பாலியல் வல்லுறவுக்கும், சாதீய அடக்குமுறைக்கும் எதிரான தீரக்குரல்

இந்திய அரசியலமைப்பு சட்டம்: பிரிவு 15

சமயம், இனம், மொழி, சாதி, பால், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் என்னும் அடிப்படையில் இந்திய மக்களிடம் எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படக்கூடாது.

 -பாபாசாகேப் அம்பேத்கர்

ஒரு திரைப்படம் சமூகத்தில் நிலவும் உண்மையை எந்த அளவிற்குச் சொல்ல வேண்டும்? என்கிற கேள்வி எப்போதுமே இருக்கிறது. இருப்பதை அப்படியே காண்பிப்பது சரியா? இல்லை அதிலிருந்து தேவையான மாற்றத்தினை நோக்கிச் செல்ல சரியான வழியைக் காட்டுவது சரியா? இல்லை ஆங்காங்கே சிறிதளவேனும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை முன்னுதாரணமாகக் காட்சிப்படுத்துவது சரியா? என்கிற கேள்விகளும் பரவலாக எழுவதுதான். நியாயமான கேள்விகளும்கூட. புனைவு, நிஜம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, பட உருவாக்கத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள், நடித்த நடிகர்கள் என நீளும் இன்னபிற சினிமாவின் இத்யாதிகளை எல்லாம் தூக்கி ஓரமாக வைப்போம். அவையெல்லாம் அவசியம் தேவைதான். அதையெல்லாம்விட ஒரு திரைப்படம் கைக்கொண்டிருக்கும் அதன் பிரதான கரு என்ன என்பதையும், மிக முக்கியமாக அது வெளியாகும் காலகட்டம் என்ன என்பதையும் இங்குப் பார்க்கவேண்டியிருக்கிறது. பேசாப்பொருளை பேச வேண்டும் என்பது தைரியத்தின் உச்சம் என்றாலும் அது சரியான சமயத்தில் சரியான ஆட்களைச் சென்றடைந்துவிட்டால் அதுவே கலையின் உரத்த குரலாகவும் மாற சாத்தியங்கள் உள்ளதே.


இந்துத்துவமும் அரச பயங்கரவாதமும் பாசிசமும் நாட்டில் உள்ள அனைவரையும் ஒற்றை மையம் என்கிற குடைக்குள் அடைத்துவிட முயலும் அபாயகரமான சூழல் நிலவும் இங்குக் கருத்துச் சுதந்திரம் என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. அரசாங்கத்தினால் மக்களுக்கானவை எனக் கொண்டுவரப்படும் எதுவுமே வருவதற்கு முன்னால் அது சரியானதா? சமூகநீதிக்குப் பங்கம் வந்துவிடாமல் சமநிலையுடன் மக்களைச் சென்றடையுமா? அதனால் பயன்பெறப் போகிறவர்கள் சரியானவர்களா? என்கிற கேள்விகளே எழுப்பப்படுவதில்லை. கேள்விகள் எழுந்தால்தானே விவாதங்கள் பிறக்கும். சரியான முதிர்ச்சியான விவாதங்கள் இறுதியில் நல்ல வழியை நிச்சயமாகக் காட்டிக்கொடுக்கும். ஆனால் அரசாங்கம் அதைச் செய்யாது. ஏனெனில் அப்படிச் செய்வது காலங்காலமாக உண்டு கொழுத்து எல்லாமே எங்களுக்குத்தான் என உரிமை கொண்டாடும் ஆட்களுக்கு எதிரானதாக அல்லவா இருக்கிறது. ஆக, இங்கே இதுதான் சட்டம். கட்டாயமாக நீ இதைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்பது கட்டளையாக வைக்கப்படுகிறது. நடப்பது மக்களாட்சியா என்பதே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. 


மிக முக்கியமாக நம்முடைய சகோதரர்களாக உற்ற தோழர்களாக நம்முடனே காலங்காலமாக வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களை நமக்கு எதிராக விரோதியாகக் கட்டமைக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். இங்கு சமூகம் ஏகப்பட்ட சாதி சமய வேறுபாடுகளால் சிதைந்து போய்கிடக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான கடுமையான விரோதப் போக்கு அனைத்து இடங்களிலும் வேரூன்றி இருக்கிறது. ஆனால் சிறுபான்மை இன மக்களை எதிர்க்கும்போது மட்டும் தலித்துகளை இந்துக்கள் என்கிற வட்டத்துக்குள் கொண்டுவந்து காவிப்படைகள் செய்யும் பித்தலாட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது. கல்வி, அரசியல், விளையாட்டு, கலை, ஊடகங்கள் என எல்லாமே சனாதனத்தின் பிடியில் அவைகளுக்கான பிரச்சார வியாபார பண்டங்களாக மாறி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் தங்களுக்கானதாகவும், தங்களை ஆதரிக்கும் ஆட்களுக்கானதாகவும் மாற்றிக்கொண்டே வருவது ஆபத்தானது.

“அவங்களுக்கு என்னங்க? அவங்கதான் இப்ப நல்லா இருக்காங்க. எல்லா பெரிய அரசு வேலைகளிலெல்லாம் அவங்கதான் இருக்காங்க! இப்பலாம் யாருங்க சாதி பாக்கறாங்க. அதெல்லாம் இல்லைங்க.” என்கிற பேச்சு உங்கள் காதுகளில் நிச்சயமாகக் கேட்காமலிருந்திருக்காது. எனவே இங்கு இப்படித்தான் இருக்கிறது என்று பெருவாரியான மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய சூழலில் ஒரு திரைப்படம் காட்டும் விஷயம் நிச்சயமாக நிஜமானதாக இருக்க வேண்டும். இதைத்தான் ‘அனுபவ் சின்ஹா’ இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தித் திரைப்படமான ‘ஆர்டிகிள் 15’ செய்திருக்கிறது. படம் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று பாலியல் வல்லுறவுக்கு எதிரானதாகவும், இன்னொன்று மிக முக்கியமானதாக இந்திய சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதி என்கிற கொடிய விஷத்தால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தலித் மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதாகவும் இருக்கிறது.

சமூகத்தில் உயர்குடி என்று சொல்லப்படும் சாதியில் பிறந்த இளைஞர் அயன் ரஞ்சன். தில்லியில் படித்தவர்; வெளிநாடுகளில் வேலை பார்த்தவர்; இந்தியா தனது தாய்நாடு என்கிற பாசத்துடன் வந்து சேர்ந்தவர்; அவர் மனதிலிருந்த இந்தியா என்பது அழகானதாகவும், கலாச்சாரங்களும், பண்பாடுகளும் இன்னும் நிறைய விஷயங்களை உள்ளடக்கிய மின்னும் (டிஜிட்டல்) இந்தியாவாக இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தின் சிறிய ஊரொன்றில் காவல் உதவி ஆய்வாளராகப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வருகிறார். வட இந்தியக் கிராமத்தின் அழகினை அவரது கண்கள் பருகிக் கொண்டிருக்கும் அதேவேளையில் உடன் வரும் காவலர் ஒருவர் இந்துக் கடவுள் ராமன் சார்ந்த செவி வழிக்கதை ஒன்றினை சொல்கிறார். சாதியின் மூலமாகத் தலித்துகள் ஒடுக்கப்பட்டு இருப்பதை அந்தக் கதை நியாயப்படுத்துகிறது. அடுத்த காட்சியே நம்முள் பகீரென இறங்குகிறது. செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் கிராமத்துத் தேநீர்க் கடை ஒன்றில் செருப்பினை அணியாமல் தரையில் ஓரமாய் ஒடுங்கி வரிசையாக உட்கார்ந்து அட்டைக் கப்பில் தேநீர் குடிக்கும் மக்களைப் பார்க்கிறோம். “இந்த ஊர் மக்கள் தாழ்த்தப்பட்ட இனத்தினை சார்ந்தவர்கள்; இவர்களின் நிழல் நம்மேல் படுவதே தீட்டு” எனப் படித்து வேலையில் இருக்கும் காவலரே சொல்லுகிறார். தண்ணீர் பாட்டில் அந்த கடையில் வாங்கவே தயங்குகிறார். ரஞ்சனுக்கு இது அதிர்ச்சியைத் தருகிறது. பிடிவாதமாக அதே கடையில் தண்ணீர் வாங்கிவரச் சொல்கிறார் ரஞ்சன்.

காவல் நிலையத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அனைத்து சக காவலர்களும் தங்களின் பெயருடன் சாதிப்பெயரை சேர்த்துத்தான் சொல்லுகிறார்கள். அந்த காவல் நிலைய வட்டத்துக்குட்பட்ட கிராமமொன்றில் பதினைந்து வயதான மூன்று தலித் சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அருகிலுள்ள கிராமத்தில் 25 ரூபாய் தினக்கூலிக்கு நாள் முழுவதும் உழைக்கும் சிறுமிகள் அவர்கள். 

அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார்கள். ஆனால் புகாரை எடுத்துக் கொள்வதே இல்லை. ஏதோ பேசி சரிக்கட்டவே நினைக்கிறார்கள். ரஞ்சன் பொறுப்பேற்று முதல் வழக்காக இதுதான் அவர் கைக்கு வருகிறது. சக காவலர்களை ஏன் ‘புகாரை எடுத்துக் கொள்ளவில்லை?, மூன்று சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள், புகாரை ஏற்று ஏன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை?’ எனக் கேட்கிறார். தரப்படும் பதில் ‘சார் இந்த ஜனங்கள் இப்படித்தான் அடிக்கடி இப்படி ஏதாச்சும் சொல்லிக்கிட்டு வருவாங்க! அவங்க புள்ளைங்களும் இப்படி அடிக்கடி காணாமல் போவாங்க, இரண்டு மூன்று நாட்கள்ல அவங்களே திரும்பி வந்துடுவாங்க, இதை எல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்ல சார்!’ என்கிறார்கள். ரஞ்சனுக்கு கோபமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

மறுநாள் அதிகாலையில் காணாமல் போன சிறுமிகளில் இரண்டு பேர் ஒரு மரத்தில் அருகருகே தூக்கில் தொங்குகிறார்கள். ரஞ்சனின் கண்கள் அந்த சிறுமிகளின் உடல்களைக் காணும் போதே ஒரு வழியாக ஏதோ விபரீதம் நிகழ்ந்திருப்பதை ஊகிக்கிறார். வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. உடனடியாகவே அதை மூட காரணத்தைச் சொல்லுகிறார் உடன் பணிபுரியும் காவலர் ஒருவர். இந்த வழக்கை ‘ஆணவக் கொலையாக’ மாற்ற முயலுகிறார் அவர். அந்தப் பெண்கள் இருவருமே தன்பாலின ஈர்ப்பாளர்கள்; எனவே அவர்களது பெற்றோர்களே அவர்களைக் கொன்று விட்டார்கள். என கதையை சோடிக்கிறார்கள். ஆனால் ரஞ்சன் இதற்கு உடன்படுவதில்லை. இரண்டு சிறுமிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்த பிறகே எதையும் முடிவு செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

இதற்கிடையில் காணாமல் போன சிறுமிகளின் பெற்றோர்கள் ரஞ்சனை சந்தித்து தங்களுடைய மகள்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகத்தைச் சொல்லுகிறார்கள். மூன்று பேரும் ஓரே இடத்தில் வேலை பார்ப்பதாகவும், வேலை செய்யும் இடத்தில் மூன்று ரூபாய் அதிகமாகக் கேட்டதற்காக முதலாளியால் அடிக்கப்பட்டதாகவும் சொல்கிறாள் ஒரு இளம்பெண். அவள் பெயர் கெளரவ் காணாமல்போய் இன்னும் என்ன ஆனாள் என்றே தெரியாத மற்றொரு சிறுமியான ‘பூஜாவின்’ அக்கா அவள். அந்த முதலாளியைத்தான் மக்களுக்கான அரசாங்க வேலைகளை நல்லவிதமாகத் தரமுடன் உடனுக்குடன் செய்து தரும் நல்ல ஒப்பந்தக்காரனாகவும், குறிப்பாக ஊரில் இருக்கும் கார்ப்பரேட் இந்து சாமியாரான ‘மஹந்த்’ க்கு நெருங்கியவனாகவும், அரசியல் செல்வாக்கு உள்ளவனாகவும், போலீஸ்காரர்களுக்கு உதவிகள் செய்பவனாகவும் முன்னிருத்துகிறார்கள்.

காவல் நிலையத்திலேயே சாதிய கட்டமைப்பு வேரூன்றிக் கிடக்கிறது. சமூகத்தில் பரவிக்கிடக்கும் சாதிய படிநிலை காவல் நிலையத்திலும் அசலாக இருக்கிறது. தங்களது சாதிகளை முன்வைத்து ஒருவரை விட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என முன்னிருத்திருத்திக்கொள்ளும் படத்தில் வரும் உரையாடல் காட்சியே இதற்கு அப்பட்டமான சான்று. தலித் இனத்தைச் சேர்ந்த காவலர் ஒருவரும் இருக்கிறார். அவரும் கூட ஆரம்பத்தில் தன் இன மக்களுக்கு இந்த வழக்கு சார்ந்த நியாயமான விசாரணையை முன்னெடுப்பதில்லை. தன்னை விடச் சாதியில் மேலான கட்டளையிடும் அதிகாரிக்கு அடங்கித்தான் போகிறார். ரஞ்சனின் கிடுக்கிப்பிடியான கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லும் சூழலில் அவரை உடன் பணியாற்றும் ஆணவ சாதிக்கார காவலர் மிரட்டுகிறார். படத்தின் ஒரு காட்சியில் ஆணவ சாதிக்கார காவலர் ரஞ்சனிடம் தலித் காவலரைக் காட்டி “இவரின் அம்மா பள்ளியைக் கூட்டி சுத்தம் செய்யும் வேலையைச் செய்து வந்தார். இப்போது இவர் என்னுடன் சேர்ந்து ஒரே காவல் நிலையத்தில் வேலை செய்யவில்லையா?” என்கிற கேள்வியை முன்வைத்துத் தப்பிக்கிறார். மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவரை கூட தங்களுக்கு சாதகமாக அறிக்கை தரும் நபராக இருக்க வைக்க முயல்கிறார்கள்.


பிரேத பரிசோதனை செய்யும் பெண் மருத்துவர் இரண்டு பெண்களையும் இரண்டு மூன்று நாட்களாக அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததைத் தனது ஆய்வில் கண்டறிகிறார். ஆனால் தனது உண்மையான அறிக்கையை தர முயலும்போது மிரட்டப்பட்டு “பேசாம போய் பேஸ்புக்கில் இதற்கு வேணும்னா ஏதோ சோகமா எழுதிக்கோ! அறிக்கையில் நாங்க சொல்லற மாதிரி எழுது!” என சொல்லுகிறார் குற்றவாளியை காப்பாற்ற முயலும் காவலர். அதுமட்டுமின்றி “இவங்கலாம் நம்ம கட்டுற வருமான வரில வருகிற பணத்துல டாக்டருக்கு படிச்சுட்டு வத்துட்டு நமக்கு எதிராகவே வேலை பார்க்கறாங்க” என சொல்லுகிறார். மருத்துவமனையின் வாசலில் கண்ணீருடன் காத்திருக்கும் இரண்டு சிறுமிகளின் பெற்றோரை நான்கு மாதங்களுக்கு ஊரை விட்டு ஓடிவிடும்படியும், வழக்கை முடித்தவுடன் வரும்படியும் சொல்கிறார் அவர். நீதிகேட்டு வந்தவர்களையே குற்றவாளிகளாக்கி சிறையில் தள்ளும் கொடூரங்கள் நடக்கின்றன. காணாமல்போன மூன்றாவது சிறுமியைப் பற்றிய எந்தவிதமான அக்கறையுமே முதலில் ரஞ்சனைத் தவிர யாருக்கும் இல்லை. அக்கறை இருக்கும் சிலராலும் அதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
நிசாத்’ எனும் நன்கு படித்த தலித் போராளி இந்த வழக்கை நியாயமான முறையில் போலீஸ் நடத்த வேண்டுமெனச் சொல்லுகிறான். தலித்துகளுக்காக நேர்மையாகப் போராடும் அவன் காடுகளில் மறைந்துதான் இருக்க வேண்டியிருக்கிறது. வன்முறை மட்டுமே தங்களுக்கான சமநீதியை பெற்றுத்தரும் என நம்புகிறவனாய் இருக்கிறான். அவனது பரிந்துரையின் பேரில் குப்பைகளை அள்ளும், டிரெயினேஜ் சுத்தம் செய்யும் தலித்துகள் இரண்டு சிறுமிகள் இறந்து போனதற்கு முறையான விசாரணையும், காணாமல் போன மூன்றாவது சிறுமியைக் கண்டுபிடிக்க வலியுறுத்தியும் தங்கள் வேலைகளைச் செய்யாமல் போராட்டம் செய்கின்றனர். காவல் நிலைய வாசலில் குப்பைகளைக் கொட்டிச் செல்லுகிறார்கள். டிரேயினேஜ் நிரம்பிக் காவல் நிலையமே நாறிப் போகிறது. 

றுபுறமோ தலித் அரசியல்வாதி என்றும் அம்மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு திரியும் தலித் தலைவனோ ‘மஹந்த்’ எனப்படும் கார்ப்பரேட் சாமியாருடன் ‘தலித்கள் – பிராமணர்கள்’ ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தப்படும் போலியான ஏமாற்றும் வேலையான சமமாக உட்கார்ந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கு துணை போகிறான். அண்ணலின் சிலை பின்னேயிருக்க இந்தக் கூத்து நடக்கிறது. பின்னால் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக அதே இந்துத்துவக் கட்சியுடனே கூட்டணியும் வைக்கிறான்.
ரஞ்சன் கைகளுக்கு முதலில் சரியான பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதில்லை. தானே நேரில் அந்த பெண் மருத்துவரைச் சந்தித்து மறைமுகமாக உண்மையான அறிக்கையைப் பெறுகிறார். அவரை தைரியப் படுத்துவதோடு மட்டுமின்றி மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்ய ஆதரவு தருகிறார். தன்னுடைய முயற்சியால் இரண்டு சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தவர்களைக் கண்டு பிடிக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் திரட்டுகிறார். காணாமல் போன மூன்றாவது சிறுமியைத் தேடுவதில் தன்னுடன் இருக்கும் காவலர்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஊக்கப்படுத்தி அதைச் செய்ய வைக்கிறார். சாதியில் மூழ்கிக் கிடக்கும் காவல் நிலையத்தில் ‘ஆர்ட்டிகிள் 15’ னை ரஞ்சன் ஒட்டும் காட்சி மறக்கவே முடியாதது.


படத்தில் வரும் நிறையக் காட்சிகள் வழக்கமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மீது நமக்கு எழும் சுய பச்சாதாபத்தையும், கழிவிரக்கத்தினையும், வருத்தத்தையும் தராமல் அவர்களுக்கு எதிராகச் செயல்படும் ஆட்களின் மீதும் குறிப்பாக இப்படியிருக்கும் இந்த சமூகத்தின் மீதும் கடுமையான கோபத்தினை வரவழைக்கிறது. அதைவிட இப்படியான நாட்டில் இதைப்பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்கிறோமே என்கிற குற்றவுணர்ச்சியும் தன்னாலே எழுகிறது. காவல் நிலைய வாசலில் கொட்டியிருக்கும் குப்பையில் நடந்தவாறு ரஞ்சன் தனது காதலியிடம் பேசும் வசனம் நமது போலியான முகத்திரையைக் கிழித்தெறிகிறது. பின்னால் வந்தேமாதரம் பாடல் ஒலிக்க டிரேயினேஜில் மூழ்கி அதை மனிதர் ஒருவர் சுத்தம் செய்யும் அந்த காட்சியொன்று நம்மை மீள முடியாத குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறது. 

தலித் அரசியல்வாதி தன்னுடைய சுயநலத்துக்காக தன் மக்களின் நலனை இந்துத்துவ கட்சியிடம் அடகு வைப்பதும், உண்மையான தலித் போராளிக்கு நடக்கும் துயரமான முடிவும் ஒரே சமயத்தில் நடக்கிறது. படத்தின் இருண்மையான காட்சிகளும், இசையும் நம்மை மிரட்டுகிறது. படம் இரண்டு சிறுமிகளின் பாலியல் வல்லுறவு காட்சியை காட்சிப்படுத்தவில்லை என்றாலும் அவர்கள் தூக்கில் தொங்கும் காட்சியும், ரஞ்சன் மஞ்சள் நிற வேனினுள்ளும், பூட்டிக்கிடக்கும் பள்ளியின் இருண்ட வகுப்பறையில் கண்டெடுக்கும் பொருட்களும் நமக்கு அந்த துயர நிகழ்வைக் காட்டி விடுகின்றன. இத்தனைக்கும் ஆதாரங்களைத் திரட்டியும், வழக்கு சிபிஐக்கு மாறியும், பலவிதமான தகிடுதத்தங்கள் நிகழ்ந்தும் பாலியல் வல்லுறவுக்கான முக்கிய முதன்மை குற்றவாளியை ரஞ்சனின் கைகளில் கிடைக்க விடாமல் காவலர் ஒருவரே தடுக்கிறார். அதையும் மீறி நீதி கிடைப்பதற்கு எவ்வளவு போராட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது. நீதி என்பது சாமானிய மனிதனுக்குச் சாத்தியமில்லாததோ என்கிற கேள்வி மனதில் ஆழமாக எழுகிறது. படத்தில் ஒரு காட்சியில் காவலர் ஒருவர் ரஞ்சனிடம் ‘ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கு! எல்லாரும் ஒண்ணாயிட்டா, இங்க யாரு அரசனாக இருக்கிறது?’ என்கிற கேள்வியை முன்வைப்பான். இதே கேள்வியை ரஞ்சன் தன் காதலியிடம் கேட்கையில் ‘எதுக்கு இங்கே அரசன்?’ என்பாள். இதுதான் நிதர்சனம். 


இன்றைக்கு இருக்கும் மக்களுக்கு விரோதமான அரசியல் சூழலில் ‘ஆர்டிகிள் 15’ போன்ற காத்திரமான படங்களின் தேவை மிகவும் அவசியமாகிறது.