சட்டத்தின் உதவியுடன் மனிதத்தைத் தொடும் ஆர்டிகிள் 15

ஒரு சினிமா மாணவனாக ஆர்டிகிள் 15 என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளின் வெளிப்பாடுதான் இக்கட்டுரை. தன்னெழுச்சியாக எனக்குத் தோன்றிய கருத்துக்களின் மேல், தம்மம் சிந்தனையாளர் பேரவை முன்னெடுத்த கலந்துரையாடலின்போது பகிரப்பட்ட கருத்துக்கள் தாக்கம் செலுத்தியதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் கூடுமானவரை நான் கேட்டவற்றை என்னுடையதாக இதில் இணைக்காமல் இருக்க முயன்றிருக்கிறேன்.

2017-ம் வருடம் தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி பிரிவான படிமையில் இணைவதற்கு முன், சமூகத்தின் பால் என்னுடைய பார்வையும் தமிழ் சமூகத்தின் மீதான எனது அக்கறையும் சொல்லிக்கொள்ளும் அளவு கிடையாது. மையநீரோட்ட ரசனையிலிருந்தும் பொதுப் புத்தியிலிருந்தும் பெரிதும் விலகாத ஒருவனாக தானிருந்தேன்.

படிமை வகுப்புகள் தொடங்கிய சமயம் படித்த சில புத்தகங்களும் முகநூலில் படித்தவையும் யூட்யுபில் பார்த்த நேர்காணல்களும் தமிழ் ஸ்டுடியோ குழுவினருடன் நடந்த நீண்ட உரையாடல்களும் என்னுள் சிறிது சிறிதாக மாற்றத்தை உண்டு பண்ணியது. சிறுநகர மற்றும் நகர வாழ்முறையும் பள்ளிக் கல்வியும் அதுவரை எனக்குக் கற்பித்த விடயங்களை என்னையறியாமலேயே மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்திருந்தேன்.

நிகழ்வுகள் செய்திகளாக மட்டும் நில்லாமல் அதன் பின்னுள்ள சமூக அவலங்கள் தெரிந்தன. அதைவிட முக்கியமாக இச்சமூகத்தை ஒரு சாதியச் சமூகமாக நான் உணர ஆரம்பித்தேன். இருபத்தைந்து ஆண்டுகளாக என்னைச் சுற்றிலும் நடைபெற்று வந்திருக்கும் சாதிய வன்முறைகள் பற்றி எனக்குப் பெரிதாக எந்தப் பிரக்ஞையும் இல்லாததிருந்ததைக் கண்டு அவமானமாக இருந்தது.


சிறிது காலத்திற்குப் பின், அந்த அறியா நிலை எனது பிழை மட்டுமல்ல என்றும் அதன் பின்னுள்ள பார்ப்பனியமும் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அப்புரிதல் ‘எவ்வாறு இரண்டாயிரம் வருடங்களாகக் கட்டி காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கின்றனர்?’, ‘சிறிதே சிறிதளவேனும் சுயசிந்தனையும் மனிதநேயமும் உள்ள யாராலும் இக்கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாதே!’ போன்ற அடிப்படைக் கேள்விகளை என்னுள் எழுப்பியது.

அந்தச் சில மாதங்கள் எனக்கிருந்த மனநிலையை மறுபடியும் நினைவு படுத்தியது ஆர்டிகிள் 15 படத்தின் இடைவேளை வரையிலான பகுதி. அப்பகுதியின் காட்சியமைப்பும் கதையோட்டமும் படத்திலிருக்கும் தலித் கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு இரக்கவுணர்வு ஏற்படாதவாறிருந்தது. அதனோடு ஆணவச் சாதியினர் தலித் மக்கள் மீது தொடுக்கும் வன்முறையைக் காரணங்காட்டி, ஆணவச்சாதி கதாபாத்திரங்கள் மீது கணநேரமே நிலைக்கக் கூடிய ஆத்திரத்தையும் உண்டு பண்ணாமல், மிகுந்த நாணயத்துடன் பதிவு செய்திருந்தார் இயக்குநர் அனுபவ் சின்ஹா.

சாதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் எனக்குச் சிறிது மன உளைச்சலையும் கோபத்தையும் உண்டுபண்ணும். அதேநேரம், சாதியத்திற்கு எதிரான குரல்களும் அதன் வெறியாட்டத்திற்கு மண்டியிடாத செய்கைகளும் பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும்.


ஆர்டிகிள் 15 படத்தின் முதல் காட்சியிலிருந்தே அது வினாடிக்கு 24 பிரேம்கள் ஓடும் படம் தானென்பதை மறந்து, நிஜமாகவே என் கண்முன் நடப்பது போன்ற உணர்வு எனக்கிருந்தது. அவ்வகையில், இரண்டாம் முறைப் பார்த்தபோது கடைசி காட்சியில் ‘மேரி பாரத் மாதா’ என்ற லாரியின் ஹாரன் சத்தம் எனக்குள் ஏற்படுத்திய அகமகிழ்வு அளப்பரியதாக இருந்தது.

பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டும் தற்போதிருக்கும் சாதிய எதிர்ப்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலமாகவும் இச்சாதிய சமூகத்தைப் பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு நான் தெளிவு காண முயல்கிறேன். அதே கேள்விகளுக்கு, அண்ணலின் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் விடைகாண முயன்றிருக்கிறார் அனுபவ் சின்ஹா என்பதாகதான் நான் இப்படத்தைப் புரிந்துகொள்கிறேன்.

படம் பார்த்தபின், ‘யாரு தான் இந்த அனுபவ் சின்ஹா?’ என்று தேடியபோது, ‘இராம் இராம்’ என்றிருந்த ஒரு காவி சால்வையுடன் இந்து அரசாங்கத்தின் கீழ் முஸ்லிம் மக்கள் படும் பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த, கூர்மையான பார்வையுடனும் தாடியுடனுமிருந்த ஒருவர் கிடைத்தார்! அவருடைய முல்க் (நாடு) படமும் பார்த்தபின்பு அவரின் மீதான அபிமானம் இன்னும் கூடியது.குறைவான சமரசங்களுடன் தான் நம்பும் கருத்துக்கு மிக நேர்மையாக, அதேநேரம் மையநீரோட்டத்தில் பயணிக்க விரும்பும் இயக்குநர்களுக்கு ஆர்டிகிள் 15 மூலம் அனுபவ் சின்ஹா ஒரு முக்கியமான முன்னுதாரணத்தை விட்டுச் சென்றிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரையில், அதன் எல்லைக்குள் ஆர்டிகிள் 15 நேர்த்தியான காட்சிமொழியையும் கொண்டிருக்கிறது.


சாதியைப் பற்றி பேசும்போது, நமது சமூகம் அநேக சமயங்களில் நேர்மையற்றதாகவும் வெளிப்படைத் தன்மையில்லாமலும் இருக்கும். சாதியை பதிவு செய்யும், கேள்விக்குட்படுத்தும் நமது பெரும்பான்மை சினிமாக்களிலும் இதனைக் காண முடியும். நான் பார்த்தவரையில் (நான் அதிகம் பார்த்ததில்லை!) ஆர்டிகிள் 15 திரைப்படம்போல் மேற்குறிப்பிட்ட இரண்டையும் சரியாகச் செய்த வேறு திரைப்படம் இல்லை.

‘தலித் வாழ்வியலை யார் யாரெல்லாம் படமாக்கலாம்?’ மற்றும் ‘தலித் வாழ்வியலை எப்படி படமாக்கலாம்?’ ஆகிய கேள்விகளுக்கான எனது புரிதல் அனுபவ் சின்ஹா மூலமாகவும் ஆர்டிகிள் 15 படம் மூலமாகவும் மேலும் செறிவாகியுள்ளது.


வடிவ ரீதியாகவும் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டும் ஒரு படத்தை அணுகுமளவு நான் இன்னும் தேர்ச்சி பெறாததால், படத்தின் உள்ளடக்கம் மற்றும் அது பேசும் அரசியல் குறித்து மட்டும்தான் நான் பேசுகிறேன். அந்த எல்லைக்குள், உள்ளடக்கம் ரீதியாக ஓரிரு குறைகள் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மேலும் சிறிது நேரம் யோசித்தபோது, அக்குறைகள் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் படத்திலேயே இருப்பதாகத் தோன்றியதால், அக்குறைகளை இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை.

‘இந்திய பெருநகரங்களில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்கள் இச்சாதிய சமூகத்தைப் பற்றியும் தலித் மக்களின் நிலையைப் பற்றியும் அறிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். அவர்களிடம் ஒரு உரையாடலை ஏற்படுத்தத்தான் நான் இப்படத்தை எடுத்தேன்.’ என ஒரு நேர்காணலில் அனுபவ் சின்ஹா சொல்கிறார். அவ்வகையில் அனுபவ் சின்ஹா வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.


முடிவாக ஆர்டிகிள் 15 படத்தில் எனக்குப் பிடித்த மூன்று விடயங்களைப் பகிர விரும்புகிறேன். முதலாவதாகச் சாதிய இழிவிற்கு இப்படம் எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை, மாற்றையும் சுட்டிக்காட்டவில்லை. இரண்டாவதாகச் சாதிய வன்முறைக்குப் எதிர்வினை மற்றுமொரு தனி மனித பழிவாங்குதல் இல்லை என்பது போன்ற பதிவு. மூன்றாவதாக மேலிருந்து கீழ்நோக்கும் பார்வையுடனோ அல்ல ஒரு மேதாவி தனத்துடனோ அனுபவ் சின்ஹா படம் பேசும் பிரச்னைகளை அணுகவில்லை.

மேற்கூறியவற்றிற்கு மாற்றாக, முடியும்போது சில கேள்விகளைப் பார்வையாளர்களிடம் விட்டுச் செல்கிறது படம். நுண்ணுணர்வு கொண்டவர்களை அறவிசாரணைக்குட்படுத்தகூட செய்யலாம். இக்காரணங்களால் ஆர்டிகிள் 15 ஒரு முக்கியமான படமென எனக்குத் தோன்றுகிறது. சாதியைக் கேள்விக்குட்படுத்திய இந்தியப் படங்களின் வரிசையிலும் இப்படம் ஒரு முக்கிய இடம் வகிக்கும் என நம்புகிறேன்.