ழான் லுக் கோதார்த்


நடுவில் ஒரு மேசையிருக்க இருபுறமும் நாற்காலிகள். மேசையின் மீது ஒரு ஒளி குவியும் விளக்கு. நாற்காலிகளின் இருக்கையிடமும் விளக்கின் மேல் கவியும் துணியின் நிறமும் அடர்ந்த சிவப்பு. அறையின் கதவுகள் சிவப்பு நிறம். மற்றொரு அறையின் கதவு நீலநிறம். அறைகளிலெங்கும் வெள்ளைச் சுவர்களில் அடர்ந்த சிவப்பிலும் நீலத்திலும் புரட்சிகர மேற்கோள் எழுத்துகள். திரும்பிய பக்கமெல்லாம் மாவோவின் புகைப்படங்கள். அனைவரும் கூடும் பிரதான அறையின் சுவரில் அடர் சிவப்பு நிறத்திலான மாவோவின் ஓவியம். பிறிதொரு அறையில் நீள வாக்கிலான மேசையின் பின்னணியில் சுவர் முழுக்க அடைத்தபடியிருக்கும் புத்தக அலமாரியில் அடுக்கப்பட்ட நூற்றுக் கணக்கிலான, மவோவின் ‘சின்னஞ்சிறு சிவப்புப் புத்தகத்தின்’ பிரதிகள்.


ழான் லுக் கோதார்த்தின் ‘லா சைனீஸ்/ La Chines’ எனும் பிரெஞ்சுத் திரைப்படத்தில் வரும் இரு யுவதிகளும் மூன்று யுவன்களும் என பாரிஸ் மாணவர்கள் சேர்ந்து வாழும் அறையின் விவரணச் சித்திரம் இது. இன்று வரையிலும் மாவோவின் மேற்கோள் தொகுப்பான ‘சின்னஞ்சிறு சிவப்புப் புத்தகம்’தான் பைபிளை அடுத்து உலகில் அதிகமும் விற்கப்பட்ட புத்தகமாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது ‘லண்டன் அப்சர்வர்’ வெளியீடான ‘புக் ஆப் புக்ஸ்’ (18 மே 2008) எனும் கைநூல். 1968 மே மாணவர்-தொழிலாளர்களின் சுயாதீனமான எழுச்சியில் ழான் பவுல் ஸார்த்தர், மிசேல் பூக்கோ போன்ற தத்துவவாதிகள் இலட்சக்கணக்கிலான மாணவர்கள், ழான் லுக் கோதார்த், பிரான்சுவா த்ரூபோ போன்ற திரைக் கலைஞர்கள், குரின் போன்ற அரசியல் நடவடிக்கையாளர்களினதும் கருத்தியல் கைநூலாகவும் இந்தச் சின்னஞ்சிறு நூலே திகழ்ந்தது.

கோதார்த்தின் ‘லா சைனீஸ்’ திரைப்படம் 1967ஆம் ஆண்டு வெளியானது. 1968ஆம் ஆண்டு, மார்ச் 22 ஆம் திகதி துவங்கிய பாரிஸ் பல்கலைக் கழகத்தின் ‘நாந்த்ரே வளாகத்தில்’ துவங்கிய மாணவர்களின் எழுச்சியின் பின்னணியில் இருந்த எட்டு மாணவத் தலைவர்களில் இருவர் மாவோயிஸ்ட்டுகள், இருவர் டிராட்ஸ்க்கியவாதிகள், இருவர் அனார்சிஸ்ட்டுகள், ஒருவர் சுச்சுவேசனிஸ்ட்டு, ஒருவர் மாணவர் சங்க நடவடிக்கையாளர். பிற்பாடு, 1968 மே மாதம் முடிய பாரிஸ் மாநகரத்தை மட்டுமல்ல முழு பிரான்ஸையும் உலுக்கிய மாணவர்-தொழிலாளர் எழுச்சியாகப் பரிமாணம் பெறக் காரணமாயிருந்த 1968 மார்ச் 22 மாணவர் எழுச்சியில் ஈடுபட்ட ஒருவர் கூட அன்று ஸ்தபானரீதியில் திரண்டிருந்த, மாபெரும் தொழிற்சங்கமான ‘சிஜிடி’யைத் தன் தலைமையில் வைத்திருந்த பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவராக இருக்கவில்லை.

1968 மார்ச் 22, பாரிஸ் பல்கலைக்கழக ‘நாந்த்ரே வளாக’ மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஐந்து. 1. மாணவிகளின் தங்கும் விடுதிகளுக்கு மாணவர்கள் செல்லவும் அவர்களோடு தங்கியிருக்கவுமான உரிமையை மாணவர்கள் கோரினர். முன்பாக மாணவர்கள் விடுதிகளுக்கு மாணவிகள் விஜயம் செய்யும் உரிமை மட்டுமே இருந்தது. 2. அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை : வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெளியேறக் கோரும் கிளர்ச்சி செய்வதற்கான உரிமை. 3.பாசிஸ்ட்டுகளான ‘ஆசிடென்ட்’ குழுவை எதிர்க்கும் உரிமை. 4. மாணவர்களின் விவகாரங்களில் போலீஸ் அடக்குமுறையாகத் தலையிடக் கூடாது எனும் கோரிக்கை. 5.நிரம்பி வழியும் பல்கலைக்கழக அமைப்பில் மாற்றம் வேண்டியும், கற்பித்தல் தொடர்பாகவும், ஆசிரியர்களின் சட்டாம்பிள்ளைத்தனமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேசுவதற்கான மாணவர்களது உரிமை என்பன வலியுறுத்தப்பட்டன.

வியட்நாம் யுத்தத்தினை எதிர்த்து அமெரிக்க வங்கிகளின் மீது மாணவர்கள் தீக்குண்டுகள் எரிந்தனர். ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மாணவத் தலைவரான கோன் பென்டிட், பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பதற்கான குறிப்புகளை மாணவர்கள் மத்தியில் விநியோகித்தார். கோன் பெண்டிட் கைது செய்யப்பட்டார். அவுருக்கு ஆதரவாக ‘நாந்த்ரே வளாகத்தில்’ வகுப்பறைகளையும் நிர்வாக அலுவலகத்தையும் மாணவர்கள் கைப்பற்றினர். பல்கலைக் கழகத்தில் பிரான்ஸ் தேசியக் கொடிக்குப் பதிலாக செங்கொடி ஏற்றப்பட்டது, சில மாதங்களின் முன் பொலிவியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சேகுவேரா குறித்த திரைப்படம் வகுப்பறைகளில் காட்டப்பட்டது.

1968 மே 2ஆம் திகதி நாந்த்ரே பல் கலைக்கழக வளாகம் நிர்வாகத்தினால், காலவரையறையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை முன்வைத்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எட்டு மாணவர்களின் மீதும் பல்கலைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கையை மேற் கொண்டது. இதனையடுத்து ‘லாட்டின் குவார்ட்டர்’ உள்பட மாணவர்களின் கிளர்ச்சி பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளுக்கும் பரவியது. பள்ளி மாணவர்களும் பல்கலைக் கழக மாணவர்களுடன் இணைந்துகொண்டனர். மே 3ஆம் திகதி 22 மார்ச் குழுவினரும் இடதுசாரி மாணவர்களும் சேர்ந்து ‘ஸோர்போன் வளாகத்தில்’ நாந்த்ரே வளாகம் மூடப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் கலவரத்தை ஒடுக்கும் போலீஸாரும் குவிந்தனர். ஸோர்போன் வளாக ரெக்டர் கல்வி அமைச்சரைத் தொடர்பு கொண்டார்.

மே 6 ஆம் திகதி பள்ளி மாணவர்களும் உள்ளிட்ட வேலைநிறுத்தத்திற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல் விட்டனர். அறுபதினாயிரம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர். போலீஸாரின் வன்முறை வெறியாட்டம் துவங்கியது. ஆல்ஜீரிய விடுதலை நாட்களின் அடக்குமுறை மறுபடி அரங்கேறியது, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. வெகுமக்களும் மாணவர்களை ஆதரித்தனர். அடுத்து வந்த நான்கு நாட்களில் மாணவர்களின் கிளர்ச்சி பிரான்ஸ் எங்கும் பரவியது. பிரான்ஸின் அனைத்துத் தெருக்களிலும் பல்கலைக் கழகத்தின் அனைத்து வளாகங்களிலும் பரவியது.

கிளர்ச்சிகளின் உச்சமாக மே 10-11 ஆம் திகதிகளில் ‘வீதித்தடையரண்களின் இரவு’ பரிமாணம் பெற்றது. வீதியின் பாவுகற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன. மரங்கள் தெருக்களில் வெட்டி வீழத்தப்பட்டன. வாகனங்கள் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு நடுத்தெருக்களில் எரியூட்டப்பட்டன. கற்களும் பெட்ரோல் குண்டுகளும் போலீஸ் படைகளின் மீது வீசப்பட்டன. பாரிஸ் நகரெங்கும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டன. வீதித் தடைகள் பாரிஸ் வாழ் மனிதர்களிடமும் பற்பல வரலாற்று நினைவுகளை எழுப்பின. 1871 பாரிஸ் கம்யூன் எழுச்சியின் நினைவுகளை எழுப்பின. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கிலான மாணவர்கள் காயமுற்றனர். போலீஸாரும் காயமுற்றனர். கடுமையான போலீஸ் அடக்குமுறை எழுந்தது. மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு மாவோயிஸ்ட் மாணவர் சைன் நதியோரம் போலீஸ் துரத்திச் சென்ற வேளையில் நதியில் மூழ்கி மரணமுற்றார்.


அரசு நிர்வாகத்தினதும் பல்கலைக் கழக நிர்வாகத்தினதும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையின் பின் போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை எய்தியது. மாணவர்களுக்கு ஆதரவாக சுயாதீனமான தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. அதுவரையிலும் மாணவர் போராட்டத்திலிருந்து விலகியிருந்து கடுமையாக மாணவர்களை விமர்சித்து வந்த பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனது மாபெரும் தொழிற்சங்கமான ‘சிஜிடி’யும் நடவடிக்கையில் ஈடபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அதன் பின்பு ஜனாதிபதி டீகாலும் பிரதமர் பாம்பிடுவும் ‘லாட்டின் குவார்ட்டரிலிருந்தும், ஸோர்போன் வளாகத்திலிருந்தும்’ கவசக் காவலர்களை விலக்கிக் கொள்வது என முடிவெடுத்தார்கள்.

மாணவர்களின் எழுச்சி நிற்கவில்லை. நாடு தழுவிய அளவில் அது தொடர்ந்து சென்றது. நாடெங்கிலும் வேலை நிறுத்தங்கள் தொடர்ந்தன. மாணவர்கள்-தொழிலாளர்கள்- ஆசிரியர்கள்-தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள்- துப்புரவுத் தொழிலாளர்கள் - இரயில்வே ஊழியர்கள்-பேருந்து ஓட்டுனர்கள் என அனைத்து வகையிலானவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாரிசில் மட்டும் ஆறு லட்சம் பேர் திரண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடெங்கிலும் ஒரு கோடித் தொழிலாளர்கள்-மாணவர்கள் திரண்ட ஆர்ப்பாட்டங்கள் மே 13ஆம் திகதி நடைபெற்றது. தபால் ஊழியர்கள், தேசியத் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊழியர்கள், திரைப்படக் கலைஞர்கள், கவிகள், தத்துவவாதிகள் வேலை நிறுத்தத்தில் இணைந்தனர்.

ழான் லுக் கோதார்த், த்ரூபோ மற்றும் லூயி மெல் போன்றவர்கள் கேன் திரைப்பட விழாவை நடக்கவிடாமல் செய்தார்கள். இயக்குனர்கள் தமது திரைப்படங்களைத் திரையிடுவதினின்றும் விலக்கிக் கொண்டார்கள். அருங்காட்சியகம், நாடக அரங்கங்களின் இயக்குனர்கள் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அரசின் கலாச்சாரக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்து வேலை நிறத்தத்தில் கலந்துகொண்டார்கள். மே மாதத்தின் இறுதியில் ஜனாதிபதி டீகாலுக்கு ஆதரவாக வலதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் பொருளதாரக் கோரிக்கைகளுடன் தனது பணியை முடித்துக்கொண்டது. தேர்தல்கள் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் ஜனாதிபதி டீகால் வெற்றி பெற்றார். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பினர். மாணவர் தலைவரான கோன் பண்டிட் போன்றவர்கள் அரசியல் தலைமையை விரும்பியிருக்கவில்லை ஆதலால், தேர்தலில் போட்டியிடவில்லை.

வரலாற்றாசிரியரான ரோட் கெட் வேர்ட் 1968 மே கிளர்ச்சியின் முக்கியத்துவமான வரலாற்றுத் தாரைகளாக நான்கு விசயங்களைக் குறிப்பிடுகிறார் : இறுகி உறைந்து போயிருந்த, மூடுண்டு போயிருந்த பிரெஞ்சுச் சமூத்தை அதனின்று விடுவிப்பதற்கான தேவையாக இந்த எழுச்சி இருந்தது. சமூக அளவிலும் தொழில்துறை அளவிலும் நிலவி வந்த சமூக அநீதியை இந்த எழுச்சி உடைத்தது-தொழிலாளிகளின் வேலை நிலைமையும் அவர்களது ஊதியமும் அவர்களது வாழ்க்கை உத்திரவாதமும் இதனால் விளைந்தது. தொழிற்சங்கங்களின் மீதான முழு நம்பிக்கையை இந்நிலை அதிகரித்தது. புரட்சி எனும் கருத்தாக்கம் நிராகரிக்கப்பட்டது-வெகுஜன இடதுசாரிகளும் மாணவர்களும் இணைந்து கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத, கட்சி அல்லாதவர்களின் எழுச்சி நிராகரிக்கப்பட்டது. செக்கோஸ்லாவாக்கியத் தலை நகர் பிராகில் எழுந்த மாணவர் எழுச்சி கம்யூனிஸம் குறித்து இருந்த பாராட்டுணர்வை எங்கெங்கிலும் கீழ்மைப்படுத்துவதாக அமைந்துவிட்டிருந்தது.

முன்னதாக, 1968ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் நார்மாண்டியைச் சேர்ந்த கேன் நகரில் 15000 தொழிலாளர்கள் தமது சம்பளத்திற்காகவும் வேலை உத் திரவாதத்திற்காகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போலீசோடு தொழிலாளர்கள் மோதினார்கள், சந்தோசமற்ற சமரசத்திற்கு உள்ளானார்கள். ஆனால், இந்தவேளையில் ஒரு அசாதாரணமான நிகழ்வும் நடந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் 2000 பிராங்குகள் வசூல் செய்து அதனைத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள். இவ்வகையில் அறிவாளி வர்க்கத்திற்கும் தொழில்துறைப்பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான தோழமை என்பது வெளிப்பட்டது. இந்தத் தோழமை 1968 மே இறுதி வரையிலும் நிலவியது. 1968 கிளர்ச்சிகள் தொடர்பாக, அன்றிலிருந்து இன்று வரையிலும் நடந்து வரும் விவாதம், இந்த மாணவர்-தொழிலாளர் ஒற்றமை குறித்த பிரச்சினையைச் சுற்றியதாகவே இருந்து வருகிறது.

இரட்டையர்களாகப் பிறந்த இஸபெல்லாவும் தியோவும் அவர்களது புதிய அமெரிக்க நண்பனான மாத்யூவும் அலங்கரித்த விளக்குகள் ஏற்றப்பட்ட மெல்லிய துணிக் கூடாரத்தில், இரவில் மிதமிஞ்சி அருந்திய திராட்சை ரசத்தின் போதையினாலும், கூட்டுக் கலவியினாலும் சோர்ந்த நிலையில் அம்மண உடல்களால் பின்னியபடி படுத்திருக்கிறார்கள். ஒரு மாதம் முன்பு வெளியூர் சென்றிருந்த இஸபல்லா-தியோவின் இரட்டையர்களின் தந்தையும் தாயும் ஓசைப்படாது கதவைத் திறக்கிறார்கள். கலைந்து கிடக்கிறது வீடு. எங்கும் குப்பைகள். மூவரும் அம்மணமாகப் பின்னியபடி படுத்திருப்பதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.அவர்களுக்கென மறுபடி ஒரு காசோலை எழுதிவைத்துவிட்டு இருவரும் சத்தமில்லாமல் வெளியேறுகிறார்கள். தமது பெற்றோர் வந்து போயிருப்பதை அறியும் இஸபெல்லா, தனது ஒட்டிப்பிறந்த சகோதரனுடன் தான் கலவி செய்வதை அவர்கள் அறிந்துவிட்டார்கள் எனும் நிலையில், சமையல் வாயு இணைப்பை நீண்ட குழாயின் வழியே கசியச் செய்து உறக்கத்திலிருக்கும் தியோவையும் மாத்யுவையும் தன்னையும் மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறாள்.

மெல்ல மெல்ல அவர்கள் மயங்கிக் கொண்டிருக்கிறார்கள். படுக்கை அறையின் ஜன்னலை உடைத்துக்கொண்டு கண்ணாடிகள் சிதற ஒரு கல் விழுகிறது. வெளியில் தெருவில் தொழிலாளர்-மாணவர்களின், மே 13 ஆர்ப்பாட்ட ஊர்வலம் செங்கொடிகளை ஏந்தியபடி கோசங்களுடன் நடந்துகொண்டிருக்கிறது. மூவரும் இறங்கிக் கீழே ஓடுகிறார்கள். ஊர்வலத்தில் கலந்து செல்கிறார்கள். தியோ பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீப்பற்ற வைத்து எதிரில் நிற்கும் கலவர கவசப் போலீஸார் மீது எறிகிறான். கொழுந்து விட்டு வெடிக்கும் தீயைத் தொடர்ந்து வெறிகொண்ட நிலையில் கவசப் போலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாய்கிறார்கள். பெர்னார்டோ பெரட்டுலூசியின் ‘தி டிரீமர்ஸ்/The Dreamers’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி இது. கோதார்த்தின் திரைப்படம் மாவோயிசம் தனிநபர் வன்முறை பற்றியும், தொழிலாளர்-மாணவர் ஒற்றுமை பற்றியும் பேசுகிறபோது, பெர்ட்டுலூசியின் திரைப் படம், 1968 மே மாதத்தில், அன்றைய இளைஞர்கள் யுவதிகளின் வாழ்வில் ஏற்படுத்திய அன்றாட வாழ்வின் கலகப் போக்குகளையும் பாலியல் வேட்கையையும் பற்றிப் பேசுகிறது.

1968 மே கிளர்ச்சிகள் பற்றி மூன்று விதமான, பலமான கருத்துகள் மேற்கில் நிலவுகிறது. முதலாவதாக, சோவியத் யூனியனால் ஆதர்சம் பெற்ற மேற்கத்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் துரோகத்தின் ஒரு பகுதியாக, புரட்சிகர சமூக அமைப்பைக் கட்டுவதற்கான ஒரு வாய்ப்பை துரோகத்தனமாக அரசிடம் விலைபேசிய கட்சியாக பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது எனும் கடுமையான விமர்சனம். இரண்டாவதாக, நடைபெற்றது ஒரு திட்டமிட்ட வகையிலான கருத்தியல் கொண்ட வர்க்கப் புரட்சி அல்ல, மாறாக மூச்சுமுட்டக்கூடிய அளவில் கெட்டிதட்டிப்போன பிரெஞ்சுச் சமூக அமைப்பில், வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டிய ஒரு தலைமுறையின் எழுச்சி என்பதாக இந்தக் கிளர்ச்சியைப் பார்க்கும் பார்வை. எடுத்துக்காட்டாக பெண்ணிலைவாதத்தின் தொடர்ந்த எழுச்சிகளும் பாலுறவு தேர்வுச் சுதந்திரமும் பரவலான வாழக்கைப் போக்காக ஆகியது. மூன்றாவதாக, நுகர் கலாச்சார எதிர்ப்பைத் தனது பிரதான நோக்கமாகக் கொண்டிருந்த பிரெஞ்சு மாணவர்-தொழிலாளர் எழுச்சியானது, மறுபுறத்தில் அதே நுகர்பொருள் கலாச்சாரத்திற்காகவும் போராடிய, அதேவேளை சோசலிச ஜன நாயகத்திற்காகவும் போராடிய செக் கோஸ்லாவாக்கிய மாணவர்களோடும் தம்மை வைத்துக் காண வேண்டியிருந்த முரண்நிலை.

பிரெஞ்சு மாணவர் எழுச்சியென்பது, ஐரோப்பாவில் ஒரு வன்முறை அரசியல் சாகசத் தலைமுறையை உருவாக்கியது. இத்தாலியில் ரெட்பிரிகேட், ஜெர்மனியில் பாதார் மெயின் காம்ப், போன்ற தனிநபர் வன்முறையையும் அழித்தொழிப்பையும் முன்வைத்த அரசியலாக அது முன்வந்தது. பிரெஞ்சுத் தத்துவவாதியா அலன் பாதயு, அநேகமாக நாங்கள் 1968ஐ மறந்துவிட்டோம் எனவே நினைத்தோம் என்கிறார். பிரெஞ்சு மாணவர் கிளர்ச்சியைத் துவங்கி வைத்த, தற்போதைய ஜெர்மன் பச்சைக் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான கோன் பெண்டிட், நாம் வேறுவிதமான ஒரு எதேச்சாதிகாரத்தை அப்போது எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது, இப்போது 1968ஐ மறந்துவிடுங்கள் என்கிறார். அதே 1968ஆம் ஆண்டில் லண்டனில் வியட்நாமிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்ற முயன்ற மாணவர் தலைவரான தாரிக் அலி, அந்தக் கோபம் இப்போது எங்கே போனது எனக் கேள்வியெழுப்புகிறார். எனினும், 1968 படிப்பினைகளில் இருந்து, தவறவிட்ட ஒரு புரட்சிகரத் தருணம் எனும் அளவில் இதனைப் பார்த்து, மீளவும் இவ்வாறான எழுச்சிகள், புரட்சிகர மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என இந்த நிகழ்வுகளை மறுபடி ஆய்வுக்கு உட்படுத்துபவர்களும் உண்டு. இவ்வாறான ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள் அதிகமும் ஸ்டாலினிய எதிர்ப்பு டிராட்ஸ்க்கியவாதிகள் தான். அன்றாட வாழ்வு நடவடிக்கையின் மூலம் மாற்றத்தை வேண்டுகிற சுச்சுவேசனிஸ்ட் இயக்கம் சார்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிம்பங்களின் ஆட்சிக் காலத்தில், நகல்களிலிருந்து நிஜங்களை விலக்கிப் பார்க்கிற தன்மை குறித்த கேள்விகளை பலமாக எழுப்பியபடி 1968 நினைவுகளை மறுபடி மீட்டிப் பார்க்கிறார்கள்.

பிரான்சில் கிளர்ச்சியைத் தலைமை தாங்கிய கோன் பண்டிட், இங்கிலாந்தில் தலைமையேற்ற தாரிக் அலி போன்றவர்கள் தமது அனுபவங்களை மீளவும் எழுதியிருக்கிறார்கள். ஜெர்மனியில் தலைமையேற்ற ருட்ஸ்க்கியன் வாழ்க்கை வரலாறு மறுபடியும் எழுதப்பட்டிருக்கிறது. பிரான்சின் இன்றைய ஜனாதிபதியான ஸார்க்கோஸி பிரெஞ்சுச் சமூகத்தின் பின்னடைவு என்பது 1968இல் தான் துவங்கியது என்கிறார். ‘நல்லதிற்கும் கெட்டதிற்கும், அழகுக்கும் அசிங்கத்துக்கும் வித்தியாசமில்லாமல் அவர்கள் செய்துவிட்டார்கள். துப்புரவாக அந்த மரபைத் துடைத் தெறிவதுதான் எனது நோக்கம்’ என 2007ஆம் ஆண்டில் சூளுரைத்திருக்கிறார் அவர். ஜெர்மனியில் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்கள் 1968 கிளர்ச்சியிலிருந்து துவங்குவதாக அன்றைய மாணவர் இயக்கங்களில் பங்கேற்றவர்கள் இன்று எழுதுகிறார்கள்.

விவாதம் தொடர்ந்து நடக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள், ஸ்டாலினிய அமைப்பு, செக்கோஸ்லாவாக்கியாவில் டூப்செக் துவங்கி வைத்த ‘மனித முகத்துடன் சோசலிசம்’ போன்ற சர்ச்சைகளுக்கும் அப்பால், மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் அதீதங்களுக்கும் அப்பால், 1968 மாணவர்-தொழிலாளர் எழுச்சியானது, பரந்துபட்ட ஜனநாயகத்துக்கான வாய்ப்பை ஐரோப்பாவில் துவங்கி வைத்தது என 1968களின் மரபினர் சொல்கிறார்கள். ‘நியூலெப்ட் ரஜவியூவின்’ ஆசிரியரான ரேபின் பிளாக்பர்ன் சொல்கிற போது, எந்த நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிராக அவர்கள் கலகம் செய்தார்களோ, அதே நுகர்வுக் கலாச்சாரத்தின் அதீதத்தை அவர்கள் திறந்துவிட்டார்கள் எனவும் குறப்பிடுகிறார். நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும், துவங்கிய அவர்கள் கலி போர்னியக் கரையோரம் ஒதுங்கினார்கள் என்கிறார் அவர். அதாவது, ஒன்றைக் கண்டுபிடிக்கக் கிளம்பிய கொலம்பஸ் பிறிதொன்றைக் கண்டுபிடித்தது போல என்கிறார் பிளாக்பெர்ன்.

இத்தாலிய திரைப்பட இயக்குனரான பெர்ட்டுலூசி இவர்களைக் கனவுலக வாசிகள் என்கிறார். இதே வகையிலான கனவலகவாசிகள் எனும் பெயர் சூட்டலை கோதார்த்தின் படத்தில் ஒரு கிளர்ச்சி மாணவிக்குச் சூட்டுகிறார், தத்துவம் படித்த இலக்கியவாதி ஒருவர்.

பாரிஸிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வந்துசேர்கிறார்கள் உறவினர்கள். இடையில் வீதித் தடையரண்கள். வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் தடைபடுகின்றன. எங்கெங்கும் ஊர்வலங்கள். ஒரு செல்வந்தரான மூதாட்டி இறந்துவிடுகிறார். அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடாகிறது. மாணவர் கிளர்ச்சியினால் அனைவரும் வந்து சேரக் காலதாமதமாகிறது. அந்த மூதாட்டியின் மரணத்தின் பின் அந்தமூதாட்டியின் வீட்டை விற்றுவிடுவது என உறவினர்கள் பெரும்பாலுமானோர் முடிவு செய்கிறார்கள். மூதாட்டியின் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட அவரது மகனுக்கு அதில் உடன்பாடில்லை. தான் என்றும் அந்தக் கிராமத்து வீட்டில் தங்கியிருக்க விரும்புகிறான். அவர்களது சொந்தச் சொத்து சார்ந்த பதட்டங்களுடன், அவர்களது வாழக்கை முறைக்குச் சவாலாக இப்போது எழுந்திருக்கிற பாரிஸ் மாணவர்-தொழிலாளர் எழுச்சியும் அவர்களது விவாதத்திற்கான பொருளாக ஆகிறது. கிராமங்கள் தோறும் செங்கொடியுடன் வந்து கொண்டிருக்கும் கிளர்ச்சியாளர்கள் தம்மை அண்மித்துவிட்டார்கள் எனும் பதற்றத்தில் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு மலைகளை நோக்கி ஓடத் துவங்குகிறார்கள். தமது சௌகரியங்கள் இழந்துபடக்கூடும் எனும் அச்சம் அந்தக் குட்டி முதலாளித்துவவாதிகளை ஆட்டிப் படைக்கிறது. அதே வேளை மாணவர்-தொழிலாளர் கிளர்ச்சியானது கட்டவிழ்த்து விட்ட சுதந்திர உணர்வுகளும் அவர்களிடையில் பிரசவிக்கிறது. பாலுறவு சார்ந்த சுதந்திரங்கள் பீறிடுகிறது. அவர்களிலிருந்தே கலகம் மனம் வெடித்தெழுகிறது. பாரிஸ் கிளர்ச்சியும், அது நகர்ப்புற மேட்டுக்குடி சார்ந்த வர்க்கத்தவரிடம் ஏற்படுத்தும் பதற்றமுமாக நகர்கிறது லூயி மெல்லின் ‘மிலு இன் மே/ Miloe in May’ திரைப்படம்.

கோதார்த்தின் 'லா சைனீஸ்’ 1967 ஆம் ஆண்டு வெளியானது. லூயி மெல்லின் ‘மிலு இன் மே’ 1990 ஆம் ஆண்டு வெளியானது. பெர்னார்டோ பெர்ட்டுலூசியின் ‘டிரீமர்ஸ்’ 2007 ஆம் ஆண்டு வெளியானது. கோதார்த்தும் லூயிமெல்லும் நேரடியாக பாரிஸ் மாணவர்-தொழிலாளர் எழுச்சியில் பங்கு பற்றியவர்கள். பெர்னார்டோ பெர்ட்டுலூசி இத்தாலியிலிருந்த படி அந்த நிகழ்வுகளால் ஆதர்சம் பெற்றவர். தினமும் தெருக்களில் வழிந்த கவிதைகளினால் கிளர்ச்சியுற்றவர் அவர். கோதார்த்தின் படம் 1967 களில் அலையடித்த இலட்சியவாதத்தைப் பேசுகிறது. தத்துவ விவாதங்களை மேற்கொள்கிறது. தனிநபர் கொலைகளை விமர்சிக்கிறது. பல்வேறு இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையிலமைந்த முரண்பாடுகளை விவாதிக்கிறது. நடைமுறையில் தோற்றுப் போகிற அல்லது வெளியுலகிலிருந்து பின்வாங்குகிற கனவுலகவாசிகளாகத் தான் கோதார்த்தின் ‘லா சைனீஸ்’ இளைஞர்களும் யுவதிகளும் இருக்கிறார்கள். பெர்ட்டுலூசியின் இளைஞர்களும் யுவதிகளும் கனவுலகில்தான் வாழ்கிறார்கள். வெளியில் நடப்பது அவர்களுக்குச் சம்பந்தமில்லாமல்தான் நடக்கிறது. அவர்களது அறைச்சுவர்களையும் மாவோவின் மேற்கோள்களும் அவரது பிம்பங்களும்தான் நிறைத்திருக்கின்றன. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான இஸபெல்லாவும் தியோவும் சகோதரன் சகோதரி என்ற வரம்புகள் மீறியபடி பாலுறவு விளையாட்டை விளையாடுகிறார்கள். அதில் அமெரிக்க மாணவனான மாத்யூவும் ஈடுபடுகிறான். அவனுக்கு அரசியல் கடப்பாடு என்பது இல்லை.

வன்முறையை மறுக்கிற அவனால் வியட்நாமின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முடியவில்லை. தியோ பெட்ரோல் குண்டு வீசும்போது, இது பயங்கரவாதம் அல்லது பாசிசம் என்கிறான் மாத்யூ. மாத்யூ இறுதிவரையிலும் மாறுவதில்லை. அவனளவில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்கள் இசை, பாலுறவு நுகர்வு, திரைப்படக் கலாச்சாரம் தொடர்பான தேர்வு சார்ந்த மாற்றங்கள் தரும் விழிப்புணர்வு. இஸ பெல்லாவையும் தியோவையும் பொறுத்த அளவில் பாலுறவு போலவே, கிளர்ச்சியில் ஈடுபடுவதும் வன்முறையில் ஈடுபடுவதும் ஒரு வகையிலான விளையாட்டு. தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாத விளையாட்டு.


பெர்ட்டுலூசியைப் பொறுத்தவரை 1968 மாணவர் எழுச்சி பிரக்ஞைபூர்வமான அரசியல் எழுச்சி இல்லை. மாறாக கவிதையும் இசையும் பாலுறவும் திரைப்படமும் ராக் அன்ட் ரோலும் சமவிகிதத்தில் இயைந்தபடி முயங்கிய ஒரு கனவு அது. அதில் ஈடுபட்ட மாணவர்கள் கனவுலகவாசிகள்.

அமெரிக்காவிலும் சமவேளையில் மாணவர் கிளர்ச்சி நடந்தது. கொஞ்சம் முன்பாக சிவில் உரிமை இயக்கத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார். கறுஞ் சிறுத்தைகள் அரசியல் உக்கிரம் பெற்றது. மெக்ஸிக் கோவிலும் மாணவர் எழுச்சி தோன்றியது. நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். மெக்சிக்கோ ஒலிம்பிக்கில் கறுஞ்சிறுத்தை வணக்கத்தை கறுப்பு ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மேற்கொண்டதற்காக, தேசிய அவமானம் என அவர்களை ஒலிம்பிக் கமிட்டி வெளியேற்றியது. கறுஞ்சிறுத்தைகளோ அல்லது இத்தாலியின் ரெட் பிரி கேட் சார்ந்தவர்களோ அல்லது ஜெர்மனியின் பாதர் மெயின் காம்ப் இயக்கம் சாந்தவர்களோ அல்லது கொல்லபட்ட மூன்று பாரிஸ் மாணவர்களோ வெறுமனே பாலுறவு சாகசம் மேற்கொண்டவர்கள் அல்லது கனவுலகவாசிகள் மட்டுமல்லர். தலைமைப் பீடத்தைத் தகர்த்தெறியுங்கள் என்பதை அவர்கள் பிரெஞ்சு அதிகாரத்தின் தலைமைப் பீடத்தைத் தகர்த்தெறிவதாகவே கருதினார்கள்.

மரபுரீதியான ஸ்டாலினிய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சவால்விட்ட டிராட்ஸ்கியர்கள் உணர்வு பூர்வமாகவே மாணவர்-தொழிலாளர் அமைப்பைக் கட்டினார்கள். பல்கலைக் கழகத்தை மாணவர்-தொழிலாளர்கள் இடையிலான விவாத மையமாக மாற்றினார்கள். விளையாட்டு அரங்கங்களை அவர்கள் இரவும் பகலும் திறந்திருக்கும் விவாதமன்றங்களாக மாற்றினார்கள். அவர்கள் உத்வேகத்துடன் இலட்சியத்தை முன் வைத்தவர்களாகவும் இருந்தார்கள். முதலாளித்துவ வாழ்க்கைப் போக்கைக் கலைத்துப் போட்டவர்களாக, அவர்களுக்குக் கிலியூட்டியவர்களாக இருந்தார்கள். கோதார்த்தும் லூயிமெல்லும் இவ்வாறுதான் பெர்ட்டுலூசியிடமிருந்து மாறுபடுகிறார்கள். ஒருவகையில் கோதார்த்தும் லூயிமெல்லும் துவங்கிய கிளர்ச்சியை பெர்ட்டுலூசி நுகர்வுக் கலாச்சாரக் கனவுலகவாசிகளின் வாழ்வு என்றே முடித்து வைக்கிறார்.

1968 மாணவர் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் டயரிகள் தற்போது நிறைய வெளியாகின்றன. விவரணப் படங்கள் தற்போது நிறைய வெளியாகியிருக்கின்றன. ஜில்பர்ட் அடேய்ரின் ‘கனவுலக வாசிகள்’ நாவல் வெளியாகவிருக்கிறது. ‘புரட்சியின் குழந்தைகள்’ என 1968 இல் பிறந்தவர்களின் சிறுகதைகள் தொகுப்பாக வெளியாகியிருக்கின்றன. கவிதைகளாகப் பெருக்கெடுத்த 1968 மே மாதத்தின் கோசங்களும் சுவர் எழுத்துகளும் ஓவியங்களும் தற்போது பிரசுரம் காண்கின்றன. கலைஞர்களை ஆகர்சித்த மிகப் பெரும் வரலாற்று நிகழ்வாக 1968 மாணவர்-தொழிலாளர் எழுச்சி இருக்கிறது. 1968 காலகட்டத்தான் அதிகாரமும் அமைப்பும் குறித்த மிசேல் பூக்கோவின் ஆழமான ஆய்வுகளுக்கான சமூகப் பின்னணியாக அமைகிறது இந்த நாட்கள்.

இலண்டன் குரோஸ்வனர் சதுக்கத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கைப் பற்றுவதற்காக இலண்டன் மாணவர்கள் முனைகிறார்கள். பிரபல பாடகரான மைக் ஜாக்கர் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தின் பின் அவர் புனைந்த பாடல் ‘தெருச்சமர்புரியும் மனிதன்’. தாரிக் அலி ஆசிரியாகவிருந்து மாணவர்கள் அன்று வெளியிட்ட ‘தி பிளாக் டுவார்ப்’ முதல் இதழில் இந்தப் பாடலை தாரிக் அலி மைக் ஜாக்கரிடமிருந்து பெற்று வெளியிடுகிறார். இன்றளவிலும் கலக இசையின் நிரந்தர வரிகளாக இருக்கிறது மைக் ஜாக்கரின் பாடல் வரிகள் :
எங்கெங்கும் அணிவகுப்பின் ஒலியை நான் கேட்கிறேன்.
காலடிகளின் சப்தம் இளைஞனே. சொல் இளைஞனே
ஒரு ஏழைப் பையன் என்னதான் செய்ய இயலும்?
கோடைக்காலம் வந்துவிட்டது தெருச்சமருக்கு இதுதான் காலம்
சொல், ஒரு ஏழைப் பையன் என்னதான் செய்ய முடியும்?
ஒரு ராக் அன்ட்ரோல் குழுவில் பாடுவது தவிரவும்
இந்தத் தூங்கும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில்
தெருச் சமர் புரிபவனுக்கு இங்கு இடமில்லை

ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு

அரண்மனைப் புரட்சிக்கு இது சரியான காலம் என நினைக்கிறாயா?
நான் வாழுமிடத்தில் விளையாட வேண்டிய ஆட்டம் சமரசத்தீர்வு.
அப்புறம் ஒரு ஏழைப் பையன் என்னதான் செய்ய முடியும்
ஒரு ராக் அண்ட் ரோல் குழுவில் பாட்டுப்பாடுவது தவிரவும்?
தூங்கி வழியும் இந்த லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில்
தெருச் சமர் புரிபவனுக்கு இங்கு இடமில்லை

ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு

ஏய், எனது பெயர் கலகம்
நான் வீறிட்டுக் கத்துவேன்
நான் மன்னனைக் கொல்வேன்
அவனது எல்லா ஏவலாட்களின் மீதும் பாய்வேன்
நான் ஒரு ஏழைப் பையன், என்னதான் செய்ய முடியும்?
ராக் அண்ட் ரோல் குழுவில் பாடிக் கொண்டு
இந்தத் தூங்கி வழியும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில்
அவனுக்கென்று இடமில்லை
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு

ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
ஒரு தெருச் சமர்புரியும் மனிதனுக்கு
தெருச் சமர் புரியும் ஒரு மனிதனுக்கு

பாரிஸ் மாணவர்-தொழிலாளர் எழுச்சியின் போது பீறிட்ட சுவர் ஓவியங்கள், போஸ்டர் கோசங்கள் மானுட சுதந்திரத்திற்கான அறைகூவலாக இன்றளவிலும் இருந்துகொண்டிருக்கிறது. கவித்துவமும் தத்துவமும் முயங்கும் இந்த வரிகளை இயற்றிய மனிதர்கள் அடையாள மற்றவர்கள். தொழிலாளிகள் -மாணவர்கள்-அனார்சிஸ்ட்டுகள். அந்த நாட்களில் ஆர்ப்பாட்டங்களில் கோசங்களாக முழங்கப்பட்டது இந்த வரிகள். இந்தக் கோசங்களுடன் கழிந்த அந்த நாட்களை, ‘தெருக்களைக் கவிதைகள் ஆட்சி செய்த நாட்கள்’ என்று குறிப்பிடுகிறார் ஆன்ட்ரு பீன்பர்க். அந்தத் தெரு முழக்கங்கள் சில பின்வருகின்றன :

தடுக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

சுதந்திரம் என்பது ஒன்றைத் தடைசெய்வதில் துவங்குகிறது :
பிறரது சுதந்திரத்தில் தலையிடுவதைத் தடைசெய்தல்.

தோழனே ஓடு, பழைய உலகம் உன் பின்னால் வருகிறது.

பிறவற்றுக்கு முன்பாக புரட்சி 
மனிதனிடம்தான் தோன்றுகிறது.

சுவருக்குக் காதுகள் இருக்கின்றன.
எனது காதுகளும் சுவர்களைக் கொண்டிருக்கின்றன.

செயல் பிரக்ஞையைக் கொண்டிருக்கிறது.

யதார்த்தத்தை வேட்கையுறுவது நன்று.
ஒருவரது வேட்கையை யதார்த்தமாக்குவது அதனினும் நன்று.

நாளைய சந்தோசத்தின் சிந்தனை
எனது இன்றைய துக்கத்தை சாந்தப்படுத்த முடியாது.
புரட்சிகரமாயில்லாத ஒரு வாரக் கடைசியானது
ஒரு மாதக் கால நிரந்தரப் புரட்சியை விடவும் ரத்தக்களறியானது.

தெருக்களின் பாவுகற்களின் கீழ் கடற்கரை.

நாங்கள் அனைவரும் ஜெர்மானிய யூதர்கள்.

நான் எவருக்கும் சேவகன் இல்லை.
மக்கள் தமக்குத் தாமே சேவை செய்து கொள்வர்.

தடையரண்கள் தெருக்களை மறிக்கும்.
ஆனால், பாதையைத் திறக்கும்.

கலை மரணித்தது.
நமது அன்றாட வாழ்வை விடுதலை செய்வோம்.
வாழ்க்கை வேறெங்கோ இருக்கிறது.

இன்பங்களின் மீது சுமத்தப்படும் அமுக்கங்கள்
அமுக்கம் இல்லாத வாழ்வின் 
சந்தோசங்களைக் கிளர்த்துகிறது.

நான் எந்த அளவு அதிகமாகக் காதலில் ஈடுபடுகிறனோ
அதே அளவில் நான்
அதிகமாகப் புரட்சியில் ஈடுபடுவேன்;
நான் எந்த அதிக அளவு புரட்சியில் ஈடுபடுகிறேனோ
அதே அளவில் அதிகமாக நான்
காதலில் ஈடுபட விரும்புவேன்.

அனைத்து அதிகாரமும் கற்பனைகளுக்கே!

1968ஆம் ஆண்டின் வசந்த காலம். பாரிஸ் சினிமாதெகேவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான் மாத்யு. சினிமாதெகேவின் முன்னால் மிகப் பெரும் கூட்டம். சினிமாதெகே மூடப்பட்டிருக்கிறது. தொலைவில் கவசங்களுடன் கையில் குண்டாந்தடிகளுடன் கலவரப் போலீஸ்காரர்கள். சினிமாதெகேவின் இயக்குனரான ஹென்றி லாங்லாய்ஸ்ஸைப் பதவியிலிருந்து அகற்றுவதை எதிர்த்து ழான் லுக் Yamuna Rajendran Image5கோதார்த்தின் தலைமையில், கலாச்சார அமைச்சர் ஆந்த்ரே மால்ராக்ஸை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கண்டன அறிக்கையை கோதார்த் எழுதுகிறார். லாங்க்ளாய்ஸ் அன்றைய சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். அவர் சகலவிதமான திரைப் படங்களையும் திரையிடுகிறார் எனக் காரணம் காட்டி, திரைப்படத்தின் தரத்தை அவர் தாழ்த்துவதாக அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். பிற்போக்கான கலாச்சார மதிப்பீடுகள் எங்கும் சுமத்தப்பட்ட நாட்கள் அவை. 1968ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம். அன்று துவங்கிய அந்த எழுச்சியில் ஈடுபட்ட கலைஞர்கள்தான், பிற்பாடு கேன் திரைப்படவிழாவை நடக்கவிடாமல் செய்த கலகக்காரக் கலைஞர்களாக இருந்தார்கள். பெர்ட்டு லூசியின் திரைப்படம், திரைப்பட ரசிகர்களின் கலகத்தில் துவங்கி, மாணவர் தொழிலாளர் ஒற்றுமை      ஊர்வலத்தில் அவர்கள் சங்கமிப்பதுடன் முடிகிறது.

கோதார்த்தினது படத்தின் இறுதி ஒரு வகை இருண்மையுடன் முடிகிறது. பல்கலைக் கழக வளாகத்தை மூட வேண்டும் என்பதற்காக ஒரு கொலையில் ஈடுபட ஒரு மாணவி முடிவு செய்கிறாள். பல்கலைக் கழகக் கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்க வருகைதரும் சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தரைச் சுட்டுக் கொல்கிறாள் அவள். முன்பாக, அப்பாவியான ஒருவரையும் அவள் கொல்கிறாள். 23 எண் அறைக்கு மாறாக 32ஆம் எண் அறையிலுள்ள ஒருவரை அவள் கொலை செய்கிறாள். பிற்பாடாக வெளியுலகிலிருந்தும் தோழர்களிடமிருந்தும் விலகி அவள் பதுங்கி வாழ்கிறாள். திரைப்படம் மூன்று அங்கங்களில் ஆன ஒரு திரைப்படம் எடுக்கும் நிகழ்வுப் போக்காக நிகழ்கிறது. அரசியல் விவாதங்கள் நடக்கிறது. அது ஒரு வகையில் நிகழ்வு. அதே வகையில் அது நிகழ்த்திக் காட்டப்படும் நாடகம். நாடகத்தில் வாழ்கிற பாத்திரங்கள் போலத்தான் கலாச்சாரப் புரட்சியை பிரான்சில் நாடகமாக நிகழ்த்திக் காட்டுபவர்களாகத்தான் மாணவ மாணவிகள் சித்தரிப்பு பெறுகிறார்கள். பிற்பாடு நையாண்டியும் தீவிரமும் கொண்ட இந்தப் படத்தின் அரசியலை கோதார்த் மறுதலித்து, மிகவும் தீவிரமான மாவோயிஸ்ட்டாகப் பரிமாணம் பெறுகிறார். இன்று நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. அன்றிருந்த அதே மாவோயிஸ்ட் கோதார்த்தாக இன்றைய கோதார்த் இல்லை. செங்காவலர்களின் அத்துமீறல்கள் ‘லா சைனீஸ்’ படத்திலேயே பேசப்படுகிறது. பிற்பாடு அது ஒரு உலக அரசியல் நிதர்சனமாகவும் ஆகியது.

கலைஞர்கள் மிகவும் ஆகர்சித்த இந்த உலக நிகழ்வு, நிறவாதம், பாலுறவுச் சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, மனித முகத்துடன் சோசலிசம், தொழிலாளர்-மாணவர் ஒற்றுமை எனப் பல ஆக்கக் கனவுகளைத் தந்து சென்றிருக்கிறது. பெண்ணிலைவாதம் அதனது விளைபொருள். ஆனால், சமவேளையில் மட்டற்ற நுகர்வு எனும் கனவையும் அதுதான் கட்டற்ற வகையில் திறந்துவிட்டது என்பதனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், உலகெங்கும் கோடானு கோடி மனிதர்களில், களிவெறியையும் கனவையும் விதைத்தது அந்த 1968 மே நாட்கள்தான் என்பதை எவர்தான் மறுத்துச்சொல்ல முடியும்?

இன்றைய நிலையில் 1968 மே மாத நிகழ்வுகளை எந்தக் காரணங்களுக்காக உலகெங்கிலும் மீளப் பார்க்கிறார்கள்? மெக்ஸிக்கோவில் அன்றைய நாட்களில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் நினைவாக, ஏன் இன்று இரண்டு இலட்சம் பேர்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்ட ஊர்வலம் போகிறார்கள்? ஏன் திரும்பத் திரும்பவும் மே 1968 நினைவுகள் ஒவ்வொரு ஆண்டும் கிளர்ந்து எழுந்து வந்துகொண்டிருக்கிறது? கலைஞர்களும் நாவலாசிரியர்களும் தத்துவவாதிகளும் ஏன் அது குறித்த பதிவுகளைச் செய்ய வேண்டியது காலத்தின் தேவை எனக் கருதுகிறார்கள்?


1956 முதல் 1977 வரையிலான ஐரோப்பிய மற்றும் உலக மாணவர் எழுச்சிகளைக் குறித்து விரிவான ஆய்வு செய்த அமெரிக்கரான டோம்ஹெய்டன் இதற்கான பதில்களை மூன்று விதமாக முன்வைக்கிறார் : முதலாமவர்கள், எதிர் காலச் சமூக இயக்கங்களை உருவாக்க முனைபவர்கள். எழுபதுகளின் நினைவுகளை மீளக் கொண்டுவரவும், அதனை மீளக் கட்டமைக்கவும் முயல்பவர்கள். இரண்டாமவர்கள், தமது அதீதக் கருத்தியல்களின் பெயரில் உலகைப் பாதுகாப்பானதாக உருவாக்க அறுபதுகளின் நினைவுகளை அதனது மரபுகளை முற்றிலும் புதைத்துவிட நினைப்பவர்கள். மூன்றாமவர்கள், அறுபதுகளின் கதைகளை வைத்துக்கொண்டு நிறுவனங்கள் எப்போதும் தம்மை மாற்றிக்கொள்ளும் எனவும், அதனோடு அவை என்றும் உயிர் வாழும் எனவும் காட்ட நினைப்பவர்கள்.

இரண்டாமவர்கள் இன்றைய பிரெஞ்சு ஜனாதிபதியான ஸார்க்கோஸி போன்றவர்கள். இன்றைய பிரான்சின் அழிவுக்கு 1968 அனுபவங்கள்தான் காரணம் எனக் காண்கிறார் இவர். இவர்கள் முதலாளித்துவ நிறுவனங்களை இருக்கிறவாறு சீர்திருத்தத்தின் மூலம் காக்க நினைப்பவர்கள். இவர்கள் சதா கட்டுப்பாடுகளை எவ்வாறு நுட்பமாகச் சுமத்துவது என்பதை நேரடியில்லாத வகையில் யோசித்துக் கொண்டிருக்கிறவர்கள். அமெரிக்க வகை நிர்வாகிகள் இவர்கள்.

மூன்றாமவர்கள், பாரிஸ் கம்யூன், அக்டோபர் புரட்சி, கலாச்சாரப் புரட்சி அதனது படிப்பினைகள், ஸ்டாலினிய எதேச்சாதிகாரம், மற்றும் மனித முகத்துடன் சோசலிசம் மற்றும் அதனது படிப்பினைகள், பிற்பாடாக 1968 மே நாட்களின் படிப்பினைகள், மறுபடி அதிலிருந்தான முன்னோக்கிய திட்டங்கள் எனச் சிந்திப்பவர்கள். இவர்கள் சதா 1968 நினைவுகளை, வரலாறு முழுக்கவும் நினைவுகூர்ந்தபடியே இருப்பார்கள். இவர்கள்தான் இன்றும், நாற்பதாண்டுகளின் பின்னும், அந்தப் புரட்சிகர நாட்களைப் பசுமையாக நினைவுகூர்ந்தபடி இருப்பவர்கள்.

ஆதாரங்கள்

1.Godard and Gorin's left politics, 1967-1972 by Julia Lesage from Jump Cut, no.28 April 1983
2.May 1968 across the decades: Matt Parry: International socialism:spring 2008:United Kingdom
3.1968 Revisited Storming Heaven By Tariq Ali: Counter Punch : April 30 2008: United States
4. May 68: France's politics of memory:Patrice de Beer: Open Democracy:28 April 2008 : U.K
5. The 1968 Debate in Germany : Paul Hockenos: Open democracy:2 May 2008: United Kingdom
6. The Future of 1968's "Restless Youth" by Town Hayden in 1968 In Europe: A History of Protest and Activism, 1956-1977: Palgrave Macmillan London, March 2008