திரைக்கதை – புலப்படாத எழுத்து – அத்தியாயம் மூன்று

ப்ரைன் மெக்டொனால்ட்
தமிழில்: தீஷா

”ஒரு முட்டாள் பேசுகிறான், ஏனென்றால் அவன் ஏதாவது சொல்ல வேண்டும்,
ஒரு புத்திசாலி பேசுகிறான், ஏனென்றால் அவனிடம் சொல்ல ஏதோவொரு விஷயம் இருக்கிறது.”
-பழமொழி

Story 101: Why Do We Tell Stories? - Animator Island

மக்கள் ஏன் கதை சொல்கிறார்கள்? கதைகள் வெறுமனே கதைகள் மட்டுமல்ல. நம் உடலில் ரத்தமும் சதையுமாக ஒட்டிக்கொண்டிருக்கும் கதைகள் ஒவ்வொன்றும், நமக்கு ஏதோவொன்றைக் கற்பிக்கும் வேலையைச் செய்கின்றன. ஆம், கதைகளின் வழி கற்பிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் கதைகள் சொல்லவும், கதைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் இதுவே முதன்மையான காரணம் என்று நம்புகிறேன், அது: கற்பித்தல்.

இதைக் கவனியுங்கள்: கதைகள் இல்லாத கலாச்சாரமே இந்த உலகத்தில் இல்லை. நம் எல்லோருக்கும் இசை இருக்கிறது, நம் எல்லோருக்கும் கதைகளும் இருக்கின்றன.
இந்த உலகில் மொழி எப்படி உருவானது? மனிதர்கள் பேசக்கூடிய மொழி, அதன் வரலாறுகளைப் பற்றியெல்லாம் படிக்கும் மக்கள், பறவைகள் எப்படி விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதேபோலத்தான் மனிதர்களும் மொழியைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். இது நாம் ஒருவருக்கொருவர் பேச வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும், இது மனிதனாக இருப்பதன் ஒரு பகுதி. தன் கருத்தை, தான் நினைத்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கும் முயற்சியில் படிப்படியாக உருவானதே மொழி. 

இதே வகைமையின்கீழ்தான் கதைகளும் வருகின்றன. அவை நம்மின் ஒரு அங்கம். தொலைக்காட்சியில், சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதுண்டு. அதில், யார் ஒருவர் அதிகமான பொருட்களை நினைவில் வைத்திருக்கிறார் என்பது போன்ற போட்டிகளை நடத்துவார்கள். இது யார் அதிகமான நினைவகத்திறனைக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டறிவதற்கான நிகழ்ச்சி. எனவே, போட்டியாளர்களிடம், ஒரு நீண்ட பட்டியல் கொடுக்கப்படும். அந்தப் பட்டியலை குறுகிய நேரத்திற்குள் படித்து, அவற்றைத் தன் நினைவகத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். யார் ஒருவரால் அதிக விபரங்களை ஞாபகம் வைத்திருக்க முடிகிறதோ, அவரே வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். நிச்சயமாக, நம்மிடம் அப்படி ஒரு பட்டியலைக் கொடுத்தால், அதிலுள்ளவற்றைப் படித்து, அவற்றை நினைவில் வைத்திருப்பதும் மிகக் கடினம். ஆனால், இந்தப் பொருட்களையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள, போட்டியாளர்களுக்கு ஒரு உதவிக்குறிப்பு தரப்படுகிறது. அது என்னவெனில், அந்தப் பொருட்களையெல்லாம் நீங்கள் ஏதாவதொரு கதையின் வாயிலாகத் தொடர்புபடுத்தி இணைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. கதை சிறந்தவொன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இங்கு நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியது பொருட்களைத்தான். சில விஷயங்களை நம் நினைவில் புகுத்த அந்தக் கதை வடிவம் பயன்படுகிறது, அவ்வளவுதான். இப்படிச் செய்கிறபொழுது, நம்மாலும் அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களை எளிமையாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். நமது மூளையும் தகவல்களை இந்த வழியில்தான் சேமித்துவைப்பதாகத் தெரிகிறது. 

Telling a Story | ClipArt ETC

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பழங்குடியின சமூகத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். அவர்கள் காட்டில் தொலைந்து விட்டாலோ, வழிதவறி திசை மாறிச் சென்றுவிட்டாலோ, மீண்டும் தன் இருப்பிடத்தைக் கண்டடையும் வழியைக் கதைகளின் வாயிலாகவும், பாடல்களின் வாயிலாகவும் மனப்பாடம் செய்து வைத்திருக்கின்றனர். இதையே அவர்கள் வெறுமனே தகவல்களாகச் சேகரித்து வைத்திருக்கிறபொழுது, அதை நினைவுகூறுவது கடினம். கதைகளாகவும், பாடல்களாகவும் சொல்கிறபொழுது, அதை அவர்களால் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது. ஆபத்துக்காலத்திலும் அது அவர்களுக்கு உதவுகிறது. அந்தப் பழங்குடியின மக்கள் பாடுகிற பாடல்களில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும், அந்தப் பகுதியைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியிருப்பதால், அந்தப் பாடல் கிட்டத்தட்ட, அந்தப் பகுதியின் வரைபடம் (மேப்) போலவே தோன்றும். எனவே, ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான சொற்களை நீங்கள் அறிந்திருந்தால், உங்களுக்கு முன்பின் அறிமுகமாயிராத அந்தப் பகுதியில்கூட தண்ணீர் எங்கு கிடைக்கும் என்பதைக் கண்டடைவீர்கள், ஏனெனில் அந்தப் பகுதிக்கான பாடல் உங்களிடம் உள்ளது. அது ஒரு வரைபடம் போல உங்களுக்கு வழிகாட்டுகிறது. உயிர்களைக் காப்பாற்றுவதோடு, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையும் கதைகள் நமக்குச் சொல்கின்றன. 

ஆஃப்ரிக்காவில் ஒரு கதை வழக்கத்தில் உண்டு. அங்கு வாழ்ந்த கறுப்பின மக்கள் பலரையும், வெள்ளையினத்தவர் அடிமைகளாகப் பயன்படுத்தி வந்தனர். கறுப்பின மக்களுக்கு அடிமை வாழ்க்கையைப் புகுத்தினர். இதற்கு, கறுப்பினத்தவரான ஒருவரே துணை போயிருக்கிறார். அவர் வெள்ளையருக்கு விசுவாசியாக இருந்துகொண்டு, தன் சொந்த நாட்டு மக்களையே அவர்களிடம் அடிமையாக விற்று பிழைப்பு நடத்தியிருக்கிறார். ஒரு இரவு, குறிப்பாக அதிகமான கறுப்பின மக்களைப் பிடித்து, அவர்களை அடிமைகளாக வெள்ளையர்களுக்கு விற்ற அந்த இரவில், அவர் வெள்ளையர்களோடு இணைந்து குடித்துக் கொண்டாடுகிறார். அவர்கள் அனைவரும் ரம் குடிக்கின்றனர். தன் சொந்த மக்களை விற்றவன் அங்கிருந்து மது போதையோடு வெளியேறுகிறான். அடுத்த நாள் விடிகிறது. கண் விழித்துப் பார்த்தால், தான் பிடித்துத் தந்த கறுப்பினத்தவரோடு தானும் ஒரு அடிமையாக, அந்தப் பெரும் அடிமைக் கப்பலின் வயிற்றுப் பகுதியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான். எப்போதுமே, துரோகத்திற்குச் செலுத்தவேண்டிய விலை இருப்பதாக, இதைக் கேட்பவருக்குக் கற்பிக்கும் ஒரு எச்சரிக்கையான கதை இது. தன் சொந்த மக்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது, என்று வழிவழியாகவே இந்தக் கதை சொல்லப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்தக் கதை பாடம் புகட்டுகிறது.

Story 101: Why Do We Tell Stories? - Animator Island

ப்ரோனோ பெத்லகேமின் (Bruno Bettelheim) புத்தகமான தி யூசஸ் ஆஃப் என்சாண்ட்மெண்டில் (The Uses of Enchantment), நோயாளி சிந்திக்கும்படி ஒரு கதையைக் கொடுக்கும், பாரம்பரிய இந்தி மருத்துவ நடைமுறையைப் பற்றி அவர் கூறுகிறார். இந்தக் கதையின் மூலம், கதாநாயகனின் தோல்வி மற்றும் வெற்றிகளிலிருந்து தனது சொந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்வது மற்றும் தீர்ப்பது என்பதை அந்த நோயாளி கற்றுக்கொள்கிறார். 

இதுவொரு வெளிநாட்டு கருத்துருவாக்கமாகத் தோன்றலாம், ஆனால் இன்றும் இதை மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆல்கஹாலிக்ஸ் அனானிம்ஸ் எனும் பெயரிலும் மற்றும் பிற பன்னிரண்டு படி திட்டங்கள் வடிவில் பயன்படுத்துகிறோம், அதன்படி அங்கு மக்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ, தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவரது கதை மற்றவரது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வடிகாலாக அமையக்கூடும். அல்லது, அந்தப் பிரச்சினையிலிருந்து கொஞ்சம் ஆசுவாசத் தன்மையை அனுபவிக்கக் கூடும். எனவே, மக்கள் கூடி, ஒருவருக்கொருவர் கதைகளைப் பரிமாறுகின்றனர். கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்த எளிய செயல்முறைதான், மனப்பிரச்சினைகளைக் குணப்படுத்தும் எளிய செயல்முறைக்கு உதவுகிறது. இன்றைக்குமே நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் அல்லது பிரச்சினை என்றால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே துடிக்கிறோம். எல்லாவற்றையும் தன் மனதிற்குள்ளேயே வைத்திருப்பது, மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வித்திடும் கூறாகவும் அமைகிறது. அடிப்படையிலேயே மக்கள் ஒருவருக்கொருவர் கதைகளைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வத்தோடு உள்ளனர். இதன் மூலம், தனக்கு வருகிற துன்பங்களும், பிரச்சினைகளும் தனக்கு மட்டுமே வருவதில்லை, எல்லோருக்கும் அவரவர் வாழ்வில் இதேபோன்ற பிரச்சினைகள்தான் உள்ளன, அவர்களும் இதையெல்லாம் சமாளித்து, போராடிதான் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள். எனவே, மக்கள் தங்கள் போராட்டத்தில் தனித்துவிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்கின்றனர், இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தப்பிப்பிழைக்கின்றனர். ஏற்கனவே விழுந்ததைப் போன்று, மீண்டும் விழுவதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் தங்களது சொந்த நடத்தையில் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம். கதைகள் நமக்கு வழிகாட்டுகின்றன. எப்படி வாழ வேண்டும் என்பதை கதைகளே நமக்குக் கற்பிக்கின்றன. 

Story: King Midas and the Golden Touch – It's All Greek to Me!

கிங் மிடாஸின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் மிகவும் பேராசை பிடித்தவான இருக்கிறான். எனவே, இவன் தொடுகிற அனைத்துமே தங்கமாக மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதுபோன்றதொரு வரமும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் தொட்டு தங்கமாக மாற்றுகிறான். இறுதியாக தன் மகளைத் தொடுகிறான். தன் அருமை மகள், அவளும் தங்கமாக மாறிவிடுகிறாள். பணத்தைவிட, முக்கியமான விஷயங்களும் நம் வாழ்வில் உள்ளன, என்பதை இந்தக் கதையின் வாயிலாக அறிகிறோம். பழங்குடிப் பாடலைப் போலவே, இந்தக் கதையும் வரைபடம். அது நாம் வாழ்வதற்கான வரைபடம். 

நாம் காட்டில் தொலைந்துபோகிறபொழுது எப்படி அந்தப் பாடல் வழிகாட்டுகிறதோ, அதுபோல வாழ்வின் இருட்டில் நாம் தொலைந்துபோகிறபொழுது, கதைகள் நமக்கு வழிகாட்டுகின்றன. 

பைபிளைப் பாருங்கள். இது விதிகளின் பட்டியலாக இருக்கலாம், ஆனால் அவை அப்படி எழுதப்பட்டிருக்காது – கதைகளாகவேச் சொல்லப்பட்டிருக்கும். கதைகள் மக்களுடன் ஒன்று கலக்கின்றன. பட்டியல்கள் அப்படிச் செய்வதில்லை. 

ஆனாலும், எல்லா கதைகளும் நம் மனதில் பதிவதில்லையே! ஏன் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

தொடரும்.