள்? பனி ஒட்டும் தன்மையுடன் உள்ளதா? நுண் துகள்கள் போன்றா? ஈரமாகவா? உங்கள் கால்விரல்கள் குளிர்ச்சியாக இருக்கிறதா?

⦁ நீங்கள் என்ன சுவைக்கிறீர்கள்? உங்கள் உதடுகளுக்குள் ஒரு துண்டு பனி விழுவதாகக் கற்பனை செய்துபாருங்கள். அதன் சுவை எப்படியிருக்கிறது? உங்கள் தொண்டை குளிரால் வறண்டிருக்கிறதா?

பயிற்சிகளின் வாயிலாக ஸ்தானிஸ்லாவ்ஸ்கி:

ஸ்தானிஸ்லாவ்ஸ்கி “நவீன நாடகத்தின் தந்தை” என்று சரியாகவே அழைக்கப்படுகிறார். அவர் உருவாக்கிய சிஸ்டம் ஆஃப் ஆக்டிங் (நடிப்பு முறை) இருபதாம் நூற்றாண்டின் நாடகக் கலையின் முதுகெலும்பாக மாறியது. மற்ற எல்லா பயிற்சியாளர்களுமே, அவரை ஒரு துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்துகிறார்கள், அல்லது அவர் உருவாக்கியதன் தொடர்ச்சியாகச் சிலவற்றைக் கட்டியெழுப்ப, அல்லது அவர் உருவாக்கிய நடிப்பு முறைமைகளுக்கு எதிராகச் செயல்பட விளைகிறார்கள். ஸ்தானிஸ்லாவ்ஸ்கியை எதிர்த்தோ, ஆதரித்தோதான் நடிப்பிற்கான பயிற்சிகள் உருவாக்கப்படுகின்றன. இத்தனை ஆண்டுகள் கழிந்தும், அவரது பயிற்சிகள் உலகில் எங்கெங்கோ பின்பற்றப்பட்டுத்தான் வருகின்றன. எனவே, நீங்கள் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியை ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம், ஆனால், அவரை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது.
ஸ்தானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது, இக்கட்டுரையானது மீண்டும் அந்த மைதானத்திற்குச் செல்லக்கூடாது. மாறாக, ஸ்தானிஸ்லாவ்ஸ்கி தனது பல புத்தகங்கள் மற்றும் ஸ்டுடியோ சோதனைகளில் கூறிய முக்கிய புள்ளிகளை உள்ளடக்கி, அவற்றை ஒரு தர்க்கரீதியிலான வடிவமாக வரிசைப்படுத்துவதன் மூலம், அவற்றை மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ளவும், பின்பற்றவும் முடியும். மேலும் ஒவ்வொரு கோட்பாட்டையும், நடைமுறையின் மூலம் சோதிக்கக்கூடிய வகையில், அவற்றை முற்றிலும் பயிற்சிகளின் அடிப்படையில் மொழிபெயர்க்க வேண்டும். இதனால் மாணவர்கள், உருவாக்கியிருக்கிற நுட்பங்களை எடுத்து, அவற்றை நடைமுறை அறிவைக்கொண்ட கட்டுரைகளாக எளிதாக மாற்றலாம்.

ஜெனி, ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடைமுறை போதனைகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார்:

1. அமைப்பின் முக்கிய கொள்கைகளில் மாணவரைத் தயார்படுத்தும், நடிகரின் பொது பயிற்சி.

2. ஒரு பாத்திரத்தைத் தயாரித்தல் என்பதில், பாத்திரப்படைப்பைக் கட்டமைப்பதில், அமைப்பு எவ்விதம் உதவியாக இருக்கிறது, என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வுத்திட்டம் அதே வடிவமைப்பைப் பின்பற்றுகிறது. கோட்பாட்டை மதிப்பிடுவதற்கும், அமைப்பின் அனைத்து வெவ்வேறு கூறுகளில், ஒவ்வொருவரும் சார்ந்திருப்பதைக் காண்பிப்பதற்கும் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியைப் படித்து வருகிறீர்கள், அல்லது உங்கள் பாடத்திட்டத்திலிருந்து ’யதார்த்தவாதம்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், எனில் இந்த ஆய்வுத்திட்டம் பயனுள்ளதாகவும், பின்பற்ற எளிதானதாகவும் இருக்கும்.

ஒரு நடிகருக்கான பொதுப் பயிற்சி:

1. கற்பனைத் திறன்

2. நம்பிக்கை

3. செறிவு (ஒருமுகப்படுத்தல்)

4. தளர்வு

5. உடல் கட்டுப்பாடு

6. பேச்சு பரிமாணம் & கட்டுப்பாடு

7. தொடர்பு

8. குரல் தொடர்பு - துணை - உரை

9. டெம்போ & ரிதம்

ஒரு பாத்திரத்தை நோக்கிய நடிகரின் அணுகுமுறை

1. ஆராய்ச்சி

2. துணை உரை – அலகுகள் மற்றும் குறிக்கோள்கள்

3. துணை உரை – உணர்ச்சியின் நினைவகம்

4. டெம்போ – ரிதம் – மற்றொரு பயனுள்ள கருவி

5. சிறந்த வகையில் சரிப்படுத்துதல் – பேச்சு

6. சிறந்த வகையில் சரிப்படுத்துதல் – குழு உணர்திறன், குழுப்பணி

7. நடிப்பின்பொழுது(நிகழ்த்துதலின்பொழுது) நடிகர்.

ஸ்தானிஸ்லாவ்ஸ்கி அமைப்பின் மீது தோராய பார்வை:

1. தளர்வு – தசைகளைத் தளர்த்த கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும், நடிக்கிறபொழுது எழுகிற உடல்ரீதியான பதற்றத்தையும், அழுத்தத்தையும் நீக்க வேண்டும்.

2. ஒருமுகப்படுத்துதல் – ஒரு நடிகரைப் போல சிந்திக்கவும், ஒருவரின் சொந்தக் கற்பனையிலிருந்து பதிலளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. புலன்களுடன் வேலை – வேலையின் உணர்ச்சித் தளத்தைக் கண்டறிதல். உணர்வுகளை மனப்பாடம் செய்யவும், அவற்றை நினைவுகூறவும் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது, ‘உணர்வு நினைவகம்’ அல்லது ‘பாதிப்புக்குரிய நினைவகம்’ என்று அழைக்கப்படுகிறது; ஒரு சிறிய உணர்விலிருந்து வேலை செய்து அதை அப்படியே படிப்படியாக விரிவாக்கக் கற்றுக்கொள்வது., ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் இந்த நுட்பம், ‘கவனத்தின் கோளங்கள்’ என்று அழைக்கப்படுகிறது.

4. உண்மையின் உணர்வு. ஆர்கானிக் மற்றும் செயற்கையின் வித்தியாசத்தைக் கண்டுணர்ந்து சொல்ல கற்றுக்கொள்ளுதல். ஒருவரது முகத்தையும், அவரது நடிப்பையும் பார்த்து, அவரது உணர்வுகள் யதார்த்தமாக இருக்கிறதா? அல்லது இயல்பிற்கு ஒவ்வாத செயற்கைத்தன்மையுடன் வெளிப்படுகிறதா? என்பதைக் கண்டுணரக்கூடிய திறன் வேண்டும். ஸ்தானிஸ்லாவ்ஸ்கி யதார்த்தமான / இயல்பான நடிப்பு விதிகள் இருப்பதாக நம்பினார், அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடிக்க வேண்டும்.

5. கொடுக்கப்பட்ட சூழ்நிலைகள். உண்மையான மற்றும் ஆர்கானிக் வழிமுறைகள் மூலம், நாடகத்தின் உலகை (உரையில் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள்) உருவாக்க, முந்தைய நான்கு திறன்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளுதல்.

6. சந்தித்தல் & தொடர்பு: நாடகத்தின் உலகத்தை மீறாமல், பிற நடிகர்களுடனும், பார்வையாளர்களுடனும், தன்னிச்சையாகத் தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளுதல்.

7. அலகுகள் மற்றும் நோக்கங்கள்: தனித்தனியாகவும் வேலை செய்யக்கூடிய விவேகமான அலகுகளாக ஒரு முழு பாத்திரத்தைப் பிரிக்கக் கற்றுக்கொள்ளுதல், மற்றும் பாத்திரத்தின் ஒவ்வொரு அலகுக்கும் ஒரு முழுமையான இலக்கிய நோக்கமாக இல்லாமல், பாத்திரம் விரும்பிய செயலில் உள்ள குறிக்கோளை வரையறுக்கும் திறனை மேம்படுத்துதல்.

8. தர்க்கம் மற்றும் நம்பகத்தன்மை: ஒருங்கிணைந்த குறிக்கோள்களின் கூட்டுத்தொகை சீரானது மற்றும் ஒத்திசைவானது என்பதையும் அவை ஒட்டுமொத்தமாக நாடகத்துடன் ஒத்துப்போகின்றன என்பதையும் உறுதியாகக் கண்டறிவது.

9. மூல வாக்கியங்களுடன் வேலை செய்யுங்கள்: ஒரு உரையின் சமூக, அரசியல் மற்றும் கலை அர்த்தங்களை வெளிக்கொணர்வதற்கான திறனை வளர்த்துக்கொள்வது. இந்தக் கருத்துக்கள் ஃபெர்பார்மன்ஸுக்குள் இருப்பதைக் காணலாம். உங்களிடம் ஒரு திரைக்கதை தரப்படுகிறது என்றால், அந்த எழுத்திற்குள் பொதிந்திருக்கிற அர்த்தத்தையும் சேர்த்தே படிக்க வேண்டும். வாக்கியங்களில் மறைந்திருக்கிற பொருளையும், அரசியலையும், துணை அடுக்குகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

10. மனதின் படைப்பு நிலை.
முந்தைய அனைத்து படிகளின் தானியங்கிச் செயல்படும் உச்சம்.

ஒவ்வொரு அடிப்படைக் கட்டத்திற்கும் பயிற்சிகள் மற்றும் பரிந்துரைகள்:

இவை பரிந்துரைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஒவ்வொரு அடியின் நோக்கத்தையும் பூர்த்தி செய்ய உங்கள் சொந்த மேம்பாடுகளையும் யோசனைகளையும் இணைத்துக்கொள்ள உங்களை வரவேற்கிறோம். மாணவர்கள் ஒவ்வொரு அடியையும் முடித்த பிறகு அவர்கள் அதன் மையப்பொருளை புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

1. தளர்வு: பெரும்பாலான தியேட்டர் பாடப்புத்தகங்கள் உங்களுக்கு நல்ல தளர்வு பயிற்சிகளை வழங்கும். இந்தப் புத்தகத்திலே (நடிப்பு) கூட, மசாஜ் மற்றும் மூச்சுப்பயிற்சிகள், உடலைத் தளர்த்திக்கொள்வதற்கான முறைகளை உங்களுக்குக் கற்றுத்தருகின்றன.

2. ஒருமுகப்படுத்துதல்: எனக்குப் பிடித்த சிறந்த ஒருமுகப்படுத்துதல் பயிற்சியில் ஒன்று பின்வருமாறு: 1) ஜோடி மாணவர்கள் 2) ஒவ்வொரு ஜோடியும் ஒரு விசித்திரக் கதையையோ அல்லது அவர்களுக்குத் தெரிந்த மற்ற கதையையோ தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் 3) ஒரு மாணவர் கதைசொல்லியாகவும் மற்ற மாணவர் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் 4) கதைசொல்லி கதை சொல்ல ஆரம்பிக்க வேண்டும். கதைசொல்லியின் வாயில், கண்ணாடி கவனம் செலுத்த வேண்டும், அதனால் அவர்கள் கதைசொல்லியுடன் வார்த்தைகளைச் சொல்ல முடியும். 5) இதை அவர்கள் பல நிமிடங்கள் தொடரவும், பின்னர் தலைகீழ் பாத்திரங்கள், கதை சொல்பவர் கண்ணாடியாகவும், கண்ணாடி கதை சொல்லியாகவும் மாறுகிறது. 6) மாணவர்கள் ஒன்றாக வேலை செய்வதற்கு அதிக பழக்கமாகி வரவேண்டுமாதலால் நேரத்தை நீட்டித்து பயிற்சியை விரைவுபடுத்துங்கள்.

3. உணர்வுகளுடன் வேலை: இது எனது மாணவர்களுடன் நான் பயன்படுத்தும் ஒரு பயிற்சி. இது தொடர்பான யோசனை ஒன்று வருகிறது.
பார்பரா கார்லிஸ்ல் மற்றும் டான் டிராபியோ ஆகியோரின் “ஹை-கான்செப்ட் - லோ-டெக்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தளர்வடைதலிலிருந்து பயிற்சி துவங்குகிறது. முற்றிலும் தளர்வாக இருக்கும்பொழுது, கண்களை மூடிக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்களின் மனம் சுதந்திரமாக இருக்கட்டும். எனவே, அவர்களால் தளர்வில் கவனம் செலுத்த முடியும். இப்போது அவர்கள் சிந்திக்க வேண்டும் அல்லது ஒரு குழந்தையாக அவர்கள் நிறைய நேரம் செலவிட்ட இடம். அது அவர்களின் அறை, ஒரு விளையாட்டு இல்லம், காடுகளில் ஒரு இடம் போன்றவையாக இருக்கலாம். அதை அவர்கள் மனதில் பார்க்க முயற்சிக்கச் சொல்லுங்கள்.
இந்தக் கேள்விகளுடன் அவர்களை வழிநடத்துங்கள்: அங்கு என்ன இருக்கிறது? உங்கள் பாதங்களுக்கு அடியில் என்ன உணர்கிறீர்கள்? உங்கள் தலைக்கு மேல், இடது, வலது, பக்கமாக என்ன பார்க்கிறீர்கள்? இது சூடாக இருக்கிறதா? வெப்பமாக? அல்லது குளுமையாக? என்ன வாசனையை அனுபவிக்கிறீர்கள்? அந்த இடத்தில் எவ்வளவு ஒளி இருக்கிறது? உங்களைச் சுற்றியுள்ள காற்று எப்படியிருக்கிறது? நீங்கள் என்ன பொருட்களைப் பார்க்கிறீர்கள்?
இப்போது அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட தருணத்தை நினைவில் கொள்க. மிகவும் திட்டவட்டமாக இருங்கள். நீங்கள் ஏன் இந்த இடத்திற்குச் சென்றீர்கள்? என்ன சொல்லப்பட்டது? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

இவை அனைத்தும் உங்கள் மனதிலும், உங்கள் உணர்வு நினைவிலும் இருந்தவுடன், இந்த அறையில் நீங்கள் அந்த இடத்தில் இருக்கக்கூடிய இடத்திற்குச் செல்லுங்கள். யாருடனும் தொடர்பு கொள்ளாமல் அமைதியாக அங்கு செல்லுங்கள். உங்கள் செறிவைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நீங்கள் உடைக்கச் சொல்லப்படும் வரை அங்கேயே இருங்கள்.
ஒவ்வொரு மாணவரும், அவர்கள் உடைந்த பிறகு, இந்த அனுபவத்தை இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களாக சுருக்கிக் கொள்ளுங்கள். அனுபவம் மிகவும் தனிப்பட்டதாக இருந்தால், பகிர்ந்து கொள்ளாத அவர்களின் விருப்பத்தை மதிக்கவேண்டும். அவர்களின் அனுபவத்தைப் பற்றி ஒரு நல்ல ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளுங்கள்.

4. உண்மையின் உணர்வு: ”உண்மையின் உணர்வு” என்பது, உங்கள் உடல் செயல்கள் மற்றும் அதற்கேற்ற புலனுணர்வு எதிர்வினைகளின் உண்மையைக் கண்டுபிடிப்பதைக் குறிக்கிறது. ’தருணத்திற்கு’ அர்ப்பணிப்பு. பொறுமையுடன் பின்வரும் பயிற்சியை மேற்கொள்ளும்பொழுது, இந்த ‘உண்மையின் உணர்வை’க் கண்டுபிடிக்கலாம். முழுப்படமும் மனதின் பார்வையில் உருவாகக் காத்திருக்க வேண்டிய நேரத்தைக் கொடுப்பதால், நேர்மையாக பதிலளிக்க முடியும். மாணவர்கள் ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் கையில் இருக்கும் ஆப்பிளை “பார்க்க” முடியும், பற்களைக் கடிக்கும்போது அதை உணர முடியும், அவர்கள் மென்று அதை விழுங்கும்போது அது கரைந்துவிடும்.ஒருவேளை ஆப்பிளின் தோல், அவர்களது பல் இடுக்கில் சிக்கியிருக்கலாம். அவர்கள் அதை எப்படி வெளியேற்றுவது? சாறு அவர்களின் கன்னங்களின் வழி ஓடுகிறதா? இந்தப் பயிற்சியைக் குறித்து விவாதியுங்கள். இல்லாத ஒரு ஆப்பிளை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அர்ப்பணிப்போடு ஒரு செயலைச் செய்தோமானால், அதன் உப பிரதிகளையும், நாம் செய்துகாட்டுவோம். அதைத்தான் இங்கு விளக்குகிறார்கள். ஆப்பிள் சாப்பிட்டவுடன், பற்களில் சிக்கியிருக்கிற தோலை எடுக்க நினைப்பது, உண்மையின் உணர்வுக்கு பலம் சேர்க்கிறது.

5. கொடுக்கப்பட்ட சூழ்நிலைகள்: நிலைமையை உருவாக்கும் அனைத்து விவரங்களையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப நாடக சொல் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகள். யார், என்ன, எங்கு போன்ற கேள்விகளைக் கேட்டு, கையாளும் பயிற்சிகளைப் பயன்படுத்துங்கள். வயோலா ஸ்போலின் புத்தகம், “தியேட்டருக்கான மேம்பாடு”, தேர்வு செய்ய பல பயிற்சிகள் உள்ளன.

6. சந்தித்தல் மற்றும் தொடர்பு: (Viola Spolin-ன் “ Improvisation for the Theatre”) வயோலா ஸ்போலின் “தியேட்டருக்கான மேம்பாடு” இலிருந்து பயிற்சிகளைப் பயன்படுத்தவும். இந்த பயிற்சிகள் அனைத்தும் சுய, இடம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை வளர்க்க உதவும்.

7. அலகுகள் மற்றும் குறிக்கோள்கள்: இந்த புள்ளி, பகுப்பாய்வு செயல்முறையிலிருந்து துவங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்றொடர்களுடன் வேலை செய்யத் தொடங்குங்கள். தடைகள், மோதல்கள் மற்றும் குறிக்கோள்களுடன் வேலையைச் செய்வதற்கான பயிற்சிகள்.

8. தர்க்கம் மற்றும் நம்பகத்தன்மை: சொற்றொடர்களுடன் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். துண்டின் தொடர்ச்சியாக வேலை செய்யுங்கள். "தருணத்திற்கு" அர்ப்பணிப்பை வலுப்படுத்த இது ஒரு நல்ல இடம்.

9. மூல வாக்கியங்களுடன் வேலை செய்யுங்கள்: உரை என்ன அர்த்தம்? குரல் வெளிப்பாடு மற்றும் நடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் வேலை செய்யுங்கள்.
10. . மனதின் படைப்பு நிலை. முந்தைய அனைத்து படிகளின் தானியங்கி உச்சம்.

Figure ஸ்தானிஸ்லாவ்ஸ்கி

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் மெத்தாட் ஆக்டிங் என்றால் என்ன?

1863-ல் பிறந்த கான்ஸ்தன்தீன் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி, ரஷ்ய நாடக நடிகர் மற்றும் நாடக இயக்குநராக இருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நாடகம் இயக்கும் கொள்கைகளும், நடிப்பு குறித்த அவரது ஒருங்கிணைந்த கோட்பாடுகளும், மிகவும் செல்வாக்கு பெற்றன. அவை இன்றும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

சரியாக ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டம் என்றால் என்ன?

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் மெத்தாட் அல்லது சிஸ்டம் என்பது, நடிகர்கள் தங்களைக் கதாபாத்திரத்தின் இடத்தில் வைத்து, மேடையில் உணர்ச்சிகளைச் சித்தரிக்கப் பயன்படுத்தும் நுட்பங்களின் தொகுப்பாகும்.

1900-களின் முற்பகுதியில் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி இந்த நுட்பத்தை உருவாக்கினார். நாடக நடிகர்களுக்காக உருவாக்கப்பட்ட பயிற்சிகள் என்றபோதிலும், திரை நடிப்பிலும் இன்றளவும் இதைப் பின்பற்றுகிற நடிகர்கள் இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் நடிப்பு என்பதை நாடகம், திரைப்படம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஒரு நடிகனுக்கான பயிற்சியாக மட்டுமே இவற்றை அணுகுகின்றனர். குரல், உடல் பாவனை, கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல், வசன உச்சரிப்பு, என எல்லாமே நடிகர்களுக்கான பொதுவான பயிற்சிகளே.

அடுத்து, ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் மெத்தாட், நடிகர்கள் சித்தரிக்கும் கதாபாத்திரங்களில் நம்பக்கூடிய உணர்ச்சிகளையும், செயல்களையும் உருவாக்கும் விதத்தில் நடிகர்களுக்கு உதவ அவை, பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் மெத்தாட் ஆக்டிங்கைக் கைப்பற்ற நீங்கள் அதன் ஏழு படிநிலைகளைக் கடக்க வேண்டும். இந்த நுட்பங்கள் யாவும், நடிகர்களுக்கு நம்பகமான கதாபாத்திரங்களை உருவாக்க உதவுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

அவையாவன:

1. நான் யார்?

2. நான் எங்கிருக்கிறேன்?

3. அது எப்போது நடந்தது?

4. எனக்கு என்ன வேண்டும்? / எனக்கு என்ன தேவை?

5. ஏன் அது எனக்கு வேண்டும்?/ ஏன் அது எனக்குத் தேவைப்படுகிறது?

6. நான் அதை எப்படிப் பெறுவது?

7. அதைக் கடந்துசெல்ல எனக்கு என்ன தேவை?

இந்த ஏழு கேள்விகளுக்கும் கதாபாத்திரத்தின் இடத்திலிருந்து பதில் சொல்ல வேண்டும். கதாபாத்திரம், நடிகராக நீங்கள் உருவாக்கியதல்ல. அது இயக்குனரால் உங்களுக்குக் கொடுக்கப்படுவது. எனவே, இந்த ஏழு கேள்விகளுக்குப் பெரும்பாலான பதில்கள், இயக்குனர் உங்களுக்கு அளிக்கிற திரைக்கதையிலேயே இருக்கும்.

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டம் அல்லது மெத்தாட்டை நீங்கள், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான விரைவான வழிகாட்டி இங்கே!

கதாபாத்திரங்களின் உந்துதல்கள், தேவைகள் மற்றும் ஆசைகள் குறித்து நன்கு புரிந்துகொள்ள கொடுக்கப்பட்ட திரைக்கதையை நன்கு படியுங்கள்: இதைச் செய்வதன் மூலம், நீங்கள் வகிக்கும் கதாபாத்திரத்தின் பங்கை, நன்கு அடையாளம் காணலாம்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கதாபாத்திரம் எவ்வாறு நடந்துகொள்ளும்? ஒரு செயலுக்கு அது எவ்விதம் எதிர்வினை செய்யும்? போன்றவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் கதாபாத்திரத்தின் நோக்கம், அவர்கள் விரும்புவதை அடைவதற்கு நடுவில் உள்ள தடைகள், அவர்களின் நோக்கத்தை அடைய வழியில் குறிக்கிடும் விஷயங்கள், மற்றும் நோக்கத்தை அடைய அவர்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள், என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முன்சொன்னதுபோல, திரைக்கதையை சிறு சிறு பகுதிகளாக, பிட்களாக உடைக்க வேண்டும். இவை உங்கள் கதாபாத்திரத்தின் தனிப்பட்ட நோக்கங்கள், ஒரு குறிப்பிட்ட அறைக்குச் செல்வதுபோல எளிமையாக இருக்கும்.

இந்தச் செயலுக்கான உங்கள் கதாபாத்திரத்தின் உந்துதலைத் தீர்மானியுங்கள். இது நீங்கள் குறிக்கோளை நிறைவுசெய்யும்போது, பாத்திரம் அனுபவிக்கும் உணர்ச்சிகளைச் சித்தரிக்க உதவுகிறது.

‘If’ என்ற மந்திரம்
ஒரு நடிகரின் வேலை, நம்பமுடியாத சூழலில் நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். இதை அடையத்தான் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி இந்த மேஜிக் if-ஐ உருவாக்கியுள்ளார். தமிழில் if என்பதை ‘ஆல் / என்றால்’ என்ற சொல்லோடு ஒப்பிடுவோம். நான் அந்தக் கதாபாத்திரமாக ஆனால், என்ன செய்வேன். இப்படி, அந்தக் கதாபாத்திரத்தின் நிலைக்கு நாம், நம்மை நகர்த்துவதுதான், ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் இந்த if மந்திரம் என எளிமையாகப் புரிந்துகொள்வோம். ”இந்த (கதாபாத்திரத்தின்) சூழ்நிலையில், நான் இருந்தால்(ஆல்) என்ன செய்வேன்?”

’ஆல்(if) மேஜிக்’ என்பது, ஒரு நடிகரை, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கதாபாத்திரத்தின் காலணிகளில் நிறுத்தி, ’இது எனக்கு நேர்ந்தால் நான் எப்படி நடந்துகொள்வேன்?’ என்ற கேள்வியைக் கேட்பதை உள்ளடக்கியது என்று பார்த்தோம். இந்த எளிய கேள்வியைக் கேட்பதன் மூலம், ஒரு நடிகர், கதாபாத்திரத்தின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் சித்தரிக்க வேண்டிய உணர்வுகள் அல்லது ‘பீட்’ ஆகியவற்றை, முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிற நாம் அனுபவிக்கிறோம்.

’(if)ஆல் மேஜிக்’ – ஸ்தானிஸ்லாவ்ஸ்கி நடிப்புப் பயிற்சிகள்:

மாணவர்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகிறார்கள்: அன்றாட வாழ்வில் நாம் பேசக்கூடிய உரையாடல்களை இப்பயிற்சியில் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு: இன்றிரவு இரவு உணவிற்கு வெளியே செல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? இந்தக் கேள்வியை ஒருவரிலிருந்து மற்றவருக்கு அனுப்பவும். முதல் நபர் யதார்த்தமாகவும், முடிந்தவரை உண்மையாகவும் இருக்க வேண்டும். அதுவே, வட்டத்திலிருக்கிற ஒவ்வொரு ஆளுக்கும் அந்தக் கேள்வி செல்கிறபொழுது, நபர்கள் சொல்லக்கூடிய பதில்கள், நம்பத்தகாத வகையில் வெளிப்பட வேண்டும். ஆரம்பத்தில் யதார்த்தமாக இருந்த பதில்கள், குறிப்பிட நேரத்திற்குப் பிறகு, யாரும் நம்பமுடியாத வகையில் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

பின்பு, கேள்வியை மாற்றி, வட்டத்தில் யார் கடைசியாகப் பதில் சொன்னார்களோ, அவர் இப்போது, இரண்டாவது கேள்விக்கு, முதல் ஆளாகப் பதில் சொல்ல வேண்டும். அவர் சொல்கிற பதில் யதார்த்தமானதாக வெளிப்படும். அவரிலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொருவராகச் செல்ல, பதிலின் நம்பகத்தன்மை அடிபட்டு, முற்றிலும் பொய்யாக மாறி, இறுதிப் பதில் பொய்மையின் மொத்த உருவமாக வெளிப்படுகிறது. இப்பயிற்சி யதார்த்தத்திற்கும் மற்றும் பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டிற்குமிடையிலான வித்தியாசத்தைக் காட்டுகிறது.

(if) அதன் வழியாக நடந்து சென்றீர்களானால்….

இந்த உணர்வை மீண்டும் உருவாக்க உங்கள் ஞாபகங்களைப் பயன்படுத்துங்கள்.

தண்ணீரில் நடப்பது போல (இருந்தால்) உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கவும்.
மூடுபனி வழியாக நடப்பது போல (இருந்தால்) உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கவும்.
சேற்றில் நடந்து செல்வதுபோல (இருந்தால்) உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கவும்.
பனிக்கட்டியில் நடந்து செல்வது போல(இருந்தால்) உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கவும்.
சுளுக்கிய கணுக்காலில் நடந்து செல்வதுபோல (இருந்தால்) உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கவும்.


இந்தக் காட்சிகளைப் பின்தொடர்ந்து நடியுங்கள்:

1.) நீங்கள் ஒரு விருந்துக்குச் செல்ல அவசர அவசரமாகத் தயாராகிவருகிறீர்கள். (அப்போது மின்சாரம் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)

2.) நீங்கள் ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்துகொண்டிருக்கிறீர்கள். (அப்போது, உங்களிடம் பணம் இல்லையென்பதை உணர்ந்தால், அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்?)

3.) நீங்கள் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நண்பருடன் இரவு உணவிற்குச் செல்கிறீர்கள். (நீங்கள் இன்னும் காதலிக்கும், உங்கள் முன்னால் காதலியுடன், அவர் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதை நீங்கள் தெரிந்துகொண்டால், அடுத்து என்ன செய்வீர்கள்?)

மேலேயுள்ள ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புப் பயிற்சிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை உணர்வதற்கான உங்கள் திறனை வளர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டியாக உதவும். இது பார்வையாளர்கள் நம்பக்கூடிய மற்றும் யதார்த்தமான நடிப்பை நடிகர்களுக்கு வழங்கும்.

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டம், நாடகப் பள்ளிகளில் கற்பிக்கப்படக்கூடிய பல முறைகளில் ஒன்றாகும்; அதைக் கற்றுக்கொள்வது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு நடிகராக நீங்கள் வகிக்கும் பங்கைப் புரிந்துகொள்ள உதவும் நுட்பங்களை உங்களுக்கு வழங்குவதன் மூலம், மிகவும் உறுதியான முறையில், நடிகராக நீங்கள் செயல்பட உதவுகிறது. உங்கள் கதாபாத்திரம் கொண்டிருக்கும் எண்ணங்களை, நடிகராக நீங்கள் மீண்டும் உருவாக்குவதன் மூலம், அந்த நேரத்தில் நீங்கள் செயல்படும் காட்சிக்குப் பொருத்தமான யதார்த்தமான உணர்ச்சிகளையும், வெளிப்பாடுகளையும் உருவாக்குவீர்கள்.

ஒரு குறுகிய வகுப்புப் பயிற்சி

ஒருவருடன் நட்பையோ/காதலையோ முறித்துக்கொண்டது போன்ற ஒரு காட்சியைத் தேர்வு செய்யுங்கள். இது உங்களுடன் தொடர்புபடுத்த முடிந்த ஒரு காட்சியாக இருக்க வேண்டும்! மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்வினைகளுடன் காட்சியில் நடியுங்கள். இப்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் உள் எண்ணங்களை சத்தமாகப் பேசும் காட்சியை உருவாக்குங்கள்.

அதாவது:

நான் உங்களுடன் பேச வேண்டும்…. உள்ளிருந்து வருகிற சொற்களிலிருந்து பேசுதல்: கடவுளே இதற்காக நான் பயப்படுகிறேன்.

பயம் என்ற உணர்வு உங்கள் ஆழ்மனதில் இருக்க வேண்டும். அந்த உணர்ச்சியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, நண்பருடன் பேச ஆசைப்படுவதையோ, காதலியுடன் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையோ பேசி நடித்துக்காட்ட வேண்டும். இதுபோல இன்னும் சில பயிற்சிகள்:

நாம் நன்றாக வருகிறோம் என்று நான் நினைக்கவில்லை….
ஆழ்மன சொற்றொடர்: நாம் செய்வதெல்லாம் வாதம்.

இந்தக் காட்சியின் நோக்கம் அக்குறிப்பிட்ட நபருடன் உறவை முறித்துக்கொள்வது, அதில் இடையில் வருகிற தடைகளை அடையாளம் காண்கிறோம். அதைக் கடந்துதான், இலக்கினை அடையமுடியும். எனவே, கதாபாத்திரத்திற்குண்டான இலக்கினையும் தன் உணர்விற்குள் கொண்டுவந்து, காட்சியில் நடிக்கிறோம்.

உங்கள் கதாபாத்திரத்தின் தடைகளைக் கண்டுபிடிப்பதால், என்னென்ன நன்மைகள் விளைகின்றன? என்று அடுத்து பார்ப்போம்.

தடைகள் யாவும், கதாபாத்திரம் தன் குறிக்கோளை அடைவதைத் தடுக்கின்றன. மேலும் உங்கள் பாத்திரம், அவற்றின் வழியில் குறிக்கிடுகிற தடைகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், அக்கதாபாத்திரத்தின் தன்மையை நீங்கள் நன்கு புரிந்துகொண்டு அவர்களின் பண்புகளை மிகவும் யதார்த்தமாகச் சித்தரிக்க முடியும்.

நீங்கள் நடிக்கிற கதாபாத்திரத்தை, நீங்கள் புரிந்துகொண்டவுடன், உங்கள் கதாபாத்திரத்தின் மன அமைப்பில் உங்களை வைத்திருக்கும் ஒரு ஆழ்மன சொற்றொடர்களை நீங்கள் உருவாக்கலாம், மேலும் உங்கள் செயல்களையும் சொற்களையும் உங்கள் பாத்திரத்திற்கு மிகவும் இயல்பானதாகவும், யதார்த்தமாகவும் ஆக்குகிறது.

நீங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை உணர்வதற்கான உங்கள் திறன், பார்வையாளர்களுக்கு நம்பக்கூடிய மற்றும் யதார்த்தமான செயல்திறனில் வரும்.

நடிப்புக் கலை: ஸ்டெல்லா அட்லெர்

நடிகர், ஆசிரியர், ஸ்டெல்லா அட்லெர் (1901 – 1992) ஒரு நடிகரின் கற்பனையை மையமாகக் கொண்ட, ஒரு தனித்துவமான நடிப்புப் பாணியை உருவாக்கினார். தொழில்முறை நடிகர்களின் மகளான ஸ்டெல்லா அட்லர், நான்கு வயதில் தனது சொந்த நடிப்பில் அறிமுகமானார். அவரது பெற்றோரின் சுதந்திர இத்திஷ் கலை நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார். கான்ஸ்தன்தீன் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் ஆகியோர் ஸ்டெல்லா அட்லர் மீது பாதிப்பைச் செலுத்தினர்.

அவரது நடிப்பு முறை, இந்த புகழ்பெற்ற இரண்டு நபர்களுடன் ஒப்புமையைக் கொண்டிருக்கும்போது, கற்பனையின் சக்தியை உணர்வு ரீதியிலான நினைவுகூரல் என்ற கருத்தைக் கொண்டுவந்ததன் மூலம், அவர் இந்த இருவரிலிருந்தும் தன்னைப் பிரித்து அடையாளப்படுத்துகிறார். கற்பனா சக்தியை, உணர்ச்சி ரீதியிலான நினைவுகூரலுக்குப் பயன்படுத்துகிறபொழுது, ஒரு கதாபாத்திரத்தின் இடத்திலிருந்து நடிகரால் நடிக்க முடிகிறது.

ஆனால், ஒரு கதாபாத்திரம் சோகமான காட்சியில் நடிக்கவேண்டுமானால், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிற நாம், நம் வாழ்வில் நமக்கு நடந்த மிக சோகமான காட்சியை, நினைகூர்கிறோம். அத்தகைய சோகம் நமக்கு மீண்டும் நடந்ததாக, அந்தக் கற்பனையிலிருந்து நடிக்கிறோம். இதில்தான், ஸ்டெல்லா அட்லர் இருவரிடமிருந்தும் வித்தியாசப்படுகிறார். தனிப்பட்ட உணர்ச்சிகளை நினைவுபடுத்துவதில், அதிகக் கவனம் செலுத்துவது நடிப்புக் கலையை அணுக ஆரோக்கியமான வழி அல்ல என்று அட்லர் நம்பினார். ”நான் அனுபவித்த உணர்ச்சிகளை மீண்டும் வரைவது – அதாவது, நோய்வாய்ப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக., அல்லது schizophrenic போன்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை வெளிக்கொண்டுவருவதற்காக – நான் என் அம்மா இறந்தபோது அடைந்த உணர்வை நினைவுகூர்வது – அதுதான் நடிப்பு என்றால், அதைச்செய்ய நான் விரும்பவில்லை” என்று ஸ்டெல்லா அட்லர் அழுத்தமாகக் கூறினார்.

சுதந்திரம்:

ஸ்டெல்லா அட்லர், நடிகர்களிடையே சுயாதீன (சுதந்திரமான) சிந்தனைக்கு ஆதரவாளராக இருந்தார். அவர் தனது மாணவர்களை ஒரு வலுவான கண்ணோட்டத்துடனும், நோக்கத்துடனும் நடிப்புத்துறையில் நுழைய ஊக்கப்படுத்தினார். மேலும், நாடகத்தைப் பயன்படுத்தி, தனது கொள்கைகளை பரிசோதித்துப் பார்த்து, வெளிப்படுத்தினார். இதே பாணியில், நடிப்பை அணுகுகிற மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பயிற்சியையும், அவர்களின் கைவினைத்திறன்களையும் அதிக ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் தொடர்வார்கள் என்று அட்லர் நம்பினார்.

கற்பனை மற்றும் தேர்வு:

உங்கள் நனவான கடந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, உங்கள் கதாபாத்திரத்திற்கு சொந்தமான கடந்தகாலத்தை உருவாக்க உங்கள் படைப்புசார்ந்த கற்பனையைப் பயன்படுத்துங்கள். உங்கள் சொந்த வாழ்க்கையிலேயே சிக்கியிருப்பதை நான் விரும்பவில்லை. அந்த அனுபவம் அது மிகக் குறைவு.
- ஸ்டெல்லா அட்லர்


நடிகர்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான கருவி அவர்களின் கற்பனைகளே என்பது ஸ்டெல்லா அட்லரின் உறுதியான நம்பிக்கை. தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உணர்ச்சி நினைவகத்தை மட்டுமே நம்புவதை விட கற்பனையின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தன் மாணவர்களுக்கும், அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் கற்பித்தார்.

தனது கற்பித்தலின் ஒரு பகுதியாக, அட்லர் ஒரு ஸ்கிரிப்டை விளக்கும்போது ஒரு தனிப்பட்ட மற்றும் கற்பனையான தேர்வுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நடிகர்கள், ஒரு திரைக்கதை எழுத்தாளரின் நோக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள, அவர்களது உள்ளுணர்வு மற்றும் கற்பனையின் அடிப்படையில் தேர்வுகளை எடுக்க வேண்டும்.

அட்லரின் மாணவரான ஹென்றி விங்க்லர், அதிக நாட்கள் ஓடிய சிட்-காம் ஹேப்பி டேஸில் ”தி ஃபோன்ஸ்” என்ற மறக்கவியலா கதாபாத்திரத்தில் நடித்தார். கதை செல்லும் பாதையில், கதாபாத்திரம் தொடர்பாக அவர் எடுத்த முடிவுகளில் ஒன்று, “தி போன்ஸ் ஒருபோதும் தனது தலைமுடிகளை வாரிக்கொள்வதில்லை.” அதன்படியே நடித்தும் வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில், இந்தக் காட்சிக்கு, ”தி போன்ஸ்” தனது சீப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்ட போது, ஹென்றி விங்க்லர், அந்தக் காட்சியை நான் அப்படிப் பார்க்கவில்லை, என்று தன் பக்கக் கருத்தைக் கூறினார்.

நீங்கள் கற்பனை செய்தபடி, விங்க்லர் அவரது பாத்திரத்தை உருவகித்துக்கொண்ட விதம், பாத்திரத்தின் விளக்கம், தயாரிப்பாளர்களுக்குச் சரியாகப் புரியவில்லை. அல்லது, விங்க்லர் சொன்னவை, தயாரிப்பாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவண்ணம் இருந்தன. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்கிற கட்டளைக்குக் கீழ்படிய வேண்டுமென்றும், காட்சியில் தி போன்ஸ், சீப்பினால் தலைமுடியை வாரிக்கொள்ள வேண்டும் என்றும் ஹென்றி விங்க்லருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்களின் விருப்பத்திற்கு இணங்குவதற்குப் பதிலாக, விங்க்லர் கண்ணாடியை அணுகி, தனது சீப்பை வெளியே எடுத்து, தலைமுடியை வாரிக்கொள்வதற்காகச் செல்லும்பொழுது, தனது தலைமுடி நன்றாகவே வாரப்பட்டிருப்பதாக உணர்ந்து, எப்போதும் முழுமையை மேம்படுத்தமுடியாது என்று முடிவு செய்து, பின்னர் தனது சீப்பை பாக்கெட்டில் வைத்தபடி அங்கிருந்து நகர்கிறார். இது சிறந்ததொரு காட்சியாக, கதாபாத்திரத்தின் மேம்பாடாகப் பார்க்கப்பட்டது. இங்கு ஹென்றி விங்க்லர் தனது கற்பனையைப் பயன்படுத்தி, இந்தக் காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறார். இந்தப் புகழ்பெற்ற செயலை படத்தின் தொடக்க வரவுகளில் காணலாம்.

நான்கு திசைகளிலும் பதியும் பார்வை:

நடிகர்கள் தங்கள் சொந்த அறிவு மற்றும் அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட வளங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்டெல்லா அட்லர் நம்பினார். எனவே, அத்தகைய நடிகர்களால், இன்னும் துல்லியமாகவும், நம்பிக்கையுடனும் பரந்த அளவிலான கதாபாத்திரங்களைச் சித்தரிக்க முடியும். நடிகர்கள் தங்கள் அறிவுத்தளத்தை விரிவுபடுத்தும்போது, அவர்களின் திறன்களும் அதிகரிக்கும் என்று அவர் உணர்ந்தார். ஸ்டெல்லா அட்லரின் ஸ்டுடியோ ஆஃப் ஆக்டிங்(Stella Adler Studio of Acting) நிறுவனத்தில், மாணவர்கள் தங்கள் “தகவல் வளங்களை” வளர்த்துக்கொள்வதற்கு, கலாச்சார, சமூக, அரசியல் மற்றும் வரலாற்றுச் செய்திகளையும், அவர்கள் மேற்கொண்ட உத்திகளையும்கூட கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள், இதன் வாயிலாக, ஒரு நடிகராக, அவர்களின் ஒட்டுமொத்த மதிப்பை அதிகரிக்கும் விதத்தில், தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அட்லரின் நடிப்புக் கோடுபாடுகளையும், பாணியையும் கற்றுக்கொண்ட பிரபலங்களின் நீண்ட பட்டியலில், மார்லன் பிராண்டோ (Marlon Brando), ராபர்ட் டி நிரோ (Robert De Niro), கேண்டீஸ் பெர்கன் (Candice Bergen), மெலனி கிரிஃபித் (Melanie Griffith), வாரன் பீட்டி (Warren Beatty), டெரி கார் (Teri Garr) மற்றும் ஹார்வி கீட்டல் (Harvey Keitel) ஆகியோர் அடங்குவர். ஸ்டெல்லா அட்லர் பற்றியும் அவரது நடிப்பு முறைகளைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள, மார்லன் பிராண்டோ முன்னுரையுடன் வெளியாகிய, அவரது The Art of Acting என்ற புத்தகத்தைப் படியுங்கள். ஸ்தானிஸ்லாவ்ஸ்கி சொல்கிற மெத்தாட் ஆக்டிங் முறையும், ஒரு கதாபாத்திரமாக, ஒரு நடிகர் மாற வேண்டும் என்கிறார். ஆனால், அதற்குச் சற்று மாறாக ஸ்டெல்லா அட்லர், நடிகர் தனது கற்பனை சக்தியின் மூலம், கதாபாத்திரத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார். இதில், ஒரு நடிகராக உங்களுக்கு எந்தப் பயிற்சி, அதிக நன்மையளிக்கும் என்றும், எதைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அட்லர் கற்றுத்தருகிற பயிற்சிகளும், நுட்பங்களும் எனக்குச் சரியானவைதானா? என்று எப்படி அடையாளம் காண்பது?

அட்லரின் நடிப்பு நுட்பங்கள், பெரும்பாலும் உளவியல் ரீதியாக நடிப்பைக் கையாளுதல் எனும் முறைகளால் அதிருப்தி அடைந்தவர்களுக்குச் சரணாலயமாக விளங்குகிறது. இந்த நடிகர்களில் மார்லன் பிராண்டோவும் ஒருவர். ஸ்ட்ராஸ்பெர்க்கின் நடிப்பு முறைகளாலும், போதனைகளாலும் ஆத்திரமடைந்த பிராண்டோ, தனது கைவினைகளை அட்லருக்கு வரவு வைத்தார். அட்லரின் நுட்பம் கடுமையான ஒழுங்கையும், நன்கு செறிவூட்டப்பட்ட கற்பனையையும் கோருகிறது. இது நடிப்பு சார்ந்த குறுக்கு வழிகளையும், எளிய திருத்தங்களையும் விரும்புவோருக்கானது அல்ல – இதற்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட/ ஆழ்ந்து ஆராயப்பட்ட, பழக்கவழக்கப்படுத்தப்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் அவதானிப்பு தேவைப்படுகிறது.

அட்லரது நடிப்பு சார்ந்த போதனைகள் சிக்கலானவை – கலையும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவரது பயிற்சிகளும் சிக்கலானவை என்பதால், ஒரு நடிகர் அவர்களது மன ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அட்லர் வலியுறுத்தினார். அவரது நுட்பத்தின் வேலை, மனரீதியாகச் சோர்வடையச்செய்கிறது; நடிப்பிற்குத் தேவையான, கடுமையான மன ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், சமாளிக்கவும், செயலாக்குவதற்கும், இவற்றிற்கான ஆதரவைத் தேடுவதற்கும் அவரது மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அட்லரது பயிற்சிகள் கடுமையாக இருந்தபோதும், பொறுமையாக முயற்சிக்கையில், அது தன்வசப்படுகிறது. முக்கியமாக, ஸ்ட்ரோஸ்பெர்க் மற்றும் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு முறைகளால், ஒரு கதாபாத்திரத்திலிருந்து உளவியல் ரீதியாகப் பிரித்துப்பார்க்க முடியாத சூழல் தன் அசல் வாழ்க்கையையும் அலைக்கழிக்கிறபொழுது, அதற்கான மாற்றாக அட்லரது நடிப்புக் கோட்பாடுகள் இருக்கின்றன.

(பேசாமொழி பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கும் ‘நடிப்பு’ புத்தகத்திலிருந்து ஒரு பகுதி)