இலங்கை தமிழ் சினிமாவின் கதை - ‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாகியது

- தம்பி ஐயா தேவதாஸ்

யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்த ஓர் இளைஞனுக்கு சிறுவயது முதலே கலைகள் மீது அதிக ஆர்வம். இரசிகமணி கனகசெந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்ற கலை உள்ளங்கள் இவ்விளைஞருக்குக் கலை ஆர்வத்தை ஊட்டினர். அரசாங்க உத்தியோகம் பெற்று கொழும்பு வந்த இவ்விளைஞன் குரும்பசிட்டியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் சேர்ந்து ‘கமலாலயம் கலைக்கழகம்’ என்ற மன்றத்தை ஏற்படுத்தினார்.

இம் மன்றம் கொழும்பில் பல நாடகங்களை மேடையேற்றியது. 1976 ஆம் ஆண்டில் தமிழ்ச் சினிமாவில் அதிகம் பேர் ஆர்வம் கொண்டிருந்தனர். கமலாலயம் கலைக்கழத்திற்கும் இவ்வாசை ஏற்பட்டது. இவ்வெண்ணத்தைச் செயற்படுத்துவதில் ஒரு குழுவைத் தெரிவு செய்தார்கள். அக்குழுவில் இவ்விளைஞர் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவ்விளைஞரின் பெயர்தான் அ.சிவநாதன். தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் பி.சிவசுப்பிரமணியம்.

திரைப்படம் தயாரிப்பதற்கு நல்ல கதையொன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இக் கதை பற்றி இலக்கிய முன்னோடிகளான இரசிகமணி கனக செந்திநாதன், ஏ.ரி. பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்றோரிடம் விசாரித்த பொழுது, ‘இப்பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் நூலுருப் பெற்றுள்ளன. அவற்றில் பொருத்தமான கதையொன்றைத் தெரிவு செய்யுங்களேன்’ என்ற அறிவுரை கிடைத்தது. அதற்கிணங்க அ.சிவதாசனும், அவர் மனைவி உஷா சிவதாசனும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்து நாவல்களை வாசித்துப் பார்த்தார்கள். இறுதியில் ‘வீரகேசரி’ பிரசுரமாக வெளி வந்த இரண்டு நாவல்களைத் தெரிவு செய்தார்கள். ஒன்று ‘பாலமனோகரன்’ எழுதிய, ‘நிலக்கிளி’ மற்றது ‘செங்கை ஆழியான்’ எழுதிய ‘வாடைக்காற்று.’

இலங்கையரும், தென்னிந்தியப் பிரபல திரைப்பட இயக்குநருமான பாலுமகேந்திரா, கலைத்தம்பதிகளான அ. சிவதாசனுக்கும் உஷாதேவி சிவதாசனுக்கும் நெருங்கிய நண்பர். பாலுமகேந்திராவிடம் இவ்விரு நாவல்களையும் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார்கள். ‘நிலக்கிளி’யின் கதாநாயகி பதஞ்சலியின் பாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ‘வாடைக்காற்று’ நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப இலகுவாகப் படமாக்கலாம்’ என்று பதில் சொன்னார் பாலுமகேந்திரா. எனவே, ‘வாடைக்காற்று’, நாவலைப் படமாக்க முடிவு செய்தார்கள்.

எழுத்தாளர் செங்கை ஆழியான் இலங்கையில் அதிகமான நாவல்களை எழுதியவர். அவற்றில் பலவற்றுக்கு சாகித்திய மண்டலப் பரிசு போன்றவை கிடைத்திருக்கின்றன. இவர் எழுதிய ‘வாடைக்காற்று’ 1973இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளி வந்து, ஒரு சில நாட்களுக்குள்ளேயே 5000 பிரதிகளும் விற்பனையாகி விட்டன. இந் நாவலில் நூலாசிரியர் செங்கை ஆழியான் பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘7 ஆண்டுகளுக்கு முன்பு நெடுந்தீவில் சில நாட்கள் தங்கவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் விளைவாகவே ‘வாடைக்காற்று’ நவீனம் பிறந்தது. இது கற்பனையின் இனிய கனவன்று. காலத்தைப் பிரதிபலிக்காத, சமுதாயப் பிடிப்பில்லாத தயாரிப்பன்று. இக் கதையில் வரும் சம்பவங்கள் நிகழக்கூடியனதாகுமா? பாத்திரங்கள் இருக்கக்கூடியனதாமா? என்று சிலர் சந்தேகிப்பின் அவர்களுக்காக நான் இரக்கப்படுவேன். நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும், உணர்ந்தவற்றையும் தான் இந் நவீனம் பேசுகின்றது.’ இவ்வாறு செங்கை ஆழியான் எழுதியது போலவே, நாவலும் யதார்த்தம் பொதிந்து விளங்கியது உண்மைதான்.


‘வாடைக்காற்று’க்குத் திரைக்கதை வசனம் யார் எழுதுவது என்று செங்கை ஆழியானிடம் கேட்கப்பட்டது. ‘இன்னொரு பிரபல எழுத்தாளரான செம்பியன் செல்வன், வாடைக்காற்றுக்கான திரைப்பட வசனத்தை ஏற்கனவே எழுதி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். திரைக்கதை வசனப்பிரதி திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் கொடுத்துப் பதிவு செய்யப்பட்டது. முதலில் கூட்டுத்தாபனத்தில் ‘ஏ’ பிரிவில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் ‘பி’ பிரிவில் பதிவு செய்யப்பட்டு தயாரிப்புக்கு 50 சதவீத கடன் உதவி வழங்கப்படும் என்றும் கூட்டுத்தாபனம் கூறியது. ‘கமலாலயம் மூவீஸ்’ என்ற கம்பனி பதிவு செய்யப்பட்டது. திருமதி. உஷா சிவதாசன், ‘பெனின்சுலா கிளாஸ் வேர்க்’ உரிமையாளர் ஆர். மகேந்திரன், ‘சீமாசில்க்’ உரிமையாளர் எஸ். குணரெத்தினம் ஆகியோரின் பண உதவியில் படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகின. தயாரிப்பு நிர்வாகிகளாக ஏ. சிவதாசனும், பி. பாலசுப்பிரமணியமும் தொழிற்பட்டார்கள். படத் தயாரிப்புக்கு ஒரு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. அதில் ஏ.ரகுநாதன், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராஜன், பி. சிவசுப்பிரமணியம், ஏ. சிவதாசன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.


அப்பொழுது ஒரு தமிழ் இயக்குநர் 50க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் டைரக்ஷன் துறையில் கடமையாற்றி இருந்தார். ஹொலிவூட் தயாரிப்பாளர்களுடனும் வேலை செய்திருந்தார். சிங்களத் திரைப்படத் துறையில் முன்னோடியான அவர்தான் பிறேம்நாம் மொறைஸ். இவரையே திரைப்பட இயக்குநராக அந்தக் குழுவினர் தெரிவு செய்தார்கள். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய இடங்களில் ஒளிப்பதிவு துறையில் அனுபவம் பெற்றிருந்த ஒரு தமிழர் இருந்தார். அவர்தான் இலங்கையில் முதலாவது கலர்ப் படத்தை எடுத்த ஏ.வீ.எம்.வாசகம். இயக்குநரின் ஆலோசனையுடன் இக் குழு இவரை ஒளிப்பதிவாளராகத் தெரிவு செய்தது. இவர்கள் அனைவரினதும் ஆலோசனைப்படி நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்), எஸ்.யேசுரட்ணம் (பொன்னு), ஏ,ஈ. மனோகரன் (செமியோன்), டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), ஏ. பிரான்ஸிஸ் (சவிரிமுத்து), கே கந்தசாமி (சூசை), கே.ஏ.ஜவாஹர் (சுடலை சண்முகம்), எஸ்.எஸ். கணேசபிள்ளை (சிவசம்பு), லடிஸ் வீரமணி(பேயோட்டி), கே. அம்பலவாணர் (யூசுப்), சந்திரகலா (பிலோமினா), ஆனந்தராணி (நாகம்மா), வசந்தா அப்பாத்துரை (திரேசம்மா), ஜெயதேவி (அன்னம்) மற்றும் எஸ். பரராசசிங்கம், சிவபாலன், அன்ரன் ராஜன் லம்போர்ட், பிரகாசம், டிங்கிறி சிவகுரு, நேரு போன்றோர் பாத்திரத்துக்கு ஏற்றவாறு தெரிவு செய்யப்பட்டார்கள். கலைஞர் வேல் ஆனந்தன், மாலினி விஜயேந்திரா ஆகியோர் நடனமாடினார்கள். இப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ. சிவதாசன், ஒரு சிறந்த நடிகராக விளங்கினாலும் இப் படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகமான படங்களுக்கு தொகுப்புச் செய்த எஸ். இராமநாதன் இப் படத்துக்கான படத் தொகுப்பைச் செய்தார். நடிகர் கே.எஸ். பாலசந்திரனே உதவி டைரக்டர். இலங்கையில் தமிழ், சிங்கள சினிமாத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரீ.எவ். லத்தீப் முதலில் ‘புதிய காற்று’க்கு இசை அமைத்தார். இப்பொழுது ‘வாடைக்காற்று’க்கு இசை அமைத்தார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு, சுஜாதா ஆகியோர் பாடினர். திரைக்கதை வசனங்களை கே.எம். வாசகரும் எழுதினார். ஒலிப்பதிவு எஸ். சென்யோன்ஸ், ஒப்பனை செல்வராஜா, சண்டைப் பயிற்சி நேரு, ஸ்டில்ஸ் அருள்தாசன்.

‘வாடைக்காற்று’ ஆரம்பவிழா 10.02.77 இல் கொழும்பு கமலாலயம் மூவிஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. வாடைக்காற்றின் கதை பெரும்பாலும் நெடுந்தீவை நிலைக்களனாகக் கொண்டிருந்தாலும், அங்கு சென்று படமெடுப்பது மிகவும் சிரமமானதால் பேசாலையில் படம் பிடிக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பின் பின் பிலிம்சுருள்கள் மெயில் ரயிலில் கொழும்புக்கு அனுப்பப்படும். அங்கு கழுவப்பட்ட பின் மறுநாள் பேசாலைக்கு அனுப்பி அங்குள்ள ‘போலின்’ தியேட்டரில் போட்டுப் பார்க்கப்படும். அதன் பின் மேலும் படம்பிடிக்க வேண்டியதைப் பிடிப்பார்கள். இவ்வாறு ஒரு மாதம் பேசாலையில் தங்கியிருந்து படப்பிடிப்பு செய்யப்பட்டது. 43 நாட்களில் முழுப் பட வேலைகளும் முடிவடைந்தன.

திரைப்படம் வெளிவருமுன் இசைத் தட்டு வெளிவந்துவிட்டது. பாடல்கள் வானொலியில் ஒளிபரப்பாகின. இலங்கைத் திரைப்படமொன்றின் இசைத் தட்டுக்கள் முதலில் வெளிவந்தன என்ற பெருமையை முதலில் வாடைக்காற்றே பெற்றது. நல்ல விளம்பரத்தின் பின் ‘வாடைக்காற்று’ 30.03.1978 இல் இலங்கையில் பலபாகங்களிலும் திரையிடப்பட்டது.

வருடாவருடம் இலங்கையின் வடபகுதியிலும் கரையூரிலும் மன்னாரிலும் இருந்து மீனவர்கள் பருவ நிலைக்கு ஏற்ப நெடுந்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். கடலை நம்பி வாழும் அவர்களின் வெற்றி தோல்விகள், ஆசாபாசங்கள், தொழில்முறைப் பூசல்கள், கிராமத்துப் பெண்களுடன் அவர்களுக்கு உண்டாகும் காதல், அதன் விளைவுகள் போன்றவற்றை மையமாக வைத்தே கதை பின்னப்பட்டுள்ளது.


‘வாடைக்காற்றைப் பற்றி பலர் விமர்சித்தார்கள். அப்பொழுது ‘பைலட் பிறேம்நாத்’ படத்துக்காக இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர் சுந்தரராஜன் தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.

‘வாடைக்காற்று திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது, சிறந்த யதார்த்தபூர்வமான படத்தைப் பார்த்த மனத் திருப்தி எனக்கு ஏற்பட்டது. சுடலை சண்முகம் (ஜவாஹர்), விருத்தாசலம் (பாலச்சந்திரன்), மரியதாஸ்(இந்திரகுமார்), பொன்னு(யேசுரெத்தினம்) ஆகியோரின் பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. இரண்டு பாடல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் சர்வதேச ரீதியாக எங்கேயும் திரையிடக்கூடிய அற்புதப்படைப்பு.... சர்வதேசப் பரிசு பெறக் கூடிய ஒரு தமிழ்ப்படம் இலங்கையிலிருந்து நிச்சயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

நான் எழுதிய விமர்சனம் தினகரனில் (25.04.78) வெளிவந்தது. ‘நாவலின் உயிரோட்டங்களைப் புரிந்துகொண்டு நாவல் வாசகனும், திரைப்பட ரசிகனும் வேறுபாடு காணாத அளவுக்கு திரைப்படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர் பிறேம்நாத் மொறைஸ்...’ என்று எழுதினேன். வீரகேசரியில் (27.03.78) அதன் வார வெளியீட்டு ஆசிரியர் பொன் இராஜகோபால் நீண்ட விமர்சனம் எழுதினார்.


‘....வீரகேசரி பிரசுரமான ‘வாடைக்காற்று’ நாவல் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்பொழுது படமாகி வெற்றி கண்டுள்ளது. படமாக்கியவர்கள் மண்வாசனையையும் தனித்துவத்தையும் பேண முற்பட்டதால் இப்படம் வெற்றியாய் அமைந்துள்ளது. பொருத்தமான நடிகர் தெரிவு, யதார்த்தம் குன்றாத நெறியாள்கை, தனித்துவமான பாணி போன்றவை இப் படத்தின் வெற்றியாகும். வர்த்தக பாங்கிலான வலிந்து புகுத்தப்பட்ட சில காட்சிகளும் இருக்கின்றன.... சகல ரசிகர்களையும் திருப்திப்படுத்தி ஓடக்கூடிய தகைமை இப் படத்துக்கு உண்டு’ என்று எழுதினார்.


சிந்தாமணியில் (09.04.78) கு.ம. சுந்தரம், ‘ஆனந்த விகடன்’ பாணியில் விமர்சனம் எழுதினார் ‘.... கமலாலயம் கலைக்கழகம் தந்த நடிகர்கள் படத்தில் நன்றாக சோபித்தார்கள். ஜவாஹர், லடீஸ் வீரமணி, வசந்தா ஆகியோர் தம் பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளார்கள். மனோகரன், இந்திரகுமார் ஆகியோரை விட பாலச்சந்திரனே மனதில் நிற்கிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் இயற்கையாக இருக்கின்றன. சிறப்பாக நடித்திருப்பவர் யேசுரட்ணம்தான். அவர் நடிப்பில் நிறைந்து நிற்கிறார். தந்தை பிரான்ஸிஸ்ஸைவிட தாய் வசந்தா சிறப்பாக நடித்துள்ளார். ஜவாஹரும் லடீஸ்வீரமணியும் நன்றாக நடித்துள்ளார்கள். நடிகர்களில் 10 பேரைத் தெரிவுசெய்தால் அவர்களுக்கு பின்வருமாறு புள்ளி வழங்கலாம்.

1. எஸ். யேசுரட்ணம் - 65
2. கே. எஸ். பாலந்திரன் - 60
3. கே.ஏ. ஜவாஹா – 58
4. வசந்தா அப்பாத்துரை – 56
5. லடீஸ்வீரமணி – 50
6. ஏ.ஈ. மனோகரன் - 45
7. சந்திரகலா – 40
8. ஆனந்தராணி – 35
9. எஸ்.எஸ். கணேசப்பிள்ளை – 28
10. இந்திரகுமார் – 30

என்று புள்ளி வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மல்லிகை (01.04.78)யில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார். ‘.... சினிமாவுக்காக நாவலில் சில இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதிலும், அடிப்படைக்கு சிதறாமல் படமாக்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். யேசுரட்ணமும், பாலச்சந்திரனும் திறமையாக நடித்துள்ளனர். ஜவாஹர் மிகையாக நடிக்க முனைந்துள்ளார். லடிஸ் வீரமணியின் நடிப்பில் பரம்பரை நடிகனின் குழைவு தெரிகிறது. மற்றவர்களும் பாத்திரங்களை உணர்ந்து செய்கிறார்கள்.... மணல் காட்டையும் பனங்கூடலையும் கிடுகுக் கொட்டில்களையும் பின்னணியாக வைத்துக்கொண்டு இப்படியொரு அழகை பிலிம் சதுரத்துக்குள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிரமப்பட்டு தமது கடமைகளைச் செய்துள்ளனர். குடாநாட்டுப் பேச்சுத்தமிழ் கதையோட்டத்துடன் இயற்கையாக அமைகிறது.... படத்தின் வெற்றிக்கு வலுவான கதையும் பொருத்தமான பாத்திரங்களுமே முதற்காரணம் என்பதை நம்நாட்டுச் சினிமாத் துறையினர் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்’ என்று அறிவுரை கூறி எழுதினார்.

இப் படம் மத்திய கொழும்பில் (கெயிட்டி) 21 நாட்களும், தென்கொழும்பில் (கல்பனா) 8 நாட்களும் ஓடியது. யாழ்நகரில் (ராணி) 41 நாட்களும், வவுனியாவில் (ஸ்ரீமுருகன்) 20 நாட்களும், பேசாலையில் (போலின்) 21 நாட்களும், கிளிநொச்சியில் (ஈஸ்வரன்) 18 நாட்களும் ஓடியது. திருமலை நகரில் (சரஸ்வதி) 20 நாட்களும், மூதூரில் (இம்பீரியல்) 8 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், செங்கலடியில் (சாந்தி) 18 நாட்களும் ஓடிய இப்படம் மட்டக்களப்பில் (றீகல்) 7 நாட்களும் மட்டுமே ஓடியது. மலையகத்தில் ஹட்டனில் (லிபேர்ட்டி) 12 நாட்களும் ஓடிய இப்படம் பண்டாரவளையிலும் (மொடொர்ன்), மாத்தளையிலும் (தாஜ்மஹால்) தலா 10 நாட்கள் ஓடியது. 

வருடா வருடம் இலங்கைத் திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டு வந்தது. 78 இல் தமிழ்ப் படம் ஒன்றுக்குப் பரிசு கிடைத்தது. அவ்வாண்டில் சிறந்த தமிழ்ப் படமாக ‘வாடைக்காற்று’ தெரிவு செய்யப்பட்டது. இப் படத்தில் நடித்த யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆறு வருடங்களின் பின் (27.06.84) ரூபவாஹினியில் ‘வாடைக்காற்று’ திரைப்படத்தைப் பகுதி பகுதியாக ஒளிபரப்பினார்கள். வழமையைப்போல, சிந்தாமணியில் ‘சஞ்சயன்’ விமர்சனம் எழுதினார். 

‘தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தின்போது, இலங்கை தமிழ்த் திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடாது தோல்வியைத் தழுவின. இன்று அப் படங்களை ரூபவாஹினியில் பார்க்கும்போது ‘நன்றாகத்தானே இருக்கிறது’ என்று கூறும் கருத்துகளைக் கேட்கமுடிகிறது. வாடைக்காற்றில் இயற்கையான நடிப்பும் நடையுடை பாவனைகளும் இதயத்தைத் தொடுகின்றன. யேசுரட்ணமும் ஜவாஹரும் நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். வசந்தாவின் நடிப்பு மீனவ சமுதாயத்தில் நாம் காணும் ஒரு பெண்ணையே நம் கண் முன்னே காட்டுகிறது. பாலச்சந்திரனும் ஆனந்தராணியும் பாத்திரமுணர்ந்து செய்துள்ளனர்.….இதுவரை இலங்கை சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருக்கிறது ‘வாடைக்காற்று’ என்று எழுதினார்.

படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெறவில்லை. இது ஒழுங்கு, கட்டுப்பாடு, திட்டமிட்ட அடிப்படையில் உருவான புது முயற்சி. இம் முயற்சியை மேற்கொண்ட கமலாலயம் மூவீசாருக்கு இலங்கை ரசிகர்கள் என்றும் நன்றியே சொல்ல வேண்டும்.