Article 15-இல் ஏன் பார்ப்பன கதாநாயகன்?

தேவர்சி கோஷ்

ஜூன் 28-ஆம் தேதி வெளிவந்த article 15 பற்றியும் அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய காட்சிகள் மற்றும் இந்திய அரசியல் அமைப்பின் முக்கியத்துவத்தையும் குறித்து அனுபவ் சின்ஹா பேசுகிறார்...
 
அனுபவ் சின்ஹாவின் article 15 இந்தியாவில் சாதி பாகுபாட்டைக் குறிக்கும் ஒரு பார்வை. உத்திரப்பிரதேசத்தின் கிராமப்புறத்தில் இரண்டு பதின்வயது தலித் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்தது மற்றும் ஒரு சிறுமி காணாமல் போனது குறித்து விசாரிக்கும் இந்தியக் காவல்துறை சேவை அதிகாரியான அயன் ரஞ்சன்-ஆக ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார். அடுத்து, இந்தப் படத்தில் சூழ்ச்சிகள் செய்யும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த போலீசாக மனோஜ் பாஜ்வா, நிஷாத் ஆக மொஹம்மது ஸியேஷான் அய்யூப், பீம் ராணுவத் தலைமை மாதிரியான தலித் தலைவராக சந்திரசேகர அசாத் ராவண் நடித்துள்ளனர். மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த போலீசாக குமுன்ட் மிஸ்ரா, அயான்னுக்கு (கதாநாயகனுக்கு) முக்கிய தகவல்களை அளிக்கும் தலித் பெண்ணாக சயானி குப்தா, நேர்மையான மருத்துவராக ரோஞ்சினி சக்ரபோர்தி  நடித்துள்ளனர். 
 
சமீப காலமாக நடந்து வரும் சாதிய அட்டூழியங்களில் இருந்து ஈர்க்கப்பட்டே இந்த திரைக்கதையை சின்ஹாவும் கவுரவ் சோலங்கியும் வடிவமைத்துள்ளனர். முக்கியமாக 2014-ஆம் ஆண்டு badaun-இல் நடந்த பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கைப் பற்றியும், 2016-ஆம் ஆண்டு குஜராத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஏழு தலித்கள் போன்ற சம்பவங்களின் ஒற்றுமைகளை திரைக்கதையில் சேர்த்துள்ளனர்.  அதில் ஒரு காட்சியில் நிஷாத் அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசையயை வெளிப்படுத்தும் இடத்தில், 2016-ஆம் ஆண்டில் மறைந்த ரோஹித் வெமூலாவின் கடைசி தற்கொலை குறிப்பு நினைவுக்கு வருகிறது. 
 
article -15 படம் வெளியீட்டிற்கு முன்னரும் பிறகும் ஆதிக்க சாதியினரிடமிருந்து அதிக எதிர்ப்பும் பிரச்சனைகளும் வலுத்தன. பார்ப்பனர்கள்தான் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைப் போக்கும் ’மீட்பர்’ என்ற பிம்பத்தை நிலை நிறுத்துவதற்காக, இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பலர் விவாதித்துவரும் நிலையில், படத்தின் இயக்குனர் சின்ஹாவின் நிலைப்பாடும் படத்தின் முக்கியக் காட்சிகளின் வேலைப்பாடுகள் குறித்தும் scroll.in க்கு அளித்த நேர்காணல்.
 
தலித் மக்களின் உரிமைக்காக ஒரு பார்ப்பன கதாநாயகன் நிற்பது பற்றிய விமர்சனங்களை எப்படி அணுகுறீர்கள் ?
 
இதுவும், ஹாலிவுட்களில் கையாண்டுவரும் வெள்ளையின மீட்பர்கள் போன்றதா? என்று, எனக்கும் எனது ஒளிப்பதிவாளருக்கும் இதுகுறித்து ஒரு நீண்ட விவாதம் நடந்தது.

பார்ப்பனர்களே தலித் மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்காக, அயன் ரஞ்சன் ஒரு பார்ப்பனராக வைக்கவில்லை. இருந்தாலும் சிலர் அப்படியே புரிந்துகொள்கின்றனர். எனக்கு கதாநாயகன் பார்ப்பனராக வேண்டும் என்று சில காரணத்திற்காகத் தேவைப்பட்டது. ஆதலால் அவன் போலீசில் மட்டும் உயர் படிநிலையல்லாமல், சாதியிலும் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவன். அவனுக்கு மாறான வழியில் செல்வதற்கான பலமும் தேவை, என்பதைக் காட்டவேண்டும். ஆனால் அவன் நேர்மையான வழியையே தேர்ந்தெடுக்கிறான். சலுகைகளே சலுகைகளை சவால் விடுக்கின்றன, ஏனெனில் சலுகைகள் மிக்கவர்களே இந்த அமைப்பை உருவாக்கியவர்கள். பம்பாயில் பெரிய சமூகங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட லிஃப்ட்(lift)களை வைத்திருக்கின்றன. ஒன்று வீட்டு வேலை செய்பவர்களுக்காகவும், தெருவியாபாரிகளுக்காகவும், ஓட்டுநர்களுக்காகவும் பிரிக்கப்பட்டிருக்கும். ஓட்டுநர்கள் எப்பொழுதும் இந்நடைமுறையை எதிர்த்துக் கேள்வியெழுப்புவார்கள். ஆனால் அதை விட மிக முக்கியமானது, இந்த மாதிரியான பலவகை லிஃப்ட் வைக்கவேண்டும் என்ற அமைப்பைக் கொண்டுவந்தவர்களை முதலில் கேள்விக்குள்ளாக்க வேண்டும். வகுப்பு பாகுபாடுகளும் சாதிய பாகுபாடுகளினாலே நிகழ்த்தப்படுகின்றன. சிலர் ஓட்டுநர்களாகவே வைக்கப்படுவதும், சிலர் அந்தத் தொழில் செய்யத்தேவையே இல்லை என்பதும் சாதியக் கட்டமைப்பினால்தான் உண்டாகிறது. நிச்சயம் எல்லா வெள்ளையாட்களும் மீட்பர்கள் அல்ல, ஆனால் அனைத்து வெள்ளையாட்களும் சர்வாதிகாரியும் அல்ல. அதிகாரமுள்ள ஒவ்வொரு மனிதனையும் வில்லனாக நீங்கள் பார்க்காவிட்டால் மட்டுமே உரையாடலை நிகழ்த்த முடியும். இல்லையெனில், நீங்கள் பிளவுகளை/ இடைவெளிகளை மேலும் அதிகரிக்கிறீர்கள்.

செய்தி அறிக்கைகள் தவிர, வேறு என்ன ஆராய்ச்சிகள் இந்தப்படத்தில் உள்ளடங்கியுள்ளன?

வாழ்நாள் முழுவதும் இந்தப் பிரச்சினைகள் சார்ந்தே பணியாற்றிய பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசினோம். அந்த மூன்று ருபாய் பற்றிய காட்சியும் ஆராய்ச்சி செய்தே வைத்தோம், அது ஒரு ரூபாயாக இருந்திருக்கலாம், 11ரூபாயாக இருந்திருக்கலாம் ஆனால், அது சரியாக மூன்று ரூபாய் தான். 
 
நிறைய புத்தகங்கள் உதவின, அதில் ஒன்று ஆனந்த் தெல்தும்ப்டே-வின் Republic of Caste. மற்றொன்று ஓம் பிரகாஷின் Valmiki’s Joothan. நானும் கெளரவும் சிறிய நகரத்தில் இருந்துதான் வளர்ந்து வந்தோம். அவன் ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் இருந்தும் நான் வாரணாசி மற்றும் அலிஹாரிலும் வளர்ந்தேன்.அந்த நாட்கள் எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. மேலும் ஆராய்ச்சிக்காக, சில ஆவணப் படங்களையும், செய்திகளையும் பார்த்தோம்.
 
ஏதாவது சம்பவம் தனித்து நின்றும் (முக்கியத்துவத்துடனும்), ஆனால் அதைத் திரைப்படத்திற்குள் சொல்லமுடியாமலும் போனதா?

வாரணாசியில் ஒரு பூசாரியுடன்  நேர்காணல் இருந்தது. பிரம்மாவின் தலையிலிருந்து பிராமணர்கள், கைகளிலிருந்து க்ஷத்திரியர்கள், தொடைகளிலிருந்து வைஷ்யர்கள் மற்றும் அவரது கால்களிலிருந்து ஷுத்ராக்கள் எவ்வாறு வந்தார்கள் என்பது அதில் விளக்கப்பட்டிருந்தது. அவர் அதை எவ்வளவு வலுவாக நம்பினார் என்பது குழப்பமான விஷயம். அது தீயது.

https://d1u4oo4rb13yy8.cloudfront.net/iamwqwxizs-1561911506.jpg
Figure 1 ஆர்டிகிள் 15 படப்பிடிப்பில் அனுபவ் சின்ஹா மற்றும் ஆயுஷ்மான் குரானா
 
article-15 க்கான காட்சிக் குறிப்புகள் ஏதேனும் உண்டா?

45 நிமிடங்களுக்குள் லக்னோவின், ராஜகேரா, மாலிஹாபாத் போன்ற கிராமங்களில் 30 நாட்களுக்கு நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் காட்ட வேண்டிய கதைசார்ந்த நிலப்பரப்பு மற்றும் படத்தில் நீங்கள் காணும் கதாபாத்திரங்களின் முகங்களுடன் நாங்கள் எதைக் காட்சிப்படுத்த விரும்புகிறோம், எதைக் காட்சியாக்க வேண்டும், என்று இவானுக்கும் எனக்கும் தெரியும். உண்மையில், நான், என் நண்பர் ஒருவருக்கு, ஆரம்ப கட்டநிலையில் படத்தொகுப்பு செய்யப்பட்ட படத்தினைக் காட்டினேன். அவரோ, ”இந்த HBO சேனலில் ஒளிபரப்பாகும், ட்ரூ டிடெக்டிவ் நிகழ்ச்சியின் சீசன் ஒன்று போல் தெரிகிறது” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பினார். நான் முட்டாள் அல்லது அறியாதவனாக இருக்க விரும்பவில்லை, அவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, அந்த ட்ரெய்லரைப் பார்ப்பதற்காக யூடியூபிற்கு விரைவாகச் சென்றேன்..
 
படத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு நாட்டுப்புற பாடல்கள் எவை - ஆரம்பத்தில் ஒன்று, மற்றொன்று இறந்த இரண்டு சிறுமிகள் தகனம் செய்யப்படும்போது?

முதலாவது கஜாப் தோ லக் ஜெய் தக் சே என்ற போஜ்புரி பாடல். இதன் பொருள், நான் சொன்னால், அது உங்களை கடுமையாகத் தாக்கும். சில தெரு நாடகக் கலைஞர்கள் இதைப் பாடினர். மற்றொன்று ஒரு தந்தையின் பார்வையில், பிடாய் பாடல். இந்தப் பாடல் வட இந்தியாவில் பொதுவானது, ஆனால் பாடல் வரிகள் ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடுகின்றன.
 
எல்லோருடைய சாதியையும் பற்றி அயான் குழப்பமடையத் துவங்கும் article - 15 இல் உள்ள சில முக்கியக் காட்சிகளைப் பற்றி விவாதிக்கலாம். 

இது ஒரு நகைச்சுவையாகத் தொடங்கியது, எழுதும் போது நான் சிரித்தேன், அவர் இதைச் சொல்கிறார், பின்னர் மற்ற பையன் அதைச் சொல்கிறான், அயான் குழப்பமடைகிறான். இது திரைப்படத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தேன். கவுரவ் அதைக் கேட்டு தீவிரமானார். அதை வைத்துக் கொள்வோம் என்று அவர் கூறினார், நல்லவேளை நாங்கள் அதை வைத்தோம். பார்வையாளர்களின் எதிர்வினையை அறிய நான் சில திரையரங்குகளுக்குச் சென்றேன், சிரிப்பு சத்தம் வெடித்தது. அநேகமாக, இது ஒரு சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.
 
https://d1u4oo4rb13yy8.cloudfront.net/ghmgrsvwbv-1561911627.jpg
 
ஆயுஷ்மான் குரானாவும் மற்றவர்களும் நடித்து, சதுப்பு நிலத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அட்டைப்பூச்சியை எப்படிச் சமாளித்தீர்கள் ?

அது இறுதிக் க்ளைமாக்ஸ். படப்பிடிப்பு இடைவேளையின் போது, சதுப்பு நிலங்கள் மற்றும் குளங்களை நாங்கள் பார்வையிடுவோம் , கிராமவாசிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று கேட்போம். அவர்கள் வெறுங்காலுடன் நீர் வழியே செல்வார்கள். அவர்கள் திரும்பி வந்து, அட்டைப்பூச்சிகள் மற்றும் பெரும்பாலும் விஷம் இல்லாத பாம்புகள் உள்ளன என்று எங்களிடம் கூறினார்கள். கடைசிக் காட்சிக்காக நாங்கள் படம்பிடித்த அந்த சதுப்பு நிலத்தில் இந்த நபர்கள் காயமடையவில்லை, ஏனென்றால் அது அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை.

நாங்கள் எங்கள் நடிகர்களுடன் படம்பிடித்துக் கொண்டிருக்கும் போதும் , தீவிரமாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், அட்டைப்பூச்சிகள் கடித்தன . ஒவ்வொரு முறையும், சில கூடுதல் கத்தி வரும். எங்களிடம் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் காத்திருப்பு நிலையில் இருந்தது. மேலும், தண்ணீருக்குக் கீழே தரையில் பாசி படிந்திருந்தது. குமுத் மிஸ்ரா தான் தண்ணீருக்குள் நுழைந்த முதல் ஆள், ஆனால் அவர் கீழே விழுந்துவிட்டார்.

கசடுகளில் மூடப்பட்டிருக்கும் ஒரு வடிகாலில் இருந்து ஒரு துப்புறவுப் பணியாளர் வெளிப்படும் காட்சி எப்படிப் படமாக்கப்பட்டது.?

அவர் உண்மையில் ஒரு துப்புறவாளர் தான், ஆனால் குப்பை(கசடுகள்) செயற்கை. இது எங்கள் தயாரிப்பு வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. நடிகர்களுக்காக உருவாக்கப்பட்ட போலி நிலத்தடி நீர் தொட்டிக்குள் சென்றார்.
 
மனோஜ் பஹ்வாவிடமிருந்து நீங்கள் எப்படி எப்பொழுதுமே சிறந்த நடிப்பைப் பெற்றீர்கள்? 

நான் அவரை ஒரு நகைச்சுவை நடிகராகப் பார்த்ததில்லை. அவர் ஒரு சீரிய நடிகர் என்றுதான் எப்போதும் நினைப்பேன். அவருடனான எனது உறவுநிலையை நினைவுகூர்கையில், ஷிகாஸ்ட் என்று அழைக்கப்படும் எங்கள் முதல் தொலைக்காட்சித் தொடருக்குச் செல்கிறது, இது மனோஜ் பாஜ்பாய், ஆஷிஷ் வித்யார்த்தி, அசுதோஷ் ராணா பலருக்கும் இதில்தான் அறிமுகம். நாங்கள் பின்னர் சீ ஹாக்ஸில் பணிபுரிந்தோம், அதில் மனோஜ் பஹ்வாவும் வில்லனாக இருந்தார். நான் அவரை டம் பின் மற்றும் டம் பின் II ஆகியவற்றில் நகைச்சுவை அல்லாத வேடங்களில் நடிக்கவைத்தேன். நகைச்சுவை நடிகராகக் கருதப்படும் மற்றொரு நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் ஆவார், அவருடன் நான் கேஷ் என்ற படத்தில் பணிபுரிந்தேன்.

மத்திய விசாரணை அதிகாரியாக நாசர் நடித்திருப்பது எதிர்பார்க்காத ஒன்று!

நாங்கள் ஒரு தென்னிந்தியக் கதாபாத்திரத்தை எழுதினோம், டெல்லியில் நிறைய நேரம் செலவிட்டோம், ஆனால் மோசமான இந்தி பேசும், உச்சரிப்புடன் இருந்தாலும், அதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒரு அருமையான நடிகரை விரும்பினோம், ஆனால் உச்சரிப்பு பிரதிபலிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே இயற்கையாகவே உச்சரிப்பு இருக்கும் நாசரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
 
https://d1u4oo4rb13yy8.cloudfront.net/snlprssceb-1561911967.jpg
Figure 2 Manoj Pahwa and Nassar


அரசியலமைப்பின் 15 வது பிரிவின் நகலை ஒரு அறிவிப்பு குழுவில் வைக்கும் காட்சி ‘முல்க்’ படத்தினால் வந்ததா, அதில் குமுத் மிஸ்ராவின் நீதிபதி அரசியலமைப்பின் முதல் பக்கத்தை நகலெடுத்து மக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதினாலா?

அதற்கு புத்திசாலித்தனமான வடிவமைப்பு எதுவும் இல்லை. உண்மையில், அரசியலமைப்பு என்னுடைய மற்றும் கவுரவ்வின் ஆளுமைகளின் ஒரு பகுதியாகும், மேலும் இரண்டு படங்களும் அரசியலமைப்பைப் பற்றியவை. இந்திய அரசியலமைப்பை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நாங்கள் உண்மையில் நம்புகிறோம். நம்மில் பெரும்பாலோர் ஒரு பிரிவைக்கூட படிக்காமல் இருக்கிறோம். மக்களுக்கு இது தெளிவற்ற முறையில் அறிமுகமாகியிருக்கிறது. நான் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையைப் படிக்க முயற்சிக்கிறேன். நான் அதை என் கணினியில் ஒரே தட்டலில் தோன்றுமாறு வைத்திருக்கிறேன், எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைப் படிப்பேன். இது ஒரு நபராக என்னை மாற்றிவிட்டது என்று நான் நம்புகிறேன்.

https://d1u4oo4rb13yy8.cloudfront.net/nobnthutnh-1561912019.jpg
Figure 3 அனுபவ் சின்ஹா

‘முல்க்’ திரைப்படத்திற்கு முன் உங்கள் திரைப்பட உருவாக்கம் முற்றிலும் வேறு ஒருநபரின் படைப்பாகத் தெரிகிறதே ?
 
என்னுள்ளே, நான் எப்போதுமே அரசியல் ரீதியாக விழிப்புணர்வோடு, பொறுப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால், ஆமாம், இப்போது என்னைச் சுற்றியுள்ள அரசியல் நடவடிக்கைகளால் நான் தூண்டப்பட்டேன் 2013 முதல், இது எனக்கு சங்கடமாக இருந்தது, அது இன்னும் இருக்கிறது. எனவே எனது படங்கள் மூலம் அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினேன்.
 
முன்னதாக, நான் பொழுதுபோக்குக்காக திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது எனது முன்னுரிமை தகவல் தொடர்பு ஏற்படுத்துவதே. நான் ஏதாவது சொல்ல/ பகிர்ந்துகொள்ள திரைப்படங்களை உருவாக்குகிறேன், ஆனால் அதை எனது பார்வையாளர்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்துவது? நான் ஒரு சினிமாட்டிக் முன்னேற்றத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் எழுத்தை அணுகவில்லை, ஆனால் விஷயங்களை உண்மையாக வைத்திருப்பதால், மக்களுடன் பேசுவதில் கவனம் செலுத்துகிறேன். அது தானாகவே படத்தை பிரதானமாக ஆக்குகிறது

திரையுலகம் இப்போது உங்களை எப்படிப் பார்க்கிறது?

திரையுலகம் நம்மைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது ஒரு மூலதனம் மற்றும் வெற்றி சார்ந்த இடம். இது சாதி அல்லது அரசியல் சித்தாந்தங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இது இரண்டு வகுப்புகளை மட்டுமே புரிந்துகொள்கிறது: வெற்றி மற்றும் தோல்வி. யார் எங்கு சாய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். 
 
 
நன்றி: Scroll.in
--------------------------------------------------------------------------------------------------