நீரின்றி அமையும் உலகு

‘திரை’ ஜனவரி இதழில் அருண்மொழி சாய் மிங் லியங்கின் படங்களைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தார். அதில் அவரின் சமீபத்திய வெகு சர்ச்சைக்குள்ளான The wayward cloud பற்றியக் குறிப்பு இல்லை.

Image result for the wayward cloud film

அது ஒரு கோடை காலம். தண்ணீர் பிரச்சனை விசுவரூபித்திருக்கும் காலம். தண்ணீரை விட தர்பூசணியின் விலை குறைவு; தாகத்தைத் தீர்க்கக் கூடியது என அறிவுறுத்தப்படுகிறது. படத்தின் எந்தக் காட்சியிலும் தண்ணீர் காட்டப்படுவதில்லை. எல்லாம் பாட்டில்கள்... பாட்டில்கள் மற்றும் பாட்டில்களில் அடைபட்டத் தண்ணீர் அவ்வளவு தான்.

கோடை காலத்தை முன்வைத்து இப்படம் நகர்கிறது என்று சொல்வதை விட “நீரின்றி அமையும் உலகினைப் “ பற்றின சூழலியல் படம் என்று பொருத்திக்கொள்வது எனக்கு சௌகரியமாக இருக்கிறது. அவரின் முந்தையப் படங்களில் கூட தண்ணீர் பல சிக்கல்களை உருவாக்கும் படிமங்களை சாய் முன் வைத்திருக்கிறார்.

இப்படத்தின் எந்தப் பிரேமிலும் தண்ணீர் தென்படுவதில்லை. (ஒரு காட்சியில் தர்ப்பூசணி மிதக்கும் தெரு சாக்கடை கூட கருத்து, நீரின் பிரதிபலிபற்று தான் இருக்கிறது) சமையலறை முழுக்க தண்ணீர் பாட்டில்களும், தர்பூசணிகளும். குழாயில் தண்ணீர் தென்படுவதில்லை. தண்ணீர் உபயோகப்படுத்தி சமையல் காட்டப்படுவதில்லை. டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள். பொறித்தெடுக்க எண்ணெய் பயன்படுகிறது. மற்றபடி தர்ப்பூசணி முக்கிய உணவாகிறது. உயர்ந்தரக நூடில்ஸ், சேமியாக்கள் மற்றும் நண்டுகள் பொறிக்கக் கூட தண்ணீர் தேவையற்றதாகப் பயன்படுத்திக் கொள்ள பழகியாகிவிட்டது. ஒரு காட்சியில் சாக்கடைத் தண்ணீரில் மிதக்கும் தர்ப்பூசணியை எடுத்து வந்து பாட்டில் தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டியிருக்கிறது. தண்ணீர் தென்படும் அப்பார்ட்மெண்டில் தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து திருட்டுத்தனமாய் குளிக்க வேண்டியிருகின்றது அவனுக்கு. தண்ணீர் கிடைக்குமிடங்களில் தண்ணீர் பாட்டில்களை நிரப்பி திருட்டுத் தனமாய் கடத்த வேண்டியிருக்கிறது. இச்சூழலில் சந்தித்துக் கொள்ளும் அவனும், அவளும்.

Image result for the wayward cloud film 

அவன் ‘போர்னோ’ திரைப்படங்களில் நடிப்பவன். ஷவர் தண்ணீரில் குளியல் அறையில் குளித்துக் கொண்டே உடலுறவு கொள்வதாக எடுக்கப்படும் காட்சியில் ஷவருக்கு பதிலாக தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி சிறுசிறு ஓட்டைகள் போட்டு ஷவரை உருவாக்குகிறார்கள். பாட்டில்களில் தண்ணீர் தீர்ந்து போன காரணத்தால் படப்பிடிப்பு தடைபடுகிறது. படப்பிடிப்பு தடங்கல் அடையும் இன்னொரு காட்சியில் தண்ணீர் பாட்டிலை உபயோகித்து சுயபுணர்ச்சி செய்து கொள்ளும் பெண்ணின் உறுப்பில் பாட்டில் மூடி சிக்கிக்கொள்கிறது. இயக்குனரும், குழு உறுப்பினர்களும் பாட்டில் மூடியை அங்கிருந்து சரியாக மீட்டெடுப்பதும் அவர்களின் படப் பிடிப்பின் வேலையாகிறது.

அவள் அவனை தினந்தோறும் சந்திக்கிற வாய்ப்பு ஏற்படுகிறது. பாரிசிலிருந்து திரும்பும் அவள் அவன் தங்கியிருக்கும் மாடிக் குடியிருப்பில் தான் வாடகைக்குத் தங்கியிருக்கிறாள். அவனின் சாப்பாட்டிற்கு ‘போர்னோ’ படங்களில் நடிப்பது என்றாகிவிட்டதை அவன் சொல்கிறான். (சாயின் “ the skywalk is gone” படத்தில் இடம்பெறும் அவன், அப்படத்தில் ‘போர்னோ’ நடிகனாக ஒரு தேர்வுக்குச் செல்வாதான காட்சி இருக்கிறது.)

Related image

அவன் அழகான பெண்ணைப்பார்த்து சுயமைதுனம் செய்யும் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கிறது. அதிக போதையில் கிடக்கும் பெண்ணை லிப்ட்டிலிருந்து தூக்கி வந்து படுக்கையில் போட்டு படப்பிடிப்பிற்கு தயார் செய்து சிரமப்பட வேண்டி உள்ளது. மயக்கமாய் கிடக்கிறாளா... பிணமாக கிடக்கிறாளா என்று யோசிக்க யாருக்கும் அவகாசம் நேர்வதில்லை போல! படப்பிடிப்பு ரத்தாகி விடக் கூடாது என்று தொடர்கிறது. புணர்ச்சி காட்சிகளில் அந்த உடம்பின் மீது அவன் இயங்கிக் கொண்டே இருக்கிறான். அந்தப் ‘பிணத்துடனான’ உடலுறவுக் காட்சியைத் தவிர்த்து விடுவதோ, ரத்து செய்வதோ தேவையற்றதாகி தொடர்கிறது. இயல்பான எழுச்சிக்கு இடம் இல்லாததால் படப்பிடிப்பை வந்து ஜன்னல் வழியாகப் பார்க்கும் அவளின் வாய் வழி செயல் அவனுக்கு உவப்பாகிவிடுகிறது. இதுவே படத்தின் இறுதிக்காட்சியாக அமைக்கப்பட்டிருகிறது. 

அவள் அதை விழுங்குகிறாள். இது வேறொரு நிலையில் தொண்டையை நனைத்துக் கொள்ள தண்ணீர் இல்லை எனில், இது தான் சாபமாய் நிகழும் என்ற எச்சரிக்கை போலவும்படுகிறது. இதை மீறி அதிர்ச்சி தரும் படிமங்களாக அமைபவை ஆண்களாக பெண்களும், பெண்களாக ஆண்களும் பாடல் காட்சியில் மாறுவதும் பாலியல் உறுப்புகளை முகமூடிகளாகவும், உடம்பிலும் கட்டிக் கொண்டு நிகழ்த்தும் விடயங்களும்.

அவனும் அவளும் சந்தித்துக் கொள்ளும் ‘போர்னோ’ வீடியோக்கள் நிறைந்த அறையில் அவர்களுக்கு பாலுறவுக்கான சந்தர்ப்பங்கள் அமைவதில்லை அல்லது அமைத்துக் கொள்வதில்லை. வெறும் முத்தகங்களோடு பிரிகிறார்கள் என்பதை இயல்பான உணர்ச்சி ஒருவருக்கொருவர் புரிதல் தன்மைக்கானது என்பதாய் உள்ளீடாகிறது. ‘போர்னோ வீடியோ’க் கடைகள் வெளிநாடுகளில் மலிந்து விட்டன. இளைஞர்களும் பல்வேறு வகையினரும் பாலுறவுப் படங்களைத் தொடர்ந்து பார்க்கிற வாய்ப்பு அமைந்து கொண்டிருக்கிறது. சட்டத்திற்கு புறம்பானதோ சுயதர்ம உபதேசங்களுக்கு எதிரானதோ என்ற எண்ணத்தை மீறி இயல்பான விஷயமாகிவிட்டது. அதன் சொந்தக்காரர்களுக்கு, அது ஒரு வியாபாரம். அதில் நடிக்கிறவர்களுக்கு அது எப்படி ஒரு தொழிலோ அல்லது வியாபாரமோ என்று ஆகி விட்டதைப்போலத்தான். “...நான் எல்லாவற்றையும் விற்கிறேன் எனது இதயத்தையும், ஆன்மாவையும் தவிர...” என்று பாடல்களால் அவர்கள் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். பாலுறவு, நிர்வாணம் போன்றவை வெகுஜன கலாச்சார பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாகி விட்டது. சாதாரண மக்களின் உரையாடல்கள் மற்றும் பரிமாற்றங்களில் பாலுறவு பற்றின விடயங்களும் சாதாரணமாகி விட்டன.

Image result for the wayward cloud film 

தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருகிறது. சாய் மலேசியாவில் பிறந்தவர். தைவானில் பாலுறவுப் படங்கள் சட்டரீதிக்கு புறம்பானவைதான். ஜப்பானிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறவைதான். ஆனால் மறைமுகமாக சாதாரணமாகக் கிடைக்கக்கூடியவை. சாய் மிங்கின் இப்படம் தைவானில் எவ்வித நீக்கலும் இன்றி வெளியிடப்படுகிறது. குடும்பத்தினருக்கான பொழுது போக்கு அம்சமாக அவை நியாயப்படுத்தவும்படுகிறது. 

சாய் மிங் பாலுறவு விடயங்களை, இன்றைய தாராளமயமாக்கல் உலகத்தில் நுகர்வுப் பொருளாகத்தான் பார்ப்பதாகச் சொல்கிறார்; துரித உணவு போன்ற உணர்வெழுச்சியும் மகிழ்ச்சியும் தரக்கூடியதாகி விட்டது என்கிறார். தம்பதிகளிடையே நிகழும் ஆத்மார்த்தமான பாலுறவு மற்றும் பாலுறவின் உன்னதம் பற்றின விவாதங்களை இது போன்ற படங்கள் எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறார். பாலுறவுப்படம் எடுப்பவன் ஆவணப்படுத்துபவனாகவும், அதன் தொழில்நுட்ப சாத்தியங்களை நடை முறைப்படுத்துபவனாகவும் மாறுவதை அவர் நியாயப்படுத்துகிறார். அதை நிகழ்த்துகிறவர்களுக்கு அது ஒரு கொடுமையாகிறது. இயந்திரத்தனமான தண்டனையாகவும் மாறிவிடுகிறது. படைப்பின் தன்மையைக் கேள்விக் குறியாக்கி விடுகிறது.

படிமங்களாலும், அழகான உடம்புகளாலும் படத்தை நிறைக்கும் சாய் பாலியல் குறித்து எவ்வித அழகியலையும் நிறுவ முயற்சிக்கவில்லை. அதை மலிந்து போன அன்பின் இன்னொரு வடிவமாக்குகிறார். அதிர்ச்சிதரும் படிமங்கள் மூலமாக பாலியல் குறித்த மாயைத் திரைகளை விலக்குகிறவராகவும் இருக்கிறார்.       
நன்றி: திரை