வைரஸ் (மலையாளம்) திரைப்படம் பற்றிய கட்டுரை

வின்சென்ட் அரசு

கோவிட்- 19.

எனப்படும் கொரோனா வைரஸ் உலக நடவடிக்கைகளையே ஓரிரு மாதங்களாக முடக்கி வைத்துள்ளது. எந்த நாடும், எந்த நாட்டுக்கும் உதவமுடியாதபடி சூழல்.
உலகையே விரலில் அசைத்து பார்க்கும் தொழில்நுட்பங்களை அடைந்த நிலையிலும்,
கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் நம்மை வீட்டுச்சிறையில் அடைத்துள்ளது.

நிபாவைரஸ்.

1998 ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள ஒரு பன்றிப்பண்ணையில் இத்தொற்றுநோய் கண்டறியப்பட்டது.
அதன்பின் இந்நோய் பாதிப்பு சில நாடுகளில் இருந்தாலும்,

2018ஆம் ஆண்டு கேரள மாநிலம்,கோழிகோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு 10 பேர் வரை பலியாயினர். கொடூரமான தொற்று நோயானாலும், கோழிகோடு மாவட்ட தடுப்பு நடவடிக்கைகளால் அது சமூகபரவலாக மாறவில்லை.

கோழிகோடு மருத்துவக்கல்லூரியில் நிகழ்ந்த நிபா வைரஸ் தொற்றின் உச்ச காலகட்டத்திலான சம்பவங்களை திரைக்கதையாக்கி, அதனை ஆவணத்தோற்றமாக இல்லாமல், திரைரசிகர்கள் விரும்பும் வகையில் பரபரப்பு நிமிடங்களாக உருவாக்கப்பட்ட திரைப்படம் 'வைரஸ்'.

2019 ஆண்டு மலையாள மொழியில் வெளியானது.தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆஷிக்அபு இப்படத்தை இயக்கியுள்ளார்.


கொரோனாவை முன் அறிந்து:

கிட்டத்தட்ட கொரோனா அறிகுறிகளோடும்,அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும் ஒத்து போக கூடிய 'நிபா வைரஸ் தொற்று' பற்றிய திரைப்படமாக இருந்தாலும், கொரோனாவை முன் அறிந்து உருவாக்கப்பட்ட படம் போல், இக்காலத்திய இக்கட்டு நகழ்வுகளின் தத்ரூபத்தை கொண்டுள்ளது.

திரைக்கதையை உண்மை விளிம்பில் செயல்படுத்திய பாத்திரபடைப்புகள்:

ஏரியல் வியுவில் கோழிகோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. பற்பல வாதைகள் மற்றும் விபத்தில் அடிபட்டு இரத்தம் வழிந்தோடியபடி வரக்கூடிய நோயாளிகளின் அடர்த்தியான கூடமாக உள் மருத்துவமனை காண்பிக்கப்படுகிறது.

இளம் மருத்துவர்கள் ஆங்காங்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கினர்.
இப்படியான ஆரம்பக்காட்சி பாவனைகளின் வழியே நாம் மருத்துவமனைக்கு நெருக்கமாக சென்றுவிடுகிறோம்.

வைரஸ் ரீ செர்ச் சென்ட்டரில் நிபா வைரஸ்க்கான அறிகுறிகளை வைராலஜி மருத்துவர். சுரேஷ் அறிந்தவுடன், சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இயக்குனர் என உயர்மட்டக்குழு கூடுகிறது. ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்து நடக்கப்போவதை தீர்மானிக்க முடியாத நெருக்கடி படர்ந்திருக்கிறது.

கோழிகோடு மாவட்டத்தில் நிபா வைரஸின் முதல் தொற்றாளி சக்கரியா.

சக்கரியாவின் தந்தை, மகனின் மூலம் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் படுக்கையிலிருந்தபடி அங்கு வரும் நியுரோ மருத்துவரிடம் பேசுகிறார்.

அப்போது அவருடைய கழுத்து பகுதியின் அசைவுகள் ஒரு வகையான திணறுலுக்கு உள்ளாகியிருக்கும்.

இப்படி நோய் தொற்றுக்குள்ளான ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வழியாக நிபா வைரஸின் அறிகுறிகள், உடல்உபாதைகள் பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும்.

வைரஸால் பாதிக்கப்பட்ட நர்ஸ் அகிலா வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்தபடி பேச முற்படும் போது,அந்த கதாபாத்திரத்தின் சுவாச நெருக்கடியை பார்க்கும் நாம் ஒவ்வொருவரும் ஒரு முறை நம்முடைய மூச்சை இழுத்து பார்த்துக் கொள்வோம். இதே போல்தான் உன்னிகிருஷ்ணன் கதாபாத்திரத்தின் வறட்டு இருமலும்..,

கொரோனாவை போலவே நிபாவுக்கும் தடுப்பு மருந்து இல்லாத காரணத்தினால்,அதை சமூகத்தொற்றாக பரவாமல் தடுப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுடன், 'மணிப்பால்'வைராலஜி ஆய்வக தலைமை மருத்துவர்.சுரேஷ்ராஜனும், மருத்துவர்.அனுவும், தொற்று ஏற்பட்டவர்களின் நேரடி தொடர்புகளை அறியவும், சக்கரியாவுக்கு தொற்றிய முதல் தொற்றுக்கான காரணத்தையும் அறிய முற்படுகின்றனர்.

இதில் , மருத்துவ கூடத்தில் சக்கரியா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து ஸ்கேன் மையம் முதல் சக்கரியாவை கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் நிபா தொற்று பரவிய விதத்தை, காட்சிகளில் அடையாளப்படுத்திய முறை தொற்றை பற்றிய புரிதலை நமக்கு உருவாக்குகிறது.

சக்கரியாவின் நிபா தொற்றுக்கு காரணமான நிகழ்வுகளாக, அவர் வெளவாலை தொட்டு தூக்கும் காட்சியையும், அதற்கு முன் சக்கரியா வீட்டு வெளிப்புறத்தில் வெளவால் கொறித்ததை போன்ற பழங்களையும், ஒருவித யூகத்தின் பேரில் காண்பித்திருப்பார்கள்.

இயல்பாக வினையாற்றிய கதாபாத்திரங்கள்:

சில பெரிய திரைப்படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களை, படத்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்துவதற்க்காக சிறுசிறு வேடங்களில் ஈடுபட வைத்திருப்பார்கள். அதை பார்க்கும் ரசிகனுக்கு,

"இவருக்கு இதில் என்ன வேலை எனத் தோன்றும்".

வைரஸ் திரைப்படத்தில் கதாபாத்திர வகைமையை பொறுத்தமட்டில் மருத்துவர்கள், நோயாளிகள், அரசு அதிகாரிகள் என குழுத் தன்மை கொண்ட வடிவமைப்பை பெற்றிருக்கும்.

எனவே, இக்குழுவில் பிரதிநிதித்துவமான கதாபாத்திர செயல்முறைகளை காட்ட, நடிப்பின் எல்லையறிந்த நடிப்பாளர்கள் இதில் பங்குபெற்றிருக்கிறார்கள்.

நடிகைகள் ரேவதி,பார்வதி,ரீமா, பூர்ணிமா இந்திரஜித், மடோனா செபாஸ்டின் மற்றும்
நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ்,ரகுமான்,போபன்,ஷாகீர் என கதாபாத்திரங்களை உள்வாங்கி தேவையானதை மற்றும் பிரதிபலிக்கும் இவர்களால் வைரஸ் திரைப்படம் , உண்மை நிகழ்வுகளுக்குள் நம்மை உலவவிடுகிறது.

அமைச்சராக வரும் ரேவதி அவர்களுக்கு , வசனங்கள் பெருமளவில் இல்லாதது அவருடைய நடிப்புத்திறனுக்கு சான்று.
படம் நெடுகிலும் ஒரு மென் சோகமும், கவலையும் கொண்ட உணர்வலைகளை முகத்திலும்,கண் பார்வையிலும் காட்டியிருப்பார்.


உருவாக்கத்தில் பங்காற்றியவை:

இப்படத்தின் திரைக்கதையை மூன்று பேர் எழுதியிருக்கிறார்கள்.

உண்மைசம்பவங்களை வைத்து காட்சிகளை தொடர்புபடுத்தும்போது, தகவல் திரட்டல் என்பது தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
அந்த உண்மைகளை சீன்களாக கம்போஸ் செய்யும்

திரைக்கதைக்கான வேலைகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் முடிவு "வைரஸை" போன்று முக்கியமான அழுத்தமான படைப்பாக அமையும்.

இயக்குனர் ஆஷிக்அபு திரைக்கதையை படமாக்கிய விதமும்,செயற்கை நகர்வுகள் துளியுமின்றி நேர்த்தியாக அமைந்துள்ளது.

அவருக்கு ராஜிவ்ரவி மற்றும் காலித்தின் ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்துள்ளது.

ஒரே ஷெட்யுலில் கோழிகோடு மருத்துவமனை வளாகத்திலேயே படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நோயாளிகள் வென்டிலேட்டருடன் இருக்கும் க்ளோஸ் ஷாட்கள், மருத்துவமனைக்கே உரிய க்ரின்கலர் கோடிங்,படத்தின் காட்சிகளில் இருக்ககூடிய அச்சுறுத்தும் ஒளி சார்ந்த நிசப்தம், டாப் வியூவில் க்ளோஸாக படம்பிடிக்கபட்டிருக்கும் நாடிகட்டு போடுவது போன்ற காட்சிகள் என சில நிகழ்வுகள் படத்தை உண்மையின் பக்கம் நகர்த்தியிருக்கிறது.

இறுதியாக:

சமூகத்துக்கு மெசேஜ் எனச் சொல்லிவிட்டு, தினசரி நாட்டு நடவடிக்கைகளை கொண்டு,செய்திபடம் போல் சில படங்கள் எடுக்கப்படுகிறது. இவற்றிற்கு இடையில் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உண்மை நிகழ்வுகளை தொகுத்து "வைரஸ்" படம் போன்று சினிமா ரசிகனுக்கான வடிவில் உருவாக்கும் பட்சத்தில், அப்படைப்பு எக்காலத்துக்கும் உரிய வரலாற்றை நினைவுகூறும் திரைபிம்பங்களாக மிளிறும்.