அம்பேத்கர் தேச தந்தையாக இருந்தால் தேசம் எப்படி இருக்கும்? - அருண் மோ

இந்திய அரசியலமைப்பு சட்டம்: பிரிவு 15

சமயம், இனம், மொழி, சாதி, பால், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் என்னும் அடிப்படையில் இந்திய மக்களிடம் எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படக்கூடாது.

                                         -பாபாசாகேப் அம்பேத்கர்
கடந்த ஜூன் 28ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியான இந்தி திரைப்படமான ‘ஆர்டிகிள் 15’ பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கிய இத்திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா (காவல்துறை துணை ஆய்வாளர் அயன் ரஞ்சன்), இஷா தல்வார் (பத்திரிகையாளர் அதிதி), மொஹமது ஜீசன் அயூப் (தலித் போராளி நீஷாத்), சயானி குப்தா (தலித் பெண் கௌராவ்), மனோஜ் (பிரம்மதத்), சும்புல் தவ்ஹீர் (அம்லி), ரோஞ்சினி (மருத்துவர் மால்ட்டி ராமா), நாசர் (சிபிஐ அதிகாரி பணிக்கர்) போன்ற பலர் நடித்த இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இச்சமூகத்தில் கண்டும் காணாமல், ஆனால் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சமூக அவலங்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறது ஆர்டிகிள் 15. தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததற்காக ஆணவ சாதியினரால் தாக்கப்படும் காட்சி முதற்கொண்டு, கழிவு நீர்த் தொட்டியில் துப்புரவுத் தொழிலாளி இறங்கி சுத்தம் செய்யும் காட்சி, 3 ரூபாய் சம்பள உயர்வு கேட்டதற்காக 2 தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, அநியாயத்தை மறைக்க அதிகார வர்க்கம் செய்யும் வேலைகள் எனப் பல காட்சிகள் சமூகத்தின் உண்மை நிலையைக் காட்டுகின்றன. மொத்தத்தில் சாதிய ஒடுக்குமுறைகளைக் கடுமையாகச் சாடுகின்ற படமாக இந்த படத்தைப் பார்க்கத் தோன்றுகிறது. சமூக அக்கறைக்கொண்ட பலரும் இப்படத்தைப் பற்றித் தொடர்ந்து பேசியவாறு உள்ளனர்.

தம்மம் சிந்தனையாளர் பேரவையின் முன்னெடுப்பில் ஆர்டிகிள் 15 படத்தைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஜூலை 20 ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமைச் செயலகம் அம்பேத்கர் திடலில் நடைப்பெற்றது.

இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், மீரா கதிரவன், கோபி நயினார், தமிழ் ஸ்டுடியோ அருண், ஊடகவியலாளர் பாரதி செல்வா, விசிக தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வை எழுத்தாளர் திருவாசகம் தொகுத்துவழங்கினார்.

இப்படம் குறித்து ‘தமிழ் ஸ்டுடியோ’ அருணின் உரை பின்வருமாறு.


“ஆர்டிகிள் 15 திரைப்படம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தகுதி வாய்ந்த திரைப்படம். ஒருபக்கம் தமிழ்நாடு முழுக்க 16 இஸ்லாமியச் சகோதரர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்; மற்றொரு பக்கம் ஒரு சின்ன குழந்தையின் கை, கால்களைக்கட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்லச் சொல்லி அடிக்கிறார்கள். பேசக்கூடத் தெரியாத அந்த குழந்தை வலி தாங்கமுடியாமல் அழுகிறது. இவ்வளவு சங்கடங்கள் இருக்கக்கூடிய நாட்டில், ஆர்டிகிள் 15 படத்திற்காகக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருப்பதை ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கிறேன்.

காந்தி தேசதந்தையாக இருக்கக்கூடிய தேசம் எப்படி இருக்கிறது என்று நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கர் தேச தந்தையாக இருந்தால் அந்த தேசம் எப்படி இருக்கும் என்பதின் சிறு முன்னோட்டமாகத்தான் ஆர்டிகிள் 15 திரைப்படத்தை (நான்) பார்க்கிறேன்.

இப்படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹாவிடம் பத்திரிகையாளர், ”படத்தில் கழிவு நீர்த் தொட்டியில் ஒருவர் மூழ்கி சுத்தம் செய்யும் காட்சி அருமையாக இருந்தது. அதை எப்படி எடுத்தீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அனுபவ் சின்ஹா, ”அந்த காட்சியை செட்டுப்போட்டு எடுத்தோம். அதில் நடித்திருந்தவர் உண்மையான துப்புரவுத் தொழிலாளி. அதனால் அந்த காட்சி நன்றாக வந்திருந்தது” என்று மேலோட்டமாக சொல்லியிருந்தார்.

‘அக்காட்சியில் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி நடிப்பதற்குகூட ஒரு துப்புரவுத் தொழிலாளியைத்தான் பயன்படுத்தவேண்டுமா? ஏன் இன்னொரு சாதிக்காரர் வந்து இறங்கமாட்டாரா?’ என்றக் கேள்வி எழுப்புகிறார் தோழர். நம்முடைய நோக்கம் மற்ற சாதிக்காரர் இறங்கவேண்டும் என்பதா? இல்லை தலித் மக்களும் இறங்கக்கூடாது என்பதா? நம்முடைய நோக்கம் மானுடத்தை நோக்கியதா? இல்லை சாதி விடுதலையை மட்டும் நோக்கியதா? சாதி விடுதலை என்பதே மானுடத்தை நோக்கியதுதானே. எந்த சாதியைச் சேர்ந்தவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கக்கூடாது என்பதுதானே நம்முடைய நிலைப்பாடு.

ஏன் ஒரு பார்ப்பனர் இதில் கதையின் நாயகனாக வருகிறார்? ஒரு தலித்தை ஏன் கதையின் நாயகனாக காட்டவில்லை என்கிறார்கள். 

இந்த சமூகத்தில் தலித் மக்கள் அதிகாரத்தில் இருக்கிறார்களா? எது நிஜம், எது நிதர்சனம்? தலித் மக்கள் உயர்ந்த அதிகாரத்தில் இல்லை. பார்ப்பனர்கள்தான் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கிறார்கள். எதார்த்தத்தை அப்படியேதான் காட்டமுடியும்.


பார்ப்பனர்கள் தானே உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள்தானே ஒரு முடிவை எடுக்கிறார்கள். அவர்களை நாம் என்ன செய்யமுடியும்? இதுதான் நிதர்சனம். இதுதான் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது.

இதனையடுத்து நிஷாத் என்கிற ஒரு தலித் போராளி படத்தில் வருகிறார். அவர் இறந்துவிடுவார். அதை இந்தப் படத்தில் நடந்த தவறாகப் பார்க்கிறோம். காரணம் தலித் போராளி இறந்துப்போகிறார், ஆனால் பார்ப்பன அதிகாரி போராடுகிறார். ஆக தலித் மக்களின் விடுதலை ஒரு பார்ப்பான் கையில் இருக்கிறது என்பதாக இந்த காட்சி அமைந்துவிட்டதாக நான் கூட நினைத்தேன். ஆனால் உண்மையில் உயிரிழந்த நிஷாத், ரோகித் வெமுலாவின் குறியீடு. ‘நான் சயின்ஸ் பிக்சன் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்தேன்’ என ஒரு உரையாடலின் போது நிஷாத் சொல்லுவார். அப்போது ரோகித் வெமுலாவை உணரமுடியும். அந்த சயின்ஸ் பிக்சன் எழுத்தாளர் யார் என்றால் பி.ஹெச்.டி படித்துக்கொண்டிருந்த ரோகித் வெமுலாதான்.

ரோகித் வெமுலா என்கிற தலித் போராளி இன்று நம்முடன் இல்லை என்பதுதான் நிஜம். அதன் குறியீடாகத்தான் படத்தில் அந்த காட்சியை வைத்திருக்கிறார்.

‘தலித் மக்களுக்காகப் போராடக்கூடிய தலித் இறந்துவிட்டால், அவர்களுக்கான உரிமையைப் பார்ப்பனர்கள்தான் மீட்டு கொடுப்பார்கள்’ என்று இயக்குநர் சொல்லவில்லை.

‘பொதுவாக ஒரு கலைப் படைப்பை கலை-அரசியல் ரசனையோடு அணுகவேண்டிய தேவை இல்லை’ என்று நாம் நினைப்பதால், தமிழ்நாட்டில் இதுபோன்ற புரிதல் சார்ந்த பிரச்னைகள் வருகிறது.

ஒரு பிரதியை நாம் எப்படி பார்க்கவேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை. ஒரு படத்தை அந்த படத்திலிருக்கிற காட்சி, அந்த படம் என்ன சொல்கிறது, அந்த படத்திற்கு இயக்குநர், நடிகர், தயாரித்தவர், இசையமைத்தவர் யார்? என்று இவ்வளவு பேரையும் தொடர்புப்படுத்திப் பார்க்கவேண்டியிருக்கிறது.
    
அதுபோல ஆர்டிகிள் 15 பிரதியை நாம் எப்படி வாசிக்கமுடியும்? அனுபவ் சின்ஹா பெரிய கமர்சியல் இயக்குநர். ஷாருக்கானை வைத்து ரா ஒன் திரைப்படத்தை எடுத்தவர்தான் இவர். இதற்கு முன்னர் இஸ்லாமியர்களின் பிரச்னையை நேர்மையாக அணுகி ‘முல்க்’ என்ற படத்தை எடுத்திருந்தார்.ஒரு நேர்காணலின்போது அனுபவ் சின்ஹா, ”நான் ரா ஒன் போன்ற கமர்சியல் படங்களை எடுத்தவன்தான். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கலவரம் என் மனதை மாற்றியது. மக்களோடு பேசுவதற்கு கமர்சியல் தேவையில்லை என்று உணர்ந்து, மக்களுடைய போராட்டங்களையும் தேவைகளையும் உரையாடுவதற்கு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன்” என்றார்.

இவ்வாறு மாறி வருபவரை நாம் ஏற்றுக்கொள்வோமா? இல்லை நிராகரிப்போமா? மாறிவரும் ஒருவரை நம்முடன் சேர்த்துக்கொள்வதில்தானே நம் உரையாடல் தொடங்குகிறது.

படத்தின் இயக்குநரும், நடிகரும் மோசமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கிடையாது. ஆனால் பெரிய இடதுசாரி சிந்தனையும், இண்டலெக்சுவலும் கிடையாது. இப்போதுதான் இயக்குநர் படிக்கிறார். “இந்த உண்மை சம்பவத்தைப் படமாக எடுப்பதற்கான எண்ணத்தை ஆனந்த் டெல்டும்டேவுடைய Republic of Caste புத்தகம்தான் கொடுத்தது” என்கிறார் அனுபவ் சின்ஹா.


நான் (அருண்) இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆனந்த் டெல்டும்டேவின் ‘அம்பேத்கரியர்கள்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதுவொரு முக்கியமான புத்தகம். ஆனந்த் டெல்டும்டே பல இடங்களில் சொற்பொழிவாற்றியதன் தொகுப்பு அது.

நம்முடைய பிரச்னை பார்ப்பனர்களிடம் கிடையாது. பார்ப்பனியத்திடம்தான். படத்தில் இரண்டு கூட்டணி இருப்பதாகப் பேசுகிறோம். ஒன்று பார்ப்பன-தலித் கூட்டணி. மற்றொன்று பார்ப்பனிய-தலித் கூட்டணி.

பார்ப்பனிய-தலித் கூட்டணிதான் சாமியாருக்கும் தலித் தலைமைக்கும் உள்ள கூட்டணியாகப் படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் உண்மையாக நடந்திருப்பது பார்ப்பன-தலித் கூட்டணி.

பார்ப்பனியம் என்பது இஸ்லாமியர், தலித், இடைநிலை சாதிகள் என எல்லோரிடமும் இருக்கிறது. பார்ப்பனியம்தான் இப்போதிருக்கக்கூடிய மிகப் பெரிய பிரச்னையே தவிர, பார்ப்பனர் மட்டும் கிடையாது.

இப்படம் அப்பழுக்கற்ற முழுமையான தலித் சினிமா என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழில் இருக்கக்கூடிய எந்த தலித் திரைப்படம் முழுமையான தலித் திரைப்படமாக இருக்கிறது?

இந்த படம் தமிழில் வரவில்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. சினிமா என்பதே ஒரு சர்வதேச மொழி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு மலையாளம் என எந்த மொழியிலிருந்தாலும் நல்ல படம் நல்ல படம்தான். அது எந்த மொழியில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுத்திருக்கிறார். ஒரு இந்தியக் குடிமகனிடம் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்று தெளிவாக வரையறுத்திருக்கிறார். இதை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்திற்கு ஆர்டிகிள் 15 என்று பெயர் வைத்திருக்கிறார் அனுபவ் சின்ஹா.

பழிவாங்கும் உணர்ச்சியை மனிதர்கள்தான் அதிகப் படுத்திக்கொண்டிருப்பார்கள். கலையின் வேலை அது கிடையாது. கலை என்பது ஒரு மனிதனை பண்படைய வைப்பதற்கான வேலையைச் செய்கிறது.

எங்குச் சென்றாலும் சினிமாவைப் பற்றிப் பேசக்கூடாது, சினிமா அறுவருக்கத்தக்க நீச கலை என்றுதான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதைதான் பார்ப்பனியம் என்கிறேன். சினிமாவை நீச கலை என்று பார்ப்பனர்கள்தான் சொல்வார்கள்.

ஏனென்றால் சினிமா என்பது ஒரு பெரிய கலை. எல்லா கலைகளும் கலகமாகத்தான் மாறியிருக்கும். சினிமா வழியாக எந்தவித கலகமும் நடக்கக்கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் ஏற்படுத்திய பார்ப்பனிய சதிதான் சினிமாவை நீச கலையாகப் பார்ப்பது.
ஏன் தலித் மக்கள் கைகளிடம் அந்த சினிமா செல்லவில்லை?
போகாது. போகவும் விடமாட்டார்கள்.

இவ்வளவு பிரச்னை இருக்கும்போது சினிமாவை ஏன் நம் கைகளில் எடுக்கக்கூடாது? சினிமா நம்முடைய கையில்தான் இருக்கவேண்டும். அதிகாரத்தைப் பிடுங்குகிறோமோ இல்லையோ முதலில் சினிமாவை பார்ப்பனர்களின் கையிலிருந்து பிடுங்கவேண்டும்.

சினிமாவைப் பிடுங்கினால் கலகத்தை உண்டு செய்யமுடியும்.

கலகத்தை உண்டுசெய்தால் அதிகாரத்தை அடைய முடியும்.

அதிகாரத்தை அடைந்தால் ஒரு மானிட இழிவை உடைக்கமுடியும்.

சிலகாலம் முன்பு ஒரு சம்பவம் நடந்தது. ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடந்துகொண்டே இருந்தது. அதற்காக ஒரு பெரிய படையை அக்கிராமத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஆணையைப் பிறப்பிக்கிறது அரசு. அந்த ஆணையில், ‘படைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டியது அந்த கிராம மக்களின் பொறுப்பு. அதற்கான செலவைக் கிராம மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் மட்டும் இந்த செலவை ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றுக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதற்பார்வையில் ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறியது நல்ல விஷயமாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இது ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்தீர்ப்பில், “அரசு உத்தரவில் சொன்னது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தீண்டதகாதவர்களிடம் காசைப் பெற்றுதான் இந்த கிராமத்தைக் காப்பற்ற வேண்டுமா! என்பது மேட்டுக்குடியின் திமிர்த்தனம். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களும் இஸ்லாமிய மக்களும் எல்லோரையும்போல் அந்த படைக்குத் தேவையான செலவுக்காக காசு கொடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. அதில் ஒருவரும் கைவைக்க முடியாது. அதிலிருக்கக்கூடிய ஓட்டையைக் கொஞ்சம் பெரிதுசெய்து பார்க்கலாம். இல்லையென்றால் அதில் இருக்கக்கூடிய விசயத்தை விலக்கிவைத்துப் பார்க்கலாமே தவிர அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவில் ஒன்றும் நடந்திராது. அந்த பெரிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த படத்திற்கு ஆர்டிகிள் 15 என்று பெயர் வைத்திருக்கிறார் அனுபவ் சின்ஹா. அதைத்தான் அம்பேத்கர் தேசத்தந்தையாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று விவரித்து பார்க்க விரும்புகிறேன்.

இயக்குநர் ‘இந்த அரசியலைப்பு சட்டம் நம்மை ஒரு நாளும் கைவிடாது’ என்பதை நம்புகிறார். முல்க் திரைப்படத்திலும் கூட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றித்தான் விரிவாகப் பேசுகிறார். அரசியல் நீதி அமைப்பை உறுதியாக நம்புகிறார். இதற்கு முக்கியமான காரணம் அம்பேத்கரின் தெளிவான பார்வை.


இந்த படத்தில் பார்ப்பன-பார்ப்பனிய கொள்கைகளை இயக்குநர் கடைப்பிடிக்கவில்லை. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தலித் போராளி ரோகித் வெமுலாவின் குறியீடு.

படத்தில் வரக்கூடிய முதல் பாட்டு போஜ்புரி மொழியில் இருக்கிறது. ‘நான் பேச ஆரம்பித்தால் நீ கடுமையாக பாதிக்கப்படுவாய்’ என்பதுதான் அதன் அர்த்தம். இந்த பாட்டோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அதன்பிறகு ஒரு பேன் ஷாட் ஒன்று போகும். அங்கு அம்பேத்கர் சிலை இருக்கும். இதெல்லாம் சினிமாவுக்கான சிறந்த மொழியாகத்தான் பார்க்கவேண்டும்.

முக்கியமாக அம்பேத்கரியமும், கம்யூனிசமும் ஒரு புள்ளியில் இணைகிறது. இந்த புள்ளியில், 3 ரூபாய் ஊதிய உயர்வு கேட்கிறார்கள் அது கம்யூனிசம். அவர்கள் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் அந்த பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்.

படம் எந்த ஒரு இடத்திலும் பார்ப்பனியத்தை உயர்த்திபிடிக்கிற படமாக இல்லை. பார்ப்பனர்தான் தலித் மக்களுக்கான ஒரு பாதுகாவலனாக இருப்பார் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மிக முக்கியமாக பார்ப்பனர் சேவியராக அதாவது ஆபத்பாந்தவராக காட்டப்படவில்லை. 

அதேநேரத்தில் தலித் மக்களுக்காகப் போராடுபவர் தலித்தாக மட்டுமே இருக்கவேண்டும், தலித் மக்களின் அடிப்படை உரிமையைப் பார்ப்பனர்கள் பேசக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது” என்று அருண் தனது உரையை முடித்தார்.