சாகசச் சரிவில் ஒரு சாகசக்காரன்

இந்திய மொழிகளைத் தவிர்த்து அந்நிய நாட்டுப் படங்கள் என்று வருகையில் ஹாலிவுட் படங்களுக்கு அடுத்ததாய் இந்திய ரசிகர்களுக்கு பிரமிப்பூட்டுகிற படங்கள் ஹாங்காங் நாட்டுப் படங்களே புரூஸ் லீயின் ‘எண்ட்டர் தி டிராகான்’. இந்திய சினிமா உலகில் ஏற்படுத்திய பரபரப்பை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒரு சில படங்களே புரூஸ் லீ ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் ஸ்டண்ட் பட வரலாற்றில் முதல் பக்கத்தைப் பிடிப்பதாக இருக்கிறது. அந்த வேகமும், விறுவிறுப்பும், ஸ்டைலும், இளைஞர்களைப் பெருமளவு கவர்ந்து தம்மையும் புரூஸ் லீயாக்கிக் கொள்ள வேண்டி கராத்தே கற்றுக்கொள்ளச் சென்றவர்கள் எத்தனையோ பேர். புரூஸ் லீ எபிசோடைத் தொடர்ந்து இத்தகைய களத்தில் கால் பதித்து இளைஞர்களின் எலும்புகளை சில்லிடச் செய்தவர் ’36 சேம்பர் ஆப் ஷாவோலின்’ பட நாயகன் இந்தப் படம் புரூஸ் லீ காண்பிக்காத இன்னொரு ஆட்டத்தைக் காண்பித்தது. ‘குங்பூ’ வுடன் கம்புச் சண்டை, உடற்பயிற்சியென இப்படம் பெரும் பரபரப்பையும் பாதிப்பையும் ஆக்ஷன் படவுலகில் ஏற்படுத்தியது. இவர்களைத் தொடர்ந்து வந்தவர் ஜாக்கி சான், ஜெட் லீ ஆகியோர். இவர்களில் ஜாக்கி சான் இன்றைய இளம் ரசிகர்களின் ஏகோபித்த ஹீரோவாக இருந்துவருகிறார். இவர் பாணி வெறும் அடிதடி, வேகம், தாவுதல், புரட்டி எடுத்தல் என்பதோடு மட்டுமின்றி வேகமான அடிதடி விஷயஙகளையே விஷமத்தனமாய் விவேகத்துடன் நகைச்சுவையுணர்வை ஊட்டி விளையாடுவதில் வல்லவராய் இருக்கிறார். இது ஒரு புது வித ஸ்டாண்ட்டாக இருக்கின்ற அதே வேளையில் இவர் அடித்து நையப்புடைக்கும்போது நமக்கு ஆவேசமோ ஆத்திரமோ ஏற்படாது. நகைச்சுவை உணர்வு இவைகளை மிஞ்சி நிற்கிறது. அவரை ஒரு ஸ்டண்ட் ஹீரோவாகப் பார்ப்பதைவிட ஒரு நல்ல காமடியனாகவே ஸ்டண்ட் பட ரசிகர்கள் பார்த்துவருகிரார்கள்.

Image result for bruce lee

நம்மூரில் இருந்து போன களரி தூரக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று பல வடிவங்கள் பெற்று ‘குங்பூ’ வாகியிருக்கிறது. இதையே நம் ரசிகர்களுக்கு அவர்கள் கூறுபோட்டு விற்றுவருகிரார்கள். இருந்தும் இந்தப் பின்னணி கொண்ட படங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறேன்.

1954 ஏப்ரல் 7ஆம் தேதி சார்லஸ் மற்றும் லீலீ தம்பதியினருக்குப் பிறந்த ஜாக்கி சானின் இயற்பெயர் சான் கோங்-சேங். இதற்குப் பொருள் ஹாங்காங்கில் பிறந்தவன் என்பதாகும். பிறக்கையில் பன்னிரண்டு பவுண்ட் எடையுடன் பிறந்ததால் அவரின் தாய்க்கு அறுவை செய்ய வேண்டி வந்தது. இதற்கான மருத்துவச் செலவைக் கொடுப்பதற்குக்கூட அவர்களின் பெற்றோர்களால் இயலாத அளவில் அவர்களின் குடும்பச் சூழல் இருந்தது. ஜாக்கி சானின் தந்தை ஹாங்காங்கில் உள்ள பிரான்ஸ் துதரங்கத்தில் சமையல்காரராகப் பணியாற்றினார். பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு இவருக்குப் பணிமாற்றம் கிடைத்ததும் ஜாக்கி சானை சீன நாடக அகாடமியில் சேர்த்துவிட்டுச் சென்றார். அங்கே அவருக்கு நடிப்புடன், குங்பூ, பாடல், அக்ரோபாடிக்ஸ் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நாடாகப் பயிற்சிகளை முடித்ததும் அவருக்கு அப்போது கிடைத்த சந்தர்ப்பங்கள் படங்களில் ஸ்டண்ட் மேனாக நடிக்கின்ற வாய்ப்புகளே. ஹாங்காங்கில் அப்போது வெளியான பல படங்களில் ஸ்டண்ட் மேனாகத் தோன்றியிருந்தார் ஜாக்கி சான்.

பிறகு இதில் திருப்தியில்லாது அவர் ஆஸ்திரேலியா சென்றார். அங்கே ஒரு ஓட்டல் கட்டுமானப் பணியில் பெற்றோர்களுடன் பணியாற்றிவருகையில் உடன் பணிபுரிகிற ஜாக் இவரின் இயற்பெயரான கோங்-கோங் என்பதை விளிப்பதில் சிரமப்பட்டு ஜாக்கி எனப் பெயர் சூட்டி விளிக்க ஆரம்பத்தார். இதற்குப் பொருள் லிட்டில் ஜாக் என்பதாகும். இதுவே இவர் பெயராகத் தொற்றிக் கொண்டது.

Related image

ஜாக்கி சானின் நண்பரும் ஹாங்காங்கில் உடன் நடித்தவருமான வில்லி சான் ஆஸ்திரேலியாவில் உள்ள இவருக்கு நடிக்க அழைப்பு விடுத்தார் . வில்லி பின்னாளில் ஜாக்கியின் மேனேஜரும் ஆனார் என்பது வேறு கதை. ஜாக்கி சானின் சான் வில்லி பெயரிலிருந்து பெற்றதாகும். 1976ல் இருபத்தியொரு வயதில் ‘நியூ பிஸ்ட் ஆப் பியூரி’ வெளியானது. அடுத்ததாய் ‘ஸ்நேக் இன் தி மங்கி ஷேடோ’ எனும் முதல் வெற்றிப் படம். பிறகு ‘டிரங்கன் மாஸ்டர்’. அடுத்த மாபெரும் வெற்றிப் படம் என தன் வரிசையில் அடுக்கிக்கொண்டே சென்ற ஜாக்கி சான் இயக்கிய முதல் படம் ‘பியர்லெஸ் ஹைனா’.

‘ரஷ் ஹவர்’ மற்றும் ‘ஹாங்காய் நூன்’ வகை யறா படங்கள் ஜாக்கி சானை ஹாலிவுட்பால் ஈர்த்தன. பிறகு ஒரு சில காலக்கட்டத்திற்குப் பின் வெளிப்படையாகவே அவர் ஹாலிவுட்டை விட்டு வெளியேறி ஹாங்காங்கிற்கே வந்து முதன்முதலாய் நடித்த படமான ‘நியூ போலீஸ் ஸ்டோரி’ வெளியானதும் இதற்காகவா, இதனை வேண்டியா ஹாலிவுட்டை விட்டு வெளியேறினார் என பலதரப்பிலிருந்து கேள்விக் கணைகள் எழுந்தன. ஆனால் அதற்கு அடுத்த படமான ‘தி மித்’ என்ற சமீபத்திய படம் வந்ததும் அந்தக் கேள்விகள் எல்லாம் செயலற்றுப் போயின. ஜாக்கி சான் ஒருமுறை வெளிப்படையாகவே தான் சீரியஸ் ரகப் படங்களைத் தயாரிக்கப்போவதாகக் கூறியிருந்தார். ‘தி மித்’ இதற்கு கட்டியங்கூறுவதாய் இருக்கிறது. பேரரசின் வைப்பாட்டியைக் காப்பாற்றுகிறார். இவர் போரின்போது கைப்பற்றப்பட்ட இளவரசி. சண்டை, தப்பித்தலில் மலை உச்சியில் இருந்து இருவரும் கீழே உருண்டு விழுவதில் காட்சி ‘கட்’ செய்யப்படுகிறது. சாதாரண உடையில் திடுமென ஜாக்கி சான் தூக்கத்திலிருந்து எழுகிறார். ஆவரின் நண்பரான வில்லியம் என்பவருடன் சேர்ந்து இருவரும் புதைபொருள் ஆராய்ச்சியில் இறங்குகின்றனர். அவர்கள் காலெடுத்து வைப்பது இந்திய புராதனக் கட்டிடங்கள் நிறைந்த ஒரு இடத்தில். அங்கே ஒரு முனிவர் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருகிறார். அதைக் கண்டு அவர் தொங்குகிற இடத்திற்கு அடியில் சென்று பார்த்தால் அங்கே ஒரு சவப்பெட்டியும் இருக்கிறது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அதை இவர்கள் நகர்த்த, அதற்கடியில் ஒரு நீண்ட வாள் மற்றும் ஜாக்கி சான் கனவில் வந்த இளவரசியின் முகம் காணப்படுகிறது. அந்தப் புராதனக் கோயிலில் நுழைந்து இவ்வாறெல்லாம் இடைஞ்சல் கொடுத்ததற்காய் சாமிஜியின் சீடர்கள் இந்த இருவரையும் விரட்டுகின்றனர். கத்திச் சண்டையிடுகின்றனர். அதில் ஒரு சீடர் சண்டை போட்டு வெறுத்துப் போய் ஜாக்கி சானிடம் “நீங்கள் ஆராணு” எந்தா நிங்ஙகளுக்கு வேண்டது? என்று மலையாளத்தில் கேட்கிறார். அதற்கு ஜாக்கி சான் “ஷமிக்கணும்” என்று மலையாளத்திலேயே பதிலளித்துவிட்டு தப்பித்துச் செல்கிறார். அப்படி தப்பிக்கின்ற போது ஒரு பெரும் குளத்தில் குதிக்கிறார். இப்போது அடுத்ததாய் வருகிற காட்சி முதலில் ஆரம்பத்தில் கட் செய்யப்பட்ட கட்சியின் தொடர்ச்சி. கொரியநாட்டு இளவரசியுடன் தளபதி ஜாக்கி சான் குதித்த காட்சியின் தொடர்ச்சி இங்கே தொடர்கிறது. இளவரசி ஜாக்கியின் காயத்திற்கு மருந்திடுகிறார். இந்த இளவரசி ஜாக்கி சான் பால் மோகம் கொள்ள இதற்கு நம்மூர் ஹீரோக்களைப் போல் ஜாக்கியும் நெளிகிறார். இது ஒருபுறம் செல்ல மறுபுறத்தில் இரண்டாவதாய் நிகழ்கால உலகில் புதைபொருள் நிபுணராக ஜாக்கி சான் ஒரு குளத்தில் குதித்தாரே அவர் மயங்கிய நிலையில் நீரில் மிதக்க, அவரைத் தூக்கி காப்பாற்றுகிறார் சமாந்தா. இருவரும் ஒரு கோயிலுக்குள் நுழைகின்றனர் அங்கே அவர்களை ஒரு போலீஸ் கும்பல் துரத்துகிறது. இருவரும் சேர்ந்தே சண்டை இடுகின்றனர். மல்லிகா அப்போது இன்னொரு விஜயசாந்தியாகிறார். இவர்கள் தப்பித்து ஓடுகிற, சண்டையிடுகிற தொழிற்சாலைத் தளத்தின் பின்னணியில் சுவரில் தமிழில் ‘கழிப்பறை’, ‘குளியலறை’ என்ற வாசங்கள் எல்லாம் காணப்படுகின்றன. வாடா இந்தியாவில் குளத்தில் குதித்த ஜாக்கிசான் தமிழகம் எப்படி வந்தார் எனத் தெரியவில்லை. இத்தகைய காட்சிகளில் அந்த இடத்தைப் பற்றிய தெளிவுகள் எதுவும் திரைக்கதையில் இடம்பெறவில்லை. மல்லிக்காவுடன் ஜாக்கி சான் சேர்ந்து பசையுள்ள ரோலிங் பெல்ட்டில் சண்டையிடுகிற காட்சி ஜாக்கி சானின் இதுவரையிலான சண்டையிலிருந்து வேறுப்பட்ட ஒன்று. இந்தக் காட்சியில் மல்லிகா ஷெராவத்தும் உள்ளாடை வெளித் தெரிகிற அளவில் கைகால்களை வீசிவீசி சண்டையிடுகிறார். இதற்காகவா ஜாக்கி சான் இந்தியா தேடிவந்து இவரைத் தேர்வு செய்தார் என கேட்கவும் தோன்றுகிறது.

இந்த ஒரு எபிசொடுகளைத் தாண்டி மூன்றாவதாக இன்னொரு எபிசோடுக்குக் கதை நகர்கிறது. அது மிதக்கும் உலகம். பாதிப் படம் வரை பாய்ந்து பாய்ந்து சண்டையிடுகிற ஜாக்கி சான் சோர்ந்துபோய் உடல் வலியில்லாமல் மிதக்கின்ற உத்தியை நாடியிருக்கிறார். கைகால்கள் செய்ய வேண்டியதைக் கம்ப்யூட்டர் செய்கிறது பிற்பாதி கதையில். அங்கே அந்த உலகிற்கு ஒரு அருவியைக் கடந்து அதனுள் நுழைகிற தோல் பொருள் ஜாக்கி சான் தன் கனவில் வருகிற கொரிய இளவரசியைக் காண்கிறார். ஆனால் அவளோ இவரை அந்தத் தளபதி ஜாக்கி சான் இல்லை என்று கூறி ஏற்க மறுக்கிறாள். கதையில் இடையிடையே இண்டர்கட் செய்து செய்து தளபதி ஜாக்கி சானையும், தொல்பொருள் ஆராச்சியாளனையும் ஊடாக ஊடாக விட்டு விளையாடியிருக்கின்றனர். தளபதி கதையும், தொல்பொருள் ஆராச்சியாளன் கதையும் பின்னிப் பிணைந்துள்ளன இந்தப் படத்தில். சில நாட்களாக ஜாக்கி சான் CG effectsகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அவரின் ரசிகர்கள் பார்க்க ஆவலாய் இருக்கிறார்கள்.

இதற்கு கிராபிக்ஸ் பெருமளவு உதவிகரமாக இருக்கிறது. கம்ப்யூட்டர் தான் இவரின் சாகசத்திற்குப் பக்கத் துணையாய் இருந்துவருகிறது என்பது அறியப்படும்போது ஜாக்கி சான் இரண்டாம் பட்சமாகிவிடுகிறார். இருந்தும் சாகசத்திற்கு மெருகூட்டவும் வயதிற்கு ஏற்ற எலும்பு, மூட்டு தேய்மானத்திற்கு ஈடுகொடுத்து ரிச்க்குகளைத் தளர்த்திக்கொள்ளவும் CGக்குத் தாவியிருக்கிறார் சான். ஆரம்பத்தில் இந்த CG தொழில்நுட்பம், பாய்ந்து பறக்கும்போது ஜாக்கியின் முதுகுக்கு மேலே தொங்கும் இரும்புக் கம்பியை மறைத்துக் காண்பிக்கவே தேவைப்பட்டது. ஆனால் இதுவரை இல்லாத அளவில் ஜாக்கி சான் CG effects ஐ பெருமளவு, ‘தி மித்’ படத்தில் நாடியிருக்கிறார். படத்தில் இருபது நிமிடம் இடம்பெறுகிற மிதக்கும் உலகம் என்ற கனவுலகக் காட்சியில் தோன்றும் அனைவருமே பறந்திருகின்றனர். அது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப் பட்டதே. இந்தக் காட்சி மட்டுமின்றி ஆரம்பக் காட்சிகளான போர்க்களக் காட்சிகளிலும் கூட கிராபிக்ஸ் புகுந்து விளையாடிக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் துணை நடிகர்கள் மற்றும் நூறு குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இதற்கு இன்னும் பிரமாண்டத்தை ஊட்ட வேண்டி கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு லட்சம் போர்வீரர்களைச் சித்தரித்து 900 ஷாட்களையும் கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர்.

Related image

கிரஹாம் வேர் ஜூனியர் என்பவர் ‘தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ படத்தின் குதிரைப் பயிற்சியாளர். இவரே ‘தி மித்’ படத்திற்கும் குதிரைப் பயிற்சியாளராய், பிரதானமாய் ஜாக்கி சான் குதிரைக்கும் இவரே பயிற்சியாளராய் பணியாற்றியிருக்கிறார்.

சாகசத்திற்குப் பெயர்போன ஒரு கலைஞன் விறுவிறுப்பிற்குப் பெயர்போன ஒரு கதாநாயகன் தன்னுடைய ஐம்பதாவது வயதில் தனக்கு ஒத்துழைக்காத எலும்புகளையும் மூட்டுகளையும் நினைத்து நொந்துபோன நவீன தொழில்நுட்பத்தின் பால் சாய்ந்திருப்பது ஒரு வித சோக ராகத்தை இழைப்பதாக இருக்கிறது. பாயும் புலியாகவும் பாட்ஷவாகவும் இருந்தவர் பாபா லெவலுக்கு இறங்கி வந்தது எப்படியோ அப்படித்தான் சாக்கி சானின் இன்றைய நிலைமையும். உடலும் உள்ளமும் ஒத்துழைக்காதபோதும் சோர்வடையும்போதும் கதாநாயகர்களின் விறைப்பு சற்று குறையத்தான் செய்யும்.

‘தி மித்’ தின் இன்னொரு கவன ஈர்ப்பு விஷயம் அவ்வளவாய் பிரதானமற்ற காட்சிக்கு இந்தியின் பிரதானமான கவர்ச்சி நடிகையை இப்படத்தில் புகுத்தியிருப்பது. மல்லிகா ஷராவத்தின் பகுதியே கதையின் பிரதானத்தனத்திற்குத் தேவையற்ற ஒன்று. முழுக்க முழுக்க கிளுகிளுப்பூட்டலுக்கே மல்லிகா பயன்படுத்தப்பட்டிருகிறார் எனத் தெரியவருகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட காட்சிகளை ஒரு ரீவைண்ட் செய்து பார்க்கையில் குட்டைப் பாவாடையில் காலைத் தலைக்கு மேல் தூக்கி எதிரிகளை அடிக்கையில் உள்ளாடை தெரியும்படி செய்திருப்பதிலும், மல்லிகாவின் மேலாடையைச் சுத்தமாக கழிக்கச் செய்து முதுகை முழுக்கக் காட்டி ஜாக்கி தன் பனியனைக் கழற்றி அவருக்குக் கொடுக்கின்ற காட்சிகளிலெல்லாம் இந்திய நடிகைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என ஆச்சிரியப்பட வைகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிட்டபொது மல்லிகா ஜாக்கி சானுடன் சேர்ந்து மேடையில் தோன்றினார். அப்போது ஒரு பேட்டியில் கூறுகையில் “பாலிவுட் எனக்கு சோறு போடுவதால் அதுதான் எனக்கு முக்கியம். ஆனால் உலகம் இப்போது ஒன்றாகிக்கொண்டு வருகிறது” என தன் கலைச் சேவையின் இன்றியமையாமையை முன்வைத்தார்.
சமீப காலமாகவே அன்னியப் பட நிறுவனங்கள் நம் நாட்டு முன்னணி பிரபல நடிகைகளை வாரிக்கொண்டு சென்றிருக்கின்றன. ஹாங்காங், ஹாலிவுட் படங்களுக்கு ஏற்கனவே கணிசமான அளவு ரசிகர்கள் இருந்தாலும் இன்னும் அவர்களின் எண்ணிகையை ஆதரிக்கவோ அல்லது ஒரு வித தேசிய உணர்வை ரசிகர்களுக்கு ஊட்டவோ வேண்டி நவீன மார்க்கெட் உத்தியாய் நம்மூர் நடிகைகளை வேற்று நாட்டு மொழிப் படங்களில் நடிக்க வைக்கிறார்கள். நடிகைகளும் டாலர்களைக் காண விரும்பிச் செல்கின்றனர். இப்படிச் செல்கின்றவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பு கண்கூசும்படி இருக்கும் போதுதான் நாம் ஆதங்கப்படும்படியாகிவிடுகிறது.

வேறு எந்த சாகசக் கதாநாயகர்களுக்கும் (இவர் ஒருவர்தான் சாகச கதாநாயகன் என்பது வேறு விஷயம்). இல்லாத ஒரு நேர்மை, உண்மை மற்றும் நிஜத்தன்மை ஜாக்கி சானிடம் இருக்கிறது. அது படம் முடிந்து ரோலிங் டைட்டில் செல்லும்போது படத்து சாகச நிகழ்ச்சிகள் எப்படி டேக்னிக்கலாக, எந்த உத்தியில் எடுக்கப்பட்டது என்பதை ஏன்.ஜி.ஷாட்டுகளிலிருந்து எடுத்துப் போடுகிற பழக்கம், கிராபிக்ஸ் என்ற ஏமாற்றம் வித்தையை மறைத்து இதை நாங்கள் செய்து எப்படி உங்களை நம்ப வைத்தோம் என தங்கள் இமேஜைக் குறைத்து மதிப்பீடு செய்கிறதை ஜாக்கி சான் ஒவ்வொரு படத்திலும் பின்பற்றி வருகிறார்.

இது ஒரு வகையில் ரசிகனை உளவியல் ரீதியில் ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. இரண்டு மணி நேர இறுக்கம் தளர்கிறது. ஜாக்கியின் மேல் உள்ள வழிபாட்டு உணர்வு மறைந்துபோகிறது. இதுவரை நீ கண்டது வெறும் கண்கட்டு வித்தையே என பளாரென்று முகத்தில் அடித்தாற்போன்று சொல்கிறதில் ஜாக்கி சான் ஒரு உயர்வான இடத்திற்க்குச் சென்றுவிடுகிறார். இது நம்மூர் சாகசக் கதாநாயகர்களுக்கு இல்லாத ஒன்று. காரணம் அவர்களுக்கு ரசிகர்களின் மனோநிலையைவிட இமேஜ் மிக மிக முக்கியம். 

நன்றி: திரை