நடிப்பு : 100 பயிற்சிகள்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அகஸ்தோ போல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபொழுது தன்னுடைய நெருங்கிய நண்பர் ஜான் காஸ்னர் (john gassner) மூலமாக ரஷ்ய நாடக மேதைகளான பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht), ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நாடகக் கோட்பாடுகள் மற்றும் நடிப்பிற்கான நுணுக்கங்கள் அறிமுகமாகியது. பின்னர் பிரேசில் நாட்டின் மிக முக்கியமான நாடகவியலாளராகத் திகழ்ந்த அகஸ்தோ போல், மார்க்ஸின் சில சிந்தனைகளைப் பின்பற்றி வந்தார். அரசுக்கு எதிராக மாணவர்களுக்கு சர்ச்சைக்குறிய பாடங்களைக் கற்பிப்பதாகக் கூறி அந்நாட்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அகஸ்தோ போல் மிகக் கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகினார். மேலும் அவரை பிரேசில் நாட்டிலிருந்து அர்ஜென்டினாவிற்கு நாடு கடத்தினர். அங்கு தன்னுடைய படிப்பைத் தொடர்ந்த அகஸ்தோ போல் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தான் எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் சிறையில் இருந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு Theatre of the Oppressed என்னும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கை நிறுவி அதை ஒரு புத்தகமாகவும் எழுதினார். 

இந்தப் புத்தகம் நாடக உலகில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து நாடக உலகில் பல சோதனைகளையும் மாற்றங்களையும் கொண்டுவந்த அகஸ்தோ போல் தன்னுடைய நடிகர்களுக்கு பல நடிப்பு யுக்திகளை பயிற்சியளித்ததோடு ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டையும் பயன்படுத்தி நடிகர்களைத் தயார்படுத்தினார்.

மேலும் நடிகர்கள் எப்படி தன்னைத் தானாகவே தயார்படுத்திக்கொள்ள வேண்டும்? என்றும் ஒரு நடிகன் பாத்திரமாக மாறுவதற்கு என்ன விதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கற்பித்தார். விளையாட்டுக்களின் வழியே எப்படி ஒரு நடிகன் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது என்பதை கற்பிக்க Games for actor and non actor என்ற புத்தகத்தை எழுதினார்.


ஆதி மனிதர்களிடம் மொழி நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே நடிப்பு தோன்றியது. நடந்த நிகழ்வுகளையும் தான் நினைக்கும் விடயங்களையும் உடன் இருப்பவரிடம் தெரியப்படுத்துவதற்காக ஆதி மனிதர்கள் சைகைகளையும், உடல் மொழிகளையும் பயன்படுத்தி உள்ளனர். இதை ’போலச்செய்தல்’ என்கின்றனர். இதுவே நடிப்பிற்கான தோற்றமாக கருதப்படுகின்றது. காலப்போக்கில் மனிதன் வளர்ச்சியில் குரலையும் உடல் அசைவுகளுடன் ஒன்றிணைத்து சில சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர். முதன் முதலில் கிரேக்கத்தில் கி.மு.534ல் ஒரு நடிகன் திஸ்டிஸ் தியேட்டர் டியோனிசுஸ் என்ற நாடகத்தில் வேடம் அணிந்து முதல் வார்த்தை பேசிய போது நடிப்பின் துவக்கம் நிகழ்ந்தது என வரலாற்றில் நம்மால் காணமுடிகிறது.

அக்காலகட்டத்தில் ஒரு கதையை எப்படி உருவாக்க வேண்டும்? ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்? மேடை அமைப்பு போன்ற அரங்கத்தைக் குறித்து பல குறிப்புகளை எழுதிவைத்திருந்தனர். ஆனால் அதில் ஒரு நடிகன் எப்படி கதையில் வரும் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும்? அதற்கான யுக்திகள் என்ன? போன்ற பாத்திரத்தின் நுணுக்கங்களை பெரும்பாலும் எந்த ஒரு கலை வல்லுனர்களும் அக்காலகட்டத்தில் விவரிக்கவில்லை. கிமு 384ல் பிறந்த கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாடில் தன்னுடைய கவிதையில் பாத்திரத்தைப் பற்றி எழுதியிருப்பதே கதாபாத்திரம் குறித்த முதல் வரையறையாகக் கருதப்படுகிறது.

நடிப்பு என்பது ஆசிரியர் எழுதிய கதையில் உள்ள பாத்திரங்களை ஏற்று ஒரு நடிகன் நடிப்பது. அப்பொழுது அவன் தன்னுடைய சொந்த குணாதிசயங்களை தவிர்ப்பதும் கதையில் உள்ள பாத்திரத்தை ஏற்றும் நடிக்க வேண்டியுள்ளது. இவை முழுவதும் உடல் மற்றும் உளவியல் சார்ந்தது என்றும் அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு ஒரு நடிகன் பயிற்சி எடுப்பதன் மூலம் தன்னைத் தானாகவே அந்த பாத்திரமாக மாற்றிக்கொண்டு ஒரு ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தமுடியும் என்பதையும் முதன் முதலில் 1876ல் பிறந்த ரஷ்ய நாட்டு நாடகவியலாளர் நாடக இயக்குனர் கோட்பாட்டாளர் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி தன்னுடைய எதார்த்த நடிப்புக் கோட்பாட்டின் மூலம் நிறுவினார்.

நாடக ஒத்திகையின் பொழுது தன்னுடைய மாணவர்களை ஆய்வுக்குட்படுத்தி இந்த நடிப்புக் கோட்பாட்டை அவர் உருவாக்கினார். இவருடைய இந்த நடிப்புக் கோட்பாடானது ரஷ்ய நாட்டுக்கு மட்டுமின்றி நாடக உலகில் எல்லா நாட்டிற்கும் பெரிய கொடையாக கருதப்பட்டது. ஒரு நடிகன் பாத்திரமாக மாறுவதென்பது உள் உடலியல் நிகழ்வு(Psyco Physical Action) என்பதை புரிந்துகொண்ட ஸ்தானிஸ்லாவ்ஸ்கி மனிதர்களின் உணர்ச்சிக்குக் காரணமாக விளங்கக்கூடிய உளவியல் சார்ந்த இயங்கு நுணுக்கங்களைத்(Mechanics) தொடுவதன் மூலமாக உணர்ச்சிகளைத் தூண்டவைத்து அதன் மூலம் உடல் அசைவையும் உள் அசைவையும் ஒரு நடிகனிடமிருந்து வெளிக்கொணர முயற்சித்தார். இதற்கு அவர் இவான் பேட்ரோலித் பால் லோப் என்ற மன இயல் நிபுணருடைய Affective Memory என்னும் கோட்பாட்டைப் பயன்படுத்தினார். இந்தக் கோட்பாடானது பழைய உணர்ச்சியை மீண்டும் தூண்டும் நினைவாற்றலைக் கொண்டது.

Image result for Sanford Meisner

இவருடைய மாணவர்கள் மட்டும் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் கோட்பாட்டைப் பின்பற்றியே வந்தனர். மைக்கேல் செகாவ் (Michael Chekhov), லீ ஸ்ட்ராஸ்பெர்க் (lee Strasberg), ஸ்டெல்லா அட்லர் (Stella adler), சான்ஃபோர்ட் மெய்ஸ்னர் (Sanford Meisner) போன்றோர் இவருடைய நடிப்பு அணுகுமுறைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கினார்கள். அப்பொழுதுதான் முதன் முதலில் சினிமா என்ற ஒரு ஊடகம் உலகிற்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தது. இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றி நடித்து யதார்த்த மேடை நடிப்பிலும் திரைத்துறையிலும் பலர் தலைசிறந்த நடிகர்களாக வலம் வந்தனர். இதன் மூலம் இந்த நடிப்புக் கோட்பாடானது பெரும்பாலும் எல்லோருடைய கவனத்திற்கும் எட்டியது.

Image result for lee Strasberg


ஆனால் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் யதார்த்த நடிப்பின் கோட்பாடுகளுக்கு முரணாகவும் மாறுபட்டும் அதே காலகட்டத்தில் சில நாடகவியலாளர்கள் தங்களுடைய புதிய நடிப்புக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். அதில் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் மாணவரான மேயர் ஹோல்டு (Vsevolod Emilyevich Meyerhold) முக்கியமானவர். அவர் தன்னுடைய ஆசிரியரின் யதார்த்த நடிப்புக் கோட்பாட்டில் இருந்து மாறுபட்டு வேறு ஒரு புதிய நடிப்பு யுக்தியைத் கண்டுபிடித்தார். இவர் உருவாக்கிய நடிப்புக் கோட்பாடானது உடலியல் இயங்கு நுணுக்கம் (Bio-mechanism) எனப்பட்டது. தன்னுடைய இக்கோட்பாட்டை நிறுவி யதார்த்த நாடக அரங்கினை கேள்விக்குட்படுத்தினார். யதார்த்த அரங்கும் நடிப்பும் பார்வையாளர்களுக்கு சலிப்புத்தன்மையை ஏற்படுத்தி நாடக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எனக் கருதினார். எனவே நடிகர்களை உடலியல் இயங்கு நுணுக்கத்திலிருந்து உருவாக்க வேண்டும் என்றும் நடிகர்கள் அக உணர்வுகளோடு செயல்படுவதை முக்கியமானதாகக் கருதக்கூடாது எனவும் கூறினார். பிறகு தன்னுடைய நடிகர்களை ஆய்வுக்குட்படுத்தி புற உணர்வுடன் செயல்படவைக்கும் யுக்திகளை கண்டறிந்தார். நடிகனை உளவியலோடு இயங்கவைக்கும் பொழுது பார்வையாளர்களும் படைப்பாளியின் கருத்தில் இருந்து விலகி, நடிகனை முக்கியமானதாகக் கருதுகின்றனர். இதனால் படைப்பின் நோக்கமான கரு மக்களிடம் சென்றடைவதில் தடை ஏற்படுவதாக எண்ணினார்.

ஒரு நடிகனுக்கு முதலில் உடல் நகர்வுகளும் சைகைகளுமே முக்கியம் என்றும் உடல் அசைவின் ஊடாகவே அவன் உள் உணர்வுகளைப் பெறமுடியும், அப்பொழுது பார்வையாளர்களுக்கும் பாத்திரத்தின் அக உணர்வு தானாகவே கிடைக்கும் எனக் கூறினார். இவற்றை நிறுவுவதற்காக ஜேம்ஸ்லேங் (James lange) என்பவரின் உளவியல் சார்ந்த கோட்பாடுகளை அவர் உதாரணமாக முன் வைத்தார். அதாவது துக்கத்தினால் ஒருவன் அழவில்லை, ஆனால் அழும் பொழுது அவன் துக்கத்தை உணர்கிறான் என்பதாகும். இந்த கருதுகோள் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது, எனக் கூறி மனநோய் வல்லுனர்கள் ஏற்க மறுத்தனர். ஜேம்ஸ் லேங்கின் மறுக்கப்பட்ட இக்கருதுகோலின் அடிப்படையிலேயே மேயர் ஹேட்டு இந்த ’உடலியல் இயங்கு நுணுக்கம்’ எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

Image result for Jerzy Grotowski

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் மற்றும் பன்முகத் திறமை கொண்ட பெர்போல்ட் பிரெக்ட்டும் நடிப்பு என்பது நடிகன் செயலில் ஈடுபடுவது என நம்பினார். ஒரு நடிகனின் கடமை என்பது பாத்திரத்தின் வேலையைச் செய்வதே தவிர அந்த பாத்திரமாகவே மாறுவது இல்லை எனவும் நாடக ஆசிரியர் தன்னுடைய படைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறாரோ, அதைப் பார்வையாளர்களுக்குக் காண்பிக்க வேண்டுமே தவிர அந்தப் பாத்திரமாகவே வாழ வேண்டிய அவசியம் இல்லை, என தன்னுடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு தூரப்படுத்துதல் (Alienation effect) அல்லது விலகி நிற்றல் என்னும் நடிப்புக் கோட்பாட்டை தன்னுடைய Epic Theatre மூலம் உருவாக்கினார். எப்படி ஒரு நடிகன் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்திலிருந்து தன்னைத் தூரப்படுத்துவது என்பதை மிகத் தெளிவாகத் தன்னுடைய கோட்பாட்டின் மூலம் விவரித்தார்.

ஆனாலும் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் யதார்த்த நடிப்புக்கோட்பாடே பெரும்பாலான நடிகர்களின் கவனத்திற்கு பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. எளிமை அரங்கை (poor theatre) நிறுவிய ஜெர்ஸி குரோட்டோஸ்கி (Jerzy Grotowski) தன்னுடைய நடிகர்களைக் கொண்டு நடிப்பை குரல் மற்றும் உடல் அசைவுகளின் உதவியோடு உளவியல் மொழியில் நிறுவ வேண்டும் எனக் கருதினார். இதற்கு பல பயிற்சிகளுக்கும் சோதனைகளுக்கும் தன்னுடைய நடிகர்களை ஈடுபடுத்தினார். மேலும் ஆசிய நாடுகளின் நிகழ்த்துக் கலைகளை உற்றுக் கவனித்துவந்த இவர் ஒரு நடிகனுக்கான பாத்திர உருவாக்கத்தை நாம் சடங்குகளில் இருந்தே தேட வேண்டும் என்றும், அந்த பாத்திரமானது முழுவதும் உடல் அசைவு, குரல் மற்றும் உளவியலில் இருந்து உருவாக்க வேண்டும் எனக்கூறி, பல சடங்கியல் சார்ந்த அரங்குகளில் காணப்படுகின்ற உள மற்றும் உடலியல் நிகழ்த்துக் கூறுகளை நடிகர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தினார். மேலும் இவருடைய குருவான அண்டோன் ஆர்தோடும் (Antonin Artaud) தன்னுடைய கொடூர அரங்கின் (Theatre of cruelty) கோட்பாட்டை சடங்கு மற்றும் உடல் இயக்கங்களைக் கொண்டே உருவாக்கினார். இக்கருத்தினை உள்வாங்கிக் கொண்ட குரோட்டோவ்ஸ்கி தன்னுடைய சோதனைகளுக்கும் இதைப் பயன்படுத்தினார்.

ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டிற்குப் பிறகு நடிகனின் உடல் மற்றும் உள்ளம் பற்றிய ஆழமான சோதனைகளைச் செய்து ஒரு புதிய நடிப்புக் கோட்பாட்டையும் அரங்கையும் கொண்டு வந்தார் குரோட்டோவ்ஸ்கி. இவர் துவங்கிய சோதனை நாடக அரங்கு(Laboratory Theatre) உலக நவீன நாடகம் பற்றிய ஆராய்ச்சி நிறுவனமாக விளங்கியது. அகஸ்தோ போலும் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் பயிற்சி முறைகளை அடிப்படையாகக் கொண்டே, தன் பயிற்சிகளை உருவாக்கினார். 

Image result for augusto boal

அகஸ்தோ போல் எழுதிய Games for Actors and Non-Actors என்ற புத்தகத்தின் குறு மொழிபெயர்ப்பே இப்புத்தகம். பல கலை வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நடிப்புக் கோட்பாடுகள், நாடகப் பிரதிகள், கலை அரங்கு சார்ந்த விமர்சனம் மற்றும் தத்துவங்கள் தமிழைவிட ஆயிரக்கணக்கில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பரவிக்கிடக்கின்றன. ஆனால் அவைகள் தமிழில் மொழியாக்கம் செய்வதற்கு குறைவான நபர்களே உள்ளனர். கலை மற்றும் படைப்புகளை விமர்சிப்பதற்கு கலையைப்பற்றிய ஆழமான புரிதலும் வாசிப்பும் அவசியம் எனக் கருதுகிறேன்.

கலை என்றால் என்ன?

சமூகத்தில் கலைக்கான நோக்கம் என்ன?

கலை வல்லுனர்கள் எப்படி ஒரு கலையை சமூகத்தோடு பொருத்திப் பார்க்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதினால் நம்மால் கலையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தில் விமர்ச்சிக்க முடியும். கலை ஆய்வாளர்களின் சிந்தனைகளைத் தவிர்த்து தங்களுடைய சுய வியாக்கியானத்தை மட்டுமே புரிந்து கொண்டு கலையை விமர்சிப்பதும் படைப்பதும் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. மறுபக்கம் இது சார்ந்த மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதும் பெரும்பாலானோர் படிக்க முடியாததற்கான காரணமாக இருக்கிறது. அதேநேரம் நாவல் சிறுகதைகள், கவிதைகள் போல தத்துவங்களையும் கோட்பாடுகளையும் அவ்வளவு எளிதாக மொழி வளத்தை மட்டுமே கொண்டு மொழிபெயர்ப்பு செய்துவிடவும் முடியாது. அதற்கு துறைசார்ந்து அறிவைக் கொண்டு இயங்க வேண்டியுள்ளது. தோழர் தீஷாவினுடைய இந்த Games for Actors and Non-Actors புத்தக மொழிபெயர்ப்பு பாராட்டுக்குரியது. மிக எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும்படி இந்த புத்தகத்தை மொழிபெயர்த்துள்ளார். இனி இந்த புத்தகம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்தில் நடிகராக விரும்பும் எல்லோருக்கும் இந்த புத்தகம் ஒரு கையேடு. நடிகர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு சாதாரண மனிதனும் தன்னுடைய ஐந்து புலன்களை மேலும் கூர்மையாக வைத்துக்கொள்ள இந்த புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை விளையாட்டின் மூலமாகக் கற்றுக்கொள்ளலாம். 
சனவரி புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் பேசாமொழி பதிப்பகம் வெளியீடாக வரவிருக்கிறது. 

-அகஸ்தோ போல்

நூல் அறிமுகம்
சுகுமார் சண்முகம்