தனிமைச் சிறை - A Twelve year night 

தொகுப்பு: தினேஷ்

2018-ல் வெளியான A twelve year night, உருகுவே நாட்டை மையப்படுத்தி வெளியான திரைப்படம், 75 வது வெனிஸ் திரைப்பட விழாவில் அதிகாரப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டும், திரையிடப்பட்ட படமும் கூட, சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான விருது, வெனிஸ் மட்டுமல்லாது அகாதமி விருது, காய்ரோ சர்வதேச திரைப்பட விருது உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று, அங்கீகாரமிக்க விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் அல்வேரோ ப்ரெச்சரும் (Álvaro Brechner) இத்திரைப்படத்திற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.

முதலில் இப்படத்தின் மையக்கருத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தத் திரைப்படம் சிறைவாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. சிறை என்பது தவறு செய்யும் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது. செய்த தவறுகளுக்காக, அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் இடமாக சிறைச்சாலைகள் இருக்கின்றன என்றுதான் வரலாற்றில் காரணம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களும் இதுதான் உண்மையென நினைக்கிறார்கள். ஆனால் சிறை என்பது பெரும்பான்மையாக தனி மனித வஞ்சத்தையும், பகைமையையும், தீர்த்துக் கொள்ளக் கூடிய இடமாகவும் இருக்கிறதென்பதை மறுக்கமுடியாது. தன் சொந்த காழ்ப்புணர்ச்சிகளை சிறையின் பெயரால் தீர்த்துக்கொள்கின்றனர். அதில் பெரும்பான்மையாக அறத்தின் பால் நிற்கக் கூடிய போராளிகளும், செயற்பாட்டாளர்களும்தான் இந்தச் சிறைகளால் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.
அத்தகைய போராளிகளுக்கான கொள்கையும், சித்தாந்தமும், இதுபோன்ற சிறை தண்டனையால் நீர்த்துப் போகச் செய்யும் அளவிற்கு அவர்களை தனிமைப்படுத்தி, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இப்படி, நீதியின் பால் நின்று போராடக் கூடியவர்களை சர்வாதிகாரத்தின் பிடியில் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியே Twelve Year Night பேசுகிறது. எப்படியிருந்தாலும், போராளிகளும், கலைஞர்களும் இதுபோன்ற அடக்குமுறைகளால் சோர்வுறுவதில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் சிறைக்கைதிகள் எப்படித் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்கிறார்கள், அதற்காக அவர்கள் தேடிக் கண்டடையும் வழிமுறைகள் என்னென்ன? என்பதெல்லாம் இப்படத்தில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விடுதலை என்பது நிச்சயமாக உண்டு. எனினும் இந்தப் போராட்ட கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை, அந்நாட்டு அரசாங்கமோ அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோ, எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில்கொள்தல் வேண்டும். மக்களுக்காகப் போராடியவர்களில் சிலர் மக்கள் அதிகாரத்திற்கும் வருகின்றனர்.  முக்கியமாக இந்தப் படத்தில், சிறையில் தண்டனையை அனுபவிக்கும் அம்மூவரில் ஒருவர், பின் அந்த நாட்டை ஆளக்கூடிய பதவிக்கும் வருகிறார்.
இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ள அரசியலும், அதற்குப் பின்னாண காரணிகள் பற்றியும், மேலும் இது ஒரு உண்மைச் சம்பவத்திலிருந்து உருவாகிய கதை என்பதால் அதில் இழையோடியிருக்கிற உண்மைத் தன்மைகள் பற்றியும், காட்சி வடிவில் அவை எப்படி உருவாகி வந்திருக்கின்றன என்பதையும் கூட தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் உரையாடலாம்.

இப்படத்தைப் பொறுத்தவரை என்னை வெகுவாக ஈர்த்தது அதன் தலைப்பு. போராளிகள் அந்தச் சிறையில் வெளிச்சத்தையே அதிகம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு பகல் என்பதே இல்லை. சுற்றிலும் இருட்டு. முழுதும் இரவுதான். பன்னிரண்டு வருடமாக அவர்களுக்கு இருட்டு மட்டுமே! அதை உணர்த்தும் படத்தலைப்பு ஒரு கவிதை போல உள்ளது. படம் பார்ப்பதற்கு முன்பே, அப்படம் பற்றிய எதிர்பார்ப்பையும், அப்படத்தின் கதைசொல்லலுக்கு பார்வையாளர்களைத் தயார்ப்படுத்தும் விதமாகவும் தலைப்பு அமைகிறது. இன்னும் சொல்லப்போனால், முழுமையான படமும் பார்த்துமுடித்தபின்னால், நம் மனதில் ஏற்படுகிற உணர்வின் கண்ணாடிபோல அந்தத் தலைப்பு பிரதிபலிக்கிறது.


நீங்கள் சொன்னது போலவே Twelve Year Night -ல் போராளிக்குழுக்களைச் சார்ந்தவர்களை, கைது செய்து, அவர்களின் கண்களைக் கட்டுகிறார்கள், கட்டப்பட்ட கண்களோடுதான், அவர்கள் ஒவ்வொரு சிறைச்சாலையாக 12 வருடங்களாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.அப்படி அந்தக் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே, அடுத்தடுத்த வருடங்கள், வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதுதான் இந்த A twelve year nightபடத்தின் சாராம்சம்.

 ஒரு காட்சியில் கைதிகளில் ஒருவர் “எங்களுக்கு சூரியன் தெரிவதில்லை, எங்களுக்கு அதனுடைய வெப்பம் தெரியாது, நட்சத்திரங்களை நாங்கள் பார்த்ததில்லை!” என்கிறார். பன்னிரண்டு வருடங்களாக அவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் உள்ளது.

இந்தத் தொடரில், பாராகுவேவைப் (உருகுவேவைப்) பற்றி இரண்டாவது முறையாக பேசுகிறோம்.

ஏற்கனவே,கோஸ்டா காவ்ரஸ் அவர்களுடைய படமும் இதே பராகுவே நாட்டைப் பற்றியதும், இதே துபமாரோஸ் (Tupamaros) கொரில்லா இயக்கத்தைப் பற்றிய படமாகவும்தான் இருந்தது.

கோஸ்டா காவ்ரஸின் ஸ்டேட் ஆஃப் சீஜ் (state of siege) படத்தை எடுத்துக்கொண்டால், 1972 ,1973 ஆம் வருடங்களில் எப்படி அமெரிக்கவினுடைய, யு.எஸ்.எய்ட் (U.S. aid - United States Agency for International Development)ஆட்களால் கடத்தப்பட்டவர்கள், எவ்வாறு தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும், அதன் பிறகு அமைப்பு சார்ந்தவர்கள் எப்படி கைது செய்யப்படுகிறார்கள், அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதோடுதான் அத்திரைப்படம் முடியும்.


1973ல் துவங்கி 1985 வரைதான் Twelve Year Night படத்தின் காலகட்டம். இந்தப் பன்னிரண்டு வருடங்களுக்குள் நடப்பதுதான் இதன் கதைக்களம்.
ஒரு வகையில் பார்த்தோமானால் கோஸ்டா காவ்ரஸினுடைய படத்தின் தொடர்ச்சியாகக்கூட இதைக் கருதலாம். இது உண்மை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் வரக்கூடிய பிரதான கதாபாத்திரங்கள் மூவரில், ஒருவர் கால்பந்தாட்ட வீரர் (Eleuterio Fernández Huidobro / el nato), இன்னொருவர் கவிஞர் (Mauricio Rosencof), மூன்றாமவர் அரசியல் ஆர்வலர் (Jose Mujica), அவர் 2010 யில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகிறார்.

பராகுவேவின் நாற்பதாவது ஜனாதிபதியாக 2010லிருந்து 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த ஜோஸ் முஜிகா (Jose Mujica)தான் அவர்.

ஆம். இந்த மூன்று பேரும்தான் கைது செய்யப்படுகிறார்கள், இவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்பு, அவர்களது அனுபவங்கள் என்னவாக இருக்கின்றன என்பதுதான் இக்கதையின் பின்னணி. அதேபோல இவர்கள் எந்தச் சூழலில் கைது செய்யப்பட்டார்கள்? அந்த என்கவுண்டர் என்னமாதிரியாக நடத்தப்பட்டது? போன்ற விஷயங்களெல்லாம் கூட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் போலத்தான் காட்டப்படுகின்றன.

அந்த சிறையமைப்பு, அந்தச் சிறையமைப்பிற்குள் சிக்கியிருக்கிற இந்த மூவரும் என்னமாதிரியான மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தினுடைய ஒருவரி கதை. அந்தச் சிறை இவர்களைச் சிந்திக்க விடாத ஜீவிகளாக விலங்குகளைப் போன்று நடத்துகிறது. அதிலிருந்து தங்களை எப்படித் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் மூவரின் காதாபாத்திரத்தை முன்வைத்துச் சொல்கிறது.

என்கவுண்டர் தொடர்பான உரையாடல்கள் படத்தில் வந்துள்ளன. அந்தப் போராளிகள் ஒரு வீட்டில் ஒளிந்துகொள்கிறார்கள், அங்கே இராணுவம் வருகிறது, இராணுவம் வரும்போது யாரோ ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்ப்பார். அவர்களைச் சுடுவார்கள். இராணுவம் அவர்களைக் கொல்லும், அப்படியான ஈவிரக்கமற்ற என்கவுண்டர் காட்சிதான் இப்படத்தில் உள்ளது.

அதேபோல அவர்கள் கைது செய்யப்படுவது, கண்களை கட்டிக் கூட்டிச் செல்வது, வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது, இந்தப் பயணங்கள் எல்லாம் பெரும்பாலான படங்களில் வருவதுதான். ஆனால் இந்தப் படத்தில் உள்ள சீரிய அணுகுமுறை, சிறையில் சித்திரவதையாளனும், சித்திரவதைக்கு உள்ளாகுபவனுக்குமான உறவு என்னவென்பதை விவரிக்கிறது. இது மற்ற படங்களில் காணமுடியாத தரிசனம்.

போராளிகள் இருக்கும் சிறையமைப்பைப் பாருங்கள், அந்தக் கட்டிடங்களைப் பாருங்கள், மிகக் குறுகலான அறை, கற்று புகாத அறை, இருட்டு அறைகள், ஓரிடத்தில் அவர்களால் எழுந்திருக்கக் கூட முடியாது.


ஆம், நிமிர்ந்தால் தலைகூட இடிக்கும் விதமாக இருக்கும்.

சுவரெல்லாம் கைவைத்தும், முகம் வைத்தும் நிமிர்ந்து நிற்க முடியாத அளவு மிகவும் கோரமாக இருக்கும். இன்னொரு அறையைப் பார்த்தோமானால், இரு கைகளையும் நீட்டினால் இரு பக்க சுவர்களையும் தொட்டுவிட முடியும், அந்தளவிற்குத்தான் அறையின் சுற்றளவு இருக்கும். ஒருவர் இரண்டு கைகளையும் நீட்டினால் அந்த இரண்டு கைகளுக்குள்தான் அந்த குட்டி அறை.

இன்னொரு சிறையே ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அமைப்பு, அதற்குள் காவலாளி ஒரு கட்டம் வரைகிறான்.

ஒரு வெள்ளை நிற கட்டம் வரைந்து, அதற்குள்தான் நீ இருக்க வேண்டும், அதைத்தாண்டி வெளியே வரக்கூடாது என்கிறான்..

இப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள். இன்னொன்று சிறைக்குள்ளிருக்கும் மெளனம். நாம் யாரிடமும் பேச முடியாது. யாரையும் பார்த்துக்கொள்ள முடியாது. நம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. இந்த மெளனம் சிறையில் சப்தங்களை கொடுமையுள்ளதாக மாற்றும், நாராசமாக மாற்றும், சித்திரவதைத் தன்மையுள்ளதாக மாற்றும்.


ஆனால், அதே நேரம் ஒரு பறவையுடைய சப்தமோ, சிறகு மேலிருந்து கீழே வரும் சப்தமோ ஆசுவாசத்தைக் கொடுக்கும். மிக இயல்பாக தன்னைச்சுற்றியிருக்கிற ஜீவராசிகளான எலி, எறும்பு போன்றவை எப்படி ஹ்யூமனைஸ் செய்யப்படுகிறது என்பது பற்றியும் காட்டியிருக்கிறார்கள். யாருமற்ற தனிமையில், பறவைகளின் சப்தம், எலி, எறும்பு போன்ற ஜீவராசிகள் அவனுக்குத் தோழமையாக இருக்கின்றன. இந்தப் பகுதிதான், இப்படத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சப்தம் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது, வெளிச்சம் நிராகரிக்கப்படுகிறது, வெப்பம் நிராகரிக்கப்படுகிறது, எல்லாம் நிராகரிக்கப்பட்டாலும் கூட அந்த நிராகரிப்புக்குள்ளேயேகூட சின்னச் சின்ன விஷயங்களிலிருந்தும் அவர்கள் தங்களுக்கான மாற்று வழியைக் கண்டுகொள்கிறார்கள். கையில் எறும்பு ஊர்வதையும், எலி நகர்ந்து போவதையும் அப்படியே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்படித் தனிமையிலிருப்பவர்களின் உணர்வுகளை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்னொன்று எல்லாவிதமான உரையாடலும் முடிந்து விட்டாலும் கூட, எல்லா விதமான தொடர்பாடலும் தாழிடப்பட்டாலும்கூட, அந்த அடைக்கப்பட்ட சூழலிலும் கூட புதியவிதமான சம்பாஷணைகளை, தொடர்பாடலுக்கான குறியீட்டை அந்தப் போராளிகள் கண்டுபிடிக்கிறார்கள்.

சமிக்ஞை ஒலி. சுவரில் தட்டுவதன் மூலம் எழுத்துக்களை மனத்திரையில் கொண்டுவருகின்றனர். இப்படிச் சுவரில் தட்டியே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். இதனால் கைகளெல்லாம் ரணமாகிப்போகின்றன. இருப்பினும் அவர்கள் பேசுகிறார்கள்.

எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட பின்னரும் ஒரு கம்யூனிகேஷனை அவர்கள் கண்டுபிக்கிறார்கள். ஆகவே மனிதர்கள் எவ்வளவுதான் அடக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும், வெளியுலக வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டாலும், இயற்கையிலிருந்து நிராகரிக்கப்பட்டாலும், தங்களுடைய சூழலிலேயே வாழ்வதற்கான ஆவலும், வேட்கையும் கொண்டு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே இடத்தில் புதிதாக ஒரு உலகத்தை அவர்களாக அமைத்துக்கொள்வார்கள். அதிலிருந்தே இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.
சிறை அமைப்பினுடைய கொடூரம், அதற்குள்ளாக எல்லாம் நிராகரிக்கப்பட்டும் கூட அந்த மனிதர்கள் இருளிலிருந்தும் ஒளியை உருவாக்கி வெளிவருகிறார்கள் என்ற அம்சம் இந்தப் படத்தில் என்னை மிகவும் பாதித்தது.
இந்தப் படம் பார்க்கிறபொழுது, உங்களுக்கு உருகுவே அரசியல் பற்றித் தெரியவேண்டியதில்லை, அதே போன்று வரலாற்றில் அங்கு என்னென்ன நடந்தது என்பது பற்றியெல்லாம் தெரியவேண்டியதே இல்லை. இருப்பினும் நாம் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். 


இந்தப் படம் எப்படி உலகளாவிய தன்மை கொண்டிருக்கிறது?

மூன்று கைதிகள் அதில் ஒருவர் கவிஞர், இரண்டாமவர் கால்பந்தாட்ட வீரர், மூன்றாமவர் அம்மா மீது பாசம் கொண்டவர், அரசியல் ஆர்வலர். எல்லா அரசியலையும் விட்டு விடுங்கள்,வேறு விதமான குற்றங்கள் சுமத்தப்பட்டு இங்கே வந்தவர்கள் கூட, அனைத்துத் தடைகளையும் மீறி எப்படி மானுடத் தன்மையுடன் இருப்பார்கள் என்பதையும், இந்தச் சிறையமைப்பு எவ்வளவு கொடூரமாக, அவர்களை விலங்குகளாக நடத்துகிறது, அவர்கள் அந்த விலங்குத் தன்மையிருந்து விலகி எப்படி மனிதர்களாக நிற்கிறார்கள் என்பதை இப்படம் சொல்கிறது. இதுதான் இந்தக் கதைக்குள்ளிருக்கிற உலகளாவிய தன்மை. உலகின் எந்த மூலையில் இருக்கிற பார்வையாளனாலும் இந்தக் கதையோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்.

ஆகவே, படத்தோடு ஒன்றிணைய, உருகுவே அரசியல் தெரியாவிட்டாலும், துபமாரோஸ் கொரில்லாக்கள் பற்றி தெரியாவிட்டாலும், உலகில் உள்ள கைதிகள் சிறையமைப்பு சார்ந்து, சிந்திக்கிற அல்லது விமர்சன உணர்வு கொண்ட எல்லோரையும் பாதிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.

நிச்சயமாக, இந்தப் படம் முழுமையாக சிறைச்சாலையிலேயே நடக்கிறது, சிறைச்சாலைகள், அது அமைக்கப்பட்ட விதத்திற்குப் பின்னாலுள்ள அரசியலையும் பார்க்க வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் அதிகமான சிறையும், தண்டனைக் கொட்டடிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தினுடைய இயக்குனர் என்ன சொல்கிறாரென்றால், உண்மையிலேயே அந்த மூவரும் பாதிக்கப்பட்ட சிறைக்குச் சென்றுதான் காட்சிகளைப் படமாக்கினோம் என்கிறார். இதுபோன்ற எத்தனையோ சிறைகள் இன்னும் வெளித்தெரியாமல் இருக்கின்றன. இந்த சிறைகளுக்குப் பின்னுள்ள வரலாறையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.


பெபேவை (ஜோஸ் முஜிகா) மட்டும் கீழே இருக்கக்கூடிய ஒரு ரவுண்ட் ஸ்பேசில் சிறைபிடித்திருப்பார்கள், அவருக்கு ஏற்கனவே மூலையில் பெரிஸ்கோப் போன்ற ஒரு விஷயத்தை வைத்து, அவர் அமைதியிழந்து சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள்.
மூவரில் மற்ற இருவர் கூட பேசிக்கொள்ள முடியும், ஆனால் பெபே மட்டும் தனிமையில்தான் இருக்க வேண்டும். எனவே, அவர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார். சிறை என்ற பெயரில் இப்படிக் கொடுமையான தண்டனைகளும் தருகிறார்கள். ஆக சிறைக்குப் பின்னால் இருக்கும் வரலாறு, இந்த மாதிரியான மோசமான சிறைகள் எப்போது உருவாகின?

உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த துன்புறுத்தல் தொடர்பான கையேடுகளே, ஒவ்வொரு காவல் துறைக்கும் ராணுவத்திற்கும் உளவுத் துறைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Fauda என்ற வெப்சீரிஸ் ஒன்றைப் பார்த்தேன். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்திற்குள் ஊடுருவி பாலஸ்தீனத்தில் இருக்கிற போராளிகளைக் கொலை செய்வது போராளிகள் மட்டுமல்லாமல் கையில் அகப்பட்ட மனிதர்களையெல்லாம் சித்திரவதை செய்வது, பின்னர் வெற்றி வாகை சூடி தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவது இதுதான் கதை. இந்த கதை சொல்லல் உத்தி என்பது ஒருவகையில் ”ராம்போ” ரக திரைப்படப் பாணி. இந்தப் பாணியில் அவர்கள் சித்திரவதைகள் செய்யும் முறைகளிலும், தண்டிப்பதிலும் அவர்களுக்கு எந்த வகையான கருணையும் இருக்காது. எதற்கும் வருந்த மாட்டார்கள். குழந்தைகளானாலும், பெண்களானாலும், தாய்மார்களானாலும் அவர்களிடம் எந்தவிதமான கருணையும் காட்டமாட்டார்கள். எவ்வித பச்சாதாபமும் இருக்காது. மிகவும் கடுமையாக ஈவிரக்கமின்றி நடந்து கொள்வார்கள்.  அவர்கள் திட்டமிட்டு பிரக்ஞைபூர்வமாக வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். வீடுகளைக் கொளுத்துகிறார்கள். பாலஸ்தீனியர்களின் திருவிழாக்களிலும், மக்கள் கூடுகின்ற இடங்களிலும் வெடிகுண்டுகளை வீசுகிறார்கள்.

ஒரு நாடு அந்த நாட்டைக் காப்பதற்கான வழிமுறைகளில் இதுபோன்ற சித்திரவதை தொடர்பான கையேடுகள் (manual) உருவாகின்றன. கோஸ்டா காவ்ரஸ் படத்தில்கூட அமெரிக்கக்காரர்கள் சித்திரவதைக் கையேடுகள் குறித்து வகுப்புகள் எடுக்கிறார்கள். அங்கிருக்கிற ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அந்தக் குறிப்புகளை வழங்குகிறார்கள். அந்தக் குறிப்புகளில் என்ன இருக்கும்? எப்படி வெடிகுண்டுகள் வைப்பது? எப்படி சிக்கிய மனிதர்களிடம் உண்மையை வரவைப்பதற்காக துன்புறுத்தலை நிகழ்த்துவது? மனிதர்களுக்கு எப்படி தண்டனை கொடுப்பது? என்பது தொடர்பான குறிப்புகளே இருக்கும்.

 ஹிட்லரின் காலத்தில்தான் இதுபோன்ற சித்திரவதைக் கூடங்கள் அதிகமாகப் பல்கிப் பெருகின. ஹிட்லரின் ஆட்சியில், 200 பேர் 300 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்வதற்காக விஷவாயு முறையைப் பயன்படுத்தினார்கள். எல்லோரையும் ஒரு இடத்தில் அடைத்து அங்கு விஷ வாயுவைத் திறந்து, அனைவரையும் கொன்றொழித்தனர். பெரிய பெரிய அடுப்புகளில் மனித உடல்களை அப்படியே போட்டு எரித்தனர். இன்னும் உச்சபட்ச சித்திரவதை என்னவென்றால், சிக்கிய மனிதர்களைக் கொல்வதற்கு முன் அவர்களின் தோலை அப்படியே உரித்தெடுப்பார்கள். அப்படி உரித்து எடுத்த தோலைப் பதப்படுத்தி light shade-ற்கு பயன்படுத்துவார்கள். இது எதுவுமே தெரியாத்தனமாக செய்ததல்ல. மிகவும் தன்னுணர்வுடன் அமைப்பு ரீதியாக இந்த சித்திரவதைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னர்தான் Amnesty International, Human Rights போன்றவை வந்தன. நாகரீக காலத்தில் சித்திரவதை என்பது இருக்கக் கூடாது, சித்திரவதை செய்யாமல் உண்மையைப் பெறுவதற்கான சில நெறிமுறைகளை அவர்கள் கொண்டுவருகிறார்கள். இருப்பினும் மனித உரிமை போன்ற அமைப்புகளையும் தாண்டி சித்திரவதைகள், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்கா எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறதோ, காலனிய நாடுகள், இன்றைக்கிருக்கிற ஏகாதிபத்திய நாடுகள் என எங்கெங்கெல்லாம் செல்கிறதோ, அந்தந்த நாடுகளில் எல்லாம் அவர்கள் செய்கிற கொலைகள், சித்திரவதைகள், அதே போல அவர்கள் செய்கிற பாலியல் வல்லுறவுகளை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று உலக நீதி மன்றத்தில் அமெரிக்கா சார்பில் வலியுறுத்துகிறார்கள். பின்னர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. காவல்துறை செய்கிற மீறல்களை எல்லாம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது, விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அரசின் அற உணர்வாக, நீதியாக, தர்மமாக சித்திரவதை போன்ற விஷயங்களை எல்லாம் ஒரு முறையியலுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். இதைச் சட்டமாகவும் இயற்றி விட்டார்கள்.

லத்தீன் அமெரிக்காவைப் பொறுத்தளவு 1970களில் இந்தப் போக்கு உச்சத்திற்கு சென்றது. இதற்கு முக்கியமான காரணம், முழு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கியூபப் புரட்சியைடுத்து, அதன் ஆகர்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆயுத விடுதலைப் போராட்டங்கள், அதில் நாட்டம் இருக்கிற இளைஞர்கள், போராட்டம் செய்கிற மக்கள் கிளர்ந்தெழுந்தன. எனவே இச்செயல்களை முறியடிப்பதற்காக அமெரிக்கா அந்தந்த நாடுகளில் இருக்கிற, ராணுவ ஆட்சியாளர்களோடு சேர்ந்து, ஒரு திட்டத்தை வகுத்தது. ஒரு பத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பத்து அமெரிக்காவின் ராணுவத்தினர், பத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் காவல்துறையினர், அதேபோலவே அமெரிக்காவினுடைய USAID எல்லோரும் சேர்ந்து ஒரு மாநாடு அமைக்கிறார்கள். எப்படி நாடுகளுக்குள் ஒத்துழைத்துச் செயல்படுவது என்பதற்கான திட்டங்களை வகுக்கிறார்கள். அதாவது பொலிவியாவில் இருப்பவன் அர்ஜென்டினாவிற்கு செல்வான், அர்ஜென்டினாவில் இருப்பவன் எல் சால்வடோர் வருவான், இப்படி இவர்களுக்கிடையிலான ஒத்துழைப்போடு அமெரிக்காவினுடைய மேற்பார்வையில் அவர்களுடைய பயிற்சியோடு, சித்திரவதைகள் அளிப்பது தொடர்பான கையேடுகள் வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகத்தான் பெபேவிற்கு காதில் ஒலிபெருக்கியை வைத்து, மிக அதிகமான இரைச்சலைக் கொடுத்து, காதை செவிடாக்குவதுபோல செய்கின்றனர். அதன் மூலம் மன ரீதியாகவும் அவர்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றனர். இத்தனைக் கொடுமைகளையும் அனுபவித்த பெபே, உளவியல் மருத்துவரைச் சந்திக்கையில், ”நான் சிந்திக்கவே வேண்டாம், சிந்தித்தாலே தலையிலிருந்து இரைச்சல்கள் வருகின்றன, தாங்க முடியவில்லை, எனவே நான் எதையும் யோசிக்காமலிருப்பதற்கு மருந்து ஏதாவது கொடுங்கள்” என்று மன்றாடுகிறார். ”நான் யோசிக்க ஆரம்பித்தாலே பழைய ஞாபகங்கள் வருகின்றன, எனது பழைய ஞாபகங்கள் முழுவதுமே சித்திரவதைகள், எனவே நான் யோசிக்கவே வேண்டாம். தயவு செய்து அதற்கு ஒரு மருந்து கொடுங்கள்” என்று கேட்கிறார். மேலும் அவருக்கு மனப் பிரமையும் தோன்றுகிறது. யாரோ மைக்ரோ சிப் கொண்டு தன்னைக் கண்காணிக்கிறார்கள் என்றும் பதற்றப்படுகிறார். ஒரு ஹோட்டல் காட்சியில் பார்த்தீர்களேயானால் நண்பர்கள், உணவு பரிமாறுபவர், அங்கு சாப்பிட வருகிற வாடிக்கையாளர்கள், ஹோட்டல் நிர்வாகத்தினர் என எல்லோருமே உளவு அமைப்பின் ஒரு பகுதிபோல தோன்றுகிறது. அவர் அந்த ரீதியில்தான் அனைவரையும் பார்க்கும்படியாக சித்திரவதை செய்திருக்கின்றனர். இந்த உலகமே தன்னை உளவு பார்க்கிறது, இந்த உலகமே தன்னை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. தன்னால் எதைக் குறித்தும் சிந்திக்கவே முடியவில்லை, அப்படி மீறியும் சிந்தித்தால் சாவின் எல்லைவரை செல்லும்படி ஆகிறது” என்று கவலையுறுகிறார். ஒரு மனிதரை இந்த நிலைக்குத் தள்ளுவது போன்ற சித்திரவதை நுணுக்கங்களெல்லாம், இராணுவத்தினர், காவல்துறையினர் அதேபோல உளவுத்துறையின் கையேடுகளில் உள்ளது. அந்தச் சித்திரவதைக் குறிப்புகள் அமெரிக்கா உருவாக்கிக் கொடுத்ததாக இருக்கும். இந்தப் பிரச்சனை குன்டனாமோ (Guantanamo) சிறையிலும் நடந்தது. ஈராக் யுத்தத்தை அடுத்து கைதிகளையெல்லாம் சிறைப்பிடித்து ’குன்டனாமோ’ என்ற தீவில் அடைத்தார்கள். அங்கு அவர்களுக்கு படுபயங்கரமான சித்திரவதைகள் கொடுக்கப்பட்டன. உலகத்தில் இருக்கிற வழக்கறிஞர்கள், அதேபோல அமெரிக்காவில் இருக்கிற வழக்கறிஞர்கள் கூட இந்தப் போக்கை எதிர்த்தனர். இதனை பெரிய பிரச்சனையாகக் கொண்டு வந்தார்கள். ஒபாமாவின் காலகட்டத்தில்தான் குன்டனாமோ சித்திரவதை கூடம் மூடப்பட்டது. ஆனால், இன்றைக்கும் அது இருக்கிறது. தொடர்ந்து இருக்கிறது.

 இந்தப் படத்தில், மனிதர்களை, அவர்களின் மனிதத் தன்மைகளை முற்றிலுமாக அழித்துவிடுவது போலத்தான், தண்டனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில காட்சிகள், இது படம் என்பதைக்கூட மறந்து, நம்மை வருத்தப்படவும், அந்தக் கதாபாத்திரங்களுக்காக இரக்கப் படவும் செய்கிறது. கைதிகள் சூரியனைப் பார்க்க முடியாது, வெளிச்சத்தை உணர முடியாது, தண்ணீரைத் தொட முடியாது என்றபோதும் இந்த தண்ணீருக்குள் தாங்கள் ஆழ்ந்து போவது போல கற்பனை செய்துகொள்கிறார்கள், குழந்தைகளைக் கட்டிப் பிடிப்பது போல தங்கள் மனதிற்குள் கற்பனை செய்கிறார்கள், தாயுடனும் காதலியுடனும் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்வது என்பதை தங்களுடைய கற்பனைகளும் கனவுகளும் மட்டுமே சாத்தியம் என்ற நிலையை இந்த சித்திரவதைகள் உண்டாக்குகின்றன.

 நேட்டோவின் கால்பந்தாட்டக் காட்சியைக் கவனியுங்கள். படத்தில் மிக உன்மத்தமான காட்சி அது. இத்தனை காலமும் சிறைக்குள் இருந்த அவர் வெளியில் வந்து ஒரு உலகத்தைப் பார்க்கையில், கால்பந்து இல்லாவிட்டாலும் கூட அந்த சிறை கூடத்திலேயே பந்து இருப்பது போல கற்பனை செய்துகொண்டு கால்களால் அந்த பந்தைத் தட்டி சென்று இலக்கிற்கு தள்ளுவதும், சுற்றியிருக்கிற பார்வையாளர்களின் கூச்சல் சத்தம் கேட்பதுபோல் தோன்றுவதும் ஒரு உண்மையான கால்பந்து ஆட்டத்தை ரசிப்பது போன்ற பாவனையில் இருக்கும். இருப்பினும் இது பந்து இருப்பது போன்ற கற்பனையில்தான் நடக்கிறது. இந்தக் காட்சியை நாடகத்தனமாக முயற்சிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். காட்சியை dramatise செய்கிறார்கள். நாடகத்தனமாக இருந்தாலும் கூட, மிகவும் தனிமையில் இருப்பவர், தன் உணர்வுகளை வெளிப்படுத்தவே முடியாத நிலையில், இதுபோன்ற உளவியலுக்கும் செல்வார். அதுபோன்ற கதாபாத்திரங்கள்தான் இந்த மூன்று பேரும்.

அவர்களில் கவிஞனாக இருப்பவன் நிகழ்காலத்தில் இருக்கிறான். பூட்ஸ் சப்தங்களை கவனிக்கிறான். அதேபோல ரேடியோ டியூன் செய்கிற சத்தத்தை கவனிக்கிறான். காவலாளிகள் பேசுகிற அந்தரங்கமான விஷயங்களைக் கூட கவனிக்கிறாம். அதிகாரி ஒருவருக்கு காதலில் பிரச்சனை வரும்பொழுது அவருக்கு உதவி செய்வது போல காதல் கடிதமும் எழுதித் தருகிறான். எந்த சப்தம், ஒலி தொடர்பாடல் தனக்கு மறுக்கப்பட்டதோ, அதைநோக்கி மெல்ல மெல்ல நகர்கிறான். இந்த சித்திரவதைகளில் மிக முக்கியமான அம்சம், கைதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது என்ற விதிமுறை இருப்பதுபோல, ராணுவத்திலும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக் கூடாது. ஆனால் இதே விஷயத்தை எப்படி மிகவும் கிரியேட்டிவாக மாற்றுகிறார்கள் என்று பாருங்கள். தனக்கு கேட்கிற சப்தங்களை, ஒலிகளை வைத்தே அவன் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறான். அவர்களோடு ஒரு தொடர்பாடலை முயற்சி செய்கிறான். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், எந்த ஒலி எந்த சப்தங்கள் தனக்கு மறுக்கப்படுகிறதோ, அதுவே அவனது உலகமாகவும் மாறுகிறது. என்ன ஒலி தன்னைச் சுற்றி கேட்கிறது, என்ன சப்தம் கேட்கிறது என முழுவதும் அவன் அதைக் கவனிப்பதிலேயே ஈடுபடுகிறான். இந்த விசயங்கள் எல்லாம் அதிகமாக டிராமா செய்யப்படாமல் மிகவும் நுட்பமாகக் கடத்தியிருக்கிறார்கள்.

அந்த மூவரும் கைது செய்யப்படுவது, அவர்களுக்கிடையிலான அரசியல் பிரச்சினைகள் எல்லாம் மிகவும் நுட்பமான அளவில்தான் வெளிப்பட்டிருக்கும். அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை அழுத்திச் சொல்லவே இல்லை. சிறை அமைப்பு, அதில் அவர்களுடைய சித்திரவதைகள், அதனுடைய சட்டதிட்டங்கள், அத்தனை அழுத்தங்களையும் மீறி, அந்தக் கட்டுப்பாடுகளை, எப்படி தனக்கான உலகமாக, அதுவும் ஒரு உயிர்ப்புள்ள உலகமாக, அந்த மூன்று பேருமே எப்படி கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்வதுதான் இந்தப் படம். அந்த வகையில்தான் இந்தப் படம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாகவும் பரிமாணம் பெறுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவின் வாக்கியங்களை திரையில் காட்டுகிறார்கள். ”அவன் எதற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறான்? என்ன தண்டனை போன்றவை, கைது செய்யப்பட்ட உனக்கு தெரியுமா? என்று கேட்கையில், அவன் தன் உடல் மூலமாகவே என்ன தண்டனை? ஏன் கைது செய்யப்பட்டோம்? என்பதைத் தெரிந்துகொள்வான்

என்ற வாக்கியத்தோடுதான் கதை ஆரம்பிக்கிறது. அடுத்து சிறை அமைப்பு எப்படியிருக்கிறது என்பதை மிகவும் நாசூக்காகச் சொல்கிற காட்சி ஒன்றும் உள்ளது. எனக்கு மிகப் பிடித்த காட்சி அது. நேட்டோ கழிப்பறை செல்ல வேண்டும் என்று சொல்லும் பொழுது அவன் கைகளுக்கு விலங்கிட்டு கழிப்பறைக்கு அழைத்துச் செல்வார்கள். விலங்கின் ஒரு முனை கையிலும் மறுமுனை கம்பியிலும் பிணைக்கப்பட்டிருக்கும். கை மேலே கட்டப்பட்டுள்ளதால் அவனால் சரியாகக் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாது. எனவே, அங்கு நிற்கிற அதிகாரிகளிடம் தனது பிரச்சனையைச் சொல்வான். ஆனால் அந்த அதிகாரியோ இன்னொரு அதிகாரியின் உதவியைக் கேட்கிறார். அந்த அதிகாரியும் வந்து பார்ப்பார். ஆனால், அவரும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லாமல், தனக்கு அடுத்த உயர் அதிகாரி யார் இருக்கிறாரோ, அவரைத் தேடிச்சென்று பார்த்து, இந்தப் பிரச்சனையைச் சொல்வார். இப்படி நேட்டோவின் பிரச்சனை முழுதாகத் தீர்க்கப்படாமல் அதிகாரிகள் மட்டும் வந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இது வேடிக்கையான காட்சி போன்று தோன்றினாலும் சிறையமைப்பின் அதிகாரிகள் அல்லது பொதுவாக மக்கள் பிரச்சினையில் அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை நுட்பமாக விளக்கும் காட்சியாக இருந்தது.

இதன் பெயர் அதிகாரத்துவம். சிறையமைப்பின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். ஒருவனும் சொந்தமாக முடிவெடுக்க மாட்டான். சொந்த மூளையும் இருக்காது. அப்படியே தான் பிரச்சனைக்கு உரிய முடிவை எடுத்தாலும் அதற்கு உயர் அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். அதையே பெரிய சிக்கலாக மாற்றுவார்கள். நேட்டோவின் கைவிலங்கைக் கழட்டி விட்டாலோ அல்லது சிறிது அதன் இறுக்கத்தை தளர்த்தியிருந்தாலோ நேட்டோவின் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால், இதை சரிசெய்வதற்கு இந்த எளிமையான பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து அதிகாரிகள், அந்த கழிப்பறையைச் சூழ்ந்து நிற்பார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, இருப்பதிலேயே உயர் பதவியில் இருக்கிற அதிகாரியும் வருகிறார். அந்தப் பிரச்சனைக்கு தீர்வு சொல்வதுபோல வந்து, நேட்டோவின் நிலையைப் பார்க்கிறார். முட்டாள்தனமாக பதினைந்து பேர் இங்கு கூடியிருப்பதைத் திட்டுவாரேயொழிய அவரும் கூட, அந்த உயர் அதிகாரியும் கூட, எந்த முடிவும் எடுக்காமல்தான் நேட்டோவை கையறுநிலையில் விட்டுச் செல்வார். இதில் நகைச்சுவை அல்லது பகடி, வேடிக்கை என்ற உணர்வு எங்கிருந்து வருகிறதென்றால் நேட்டோவிடமிருந்துதான் வருகிறது. யார் சித்திரவதைக்கு உள்ளாகிறாரோ, துன்பத்திற்கு உள்ளாகிறாரோ, அவர்தான் தன்னைச் சுற்றி இப்படி ஒரு மடையர்களின் கூட்டம் இருப்பதை மனதுக்குள் ரசித்துப் பார்க்கிறார். நேட்டோவின் உணர்வு பார்வையாளர்களான நமக்கும் சிரிப்பை வரவழைக்கிறது. அதே நேரத்தில் நேட்டோ, கழிவுகளைத் துடைத்துப்போட்ட செய்தித்தாள்களை எடுத்துச்சென்று தன்னைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வார். மேலும் அந்தச் செய்திகளைத் தன் நண்பனான ரூஸோவிடமும் சுவற்றில் தட்டியே பகிர்ந்து கொள்வார். ஒரு போராளி இறந்துபோனது, கால்பந்து விளையாட்டில் என்ன நடந்தது?, அரசியலில் என்ன நடக்கிறது? போன்ற விஷயங்களையெல்லாம் அந்த செய்தித்தாள்களின் வழி அறிந்து கொள்கின்றனர். எவ்வளவுதான் தடுக்கப்பட்டாலும், எவ்வளவுதான் கதவுகள்  அடைக்கப்பட்டாலும், தங்களுக்குக் கிடைக்கிற சிறுசிறு ஆதாரங்களின் வழி வெளி உலகத்தை அறிந்து கொள்கின்ற உயிர்ப்பும் இருக்கிறது.

முஜிகாவின் அம்மா கதாபாத்திரம் சொல்வதைக் கவனியுங்கள். அதே போல மனநல மருத்துவர் சொல்வதையும் கவனியுங்கள். இரண்டு பேரும் சொல்வது ஒரே செய்திதான். “ survive, be strong” என்றே சொல்கிறார்கள். ”நீ எப்போது தோற்றுப் போகிறாயென்றால், போராடவில்லை என்றால்தான் நீ தோற்றுப் போகிறாய், ஆகவே போராடு” என்றுதான் அந்த அம்மா தன் மகனுக்குச் சொல்கிறார். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர்கள் எப்படி, போராடுகிறார்கள் என்பதுதான் படத்தின் மையம். அந்த நாட்டின் அரசியல் அமைப்பு கொடுமையாகயிருந்தாலும்கூட, மனநல மருத்துவராக வருபவர், அதேபோல அந்தக் கைதியின் அம்மா கதாபாத்திரம் எல்லாம், எப்படி மனிதத்தன்மையோடு இருக்கிறார்கள் என்று பாருங்கள். மனநல மருத்துவர் கைதிகளைப் பரிசோதிக்கையில், கைதியிடம் கேட்கிற கேள்விகளுக்கு, சிறை அதிகாரி பதில் சொல்லிக் கொண்டிருப்பார். எனவே, சிறை அதிகாரியிடம், ”கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று அவரை வெளியே அனுப்பிவிட்டு, பின்னர் கைதியுடன் தனது உரையாடலைத் துவங்குகிறார். சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கின்றனர். சமூகம் இப்படித்தான் இயங்குகிறது என்ற உண்மையை உணர்த்துவது போல இந்தக் காட்சி அமையப்பெற்றுள்ளது. வெளியில் இருக்கிற மக்கள் இந்த அரசியலமைப்பை எதிர்க்கிறார்கள், அம்மாவும் மனநல மருத்துவரும் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரங்களேயாகும். கைதியைப் பார்க்க வருகிற, ரூஸோவின் மகளும் கூட இந்த அரசை எதிர்க்கிறாள். இந்த முழு சமூகமும் எதிர்ப்பதால்தான், இதே அரசு நீடிக்கட்டுமா? அல்லது ஜனநாயக அமைப்பு வேண்டுமா? என்ற வாக்கெடுப்பு நடத்தும்போது, நடப்பு அரசை எதிர்த்து ஜனநாயக அரசு வேண்டும் என்று 86 சதவீதமானோர் வாக்களிக்கின்றனர். முடிவு ஆளும் அரசுக்கு எதிராக வந்ததும், இறுதியாக ஒருமுறை கைதிகளை சித்திரவதை செய்யலாம் என்று சிறையதிகாரிகள் அடிக்கின்றனர்.

அடுத்து, இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த சீக்வென்ஸ் ஒன்று. விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு மனைவியுடன் வாழ்கிற ஒருவர், இன்னொரு பெண் மீது காதல் கொள்வதும், அதற்கு கடிதம் எழுதுவதும், அதற்கு இந்த கவிஞன் உதவி செய்வதும், பின்பு அந்த காதல் நிறைவேறியதும் ஒரு உறவு அங்கு உருவாகிறது. அடூர் கோபாலகிருஷ்ணனின் ’மதில்கள்’ படத்தில் பார்த்தீர்களேயானால், இந்தச் சிறையில் ஆண்கள் பிரிவில் மம்முட்டியும், நடுவே மதிலுக்கு அந்தப்பக்கம் இன்னொரு பெண், இருவருக்கும் இடையே நிகழும் உறவுமுறை, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாதபோதும் அரும்புகிற காதல், இறுதியில் எனக்கு விடுதலை வேண்டாம், நான் சிறைக்குள்ளேயே இருக்கிறேன் எனும் அளவிற்கு அந்தக் கதாநாயகன் நினைப்பார். வெளியுலக வாழ்க்கை, சிறைக்குள் உள் உலகத்தில் இருப்பவனுக்கு தடைபட்டாலும், சிறைக்குள் இருக்கிற அதிகாரியுடன் ஏற்படுகிற நட்பு, அங்கிருக்கிற சக தோழர்களுனான உறவு எல்லாம் அமைந்துவிட்டது என்றால், அது ஒரு அழகான, வழக்கமான, தினசரி நடக்கக்கூடிய, ஒரு சகஜமான வாழ்க்கையாக மாறிவிடுகிறது.
எனவே, இந்த உலகத்தை விட்டு வெளியில் செல்ல விரும்பவில்லை என்பதுபோல ‘மதில்கள்’ படத்தில் சொல்கிறார். இலக்கியங்களிலும் இதுபோன்ற கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. A twelve year night படத்தில் ஒரு காட்சி. அந்த உரையாடல்தான் இந்தப் படத்தின் முழு சாராம்சமே! இந்த உலகத்தில் கதை, கவிதை, அரசியல் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், நாம் பேசுகிற அரசியல் எல்லாவற்றையும் ஒரேயொரு வார்த்தையில் சொல்வதென்றால், அந்த ஒரு வார்த்தை தோழர், தோழமை (companion). இதுதான் எல்லாவற்றிற்கும் அர்த்தம் என்பதுபோல அந்த உரையாடலில் இடம்பெற்றிருக்கும். இதுவே ஒட்டுமொத்த படத்தினுடைய செய்தியாகவும் இருக்கிறது. பின்பு அவர்களை வண்டியில் ஏற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது கண்களைக் கட்டியுள்ள துணியை லேசாக மேல் தூக்கி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிற காட்சி. இந்த தோழமை. இதுதான் அந்த நபர்களை உயிருடன் வைத்திருக்கிறது.

 நீங்கள் இந்த காட்சி குறித்து சொல்லும் பொழுது எனக்கு இன்னொரு காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. கைதிகளை வெளியில் விடலாம் என்ற செய்தி வந்தவுடன் சமையல் அறையில் நேட்டோ பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருப்பார். அவரிடம் ”உனக்குத்தான் விடுதலை ஆகிவிட்டதே! ஏன் இன்னும் அதே செயலை செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்கும் பொழுது, ”நான் இதை எனக்காகச் செய்யவில்லை, எனக்கு அடுத்து வருபவர்களுக்காக செய்கிறேன்” என்று தொடர்ந்து பாத்திரங்களைக் கழுவுவார். பின்பு, நீங்கள் சொன்னதுபோல, கடிதம் எழுதிக் கொடுத்து, அந்த காதல் வெற்றியடைந்தவுடன், ”உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், என்னால் இயன்றதைச் செய்கிறேன்” என்று அந்த அதிகாரி சொன்னவுடன், அதற்கு ரூஸோ ”நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று கேட்பார். எனவே தூரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது போல பரந்தவெளியில் அவர்களை நிறுத்திவைத்து, சந்திக்கச் செய்வார்கள். அவர்கள் இதுவரைக் காத்திருந்த வெயிலும் அங்கு இருக்கும். வெட்ட வெளியில் வெயிலில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் தருணம் அலாதியானது. தனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது, ஏதாவது ஒரு பொருளைத் தானமாகக் கேட்காமல் அல்லது சுயநலமாக தனக்கு வேண்டியதை மட்டும் கேட்காமல், நாங்கள் மூவரும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கவியின் கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்ந்த தனிமையின் நிலையால் எடுத்த ஒரு விருப்பமாகவும் இருக்கும். அடுத்த மிக முக்கியமான காட்சி, ”சிறை எப்படி செயல்படுகிறது? கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? விதிமுறைகளை மீறிய செயல்கள் ஏதேனும் நடைபெறுகின்றனவா என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக, மனித உரிமையில் இருந்து வரும்பொழுது, அந்த சிறைச்சாலையே மொத்தமாக மாறிவிடும். அவர்கள் சிறையில் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் எல்லாமே, சிறை அறைக்குள் வைக்கப்படும். படிக்க புத்தகங்கள், தட்டச்சு செய்வதற்கான, எழுதுவதற்கான பொருட்கள் அங்கு கிடைக்கும். ஆனால், இதற்கு முன்னால் ஒரு துண்டு காகிதம், பென்சில் கூட கிடைக்காமல், அவர்கள் மிகவும் துயரத்தில் இருப்பார்கள். அதுவே மனித உரிமையில் இருந்து வருகிறார்கள் என்றவுடன் சிறையமைப்பு முற்றிலும் வேறொன்றாக மாறிவிடுகிறது. சிறை அதிகாரிகள் மனித உரிமை அமைப்பிற்குத்தான் பயப்படுகிறார்கள். அடுத்த நாள், மனித உரிமை அதிகாரிகள் கேள்வி கேட்கிறபோது, நேட்டோ, இங்கு நடக்கிற கொடுமைகள் அனைத்தையும் சொல்லிவிட நினைப்பான். எப்படியும் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள், உடனே நாம் பதில் சொல்லிவிட வேண்டும் என்றெல்லாம் நேட்டோ தயாராக இருக்கும் பொழுது, அவர்களோ பெயரை மட்டும் கேட்டுவிட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு, நேட்டோவை வெளியே அனுப்பி விடுவார்கள். இது ஒரு கண்துடைப்பு நாடகம் போல இருக்கும். இதனால் சிறைக்கைதிகளுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படாது என்பதைத்தான் இந்த காட்சி உணர்த்துகிறது. மனித உரிமையும் அதிகாரத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறது

 அப்படித்தான் இருக்கிறது. சிறைகள் தொடர்பான சட்டங்களில், கைதிகளை அடிக்கக்கூடாது. அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும். சிறைக்குள் சித்திரவதை போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது, என சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்தச் சட்டங்கள் எதுவும் சிறைக்குள் செல்லுபடியாகாது. ஏனென்றால் சிறையைக் கட்டுப்படுத்துபவர்கள் அரசியல்வாதிகளாக, அரசாங்க அமைச்சர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் சித்திரவதை செய்வதிலேயே மாஸ்டர்களாக இருப்பவர்கள், சிறையில் அதிகாரிகளாக பொறுப்பில் இருப்பார்கள். இவர்கள் அரசை கையில் வைத்திருக்கிற அரசியல்வாதிகளின் ஆணைகளைத்தான் கேட்பார்கள். ஆகவேதான், எழுத்தில் இருக்கிற சட்டங்கள், நடைமுறையில் வேறொன்றாக இருக்கிறது. சட்டங்கள் முறையாக பின்பற்றப்படாத இந்திய சிறைச்சாலைகளில் கஞ்சா, துப்பாக்கிகள் கிடைக்கும். சமூகத்தில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏதேனும் தவறு செய்து சிறைக்குள் வந்தால், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இதுபோன்ற சிறை விதிமுறைகளை மீறுகிற நடைமுறைகள், மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் அதிகமாகவே உள்ளன.


படத்தில், போராளிகளை சுட்டுக்கொன்று, மீதமிருப்பவர்களைக் கைது செய்து வருகிறவன்தான் சிறை அதிகாரியாகவும், அடிக்கடி சிறைக்குள் வந்து பார்ப்பவனாகவும் இருக்கிறான்.அரசாங்கம் தருகிற  தகவல்களை, சுமந்துவருபவனாகவும் இருக்கிறான். பாதுகாப்பு அமைச்சகம், நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக்கூடாது, காவலாளிகளும், ஜெயிலர்களும் உங்களோடு பேசக்கூடாது, என்றிருக்கும். ஆனால், வேறுவழியில்லாதபோது சட்டங்கள் மீறப்படுகின்றன. படத்தில், அந்த கவிஞனை அழைத்து வாருங்கள் என்றதும், ஏதோ விசாரணை செய்யப்போகிறார்கள் என்றுதான் துப்பாக்கியுடன் சென்று இரண்டு பேர் அந்த கவிஞனை அழைத்து வருகிறார்கள். ஆனால், அங்கு நடப்பது வேறொன்றாக இருக்கிறது. காதலுக்கு உதவி செய்யச் சொல்கிறார் அதிகாரி. திரும்பிச் செல்கையில் நோட்டு புத்தகம் தருகிறார். எனவே, நீண்ட காலம் ஒரே இடத்தில் இருக்கிற, சித்திரவதைக்கு உட்பட்டவனுக்கும், சித்திரவதை செய்பவனுக்கும், அதிகாரிக்கும் சாதாரண மனிதனுக்குமான உறவு அவர்களுக்கிடையில் ஒரு தோழமை உறவை உண்டாக்குகிறது.

காரணம் என்னவென்றால், அந்த சிறை அதிகாரி இன்னொரு சக மனிதனாக கைதிகளைத்தான் தினமும் பார்த்தாக வேண்டும், அவர்களுடைய நலன்களையும் கவனித்தாக வேண்டும், சிறைக்குள் இருப்பவர்களும், அன்றாடம் சந்திக்கக்கூடிய மனிதன் என்றால், அது சிறை அதிகாரிகளும் காவலாளிகளும்தான். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துதான் தீர வேண்டும். எனவே சிறை சட்டங்களை மீறிக்கூட மனிதத் தன்மைகள் சிற்சில சமயங்களில் வெளிப்படும்.

சிறைக்குள் இருக்கிற தன் மகனைப் பார்க்க வருகிற தாய், அவன் உண்பதற்காக சில பொருட்களை கொடுத்துச் செல்கிறார். ஆனால், அதில் பாதிதான் அவனை வந்தடைகிறது. அதேபோல, ஒரு பாத்திரம் கொடுக்கப்படுகிறது. எதற்காக என்றால்? தண்ணீர் குடிப்பதற்காக, அல்லது உணவு உண்பதற்காக. இதுபோன்ற சில காரியங்களை அந்த பாத்திரத்தை வைத்து செய்து கொள்ளலாம். ஆனால், கைதி அந்த பாத்திரத்திற்குள் மண்ணை நிரப்பி, விதையை ஊன்றி, செடி வளர்க்கிறார், இதெல்லாம் எப்படி நடக்கிறது? முஜிக்கா பாத்திரத்தை சண்டையிட்டு வாங்குகிறார். குறைந்தபட்ச மனிதாபிமானம் அல்லது குற்ற உணர்வில் சிறை அதிகாரிகள், அதை அவரிடம் ஒப்படைக்கின்றனர். எனவே, இந்த உறவுகள் அதிகாரத்தை மீறி எந்த அமைப்பிலும் நிகழ்கிறது. இந்த அம்சம், எந்த ஒரு கலைப்படைப்பிலும் அல்லது இலக்கியங்களிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

மூன்றாவது அல்லது நான்காவது முறையாக சிறைமாறிச்செல்லும் போதுதான், அந்த அதிகாரியை அவன் சந்திக்கிறான். அதேபோல கடைசியாக அவன் விடுதலையாவதற்கு முன்பும் அந்த அதிகாரியைத்தான் சந்திக்கிறான். ஒரு கதையில் மனிதர்களைச் சந்திப்பது, இதுபோன்ற வாழ்க்கை சுழற்சிதான் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

 அந்த வகையில் இந்தப் படம் மிகவும் நுட்பமாக எடுக்கப்பட்ட படம். சிறையில் நடக்கக்கூடிய விஷயங்களை இவ்வளவு விபரமாக சொல்லத்தான் வேண்டும். ஆனால் அந்த விபரங்களை கதாபாத்திரத்தோடும், அந்த வாழ்க்கையோடும், அந்தச் சூழலுடனும் தொடர்புபடுத்திச் சொல்வதுதான் கதைசொல்லல் நுட்பம். இந்தப்படம் அவ்வளவு நுட்பமாகக் கதைசொல்கிறது. உதாரணமாக, கைதியின் கைகளில்  எறும்பு ஊர்கிற விஷயம். அதேபோல வெளிச்சத்தைப் பார்க்கத் தவிப்பது, சன்னல் வழி வரும் அந்த வெளிச்சத்தைக் கூட பார்க்கக் கூடாது, அதை அனுபவிக்கக்கூடாது என்று சொல்லி தகரத்தைக் கொண்டு சன்னலை மூடுவது, பின்னர் இன்னொரு கைதி மேலே பார்த்துக் கொண்டிருக்க சிறிது வெளிச்சத்தில் தூசுகள் எல்லாம் பறந்து வருகிற விஷயம், இறகு மிதந்து வருகிற லாவகம், அதேபோல சன்னலிலிருந்து ஊடுருவும் வெயில், எங்கு விழுகிறதோ, அந்த இடத்தில்தான் சிறைக்கைதிகள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு வெயில் தேவைப்படுகிறது. இந்த படமே மிக நுட்பமான விஷயங்களால் நிரம்பியிருக்கிறது. இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இதற்காகவே மெனக்கெட்டிருக்கன்றனர். எதெல்லாம் மறுக்கப்படுகிறதோ, கைதிகள் அதைத் தேடியே செல்கிறார்கள். அதேநேரத்தில் சிறைக்குள் இருக்கிற மற்ற நபர்களின் பலவீனங்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்படிப் பயன்படுத்தி தனக்கு தேவையானதை அடைய முயல்கிறார்கள். உதாரணத்திற்கு காவலாளி ஒருவர், மனைவியைத் தவிர்த்து இன்னொரு பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதைக் குறித்து மிரட்டி, ”உன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டாய்” என்பதுபோலச் சொல்லி தனக்குத் தேவையான பாத்திரத்தை வாங்கிக் கொள்கின்றார் பெபே. அம்மா சொன்னது போலவும், மனநல மருத்துவர் சொன்னது போலவும் அவர்கள் தனக்குத் தேவையானதை அடைய, கிடைத்ததை வைத்துப் போராடுகின்றனர்.

 துபமாரோஸ் புரட்சி பற்றி

 துபமாரோ ஒரு தேசிய ஹீரோ. அதேபோல இன்கா கலாச்சாரம், அவர்களுக்கென ஒரு மரபு இருக்கிறது. காலனியாதிக்கம் இருந்த 500 ஆண்டுகளும், அவர்களுக்கு பெருமை மிக்கதாக இருந்த ஒரு விஷயம் இன்கா கலாச்சாரம்.

இன்கா கலாச்சாரம் நகரங்களை உருவாக்கியது, கால்வாய்கள் கொண்ட பெரிய ஆர்க்கிடெக்சர்களையெல்லாம் உருவாக்கியது, படையமைப்பைக் கொண்டிருந்தது, அற்புதமான கலை கலாச்சார சின்னங்களைக் கொண்டிருந்தன. இன்கா கலாச்சாரம் ஒரு தொன்மையான கலாச்சாரம். மலையின் உச்சியில் நகரங்களை அமைக்கக்கூடிய திறமைகளை அவர்கள் கொண்டிருந்தனர். இது முழு லத்தீன் அமெரிக்காவிற்கும் பெருமிதம். ஸ்பானிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்களாகவும் இவர்களேயிருந்தார்கள். துபமாரோ போன்றவர்களெல்லாம் போராடினர். அவர்களது மரபு சேகுவேராவின் மரபு என்றும் சொல்லிக்கொண்டனர். லத்தீன் அமெரிக்க விடுதலைப் போராட்டங்களுக்கு மிக தொன்மையான வரலாறு இருக்கிறது. அதிலிருந்துதான் அவர்களுடைய போராட்டங்கள் உருவாகின்றன. அவர்களுக்கான ஹீரோவாக அவர்களிலிருந்தே உருவாகிறார்கள். துபமாரோகூட உண்மையாக, அவர்களுக்காக வாழ்ந்த ஒரு மனிதனின் தாக்கமாகத்தான் இருந்தது. அந்தப் பெயரில்தான் கொரில்லா இயக்கம் உருவானது.

கோஸ்டா காவ்ரெஸின் படத்தில் கொரில்லா போராளிகளின் போராட்டம் எந்த வகையில் இருக்கிறது என்பதைக் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் அந்த கொரில்லா போராளிகள் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, அவர்களது வாழ்க்கை என்னவாக இருக்கிறது? என்பதை பார்க்கிறோம். சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் அவர்கள் போராட்டம் தொடர்கிறது.

கியூபப் புரட்சி 1959-ல் நடந்தது. அதன்பிறகு எல்லா நாடுகளிலும் இது போன்ற கொரில்லா இயக்கங்கள் தோன்றின. ராணுவ ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன. ஆனால், இந்த இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்ட மரபு என்பது முழு லத்தீன் அமெரிக்காவிலும் இருந்தது. ஒரு காலகட்டத்தில் கொரில்லா இயக்கங்களின் மூலம் ராணுவ ஆட்சியைத் தூக்கியெறிவது, கொரில்லாக்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது போன்ற சூழலும் ஆங்காங்கே இருந்தது. வெனிசுலாவில், பொலிவியாவில் இருந்த புரட்சியாளர்கள், மக்கள் எழுச்சியை உருவாக்குவதன் மூலம், மக்கள் அபிப்பிராயங்கத்ளை திரட்டுவதன் மூலம் பாராளுமன்றத்தில் ஆட்சியைப் பிடித்தனர். அதேபோல மக்களும் ஒரு காலகட்டத்தில் விழிப்படைந்து போராட்டங்களில் ஈடுபடத்துவங்கினர். ராணுவ ஆட்சியில் தங்களை ஒடுக்குகிறார்கள், இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான நிலைப்பாட்டினை நாம் எடுக்க வேண்டுமென்று மக்கள் இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த மக்கள் இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது அழுத்தம் கொடுத்தன. உதாரணத்திற்கு, கடந்த ஒரு வருட காலமாக லத்தீன் அமெரிக்காவின் சிலியில் கடந்த காலங்களில் ஏற்படுத்திய ராணுவ சட்டங்களை மாற்ற வேண்டும் என்று ஒரு வருடமாக போராடினார்கள். அர்ஜென்டினாவில் ’கருக்கலைப்பு என்பது சட்டபூர்வமாக வரவேண்டுமென்று’ அங்கிருக்கிற மாணவர்களும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து போராடினார்கள்.

 பொலிவியாவில் பாராளுமன்ற முறையின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களை அமெரிக்காவின் ஆதரவுடன் ராணுவம் கவிழ்த்தது. அவர்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றியது. இதற்கு எதிராக மக்கள் போராடினார்கள். பொலிவியாவில் மக்கள் போராட்டத்தின் மூலம் அந்த யாப்பு மாற்றப்பட்டுவிட்டது. அர்ஜெண்டினாவில் பெண்களுடைய மாணவர்களுடைய போராட்டத்தால், 2020-ல் அங்கு கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகிவிட்டது. பொலிவியாவில் மக்கள் போராட்டம், அதனால் மறுபடியும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் யாருடைய ஆட்சியை அமெரிக்கா ராணுவத்தோடு கவிழ்த்ததோ, மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய உணர்வுகளையும், மக்களுடைய ஆதரவுகளையும், ஒற்றுமையையும் திரட்டுவதற்காகத்தான் கொரில்லா யுத்தங்கள் நடத்தப்படுகின்றன. வேறு பாதைகளில், மார்க்கங்களில் மக்களுடைய பங்களிப்பைத் திரட்ட முடியும் என்றால், நிச்சயமாக அதற்கும் அவர்கள் தயாராகவே இருப்பார்கள். இதற்கான நிரூபணமாகத்தான் வெனிசுலா, நிகரகுவா போன்ற நாடுகள் உள்ளன.

நிகரகுவாவில் புரட்சியின் மூலம் ஆட்சியதிகாரத்தை முதலில் கைப்பற்றினார்கள், பிற்பாடு தேர்தலில் நின்றார்கள், இப்போது தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். வெனிசுலாவிலும் அப்படித்தான். தேர்தலின் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதேபோல பராகுவே, எல் சால்வடோர் என இன்றைக்கு பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்கள் எழுபதுகளில் எண்பதுகளில் இந்த ஆயுத விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தோற்றுவித்தவர்கள்தான். அவர்கள் பெருவாரியான மக்களுடன் நின்றார்கள், அவர்களின் ஒத்துழைப்போடு பின்னர் ஆட்சியதிகாரத்திற்கு வந்தார்கள். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அந்த நோக்கங்கள் சரியென்று மக்களும் ஒப்புக் கொள்கிறார்கள், மக்களுடைய நலனுக்காகவும் நாட்டினுடைய நலனுக்காகவும்தான் அவர்கள் போராடினார்கள், ஆகவே அவர்கள் பாராளுமன்ற சனநாயகத்தின் மூலம் தேர்தலில் நிற்கும்போதும், மக்களுக்கு நல்லது செய்வார்கள், நாட்டிற்கு நல்லது செய்வார்கள், வறிய மக்களின் விடுதலைக்காகப் பாடுபடுவார்கள், வறுமையைப் போக்குவார்கள் என்றெண்ணியே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். ஆகவே, இன்றைக்கு பழைய நிலைமை முழுக்க மாறிவிட்டது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் மக்களுக்காகப் போராடியவர்கள், இப்போது சனநாயக தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்திற்கு வந்து மக்களுக்காகப் போராடுகிறார்கள்.

இந்தப் படத்தையே எடுத்துக்கொள்வோம். 12 வருடங்கள் சிறையில் கழித்த ஜோஸ் முஜிகா, வெளியில் வந்ததும் 2010ஆம் ஆண்டு அவர்தான் சனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்டு, தேர்வாகி ஆட்சியில் அமர்கிறார். இன்னொருவர் கவிஞர், நாடகாசிரியர். மூன்றாமவரும் அரசியல் அதிகாரத்திற்கு வருகிறார். எது பிரச்சினைகள் தீர்ந்து அமைதியான சமூகம் என்று சொல்கிறோமோ, அந்த சமூகத்திற்குள் அவர்கள் வெற்றியாளர்களாக மீண்டும் நுழைகிறார்கள். இந்தப் படத்தினுடைய இறுதிக்காட்சி சொல்வது அதுதான். முஜிகா (பெபே) சிறையிலிருந்து பாத்திரத்தில் வளர்ந்த செடியை எடுத்துக் கொண்டு வெளியே வருவதும், தன் அம்மாவைச் சந்திப்பதும், மாற்றத்திற்குத் தயாராவதும் என அதுதான் அந்தக்காட்சி சொல்கிற செய்தி.
 
முஜிகா, சிறையிலிருக்கும்போது, அவரது மனம், மூளை இரண்டும் அதிகமாக பாதிக்கப்பட்டு தரைத்தளத்தில் படுத்திருக்கும்போது, ஒரு கனவு வரும். பாதி நிழலும் வெளிச்சமுமாகத் தெரிகிற பிம்பத்தில் ஒரு மனித உருவம் தோன்றி, ’they forget about us’ எனும்போது, மக்களுக்காகப் போராடியவர்கள் பன்னிரண்டு வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதனால், மக்கள் அவர்களை மறந்துவிடுகிறார்கள், குடும்பத்தினர், உறவினர்கள் நினைவில் வைத்திருந்தாலும்கூட, ”எந்த மக்களுக்காக போராடினாமோ, அந்த மக்களே நம்மை மறந்துவிடுகிறார்கள்” என்று சொல்வது, மிகவும் வலிகள் நிரம்பிய தருணம். சித்திரவதைகள் ஒருபுறம் என்றால், இதுபோன்ற சிந்தனைகள் மறுபுறம் அவரை மிகவுமே துன்புறுத்துகிறது.


புரட்சிக்குப் பின்னான சமூகம் அப்படியிருக்கிறது. உதாரணத்திற்கு, ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்களுக்கு நிறைய மரியாதை இருந்தது. அதுவே முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பிற்பாடு அமைந்த அந்த சமூகத்தில் அவர்களுக்கான ஏற்பு, அங்கீகரிப்பு மிகவும் முக்கியம். வேலை, வருமானம் முக்கியம். அதற்கு படிப்பு அவசியம். 30 வருடங்கள் தமது உடைமைகளைத் தொலைத்தவர்கள் இதையும் சேர்த்து தொலைத்துவிடுகிறார்கள். போராட்டத்திற்குப் பிற்பாடாக அமைகிற இந்த சமூகத்தில், அவர்கள் மீண்டும் உள்ளே வருகிறபோது, அவர்களுடைய ஏற்பு, அங்கீகாரம் போன்றவை கேள்விக்குறியாகிறது. அவர்கள் போராடச் சென்றதே அந்த மக்களுக்காகத்தான், திரும்பி அதே மக்களிடம்தான் வருகிறார்கள், அவர்கள் கையறுநிலையில் திரும்புகிறபோது, அவர்களுடைய வாழ்வை பொறுப்பேற்றுக்கொள்கிற சமூகமாக, அந்த மக்கள் சமூகம் இருக்க வேண்டும். லத்தீன் அமெரிக்காவில் இந்த நிலைமை இருக்கிறது.

போராட்டத்திற்குப் பின், பெரும்பாலான சமூகத்தில் போராட்ட வீரர்களையும், போராளிகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களை அங்கீகரிக்கும் போக்கு நிலவுகிறது. அவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களைத் தேர்தலில் நிறுத்துகிறார்கள். படிப்பு தடைபட்டிருந்தால் படிக்க வைக்கிறார்கள். உதாரணத்திற்கு, நிகரகுவாவில் போராட்டத்தில் பங்கேற்ற பல பெண்கள் இன்று நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார்கள். அதேபோல கியூபப் புரட்சியில் பங்கேற்றவர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் இன்றைக்கு சிறந்த தொழில்முனைவோர்களாக வந்துவிட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கல்வித்துறை சார்ந்த வேலைகளிலும், பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். ஃபிடல் காஸ்ட்ரோவே ஃப்ரொபஷனல் பொலிட்டீசியனாக வந்துவிட்டார். சேகுவேராவின் மகனோ, ஃபிடல் காஸ்ட்ரோவின் மகனோ புரோபஷனலாக இருக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. மெடிக்கல் ஃப்ரொபஷனல், அதேபோல ஆர்க்கிடெக்சர். இதுபோன்ற வேலைகளில் இருக்கிறார்கள். லத்தின் அமெரிக்காவைப் பொறுத்தவரை புரட்சிக்குப் பின்னான சமூகம், போராளிகளை அவ்வளவு மோசமாகக் கைவிடவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அவர்கள் பங்கெடுத்த இந்த போராட்டங்கள் பெருமளவு வெற்றி பெற்றிருக்கின்றன.
 ஆயுதப்போராட்ட ரீதியிலோ அல்லது பாராளுமன்ற ரீதியிலோ அந்த புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள், போராளிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த மக்களுடைய ஏற்பை, அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள். நிறுவனமயமாகவே அது இருந்ததன் காரணமாக, அந்தத் தடையை அவர்கள் கடந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக ஈழத்தில், முள்ளிவாய்க்கால் போராட்டம் வீழ்ச்சியுற்ற போராட்டமாக இருந்ததன் காரணமாக, இலங்கை அரசு ராணுவமே ஆதிக்கம் செலுத்துவதால், போராளிகளுக்கான அங்கீகாரத்தை, வேலைவாய்ப்புகளை அவர்களால் உருவாக்க முடியாதுபோனது. அரசாங்கம்தான் இதற்கு ஏற்பாடு செய்யவேண்டும், ஆனால் அதற்கு அரசும் தயாராக இல்லை. இதுதான் அங்கிருக்கிற பிரச்சனை. போராளிகள் அடையாளம் காணப்படாமல் தொலைந்துபோனவர்களாக இருக்கின்றனர்.

A twelve year night படம், ஃப்ரான்ஸ் காஃப்காவின் மேற்கோளோடு ஆரம்பிக்கிறது. இந்த உரையாடலை, அந்த மோற்கோளின் அர்த்தத்தோடு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவனுக்கு காரண காரியங்கள் புரிகிறதா? காரண காரியங்கள் சொல்லப்படுகிறதா? அது சம்பந்தமான விளக்கங்களை அரசு கொடுக்கிறதா? அல்லது இது சம்பந்தமான விளக்கங்களைத் தானே கேட்டுத் தெரிந்துகொள்கிறானா? என்பதுதான் அந்தக் கேள்வி. உண்மையில், இந்த கேள்விக்கான பதிலை அரசுகளும் சொல்வதில்லை, பாதிக்கப்பட்டவனாலும் தேட முடியவில்லை, ஏனென்றால் அதற்கான வெளி அங்கு உருவாவதில்லை. அங்கு அவன் அனுபவிக்கிற தண்டனை, சித்திரவதை, துயரம்தான் அவனுக்காக விட்டு வைக்கப்படுகிறது. மேலும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவனுக்கு, தான் எதற்காக தண்டனை அனுபவிக்கிறோம் என்ற காரணம் தெரியுமா? என்பது அதிகாரம் கொண்டவனின் பார்வையிலிருந்து கேட்கப்படுகிறது. அவன் அனுபவிப்பதிலேயே இதற்கான அர்த்தம் தெரியும். எனவே அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதால்தான் அந்த பதில் வந்து விழுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சமூக அமைப்பானாலும், பெரும்பாலும் ராணுவத்தினுடைய அதிகாரம் அல்லது மதம் அதிகமாக தலையிடுகிற ஈராக் மாதிரியான நாடுகள், இந்தியா போன்ற தனிநபரை முன்னிலைப்படுத்திய அதிகாரம் கொண்ட, மத அடிப்படையான சித்தாந்தத்தைக் கொண்ட, அதைத் தூக்கிப் பிடிக்கிற நாடுகளில் இந்தப் போக்குக் இருக்கும். ஈரானில், அங்கு தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதமரோ, ஜனாதிபதியோ அதிகாரம் படைத்தவர்களாக இல்லை. அங்கு உள்ள கொமேனிதான் (Ruhollah Khomeini) அதிகாரத்தைத் தீர்மானிப்பவராக இருக்கிறார். ஆக இந்த மாதிரியான நாடுகள் எல்லாவற்றிலுமே ஏன் நான் தண்டிக்கப்படுகிறேன் என்று கேட்பதற்கான உரிமை கூட இல்லை. கேள்வி கூட கேட்க முடியாது. அந்தக் காரணத்தை அரசாங்கமும் சொல்லவேண்டியதில்லை. இது ஒருவகையில் சர்வாதிகாரப்போக்கு. 

உதாரணத்திற்கு இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம். ஒரு பெண் கல்லால் அடித்து கொல்லப்படுகிறார். அந்தப் பெண் முறை தவறி சென்றுவிட்டார், அதற்காக அடித்துக் கொல்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறான குற்றச்சாட்டு. அந்த பெண்ணிற்கு பிடித்த இன்னொரு ஆணுடன் வாழலாம், கணவன் மனைவிக்கிடையே என்ன பிரச்சினை என்று விசாரிக்கலாம், பழைய வாழ்க்கையிலிருந்து பிரித்து இன்னொரு வாழ்க்கை வாழ பரிசீலிக்கலாம், கணவனின் மனநிலை என்ன என்று கேட்கலாம், அல்லது தான் செய்தது தவறேயானாலும் சிறு தண்டனை கொடுக்கலாம். ஆனால், என்னை ஏன் அடித்தே கொல்கிறீர்கள்? என்று அந்தப் பெண்ணால் கேட்க முடிகிறதா? அந்தப் பெண் எதிர் கேள்வியை கேட்க முடிந்த சூழ்நிலை அங்கு இருக்கிறதா? தன்னைக் கொலை செய்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதென அந்த பெண்ணால் கேட்க முடியுமா? தான் கொலை செய்யப்படுவதை, அந்தத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதை, சித்திரவதை செய்யப்படுவதற்கான அந்த செயல்முறைகளை நோக்கி அந்தப் பெண் பயணப்பட வேண்டியிருக்கிறதே தவிர, மாறாக கேள்வி கேட்க முடிவதில்லை. அனைத்து அதிகார வர்க்க சமூகங்களிலும், எல்லா ஒடுக்குமுறை சமூகங்களிலும், ஏன் நான் தண்டிக்கப்படுகிறேன், ஏன் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறேன், போன்ற கேள்வியை, இந்த பாதிக்கப்பட்ட மனிதன், துயருக்கு உள்ளாக்கப்பட்ட மனிதன், ஒடுக்கப்பட்ட மனிதன் வாழ்ந்துதான் கழிக்க வேண்டுமேயொழிய, அவனால் அதிகார வர்க்கத்தை நோக்கி கேள்வி கேட்கமுடியாது. இதைத்தான் ஃபிரான்ஸ் காஃப்கா சொல்கிறார்.