சாதி அடிப்படையிலான பாகுபாடு

’ஒரே ஒரு கிராமத்திலே’ முதல் ’பரியேறும் பெருமாள்’ வரை: தமிழ்ப் படங்களில் சாதி அடிப்படையிலான இடப்பங்கீடு

நிறுவனமயமாக்கப்பட்ட சாதி பாகுபாட்டைப் படத்தில் காட்டிய ‘பரியேறும் பெருமாள்’ தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்பட்டாலும், EWS (பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு)-க்கான இட ஒதுக்கீடு பற்றி பேசிய, 1989ஆம் ஆண்டு படமான ’ஒரே ஒரு கிராமத்திலே’, அது வெளியாவதற்கு முன்பே தேசிய விருதை வென்றது.
-பிரியங்கா திருமூர்த்தி

பேருந்து வேகமாக நெருங்குகிறது, ஒரு பிராமண இளைஞர் அந்தப் பேருந்து வரும் சாலையிலேயே தற்கொலை செய்வதற்காகப் படுத்துக்கொள்கிறார். ஒரு நடுத்தர வயது பெண், பாழடைந்த பள்ளி சமயலறையில், சேலையின் முந்தானையில் தீப்பற்ற வைத்துக்கொண்டு, எரிந்துபோகிறார். 1993-ஆம் ஆண்டு வெளியான ’ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இவ்விரு காட்சிகளும் அடுத்தடுத்து மாறி மாறி காட்டப்படுகின்றன. இதன்மூலம், அறிமுக திரைப்பட இயக்குனராக சங்கர் சண்முகம், தனது பார்வையாளர்களிடையே அச்சத்தையும் அனுதாபத்தையும் உண்டாக்குகிறார்.

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அளவிலான கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) ஒதுக்கப்பட்ட 27% இடப்பங்கீடு குறித்த போராட்டங்களின் பின்னணிச்சூழலில் இந்தப்படம் வெளியாகியிருக்கிறது. வி.பி.சிங் மத்திய அரசாங்கத்தின் இந்நடவடிக்கை எதிர்பாராத பல எதிர்வினைகளுக்கு வழிவகுத்தது, கிட்டத்தட்ட 200 மாணவர்கள், 13 வயதிற்குட்பட்டவர்கள் கூட, இப்போராட்டத்தில் தங்களைத் தாங்களே பலிகொடுத்தனர். 1980ஆம் ஆண்டில், மண்டல் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், அனைத்து ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கும் 69% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தியிருந்தது.

நாட்டின் பெரும்பகுதி இடப்பங்கீடின் பின்னடைவைச் சமாளித்துக்கொண்டிருந்தபோதும், ”தமிழ்நாட்டில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லை. மத்திய அரசின் இந்நடவடிக்கையை திராவிடக் கட்சிகள் முழுமையாக ஆதரித்தன.” என்று அரசியல் ஆய்வாளரும், ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையின் இணை ஆசிரியருமான ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். மேலும், அந்நேரத்தில் முன்னோக்கிய(உயர்) சாதியினர் (FC) தங்கள் கருத்து வேறுபாட்டை, தற்போதைய அரசின் அரசியல் சூழலில் வெளிப்படுத்தினாலும், அதனால் பெரிய பலன் ஏதும் வராது, என்பதை உணர்ந்திருந்ததாகவும், அவர் கூறினார்.

இத்தகைய அதிருப்தி, சினிமாவிற்குள் நுழைவதற்கான வழியைக் கண்டுபிடித்தது.
இன்று, பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவுகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை (EWS) அறிமுகப்படுத்திய பின்னர், மீண்டும் இட ஒதுக்கீடு என்பது பொது விவாதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது – ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட உயர் சாதியினருக்கு– மத்திய பா.ஜ.க அரசாங்கத்தால் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் சினிமா இந்த இடப்பங்கீடு எனும் விஷயத்தை எவ்வாறு சித்தரித்திருக்கிறது என அதன் சுவடுகளை ஆராய்வோம்.

தமிழ் சினிமாவில் இடப்பங்கீடு:

வெள்ளித்திரையில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நேரடியாகப் பேசிய முதல் தமிழ் திரைப்படம் வாலி எழுதி, 1989ஆம் ஆண்டில் வெளியான ’ஒரே ஒரு கிராமத்திலே’ என்று திரைப்படப் படைப்பாளிகளும் வரலாற்றாசிரியர்களும் பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறார்கள். இப்படத்தில் நடிகர் லட்சுமி, ஒரு அரசு ஊழியரின் மகளாகவும், பார்ப்பன கதாநாயகியாகவும் நடித்தார். அந்த புத்திசாலி மாணவி, ஒரு கலெக்டர் ஆக வேண்டுமென்பதற்காக, தான் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பாசாங்கு செய்கிறார். அவர் சொல்லிய பொய் ஒருநாள் அம்பலப்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப் படுகிறார். அங்கு அவர் நீதிமன்றத்தில் தான் செய்த செயல்கள் நியாயமானவை என்பதற்காக தன் தரப்பிலிருந்து வாதிடுகிறார்.

இந்த ஆண்டு பொருளாதர அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொண்டுவந்தபோது, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் போன்றே இந்தத் திரைப்படத்தின் வசனங்களும் இருந்தன.

”பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சலுகைகள் வழங்குவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்பது சாதியால் அல்ல, பொருளாதார அந்தஸ்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்.” என்று லட்சுமியின் கதாபாத்திரம் கோபமாக நீதிமன்றத்தில் வாதிடுகிறது, “பிற்பட்ட சமூகத்தில் பாரிஸ்டர்களும் உள்ளனர், அதே போல உயர் சமூகத்திலும் சடலங்களை சுமந்து செல்லும் ஆண்களும் உள்ளனர். இங்கு பாரிஸ்டரின் மகன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக சலுகைகளைப் பெறுகிறார், ஆனால் சடலங்களைக் கொண்டுசெல்லும் நபரின் மகனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர் செய்த ஒரே பாவம் உயர் சமூகத்தில் பிறந்ததுதான்.”


மையக்கதாபாத்திரம் பின்னர் “மெரிட்(merit)” சார்ந்த வாதத்தில் பின்வாங்குகிறது, அவருடைய சாதியின் இருப்பிடம் தனக்கு அளித்த சலுகைகளை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டார். அவர் பேசும்போது, அவர் ‘பணியாற்றிய’ தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், அவருக்கு ஆதரவளித்து, தொடர்ந்து அவர் அதே பகுதியில் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். திரைப்படத்தில், இங்கு பிரமண மையக்கதாபாத்திரம் வெகுஜனங்களின் மீட்பராக சித்தரிக்கப்படுகிறார்.

படத்தை முன்வைத்து, எழுத்தாளரும் அறிஞருமான ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.5% இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு 19%, என தமிழகம் 69% இடப்பங்கீட்டை அமுல்படுத்திய, கிட்டத்தட்ட அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, இப்படம் வெளியானது.
”இடப்பங்கீடு அமல்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டுகளில், முன்னோக்கிய சாதிகளின் சமூக நிலை மெதுவாக மாறிக்கொண்டிருப்பதை உணரத்தொடங்கினர். தங்கள் சமூகங்களைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் இடங்களைப் பெறமுடியவில்லை. அதேநேரத்தில், பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இப்போது அவர்கள் இதற்கு முன்பு வகித்திராத பதவிகளைப் பெறத் துவங்கினர்.” என்று ஸ்டாலின் விளக்குகையில், “ஒரு பார்ப்பன சமூகம் அல்லது வேறெந்த உயர் சாதியைச் சார்ந்தவர்களும், ஒரு தொகுதியின் மாவட்ட அதிகாரி அல்லது தாசில்தார் என்ற நிலையில் மட்டுமே இருந்தபோது, ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வரக்கூடிய நபர் திடீரென மாவட்ட ஆட்சியர் போன்ற மட்டத்திற்கு உயர் பதவிகளை ஏற்றுக்கொண்டிருந்தனர். பாரம்பரியமாக அதிகாரத்தைக் கொண்டிருந்த சமூகங்களை, இந்நடவடிக்கைகள் வருத்தப்படுத்தியது.”
மேலும், 70கள் மற்றும் 80களில் நிலவிய அதிக வேலையின்மை, எப்போதுமே சாதி இந்துக்களுக்குச் சொந்தமான வேலைகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ”வழங்கப்படுகின்றன”, இதனால்தான் அதிகளவில் வேலைவாய்ப்பின்மை உருவாகிறது என்ற தோற்றத்தை உருவாக்கியது. இருப்பினும், இந்தப் போலியான மாயத்தோற்றம் நியாயப்படுத்தப்படவில்லை. நிரூபிக்கப்படவில்லை.

உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின்படி, 1961 மற்றும் 2012க்கு இடையில், இந்தியாவின் உயர்சாதி குடும்பங்கள் – அதாவது மக்கள் தொகையில் 22.8% சதவீதத்தினர் – தேசிய சராசரி ஆண்டு வருமானத்தில், கிட்டத்தட்ட 47% பெறுகின்றனர்.

உயர் சாதிகளுக்கிடையே, பிராமணர்கள் தேசிய சராசரியை விட 48% சம்பாதிக்கிறார்கள், மற்ற உயர் சாதிகள் அதற்கு மேல் 45% சம்பாதிக்கிறார்கள். இதற்கிடையில், எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்கள், தேசிய சராசரியை விட 21% மற்றும் 34% குறைவாகவே சம்பாதிக்கின்றன. ஒபிசி குடும்பங்களை, பிற ஒடுக்கப்பட்ட சாதிகளுடன் ஒப்பிடுகையில் சிறந்தவையாகத் தோன்றுகின்றன, ஏனெனில், ஆண்டு இந்திய சராசரியை விட 8% குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.

”ஒரே ஒரு கிராமத்திலே கதையை எழுதியவர் ஒரு பார்ப்பனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் – மேலும் அச்சமூகம் சார்ந்த பல நடிகர்கள் மற்றும் குழுவினர் அப்படத்தில் பணிபுரிந்திருக்கின்றனர். படம் நிச்சயமாக அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும்.” என்று ஸ்டாலின் கூறுகிறார்.

டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் இந்தியக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்தனர், குடியரசுக் கட்சி கூட, இத்திரைப்படத்தைத் திரையிட்டால் திரையரங்குகளில் வன்முறை நிகழும் என்று எச்சரித்தது. சட்டம் ஒழுங்கு சிக்கல்களைக் காரணம் காட்டி தமிழக அரசு, இப்படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைத்தது. இருப்பினும், திரைப்படப் படைப்பாளிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர், இது அவர்களின் பேச்சு மற்றும் கருத்துரிமையை நிலைநிறுத்தியது.

இந்தப் படம் ’ஜென்டில்மேனு’க்கான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஜென்டில்மேன் படம், அது பேசியிருக்கிற இடப்பங்கீடு சார்ந்த கருத்துக்களில் அப்போது குறைவான கண்காணிப்பையே எதிர்கொண்டது, ஏனெனில் இதுவொரு நவீன கால ராபின் ஹூட் கதையாகப் பின்னப்பட்டிருக்கிறது. அதன் மையத்தில், ஜென்டில்மேன், இரண்டு நம்பிக்கைக்குரிய ஆனால் ஏழை மாணவர்களைப் பற்றியதாக இருந்தது – ஒருவர் பிராமண இளைஞர் ரமேஷ் (வினீத் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.) மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி (உயர் சமூகத்திலிருந்து வந்த கதாபாத்திரத்தில், அர்ஜூன் சார்ஜா நடித்திருந்தார்.)- இவ்விருவருக்கும் இடப்பங்கீட்டு முறை மற்றும் மாநில கல்வித்துறையில் ஊழல் போன்றவற்றின் காரணமாக மருத்துவக் கல்லூரி இடங்கள் மறுக்கப்படுகின்றன. அவ்விருவரும் அந்த மாவட்டத்திலேயே முதல் இரு இடங்களையும் பிடித்தவர்களாகயிருந்தும், இறுதிக் கல்லூரிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இப்படத்தில், கதாபாத்திரங்கள் முன்வைத்த வாதங்கள், ’ஒரே ஒரு கிராமத்திலே’ படத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் போலவே இருந்தன.
160 நிமிட கால அளவு கொண்ட இத்திரைப்படத்தில், சாதி சார்ந்த குறியீடுகள், பூணூல், சமஸ்கிருத ஸ்லோகங்கள், பெண்கள் சேலைகளை அணிந்திருந்த விதம், ஆகியவற்றைக் கொண்டிருந்தது; மற்றும் படத்தில் வருகிற வசனங்கள் ஒரே நேரத்தில் உயர் சாதியினரின் புகழ்பாடுவதாகவும், அவர்களையே பாதிக்கப்பட்டவர்கள் போலவும் வரைந்திருக்கின்றன.
இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது, அறிமுக இயக்குனருக்கு பாராட்டுகள் கொட்டின.

”ஜென்டில்மேன் இட ஒதுக்கீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, அதை உங்கள் முகத்திற்கு நேராக பாய்ச்சவில்லை. அந்தளவிற்கு திரைக்கதை மிகவும் அடர்த்தியாக இருந்தது, அதில் சராசரி பார்வையாளன் கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் இருந்தன.” என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் கூறுகிறார். இருப்பினும், திரைத்துறையினுள், இந்த அரசியல் கவனிக்கப்படாமல் போகவில்லை. மேலும், அவர் கூறுகையில்,”கமல்ஹாசன், ஒரு பேட்டியில், ஜென்டில்மேன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு முதலில் என்னிடம் வந்தபோது, படம் பேசும் அரசியல் காரணமாக, அதை மறுவிட்டேன் என்று சுட்டிக்காட்டினார். இந்த சப்ஜெக்டை, இப்போது எடுத்துக்கொள்வது சரியான நிலைப்பாடு அல்ல என்றும் அவர் கூறினார்.”

அந்தப் பேட்டியில், கமல் இந்தப் பட வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபொழுது, ”பிராமண போர்க்குணம்” பற்றி பேசுவதாகவும், அத்தகைய பாத்திரத்தில் நடிப்பதில் தான் வசதியாக உணரவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், அவர் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய படத்தின் இயக்குனர் சங்கருக்கு அறிவுறுத்தியகாவும் கூறப்படுகிறது.

இருப்பினும், முரண்பாடாக, அதே நட்சத்திரம்தான் அதற்கு முந்தைய ஆண்டுதான், ’தேவர் மகன்’ எனும் தேவர் சாதி புகழ்பாடும் படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்பட்ட ‘மதுரை ஃபார்முலா’ எனும் வகையறாவின் கீழ் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங்களின் ஆரம்பம் இந்தப் படம் (தேவர் மகன்)தான்.

ஆனால், சாதிப் பெருமை குறித்த கதையோட்டங்கள் திரைகளில் ஆதிக்கம் செலுத்தியபோதும், ’இட ஒதுக்கீடு’ எனும் பொருள்
ஒருபுறமாக ஓரங்கட்டப்பட்டது, திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இட-ஒதுக்கீடு சார்ந்து குறிப்பிடப்பட்டன – பெரும்பாலும், இடப்பங்கீட்டைப் பெறுபவர்களைக் குறிவைத்துதான் அத்தகைய காட்சிகள் வைக்கப்பட்டன.

இட ஒதுக்கீடு எங்கே போனது?

நிபுணர்களின் கூற்றுப்படி, இடப்பங்கீடு சார்ந்து பேசுவது பெரும்பாலும் மூன்று காரணங்களால்தான் தவிர்க்கப்பட்டிருக்கிறது – முதலாவது திரைப்படத் துறையில் சாதியின் அமைப்பு; இரண்டாவதாக, பாகுபாடு பற்றி விவாதிக்க திரைப்படத் தொழிற்துறையின் விருப்பமின்மை; சாதியைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளியாவதில் பிரச்சினைகளைச் சந்தித்த விதம்.

இத்திரைப்படத் தொழிற்துறையில் பெரும்பான்மையானவர்கள் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள், அவர்களே இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகிறார். “இன்னும் குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று வகைப்படுத்தப்பட்ட சமூகங்கள் சினிமாக் கோட்டைக்குள் திசைதிருப்பப்படுகின்றன.” என்று அவர் மேலும் கூறுகையில், ”இட ஒதுக்கீடு பற்றிய திரைப்படங்களை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை, ஏனென்றால் அவர்களும் தற்போதுள்ள அமைப்பின் காரணமாக, கிடைக்கிற வாய்ப்புகளை கொள்ளையடிக்கலாம் என்று நம்புகிறார்கள்.”

ஆனால், இந்த வகுப்பிற்காக 30% இடங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டாமா? இந்தக் கேள்விக்கான பதில், கால இயக்குனர் பா.ரஞ்சித்திடமிருந்து வருகிறது, அவர் தலித் கதாபாத்திரங்களைத் திரையில் சித்தரிப்பதில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தவர் என்று கருதப்படுகிறார்.
”இடப்பங்கீடு என்ற விஷயத்தில், அது எப்போதுமே சாதி இந்துக்கள் மற்றும் தலித்துகளுக்கு இடையிலானது என்பதாகவே இருக்கிறது.” என்று அவர் கூறுகிறார், “பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இடைநிலைச் சாதியினரால் கூட, தலித்துகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்ற உண்மையைக் கையாள முடியாது. இன்றும் கூட, நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு கிராமத்தையும் எடுத்துப் பார்த்தீர்களேயானால், அது காலணி (தலித் குடியேற்றம்) மற்றும் ஊர் (சாதி இந்துக்களின் குடியேற்றப் பகுதிகள்) என்று பிரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். மேலும், சாதி இந்துக்கள், தங்களுக்குக் கீழேயுள்ள நிலைகளில் பணிபுரிகிற தலித்துகளைக் கையாள முடியும், ஆனால் அதுவே, அரசாங்க அமைப்புகளில், பதவிகளில் அவர்களது வளர்ச்சி, பொருளாதார ரீதியாக தலித் மக்களின் செழிப்பான நிலை என்பதெல்லாம், சாதி இந்துக்களால் பொறுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.”

திரைப்படத் துறையிலிருந்து உருவாக்கப்படும் இட ஒதுக்கீடு சார்ந்த கதைசொல்லல்கள், இடப்பங்கீட்டினை அரக்கர்களைப் போலக் காட்டுவதாக ரஞ்சித் சுட்டிக்காட்டுகிறார். ”சில பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், இடப்பங்கீடின் மூலமாகத்தான் சமுதாயத்தில் இந்நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ”ஏழாம் அறிவு” எனும் தமிழ்த்திரைப்படத்தில், ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் பேசுவதுபோல ஒரு வசனம் வருகிறது. அதில் அவர், சிபாரிசு, இட ஒதுக்கீடு மற்றும் ஊழல் போன்றவைதான் திறமையான இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காரணம்” என்பதுபோலப் பேசுகிறார். அடிப்படையில், இத்திரைப்படம் சிபாரிசு, ஊழல் போன்ற நச்சுக்களுடன் இடப்பங்கீட்டையும் சேர்க்கிறது.”


இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வாதத்திற்கு, சில நுட்பமான அவதூறுகளும் பங்களிக்கின்றன என்று ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகிறார். அவர் குறிப்பாக இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படங்களை மேற்கோள் காட்டுகிறார்.

”உதாரணமாக, இந்தியன் திரைப்படத்தில், ஊழல் நிறைந்த அரசாங்க அதிகாரிகள் கருப்பு நிறமுள்ளவர்களாகவும், கிறித்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார். ”அந்நியனில், கதாநாயகன் ஒரு பார்ப்பனர், படத்தில் அவர் ஒருவரே நீதிமானாகக் காட்டப்படுகிறார், அவர் கொலை செய்கிற பெரும்பாலான ஊழல் கதாபாத்திரங்கள் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். முதல்வன் திரைப்படத்தில், அர்ஜுனின் தாயார், அவரது ஜாதகம் முன்னாள் முதல்வர் ராஜாஜியுடன் பொருந்துகிறது என்று கூறுகிறார். அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்கள் எனக் காட்டப்படும் ஒரு படத்தில், ராஜாஜி (ஒரு பார்ப்பனர்)க்குப் பிறகு, இறுதியாக மற்றொரு நல்ல மனிதர் தான் அந்த முதல் இடத்தைப் பெறுவார், என்று சூசகமாகக் குறிப்பிடுகிறார்.”

ஒரு மாற்றுக் கதைசொல்லல் இல்லாதது, ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் ’அறம்’ பட இயக்குனர் கோபி நயினார்.

”தமிழ் சினிமாவில், இட ஒதுக்கீட்டு முறையானது, ஒடுக்குமுறையாளரின் பார்வையிலிருந்து பேசப்படுகிறது. அவர்களுக்கு இது குறித்த வரலாறு பற்றி எந்த அறிவும் இல்லை. அது ஒரே ஒரு கிராமத்திலே அல்லது ஜென்டில்மேன் என எதுவாகயிருந்தாலும், அந்த இயக்குனர்களிடம், படைப்பாளர்களிடமும் இந்த விஷயம் குறித்து பேசினால், அவர்களால் அவர்கள் தரப்பு வாதங்களை விவரிக்க முடியாத நிலையே உள்ளது. இட ஒதுக்கீடு பற்றிய கதையை ஒரு தலித்தின் பார்வையில் இருந்து மட்டுமே சொல்ல முடியும், ஏனெனில் அவர்கள்தான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை உள்ளார்ந்த முறையில் இணைந்துள்ளனர். ஒரு அமைப்பு, கொடுப்பதை எடுத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிமை உண்டு, ஆனால் தலித்துகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை என்பதைத்தான் அவர்கள் உறுதி செய்கிறார்கள்.” என்று அவர் கூறுகிறார்.

திரையில் போராட்டம்:

2009-ஆம் ஆண்டில், ஜெயம் ரவி நடித்த ’பேராண்மை’ திரைப்படம், தணிக்கைத் துறையின் பெரும் தொந்தரவுகளுக்குப் பிறகுதான் தமிழகத்தில் திரைக்கு வந்தது. படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், பட வெளியீட்டை உறுதி செய்வதற்காக, 16 வெட்டுக்களைச் செய்ய வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது. இப்படம், ஒரு உள்ளூர் கல்லூரியில் என்.சி.சி கேடட்களுக்கு பயிற்சியளிக்கும் ஒரு ஆதிவாசி வனக் காவலரைச்(துருவன்) சுற்றியது. துருவன் ஒரு பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர், அவருக்குப் போதிய தகுதிகள் இருந்தபோதிலும், அவரது பழங்குடிப் பின்னணி, அவரை அந்த அகாடமியில் கேலிக்குரிய பாத்திரமாக ஆக்குகிறது.

அவர் ஒரு ஆதிவாசி என்பதால், அந்நபர் தங்களுக்குப் பயிற்சியளிக்கக் கூடாது, கற்பிக்கக்கூடாது என்று பெண் மாணவர்கள் கூறும்போது, துருவனின் உயர் அதிகாரி தொடர்ந்து மாணவர்களுக்கு முன்னால் துருவனை அவமதிக்கிறார். துருவனின் மூத்த அதிகாரி, அவரது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கேட்கும்பொழுது, அங்குள்ள பெண்களின் மதிப்பெண்களை விட, குறைந்த மதிப்பெண்கள் உடையவன் என்று சுட்டிக்காட்டும்போது ’மெரிட்’ என்ற பொருள் எழுகிறது.

எஸ்.பி.ஜனநாதன் கூறுகையில், ”நான் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டுபேர். அதில் நான் ஒருவன் மட்டுமே பட்டம் பெற்றேன். எனக்கு வீட்டிலும் உதவி இல்லை, பயிற்சி பெறவும் போதுமான பணம் இல்லாததால், எனக்குப் படிப்பது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. தலைமுறையின் முதல் பட்டதாரி என்ற வலியை நான் உணர்ந்தேன், இதுவே எனக்குக் கடினமாக இருந்தால், ஒரு எஸ்சி அல்லது எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள்.”

பேராண்மையில் காட்டியுள்ளதுபடி, ரோஹித் வெமுலா விஷயத்திலும் டாக்டர் பயல் தத்வியின் விஷயத்திலும் நாம் கண்டதுபோல, நிறுவனமயமாக்கப்பட்ட சாதிப்பாகுபாடு என்பது உண்மை. ஒரு கல்வியைப் பெற்று வேலைக்குச் சென்றபிறகும் கூட, இந்தப் பாகுபாடு நிறுத்தப்படவில்லை என்பதைக் காட்டுவதையே, தான் நோக்கமாகக் கொண்டிருந்ததாக, இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் கூறுகிறார்.

”இது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஆழமாக வேரூன்றிய சாதியைக் காட்டியபோதிலும், தணிக்கை வாரியம் படத்திலிருந்து பல உரையாடல் வரிகளை வெட்டியது” என்கிறார் ஜனநாதன். இது குறித்து விசாரித்தபோது, “சாதி பாகுபாடு இங்கு இல்லை என்றும், எனவே இல்லாதவொன்றைத் திரையில் காட்டவேண்டிய அவசியமில்லை என்றும் தணிக்கை வாரியம் கூறியதாகக் கூறப்படுகிறது.

2003 ஆம் ஆண்டு வெளியான ’காதல் கொண்டேன்’ திரைப்படத்தில், இயக்குனர் செல்வராகவன், இடஒதுக்கீடு மூலம் கல்லூரியில் இடம் கிடைத்து படிக்கவரும் மாணவர் தகுதியற்றவர் என்று சொல்லப்படும் கதைகளை எதிர்க்கும் விதத்தில் ஒரு காட்சியை வைத்தார்.

"கல்லூரியில் ஒரு பேராசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கையில், தூங்கிக்கொண்டிருக்கும் தனுஷைப் பார்க்கிறார். தனுஷ் இதில் தாழ்த்தப்பட்ட சாதி அனாதையாக நடித்திருக்கிறார், பேராசிரியர் உடனடியாக அந்த மாணவனைப் பார்த்து இந்தக் கல்லூரி நிறுவனத்தில் எப்படி நுழைந்தாய்? என்று கேட்டு அவமானப்படுத்துகிறார்," என்று ஸ்டாலின் ராஜங்கம் கூறுகிறார், "பேராசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதியிருப்பார். அதற்கான பதிலைக் கண்டுபிடிக்க மாணவனை அழைப்பார். ’இலவச சீட்’ கிடைத்து படிக்க வந்த இந்த மாணவனால் இந்தக் கணக்கிற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியாது என்று கருதியிருப்பார்"
ஆனால் தனுஷின் கதாபாத்திரம் அந்த கணக்குச் சிக்கலைத் தீர்ப்பதைக் காட்சிப்படுத்துவதன் மூலம், அவர்களது சமூக அந்தஸ்தை அடிப்படையாக வைத்து, நாமே அவர்கள் மீது ஒரு தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்திக்கொள்வது தவறு என்று படம் சித்தரித்தது.

இதேபோல், கடந்த ஆண்டு, பா ரஞ்சித் தயாரித்த மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில், ஒரு தலித் மாணவர் சட்டக் கல்லூரியில் ஆங்கிலத்தைப் படிக்க முடியாமல், எழுதமுடியாமல் இருக்கும் நிலையை பேராசிரியர் கண்டிப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பார். அப்போது பேராசிரியர் பரியனிடம் "உங்களைப் போன்ற ஒருவருக்கு எப்படி சட்டக் கல்லூரி சீட் கிடைத்தது? நீங்கள் சட்டம் படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? கோட்-சூட் போட்டுக்கொண்டு மாடு மேய்க்கப் போகிறாயா?" என்று கேட்கிறார், "நீ கோட்டா மூலம் வந்த ஒரு கோழிக்குஞ்சு." என்று சொல்லி மற்ற சாதி இந்து மாணவர்களை சிரிக்கத் தூண்டுகிறார்.

கோபமடைந்த பரியன் பின்னர் தன்னுடன் படிக்கும் ஆதிக்க சாதி வகுப்பு மாணவர்களின் ஏடுகளைப் பிடுங்கி பேராசிரியரிடம், அவர்கள் எழுதியிருப்பவற்றைப் படிக்கச் சொல்கிறார். பரியன் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார். எனினும், அவர்களின் புத்தகங்களை விரைவாகப் பார்த்தால், பெரும்பாலான சாதி இந்து மாணவர்களும் எழுதுவது போல் நடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வெளிப்படுகிறது. இருப்பினும், அவர்கள் அதே துன்புறுத்தலை எதிர்கொள்ளவில்லை.

இடப்பங்கீடு குறித்து மேலும் படங்கள் தயாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ரஞ்சித் நம்புகிறார். "மத்திய அரசாங்கத்தின் அரசியல் சக்திகள் எல்லா இடங்களிலும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிக்கும் - தலித்துகள் மட்டுமல்ல, சாதி இந்துக்களும் கூட இதனால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளில், இடஒதுக்கீடு, சாதி சார்ந்த முரண்பாடுகள் மற்றும் சாதி ரீதியாக எழும் பிரச்சினைகள் குறித்த உள்ளடக்கங்கள் கொண்ட படங்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். நாங்கள் அதற்கான தளத்தை ஏற்கனவே அமைத்துள்ளோம், "என்று அவர் கூறுகிறார்.

உண்மையில், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு எவ்வாறு தோல்வியுற்றது என்பது குறித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் நான் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக கோபி நயினார் வெளிப்படுத்துகிறார். "இது குறைந்த பட்ஜெட் படம், ஆனால் நாங்கள் அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம்," என்கிறார்.

செலவு மற்றும் தணிக்கை

எவ்வாறாயினும், சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்த திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு, இந்தத் தொழில்துறைக்குள் ஒரு ஆதரவு அமைப்பு தேவைப்படுகிறது.

"எங்கள் தயாரிப்பாளர் ரஞ்சித் எங்களுக்கு ஆதரவளித்ததால் பரியேறும் பெருமாள் போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்க முடிந்தது. படம் வெளியிடப்பட வேண்டும் என்றும், அது நிதி இழப்புக்கு வழிவகுத்தாலும் அந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்து வெளியாக வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள சாதி நிலைப் பாகுபாட்டைச் சித்தரிக்கவும், வெளியிடவும் இந்த வகையான தீர்மானம் தேவைப்படுகிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக மக்களிடம் சென்றடைந்தது, "என்கிறார் மாரி செல்வராஜ்.

ஆனால் இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை நிதியாதாரம் மட்டுமே இல்லை. திருநெல்வேலியில் ' Unseeables' என்று அழைக்கப்படும் சமூகத்தைப் பற்றிய ஒரு படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த லீனா மணிமேகலை, சிபிஎப்சி தனது படத்தை நிராகரித்ததை அடுத்து திரைப்படத் தீர்ப்பாயத்தை அணுக வேண்டியிருந்தது.

"நான் சாதி குறித்த கருப்பொருளில் மூன்று திரைப்படங்களை எடுத்துள்ளேன், இதில் ஒவ்வொரு முறையும் தணிக்கை வாரியத்திடமிருந்து தடைகளை எதிர்கொண்டேன்," என்று அவர் கூறுகிறார். "தலித்துகள் தங்களைப் பறையர்கள் என்று அடையாளப்படுத்தியதற்காக, எனது முதல் படத்தை தணிக்கை வாரியம் தடை விதித்தது, இது திரையிடுவதற்கு தகுதியற்றது என்றும் கூறியது. ஆனால் ஒரு திரைப்படத்தின் தலைப்பு 'தேவர் மகன்' என்று சொல்லும்போது, ​​ஒரு தலித்தாக அவன் அல்லது அவள் ஏன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை? " என்கிறார்.

”கோடிகளில் செலவழித்து உருவாகும் வணிகத் திரைப்படங்கள், தணிக்கை சிக்கலை எதிர்கொள்ளும் அபாயத்தை எடுத்துக்கொள்வது உகந்தது அல்ல என்பதால், படைப்பாளிகள் தங்களைத் தாங்களே சுய தணிக்கை செய்துகொள்கிறார்கள்” என்று லீனா கூறுகிறார்.

இருப்பினும், ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சிபிஎப்சியில் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை. "ஆனால் அது மாரி செல்வராஜ் படத்தை உருவாக்கிய விதம் காரணமாக மட்டுமே. அவர் குறிப்பிட்டு எந்தச் சமூகத்தையும் பெயரிடாமல், எந்தச் சமூகத்தையும் குறைத்துப் பேசாமல், தன் கருத்தை படத்தினுள் வைத்திருந்தார்" என்று ரஞ்சித் கூறுகிறார்.

’பரியேறும் பெருமாளை’ ஒரு சிக்கலான படம் என்று சிபிஎஃப்சி கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தேசிய விருதுகளில் அதற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மறுபுறம், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டிற்காக பரிந்து பேசிய ’ஓரே ஓரு கிராமத்திலே’ திரைப்படம், உண்மையில் 1989 இல் வெளியிடப்படுவதற்கு முன்பே ஒரு தேசிய விருதை வென்றது.

தன்னளவிலேயே எவ்வளவு ஒருசார்பான அளவுகளை/மதிப்பீடுகளை இது கொண்டிருக்கிறது என்பதை (இது) உணர்த்துகிறது.

நன்றி:TheNewsMinute