கிம் கி தக் (1960 – 2020)

தமிழில்: தீஷா

வேறெந்த கொரிய திரைப்பட இயக்குனருக்கும் இல்லாத அளவில், கிம் கி தக்கின் படங்களும், அவரும் புகழடைந்திருக்கின்றனர். தனது பிரத்யேகமான திரைமொழியின் வாயிலாகவும், கதைகளாக்க எடுத்துக்கொள்கிற கருப்பொருளின் மூலமாகவும், பிற இயக்குனர்களிடமிருந்து கிம் தனித்து அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது தலைமுறையிலான மற்ற கொரிய திரைப்பட இயக்குனர்கள் Hong Sang-soo அல்லது Lee Chang-dong போன்றோருடன், கிம் கி தக் எந்தவொரு பொதுமைத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை. எளிய வர்க்க நிலையிலிருந்து வளர்ந்து வந்தது மற்றும் திரைப்படங்கள் எடுப்பது தொடர்பாக முறையான பயிற்சிகள் ஏதும் இல்லாமலும் அவர் இத்துறைக்கு வந்து, சிறந்த படங்களைக் கொடுப்பது எல்லாம் சேர்ந்து, ஏனைய திரைப்பட இயக்குனர்களிலிருந்து அவரை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. கதை சொல்ல எடுத்துக்கொள்ளும் பொருள் அடிப்படையில், நடுத்தர மற்றும் மேல்வர்க்க கொரிய சமூகத்திடமிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் உரிமைகள் இல்லாத கதாபாத்திரங்களில்தான் பெரும்பாலும் கவனம் செலுத்துகிறார். 

கிம் கி தக்கின் படங்களுக்கு ஒரு விசித்திரமான சூழ்நிலை நிலவுகிறது. அதாவது, அவரது படங்கள் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைக் கண்டிருக்கின்றன. திரைப்பட விழாக்களில் கிம் கி தக்கின் படங்கள் திரையிடப்படுகிறது என்றால், அப்படத்தைப் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதுகிறது. உலகெங்கிலும் பல மூலைகளிலிருந்தும் பாராட்டப்படுகிற கலைஞனாக கிம் கி தக் இருக்கிறார். குறைந்த முதலீட்டில் படங்கள் எடுத்து, அதன் மூலம் திரைப்பட விழாக்களில் பங்கேற்க முடியும், விருதுகள் வாங்கமுடியும் என்பதற்கும், கதை நன்றாகயிருக்கும் பட்சத்தில், பட்ஜெட் ஒரு பொருட்டல்ல என்பதற்கும் கிம் கி தக், உதாரணமாக இருக்கிறார். ஆனால், அவரது படங்களுக்கு உள்நாட்டிலேயே சில விதிவிலக்கான சம்பவங்களும், முரண்பாடான நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. உலகெங்கிலும் கவனிக்கப்படுகிற கிம் கி தக், கொரிய விமர்சகர்களையோ, அதிக எண்ணிக்கையிலான கொரிய பார்வையாளர்களையோ சென்றடையவில்லை. அவரது தாக்கங்கள், அழகியல், திரைப்படங்களில் கதைசொல்லும் போக்கு, உள்ளூர் மற்றும் சர்வதேச தரத்தில் அவருக்குக் கிடைக்கிற வரவேற்பு அடிப்படையில், கிம் கி தக், தனது சொந்த உலகத்தில் வசிப்பது தெரிகிறது.

ஒரு படைப்பாளியின் படங்கள் ஏதோவொரு வகையில், அவரது கடந்தகால வாழ்வு மற்றும் சிறுபிராய நினைவுகளோடு சம்பந்தப்பட்டிருக்கும். அதன்படி, கிம் கி தக்கின் இளமைப்பருவத்தையும், வாழ்க்கையில் கடந்துவந்த பாதையையும் கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

Image result for kim ki duk

கிம், 1960-ல் போங்க்வாவில் (Gyeongsang மாகாணத்திற்கு வடக்கே, Gangwon மாகாணத்திற்கு தெற்கே, இந்த Bonghwa உள்ளது) பிறந்தார். அவருக்கு ஒன்பது வயதாகயிருந்தபொழுது, அவரது குடும்பம் சியோலுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு, வேளாண் பயிற்சியளிக்கும் பள்ளியில், தனது பதினேழு வயதுவரை படித்தார். அதன்பின்பு, தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக, படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருபதிலிருந்து இருபத்தைந்து வயது வரை, கடற்படையினராகப் பணியாற்றினார். அங்கு அவர் நல்ல உடல் தகுதியுடன், நன்றாகயிருந்ததாகவே கூறுகிறார். ஆனால், அங்கும் அவர் ஐந்து வருடங்களுக்குமேல் வேலைசெய்யவில்லை. அதன்பிறகு, போதகர் (சமய அறிவுரை கூறுபவர்) ஆகும் எண்ணத்தில், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான தேவாலயத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி பணியாற்றியுள்ளார். 1990-ஆம் ஆண்டில், அவர் விமான பயணச்சீட்டு வாங்குவதற்காக, அனைத்துப் பணத்தையும் எடுத்துக்கொண்டு, பாரிஸுக்குச் சென்று, அங்குள்ள தெருக்களில் தான் வரைந்த ஓவியங்களை விற்பதில், இரண்டு வருடங்களைச் செலவிட்டார். இதுதான், அவருக்கு வாழ்நாள் முழுவதிற்குமான மனதிற்கினிய தொழிலாக, பொழுதுபோக்காக இருந்தது. 

Image result for Leos Carax's Les Amants du Pont-Neuf.
Figure 1 Les Amants du Pont-Neuf

கிம் இந்த நேரத்தில்தான், வாழ்க்கையில் முதன்முறையாகத் திரையரங்கிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறார். அவையிரண்டுமே, அவருக்குள் மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்தியதை நினைவுகூர்கிறார். அந்த இரண்டு படங்கள்: Silence of the Lambs மற்றும் Leos Carax-ன் Les Amants du Pont-Neuf.

Related image
Figure 2 Silence of the Lambs

கொரியாவுக்குத் திரும்பியபின் புதிய ஆர்வம் ஒன்று அவரைத் தொற்றிக்கொண்டது. உள்ளூரில் நிகழ்கிற திரைக்கதை எழுதும்போட்டிகளில், கலந்துகொண்டு ஸ்கிரிப்ட் எழுதத்துவங்கினார். 1993-ஆம் ஆண்டில், ” A Painter and a Criminal Condemned to Death” என்ற திரைக்கதைக்காக, முதல் விருதினை, திரைக்கதைப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றார். இதன் தொடர்ச்சியாக 1994-ஆம் ஆண்டில், KOFIC (கொரிய திரைப்படக் கழகம் மற்றும் கொரியா மோஷன் பிக்சர் ஊக்குவிப்புக் கழகம்) ”ரெட்டிப்பு வெளிப்பாடு (Double Exposure)” எனும் தலைப்பில் திரைக்கதைப் போட்டியை நடத்தியது. இதில் கிம் கி தக், மூன்றாம் இடம் பெற்றார். 1995-ஆம் ஆண்டில் அதே அமைப்பு, “Jaywalking” என்ற தலைப்பில் திரைக்கதைப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. அதிலும் பங்கேற்ற கிம் கி தக், முதல் இடம் பிடித்தார். அதற்கான பரிசும், விருதும் கிம்மிற்கு வழங்கப்பட்டது.
1996-ஆம் ஆண்டு, Joyoung தயாரிப்புக் கம்பெனி வாயிலாக, தன் முதல்படமான Crocodile-ஐ எடுத்தார். சியோலில், ஹான் நதியின் கரையில் வாழ்கிற ஒரு மனிதனின் கதையை இத்திரைப்படம் சொல்கிறது. அதே நதியில் மூழ்கி தற்கொலைசெய்துகொள்ள முயற்சிக்கிற பெண்ணை, இவன் காப்பாற்றுகிறான். காப்பாற்றிய அதே பெண்ணை வன்புணர்வு செய்ய முயல்கிறான். இருவருக்குமிடையே ஒருவித புரிதல் மற்றும் ஒத்த உணர்வு, இணக்கம் வெளிப்படும்வரையில், அப்பெண்ணின்மீதான, அவனது துஷ்பிரயோகம், காட்டுமிராண்டித்தனம் தொடர்கிறது. இப்படியாக, அந்தக் கதை, காட்சியியல் பூர்வமாக, கவிதையின் உணர்வாக நகர்ந்து கதைசொல்கிறது.

கிம் கி தக், ஆரம்பத்திலிருந்தே, தன் படைப்புகளை ஊக்குவிக்க பெருமுயற்சி எடுத்தார். அதிகமான மக்களைத் தன் படங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். படம் அதிகமான மக்கள் பார்வைக்குச் சென்றடைய வேண்டுமாயின், அப்படத்தைக் குறித்து, செய்தித்தாள்கள் கருத்து வெளியிட வேண்டும். ஊடகம் அதுகுறித்துப் பேசவேண்டும். இதன்மூலம், மக்களும், அப்படத்தைப் பார்ப்பதற்கு ஈடுபாடு காட்டுவார்கள். எனவே, பத்திரிக்கையாளர்களுக்கென இப்படத்தைத் தனியாக திரையிட்டுக்காட்ட முடிவுசெய்தார். கிம் கி தக், நேரடியாகவே ஊடகவியலாளர்களைச் சந்தித்து, இந்தப் படத்தைப் பார்க்க வரவேண்டுமெனவும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்தார். ஆனால், அவர்களில் மிகச்சிலரே, இதில் ஆர்வம் காட்டினர்.

Image result for kim ki duk 

இருப்பினும், புசான் சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து, இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்புகள் குவிந்தன. திரைப்பட விழாவில், கொரிய பனோரமா பிரிவில், Crocodile படமும், அத்தோடு சமகாலத்தில் வெளியான மேலும் சில கொரியத் திரைப்படங்களும் திரையிடப்பட்டன. கிம் கி தக், தனது சர்வதேச வாழ்க்கையைத் துவங்க, இந்தத் திரையிடல் பேருதவியாக அமைந்தது. 

Related image
Figure 3 (2002-ஆம் ஆண்டில், கிம் கி தக்கின், The Coast Guard திரைப்படம், இதே திரைப்பட விழாவில் துவக்கப்படமாகத் திரையிடப்பட்டது.)

கிம் இந்த காலகட்டத்தில், ஆண்டு ஒன்றிற்கு, ஒன்று அல்லது இரண்டு, குறைந்த பட்ஜெட் படங்களை எடுப்பார். விரைவாகவும், திறமையாகவும் படப்பிடிப்பு நடத்துவதாக, அவர் புகழ் வளர்ந்தது. 1998-ல், கிம் கி தக்கின், Birdcage Inn திரைப்படம், கார்லோ வேரி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அடுத்து, Myung Films கம்பெனி தயாரித்த The Isle திரைப்படம், 2000 ஆம் ஆண்டு வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில், போட்டிப்பிரிவில் திரையிடப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்விரண்டு படங்களுமே, திரைப்பட விழாக்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டாலும், இதில், The Isle மிகவும் சர்ச்சைக்குள்ளான படமாகவும் ஆனது. பத்திரிக்கையாளர்களுக்கான திரையிடலில், திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு இத்தாலிய பத்திரிக்கையாளர், படத்தைத் தொடர்ந்து பார்க்கப் பிடிக்காமல், பாதியிலேயே திரையரங்கை விட்டு வெளியே சென்றார். குறிப்பாக, மீன் தூண்டிலில் பயன்படுத்துகிற கொக்கியைக் கொண்டு, தற்கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியைப் பார்க்கும் எவரும், அக்காட்சியைத் தொடர்ந்து பார்க்க மனதைரியம் இல்லாமல், தலையைக் கீழே குனிந்துகொள்வர். அந்தப் பத்திரிக்கையாளர், இன்னும் ஒருபடி மேலே போய், திரையரங்கை விட்டே வெளியேறிவிட்டார். இந்தப் படத்தைக் குறித்தும், கிம் கி தக்கைக் குறித்தும் சிறப்பான மற்றும் மோசமான விஷயங்களைப் பட்டியலிடுகிறபொழுது, இந்த சர்ச்சைக்குரிய அதிர்ச்சியையும் அதில் இணைத்துக்கொள்வர். 

மேலும், திரைப்பட விழாவின் முக்கிய நடுவர்களால், இப்படத்திற்கு விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றாலும், இது கிம் கி தக்கின் புகழை ஐரோப்பாவில் உறுதிப்படுத்தியது. அதே சமயம், The Isle படத்திலிருந்து, கவனிக்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சங்களைக் குறித்தும், உலகெங்கும் உள்ள பல விமர்சகர்கள், மக்கள் உயர்த்திப்பேசினர்.
இருப்பினும், வழக்கம்போல, பெரும்பாலான உள்ளூர் விமர்சகர்கள் இப்படத்தை விரும்பவில்லை. குறிப்பாக பெண்ணிய விமர்சகர்களால், ’அரக்கன்’, ‘மனநோயாளி’, ‘ சைக்கோ’ அல்லது ‘உபயோகமற்ற ஃப்லிம்மேக்கர்’ என்று கிம் கி தக் விமர்சனத்திற்கு உள்ளானார். இயக்குனர் மற்றும் அவரது விமர்சகர்களுக்கிடையில் நடந்துகொண்டிருக்கும் மோதலை இது இன்னும் தூண்டிவிட்டது. இப்பிரச்சினை,

”இனிமேல் உள்ளூர் செய்தி ஊடகங்களுக்கு எவ்வித பேட்டிகளையும் அளிக்கமாட்டேன்”
என்று கிம் கி தக் அறிவிக்கும் வகையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆனால், அந்த வாக்குறுதி மிக விரைவிலேயே கைவிடப்பட்டது. சில காலங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் உள்ளூர் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கத் துவங்கினார்


Related image

அடுத்த, இரண்டு ஆண்டுகளில், இன்னும் அதிகமான திரைப்பட விழா அழைப்பிதழ்கள் இவரைத் தேடிவந்தன. வெனிஸில் Address Unknown திரைப்படம் தேர்வானது, பெர்லின் திரைப்பட விழாவில் Bad Guy திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால், கேன்ஸ் திரைப்பட விழா, இந்த ஃபிலிம்மேக்கரின்(கிம் கி தக்) மீது, மிகக்குறைந்தளவிலான ஈடுபாடே காட்டியது. சொல்லப்போனால், அதிகமாகக் கவனத்தில்கொள்ளவில்லை. அதே சமயத்தில், கொரியாவில், கிம் கி தக்கின் Bad Guy திரைப்படம், முதல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அடைந்தது. இத்திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து, இதில் நடித்ததால், தொலைக்காட்சி டிராமாவின் மூலம் பிரபலமடைந்த, Jo Jae-hyun முன்னணி நடிகரானார். இப்படத்தின் வெற்றிக்கு அவரும் ஒரு காரணம். அதேசமயம், உள்ளூர் சி.ஜெ. எண்டர்டெய்ன்மெண்ட் மூலம், நடத்தப்பட்ட சிறப்பான, கவர்ச்சிகரமான மார்க்கெட்டிங் பிரச்சாரமும், படத்தின் பெரிய வெற்றிக்கு பங்களித்தது.


கிம் கி தக்கின் அடுத்த படமான, The Coast Guard-ல் உயர்ந்த நட்சத்திர நடிகராக இருக்கும் Jang Dong-gun மையக்கதாபாத்திரமாக நடித்தார். ஆனால், இறுதியில், எதிர்பார்ப்புகளுக்கும் கீழாகத்தான், அவரது நடிப்பு இருந்தது. இதுவரை, கிம் கி தக்கின் படங்களில் நடித்த ஒரே நட்சத்திர நடிகர் இவர் மட்டுமே. 
 
கிம் கி தக், பெளத்தப் பின்னணியில் எடுத்த, அவரது ஒன்பதாவது திரைப்படம் “Spring, Summer, Fall, Winter... and Spring”, அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்றளவும், அவரது படங்களைக் குறித்துப் பேசுகிறபொழுது, இப்படத்தை ஒதுக்கிவிட்டு பேசமுடியாது. அவர் இப்படத்திலும், சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட கூறுகளில் கவனம் செலுத்தியபோதிலும், இதில் இன்னும் அதிகமாக, உணர்வுடன், ஆத்மீகமான அம்சங்களைக் கதைக்களனாக்கியுள்ளார். அவரது வேலை, தத்துவார்த்தமிக்க, ஆன்மீகக் கேள்விகளையெழுப்பதும், அதைக் குறித்து விவாதிப்பதுமாக இருந்தது. வன்முறையைக் குறைத்து, மீட்பு மற்றும் மன்னிப்பு ஆகிய கருப்பொருட்களை முன்னிலைப்படுத்துகிறது இப்படம். கிம் கி தக்கின் இந்த மென்மையான பாணி, சாத்வீகமான அணுகுமுறை வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ’Spring, Summer, Fall, Winter... and Spring’ மற்றும் ‘3-Iron’ ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் மிகப்பெரிய, வலுவான வெற்றியடைந்தது. திரைப்பட விழா நடுவர்களாலும் வியந்து பாராட்டப்பட்டன. விருதுகள் வழங்கப்பட்டன. கிம் கி தக் என்றாலே வன்முறை, காட்டுமிராண்டித்தனம், அசூயை என்றெல்லாம் நினைத்திருந்தவர்களுக்கு, இப்படம், அவரைப் பற்றிய பார்வையை மாற்றியது. விருப்பத்திற்குரிய பத்து உலகப்படங்களைச் சொல்லச்சொன்னால், பெரும்பாலும், அதில் இப்படமும் ஒரு இடத்தைப் பிடித்திருக்கும். கிம் கி தக், காட்சியியல் ரீதியில் கதை சொல்வதில் வல்லவர். ”முப்பது வயதில்தான், முதன்முறையாக திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறேன்” என்று சொன்னாலும், இவரது படங்கள், பல கல்லூரிகளில், சினிமா மொழியைக் கற்றுக்கொள்வதற்கான பாடமாக வைத்துள்ளனர். கிம் கி தக்கின் படங்களை அலசி ஆராய்ந்து, எப்படி அவர் கதை சொல்கிறார் என்பதைக் குறித்தெல்லாம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அவர், ஆரம்ப காலங்களில் ஓவியராகவும் இருந்ததால், சினிமாவிற்கேயுரிய காட்சிமொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், கிம் கி தக்கின் அடையாளம், இந்தக் காட்சிமொழி மட்டுமேயல்ல. அவர் மெளனத்தைப் பயன்படுத்துகிற விதம், கதைக்குள் பல அடுக்குகளைக் கொண்டுவருதல், காதல் - காமம் சார்ந்த தர்க்கவிசாரணைகளை நிகழ்த்துதல், முக்கியமாக இசையைப் படங்களில் கதைசொல்லலுக்கும், உணர்விற்கும் பயன்படுத்தும் முறை, என அவரிடமிருந்து அவதானிக்க எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. இந்த அத்தனை விஷயங்களையும் “Spring, Summer, Fall, Winter... and Spring” படத்திலும் பார்க்கமுடியும். 


Image result for spring summer fall winter and spring

Figure 4 SPRING, SUMMER, FALL, WINTER...AND SPRING


2004-ஆம் ஆண்டில், பெர்லினில், Samaritan Girl படத்திற்காக, சிறந்த இயக்குனர் விருது பெற்றதோடு, அதே வருடத்தில் வெனிஸ் திரைப்பட விழாவிலும் 3-Iron படத்திற்காக விருது வாங்கினார். இந்த இரு படங்களுமே, தற்செயலாக, சுமார் இரண்டு வார கால இடைவெளிவிட்டு படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு திரைப்படப் படைப்பாளியாக, கிம் கி தக்கின் மறுக்கமுடியாத பலம், உரையாடலை அதிகமாகத் தவிர்த்துவிட்டு, காட்சிகளின் மூலமாகவே கதையை நகர்த்துவது. காட்சிகள்தான், கதையை ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திச் செல்லக்கூடியதாக இருக்கும். ஒலியைக்காட்டிலும், பிம்பங்கள்தான் மனதில் ஆழமாகப் பதியும் இயல்புடையன. அடுத்து, உரையாடல் என்றால், முதலில் அந்த மொழி பிறருக்குப் புரியாது. எனவே, துணை-உரைகளைப் (Subtitle) படித்து, கதையைப் பின் தொடர வேண்டும். ஆனால், கிம் கி தக்கின் திரைப்படங்களைப் பொறுத்தவரை, திரைக்கு கீழே, சப்-டைட்டில் பார்க்கவேண்டிய வேலையே, அதிகமாக இருக்காது. விதிவிலக்காக, One on One- படத்தில் அதிகமான உரையாடல் பகுதி உள்ளது. 2013-ல் வெளியான அவரது ’Moebius’- திரைப்படம் முழுக்க முழுக்க வசனங்களைத் தவிர்த்து படமாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள், ஒரு வார்த்தைகூட பேசாமல், அவ்வளவு சிக்கலான கதையைப் புரியவைத்திருக்கிறார் இயக்குனர். காட்சியியல் ரீதியாகக் கதைசொல்வதற்கு இந்தப் படம் மிகச்சிறந்த உதாரணம். மேலும், சினிமா உலகளாவிய மொழியாக இருப்பது, அது காட்சிகளின் மூலமாக நகர்ந்தால் மட்டுமே சாத்தியப்படுகிறது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள், துணை-உரைகளைப் படித்துப் படத்தைப் புரிந்துகொள்வதைவிட, காட்சியைப் பார்த்தே எளிமையாகப் புரிந்துகொள்கின்றனர். மொழி தெரியாத வெளிநாட்டுப் பார்வையாளர்களும், கிம் கி தக்கின் படங்களை அணுகுவதற்கும், புரிந்துகொள்வதற்கும், விரும்புவதற்கும் இந்த காட்சியியல் ரீதியிலான கதைசொல்லல், மிக முக்கியமாகப் பயன்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருக்கும் பார்வையாளரும், கிம் கி தக்கின் படங்களை எளிமையாக அணுகலாம்.


Image result for Moebius movie

Figure 5 Moebius @ Venice

சுய-கற்றலின் வாயிலாக இயக்குனரான அவரது படங்களில், குறிப்பாக அவர் ஆரம்பகாலத்தில் எடுத்த திரைப்படங்களில், சில கடினமான விளிம்புநிலைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இன்றுவரை, அதுவே, அவரது சர்ச்சைக்குரிய ஆதாரமாக இருந்துவருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பல கொரியவிமர்சகர்கள் அவரது திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சூடுபிடித்திருக்கிறது. அவர்களிடமிருந்து ஒப்புமை உடைய, ஒருமனதான விமர்சனக் கருத்துக்களே வருகின்றன. குறிப்பாக, பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள், சச்சரவிற்கான ஆதாரமாக இருந்து வருகிறது. கிம் கி தக் ஒருபோதும், தன்னுடைய வெறுப்பாளர்களை வெற்றிகொள்ளமாட்டார், எனினும், கிம் இப்போது கொரியாவின் மிகப்பிரபலமான மற்றும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

The Films of Terrence Malick, Ranked From Worst to Best | IndieWire

Figure 6 Terrence Malick

The Tree of Life மற்றும் The Badlands போன்ற படங்களை எடுத்த டெரன்ஸ் மாலிக், அவரது நாற்பது வருட வாழ்க்கையில் ஆறு திரைப்படங்கள் மட்டுமே இயக்கினார். வேறு சில படங்களில் தயாரிப்பாளராகப் பணிபுரிந்திருக்கிறார். ஆவணப்படம், குறும்படம் என பங்களிப்புச் செலுத்தியிருந்தாலும், முழுநீளத் திரைப்படம் என்று பார்க்கிறபொழுது குறிப்பிட்ட நாற்பது வருடத்தில் ஆறு படங்கள் என்ற கணக்குதான் வருகிறது. ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் ஐந்திலிருந்து பத்து வருட கால இடைவெளி கூட எடுத்துக்கொள்கிறார். Badland 1973-ல் வெளியானது. Days of Heaven- 1978, The thin Red line-1998, The new world – 2005, The Tree of Life – 2011, To the Wonder – 2012. அலஜெந்த்ரோ கொடரோவ்ஸ்கி, அதே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏழு படங்கள் எடுத்திருக்கிறார். கிம் கி தக், 1960-ஆம் ஆண்டு, போங்க்வாவில் பிறந்தவர். இது தென்கொரியாவில், சியோலிலிருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு நாடு. 1996-ல் கிம் கி தக்கின் முதல் படம் குரோகடைல் வெளியானது. அதிலிருந்து கணக்குவைத்தால், இதுவரை, இருபத்தி இரண்டு படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஐரோப்பாவில், ஊர் ஊராகச் சுற்றித்திரியும் நாடோடிக் கலைஞனின் வாழ்க்கையைக் கைவிட்டு, ஒரு திரைப்பட இயக்குனராக மாறுவது என்று இந்தக் காலகட்டத்தில்தான் முடிவுசெய்தார்.

நான் ஐரோப்பாவிலிருந்து வந்தேன். ஏனென்றால், கொரிய சமூகத்திலிருந்தும், என் வீட்டிலிருந்தும் வெளியேற விரும்பினேன்” என்று கூறுகிறார். ”என் தந்தை முன்னாள் போர் படைத்துறை வீரர். வடகொரியாவில் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளைத் தாங்கினார். அவர் தனது உடலில் நான்கு தோட்டாக்களைச் சுமந்துகொண்டுதான் வீடு திரும்ப முடிந்தது. அதுவும், கைதிகளை இடமாற்றம்(பண்டமாற்றம்) செய்துகொண்டபிறகுதான் வந்தார். ஆனால், அவர் முன்பிருந்த அதே மனிதனாக, இப்போது இல்லை: அவருக்குள் தோல்வியின் உணர்வு ஊடுருவியிருந்தது மற்றும் அவரிடமிருந்து கிளம்பும் அசாதாரண கோபத்தை, ஒவ்வொருநாளும் என்மீது காட்டுவார். நான் என் தந்தையால் பயமுறுத்தப்பட்டேன். ஆனால், நான் வளர்ந்தபோது, அவர் இந்த சமுதாயத்தின் இன்னுமொரு பலியாள் என்பதை உணர்ந்துகொண்டேன். தென்கொரியா, இன்னும் அந்தப் போரின் விளைவுகளால் பாதிக்கப்படுகிறது. ஆனால், யாரும் அதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. அதனால்தான், நான் இந்தக் கருப்பொருளில் எல்லாம் கவனம்செலுத்தி, படம் எடுப்பது என்று தீர்மானித்தேன்: வன்முறை, வெறுப்பு, அதிர்ச்சி, தனிமை மற்றும் தொடர்புகொள்ள இயலாமை. நான் தனிப்பட்ட முறையில் இந்தச் சூழ்நிலைகளை அனுபவித்திருக்கிறேன். ஆனால், அப்படித்தான் என் நாடும் உள்ள
” என்கிறார் கிம்

குறிப்பாக, வெனிஸில், பொதுமக்களாலும், விமர்சகர்களாலும், மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்ட பின்பும், அவரது படங்களில் உள்ள பேசுபொருள்கள் மற்றும் கொடூரமான வன்முறைக்காட்சிகளின் சித்தரிப்பு காரணமாக பலத்த விவாதங்களும் சர்ச்சைகளும் எழுகின்றன. அவரது 3-அயர்ன் திரைப்படம் 2004-ல் Leone d'Argento விருதினை வென்றது. அவரது Pieta திரைப்படம் நான்கு வருடங்களுக்கு முன்பு Leone d'Oro விருதினை வென்றது.

”வெனிஸ் திரைப்பட விழா, எனக்கு மிகவும் விசேஷமானது. ஏனென்றால், அதுதான் என்னை, உலகப்புகழாக்கியது. இந்தக் காரணத்திற்காகவும், பல ஆண்டுகளாக, எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு கொடுத்ததற்காகவும், அதனது இயக்குனர் ஆல்பெர்டோ பார்பெராவிற்கு (Alberto Barbera) நன்றிசொல்ல வேண்டும். பத்திரிக்கையாளர்கள் என் பெயரை நினைவில் வைத்திருந்தால், உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்க அழைக்கப்பட்டால், நான் அவர்களுக்கும், வெனிஸ் திரைப்பட விழாவிற்கும் நன்றிசொல்ல வேண்டும். இத்தகைய திரைப்பட விழாக்கள் அடிப்படையானவை என நினைக்கிறேன். இக்காலகட்டத்தில் திரைப்படங்கள் சுயபரிசோதனை செய்வதற்காக எடுக்கப்படுவதில்லை. பொதுவான பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன.”

Image result for kim ki duk in venice film festival

கொரிய இயக்குனர்களின் படங்கள், உரையாடல் மற்றும் கதாபாத்திரச் சித்தரிப்பு போன்றவற்றில் பெரும்பாலும் மினிமலிஸ்ட்டாகவே(minimalist) செயல்படுகின்றன.

”நாம் பேசும்போது, அடிக்கடி பொய் சொல்கிறோம். ஆனால், நம் செயல்கள் எப்போதுமே உண்மையாக இருக்கின்றன. நமது உண்மையான மொழி என்பது ’எப்படி நடிக்கத் தீர்மானிக்கிறோம்’ என்பதைப் பொறுத்ததுதான். எப்படி நடிக்கப்போகிறோம்?, என்பதில் கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. எனவே, எனது கதாபாத்திரங்கள், எதாவது ஒரு செயலைச் செய்துதான், தகவலைக் கடத்துகின

”. 71-ஆவது பதிப்பில், கிம் கி தக்கின், One on One படத்தின் மூலமாகத்தான், ’Giornate degli Autori/Venice Days’ துவங்கியது. கதைப்படி, உயர்நிலைப்பள்ளியில் படிக்கிற பெண்ணை, வன்புணர்வு மற்றும் கொலைசெய்கின்றனர். அந்தக் குற்றத்திற்குச் சந்தேகிக்கப்படுகிற நபர்களை, வேதனைப்படுத்துதல் என கதை பயணிக்கிறது

“இந்தப் படம் வன்புணர்வு பற்றியது. ஆனால், உண்மையில், சர்வாதிகாரம் எப்படி வேலைசெய்கிறது என்பதை உருவகமாக இப்படத்தின் வாயிலாகக் காட்ட விரும்பினேன். கொரியா உட்பட, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சர்வாதிகாரிகளின் கீழ் வாழ்ந்திருக்கின்றன. என் நாட்டில் ஜனநாயகத்தை அடைவதற்கு ஒரு பெரிய தியாகம் தேவையாகயிருக்கிறது. இன்றும் அந்த இலக்கை நாம் முழுமையாக அடைந்துவிடவில்லை என்று நான் நம்புகிறேன். சொல்லப்போனால், உண்மையில் ஒருவித பின்னடைவு நடைபெறுகிறது என்றே நினைக்கிறேன்

Related imageFigure
7 One on One

”One on One திரைப்படத்தின் வாயிலாக, சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னால், ஒரு அரசாங்கம் அவசியம் இல்லை என்று காட்ட விரும்பினேன்: அது ஒரு தனி நபராகக்கூட இருக்கலாம். சர்வாதிகாரிகள் குடும்பங்களில் பிறந்தவர்கள்; அவர்கள் காதலர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ இருக்கமுடியும். நாம் வாழ்வதற்காகத் தேர்ந்தெடுத்த எல்லா கோழைத்தனமான வழிகளையும் காட்டமுயன்றேன்.”
அவரது அடுத்த திரைப்படத்தைப் பற்றி ஒரு நிச்சயமற்ற நிலைப்பாடு உள்ளது. அதைக்குறித்துக் கேட்கிறபொழுது

”என் அடுத்த படம் எப்படி இருக்குமென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், அது மனித வாழ்க்கையைப் பற்றியப் படமாக இருக்கும் என்பதை மட்டும் நான் அறிவேன்
என்கிறார் கிம் கி தக்

அவரது சமீபத்திய திரைப்படமான, ’human space time and human’ உணவின் மூலமாக, ஒரு அரசியலைச் சுட்டிக்காட்டுகிறது. இப்படம் இயல்புநிலைக்கு மாறாக, ஒருவித மாயத்தன்மையுடன் பயணிக்கிறது. கப்பல் பயணத்தில் ஒரு அரசியல்வாதி, புதுமணத் தம்பதி, அடியாட்கள், குடும்பத்தினர் மற்றும் இன்னும் சில விலைமாதுக்களும் உள்ளனர். அதே கப்பலில் ஒரு முதிய மனிதர், தூசிகளையும், மண்களையும் சேகரிக்கிறார். அன்றைய இரவு, அந்த ஜோடியில், காதலனை அடித்துக் கொன்றுவிட்டு, அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்கின்றனர். முதலில், அரசியல்வாதி தந்தையின் இதுபோன்ற தகாத செயல்களைக் கண்டிக்கிற மகனும் கூட, அந்தப் பெண் மீது உடல்கவர்ச்சியுற்று, அவளை மோகிக்கிறான். வன்புணர்கிறான். ஆனால், இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிற வயதான முதியவர் ஏதொரு எதிர்ப்பினையும் தெரிவிப்பதில்லை. இங்கிருந்துதான், அந்தக் கப்பல் ஒரு மாயத்தன்மையான சூழலுக்குள் செல்கிறது. அதாவது, கப்பல் அந்தரத்தில் மிதக்கிறது. யாராலும் கீழேயிறங்க முடியாது. அவர்கள் உண்பதற்கும், குறைவான உணவுகளே உள்ளன. மாலுமிகளும் இந்நிலை குறித்து மிகவும் பயப்படுகின்றனர். இந்தச் சமயத்திலும், அந்த வயதானவர் ஏதொரு கவலையுமில்லாமல் தூசிகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார். வன்புணர்வுக்கு உள்ளான பெண்ணிற்கு மட்டும், இந்த வயதானவருக்கு எல்லா விஷயமும் தெரியும், ஏன் இந்தக் கப்பல் அந்தரத்தில் மிதக்கிறது? எப்போது அது தரையை வந்தடையும்? என்ற தகவல் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறார். ஆனால், அந்த வயதானவர் வாயைத் திறந்து ஏதும் பேசுவதில்லை.

Related imageFigure 8 Human Space time and human படப்பிடிப்புத்தளத்தில் கிம் கி தக்
அந்தரத்தில் மிதக்கும் கப்பலில் ஒரு புதிய பிரச்சினை தீவிரமெடுக்கத் துவங்குகிறது. அதாவது உணவுத் தட்டுப்பாடு. இதே கப்பலை ஒரு நாடு என உருவகப்படுத்திக்கொண்டால், அந்த அரசியல்வாதி எப்படி மக்களை ஏமாற்றுகிறார் என்பதையும், அடியாட்களை துணைக்கு வைத்துக்கொண்டு எப்படி மக்களை அடக்கி ஒடுக்கிறார் என்பதையும், மாலுமிகள் எதிர்த்துக் கேள்விகேட்கிறபொழுது, அவர்களை, அடியாட்களின் துணைகொண்டு, எப்படி அடக்குகிறார், உணவிற்காக கிளர்ச்சி எப்போது வெடிக்கும்? என அத்தனையையும் கண்டுகொள்ள முடியும். கிம் கி தக், இந்தப் படத்தின் காட்சிகளில், பல அடுக்குகளை விதைத்திருக்கிறார். கப்பலில் உணவுத்தட்டுப்பாடு விஸ்வரூபமெடுக்கிறது. மக்களுக்கு, ஒரு உருண்டை சோறு என்று பிரித்துவிட்டு, அரசியல்வாதியும், அவனது மகனும், அடியாளும் விதவிதமான உணவுகளைச் சாப்பிடுகின்றனர். ஆனால், அரசியல்வாதி, “மக்களுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். நீங்கள் சில தியாகங்களைச் செய்யவேண்டும்” என்றெல்லாம் வழக்கமான அரசியல்வாதிகள் போலவே, பொய்சொல்லி, ஏமாற்றி, மக்களைத் தொடர்ந்து பசியில் தவிக்க விடுகிறார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மக்கள், உணவைத் தேடித் தின்ன ஆரம்பிக்கின்றனர். அத்தகைய மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர் அடியாட்கள். 
பசியின் தேவையையும், அது அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் மழுங்கடித்துவிடும் என்பதையும், இந்தப் படத்தின் ஒரு காட்சி உணர்த்துகிறது. இதே கப்பலில் பயணம் செய்கிற மற்றொரு காதல் ஜோடி, அடியாட்களில் சிலருக்கு, யாருக்கும் தெரியாமல் பணம் கொடுத்து, சில உணவுகளைச் சாப்பிடத் துவங்குகின்றனர். அது தெரிந்து, அந்தக் காதலன் மற்ற அடியாட்களால் கொல்லப்படுகிறான். காதலி, காதலன் இறந்ததை நினைத்து அழுகிறாள். அந்நேரத்தில், காதலனுக்கு அருகில் ஒரு வாழைப்பழம் கிடக்கிறது. சற்றுநேரத்திலேயே, பசி எனும் வாதை நினைவிற்கு வந்தவளாக, அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிடத் துவங்குகிறாள். சற்றுமுன் காதலனுக்காக அழுதுகொண்டிருந்தவள், இப்போது, சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். நெற்றிப்பொட்டில் துப்பாக்கி இருந்தபொழுதும், இன்னும் சற்று நேரத்தில் தானும் இறக்கப்போகிறேன், என்று தெரிந்திருந்தாலும், அக்குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் பசியைப் போக்கிக்கொள்வதுதான் அவளது முதல் தேவையாகயிருக்கிறது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுதே, அவளும் கொல்லப்படுகிறாள். கப்பலின் அறைகளுக்குள் மக்கள் திருட்டுத்தனமாக அழைக்கப்பட்டு, அறையைப் பூட்டச்செய்து, வெடிகுண்டுகள் வீசி, அவர்களைக் கொல்கின்றனர் அடியாட்கள். அந்த முதியவர், இறந்துபோனவர்களின் உடல்பாகங்களை அறுத்துப் பத்திரப்படுத்துகிறார். துப்பாக்கி குண்டு துளையிட்ட இடத்தில், சேகரித்த மண்ணைத்தூவி, அந்தத் துளையில் விதைகளை வைத்து மூடுகிறார். உணவுப்பற்றாக்குறை அதிகமாக, ஆக, அரசியல்வாதிக்கும், அடியாளுக்கும் இடையே பகை மூள்கிறது. ஒரு கட்டத்தில் மாலுமியைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், எதிர்பாரா விபத்தில், மீதமிருந்த சொற்ப உணவுகளும் எரிந்து சாம்பலாகின்றன. 
எதைச் சாப்பிட்டு வாழ்வது? என்ற பெருங்குழப்பமும், கேள்வியும் எழுகிறது. விலைமாதர்களின் மார்புகளை அறுத்துச் சுவைக்கின்றனர். மனிதக் கறி தின்பவர்களாக அவர்கள் மாறிப்போகின்றனர். அந்த முதியவர் மட்டும், சேகரித்த மண்களைக் கொண்டு, தன் அறைக்குள் செடிகொடிகளை வளர்த்துவருகிறார். கோழி ஒன்றும் அவரிடம் உள்ளது. அது முட்டையிடுவதற்காகக் காத்திருக்கிறார். வன்புணர்வுக்கு உள்ளான பெண், கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்து, ஒரு வகையில், நானும் இந்தக் குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறேன், என்ற உணர்வில், அரசியல்வாதியின் மகன், அப்பெண்ணைக் கவனித்துக்கொள்கிறான். கப்பலில், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகின்றனர். இப்போது மூன்றுபேர் மட்டுமே, எஞ்சியிருக்கின்றனர். அரசியல்வாதியின் மகன், கர்ப்பம்தரித்த அந்தப்பெண், அந்த வயதான முதிய மனிதர். 
ஒருகட்டத்தில், மனிதக்கறி அனைத்தும் தீர்ந்துபோகிறது. ஆனால், அவனுக்கும்(அரசியல்வாதியின் மகன்) பசியின் வேதனை கொல்கிறது. அந்த முதியவரும், அப்பெண்ணின் பசிக்காக, தன் உடல் பாகத்தை அறுத்துக்கொடுத்தபடி, இறந்துபோகிறார். இப்போது, அந்த முதியவர் இருந்த அறை, பெண்ணின் கட்டுப்பாட்டில் வருகிறது. கோழி, முட்டையிடும் வரைக் காத்திருப்பதாகச் சொல்கிறாள். ஆனால், இப்போது கணவனாகயிருக்கும், அந்த அரசியல்வாதியின் மகன், அவள் சொல்வதைக் கேட்பதில்லை. பசியில் அனைத்தையும் மறந்துவிடுகிறான். அந்தக் கோழிகளைச் சாப்பிட நினைக்கிறான். அது நடக்கக்கூடாது என்பதற்காக, அந்தப் பெண் தன் சதைகளை அறுத்துக்கொடுத்து, சாப்பிடச்சொல்கிறாள். அவனும் சாப்பிடுகிறான். மனிதக்கறி, அவர்களுக்கு பழகிவிட்ட ஒரு உணவுப்பொருளாக மாறிவிட்டது. எனினும், தொடர்ந்து இருவருக்கும் ஏற்படுகிற பிரச்சினைகளால், எதிர்காலத்திற்காக அவள் சேமித்துவைத்திருக்கிற உணவை, அவன் சாப்பிட நினைப்பதால், சண்டை தீவிர மூர்க்கமாக நடைபெறுகையில், அவன் கொல்லப்படுகிறான்.
Image result for Human Space time and humanFigure 9 Human Space time and human
கர்ப்பம் தரித்திருந்த அந்தப் பெண், ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இறந்துபோன மனித உடல்கள் எல்லாம், இப்போது எலும்புக்கூடுகளாகயிருக்கின்றன. அதன் உடம்பில் சொருகப்பட்ட விதைகள், நன்றாக முளைத்து, மரங்களாகயிருக்கின்றன. உண்பதற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் அதிலிருந்தே கிடைக்கிறது. தாயும் மகனும் அந்த உணவைத் தேவையான அளவிற்கு உண்கிறார்கள். கப்பலிலிருந்து, மரங்கள் நன்றாக வளர்ந்து, கப்பலையே மறைக்கும்படி, கீழே படர்ந்திருக்கின்றன. காலங்கள் ஓடுகின்றன. மகனும் இளைஞனாகயிருக்கிறான். கோழிகள் பெருகியிருக்கின்றன. பின்பு, படத்தின்முடிவில், கோழி இறைச்சி, பழங்கள், காய்கறிகள் என தாயும், மகனும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிற வேளையில், மகன் காமத்தால் உந்தப்பட்டு, தாயை அணுகுகிறான். தாய், அவன் செய்கையை அறிந்து, அவனை ஒதுக்குகிறாள். மகன், விடுவதாகயில்லை. தாயை மிக மூர்க்கமாக, வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறான். அந்தப் பெண், மரங்களினூடே ஓடுகிறாள். மீண்டும், கதை ஆரம்பத்திலிருந்து துவங்குவதுபோன்ற உருவகத்தோடு, படம் முடிகிறது.

2018-ஆம் ஆண்டு வெளியான, ’human space time and human’ படமும் உலகெங்கும் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. கிம் கி தக்கின் வித்தியாசமான முயற்சியில் ஆவணப்படம் மற்றும் புனைவு கலந்த பாணியில் உருவான ’The Arirang”-ல் கிம் கி தக்கே நடித்தும் இருக்கிறார். 
குறிப்பு: கிம் கி தக் என்ற பெயரிலேயே மற்றொரு திரைப்பட இயக்குனரும் இருந்தார். 1934-ஆம் ஆண்டு பிறந்த இவர், 2017-ஆம் ஆண்டு, செப்டம்பர் 7ஆம் தேதியன்று, தனது 82-ஆவது வயதில் காலமானார். அவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1960-லிருந்து 1970 வரையிலான இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், Five Marines (1961), Barefooted Youth (1964), South and North (1965) மற்றும் Grand Evil Master Yonggary (1967) போன்ற பல செவ்வியல் சினிமாக்களைக் கொடுத்துள்ளார். பெயரைத் தவிர, இவ்விருவருக்கும் ஏதும் தொடர்பில்லை.