அமேடியஸ்: ஒத்திசையும் திரைமொழி

சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளையும், சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த கலை இயக்கம், அரங்க நிர்மாணம், ஒலி அமைப்பு, உடை வடிவமைப்பு, ஒப்பனை ஆகிய 8 அகடமி விருதுகளையும் 1984ஆம் ஆண்டில் பெற்ற படம் அமேடியஸ்.

5 வயதில் பியானோவையும், வயலின்களையும் காண்பவர் வியக்கும் வண்ணம் இசைக்கக் கற்றுக் கொண்டவரும் தன் முதல் கான்சர்ட்டோவை (Concerto) 4 வயதிலும் தன் முதல் சிம்பொனியை 7 வயதிலும் முழுமையான ஒபராவை (Opera) 12 வயதிலும் எழுதி அற்ப ஆயுளில் மறைந்த 17ஆம் நூற்றாண்டு இசை மேதை மொசார்ட்டைப் பற்றிய படமே அமேடியஸ்.

1756-ல் ஆஸ்திரியாவில் பிறந்து தந்தையால் இசையறிவு ஊட்டப்பட்டு இளம் வயது முதலே இசைச் சாதனைகள் நிகழ்த்தத் தொடங்கிய இளம்மேதை மொசார்ட். தன் 36வது பிறந்த தினத்திற்கு இரண்டு மாதங்கள் இருக்கும்போது மரணத்தைத் தழுவிய மொசார்ட் 4 வயது முதல் குவிண்டட்கள் (Quintets) கான்சர்டோக்கள், சொனட்டாக்கள்(Sonatos) குவார்டட்கள் (Quarters) மற்றும் 49 சிம்பொனிகளையும் எழுதிக்குவித்தவர். படைப்பாற்றல் பற்றிய எல்லா இலக்கணங்களையும், புரிதல்களையும் கேலிக்குள்ளாக்கும் மொசார்ட்டின் இசை மேதமையையும் அவரின் எதிர்பாரா மரணத்தின் பின்னிருக்கும் கேள்விகளையும் எதிர்கொள்ளும் அமேடியஸ் திரைப்படம், உலகின் சிறந்த படங்களின் வரிசையில் முன்னிருக்கையில் இடம்பிடிக்கும் தகுதி கொண்டதாகும். 

Is 'Amadeus' Worth Rewatching? | JSTOR Daily

இப்படம் கலைமேதைமைக்கும் அன்றாட வாழ்வின் தேட்டங்களுக்குமிடையிலான தொடர்பின்மையைத் தைரியமாகப் பேசுகிறது. ஒரு கலைஞனின் வாழ்க்கையை ஒளிவில்லாமல் பேசுவதாலேயே இது திரைக்கதையின் எதிர்பாரா உச்சங்களை எட்டுகிறது. ஒரு திரைப்படத்தில் திரைக்கதையின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்வது இப்படம். பொதுவாக தன் கதையைத் தானே கூறுவதும், இயக்குனர் (கதை சொல்லி) கூறுவதும், இருவேறு நோக்குநிலைகள் கலந்து வருவதும் வழக்கம். இங்கே அமேடியஸில் திரைக்கதையாசிரியர் மொசார்ட்டின் கதையை அவருடைய எதிரியின் நோக்கு நிலையிலிருந்து விவரிக்கத் தொடங்குகிறார். மொசார்ட்டைவிட வயது அதிகமான அரசவை இசைவாணராக இருந்த, சொந்தமாக இசை எழுதும் திறன் பெற்ற அதே சமயத்தில் மொசார்ட்டின் இசைமேதைமையைப் பொறாமையோடு கண்டு புழுங்கும் ஒருவனின் வார்த்தைகளால் கதை விவரிக்கப்படுகிறது. இவன் வழக்கமான வில்லன் அல்லன். மொசார்ட்டின் இசையை ரசிக்கிற, அவன் இசை குறிப்பெழுதும் வேகத்தைக் கண்டு வியக்கிற, உடனிருந்து மொசார்ட்டின் மேதைமையைப் புரிந்து கொள்கிற ஓர் இனிய எதிரி. தகுதியான பொறாமைக்காரன்.

*. 1823 நவம்பர் மாதத்தின் பனிபெய்யும் இரவு. ஒரு வயோதிகன் வியன்னா நகரின் இருள் கவிழ்ந்த அறையொன்றில், ”மன்னித்துவிடு மொசார்ட்., உன் கொலைக்காக என்னை மன்னித்து விடு”, என்று கூறியவாறு தற்கொலைக்கு முயற்சிக்கிறான். பணியாளர்களால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின் மனநோயாளிகளுக்கான விடுதியில் சேர்க்கப்படுகிறான். சில வாரங்கள் கழித்து விடுதியின் பாதிரி அவனிடம் பாவமன்னிப்பைக் கோருகிறார். அந்த வயோதிகர் பாவ அறிக்கைக்குப் பதிலாக மொசார்ட்டின் கதையைக் கூற ஆரம்பிக்கிறார். அந்த வயோதிகர் தான் அண்டோனியோ சலியாரி (Antonio Salieri) வியன்னாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்; பேரரசர் இரண்டாம் ஜோசப்பின் அரசவையின் இசைவாணர்; மிகுந்த இறைபக்தி மிக்கவர். தன் பக்தியைப் பார்த்து தன்னை இறவாப் புகழுடைய இசை விற்பன்னனாக கடவுள் மாற்றுவார் என்று பிரார்த்திப்பவர். அவர் விரும்பிய வண்ணமே ஆரம்பகால வெற்றிகள் அமைகின்றன. படிப்படியாக இந்நிலையை வந்தடைகிறார். எல்லாமும் சுமூகமாகவும், சாதகமாகவும் தோன்றுகின்றன. 1781ல் ஓர் இளைஞன் வரும்வரை, சிறுவன் போன்ற தோற்றமுடைய அவன் எதிர்ப்பட்டபோது எல்லாமே மாறத்தொடங்குகிறது. (Wolfgang Amedeus Mozart) ஆறு வயதிலேயே ஐரோப்பா முழுவதும் தன் இசைத்திறன்களைக் காட்ட தந்தையால் அழைத்துச்செல்லப்பட்டவன். 26 வயதில் வியன்னாவுக்கு வந்தபோது வித்தை காட்டும் குரங்காக அவனைக்கருதியவர் பலர்.


Writing from Your Essence - Michael Hauge's Story Mastery

*. ஒரு தனவந்தர் வீட்டில் மொசார்ட் இசைக்கப் போவதாய் அறியும் சலியாரி, மொசார்ட்டைக் காணும் ஆவலில் அங்கு செல்கிறார். அந்த இரவு, அவர் வாழ்க்கையைத் திசை மாற்றப்போவதை அவர் அறிந்திருக்கவில்லை. விருந்துக்கான முஸ்தீபுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க சலியாரியின் கண்கள் ‘யார் அந்த மொசார்ட்’ என்று தேடுகின்றன. அப்போது விருந்துக்காக பதார்த்தங்களை பணியாளர்கள் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். இத்தாலிய இனிப்பு ஒன்றை தின்றுவிடும் அற்ப ஆசையில் யாருமில்லா உணவுக்கூடத்திற்குள் நுழைய அங்கே நுழையும் ஓர் இளஞ்ஜோடி காதல் விளையாட்டு விளையாடுவதை ஒளிந்திருந்து கவனிக்க வேண்டியவராகிறார். சரசமாடும் இளைஞனின் வாயிலிருந்து ஆபாசமான வார்த்தைகளும், நகைச்சுவைகளும் சிதறுகின்றன. திடீரென்று மாளிகையின் உள்ளே இசையொலி கிளம்புகின்றது. அந்தப் போக்கிரி இளைஞன் படீரென எழுந்து ‘என்னுடைய இசை நானில்லாமல்….’ என்றவாறு ஓடுகிறான். சலியாரி இளைஞனைப் பின்தொடர்ந்து இசையைக் கேட்கிறார். 13 வாத்தியங்களின் கலவையில் பொங்கிப் பிரவகிக்கும் அந்த இசை அவர் இதுவரை கேட்டிராததாயிருந்தது. அப்போதுதான் புரிகிறது. ‘கடவுள் அபூர்வமான இசை ஞானத்தைத் தனக்கல்ல, கவர்ச்சியற்ற போக்கிரித் தனங்களுள்ள அந்தக் கோமாளி இளைஞனுக்குத்தான் வழங்கியிருக்கிறார்’, என்பது.

அந்தக் கணத்திலிருந்து கடவுளுக்கும் சலியாரிக்குமான உறவு விரிசல்காணத் தொடங்குகிறது. சில சந்தர்ப்பங்களில் சலியாரியை மொசார்ட் அவமானப்படுத்த நேர்கிறது. மன்னரின் சகோதரியின் மகளுக்கு இசையாசிரியராக மொசார்ட்டுக்கு வாய்ப்பு வருகிறது. வருமானமற்ற நிலையில் மொசார்ட்டின் மனைவி சலியாரியை ரகசியமாய்ச் சந்தித்து மொசார்ட்டுக்கு எப்படியாவது அந்த வேலை வேண்டுமென்கிறாள். சலியாரி அந்த இசைக்குறிப்புகளைப் பார்க்கத் தொடங்குகிறான். அது மொசார்ட்டின் C மைனரில் தொடங்கும் 29ம் சிம்பொனி. சலியாரி விக்கித்துப் போகிறான். மொசார்ட்டின் அந்த முதல் கையெழுத்துப்படியே (Original) எவ்வித அடித்தலும் திருத்தலுமின்றி துல்லியமாக இருக்கிறது. கடவுள் சொல்லச் சொல்ல மொசார்ட் கேட்டு எழுதியது போலிருக்கிறது. மொசார்ட்டைக் கடவுள் தன் கருவியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. ‘கடவுளே! உன் கருணையையும், கலைமேதைமையையும் ஏன் நல்லவனும் அல்லாத ஒழுக்கமற்றவனுமான மொசார்ட்டுக்கு அருளினாய்…?’

*.மொசார்ட் தன் எதிரியாலேயே தன் இசைக்காக அங்கீகரிக்கப்பட்டவர், அந்த இசை உருவாக்கிய பொறாமைத்தீயால் எரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மொசார்ட்டின் வாழ்வு ஒரு புதிர்க்காவியம். சலியாரி உண்மையிலேயே மொசார்ட்டின் மரணத்திற்குக் காரணமில்லாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் மொசார்ட்டின் இசையின்பாலான பிரமிப்பு, பொறாமையாக நெஞ்சில் கனன்று கொண்டிருக்க, தன்னையும் தன் இசையையும் இல்லாமலாக்கிவிட்ட மொசார்ட் ஒழிந்து விட வேண்டுமென்று விரும்புகிறான். அந்த விருப்பமே மொசார்ட்டின் மரணத்திற்குப் பின்னான குற்றவுணர்வாக சலியாரியைத் தற்கொலைவரை தூண்டுவதாகிறது. மொசார்ட்டைக் கொன்றது நான்தான் என்று சலியாரி நம்பத் தொடங்குவதாகவும், அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் உண்மையில் சலியாரி மொசார்ட்டைக் கொன்றதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் இல்லை. ஒரு மேதையின் மரணத்திற்குப் பின்னுள்ள புதிருக்கான காரணம் தேடுபவர்களுக்கு, சலியாரி சில தடயங்களை விட்டுச் சென்றுள்ளமையையும் மறுக்க இயலாதுதான்.

Cast Amadeus - Tom Hulce Photo (38326551) - Fanpop

1825ல் தன் மரணத்திற்கு முன் இரண்டு ஆண்டுகள் வியன்னாவின் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றிருந்தார் சலியாரி. அப்போது மொசார்ட்டின் மரணத்திற்காக இருமுறை பாவமன்னிப்புக் கோரினார். ஒருமுறை தற்கொலைக்கு முயன்றார். சமகாலத்தவரான இசைமேதை பீத்தோவனின் குறிப்புகளில் சலியாரியின் மனப்பிறழ்வு பற்றிய செய்திகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1830ல் ருஷ்ய இலக்கியவாதியான அலெக்சாண்டர் புஷ்கின் எழுதிய மொசார்ட்டும் சலியாரியும், என்ற குறுநாடகத்தில் சலியாரியின் ‘பொறாமை’ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு மொசார்ட்டின் தந்தை மீது மொசார்ட்டுக்கு இருக்கும் குற்றவுணர்வும் பயமும்கூட இத்திரைக்கதையில் அழகாக கையாளப்பட்டுள்ளது. பலரும், சிறுவனை வைத்து வித்தைகாட்டும் சர்க்கஸ்காரராக தந்தையையும், மொசார்ட்டை வித்தை செய்யும் குரங்காகவுமே கருதினர். ஆனால் சிறுவயதிலேயே இசைவித்தகனாக மாற்ற ஓர் அர்ப்பணிப்பான தந்தையால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட தந்தையை, வியன்னாவுக்கு தன் 26-வது வயதில் வந்த பிறகு மொசார்ட்டால் பேண இயலவில்லை. மொசார்ட்டின் நிதி நிலைமை, மனைவியின் உதாசீனம் ஆகியவை தந்தையை மொசார்ட்டிடமிருந்து விரட்டிவிடுகிறது. பின் தந்தையின் மரணச் செய்தியே மொசார்ட்டுக்கு மிஞ்சுகிறது. மகன் மீது மிகுந்த ஆளுமைகொண்ட அந்தத் தந்தையின் சாபத்தைச் சம்பாதித்து விட்டதாக மொசார்ட் வருந்தியதற்கான வாய்ப்புகளும் உண்டு.

மொசார்ட்டின் புதிரான மரணத்தை அவரின் தந்தையின் கடுமையான ஆளுமை, சலியாரின் பொறாமை போன்ற, உண்மைச் சம்பவங்களோடு இணைத்து திரைக்கதையாக்கியதில் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் ஷாஃபரும், இயக்குனர் மிலாஸ் ஃபோர்மேனும் பெருவெற்றி பெற்றுள்ளனர் எனலாம்.

Amadeus | Plot, Cast, Award, & Facts | Britannica

அமேடியஸ் நாடகத்தின் முதல் அரங்கேற்றம் லண்டன் நேஷனல் தியேட்டரில் 1979 நவம்பரில் நிகழ்ந்தபோது நாடகத்தைப் பார்த்த இயக்குநர் ஃபோர்மேன், திரைப்படத்திற்கான சாத்தியங்களை நாடகம் பெரிதும் கொண்டிருப்பதைக் கவனிக்கிறார். நாடக ஆசிரியர் பிட்டர் ஷாஃபரிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். “1982 பிப்ரவரி முதல் நானும் இயக்குநர் ஃபோர்மேனும் இணைந்து பணியாற்றத் தொடங்கினோம். வாரத்திற்கு 5 நாட்கள். நாளொன்றிற்கு 12 மணிநேரங்கள் வீதம் 4 மாதங்கள் கடுமையாக உழைத்தோம். மனச்சோர்வு, குழப்பம் எல்லாவற்றையும் மீறி அபூர்வமான தருணங்களைக் கண்டடைந்தோம். ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். மொசார்ட்டுடைய வாழ்க்கையை ஒரு சார்பான உணர்வுகளால் நிரப்புவதைத் தவிர்க்க விரும்பினோம். நாங்கள் உண்மைச் சம்பவங்களையல்ல, மொசார்ட்டின் வாழ்வின் மையச்சரடை, புனைவுத்தன்மை மிக்க தருணங்களைப் பிடித்து விடவே முயன்றோம்”.

இத்திரைக்கதை ஒரு தேர்ந்த இலக்கியத்தின் திறந்த முடிவுகளைப் போல் வாசகனின் ஊகங்களையும் கற்பனைகளையும், வேண்டி நிற்கிறது. இலக்கியம் உருவாக்கும் படிமங்கள் வாசகனுக்குச் சொல்லியும் சொல்லாமலுமான விளையாட்டைத் திறம்படச் செய்யமுடியும். ஆனால் காட்சி ஊடகமாகத் திகழும் திரைப்படத்தில் எல்லாமும் காட்சிகளால் விவரிக்கப்படுகையில் பார்வையாளன் செயலற்றுப் போய்விடுவதற்கான சாத்தியங்களே அதிகம். திரைப்படத்தில் இலக்கியத்தின் கூறுகள் இணையும்போது தான் அமேடியஸ் போன்ற அற்புதங்கள் சாத்தியமாகின்றன.

36 ஆண்டுகளே வாழ்ந்த ஒரு கலைஞன் 30 ஆண்டுகள் செயலாக்கமுள்ள ஒரு கம்போஸராக வாழ்ந்தான் என்பது உலகில் எங்கும் காணமுடியாத ஒரு விந்தை. அத்தகைய கலைஞன் மரணத்தை இங்கு சீக்கிரமே தழுவிக்கொள்வதன் காரணமே மொசார்ட் வாழ்வை மிகுந்த கவனத்திற்குள்ளாக்குகிறது. மொசார்ட்டைக் கொன்றது தந்தையின் ஆளுமை உருவாக்கும் குற்ற உணர்வா? சலியாரி அனுப்பிய வேலைக்காரி மெல்லக் கொல்லும் விஷம் வைத்தாளா? எந்த இடத்திலும் இதுபற்றிய ஊகங்களுக்குப் படத்தில் இடமில்லை. அல்லது சலியாரி அனுப்பும் தூதன் மொசார்ட்டுக்குப் பணம் கொடுத்து மரணம் பற்றிய சிம்பொனியை எழுதச் செய்தமையா? (Requiem Mass) முகமூடியணிந்த மனிதனிடம் பணத்தேவைக்காக ‘Requiem’ எழுதச் சம்மதிக்கும் மொசார்ட், அதை எழுதமுடியாமல் தவிக்கிறான். மனைவி வற்புறுத்த ‘அதை எழுதமுடியாது, அது என்னைக் கொல்லுகிறது’, என்கிறான். அதை எழுதத் தொடங்கியதும் அவன் உடலும் மனமும் பொலிவிழக்கத் தொடங்குகின்றன. இதில் எதையுமே மொசார்ட்டின் மரணத்தோடு தர்க்க ரீதியாகத் தொடர்புபடுத்த முடியாது. மொசார்ட் போன்ற பெரும் ஆளுமைகளின் படைப்புச் செயலைத்தர்க்க ரீதியாக எப்படி விளக்க முடியாதோ… அதுபோலவே அத்தகைய ஆளுமைகளின் ஆழ்மனச் சிக்கல்களும் அதன் வெளிப்பாட்டு வடிவங்களும் கூட. அறிவியலின் பாற்பட்டதல்ல என்பதை திரைப்படம் பூடகமாக உணர்த்துகிறது.

*. கவித்துவமான வார்த்தைகள், பரவசப்படுத்தும் இசை, காலத்தை முன் நிறுத்தும் கலை இயக்கம், தேவையை மீறாத ஒளிப்பதிவு, அபூர்வமான நடிப்பு, முழுமையான அதை, இதை வெளிப்படுத்தும் காட்சிகளைப் பேசாமல் இக்கட்டுரை நிறைவடையாது. சலியாரிக்கும் பாதிரியாருக்குமிடையேயான உரையாடலாக விரியும் இரண்டாவது காட்சி. மருத்துவமனையின் அறையொன்றில் பியானோ ஒன்றின் முன்னமர்ந்து சலியாரி இலக்கில்லாமல் வாசித்துக் கொண்டிருக்கிறான். பல மன நோயாளிகளைக் கடந்து பாதிரி சலியாரியின் அறையினுள் நுழைகிறார். வெளிச்சமும், இருளும் சரிபாதியாகக் கவிழ்ந்திருக்கும் அறை.

‘சலியாரி…’ என்றழைக்கிறார் பாதிரி மெதுவாகத் திரும்பி,

‘என்னைத் தனியாக இருக்க விடுங்கள்’ என்று கூறிவிட்டு பியானோ பக்கம் திரும்பிவிடுகிறார்.

‘ஓர் ஆன்மாவைத் துன்பத்தில் தனியே ஆழ்த்திவிட்டு என்னால் போகமுடியாது’ என்கிறார் பாதிரி.

;என்னை யாரென்று உங்களுக்குத் தெரியுமா?’

‘அது எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தப் போவதில்லை. கடவுளின் பார்வையில் எல்லோரும் சமம் தான்.’

‘எல்லோருமா?’ என்று சலியாரி கேட்கும் போது முகத்தில் நக்கலான தொனி இழையோடுகிறது.

‘உங்கள் பாவத்தை அறிக்கை இடுங்கள்’ என்ற பாதிரியின் கோரிக்கையைப் பொருட்படுத்தாமல்,

‘இசையில் எந்த அளவுக்கு நீங்கள் தேர்ச்சி பெற்றவர்’ என்கிறார்.

வந்தவேலை திசைமாறுவதை சமாளித்துக் கொண்டு…

‘கொஞ்சம் தெரியும்… சின்ன வயசுல படிச்சிருக்கேன்….’

‘எங்கே?’

‘இங்க வியன்னாவில்…’

‘ஓ…. அப்ப இது உங்களுக்குத் தெரிந்திருக்கும்’ என்று உற்சாகமாக பியானோவில் ஒரு மெலடியை வாசிக்கிறார்.

“இது என்ன?” என்று முழிக்கிறார் பாதிரி.

’இது அந்தகாலத்துல ரொம்ப பிரபலமான ட்யூன் நான் எழுதினது… சரி இத கேளுங்க….’

என்றவாறு இன்னொரு ட்யூனை வாசிக்கிறார்.

மெலடி வாசிப்பதை விட்டுவிட்டு கைகளைப் பியானோவிலிருந்து எடுத்து, இசை நடத்துநர் (Conductor) செய்வதுபோன்று கண்களை மூடிக்கொண்டு பாவிக்க… காட்சி ஒரு ஓபராவில் இளம் வயது சலியாரி இசை நடத்தும் காட்சியாக தொடர்கிறது. இசை முடிந்து கரவொலி அரங்கத்தைப் பிளக்க கண்களை மூடியவாறு பரவசத்தில் ஆழ்ந்திருக்கும் சலியாரி… கண்களைத் திறந்து பாதிரியைப் பார்க்கிறார்.

‘இது ரொம்ப தெரிஞ்சமாதிரி இல்லயே’ என்கிறார். பாதிரி திரைப்படத்தில் மட்டுமே இப்படியொரு காட்சியைக் கற்பனை செய்யமுடியும். இதன் திரைக்கதையாசிரியர் ஒரு நாடக ஆசிரியர் என்பது நமக்கு வியப்பாயிருக்கிறது.

‘உன்னால என்னோட எந்த மெலடியையும் ஞாபகப்படுத்த முடியல; ஐரோப்பாவில் நான் ஒரு பிரபலமான கம்போஸர். 40 ஓபராக்கள் எழுதியிருக்கேன்… தனியா….” என்று சொல்லிவிட்டு ‘ஹே… இது எப்படி இருக்கு?’ என்றவாறு இன்னொரு மெலடியை வாசிக்கத் தொடங்க… பாதிரி பாதியில் அந்த மெலடியோடு இணைந்து உற்காசகமாக முணுமுணுத்துச் சேர்ந்து பாடத்தொடங்குகிறார்.

‘இது ரொம்ப அருமையான மெலடி… இதை எழுதியது நீங்கன்னு எனக்குத் தெரியாதே….’ என்கிறார்.

‘இத எழுதியது நான் இல்ல… மொசார்ட்…’

‘நீங்க கொன்னதா சொல்லப்படற மொசார்ட்’

இப்படித்தொடங்கும் இந்தக் காட்சியின் ஒலியமைப்பு, உரையாடல்களுக்கிடையிலான அழகான அனுமதி/ இடைவெளிகள், நடிகர்களின், குறிப்பாக சலியாரியாக நடித்த Murray Abrahamன் நுணுக்கமான முகபாவங்கள் எல்லாமும் அபூர்வமாக ஒன்றிணைவதைக் காணலாம். இன்னொரு சவாலையும் இத்திரைக்கதை சந்திக்கிறது. படத்தின் முதல் காட்சியிலேயே மொசார்ட்டைக் கொன்றவரை அறிவித்துவிட்டு, அதற்குச் சாதகமான காட்சிகளை படம் நெடுக அமைத்திருந்தும் இறுதியில் முழுவதும் அவிழ்க்கப்படாத மொசார்ட்டின் மரணம் இப்படத்தை இறவாத இலக்கியமாக்குகிறது.

*. தொடக்கக் காட்சிகளைப் போலவே படத்தின் இறுதிக்காட்சிகளும் நெஞ்சைவிட்டு அகலாதவை. மொசார்ட்டின் மனமும் உடலும் நலிந்த நிலையில் மனைவியும் கோபித்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று விடுகிறாள். ஓர் இசை நிகழ்ச்சியின் இடையில் மொசார்ட் மயக்கமடைய சலியாரி மொசார்ட்டை இல்லத்திற்கு அழைத்து வருகிறார். மரணம் பற்றிய அந்த சிம்பொனியை எழுதி முடித்தால் நாளைக்குக் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்கிறார் சலியாரி.

Peter Shaffer, dead at 90, and his enduring portrait of genius ...

பணத்திற்காக மொசார்ட் சம்மதிக்கிறார். ஆனால் உட்கார்ந்து எழுதுவதற்கான தெம்பற்ற நிலை. சலியாரி தான் உதவுவதாகச் சொல்ல மொசார்ட் டிக்டேட் செய்ய ஆரம்பிக்கிறான்.

மொசார்ட்டின் புகழ்பெற்ற சிம்பொனியாகக் கருதப்படுகிற ‘Requiem’ உருவாகிறது. சலியாரி காகிதத்தையும் இறகுப் பேனாவையும் எடுத்துத் தயாராய் ‘சொல்லு’ என்கிறார். படுக்கையில் சாய்ந்து படுத்தவாறு… மொசார்ட்டின் உதடுகள் வெளிறி முகம் பொலிவிழந்த நிலையில்…

‘முதலில் குரல்கள் (Voices) எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லத் தொடங்குகிறார்.

‘பேஸ் வாய்ஸ் (Bass Voice) அப்புறம் டெனர்ஸ் (Tenors) இரண்டுக்கும் சொல்லி முடித்தவுடன் காகிதத்தை சலியாரியிடமிருந்து வாங்குகிறார்… மொசார்ட் படித்துப் பார்க்கத் தொடங்க, அந்த இசை நமக்கு ஒலிக்கத் தொடங்குகிறது. மீண்டும் ‘இனி ஆர்கெஸ்ட்ராவுக்கு எழுதிக்கொள்ளுங்கள்’ 2லு பாஸூன் (Basson) அப்புறம் பேஸ் ட்ரம்போன்ஸ் (Trambones) அப்புறம் ட்ரம்பட்ஸ் (Trumpts) அப்புறம் டிம்பொனி (Timponi) சலியாரி ‘ஆஹா… எனக்குப் புரிகிறது எனக்குப் புரிகிறது’ என்கிறார் இசை முடிந்துவிட்ட தொனியில்!

மொசார்ட் மறித்து, ‘இல்லை… இனிமேல் தான் உண்மையான ஜ்வாலை எரியத் தொடங்குகிறது… ம் எழுதிக்கொள்ளுங்கள் ஸ்டிரிங்ஸ் (Strings) அப்புறம் வயலின்ஸ் என்று சரமாரியாகச் சொல்லிக்கொண்டு போக சலியாரி திணறுகிறார் மொசார்ட்டின் சொல்லும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்… ‘ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்…’ என்று பதறுகிறார்… மொசார்ட்டின் வாயிலிருந்து அவசரமாக வந்து விழும் ஸ்வரக் கோர்வைகள் (எந்தக் கருவியையும் தொடாமல்) சலியாரியை வியப்பின் சிகரத்திற்கு அழைத்துச் செல்கின்றன. பார்வையாளர்களையும்!. மொசார்ட் எழுதப்பட்ட காகிதத்தை வாங்கிப்பார்க்க மரணம் பற்றிய அந்த சிம்பொனி ஒலிக்கத் தொடங்குகிறது… சற்று முன் விழுந்த E Major, C Minor, F,D என விழுந்த எழுத்துக்களோ இப்படி பேரிசையாக பொங்கி எழுகிறது என்று வியக்கிறோம்.

மேற்கத்திய இசையின் ‘ஹார்மனி’ பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்தால் இதை மேலும் சிலாகிக்க முடியும். இந்திய செவ்வியல் இசையில் கூட்டிசை (Orchestration) என்பது இல்லை. அப்படியே இசைக்கருவிகள் இருந்தாலும் பாடுபவரின் மெலடியையே அவரோடு இசைப்பது, அல்லது மறுமுறை இசைப்பதாக இருக்கும். இந்த ஒற்றை அடுக்கு (Single Layer) இசைக்கு முற்றிலும் மாறானது மேற்கத்திய செவ்வியல் இசை. ஒரு மெலடியோடு ஒத்திசைந்து ஒலிக்கக்கூடிய வெவ்வேறு மெலடிகளை வெவ்வேறு வாத்தியங்களில் ஒரே நேரத்தில் பல அடுக்குகளாய் ஒலிக்கச் செய்யும்போது, வார்த்தைகளற்ற இசையின் பரவசத்தை உணரமுடியும்.

*. அந்த மரணத்தின் பேரிசையை பாதி எழுதிய நிலையில் களைப்படைந்தவனாய் மொசார்ட் நாளைக்கு மீதத்தை எழுதிக்கொள்ளலாம் என்று தூங்கிவிடுகிறான். காலையில் ஊரிலிருந்து மனைவி வருகிறாள். அந்த சிம்பொனியை முடிக்காமலேயே மொசார்ட் மரணமடைகிறான்.

இறுதியில் பொதுமயானத்தில் பல உடல்களோடு சேர்த்து அவன் உடலும் அடையாளமற்று அடக்கம் செய்யப்படுகிறது. அந்த இறுதிப்பகுதி முழுவதும் பின்னணி இசையாக ‘மரண சிம்பொனியே’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பனியும், மழையும் பெய்து கொண்டிருக்கும் பின்னணியில் ஏறத்தாழ கறுப்பு, வெள்ளையான வண்ணத்தில் குதிரைவண்டிகளும், கறுப்புடை அணிந்த மனிதர்களுமாய், மொசார்ட்டின், மரணமற்ற அந்த இசை அந்தக்காட்சியை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது.

*மொசார்ட் வாழ்ந்த வியன்னாவில் 17ஆம் நூற்றாண்டிற்குப் பின் புதிய மோஸ்தரில் பல கட்டிடங்கள் எழுந்துள்ளமையால் இயக்குநர் செக்கோஸ்லேவியாவின் ‘பிராக்’ நகரை படப்பிடிப்புக்காகத் தேர்ந்தெடுத்தார். ‘பிராக்’ நகரின் எவ்விடத்திலிருந்தும் கேமராவை 360 டிகிரியில் சுழற்ற முடியும் என்ற அளவிற்கு நகர் 17ஆம் நூற்றாண்டைத் தக்கவைத்துக் கொண்டிருந்தமையால் எங்களுக்கு மிக வசதியாக இருந்தது என்கிறார். மொசார்ட்டின் ஓபரா காட்சிகள் இந்நகரின் டைல் அரங்கத்தில் எடுக்கப்பட்டன. 200 ஆண்டுகளாக அப்படியே பராமரிக்கப்பட்டு வரும் முழுவதும் மரத்தாலான இவ்வரங்கு போல் பூமியில் வேறெங்கும் காணமுடியாது என்கிறார் நடன இயக்குநர் டைலா தார்ப் (Twyla Tharp). 17ஆம் நூற்றாண்டின் ஒளியமைப்பைக் கொண்டுவர சாண்ட்லியர் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒவ்வொன்றிலும் 120லிருந்து 270 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. சாண்ட்லியர்களின் எடையை மரக்கூரை தாங்காது என்பதால் புதிதாக அலுமினியக்கம்பிகள் அரங்கத்தின் அமைப்பைப் பாதிக்காத வகையில் பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டன.

The Film Amadeus - ProProfs Quiz

இவ்வரங்கம் போக “The Magic Flute” எனும் இசைப்பகுதியைப் படமாக்க மொசார்ட் காலத்திய அரங்கம் ஒன்று கலை இயக்குநரால் நிர்மாணிக்கப்பட்டது. 100 தச்சுக்கலைஞர்கள் 6வார காலத்தில் இதை வடிவமைத்தனர்.

இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கார்ப்பெட்டுகள், ஆவணங்கள், இசைக்கருவிகள் எல்லாமே மொசார்ட் காலத்திய கிடைத்தற்கரிய சேமிப்புகள்.

பிரான்சின் நான்காம் லூயி தன் தலை வழுக்கையை மறைக்க ‘விக்’ பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து விக்குகளை அணியும் மோஸ்தர் பிரான்சில் அதிகரித்தது. மொசார்ட் காலத்திலும் பிரபுக்கள், மேல்தட்டு வர்க்கத்தினர், அவர்தம் பணியாட்கள் என்று சகலரும் விக்குகளை அணியத் தொடங்கினர். மொசார்ட்டுக்கும் ‘விக்’ அணிவதில் பெருவிருப்பம் இருந்தது. இப்படத்தில் 1500 தலை விக்குகள் பயன்படுத்தப்பட்டன. விக் தயாரிக்கவும் பராமரிக்கவுமென்றே 21பேர் அடங்கிய குழு வேலை செய்தது, அரைமில்லியன் டாலர்களை தலை விக்குகளுக்காகப் பட்ஜெட்டில் ஒதுக்கிய படம் ‘அமேடியஸ்’ ஆகத்தான் இருக்கமுடியும்.

இயக்குநர் வேண்டுமென்றே மிகப்பிரபலமான நடிகர்களைத் தவிர்த்தார். ‘டஸ்டின் ஹாஃப்மன்’ மொசார்ட்டாகப் பரிந்துரைக்கப்பட்ட போது ‘டஸ்டின்’ மொசார்ட்டாக நடிக்கிறார் என்று தான் மக்கள் சொல்வார்கள் என்று மறுத்தார். மொசார்ட்டாக நடித்த டாம் (Tom Hulce)மும் சலியாரியாக நடித்த முர்ரே ஆப்ரஹாமும் (Murray Abraham) இப்படத்திற்காகவென்றே பியானோவையும் இசை நடத்துநர் பணியையும் (Conducting) கற்றுக்கொண்டார்கள். இப்படத்திற்காக இருவரும் சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலும் எவ்விதக் குழப்பமுமின்றி சலியாரியாக நடித்த முர்ரே ஆப்ரஹாம் இவ்விருதைத் தட்டிச்சென்றார். டெக்லாஸ் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும் முறையான நாடகப் பயிற்சியும் உடைய இவர் Waiting for Godot, King Lear, Uncle Vanya போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தவர். 1971 முதல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இப்படத்திற்காக மொசார்ட்டின் இசை மீண்டும் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டது. இதை புகழ்பெற்ற இசை நடத்துனர் மெரினர் (Marriner) செய்தார். மொசார்ட்டின் இசையில் எந்த சிறிய மாற்றத்தையும் செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இப்பணியை மேற்கொண்டார்.

மிலாஸ் ஃபோர்மன்
(Milos Forman)

1932ல் செக்கோஸ்லேவியாவில் பிறந்த இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1963லிருந்து படங்களை இயக்கத் தொடங்கி 1999 முடிய 13 படங்களை இயக்கியுள்ளார். அமெரிக்காவில் இயக்கிய 8 படங்களுக்காக 13 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர்.

செக்கோஸ்லேவியாவில் அவர் 1963ல் இயக்கிய ‘Black Peter’ எனும் முதல் படமே மிகுந்த கவனிப்பிற்குள்ளாயிற்று.

Mozart - Requiem in D minor
நன்றி: திரை